Wednesday, October 26, 2011

யாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)

என் பெயர் கல்யாணராமன். ஆனால் இன்னமும் கல்யாணமாகாத ராமன். பராசக்தியில் பாதியாய் கைச்சட்டை மடித்த சிவாஜி போல் கூண்டேறிச் சொல்வதென்றால் ”மங்களகரமான பெயர்”. பிறந்த ஊர் அரியலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம். குக் என்று... என்ன மேலே சொல்லட்டுமா.. இல்லை இங்கேயே நிறுத்தட்டுமா.. நம் கதையே பெருங்கதை இவன் கதையை யார் படிப்பார் என்று தலையில் அடித்துக்கொள்பவரா நீங்கள்? ப்ளீஸ் இப்போதே எஸ்கேப் ஆகிவிடுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும். ”மாபாவி... சண்டாளா” என்று வாய்விட்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து காரித்துப்பி கொச்சையாக திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

படிக்க தெம்பிருப்பவர்கள் கொஞ்சம் காதைக் கொடுங்கள். ரகஸியமாக ஒன்று சொல்லவேண்டும். இப்போது நானிருக்கும் உயர்பதவியில் என்னை ஒரு உதாரண புருஷனாக கொண்டாடுகிறார்கள். அதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லோரையும் போல நானும் பால்ய வயது பருவதாகத்துக்கு பல “காலைக் காட்சி” சினிமாக்கள் பார்த்தேன். காற்றில் மாராப்பு விலகும் அனைத்து மாதரையும் பார்த்து ஜொள்ளொழுக இளித்திருக்கிறேன். இதற்கும் ஒரு படி மேலே ஒரு சம்பவம் நடந்தது.

கல்லூரியில் வழக்கம்போல ந்யூமரிக்கல் மெத்தாட்ஸ் அரிப்பிலிருந்து விடுபடுவதற்காக அந்த அத்துவானத்தில் காம்பௌண்ட் தாண்டி பொட்டிக்கடை விரித்திருந்த ராசுக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். போச்சுடா. இது வேறயா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பாரதியார் கஞ்சா புகைப்பாராம். எனக்கு தெரியும். நீ பாரதியா என்று கேட்காதீர்கள். சரி.. அனாவசியமாகப் பேச்செதெற்கு. மேலே சொல்கிறேன். 

ஒரு நிமிஷம். இது ஒரு ரௌடியின் வாழ்க்கைக் குறிப்பு என்று நீங்கள் இப்போது நினைத்தால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். பேசாமல் இத்தோடு இதைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். போன பாராவில் வரும் விடலைக் காட்சிகளை வைத்து ஒரு காமரசம் ததும்பும் வாழ்க்கையாகவும் இதை எடைபோட்டு விடாதீர்கள். அதுவும் தவறு. என்ன குழப்புகிறேனா? இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கு புரிந்து விடும். ம்... எங்கே விட்டேன். ஆங்... சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்போது... உடம்பெங்கும் அழகு ஆறாகப் பெருகி ஓடும் ஒருத்தி அருவியென நடந்து வந்து கொண்டிருந்தாள். நெற்றியில் ஒரு சந்தன தீற்றல். அதன் கீழே ரவையளவு குங்குமம். காதுகளில் கண்ணகியின் சிலம்பு போல இரு பெரு வளையங்கள். கண்களின் ஓரங்களுக்கு மையினால் கரைகட்டியிருந்ததால் அதன் அளவு தெரிந்தது. அடுத்தவரை மயக்கும் அகலக் கண்கள். மீதிக்கு நீங்கள் தடுமாறாமல் அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

அவளை பதுமை போல பாங்காக நிற்க வைத்து துணியால் மேனியைச் சுற்றி அந்த சுடிதார் தைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நகமும் சதையுமாக இருந்தது சுடிதாரும் தேகமும். இப்போது அவளைப் பற்றி திருஅங்கமாலை படிக்கப்போவதில்லை. உடம்பு இறுக்கும் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் அணிந்த வாளிப்பான பெண் எப்படியிருப்பாள் என்று உங்களுக்கே தெரியும். ஆளை மயக்கும் வாசனையுடன் மோகினாய் பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த ஆச்சர்யத்தில் தானாக வாய் திறந்து சிகரெட் புகை வழிந்தது. அந்தப் புகையின் ஊடே அவளைப் பார்த்தால் தேவலோக ”ரம்பை+ஊர்வசி+திலோத்தமை=அவளொருத்தி” போலிருந்தாள். அவள் பவள வாய் திறந்து ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று நாக்கை அழுத்தி உதடு சுழற்றிப் பேசும்போது என் கண்கள் என்கிற வ்யூபைண்டர் வழியாக அவளுடைய சிறுசிறு சுருக்கங்கள் நிறைந்த ஆரஞ்சு சுளை உதடுகள் மட்டும் ஜூமாகித் தெரிந்தது.

பக்கி என்று நினைத்துக்கொள்வாளோ என்றஞ்சி சுதாரித்துக்கொண்டு “என்னையா?” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா?” என்று கேட்டதற்கு அவன் என்னைப் பார்த்தால் தானே பதில் சொல்வான். வாய் மட்டும் மந்திரம் போல “ஆமா...மா..மா...மா...” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க அந்தப் பேரழகியை அசிங்கமான இடங்களில் கண்களால் அளந்துகொண்டிருந்தான்.

இதுவரைப் படித்ததில் “இது தான் நான்” என்று நீங்கள் நினைத்தால் ”ஐ அம் ஸாரி”. மேலே போவோம். “அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சங்கோஜமாக பதில் சொன்னேன். அழகு ராணிகளை தூரத்தில் ரசித்தாலும் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. அவளுக்கு பொதுப்பரீட்சையில் திரிகோணமிதி சொல்லிக்கொடுத்தது போல நன்றிகலந்த சிரிப்போடு “நீங்களும் என் கூட கொஞ்சம் வரமுடியுமா?” என்று சங்கீதமாகப் பேசினாள். அடித்தது யோகம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அங்குதான் வம்பே வந்தது. 

நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து மொத்தம் நானூறு அடியில் அவள் காட்டிய அலுவலகம் இருந்தது. சேர்ந்து நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒருதரம் அந்தத் துப்பட்டா என்னைத் தொடுகிறது. ஒரு துப்பட்டாவின் வருடல் கூட கிளுகிளுப்பூட்டும் என்று அன்று தான் நான் உணர்ந்தேன். ”யேய் இழுத்து பின்னால் முடிந்து கொள்” என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் வழக்காடிக் கொண்டிருக்கும்போதே அந்த கம்பெனி வந்துவிட்டது. ஊருக்குத் தெரியாமல் ஒவ்வாத காரியம் செய்பவர்கள் இடம் போல ஆளரவமற்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். வாசலில் நின்றிருந்த கூர்க்கா பேய்ப் படங்களில் வரும் தாடிவைத்த அச்சுறுத்தும் போஸில் முறைத்த படி நின்றிருந்தான். 

“இன்னிக்கி என்னை இண்டெர்வியூவுக்கு வரச்சொல்லியிருந்தாங்க” அவள்தான் பேசினாள். வீணைத் தந்தியை மீட்டியது போலிருந்தது. “உங்க பேரு?” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா?. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு?” மீண்டும் மிரட்டினான். செமஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட அச்சப்படாதவன் வெடவெடத்தேன். ”அண்ணா” என்ற கெட்டவார்த்தையைப் பயன்படுத்தாமல் “ஃப்ரெண்ட்” என்று சொல்லி எனக்கொரு வாய்ப்பளித்தாள். பி.ஈ கோட் அடித்தாலும் பரவாயில்லை என்று பரம திருப்தியடைந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் ஒரு காலியான வரவேற்பரை. நடந்தால் காலடியின் எதிரொலி கேட்டது. கண்கள் மிரள உள்ளே பார்த்தாள். யாரோ நிலம் அதிர நடந்து வருவது தெரிந்தது. குண்டாக வளர்ந்த அமுல் பேபி போன்ற தோற்றம். “ஹாய்! ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று என் பாழும் நெஞ்சு கிடந்து அடித்துக்கொண்டது. ரெண்டடி சென்றவன் திரும்பப் பார்த்து “சார்! நீங்க என் ரூம்ல வெயிட் பண்ணுங்க. மாகசீன்ஸ் எதாவது இருக்கும்” என்று முப்பத்திரண்டையும் காட்டி அவளை இடித்துதள்ளிவிடுவது போல உள்ளே தள்ளிக்கொண்டு போனான்.

ப்ரஸ்மேனின் சாஃப்ட்வேர் என்ஜினியரிங் தலகாணி புக் மேஜையின் ஓரத்தில் அழுக்காக இருந்தது. இது மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி போல இல்லையே என்று அந்த ஜொள்ளனின் அறையை நோட்டமிட்டால் பேரிங் மற்றும் ப்ரேக் லைனிங் தயாரிக்கும் ப்ராஸஸ் வரைபடங்கள் ஃப்ரேம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. வெளியே டிஸ்டிலரீஸ் என்ற போர்டு. இது ஏதோ அகாதுகா கம்பெனியாக இருக்குமோ என்றும் உள்ளே போன அரைமணிப் பழக்க கரும்புச் “சாரு” என்னவாளாளோ என்றும் கையளவு மனது துடியாய்த் துடித்தது. 

இங்கேயே இருப்பதா அல்லது உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று ஒரு நோட்டமிடலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அவனது மேசையில் இருந்த மொபைல் “ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?” என்று பாடித் துள்ளியது. என் ஆப்பிள் பெண் எங்கே? என்னதிது? என்று கையில் எடுத்துப் பார்த்தால்.... யாரோ விஷ்ணு இன்ஃபார்மர் என்று வந்தது. டேபிளில் சில துண்டு சீட்டுகள் கிடந்தன.


அறிமுகமற்றவர்களின் கைப்பேசியை தொடுவது நாகரீகமல்ல. சுயம் என்னைச் சுட்டவுடன் பட்டென்று கீழே வைத்துவிட்டேன்.  ஏதோ இன்பார்மரிடமிருந்து ஃபோன், குறியீடு, தவறானது, சரியானது, எதுவும் சரியாக இருப்பது போல இல்லை. அரை மணியாயிற்று ஒரு மணியாயிற்று. அவனுடன் சென்றவள் திரும்பவில்லை. டென்ஷனானால் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும். சுவடு தெரியாமல் உள்ளே செல்லலாம் என்று எழுந்து அரையிருட்டாய் இருக்கும் இடத்திற்கு அடிமேல் அடி வைத்து திருடன் போல நடந்தேன். ஒரு கல்லூரி மாணவன் கல்ப்ரிட் போல நடப்பதற்கு எனக்கே அசிங்கமாக இருந்தது.

அதிரடி செயல்களால் எனக்கு ஆபத்து என்றுணர்ந்தேன். விசாலமான காரிடாரில் இருமருங்கும் திறந்துகிடந்த அநேக அறைகளில் மூலை முடுக்கெல்லாம் எட்டுக்கால் பூச்சி வலைப்பின்னி அறுக்க ஆளில்லாமல் சந்தோஷமாகக் குடியிருந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் கால்தடம் பதியுமளவிற்கு தூசி. பேய்பங்களா போல மர்மமாக இருந்தது. என்னதான் ஆம்பிளை சிங்கமாக இருந்தாலும் நெஞ்சு ”படக்...படக்...” என்று அடித்துக்கொண்டது. திடீரென்று முதுகுக்குப் பின்னால் ”ச்சிலீர்..” என்று கண்ணாடி உடையும் சத்தம். பன்னெடுங்காலமாக ஓமன் போன்ற த்ரில்லர் படங்களில் வழக்கமாக வருவது போல கடுவன் பூனை கோலிக்குண்டு கண்களை மியாவி இடமிருந்து வலம் துள்ளி ஓடியது. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு முன்னேறினேன்.

எங்கிருந்தோ ஒரு ஆணும் பெண்ணும் குசுகுசுவென்று பேசுவது கேட்டது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒன்று சாருவின் குரல் போல இருந்தது. இன்னொன்று அட. அந்தத் தடியன் குணாளன்தான். என்ன பேசுகிறார்கள். ஒட்டுக் கேட்டேன். “அவன் சுத்தக் கேனையன். ஜஸ்ட் வான்னு சொன்னவுடனேயே வந்துட்டான். உன்னோட செக்யூரிட்டிதான் ரொம்ப விரட்டிட்டான்பா”. அட பாதகி. பதிலுக்கு அவன் “உம். சரி. இன்னும் எவ்வளவு ஐட்டங்கள் நாளைக்கு கிடைக்கும். ஜல்தி சீக்கிரம் சொல்லு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எழுந்து வந்துரப்போறான். ஆபிஸில் இருந்த ஒரேஆளும் இன்னிக்கி மத்தியானம் லீவு” என்று அவசரப்படுத்தினான்.

நேர்முகத்திற்கு அவள் வரவில்லை என்று என் களிமண் மூளைக்குக் கூட புரிந்துவிட்டது. “இவன் தேறுவானா?” என்றான் அந்தத் தடியன். “ம். பார்க்கலாம்” என்றாள் அந்த தடிச்சி. அழகி இப்போது எனக்கு தடிச்சியானாள். இன்னும் கொஞ்சம் குரல் வந்த திசையில் எட்டிப்பார்க்கலாம் என்ற போது சப்தமே இல்லை. கொஞ்சம் எக்கி வலது பக்கமிருந்த இன்னொரு காரிடாரை பார்த்தேன். கண்பார்வை போய் முட்டிய இடத்தில் ஒரு சிகப்பு விளக்கு உயிரை விடுவது போல எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பின்னாலிலிருந்து யாரோ தோளைத் தட்டினார்கள்.

ஆ!. அடிவயிற்றில் அட்ரிலின் சுரக்க வியர்த்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அந்த இருவரும் கொல்லென்று சிரித்தார்கள். யாரந்த இருவரா? சாருவும் குணாளனும்தான். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் கிடைக்கும் போலிருந்தது. நானும் முதலில் வெகுண்டுதான் போனேன். மூன்றாவதாக ஒருவனைத் தேடிக்கொண்டு ஓடிப்போன அம்மா, உதவாக்கரை அப்பன், சீரழிந்த தங்கை என்று தறிகெட்டுப் போயிருந்த என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்துக்கு இது ஒரு ஜீவனோபயாமாக அமைந்தது.

போன பாராவுடன் என்னுடைய கருப்பு-வெள்ளை ரீல்கள் முடிந்துவிட்டது. இப்போது கலர்ஃபுல்லான வாழ்வு. என்னைப்போல கல்லூரிப் பருவத்தில் தடம் மாறியவர்கள் இடம் மாறி உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இருந்தாலும் கடினமான வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட எனக்கு தனியாளாய் தெம்பில்லை. திராணியற்று நான் திரிந்த போது வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். அது மட்டுமா, இதன் மூலம் கிடைத்த சத்புத்திரர்களின் தொடர்பில் ஒரு நல்ல கம்பெனியில் கிளார்க் போல ஒரு அடிமட்ட வேலையில் சேர்ந்து இப்போது ஒரு உயர் பதவி வகிக்கிறேன். இருந்தாலும் விட்டகுறை தொட்டகுறைக்கு என்னை ஏணியாய் ஏற்றிவிட்ட எனதுயிர் நண்பர்களுக்காக இந்தத் தொழிலும் ஒழிந்த நேரங்களில் உதவியாகச் செய்கிறேன்.

ம்.. சரி.. என்னுடைய “அந்த”த் தொழில் என்னவென்று கேட்கிறீர்களா? இங்கிருந்து ஆட்களை, அதுவும் என் போன்ற அழகிய ஆண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பது. என்ன கேட்கிறீர்கள். அவர்களுக்கு என்ன வேலையா? கார்பெண்டர், கொத்தனார் வேலைக்கு அழகிய ஆண்கள் எதற்கு. எதிர் பாலினரைச் சந்தோஷப்படுத்துவது. சரீர சுகமளிப்பது. இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. காண்ட்ராக்ட் படி இன்னும் ஐந்து மாதம் பாக்கியிருக்கையில் அருப்புக்கோட்டை வாலிபன் ஒருவன் ஒபாமா தேசத்தில் ஓரினமணம் புரிந்துகொண்டான். சரி. விடுங்கள். என் கஷ்டம் என்னோடு. அப்புறம். இந்தக் கதையை இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதனால் நீங்களும் இரகசியம் காப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்போதுதான் ஒரு கோஷ்டியை ஏற்றிவிட்டு மீனம்பாக்கத்திலிருந்து வெளியே வருகிறேன்.

கடைசியாக ஒன்று. நீங்கள் கேட்கவில்லையென்றாலும் சொல்லவேண்டியது எனது முறையல்லவா. விஷ்ணு தான் இன்னமும் எங்களுக்கு இன்ஃபார்மர். முன்பு குணாளன் சாருக்கு மட்டும் இருந்தவன் அவரது அகால மரணத்திற்கு பின்பு என்னிடம் ரிப்போர்ட் செய்கிறான். போலீஸாருக்கு அவன் புல்லுருவி. எங்களுடைய சவுதி அரேபியா ஏற்றுமதிக்கான S A H2 6F என்கிற குறியீட்டை S W H2 6F என்று எஸ்.பி. கோகுலிடம் கொடுத்து குணாளனுக்கு விசுவாசமானான். அந்த டீலில்தான் இப்போது விஷ்ணு குடியிருக்கும் இரண்டு கோடி பொறுமானமுள்ள ராஜா அண்ணாமலைபுரம் 3BHK ஃபிளாட் கிடைத்தது.

ச்சே. ஏதோதோ பேசிக்கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. விஷ்ணு கன்னிமாராவில் காத்திருப்பான். இதோ என்னுடைய மொபைல் கீக்கீக்கென்கிறது. திறந்தால் விஷ்ணு இன்ஃபார்மர். ஹா..ஹா.. இவனுக்கு நூறாயுசு.

பின்குறிப்பு: சவால் சிறுகதைப் போட்டிக்காக நானெழுதும் இரண்டாவது சிறுகதை. போன கதையை நேர்மறையில் எழுதினேன். இந்தக் கதை எதிர்மறை. பிடிக்கிறதா?

-

Tuesday, October 25, 2011

வெடியார்ப்பணம்

உள்ளாட்சி தேர்தலினால் இந்த வருஷம் பட்டாசுக்கடைகள் கொஞ்சம் லேட். தீவுத்திடல் போன்ற பெரிய மைதானங்களில் தான் பட்டாசு விற்பனை செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. சந்துபொந்திலெல்லாம் சாக்கு டெண்ட் அடித்து கூவிக்கூவி விற்கிறார்கள். “யப்பா! நாம எப்ப வாங்கப்போறோம்” என்று ஊசிப் பட்டாசாய் வெடித்த என் பிள்ளைகளை இன்று நாளை என்று இழுத்தட்டித்து போன சனிக்கிழமை இழுத்துக்கொண்டு போனேன். வளர்ந்தாலும் நானும் சிறு பிள்ளைதான், எனக்கும் பட்டாசு கொளுத்தப் பிடிக்கும்.

எண்பதுகளில் ஒரு தீபாவளிக்கு ”தம்பி நூறு ரூபாய்க்கெல்லாம் வெடி கிடையாது” என்று மிலிட்டரி ஆபீசர் மாதிரி வீட்டில் கறாராக சொல்லிவிட்டார்கள். ”ஒத்தைவெடிக்கட்டு தெனம் ஒரு ரூபாய்க்கு வாங்கி ஒரு மாசமாக கொளுத்தி ஏற்கனவே காசைக் கரியாக்கியாச்சு. இன்னமுமா..” என்று என் வாயை லட்டால் அடைத்துவிட்டார்கள். 98 ரூபாய்க்கு ஒரு இரண்டடி நீள சாக்குத் துணிப்பை வழியவழிய வெடி வாங்கி இனாமாக ஒரு சாணி பத்தியும் கொளுத்துவதற்கு தந்தார்கள். இப்போது சாணி பத்தி பத்து ரூபாய். “இவ்ளோ ரூபாய்க்கு வாங்கறோம். இது கூட ஃப்ரீயாக் கிடையாதா?”ன்னு கேட்டால், “எனக்கு யாரும் ஃப்ரீயாத் தரலையே சார்”னு கல்லாவில் உட்கார்ந்து கொண்டு ஐஐடி-ஜெஈஈ கேள்வி ரேஞ்சுக்கு கேட்டுவிட்டோம் என்கிற மமதையில் உள்நாக்கு தெரியும் வரை ”ப்ஹா...ப்ஹா” சிரிக்கிறார் அந்த வெடிச்சிரிப்பு வெடிகடைக்காரர்.

98 ரூபாய் சரக்கில் வீட்டுக்குப் போவதற்குள் கையைவிட்டுத் துழாவித் துழாவி கணக்கெடுத்தால் எலெக்ட்ரிக் ஸ்டோனும் மத்தாப்பூ தீக்குச்சியும் இல்லை. பை நிறையா கொட்டியிருக்கிற வெடியில சந்தோஷம் கிடைக்காம வாங்காத அந்த ரெண்டு ஐட்டம் அந்த தீபாவளியை ஒட்டுமொத்தமாக புஸ்ஸாக்கிக் கொண்டிருந்தது. நரகாசுரன் செத்தே இருந்திருக்க வேண்டாம் என்று அவனுக்காக அனுதாபப்பட வைத்துவிட்டது.

ஜென்ம ஜென்மங்களாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே மொத்த வெடிக் கொள்முதல் செய்து பாட்டி வடாம் காய வைப்பது போல மொட்டை மாடியில் படியேறும் இடத்து சன்ஷேடில் உட்கார்ந்துகொண்டு வெடி அடியில் இங்கிலீஷ் பேப்பர் போட்டு சுள்ளென்று அடிக்கும் வெய்யிலில் காய வைப்போம். “ரெண்டு நாள் வெய்யில்ல இருந்தா சவுண்டு டபுள் மடங்கு வரும்” என்று யாரோ வெடி பல்கலைக்கழக பட்டாசாராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுக் கண்டுபிடித்து சொன்னதைப் போன்று வாரம் முழுக்க மொ.மாடியில் பரப்பி எந்தெந்த வெடியை முதல் நாள் இரவு கொளுத்தனும் எது முதலில் எது கடைசி எது கார்த்திகைக்கு என்று அட்டவணை தயாரிக்கப்படும்.

அந்த வருஷ தீபாவளிக்கு பெருமழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு பண்டிகை கொண்டாடவிடாமல் கொட்டோ கொட்டென்று கொட்டியது. வங்காளவிரிகுடாவில் புயல் மையம் கொண்டிருப்பதாகவும், மூன்றாம் எண் எச்சரிக்கைக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதாகவும் பதபதைக்கும் தகவல். ஆகாய கங்கையாக மழை பொழிந்துகொண்டிருந்ததில் தான் அனைவருக்கும் தீபாவளி கங்காஸ்நானம்.

எப்போதுமே திருச்சி விவிதபாரதி இன்று மழை பெய்யும் என்றால் வெய்யில் அடிக்கும், மிதமான சீதோஷனம் என்றால் கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தனகிரியை குடையாய் பிடிக்கும் அளவிற்கு பொத்துக்கிட்டு ஊத்தும். ஆனால் அம்முறை பெய்யெனப் பெய்யும் மழையாக ஏகத்துக்கும் அவர்கள் வானிலை அறிக்கைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடித்துப் பெய்தது. ”ஐப்பசியில் அடை மழை” என்று ஊஞ்சலாடிய பாட்டியின் பழமொழி வேறு எங்களை வதைத்தது. அது ப்ளாஸ்டிக் காரி பேக்குகள் புழக்கத்தில் இல்லாத மாசற்ற காலம். பாட்டம் பாட்டமாக பெய்யும் ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இருக்கும் இண்டெர்வெல்லில் வெடி வாங்கி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாகிவிட்டது.

கட்டு பிரித்து ஒரு லக்ஷ்மி வெடி வைத்துவிட்டு பத்தடிக்கு நாய் துரத்தும் அவசரத்தில் ஓடிப்போய் காதைப் பொத்திக்கொண்டு காத்திருந்ததில் கொஞ்சம் கொஞ்சமாக மருந்து சுருட்டிய பேப்பர் வரைக்கும் வந்து லக்ஷ்மியை பேப்பராக சிதறடிக்க மனமில்லாமல் திரியிலிட்ட நெருப்பு பொசுக்கென்று அணைந்து போனது. வெடியனைத்தும் மந்திரிகள் மேல் போட்ட ஊழல் கேஸ்கள் போல புஸ் ஆனதில் பக்கத்து வீட்டு துடிப்பான நண்பன் ஒரு உபாயம் செய்தான். எல்லா வெடியையும் பாக்கெட்டோடு ஒரு பெரிய சட்டியில் போட்டு வறுத்தால் சூடாகி வெடிநிலைக்குத் தயாராகிவிடும் என்ற மதிநுட்பத்தோடு அறிவார்ந்த ஒரு செயலில் இறங்கினான்.

லெக்ஷ்மி வெடி, சிவாஜி வெடி, குருவி, அன்னம், சரம், ஆட்டம் பாம் என்று அனைத்து ரக வெடிகளையும் எடுத்து ஒரு ஈடு வறுத்துவிட்டு மறு ஈட்டுக்கு மீதியைப் போடலாம் என்று அடுப்பில் இரும்புச் சட்டியில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தான். அனலிலிட்ட சிவாஜியும், லக்ஷ்மியும் சூடு தாங்காமல் கொதித்தெழுந்து அவர்கள் வீட்டு சமையலறையை துவம்சம் செய்துவிட்டார்கள். எங்கள் எல்லோருக்கும் முன்னதாக முதலில் தீபாவளி கொண்டாடியவனுக்கு கோரஸாக சேர்ந்து வாழ்த்து சொன்னோம்.

மத்தாப்பு கொளுத்தும் மங்கையரின் எண்ணத்திலும் அன்றைக்கு அந்த பெருமழையோடு இடியும் சேர்ந்து விழுந்தது. வீட்டில் “வர்ற மார்கழி தாண்டாது” என்றிருக்கும் பெருசுகளை கூடத்தில் மத்தாப்பு கொளுத்தி புகையோடு மேலே வெண்புகை தவழும் தேசத்திற்கு அனுப்பிவிடப் போகிறார்கள் என்று முன்ஜாக்கிரதையாக வெடி கொளுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்கள். வீதிகளில் பிஜிலி கொளுத்தும் குஜிலிகளைக் காணாது ஆண் சமுதாத்திற்கு அன்று பேரிழப்பு ஏற்பட்டது.

வெடிகொளுத்தும் பேரார்வத்தில் சைக்கிள் கேரியரை ராக்கெட் லான்ச்சராக பயன்படுத்தி விண்ணில் செலுத்தியதில் அது மண்ணில் பாய்ந்து புது பட்டு வேஷ்டியை டப்பாக் கட்டு கட்டி வந்த கடைக்கோடி வீட்டு மாமாவின் தொடையில் பாய்ந்து துளைத்துவிட்டது. அவர் எழுப்பிய மரண ஓலத்தில் தெரு நிசப்தமானது. அவருடைய பாரியாளின் சாபத்தில் கேட்போர் காதுகள் ரணகளமானது. ”புதுத்துணி நெருப்புப் பட்டு தீஞ்சு போனா ஆகாதும்பா” என்று அவருக்கு ஆதரவாக பீதி கிளப்பிய இன்னொரு பாட்டியால் புதுவஸ்திராசையும் அந்தத் தீபாவளியில் அடியோடு ஒழிந்து போனது.

மழை இடைவிடாமல் இந்தத் தீபாவளிக்கும் வெற்றிகரமாகப் பெய்துவருவதால் இந்தப் பதிவையே வெடியார்ப்பணமாக என் நண்பர்களுக்கு சமர்ப்பித்து என்னுடைய இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.


அடிச்சொருகல்: எனக்காக சரம் வெடித்த பாவனாவுக்கு ஒரு நன்றி. பாவனா படம் எனக்களித்த நண்பர் பாரதிராஜாவுக்கு ஒரு நன்றி. போன வருஷ தீபாவளி சமயத்தில் மன்னையில் கொண்டாடிய தீபாவளி பற்றிய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்.

-

Monday, October 24, 2011

சிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)

விஸ்வநாத் வஸந்த பவன் மசால் தோசையும் டிகிரி காஃபியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதற்குள் நான் இங்கே மண்டையைப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்தச் சதிகார கும்பலிடம் சிக்கி நான் சின்னாபின்னமாவதற்கு பேசாமல் மேலே போய் சேர்ந்துவிடலாம் என்று தான் இந்த முடிவு. எங்கள் குலசாமி அடியக்கமங்கலம் ஐயனாரை வேண்டிக்கொண்டு போய் சேர்கிறேன். இந்த விவஸ்தை கெட்ட அநீதி பெருக்கெடுத்து ஓடும் மாய உலகத்திற்கு ஒரு பெரிய கும்பிடு. டாட்டா. பை. பை. வாழ்க வையகம்.
-விஷ்ணு
வாடகைக் குடிலுக்கு வெளியே நெடிதுயர்ந்த அரசமரத்தின் கீழிருந்து ஆறாவது முறையாக வேர்க்கடலை மடித்த கசங்கிய வாராந்திரியின் 24-ம் பக்க எண்ணைச் சுற்றியிருக்கும் வெற்றிடத்தில் கோழிக் கிறுக்கலான வரிகளை மேய்ந்தார் விஸ்வநாத். அவரது டாலடிக்கும் சொட்டைத் தலையில் நீராவியடித்த எவர்சில்வர் தட்டு போல முத்துமுத்தாய் வேர்த்தது. கர்சீப்பால் அழுந்தத் துடைத்துக்கொண்டார். கிங்ஸை இழுத்தார். ஸ்னிஃபர் டாக், பனியன் போலீஸ் தனது சம்பிரதாயங்களை செய்துகொண்டிருந்தனர். அறையைத் தலையோடு கால் புரட்டிப்போட்டார்கள். தூரத்தில் ஒரு காகம் ஈனஸ்வரத்தில் கரைந்தது.

“என்னாச்சு சார்?”

“விஷ்ணுவ இன்னிக்கி நேத்திக்கா தெரியும். வருஷாந்திர பழக்கம். காலையிலேர்ந்து கேஷுவலாப் பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கு அகோரப் பசி. டிஃபனுக்கு வரீங்களான்னேன். பசிக்கலை வேண்டாம்னாரு. வஸந்தபவன்ல சாப்டுட்டு வந்து பார்த்தப்போ கட்டிலுக்கு கீழ தலைகுப்புற கிடந்தாரு. புரட்டினா வாயில நுரை தள்ளியிருந்தது. டென்ஷனாகி மூக்கில கை வச்சுப் பார்த்தேன். ஹி வாஸ் டெட்!” சொட்டை வியர்வை துடைத்து ’கப்’பான கர்ச்சீப்பால் வாயைப் பொத்திக்கொண்டார் விசு.

“எஸ்.பி கோகுல் வந்தாரா?”  வினவினார் விஸ்வநாத்.

“இன்னிலேர்ந்து ஒரு வாரம் லீவுன்னு ஸ்டேஷன்ல சொன்னாங்கய்யா” 501 மட்டையாய்த் தரையில் தவழ்ந்தார்.

“நா கிளம்பறேன்” ஐராவத அம்பாசிடருக்குள் தன்னை சிரமப்பட்டு திணித்துக்கொண்டதும் லோக்கல் கடாமீசை எஸ்.ஐ இஸ்திரி போட்ட சல்யூட் அடிக்க ஸ்லோமோஷனில் கையாட்டிவிட்டு விரைந்தார் விஸ்வநாத் டி.ஐ.ஜி.


2 நாட்களுக்கு முன்.............

எருமைச் சோம்பலான மத்தியானப் பொழுது. கடலோரத்தில் போலீஸ் தலைமையகம் தேனீச் சுறுசுறுப்பாக இருந்தது. அரசு புராதனச் சின்னங்கள் காப்பகம், விளக்கொளி காணாது வௌவால் தொங்கி இருளோன்று கிடக்கும் குக்கிராமக் கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் ஊரறியாத ரகசிய பொக்கிஷ அறைகளில் என்று ஓரிடம் விடாமல் சிலைக் கடத்தல் கும்பல் ஒன்று தன் கைவரிசையைக் காட்டி போலீஸ் கண்ணில் இரத்தம் சொட்ட விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தது.

சட்டசபையில் “அரசின் மெத்தனம்” என்ற எதிர்கட்சிகளின் வெளிநடப்பில் முதல்வர் ஐ.ஜியை வரச்சொல்லி காதில் ரத்தம் வழிய வை(த்)தார். காதைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து கடுப்புடன் ஜீப்பேறியவர் “டிப்பார்ட்மெண்ட்ல கள்ளத்தனமான ஸ்ட்ராங் கனெக்‌ஷன் இல்லாம இது இவ்வளவு சக்ஸஸ்ஃபுல்லா நடக்காது. ஒவ்வொரு தடவையும் யாருன்னு கிட்டத்தில போனதுக்கப்புறம் கோட்டை விட்டுர்றோம். ஷேம் ஆன் அஸ்” என்று மீட்டிங் போட்டு திட்டினார். கை எச்சில் ஆகுமென்று பார்க்காமல் நாக்கைப் பிடிங்கிக் கொள்ளும்படி மேல்தட்டு போலீஸாரின் மானத்தை வாங்கினார்.

டீ வடையோடு அவசரகால மீட்டிங் முடித்துச் செவிக்குணவோடு வயிற்றுக்கும் ஈய கேன்டீனுக்கு ஓடினார்கள். விஷ்ணுவும் அங்கே சிறப்பு விருந்தினர். சென்ற மாதம் அவன் குற்றவாளிகளை மோப்பம் பிடித்து நெருங்கியதில் மகாபலிபுரம் அருகே ரோடோர ரெண்டுங்கெட்டான் ஃப்ரெஞ்ச் விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதற்குள் தப்பிவிட்ட அவர்கள் அறையில் ரவையூண்டு கசக்கிச் சுருட்டிய டாய்லெட் நாப்கின் ஒன்று விஷ்ணுவிற்கு கிடைத்தது.

காரிடாரில் ஷூ சரசரக்க நடக்கும் போது விஷ்ணு நீட்டிய நாப்கின்னில் SWH26F என்று  குருதிச் சிகப்பில் கிறுக்கியிருந்தது. இரத்தமா என்ற சந்தேகத்தில் எஸ்.பி கோகுல் டாமி போல காகிதத்தை உச்சி முகர்ந்து பார்த்தார்.

“சார்! அது செர்ரி ஃப்ளேவர்டு லிப்ஸ்டிக்.”

“ஓஹோ.. இதுதான் மகாப்ஸ்ல கிடைச்சுதா விஷ்ணு?”

“ஆமாம் சார்! டிபார்ட்மெண்ட் மக்கள்லெல்லாம் நாள் பூரா ஜல்லடையா சலிச்சுட்டுப் போன பிறகு ஹோட்டல் மானேஜர்கிட்ட கீ வாங்கி அந்த அறையை ஒரு தடவை இண்டு இடுக்கெல்லாம் துருவிப் பார்த்தேன். டாய்லெட் பேஸினோட ப்ளாஸ்டிக் சீட்டர்ல பபிள் கம் மாதிரி ஏதோ ஒட்டியிருந்தது. இடதுகையால எடுத்துப் பிரிச்சுப் பார்த்தேன்.”

“கிரேட் விஷ்ணு. இது சவுத் வெஸ்ட்ல இருக்கிற பிளாட்ல சிக்ஸ்த் ப்ளோர், ஹவுஸ் நம்பர் டூன்னு எதாவது தேறுமான்னு பாருங்க”

“சார்! எந்த ஊர்ல..வீதியில... எங்கேயிருந்து சவுத் வெஸ்ட்டு... ப்ளாட் ஃபிக்ஸ் ஆக மாட்டேங்குதே”

”என்னாச்சுப்பா. ரெண்டு பேரும் சாப்பிடப்போகலை. எனக்கு வயித்தைக் கிள்ளுது” இருவரையும் தன் கைகளுக்குள் பின்னாலிருந்து அணைத்துக் கேட்டார் விசு.

கோகுல் முன்னால் நடக்க பின்னால் தொடர்ந்த விஷ்ணுவின் சட்டைப் பாக்கெட்டில் துருத்திய கசங்கிய காகிதம் விஸ்வநாதன் கண்களை உறுத்தியது. மாநில அளவில் சிலைப் பாதுகாப்புச் சிறப்புக் காவல் படைக்குத் தலைமையதிகாரியாக நியமித்திருந்தார்கள்.

“விஷ்ணு.. அதென்ன பாக்கெட்ல?”

“ஒன்னும் இல்ல சார்! போன கேஸ் துப்புத் துலக்கும்போது மகாபலிபுரத்தில ஒரு சீட்டுக் கிடைச்சுது. அதான் கோகுல் சார்கிட்ட...”

“சொல்லிட்டீங்களா?” என்று பதபதைத்தார்.

“இல்ல. சொல்லலாம்னு.........”

“உஹூம். யார்கிட்டயும் மூச்சுக் காட்டாதீங்க. இது ரொம்ப சென்ஸிடிவ்வா போயிகிட்டு இருக்கு. நிறைய காரியங்கள் டிப்பார்ட்மெண்ட் ஆட்களுக்குக் கூடத் தெரியாம ரகசியமா செய்ய வேண்டியிருக்கு. எங்கிட்ட குடுங்க.. இதப் பத்தி அவர்கிட்ட எதுவும் ஏற்கனேவே பேசிட்டீங்களா?”

“ஆமா. இந்த மாதிரி ஒரு காகிதம் கிடைச்சுருக்குன்னு சொன்னேன். சாப்பிட்டுட்டு பேசலாம்னாரு” விஜிடெபிள் புலாவ் மூக்கைத் துளைக்கும் ஹாலுக்குள் இருவரும் பிரவேசித்தார்கள். கையலம்பும் இடத்தில் கோகுல் கையை சுத்தமாக சோப்பாயில் போட்டுக் கழுவிக்கொண்டிருந்தார்.

“விஷ்ணு. ஒன்னு பண்ணுங்க. இந்தச் சீட்டை என் கையில கொடுத்துடுங்க. கோகுல்கிட்ட தவறான செய்தியை சொல்லி திசை மாத்திடுங்க.. இந்தப் பேப்பரைப் பத்தி கேட்டார்னா எங்கிட்ட இருக்குன்னு சொல்லிடுங்க.. ஓ.கே”

மதியச் சாப்பாடு தொப்பையர்களின் பெல்ட்டை இறுக்க சமூகக் கடமையாற்ற காவல் நிலையங்களுக்கு விரைந்தார்கள். கோகுல் விஷ்ணுவை அழைத்து “உங்களுக்குக் கிடைத்த அந்தக் குறியீடுகளை எனக்கு மெயில் அனுப்பிடுங்க” என்று உத்தரவிட்டபடி அவசரமாக கவர்னரின் தில்லி பயண பந்தோபஸ்து ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

**

நான்கு மணிக்கு அண்ணாசாலையில் அவ்வளவாக கழுத்தை நெறிக்கும் பம்பர்-டு-பம்பர் டிராஃபிக் இல்லை. ”நடிகை விவாகரத்து”  என்று வம்பர்களை சுண்டி இழுத்த கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து மாலை பத்திரிக்கைப் போஸ்டர் ஆடிக்கொண்டிருந்த கடையில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்தான் விஷ்ணு. ஆணும் பெண்ணும் அணுக்கமாக உட்கார்ந்திருக்கும் விளம்பரத் தட்டியில் ஓசிக்கு தன் கடைப்பெயரையும் வில்ஸ் கம்பெனியார் செலவில் அச்சடித்து மாட்டியிருந்தார்கள். டபிள்யூ மட்டும் மெகா சைஸில் காலை நீட்டிக்கொண்டு தெரிந்தது. விஷ்ணுவிற்குள் பல்பு எரிந்தது.

அமெரிக்கக் கும்பல் ஒன்றுதான் MEtal Lord For ME என்பதை ஸ்லோகனாகக் கொண்டு பேரியக்கமாக நிழலுலகத்தில் இயங்கி வந்தார்கள். மீமீ இயக்கத்தினர் ஒவ்வொரு கலைநயமிக்க இடங்களிலும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி கன்னக்கோல் போட்டார்கள். திருடுவதற்கு பக்கத்தில் முகாமிட்டு ஓரிரு நாட்கள் கலாரசிகர்களாக சென்று வேவு பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதபடி லவட்டிவிடுவார்கள். வில்ஸ் என்கிற வெள்ளைக்காரச் சிலைத் திருடனைப் பற்றிய சர்வதேச குற்ற அறிவிப்பு ரகசியமாக சென்னைக் காவல்துறைக்கும் மெயிலாக கிடைத்திருந்தது. இது வில்ஸாக ஏன் இருக்கக்கூடாது என்று விஷ்ணுவிற்கு ஒரு பட்சி சொன்னது.

“சார் இந்தாங்க பாக்கி...” என்று விஷ்ணுவிற்கு எரிந்த பல்பை அணைத்தான் கடைக்காரன். ஊதிக்கொண்டே பொடிநடையாக வந்ததில் அலையலையாய் புகை SWH26F என்ற எழுத்துக்களில் விண்ணில் வட்டமடித்தது. சோஃபி என்ற பெயரை மகாபலிபுர ஹோட்டல் லெட்ஜரில் பார்த்தது ஞாபகம் வந்ததும் கணக்கு சரியாகிறது என்ற மகிழ்ச்சியில் சிகரெட் புகையோடு சேர்ந்து ஆகாயம் மேலே ஏறினான் விஷ்ணு.

“கோகுல் சார். இந்த கேஸ்ல நாம பாதிக் கிணறு தாண்டிட்டோம்னு நினைக்கிறேன்” மகிழ்ச்சி பொங்க கோகுலை அழைத்துப் பேசும்போது “பா........ம்” என்று ஹார்ன் அடித்த மாநரக பஸ் எதிர்முனையில் கோகுலை மீண்டும் “ஹா.....ஒன்னும் சரியாக் கேட்கலை” கேட்க வைத்தது.

கிடைத்த இரண்டு க்ளூவையும் விவரித்த விஷ்ணுவை ”டின்னருக்கு எட்டு மணிக்கு மவுண்ட்ரோட் ஹோட்டல் செந்தூருக்கு வந்துடுங்க.. மத்தத அங்க பேசிக்கலாம்” என்று அலைபேசியின் தொடர்பைத் துண்டித்தான்.

கோகுல் டி.ஐ.ஜி விஸ்வநாத்தின் வீட்டில் அழைப்புமணிப் பொத்தானை அமுக்கி அது சங்கீதம் வாசிக்கும் போது மாலை 7 மணி.

கதவு திறந்தபோது பெர்முடாஸும் டீஷர்ட்டுமாய் வயதை இரண்டால் வகுத்து விஸ்வநாதன் இளமையாய் நின்றிருந்தார்.

“ப்ளீஸ் கம். என்ன இந்த நேரத்தில?”

“சார்! அந்தச் சிலை திருட்டு கேஸ் க்ராக் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். அதப் பத்தி உங்ககிட்ட பேசிட்டு....”

“டூ மினிட்ஸ் உள்ள வந்து உட்காருங்க கோகுல். தலைக்கு கொஞ்சம் தண்ணிய ஊத்தி ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துடறேன். வீட்ல அம்மாவும் பொண்ணும் விண்டோ ஷாப்பிங் போயிருக்காங்க. நா வந்துதான் உங்களுக்கு எதாவது திரவம் குடிக்கக் கொடுக்கனும்.” என்று டர்க்கி டவலை சுற்றிக் கொண்டு ஓடினார்.

“பொறுமையா வாங்க சார். நா வெயிட் பண்றேன்” ’ன்’சொல்லும் போது பாத்ரூமில் நுழைந்திருந்தார்.

கேஜி குழந்தை மேஜைப் போல பென்சிலும், ஸ்கேலுமாக அலங்கோலமாக இரைந்து கிடந்தது. வாரமலரின் ”குறுக்கெழுத்துப் போட்டி” கண்டுபிடிப்பதைப் போல SWH26Fவை  குறுக்காகவும் நெடுக்காகவும் கிறுக்கி முயற்சித்திருந்தார். அப்போதுதான் ”Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான..” என்று விஷ்ணு பெயரில் இருந்த அந்தச் சிட்டு அவன் கண்களுக்கு தட்டுப்பட்டது. எட்டு மணிக்கு விஷ்ணுவை சந்திக்கும்போது கேட்க வேண்டும் என்பதற்காக அவன் அனுப்பிய குறியீட்டு மெயிலின் முக்கிய பாகத்தை எடுத்து மேஜையில் இருந்த சீட்டுடன் பொருத்திப் பார்த்துச் சிரித்தான். விஸ்வநாதனின் மொபைல் வைப்ரேஷன் மோடில் தையதக்காவென்று குதித்தது. கையிலெடுத்துப் பார்த்த கோகுலுக்கு வியப்பு. அதில் Vishnu Informer என்று ஒளிர்ந்தது. இந்த நேரத்தில் இவனெதற்கு இவரைக் கூப்பிடுகிறான் என்று யோசித்தவாறே மீண்டும் மேஜையில் மொபைலைக் கிடத்தினார் கோகுல்.



”உம். சொல்லுங்க கோகுல்...” என்று ஈரத் தலையைத் துவட்டியவரிடம் கடைசியாக விஷ்ணு கண்டுபிடித்தது வரை சொல்லிவிட்டு எட்டு மணிக்கு விஷ்ணுவை சந்திக்கும் அவசரத்தில் புல்லட் ஏறிப் பறந்தான் கோகுல்.

செந்தூர் ஹோட்டலில் குறை வெளிச்சத்தில் கடைசி டேபிளில் காத்திருந்தான் விஷ்ணு. 

“ஸோ, கண்டுபிடிச்சிட்டே” என்று விஷ்ணுவின் முதுகில் தட்டினார் கோகுல்.

“ஆமா சார்! மகாப்ஸ்ல கொள்ளையடிச்சப்போ ஊருக்கு அவுட்டோர்ல இருக்கிற ஈ ஓட்ற ஹோட்டல்லதான் தங்கியிருந்தாங்க. அது மாதிரி இப்ப கடத்தப்போற வென்யூல கூட லோக்கல்ல யாரும் எட்டிப்பார்க்காத லாட்ஜ்லதான் இவனுங்க தங்கப் போறானுங்க”

“எப்டி கண்டுபிடிக்கிறது விஷ்ணு?” தலையைச் சொறிந்தான் கோகுல்.

”இதுவரைக்கும் நடந்த திருட்டுக்கள்ல முருகன் சிலையைத்தான் குறி வச்சு தூக்கியிருக்காங்க. அதனால இப்பவும் ஆறுமுகர் தான் அபேஸ் ஆகப் போறாருன்னு நினைக்கிறேன்”

“சிங்காரச் சென்னையில எந்த ஆறுமுகர்ப்பா கொள்ளையடிச்சிக்கிட்டு போற மாதிரி இருக்காரு”

“ஊஹும். சென்னையில இல்லை. வெளியூர்ல..”

“இண்ட்ரெஸ்டிங்... எந்த ஊரு... கெஸ் பண்ண முடியுதா...”

“தாராளமா.. இந்தக் கட்டத்தைப் பாருங்க” என்று கைத் துடைக்கும் நாப்கின்னில் காத்திருந்த நேரம் வரை கட்டமிட்டதைக் காண்பித்தான்.

CodeLocationExecution
SSouthSophia
WWestWills
H2Hill SecondHotel to
6FSix Face(ஆறுமுகம்)Six Furlong

கோகுலின் முகம் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. ”சிக்மென்ட் ஃப்ராய்ட் புக் போல கொஞ்சமா புரிஞ்சும் நெறையா புரியாத மாதிரியும் இருக்கு. கேன் யூ எக்ஸ்ப்ளைன்?”

”சென்னையிலிருந்து தென்மேற்கில் ஆறுபடைவீட்டில் இரண்டாவதான பழனி முருகன் ஆலயம் தான் டார்கெட். அதற்கான மாஸ்டர் ப்ளான் மகாபலிபுரத்தில் திருடும் போதே தீட்டியிருக்கிறார்கள். இதை யார்யார் எப்படி எக்ஸிக்யூட் செய்யப் போகிறார்கள் என்பதை இரண்டாவது காலத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஒரே கோட்வேர்டில் ரெண்டு செய்திகள்

மகாபலிபுரத்தில் கைவரிசை காட்டிய அதே சோஃபியா மற்றும் வில்ஸ் இருவரும் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு இதை முடிக்கப்போகிறார்கள்.”

மூச்சுவிட்டவுடன் சர்வர் விரல் விட்ட தீர்த்தத்தை ஒரே மடக்காக சாய்த்துக்கொண்டு க்ளாஸை கீழே விஷ்ணு வைத்ததும் கை சுளுக்கும் வரை குலுக்கினார் கோகுல்.

“சிம்ப்ளி சூப்பர்ப் விஷ்ணு. இப்ப உன்னை அப்படியே இருக்கக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு.”

மறுநாள் விடியற்காலை ஆகாயமார்க்கமாக சொக்கநாதரைப் பார்த்துக்கொண்டே மதுரையில் இறங்கினார்கள். பழனிக்கு ஒரு வாடகைக் காரில் பறந்தார்கள். கோயிலுக்கு ஒரு கி.மீ சுற்றுவட்டாரத்திலிருக்கும் ஒவ்வொரு லாட்ஜாக வெளிநாட்டினர் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று மஃப்டியில் ஏறியிறங்கினார்கள்.

தனது பேத்திக்கு மொட்டையடிக்கக் குடும்பத்தினரோடு பழனிக்கு வந்திருந்த விஸ்வநாத் ஜவ்வாது விபூதி ஸ்டாலருகே விஷ்ணுவைப் பார்த்துவிட்டு கைதட்டிக் கூப்பிட்டார்.

“என்னப்பா இங்க...”

யாரிடமும் சொல்லவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னதை மீறி நாம் ஈடுபடுகிறோம் என்று தெரிந்தால் கோபிப்பாரோ என்ற பயத்தில் ”இல்ல சார்.. வந்து....” என்று தடுமாறினான்.

“என்னாச்சு... எதுக்கு தயங்குற... நீ எங்க இந்தப் பக்கம்..”

“எங்க மாமா பையனுக்கு மொட்டையடிக்க வந்தோம்...”

“மாமா பையனுக்கா...”

“ச்சே.. இல்ல பேரனுக்கு சார்”

“சரி..சரி... ரொம்ப அவசரத்தில இருக்கீங்க போலருக்கு... உங்களை நாளைக்கு மீட் பண்றேன்” என்று விஷ்ணுவின் விடுதியை ஐஃபோனில் குறித்துக்கொண்டார்.

அவரிடமிருந்து பிய்த்துக்கொண்டு கடைத்தெரு தாண்டி வந்தபோது சந்தில் மறைந்திருந்த கோகுல் “அவரிடம் எதுவும் சொன்னியா?” என்று கேட்டான்.

“இல்லை சார்! அவர்கிட்ட வேணும்னா சொல்லிடட்டா.. நாளைக்கு எங்கிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு...”

“கண்டுபிடிச்சிட்டு சொல்லுவோம்... அதுவரைக்கும் சும்மாயிரு...” என்று அவர்கள் தங்கியிருந்த குடிலுக்குள் தஞ்சமடைந்தார்கள்.

விஸ்வநாத்துக்கு தெரியாமல் வந்துவிட்டதால் பார்த்தால் கோபித்துக் கொள்வார் என்று காரணம் சொல்லிவிட்டு விடியற்காலை பஸ்ஸில் ஊருக்கு கிளம்புவதாக புறப்பட்டான் கோகுல். எட்டு மணிக்கு விஸ்வநாத் விஷ்ணு தங்கியிருந்த தேவஸ்தான குடிலுக்கு வந்தார். பேச்சுவாக்கில் அவரிடம் கோகுலுடன் பழனி வந்த காரணத்தைச் சொல்லிவிட்டு வருந்தினான். "பரவாயில்லை... விடுங்க” என்று விஸ்வநாத் சாப்பிடக் கூப்பிட்டும் விஷ்ணு மறுத்துவிட்டான்.

ரூமில் சோகமாகத் தனியாளாய் உட்கார்ந்திருந்த போது திடீரென்று கோகுல் நுழைந்தான். 

“விஷ்ணு! நீ ரொம்ப புத்திசாலி. நீ கண்டுபிடிச்ச அவ்வளவு விஷயங்களும் நூத்துக்கு நூறு உண்மை. ஆனா அவங்களை பிடிக்கமுடியாது” என்றான் நம்பியாராய்.

“ஏன்?”

“ஏன்னா அவங்க என்னோட பார்ட்னர்ஸ். இன்னும் கொஞ்ச நாள்ல சுவிஸ்ல குடியேறப்போறேன். இதுதான் எங்களோட லாஸ்ட் டீல். இதை விஸ்வநாத்கிட்ட போட்டுக்குடுத்தா உன்னைப் பிடிச்சு உள்ள வைக்க நீதான் இந்தக் கும்பலுக்கு மூலாதாரமா இருக்கேன்னும், இந்தியாவோட மெயின் ஏஜென்ட் நீதான்னும் நிரூபிக்க அந்த மகாபலிபுர ஹோட்டல் மேனேஜரை கணக்குப் பண்ணிட்டேன். அதனால....”

ஷாக்கானான் விஷ்ணு. ”நீங்க என்ன சொன்னாலும் நா ஒத்துக்க மாட்டேன். விஸ்வநாத் சார் வந்ததும் ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணிடலாம்” என்று டெசிபலைக் கூட்டினான்.

அவனைக் கொலைவெறியுடன் நெருங்கிய கோகுல் சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்த விஷப் பொடியை விஷ்ணு வாயில் திணித்தான். இரண்டு வினாடிகள் விஷ்ணுவின் வாயை மூக்கோடு சேர்த்துப் பொத்திவிட்டு கையை எடுத்தான். உயிரற்ற சடலமாக சரிந்த விஷ்ணுவைத் தரையில் கிடத்திவிட்டு அருகில் கிடந்த கசங்கிய காகிதத்தில் இந்தக் கதையின் முதல் பாராவைக் கிறுக்கிவிட்டு மறைந்தான்.

**

”ஆமா. கோகுல்தான்... கொள்ளைக்கார வெள்ளைக்காரங்களைப் பிடிச்சிட்டோம். லேசா தட்டின உடனேயே கக்கிட்டாங்க.” செல்ஃபோனில் டி.ஐ.ஜி விஸ்வநாத் குடும்ப ஸகிதம் பேசிக்கொண்டே பழனியின் ”நன்றி மீண்டும் வருக!!”வைத் தாண்டும் போது “முருகனுக்கு அரோகரா!! கந்தனுக்கு அரோகரா!!” என்று காவடியேந்திய பக்தர் கூட்டம் ஆறுமுகனைத் தரிசிக்க சென்றுகொண்டிருந்தது.

பின்குறிப்பு: இது சவால் சிறுகதைப் போட்டி - 2011 க்காக எழுதப்பட்டது. மேலே இருக்கும் படம் இக்கதையில் ஒரு இடத்தில் சரியாகப் பொருந்தி வரவேண்டும் என்பது சவால். இப்போட்டியில் 90 சதவிகிதம் மார்க்குகள் நடுவர்களாலும் 10 சதவிகிதம் யுடான்ஸ் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்போகிறார்களாம். முழு விதிமுறைகளைப் படிக்க இங்கே செல்க.

-

Monday, October 17, 2011

மன்னைக்கு ஒரு அதிரடி விஸிட்!


கார் சக்கரங்கள் மேலப்பாலத்தில் ஏறி ரோட்டோர மணலில் சரசரக்கும் போதே பழைய நினைவுகள் புரையேறத் தொடங்கிவிட்டது. ”மன்னார்குடி போய்ட்டு வரலாம் வரியாடா?” என்று என் சோதரி அன்பாக கேட்டவுடன் ”மன்னை ஆசை” மண்ணாசை பொன்னாசையைப் போல எவ்ளோ வயசானாலும் விடாத அரசியல்வாதிகளின் பதவியாசையாய் மனதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. காரோட்டும் சாரதியாய் வர ஒத்துக்கொண்டேன். இருந்தாலும் ஒரு பொறுப்பான(?) பதவியில் குப்பை கொட்டுவதால் எனது பாஸிடம் முறைப்படி அனுமதி பெற்று எங்கக்காவுக்கு சரியென்று ஓ.க்கே சொன்னேன்.  அனுமதித்த பாஸ் நீடூடி வாழ்க!

கும்பகோணம் வெங்கட்டரமணாவில் காஃபி சாப்பிடாமல் சேப்பாயிக்கும் ரெஸ்ட் கொடுக்காமல் மன்னை மண்னை மிதிப்பதற்கு பொங்கும் ஆவலில் ஆக்ஸிலில் ஏறி உட்கார்ந்தேன். வளைவுகள் நிரம்பிய கும்பகோ-மன்னை சாலையில் ஓட்டுவதற்குள் பெண்டு நிமிர்ந்துவிடும். கை கழன்றுவிடும். நீடாமங்கலம் பெரியார் சிலையருகில் வழக்கம் போல லாரியும் பஸ்ஸும் கலந்து கட்டி மேய்ப்போனில்லாத மந்தையாய் தண்டவாளம் தாண்டி இரைந்து நின்றது. ”பப்பப்பாம்..பாம்.. பப்பப்பாம்..பாம்” என்று வைத்த கையெடுக்காமல் வாகன ஒலிப்பான் ஒலிக்கும் ஹார்ன் மாணிக்கங்கள் இன்னமும் ட்ரைவர்கள் போர்வையில் அங்கே உலவிக்கொண்டிருந்தார்கள். நீடாவைத் தாண்டி மன்னை சாலையை பிடித்து நான்காவது கியர் மாற்றுவதற்குள்ளாக ரயில்வே கிராஸிங் சிக்னல் ”கூ....” என்று மெதுவாக வரச் சொல்லிக் கூவியது.

ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறிக் குதித்த இந்த காற்றடைத்த பையோடு ஆசையடைத்த மனஸும் தொடர்வண்டி ஆசையில் இருமுறை துள்ளிக் குதித்தது. ராயபுரம் பாலம் கடக்கையில் அகஸ்மாத்தாக கவனித்தபோது வலதுபுறம் அமைதியாக, நேற்று பூப்பெய்திய பெண் போல அடக்கமாக, வனப்போடு காவிரியின் தங்கை பாமணி ஆறாக கரைபுரண்டு ஓடி வந்துகொண்டிருந்தாள். கார் ஜன்னலைத் திறந்ததும் ”சலசல”வென்று என் காதுகளில் கொஞ்சு மொழி பயின்றாள். ஆற்றிலிருந்து மண்வாசனையுடன் ஈரப்பதம் நிரம்பிய காற்று ஈன்றவளைப் போல முகத்தை வாஞ்சையுடன் அலம்பிவிட்டது. அந்தக் காற்றுக்கு ஏசியெல்லாம் தூசி. உள்ளுக்குள் புத்துணர்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தது.

வாசல் சுத்தமாக பெருக்கி சுகாதாரமாக இருந்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி வாசலில் வண்டியை நிறுத்தும்போது சுதர்ஸன் காஃபிக் கடையில் இருந்து காஃபிப் பொடி வறுத்து ஒட்டு மொத்த கடைத்தெருவிற்கும் காஃபியாசை மூட்டிக்கொண்டிருந்தார்கள். பள்ளிக் காலங்களில் அந்தக் கடையில் மதிய சாப்பாடு முடித்து வாடிக்கையாளர்களுக்கு பொடியளந்து சேவைபுரிந்த ஞாபகம் நினைவில் வந்து முட்ட போய் ஒரு எட்டு எட்டிப்பார்த்தேன். “ஏய்! எப்படியிருக்கே!” என்று கல்லாவிலிருந்து எழுந்து கையைப் பிடித்துக்கொண்டார், முன்பு மீசையும் இப்போது மழித்த, முன்பு இளமையோடும் இப்போது வயதாகியும் இருந்த முதலாளி. நெற்றியில் ஸ்ரீசூர்ணம் மிஸ்ஸிங்!

அர்த்தஜாம மணியோசை கேட்டு ஆனந்தவிநாயகரிடம் ஓடினேன். வெள்ளிக்கிழமை சந்தனக்காப்பில் ஜொலித்தார். சென்னைப் பகுதிகளில் காணமுடியாத கண்கவர் அலங்காரம். ஒரு தேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் சம்பந்த குருக்கள் பையன் புஷ்பங்களாலும் சந்தனத்தினாலும் அலங்கரித்திருந்தார். தரிசனம் முடித்து வலம் வந்து நெற்றியில் விபூதியை பூசும் போது ஹமீது ஞாபகம் வந்தது. எட்டாவதில் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் புதுசாக என்னை பந்து பொருக்கிப் போட பதினோராவது ஆளாக சேர்த்துக்கொண்டபோது ஹமீதுதான் கேப்டன். ஃபாஸ்ட் பௌலர். கையை கனவேகமாக சுழற்றுவது தான் தெரியும், கீப்பர் கையில் பாலிருக்கும். தினமும் ஆனந்தவிநாயகர் கோயிலுக்கு வந்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணமிட்டு விபூதி பூசாமல் பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கமாட்டார் சமய நல்லிணக்க ஹமீது.

அடுத்த அரைமணி நேரத்தில் அன்றைய கணக்கை முடித்துக்கொண்டு ராச்சாப்பாடு என்னை மன்னையில் இன்முகத்தோடு விருந்துபசரிக்கும் என் உடன் பிறவா சகோதரி ரோஹினி ஸ்வாமிநாதன் வீட்டில் தஞ்சமடைந்தேன். ரொம்ப நாளைக்கப்புறம் ரம்மி வித் சீக்ரெட் ஜோக்கர் சககுடும்பமாக விடிய விடிய ”ஊம்... அவருக்கென்ன... அவ எங்க போனா... அச்சச்சோ... அவளுக்கு ராஜயோகந்தான்..” என்று ஊர்க்கதை பேசிக்கொண்டு சுவாரஸ்யத்தில் ஜோக்கரை டிஸ்கார்ட் செய்து விளையாடினோம். யப்பாடி! எல்லாத்துக்கும் மன்னையில் எவ்ளோ நேரம் இருக்கு!!

காலையில் முதல் வேலையாக ஒத்தை தெரு ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம். இரண்டு குடம் பால், நூறு எம்.எல் டாபர் ஹனி, ஒரு லோட்டா பன்னீர், நாலு சாத்துக்குடி, ஒரு சொம்பு இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என்று யானை முகத்தனை ஐந்து கரத்தனை குளிர்வித்தோம். அண்ணனைப் பார்த்த கையோடு நேராக காளவாய்க்கரை சக்திவேல் முருகன் ஆலயம். முருகனை தரிசிக்கப் போகும் வழியிலிருந்த சாமி தியேட்டர் வயசாகி, வாசல் கிரில் கதவு துருப்பிடித்து பழசாகி களையிழந்து காணப்பட்டது. ”வர்ற தீபாவளிக்கு நம்மூரு சாமியிலதான் தளபதி ரிலீஸ்” என்று ஒரு தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் பக்தர்கள் மார்தட்டி பெருமையாக பேசிக்கொண்டார்கள். அந்த வருடம் ரசிக சேனைகளுடன் தளபதி திருவாரூரில் வெளியானார்.

குட்டையருகில் முருகன் விபூதி அலங்காரத்தில் இன்முகத்தோடு இருந்தார். ஒன்றிரண்டு முருக பத்தர்கள் சாயங்கால வேளையில் ஒரு முழம் பூவும் வாழைப்பழமுமாக சிம்பிளார்ச்சனை செய்து தரிசித்து இன்புற்ற சக்தி வேல் முருகன் இப்போது காலையிலிருந்தே கௌமாரர்களுக்காக ஓவர் டைம் செய்கிறார். “அந்தக் கூடை என்னிது... பச்சைக் கலர் ஒயர்க்கூடை இங்க.. பூசாரி அந்த ப்ளாஸ்டிக் கவரை இந்தப் பக்கம் குடுங்க” என்று தேங்காய்ப் பழ அர்ச்சனைக் கூட்டம் அம்முகிறது. “இங்க ஒரு பெரியவர் பூசாரியா இருந்தாரே.... இருக்காரா?” என்ற என் கேள்விக்கு வெள்ளை அண்ட் வெள்ளையில் தர்மகர்த்தா போலிருந்த ஒரு இளைய முதியவர் கையிரண்டையும் சோகத்தோடு மேலே காண்பித்து “ஏழு வருசமாச்சு” என்று அண்ணாந்து பார்த்து சொற்ப வார்த்தைகளில் முடித்துக்கொண்டார்.

முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டு அஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு அடுத்ததாக மன்னை நகரின் திருவிழா நாயகர், அன்று ஞாலம் அளந்த பிரான், கோபில கோப்பிரளய முனிகளுக்காக கோபியர்களுடன் ஹரித்ராநதியில் ஜலக்கிரீடை செய்து காண்பித்த அந்த கோவர்த்தனகிரிதாரி, மணி நூபுர தாரி ராஜகோபாலனை தரிசிக்க சென்றேன். விண்ணை முட்டும் கஜப்ருஷ்ட ராஜகோபுர விமான நுழைவாயில் ஆஞ்சநேயர் சன்னிதியில் செம்பகேசன் சாரைக் காணோம். தீக்ஷிதரைவிட பள்ளியில் அவர் எங்களுக்குத் தமிழாசிரியர். பாவம்! இன்னமும் நான் இதுபோல வலைத்தளத்தில் தமிழில் எழுதுவது தெரியாது. தாயார் சன்னிதியில் சம்பத் தீக்ஷிதருக்கு செம எரிச்சல். எல்லோரையும் கடுகடுத்தார். பின்னால் செண்டும் கையுமாக செம்பகலெக்ஷ்மித் தாயார் மலர் முகம் பூத்தபடி இருந்தாள்.

புரட்டாசி சனிக்கிழமையும் நாளுமாக பரவாசுதேவப் பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைத்தது. ராஜகோபாலன் மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் திறந்த மார்பும், தலையில் முண்டாசும் அதையே இடுப்பில் கொசுவிய வேஷ்டியுமாக ஏக வஸ்திரத்தில் (சிங்கிள் பீஸ்), கையில் சாட்டையுடனும் கன்றுக்குட்டிகளுடன் புன்முறுவலுடன் அருள் புரிந்தார். சந்தான கோபாலனைக் கையில் ஏந்தி ”கரார விந்தேன முகார விந்தம்” பாடி வழிபட்டு துளசிப் ப்ரசாதத்தை மென்று கொண்டே தும்பிக்கையாழ்வாருக்கு குட்டிக்கொண்டே ப்ரதக்ஷினம் செய்தேன். வெளிப்பிரகாரம் வலம் முடித்து கோயிலுக்கு வெளியே வரும் வேளையில் ராஜகோபுர இடுக்கில் அம்பாளின் ஆடிப்பூர தேர்முட்டிக்கு அருகில் மதிய வெய்யிலில் பெஞ்ச் சுடச்சுட உட்கார்ந்து இருவர் ஹாட்டாக காதலித்தனர். அவன் இளிப்பதும் அது தலையைக் குனிவதும், அவள் இளிப்பதும் அவன் கை ரேகை பார்ப்பதுவுமாக ஒரு அடி இடைவெளியில் நான் பார்க்கும் வரையில் வரைமுறையோடு இருந்தார்கள்.

இதற்கிடையில் மன்னையில் தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. டி.ஆர்.பாலுஜி மன்னை நாராயணசுவாமியின் பெயர்த்திக்காக ஜீப்பில் நின்று கொண்டு ஜி ஊழல் பற்றியெல்லாம் பேசாமல் நாசூக்காக வாக்குச் சேகரித்தார். “உங்கள் சின்னம்....” என்று மைக் அலற ஒருவரும் பதிலுக்கு அலறாததால் மீண்டும் அவர்களே அதை பூர்த்தி செய்துகொண்டார்கள். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா, ஸிட்டிங் எம்மெல்லே ஏழடிக்கு ஜீப்பக்கத்திலிருந்து தரையில் நின்று கொண்டே அப்பாவிடம் அடிக்கடி காதில் குசுகுசுவென்று சேதி சொன்னார். ஓட்டுரிமை உள்ளோர் அல்லாதோர் அனைவரிடமும் கைகுலுக்கி பாந்தமாகக் பணிவன்போடு ஓட்டுக் கேட்டார். அடுத்து நேராக மன்னை எக்ஸ்பிரஸ் நிறுத்துமிடம் பார்ப்பதற்காக பாமணி செல்லும் பாதையில் வண்டியை விட்டேன்.

முள்வேலியில்லாமல் ஆட்டோயில்லாத தண்டவாளங்களில் அசிங்கமில்லாத அதிசய ஆச்சச்சர்ய ரயில் நிலையமாக இருந்தது மன்னார்குடி ரயில் நிலையம். சமோசா, முறுக்கு, வாட்டர் பாக்கெட் விற்பனை இன்னமும் ஆரம்பமாகவில்லை. குறு பெரு வியாபாரிகள் கடை விரிக்கவில்லை. ஒரு பக்கம் மிச்சமிருக்கும் ஃபிளாட்பார வேலைகள் ”மாலும் ஹை.. நஹி ஹை” என்று ஹிந்தி பேசும் தொழிலாளிகள் ஆற அமர ஒவ்வொரு ஜல்லியாக எடுத்துப் போட்டு தொழில் சுத்தமாக செய்துகொண்டிருந்தார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் இஞ்சின் ட்ரைவர் இருவர் மட்டும் அந்த ஆளரவமற்றுக் கிடந்த பரந்த ரயில் நிலையத்தில் பயமில்லாமல் குறட்டைவிட்டு ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒரு மதியக் காகம் தொண்டை கிழிய கரைந்ததில் துயில் களைந்து அதிர்ச்சியோடு எழுந்து விடுவார்களோ என்று அச்சப்பட்டேன்.

சாயந்திரம் காரை நேஷனல் ஸ்கூல் வாசலில் நிறுத்திவிட்டு நடைராஜாவாக ஒரு பஜார் பயணம் சென்றேன். தெரிந்தவர் தெரியாதவர் அறிந்தவர் அறியாதவர் என்று சகலரையும் ஒரு உடனடி ஸ்டாக் எடுத்தேன். “மாப்ளே! எப்படியிருக்கே.. இளைச்சுட்டே.. முன்னால லைட்டா சொட்டை விழுந்திருச்சு... கண்ல லேசாக் கருவளையம் இருக்கே.. ” என்று கைகுலுக்கி தோள் தட்டி ஷேமலாபங்கள் விசாரித்தார்கள். நிறைய இடங்களில் ஃபாஸ்ட் புட் திறந்துவிட்டார்கள். சுப்ரமணிய முதலியார் நாட்டு மருந்துக்கடையும் வாசலில் வெள்ளை உரசாக்கு மூட்டையை கழுத்துவரை சுருட்டி அடுக்கிய எலும்பிச்சம்பழக் கடையும் அமோகமாக அப்படியே இருந்தது.

பத்தாம் வகுப்புத் தோழன் கணேஷின் ரெடிமேட் கடையில் இன்னமும் தீபாவளி விற்பனை சூடு பிடிக்கவில்லை. ”என்னடா?” என்று விசாரித்ததில் “எலெக்ஷன் முடியனும் மாப்ள” என்று அவனிடமிருந்து தேர்தல் பதிலாக வந்தது. ஜீவா பேக்கரி துரை கழுத்தில் கட்டிய கர்ச்சீப் நனையும் அளவிற்கு கேக் விற்பனை மும்முரத்தில் என்னை கவனிக்கவில்லை. கிருஷ்ணா பிஸ்கட்ஸ் வாசலில் வழக்கமாய்ச் சைக்கிளும் கையுமாக குழுமியிருக்கும் வயதான கருப்புச் சட்டைக்காரர்களை காணவில்லை. எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத இரண்டு வாலிபர்கள் பின் நம்பரை என்னிடம் நம்பிக்கையாகச் சொல்லி பண உதவி கேட்டார்கள்.

பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் வாசலில் கூட்டுறவு பால் விற்பனையாளர்கள் ”சூடான பால்” விற்றுக்கொண்டிருந்தார்கள். டில்லி ஸ்வீட்ஸ் யுவராஜை கடையில் காணவில்லை. உற்சாகமாக யாரிடமோ கையாட்டி சைகையாய்ப் பேசிக்கொண்டிருந்த டைலர் ஸ்டைலோ மணி மிகவும் நரைத்து மூப்புத் தட்டியிருந்தார். வேஷ்டியை மடித்துக் கட்டியும், கைலியை தொடை தெரியும் வரை வரிந்து கட்டிக்கொண்டும் எனது ஜனம் இன்னமும் அப்படியே ராஜவீதிகளில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறது. எனக்குத் தான் சென்னை திரும்பும் நேரமாகிவிட்டது. இதோ. கிளம்பிவிட்டேன். ஹரித்ராநதி கடக்கும் போது “மீண்டும் எப்போது?” என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது யாருக்கு கேட்டிருக்கும்?

பின் குறிப்பு: இந்தப் பதிவெழுதியவரே இந்தப் புகைப்படத்தையும் எடுத்துள்ளார் என்பது ஒரு விசேஷ செய்தியாகும்.

-

Monday, October 10, 2011

மை சீர்திருத்தம்

”டியர் ஐயா, தாங்கள் தங்களுக்கு இட்ட பணியைச் செய்து முடித்து வீட்டீர்களா என்று தயை கூர்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும்” என்று பணிவுடன் அடியில் ரிகார்ட்ஸ் போட்டு அனுப்பும் மெயில்களுக்கு, பதில் ரிகார்ட்ஸ் கூட போடாமல், நீங்கள் அந்த வேலையை செய்தால் நன்றாக இருக்கும், இந்த வேலையைச் செய்தால் நன்றாக் இருக்கும் என்று  கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பழிக்குப் பழியாக மெயிலுக்கு மெயில் அனுப்பும் டெரர் சமூகம் இன்னமும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தினமும் இவ்வகையான தொழில் முன்னேற்ற ஆக்கப்பூர்வமான மின்கடிதாசிகளுக்கு முன்விரல்கள் ஒடிய பதிலளித்தே சிலருக்கு அலுவலக வாழ்க்கை அலுத்துவிடும். இதில் ஒடிந்துபோய் நொடித்துப்போன ஆபீசர்கள் கணக்கிலடங்கா. எந்த முக்கியமான தலை போகிற விஷயத்திற்கு ஒரு கால் கடிதாசி போட்டாலும் பதிலுக்கு முழம் நீளத்திற்கு ”அத்த செஞ்சியா? இத்த செஞ்சியா?” என்று வரும் நொட்டை சொல் மிகும் மெயில்கள் ஏராளம். அலுவலகங்களில் இவையனைத்திற்கும் மூலகாரணம் நாம் “பலி கடா” வாக ஆகிவிடுவோமோ என்கிற ஆதார பயம்.

வேலை நிறைய செய்பவர்கள் நிறைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவர்கள் என்பது எல்லோருக்கும் தெள்ளெனத் தெரிந்த ஒன்று. தனியார் அலுவலகங்களில் மெயில் என்கிற மின்கடிதாசி என்றால் அறநெறியோடு(?!) ஒத்து ஒழுகும் அரசாங்க அலுவலகங்களுக்கு பச்சை சிகப்பு என்று வண்ணமயமான நாடாக்கள் கட்டிய கோப்புகள். அரசாங்க இயந்திரம் மக்கர் செய்யாமல் ஓடுவதற்கு துறைகளின் துரைகளுக்கிடையே உத்யோகப்பூர்வ கடிதப் போக்குவரத்து மிகவும் அவசியமான அத்தியாவசியமான ஒன்று.


***

என்னுடைய பால்ய நண்பர் அருண் ஷோரி. அவர் நிர்வாக சீர்திருத்த அமைச்சராக ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு ’பென்’ மைச் சம்பவம் நம்முடைய அரசுத் துறை எவ்வளவு திறமையாகவும் செம்மையாகவும் ஒவ்வொரு திட்டங்களையும் ஆழ்ந்து உற்று நோக்கி நிதானமாக குற்றங் குறையில்லாமல் செயல்படுத்துகிறது என்பதற்கான சான்று.

1999-ம் வருடம் உலக முட்டாள்கள் தினத்திலிருந்து 13-ம் நாள் இரும்புத் துறையிலிருந்து வந்த ஒரு சேதி நிர்வாக சீர்திருத்த அமைச்சக மூளையை எக்கச்சக்கமாக சூடு பண்ணியது. விஷயம் இது தான். “பொதுத்துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் நீலம் மற்றும் கருப்பு மசிப் பேனாக்களைத் தவிர்த்து வேறு மைப் பேனாக்களையும் கையொப்பமிடவும் திருத்தவும் உபயோகிக்கலாமா?”. இந்தக் கேள்வி கிளப்பிய வாதம் உடனே நிர்வாக சீர்திருத்த உயர் மட்ட அதிகாரிகள் அனைவரையும் டீ,காபி, மசால் வடை அடங்கிய கூட்டத்திற்கு வடைக்குக் கட்டுண்ட எலி போல இழுத்துவந்தது.

இந்தக் கேள்வி மை சம்பந்தப்பட்டதனால் அச்சகத் துறையின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று ஆபீஸர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சக அலுவலக உத்தரவுக் கடிதம் ஒன்று மே 3ம் தேதி அச்சகத் துறைக்கு அனுப்பப்பட்டது. மே 21-ம் தேதி அதுபோல பிரத்தியேக விதிகள் எதுவும் கிடையாது என்று ஒரு பதில் கிடைத்தது. இருந்தாலும் தலைமை அதிகாரிகள் பிற வண்ணப் பேனாக்களும் உதவியாளர் நிலையில் இருக்கும் பெருமக்கள் நீலம் மற்றும் கருப்பு மசிப் பேனாக்களும் உபயோகிக்கலாம் என்று அறிவுரை வழங்கிவிட்டு கடைசியாக இவ்விவகாரத்தில் அலுவலர்கள் மற்றும் உள் விவகாரத்துறை அமைச்சகத்தின் மேலான ஆலோசனைகளையும் பெறுவது சாலச் சிறந்தது என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஜுலை 6-ம் தேதி அலுவலர்கள் துறை, இந்த விஷயமானது தனி அலுவலக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டது. ஆகையால் நிர்வாக சீர்திருத்த அமைச்சகமே இதற்கு தக்க முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் என்று பந்தை அதே வேகத்தில் ந்யூட்டனின் மூன்றாம் விதிப்படி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மீண்டும் உயர்மட்ட அதிகாரிகளின் டீ,கா,ம.வடை மீட்டிங் போடப்பட்டது. பல்லாண்டு வருடங்களாக கிடங்குகளில் போற்றிப் பாதுகாக்கப்படும் அலுவலகக் கோப்புகளில் ”மசியின் வாழ்நாள்” ரொம்ப முக்கியமாதலால் ஆகஸ்ட் 12-ம் தேதி நிர்வாக சீர்திருத்தத்தின் பொது நிர்வாக இயக்குனர், ஆவணப் பாதுகாப்பகத்திற்கு அவர்களது எண்ணத்தையும் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டறிவதற்காக ஒரு ஓலை அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் 27-ம் தேதி ஆவணப் பாதுகாப்பகத் துறை, உபயோகிப்பது ஊற்றுப் பேனாவாக இருப்பின் நீலமும், கருப்பும் பயன்படுத்தலாம் என்றும், பந்துமுனைப் பேனா என்றால் கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை மசிப் பேனாக்கள் அனுமதிக்கப்படும். பயன்படுத்தும் இங்க்கின் தரம் இந்தியத் தரக் கட்டுப்பாடு மையம் சான்றிதழ் வழங்கியதாக இருப்பின் நன்று என்று ஒரு ஷொட்டு வைத்து காபி குடித்துவிட்டு மீட்டிங்கிலிருந்து கரையேறினார்கள்.

அடுத்ததாக நடைபெற்ற ஆபீசர்கள் சந்திப்பில், நிர்வாக சீர்திருத்தத் துறைத் தலைவர், இந்த அதிமுக்கியமான விஷயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றும் முன் ஆயுதப்படை கையேடுகளை, குறிப்பாக இராணுவக் கைநூலைப் பார்த்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுசம்பந்தமாக இராணுவக் கூடுதல் செயலாளருக்கு அக்டோபர் திங்கள் 4-ம் நாள் எழுதிய கடிதத்திற்கு டிசம்பர் மாதம் 22-ம் தேதி அவர் பதிலளித்தார். ஆகாயம், கப்பல் மற்றும் தரைப்படை தலைவர்கள் சிகப்பு மையினால் கையெழுத்திடுவதாகவும், தலைமை அதிகாரிகள் பச்சை மையினாலும், இன்ன பிற அதிகாரிகள் நீல நிற மையை கையில் கறையாக்கிக் கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள் என்று விலாவாரியாக பதிலெழுதினார்.

நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, தர்க்க விவாதங்களில் ஈடுபட்டு, நிறைய காபி, டீ, பிஸ்கெட், மசால் வடை, பாவ் பாஜி என்று ருசித்துச் சாப்பிட்டு மார்ச் மாதம் 28-ம் தேதி கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தது.

”ஆரம்ப வரைவு கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கலாம். அந்த வரைவில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யும் அதிகாரிகள், அது தெளிவாகவும் தனிச்சையாகவும் தெரிவதற்காக, அந்தந்த அதிகாரத் தகுதிகளுக்கு ஏற்ப, பச்சை மற்றும் சிவப்பு வண்ண மசிப் பேனாக்கள் உபயோகப்படுத்தலாம்.”

கூடுதல் செயலாளர் (Joint Secretary) அந்தஸ்தில் இருப்போர் மட்டுமே பச்சை மைப் பேனாக்கள் உபயோகிக்கலாம், சில அபூர்வ கோப்புகளுக்கு சிவப்பு மையிலும் எழுதலாம். என்று எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உத்தரவு பிறப்பித்தார்கள்.

கடைசியில் அருண் ஷோரி அளித்த துடுக்குத்தனமான பதில். “ அரசாங்கத் துறைகளுக்குச் சுதந்திரம் அல்லது சுயாட்சி பரிபூரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை ஒரு வட்டத்துக்குள் வரையறுக்கப்பட்டது”

பின் குறிப்பு: இந்தப் பதிவில் மூன்று ஸ்டார்களுக்கு முன்வரை உள்ள முதல் மூன்று பாராக்கள் என்னுடைய முன்னுரை. மீதமுள்ள பத்திகள் The Difficulty of Being Good By Gurcharan Das புத்தகத்திலிருந்து சரக்கெடுத்து தமிழில் மூலத்தை சிதைக்காமல் சொந்தச் சரக்கைச் சேர்த்து எழுத முயற்சித்தது உங்கள் ஆர்.வி.எஸ். குருசரண் தாஸின் பால்ய கால நண்பர் அருண் ஷோரி. என்னுடைய ஃப்ரண்டு இல்லை.

எந்தக் கலர் பேனாவில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கே அரசாங்கத்தில் டன் டன்னாக இவ்வளவுக் கடிதப் போக்குவரத்து இருக்கும் போது உங்களுடைய குறை தீர்ப்பு மனுவில் எப்படி நீங்கள் கொடுத்தவுடன் கையெழுத்துப்போட்டுவிட்டுதான் சீட்டை விட்டு எழுந்து மறுகாரியம் பார்ப்பர். :-)

அரசு அலுவலகப் பட உதவி: http://southasia.oneworld.net
-

Friday, October 7, 2011

ஒருக்கால்.....

சாமியார் படித்துறை ஆலமரத்தடியை தாண்டி திவா வெளியே வரும் போது மணி ராத்திரி சுமார் பத்து பத்தரையிருக்கும். சுற்றிலும் கண்ணுக்கு பழக வெகுநேரம் அடம்பிடிக்கும் கனமான கும்மிருட்டு. நாலாபுறத்திலிருந்தும் சுவர்க்கோழிகளின் இடையறாத க்ரீச்சுகள். தூரத்தில் ஆற்றோர புதர்களில் மின்மினிகள் விளக்கடித்து ஒவ்வொரு புதர் மேலும் விளையாண்டு கொண்டிருந்தது. வீட்டிலிருந்து நீர் வறண்ட ஆற்றில் இறங்கி ஏறி மெயின்ரோட்டுக்கு வரும் பழகின பாதை.

படித்துறையிலிருந்து கரையில் இறங்குவதற்கு கடைசிப் படியை தாண்டிக் குதிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்திருப்பான். சிகரெட் வாய் வெற்றிலைப் பாக்கு போட்டிருக்கும். கழக்கூத்தாடிப் போல கையிரண்டையும் காற்றில் கிழித்து பறவை நடனமாடி எஸ்கேப்பினான். திவாவிற்கு புரை ஏறியது. நமக்காக காத்திருப்பாள். இன்றிந்த நல்ல நேரத்திற்காக எவ்வளவு நாள் தவம் கிடந்தேன் என்று அவனுக்குள் சந்தோஷ மின்சாரம் ஹை வோல்டேஜில் உடம்பெங்கும் தாறுமாறாக ஓடியது.

ரோட்டுக்கு அந்தப்புறம் மரங்களைத் தாண்டி சன்னமாக குண்டு பல்பு வெளிச்சம் கசிந்தது. வாலைத் தூக்கிக் கொண்டு வெறியோடு இலக்கு நோக்கிப் பாயும் ஜல்லிக்கட்டு காளைகளைப் போல பஸ்களும் லாரிகளும் வேன்களும் கார்களும் இருபுறமும் நொடிக்கு பத்தாய் டர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டிருந்தன. மரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் டென்னிஸ் ஆட்டத்தை ஜொள்ளொழுக ரசிப்பதைப் போல இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாக எதிர்சாரிக்கு காலை விசுக்விசுக்கென்று இழுத்துக்கொண்டு பாய்ந்தான் திவா. கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போது கோதுமை நிற பஞ்சாப் மாநில கோல்டன் பெண்ணொருத்தி லஜ்ஜையில்லாமல் டி.ஷர்ட்டை விலக்கி “ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...” என்று ஹஸ்கி வாய்சில் கெஞ்சி நெஞ்சில் கையெழுத்து கேட்கும் அளவிற்கு திவாவொரு அசகாய டென்னிஸ் வீரன். ”..ம்மா..” கால் வலித்தது திவாவிற்கு.

திருப்பத்திலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அசுர வேகமாய் வந்த ஸுமோ க்ரீச்சிட்டு கட்டடித்து தீய்ந்த டயர் நாற்றத்துடன் “டேய்.. த்தா...” என்று வசைமாரி பொழிந்து எச்சில் துப்பித் திட்டிச் சென்றது. அதையெல்லாம் கண்டு கொள்ளும் மன நிலையில் திவா இன்றைக்கு இல்லை. எப்பவுமே அதீத சந்தோஷம் இல்லை அதீத துக்கம் ஒரு ஆளை நிமிர விடாமல் அடித்துப்போட்டுவிடும். இன்றைக்கு அதீத சந்தோஷத்தில் மூழ்கித் திளைத்தான் திவா. கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்ல வேண்டுமென்றால் இறகு முளைத்துக் காற்றில் பறந்து மேகங்களுக்கிடையே ஆனந்த சஞ்சாரம் செய்து கொண்டிருந்தான். தனக்குத்தானே  பேசிக்கொண்டும் பல்லைக் காட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். இதைவிட என்ன வேண்டும். அவனுக்கு இந்த பூலோகமே சந்தோஷத்தில் தள்ளாடுவது போல இருந்தது.

முதுகில் பதினொன்று என்று நம்பர் போட்டு அரைகுறையாய் வெள்ளை வட்டம் போட்ட ரோட்டோர அரசாங்கக் கைதி புளியமரத்தடியில் இருந்த கீற்றுக்கொட்டாய் டீக்கடை மழையில் நனைந்து முன்னங்கீற்றால் சொட்டிக்கொண்டு இருந்தது. உத்தரக்கம்பில் மாட்டி விடப்பட்ட இலவச டிவியின் சன் ம்யூசிக்கில் ”மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே..” என்று கே.ஜே யேசுதாஸ் காதலாய்க் கரைந்துகொண்டிருந்தார். டர்ர்ரென்றும் சர்ரென்றும் புர்ரென்றும் காற்றைக் கிழித்து இங்குமங்குமாக ரோட்டை கடக்கும் லாரிகள் யானைப் பிளிறல் ஹாரனுடன் பின்பக்கம் சிகப்புக் காட்டிப் பறந்தன.

“ரெண்டு பாக்கிட்டு குடு...”

பச்சை ரவிக்கையும் தொப்புள் தெரியும் கசங்கிய புடவையுமாக மல்லிப்பூ மணக்க சிரித்துக்கொண்டிருந்த இரவு சந்தோஷம் விற்கும் பெண்கள் இரண்டு பேர் பான் பராக் பாக்கெட் கேட்டார்கள். கண்ணாடி வளையல் கிலுகிலுத்தது. மல்லிப்பூ இன்னும் உதிரவில்லை. உதட்டுச்சாயம் களையவில்லை. முகத்தில் அசதியில்லை. உடம்பில் அயர்ச்சியில்லை. கஸ்டமர் இன்னும் சிக்கவில்லை.

”ஒரு கிங்ஸ் குடு”

திவா ஒரு ஃபில்டர் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்தான்.

புகை சுருள் சுருளாக மேலோக்கி எழும்பியபோது அவனும் இதுவரை நடந்ததை ரீவைண்ட் செய்து ஓட்டிப் பார்த்தான்.

அடேங்கப்பா!! ஒரு மாதத்துக்கு மேல் ஆஸ்பத்திரி வாசம். ஒரே ஃபினாயில் நாற்றம். ஒரு முறை உள்ளே இழுத்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் மூக்கை விட்டகலாத நறுமணம். டாக்டர் நர்சுங்களுக்கு இதுக்காகவே கை நிறைய காசு கொடுக்கனும். ப்ளாஸ்டிக் கப்பில் ஃப்ளாஸ்க் டீ ஊற்றிக் கொடுத்து பத்திரமாக கவனித்துக்கொண்டாள் பார்வதி. கல்யாணம் கட்டியதிலிருந்து இன்றுவரை அவனுடைய எந்த செயலுக்கும் “ஏன்” என்று எதிர் கேள்வி கேட்டதில்லை பார்வதி. பதிவிரதா தர்மத்தை எள்ளளவும் பிசகாமல் அனுஷ்டிக்கும் பார்வதிக்கு நவயுக சாவித்திரி என்று பெயர் வைத்திருக்கலாம்.

வாரத்திற்கு இரண்டொருமுறை ஆஸ்பத்திரிக்கு வருவோரின் ஆஸ்தான ஒயர் கூடையில் ஆனந்தவிகடன் குமுதம் எடுத்துக்கொண்டு அவளும் வந்து சங்கோஜத்துடன் எட்டிப் பார்த்தாள். “வாங்க” என்று கூப்பிட்டு இன்னொரு கப் டீ அவளுக்கும் கொடுத்து ஆஸ்பத்திரியிலும் விருந்துபசரித்தாள் பார்வதி. இந்த நேரத்தில் கட்டாயம் ‘அவளை’ப் பற்றி சொல்லவேண்டும். சுருளுக்குள் ஒரு சுருள்.

ஊரில் ஐந்தாறு படகுக் கார்களுடனும் ஆள் அம்பு சேனைகளுடனும் பத்து விரலிலும் ஜெயண்ட் மோதிரத்துடனும் தாம்புக்கயிறு போன்ற செயின் சகிதம் பகட்டாக பவனி வரும் ஒரு பெரிய காண்ட்ராக்டரின் செல்ல மகள் கார்த்தியாயினி. பிறந்தவுடனேயே பீடிங் பாட்டிலில் பாலைக் குடிக்கவிட்டு டெலிவெரியில் அம்மா மரித்துப் போனாள். அவளுடைய இம்மிற்கும் உம்மிற்கும் கைக்கட்டி சேவகம் புரிய வீட்டில் ஒரு பட்டாளமே இருந்தது. பல் தேய்த்து குளித்து உடை மாற்ற மட்டும் வீட்டுக் சென்று மற்ற நேரங்களில் வேறு ஞாபகமே இல்லாமல் இரண்டு வணிக வளாக ப்ராஜ்ட்டுகள் செய்து கொடுக்கும் சமயத்தில் ஒரு சனிக்கிழமை லேபர் பேமெண்ட்டுக்கு பழனிவேல் காண்ட்ராக்டரை அவரது பங்களாவில் சந்திக்கச் சென்றபோது ஜீன்ஸ்-டி-ஷர்ட்டில் ஐபாடும் கையுமாக கார்த்தியைப் பார்த்தான்.

“அப்பா இல்லீங்களா?”

“வருவாரு. உட்காருங்க” என்று சொல்லி விழியால் சீட் காண்பிக்கும் போது உட்காராதவன் குருடு என்று அர்த்தம். அவள் கண்ணசைவிற்கு மந்திரத்திற்கு கட்டுண்ட குட்டிச்சாத்தானாக மனம் மாறிவிடும். அடுத்த சனிக்கிழமை ரெண்டு எம்.எம். வாயை திறந்து புன்னகைத்து “அப்பா இருக்காருங்களா”ன்னு கேட்டான். அதற்கு அடுத்த சனிக்கிழமை “அப்பா இப்ப வரேன்னாரு”ன்னு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து ஹால் சோஃபாவில் உட்கார்ந்து கையில் ‘தி ஆர்க்கிடெக்ட்’ புரள கண்ணை அவள் மீது மேயவிட்டான். மூன்று நான்கு சனிக்கிழமைகளுக்கு அப்புறம் “அப்பா இப்ப வீட்ல இல்லையே?” என்ற சந்தேகக் கேள்வியோடு தைரியமாக உள்ளே வந்தான்.

அப்புறம் அவளைப் பார்க்கும் ஒவ்வொரு சனியும் அவனுக்கு மன்மதச் சனியாகியது. அவர்களது சந்திப்பு வாராந்திரியிலிருந்து தினசரியானபோது வழக்கமாக எல்லாக் காதலிலும் வரும் ஏழரைச் சனி பிடித்தது. திவாவின் அசுர வளர்ச்சி பிடிக்காத அல்பம் ஒருவன் காண்ட்ராக்டரிடம் போட்டுக்கொடுத்தான். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாமல் ஒரு புரட்டாசி சனிக்கிழமை “நீ நாளையிலேர்ந்து வேலைக்கு வரவேணாம்” என்று ஜெண்ட்டிலாக சீட்டைக் கிழித்து நாமம் போட்டு அனுப்பிவிட்டார்.

மெய்வருத்தி ராப்பகலாக வேலை செய்த்ததால் கட்டிடக்கலை அவனுக்கு கைவசமாகியது. கார்த்தி அப்பாவின் தொழில் போட்டியாளர்கள் வெற்றிலை பாக்கு வைத்து வருந்தி வருந்தி அழைத்தாலும் போகாமல் பஜார் ரோட்டில் தனியாளாய் நின்று பத்துக்கு பன்னிரெண்ட்டில் சிறிய மொபைல் கடை ஒன்று கட்டி இண்ட்டீரியர் செய்து கொடுத்தான். அவன் அதிர்ஷ்டமா இல்லை அந்தக் கடையாள் ராசியா என்று தெரியாமல் அந்தக் கடைக்கு லாபம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. மக்கள் க்யூ கட்டி நின்று வியாபாரம் செய்தார்கள். அந்த வெற்றிக்குப் பிறகு நீ நான் என்று ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு அவனுக்கு பிசினஸ் கொடுத்ததில் “திவா ப்ராப்பர்ட்டீஸ்” ஆரம்பித்தான்.

கார்த்தியாயினிக்கு காதல் பித்து தலைக்கு மேல் ஏறி ஒரு நாள் நள்ளிரவு ஆட்டோ பிடித்து கட்டிய துணியோடு திவா வீட்டு வாசலில் இறங்கி ”நூத்தம்பது ரூபா குடு” என்று கேட்டு ஆட்டோக்கு கொடுத்தனுப்பினாள். பார்க்கும் படங்களில் எல்லாம் வில்லனாக வரும் அப்பாக்களுக்கு வரும் கோபம் கார்த்தியின் அப்பாவிற்கும் வந்தது. ஆள் பலம் மிக்கவர். ஊரில் செல்வாக்கான ஆள். கேட்கவா வேண்டும். துரத்த ஆரம்பித்தார். “ப்ளீஸ் தாலி கட்டிடேன்” என்று தாலிபிச்சை கேட்டாள் கார்த்தி. “எனக்கு அப்பா கிடையாது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு படிக்கவச்சது என் அம்மாதான். அவங்க இல்லின்னா நா இல்லை.. கொஞ்சம் பொறு” என்று கிராமத்திலிருக்கும் அம்மாவிடம் கேட்காமல் கட்டமாட்டேன் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டான் திவா.

இதற்கு மேலும் அவனை விட்டுவைக்கக் கூடாது என்று அடியாட்களுடன் அவர் விரட்டியபோது ஆட்டோவில் ஏறி பஸ்ஸ்டாண்டிற்கு பறந்து கொண்டிருந்தான் திவா. கார்த்தியுடன் வாழ்வா அல்லது அடியாட்கள் கையில் சிக்கி சாவா என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியதில் பஸ்ஸ்டாண்ட் அண்ணா சிலையருகில் மடக்கிப் பிடித்தார்கள். கார்த்தி கையை இருகப் பிடித்துக்கொண்டான் திவா. கட்டையை எடுத்து மடேர் என்று திவா கையில் போட்டான் ஒரு ரவுடி. உசிலைமணியை படுக்க வைத்து இரண்டே இழுப்பில் இரண்டு பத்தையாக போடும் அளவிற்கு கிராமத்து ஐயனார் சிலை கையிலிருக்கும் அருவாளோடு வந்தவன் காலில் ஒரே போடு போட்டான். ச்சத்த்த்..........

எப்போது கார்த்தியின் கையை விட்டான். யார் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள் என்றெல்லாம் தெரியாது. கார்த்திக்கு என்னவாயிற்று என்ற எந்த விவரமும் தெரியாமல் மூத்திர நாற்றத்துடன் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு நாள் கிடந்தான்.

டெட்டாலால் கழுவி பேண்டேஜ் மட்டுமே சிகிச்சையாக அவனது காலுக்கு அங்கே அவர்களால் அளிக்கமுடிந்தது. மேலதிக சிகிச்சைக்காக வேறு ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரிக்கு இட்டுச்சென்றார்கள். அவனுக்கு காலை விட இதயம் வலித்தது. கார்த்தி என்ன ஆனாள்? அவள் கதி என்ன? என்று மனம் வருந்தினான். இரண்டு மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து காலை ஒருவாறாக சரி செய்து கொண்டு வெளியே வரும் வேளையில் கார்த்தியை சிங்கப்பூருக்கு நாடு கடத்தியிருந்தார்கள்.

கிராமத்திலிருந்து அம்மா, கொடுவா மீசை மாமா, அகரம் சித்தப்பா என்று ஒரு கும்பலாக வந்து ஊருக்கு அழைத்துப்போய் பார்வதி என்ற தாவணி பெண்ணிற்கு அரக்குக் கலர் புடவைக் கட்டி ஷோ காண்பித்தார்கள். விருப்பமே இல்லாமல் அம்மாவிற்காக ஒத்துக்கொண்டான் திவா. மாரியம்மன் கோவில் ப்ரகாரத்தில் நெருங்கிய சொந்தமாக ஒரு ஐம்பது பேர் முன்னிலையில் சிம்ப்பிளாக தாலி கட்டி வீட்டிற்கு கூட்டிவந்துவிட்டான். அவள் வந்து பத்தாவது மாதம் அவனது தாயார் மரணமடைந்தார். இன்னும் ஒரு மாதம் இருந்தால் பேரப்பிள்ளையைப் பார்த்து செத்துப்போயிருக்கலாம். பாட்டிக்கு கொடுப்பினை இல்லை.

இதனிடையே சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரும் வழியில் விமான விபத்தில் பலியானார் கார்த்தியின் அப்பா. அவள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அப்பாவின் நல்லிதயம் படைத்த உறவினர் சொத்தனைத்தையும் பிடிங்கிக்கொண்டு நடுரோட்டில் அனாதையாக விட்டுவிட்டனர். ஊன்றுகோல் இல்லாமல் தவித்தவளை லோக்கலாக ஓரிடத்தில் குடியமர்த்தினான் திவா. முதலில் உதவியாக பலசரக்கும், காய்கறியும் வாங்கிப் போட்டுச் செய்தவனை உரிமையாக பல காரியங்கள் செய்யும்படி வைத்துவிட்டாள் கார்த்தி. அவன் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பன் என்று தெரிந்தும் கையால் கல்யாணமுருகன் சன்னிதியில் தழையத்தழைய தாலி கட்டிகொண்டாள். கண்ணீர் சொட்டசொட்ட நமஸ்கரித்தாள்.

இப்படியாக இந்தக் கதை ஒரு சாதாரண இரண்டு பொண்டாட்டி கதையாக போய்க்கொண்டிருந்த போது.....

காலில் ஏற்பட்ட அந்த அடிதடி விபத்திற்கு அப்புறம் முன்பு போல ஓடியாடி வேலை செய்யமுடியாவிட்டாலும் ஆட்களை வைத்து திறமையாக வேலை வாங்கி வந்தான் திவா. ஒரு நன்பகலில் மாரடைத்து “ஆ....அம்மா” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஆபீஸ் சேரில் சரிந்தவனை ஆம்புலன்ஸில் ஹார்ட் கேர் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து ஐ.ஸி.யூவில் சேர்த்தார்கள். யமனோடு பழி சண்டையிட்டுப் போராடியவனை உயிரோடு மீட்டார்கள்.

அந்த சமயத்தில் தான் ஒயர் கூடையும் பத்திரிகைகள் சகிதமாக அவனை வந்து ஆஸ்பத்திரியில் வந்து பார்த்தாள் கார்த்தி. அரசல் புரசலாக ஊரில் இதைப் பற்றிப் பலர் பேசினாலும் பார்வதி தனது கடமை தவறாமல் திவாவை போற்றிப் புகழ்ந்து அவனோடு சீரும் சிறப்புமாகக் குடும்பம் நடத்தினாள். திவாவின் பெண் பெரியவளாகி பத்தாவது படிக்கும்போது “என்னங்க.. அட்லீஸ்ட் அவங்களை உங்க ஊர்ல இருக்கிற வீட்லயாவது கொண்டு போய் ஜாகை வச்சுடுங்களேன். நம்ம பாப்பாவை நிறைய பேர் கிண்டல் பண்றாங்களாம்” என்று ஒரு நாள் ராச்சாப்பாட்டின் போது முதன் முறையாக கார்த்தியைப் பற்றி திவாவிடம் வாயைத் திறந்தாள் பார்வதி.

அவளது வேண்டுகோளின் படியும் தனது விருப்பத்தின்படியும்தான் இன்று ஊரில் கொண்டு வந்து கார்த்தியை ஜாகை வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறான். கால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு அவளோடு டெம்போவில் ஏறி குடிமாற்றிவிட்டு திரும்பவும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறான் திவா. இதோ இங்கே பஸ்ஸுக்காக காத்திருக்கிறான்.

சங்கிலியாக மூன்று நான்கு சிகரெட் பிடித்திருப்பான். ஒரு அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் போட்டி போட்டுக்கொண்டு வந்து பஸ்ஸில் உட்கார்ந்திருப்போர் முன்சீட்டு கம்பியில் மோதி பல் உடைய ப்ரேக் அடித்து நிறுத்தினார்கள். முதலில் நின்ற அரசுப்பேருந்தில் மூச்சடைக்கும் கூட்டம். கடைசிப் படியில் கால் வைக்கும் சமயத்தில் “ரை..ரைட்..” என்று இரண்டு விசில் அடித்து நகர்த்திவிட்டான்.

பின்னால் நின்ற தனியார் பேருந்தில் கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. காலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓடி ஏறும் போது கிளப்பிவிட்டான். அவசரம் அவச்ரமாக முன் படியில் தொத்துவதற்கு கையை வைத்தான் திவா. மழை பெய்திருந்ததால் கைப்பிடி வழுக்கியது. இருந்தாலும் பிடியை நழுவ விடாமல் காலை தூக்கி மேலே வைத்துவிடலாம் என்ற நப்பாசையில் விடாமல் முயன்றான்.

முன்னால் சென்ற அரசுப் பேருந்தை பிடிக்கும் உத்வேகத்துடன் படியைப் பார்க்காமல் இரண்டாவது கியருக்கு மாற்றி வேகம் பிடித்தான் தனியார் பஸ் ட்ரைவர். கை முற்றிலும் வழுக்க முன் டயருக்குள் சென்று விட்டான் திவா. முன் டயர் ஏறி இறங்கியபின் பின் டயரும் ஏறி இறங்கியது. பஸ் உள்ளே இருந்தவர்கள் அலறினார்கள். வண்டியை நிறுத்திவிட்டு ட்ரைவர் இறங்கி ஓடிவிட, பயணிகள் இறங்கி என்ன ஆயிற்றோ என்று திவாவைப் பார்க்க ஓடிவந்தார்கள்.

அவனது பாக்கெட்டிலிருந்து பத்தடிக்கு சிதறியிருந்த மொபைலை எடுத்து “Wife" என்று போட்டிருந்த காண்டாக்ட்டிற்கு அலை பேசினான் ஒரு வாலிபன்.

“ஹலோ”

“சொலுங்க எங்க இருக்கீங்க?”

“ஹலோ. நீங்க யாரு பேசறது?”

“நீங்க யாரு. நான் அவரோட வைஃப் பேசறேன்”

“அம்மா. பதட்டப்படாதீங்க....”

“என்னாச்சு... “

“உங்க புருஷன் ஒரு பஸ்ல அடிபட்டுட்டாரு...”

“ஐயோ... திவ்யா...............” எதிர்முனை அலறியது.

”என்னாச்சி... எந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கீங்க..” என்றது விசும்பலுடன்.


”ஒன்னும் இல்ல வலது கால்ல பஸ்ஸோட சக்கரம் ஏறி இறங்கிறிச்சு. இப்ப எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. பக்கத்தில ஃபோன் கிடந்தது. அதான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்லிடலாம்னு...” பதற்றத்துடன் பேசினான் அந்த வாலிபன்.

“அப்பாடி! நா கும்பிடற சாமி என்னைக் கைவிடாது” என்று எதிர்முனை மகிழ்ச்சியாக பேசியதும் அதிர்ச்சியுற்றான் அந்த இளைஞன்.

“ஹலோ! ஃபோனை எங்கிட்ட குடுங்க” என்று பின்னாலிருந்து தோளைத் தட்டும் ஆளைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டான்.

பயணி ஒருவர் தோள் கொடுக்க அதில் சாய்ந்துகொண்டு நின்றான் திவா.

“சார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொண்டியடித்தான் அந்த வீட்டுக்கு போன் செய்த உபகாரர்.

”அது பொய்க்கால். முன்னாடியே ஒரு காதல் அசம்பாவிதத்தில என்னோட வலது காலை மொத்தமா எடுத்துட்டாங்க ப்ரதர். அது ஆர்ட்டிஃபிஷியல் லெக். நல்ல வேளையா பஸ்ஸும் அதே கால்ல ஏறி இறங்கிடிச்சு. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்று சொல்லிச் சிரித்தான் திவா.

திவாவின் மொபைல் ஃபோனில் "Wife" என்று பதிந்திருந்தது பார்வதியா கார்த்தியா?

பின் குறிப்பு: ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது ஏற்கனவே காதல் கணினி ஞாபகத்துக்கு வந்தது. ஆதலால், இத்தோடு நிறுத்திக்கொண்டேன்!

பட உதவி: http://5magazine.wordpress.com


-

Monday, October 3, 2011

ஹெச்.ஆர் இரகஸியங்கள்


பத்தே பேர் குப்பை கொட்டும் பத்துக்குப் பத்தில் செயல்படும் மன்னார் அண்ட் கம்பெனிக்கு வேலைக்கு போனாலும் ஒரு மனுஷன் படும் அவஸ்தைகளுக்கு அளவேயில்லை. வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் இந்தச் சொல்லனாத்துயர் உண்டு. இந்த இருதரப்புப் பற்றியும் காதோடு காதாக பேசவேண்டிய சில சீக்ரெட் விஷயங்களை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு ஐம்பது ஆள் பிடிப்போரிடம் பல தலைப்புகளில் “என்ன? ஏது?”ன்னு கருத்துக் கேட்டுப் போட்டிருந்தார்கள். ந்யூயார்க் போன்ற அமெரிக்க நகரத்திலிருப்பவர்களும் தங்களது வேதனைகளை கொட்டியிருந்ததால் நம்மை நேரடியாக வந்து தாக்குபவைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.


வேலைக்கு ஆள் அமர்த்தும் படலம் மற்றும் வேலைக்கான ஜாதக ஓலைப் பரிவர்த்தனைப் பற்றியும்:-
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தெண்டன் சமர்ப்பித்து விஞ்ஞாபனத்தோடு போடும் மின்கடிதாசில்  அன்புள்ள ஐயா, அன்புள்ள அம்மா என்று ஐயாவுக்கு அம்மாவும், அம்மாவுக்கும் ஐயாவும் மாற்றிப் போடுவது மகா பாபம். முதல் தரக் குற்றம். எப்படி அழைப்பது என்று தெரியவில்லையென்றால் ஐயா (பார்) அம்மா என்று பொதுவில் சலாமடித்துப் சல்யூட்டேஷன் போடவேண்டுமாம். அப்படியே ஆண்பால் பெண்பால் அறிந்து பெயர் தெரிந்தால் Mr. அல்லது Ms என்று தக்க மரியாதையோடு விளிக்கலாம்.

ஆறு மாதத்துக்கு மேல் நீங்கள் வீட்டிலேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த பின் யாரோ புண்ணியவான் உங்கள் விண்ணப்பத்தை தூசி தட்டி எடுத்து உங்களை நேர்முகத்துக்கு கூப்பிட்டால் அது நீங்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம். கல்லூரியிலிருந்து பாடம் மறக்காமல் சுடச்சுட வெளியே வந்தவராயினும், படித்தது மறந்து போன அனுபவஸ்தராக இருந்தாலும் ஆறு மாதத்திற்குள் ஓரிடத்தில் நீங்கள் அடிமையாக வேலைக்குச் சேர்ந்திருக்கவேண்டும். நாளாக நாளாக உங்களை கட்டம் கட்டி உதவாக்கரை பட்டம் கட்டி ஓரங்கட்டிவிடுவார்கள்.

உங்களுடைய விண்ணப்பத்தில் நீங்கள் போட்டிருக்கும் “இன்னார் இன்னார் எனக்கு தெரியும், இன்னார் இன்னாரோடு நான் இவ்வளவு வருடங்கள் குப்பைக் கொட்டியிருக்கிறேன்” போன்ற “இவரை எனக்கு தெரியும்” விவரங்கள் ரொம்ப முக்கியம். நீங்கள் கைக் காண்பிர்க்கும் அன்னாரை வைத்து உங்கள் வேலைவாய்ப்புத் தீர்மானிக்கப்படும்.

உங்கள் மனதுக்கு இஷ்ட கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தால், ஹெச்.ஆர் மக்களைத் தவிர்த்து வேறு ஆட்கள் மூலம் தொடர்புகொள்ளுதல் நல்ல அனுகூலமான பலன்களைத் தரும்.

நேர்முகச் சடங்கு ஆரம்பித்தது முதல் காலகாலமாகக் கேட்கப்படும் கேள்வியான “உங்கள் பலவீனம் எது?” என்ற சம்பிரதாயக் கேள்விக்கான பதில் ரொம்ப முக்கியம். ”எனக்கு பலவீனம் ஏது” என்று சத்புத்ரனாக நெஞ்சு நிமிர்த்தி எதிர் கேள்வி கேட்டு சதிராடினாலும் பிரச்சனை, “வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆறு மணியிலிருந்து என்னை நீங்கள் எந்த டாஸ்மாக்கிலும் பார்க்கலாம். ஹி..ஹி..” என்று முகத்தை தொங்கப்போட்டு வழிந்துச் சிரித்தாலும் தீர்ந்தது. கொஞ்சம் நாசூக்காகப் புளுகத் தெரியவேண்டும். “சார்! நான் ஒரே வேலையை ஒரு வேளையில் தீர்க்கமாகச் செய்து முடிப்பேன். இருந்தாலும் பலவேலைகளை ஒரே வேளையில் செய்ய முயற்சிக்கவேண்டும். இது தான் என்னுடைய பலவீனம்.” இது தான் சாமர்த்தியமான பதில் என்கிறார்கள் கம்பெனிக்கு ஆளெடுக்கும் எக்ஸ்பர்ட்டுகள்.

ஃபன்னிரமேஷ்@ஜிமைல்.காம், ஃப்ரீக்கிமகேஷ்@ஹுஹு.காம் என்றெல்லாம் ஈமெயில் முகவரி வைத்துக்கொண்டால் உங்கள் விண்ணப்பங்களை தூக்கி ஓரத்தில் கடாசி விடுவோம். அந்த ஈமெயில் பெயரில் உங்கள் யோக்யதையை சுலபத்தில் கண்டுபிடித்துவிடுவோம்.

ஐம்பது அறுபது என்று பழுத்து ரிடையர் ஆகும் முதிர்ந்த வயதுகளில் நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கல்லூரியில் இருந்து எந்த வருடத்தில் தேர்ச்சியடைந்தீர்கள் என்று குறிப்பிடாமல் இருப்பது ஷேமம். உங்கள் கதவைத் தட்டி யாராவது “இன்னிக்கி எங்க ஆபிசுக்கு இண்டெர்வியூக்கு வாங்க”னு கூப்பிடலாம். வாய்ப்பு உள்ளது.

ஒரு பக்கத்தில் இரத்தின சுருக்கமாக இருக்கவேண்டும் என்று உங்களின் ஆறு வருட வேலை வரலாற்றை சிற்றெறும்பு எழுத்துக்களில் நுணுக்கி எழுதி அனுப்படும் பயோ டேட்டாக்களை யாரும் பூதக்கண்ணாடி கொண்டு படிக்க முயற்சிக்க மாட்டார்கள். அரிசியில் திருக்குறள் படிப்பது வேற ப்ராடக்ட். உங்களுடைய சி.வி வேறே! இதுபோல பொடியெழுத்துக்களில் சமர்ப்பிக்கப்படும் ரெசியுமேக்கள் நேரே டஸ்ட் பின் அல்லது ட்ராஷ் ஃபோல்டர்தான் அவைகளுக்குக் கதி.

கீழிருந்து மேலாகவும் ரெசியுமேக்கள் படிக்கப்படும். இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருந்தால் ஈசியாக பார்க்கப்படும். படிக்கப்படும். கூப்பிடப்படும். இல்லையேல் ஒதுக்கப்படும்.

வக்கீல், டாக்டர் போல ஹெச்.ஆரிடமும் பொய் பேசக்கூடாது. ரொம்பவும் வாய்கிழிய பழைய வேலையைப் பற்றி ஜம்பம் அடித்தால் ஒரு ஃபோன் கால் போட்டு உங்கள் பூர்வீகத்தை அலசி ஆராய்ந்துவிடுவார்கள். ஜாக்கிரதை!

ரெசியுமேக்கள் அந்த வேலைக்கான கீவேர்டுகளை சுமந்திருப்பது நல்லது. நிறைய கம்பெனிகளில் கணினியில் டார்ச் அடித்து விண்ணப்பங்களை தேடுவதால், அந்த ஃபில்ட்டருக்குள் உங்கள் ரெசியுமே சிக்கும் வாய்ப்பு அதிகம். கண்ணில் அகப்பட்டதை அவர்கள் கூப்பிட்டால் தானே வேலைக்கான இண்டெர்வியூ.

வானவில்லைப் போல வண்ணமயமான பல கலர் அடித்த ரெசியுமேக்கள் உங்கள் வேலை வாய்ப்பினை ஒரு சதவிகிதம் கூட நிச்சயம் வண்ணமாக்காது. காடி காடியாகக் கலர் அடித்து அனுப்பப்படுவை கண்ணை அரித்து, கண்ணிலிருந்து இரத்தம் சிந்த வைத்துவிடும். இங்கே கலர் கர்ண கொடூரமாகக் கன்றாவியாக இருக்கிறது. தூக்கி ஓரமாக வைத்துவிடுவோம்.

முகத்தோடு முகம் பார்த்து பேசும் நேர்முகம்:-

போய் உட்கார்ந்த அடுத்த கணத்தில் எதிர்த்தார்போல் அமர்ந்து நேர்முகத்தேர்வு நடத்து அதிகாரியிடம் “உங்களுடைய தொழில் மற்றும் லாப நஷ்ட கணக்கு என்ன என்று சொல்ல முடியுமா” போன்ற அபத்தமான கேள்விகள் உங்களுடைய வேலைத்தேர்வை வெகுவாகப் பாதிக்கும். அதிகாரி மிகவும் கோபிஷ்டராக இருந்தால், உடனடி லாட்டரி போல அந்த அறையிலிருந்து அவர் ”வெளியே போ” என்பார். நீங்கள் உடனடி ரிட்டர்ன்.

எல்லாவிதமான கேள்வி-பதில்களிலும் நீங்கள் குன்றிலிட்ட விளக்குப் போல சிறந்து விளங்கினாலும், அவர்களுடைய கம்பெனியின் வேலைக் குடும்பத்தில் அன்றாடம் உழைத்துக்கொட்ட, பழக்கவழக்கத்திற்கு மற்றும் சகஜமாய்ப் புழங்குவதற்கு நீங்கள் ஒத்துவருவீர்களா என்பது மிக முக்கியம். அறிவு மட்டும் அந்த வேலையைக் கொடுக்காது ஆட்டிட்டுயூடும் வேண்டும் என்பது தான் இதனால் விளங்கும் சமூகநீதி.

மாமிசமலை போல குண்டாக இருந்தால் வேலை கிடைப்பது கஷ்டம். அபூர்வம். காலசைக்க ஐந்து நிமிடம் கையசைக்க பத்து நிமிடம் என்று ஸ்லோமோஷனில் ஆசுவாசமாய் செய்தீர்கள் என்றால் போச்சு! நீங்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கவேண்டும் என்பதில்லை, உடல்ரீதியாகக் கூட ஃபிட்டாக இருக்கவேண்டும் என்று வேலைக்கு அமர்த்துபவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

”நிச்சயம் வாரம் ஒரு நாள் நா திருப்பதி போவேன் சார்! கோவிந்தா! கோவிந்தா!! பௌர்ணமிக்கு பௌர்ணமி நா திருவண்ணாமலையில் இல்லைனா யாரும் கிரிவலம் போக மாட்டாங்க! ஹர.ஹர. மஹாதேவா!!” போன்று கண்ணத்தில் போட்டுக்கொள்ளும் பதில்களால் நீங்கள் இந்தச் சுற்றிலேயே சர்வ நிச்சயமாக வெளியேற்றப்படுவீர்கள்.

ஸைலன்ஸில் மொபைலை போட்டுவிட்டு குனிந்து குனிந்து கீழே பார்த்து தேடிக்கொண்டிருந்தால் எதிரில் கேள்வி கேட்பவருக்கு கொலை வெறி வரும். மொபைலை அணைத்துவிடுவது உசிதம். இல்லையேல் நேர்முகத்தை தலைமுழுகிவிடுவது உன்னதம்.

கைகுலுக்கும் தோரணை ரொம்ப முக்கியம். இரண்டடி தள்ளி நின்று கொண்டு தீட்டுப்பட்டவர்களை தீண்டுவது போல நாலு விரலை மட்டும் கொடுப்பது அல்லது எதிராளி கை மணிக்கட்டோடு எலும்பு முறியும் வரை பிடித்து குலுக்குவது என்று இரண்டுமே ஒவ்வா. கைகுலுக்கல் சாஸ்திரத்தில் கரைகண்டவர்கள் உங்கள் உளப்பாங்கை எளிதில் அறிந்துகொள்வார்கள்.

நேர்முக விசாரணையின் போது கேள்வி கேட்கும் மானேஜர் ஒரு அரை மணி அவருடைய கார், சுய ப்ரதாபங்கள், கம்பெனி பற்றி அளந்துகொண்டிருந்தார் என்றால் “நீங்கள் ஒரு உன்னத பரீட்சார்த்தி” என்றும் “கட்டாயம் தேர்வுசெய்யப்படவேண்டிய ஆள்” என்றும் நிச்சயமாய் இன்னும் சிறிதுநேரத்தில் ஒத்துக்கொள்வார். கியாரண்டியாய் செலக்ட்டட்.

உங்களுடைய டெக்னிகல் தேர்ச்சியை காட்டுவதற்கு லாப்டாப்பை வைத்துகொண்டு நேர்முகத்தேர்வு நடக்கும் அறையில் டெக்னோ அலப்பறையில் ஈடுபடவேண்டாம். நோ! கட்டாயம் நேர்முகம் பார்ப்போருக்குப் பிடிக்காது. உங்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள்.

உள்ளே நுழையும் போது கல்யாணத்திற்கு சந்தன பேலாவோடு சர்க்கரையும் சேர்த்துக் கொடுப்பது போல உட்கார்ந்திருக்கும் அழகான அட்மின் ஸ்டாஃபிடம் கனிவாக நடந்து கொள்ளவேண்டும். அவர்களிடம் ரொம்பவும் அமட்டலாகப் பேசினால் கூட ஹெச்.ஆருக்கு சேதி தெரிந்துவிடும். ஆபீசுக்குள் அங்குலம் அங்குலமாக உங்களை அளக்கிறார்கள். விழிப்பாயிருங்கள்!

”காலையிலர்ந்து மினுமினுன்னு எனக்கு ஒரே வயித்துவலி, என்னோட நாய்க்கு ரெண்டு நாளா கடும் ஜுரம், பேதி பிச்சுகிச்சு” என்றெல்லாம் கதை விடும் சம்பந்தா சம்பந்தம் இல்லாத இப்பதில்கள் இண்டெர்வியூவுக்குத் துளியும் வேண்டாதவை. ஆகாதவை. சகிக்கமுடியாதவை. அவசியம் தவிர்க்கவேண்டியவை.

”பழைய கம்பெனியில் நா நாலு பேர் மொகரையை பேர்த்துட்டேன். போன வாரம் அந்த மேனேஜரை விட்டுக் கிழிகிழின்னு கிழிச்சுட்டேன்”  போன்று முண்டாத் தட்டி பதிலலிக்கும் பலசாலிகளின் ரெசியுமேக்கள் குப்பத்தொட்டியை நோக்கிச் சென்றடைகின்றன என்று எக்ஸ்பெர்ட்டுகள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.

நேர்முகத் தேர்வாளரின் பெயரை உச்சரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதி முக்கியமான பாயிண்ட் இது. பட்நாகர் என்ற பெயரை படாநாகர் என்று அழைத்துவிட்டால் சோட்டாவாக உங்களை ஒரு ஏளனப்பார்வை பார்த்து விரட்டிவிடுவார்கள்.

”உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்ற கேள்விக்கு நீங்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்தது, ஊர் சுற்றியது, சைட் அடித்து செருப்பால் அடிபட்டது, காலில் விழுந்து கல்யாணம் கட்டியது என்று ஒரு மணி நேரம் சுயசரிதை பேசினால் ரெண்டாவது கேள்வியே உங்களுக்கு கிடையாது. நேர்முகம் நிறைமுகமாகி விடும். அப்படியே பொடிநடையாய் நடந்து வீட்டுக்கு வந்துடவேண்டியதுதான்.

இண்டெர்வியூ முடிந்த கையோடு “உங்களுடைய அன்புக்கு நன்றி. நீங்கள் அருமையான பல கேள்விகள் என் ரெண்டாம் வகுப்பு உபாத்யாயர் போலக் கேட்டீர்கள்” என்று நன்றியறிவிப்புக் கடிதங்கள் உடனே போட்டுக் கழுத்தறுக்காதீர்கள். ஒரு வாரம் கழித்துப் போட்டு உங்களை நீங்கள் ”ஹலோ நாந்தான்” என்று ஞாபகப்படுத்தலாம். அதிர்ஷடம் இருந்தால் பதில் பெறலாம்.

டெய்லி இரண்டு கால் போட்டு, சார் என்னை நீங்கள் தேர்வு செய்தீர்களா? ரிசெல்ட் அனௌன்ஸ் பண்ணிட்டீங்களா? உங்கள் கம்பெனியில் சேர்வதர்க்கு தான் நான் இந்த ஜென்மம் எடுத்துள்ளேன் என்று அடிக்கடி கனம் கம்பெனியாரை ரத்தம் வரப் பிராண்டினால் உங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று துளியூண்டு நினைத்தாலும் அதை அழித்துவிட்டு கழற்றி விட்டுவிடுவார்கள்.

ஒரு கம்பெனியில் உங்களை தேர்வு செய்யவில்லையென்றால் ”ஏன் எதற்கு எப்படி “ என்று “எ” கேள்விகளில் அவர்களை கண்டமேனிக்கு எக்காதீர்கள். அடுத்தமுறை எதாவது ஓப்பனிங் வந்தால் நிச்சயம் “எவண்டா அது? ஏகத்துக்கும் கேள்வி கேட்டது” என்று உங்களை திரும்ப அழைக்கமாட்டார்கள்.

உங்கள் தொல்லை தாங்காமல் எங்களுக்குள்ளயே ஒரு ஆளை எடுத்துக்கிட்டோம் என்று உங்களிடம் சரடு விடுவோம். அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதுதான் இருவருக்கும் நல்லது.

பழைய கம்பெனியில் உங்களை மேய்த்தவருக்கு நீங்கள் ஆகாதவர் என்றால் கர்ம சிரத்தையாக அவருடைய தொடர்பு எண்ணை புது ஆட்களிடம் தராதீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் சேர்ந்த தேதி, கம்பெனியில் இருந்து கழன்ற தேதி முதலியவை மட்டும் தெரிந்த ஹெச்.ஆர் மகானுபாவர்களின் எண்ணைக் கொடுங்கள். பிழைத்துக்கொள்வீர்கள்.

சம்பள உயர்வு மற்றும் பேரம்

டாண்டான்னு பதில் சொல்லி உங்களைப் பிடித்துப் போய்விட்டால் அடுத்தது வருவது சம்பள பேரம். ”எங்க முதலாளி பத்தாயிரம் தான் இதுக்கு தரணும்னு சொல்லியிருக்கார்” என்று அடிமாட்டு விலைக்கு முதலில் உங்களை மடக்க முயற்சிப்பார்கள். படிந்தால் ”அடிமை சிக்கிட்டான்டா!!” என்று வெற்றிக்களிப்பில் மடக்கிப்போட்டு லாபம் பார்ப்பார்கள்.

நம்முடைய ”அன்றைய சந்தை மதிப்பு” என்று ஒன்றை கணக்குப் போட்டு பார்த்துவிட்டு கையில் துண்டு போட்டு பேரம் பேசாத குறையாக கேட்டாலும் நாலு பேரிடம் உங்களைப் பற்றி துருவித்துருவி விசாரித்து வைத்திருக்கும் தகவலை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவர்கள் முடிவு செய்த சம்பளத்தைதான் படியளப்பார்கள். உடம்பு பூரா சதும்ப எண்ணையை தேய்த்துக்கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்னு சொல்லுவாங்க.

நேர்முகத்தை முடித்துக்கொண்டு போன கையோடு வீட்டுக்குச் சென்று “மம்மி..மம்மி.. அவங்க கொடுப்பேன்னு சொன்ன சாலரி ரொம்ப குறைச்சல்”னு குறைசொல்லி அவங்களை விட்டு அதிகாரிங்க கிட்ட ஃபோன்ல காசு கூடத் தான்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு அந்த வேலையிலிருந்து டண்டனக்கா..டனக்குனக்கா..தான்

கல்தா கொடுத்தல்:-
கீழே வரும் இரண்டும் தொழில் நுணுக்கம் தெரியாத ஹெச்.ஆர் ஆட்களுக்கு பழம் தின்று கொட்டைப் போட்ட மனிதவள அதிகாரி சொல்லித்தரும் டிப்ஸ்!

ஒரு ஆளை வேண்டாம் என்று கறை வச்சுட்டாங்கன்னா, அந்த வானத்தை நிலா வரதுக்குள்ள கயிராத் திரின்னும், உடனடியா இந்த மலையைக் கடுகாக்குன்னும் கேட்டு குடைந்துவிடுவார்கள்.  வேலையைச் சரிவர முடிக்கவில்லை, தெரியவில்லை என்று கேஸ் பில்டப் செய்து கடைசியில் ஒரு நாள் நோட்டீஸ் கொடுத்து டாட்டா பைபை காட்டிவிடுவார்கள்.

கம்பெனியின் வேலைக்காரர்கள் பட்டியலில் உச்சாணியில் இருந்தீர்கள் என்றால் அது கூரான கம்பி மேல் நடப்பதற்கு சமானம். உங்களுடைய அன்றாட வேலைகளையும் துறை சார்ந்த வேலைகளையும் சிரித்துக்கொண்டே பிடிங்கிவிட்டு “ஸ்பெஷல் அசைன்மெண்ட்” என்று புதிதாக வேறொன்று கையில் கொடுத்தார்கள் என்றால், “வெளியே போ” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாமல் மென்மையாக “ப்ளீஸ். கெளம்பிடு ராஜா”னு வாயால் சொல்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களிடம் வாயாடாம உங்களோட ரெசியுமேவை அப்டேட் பண்றது உத்தமமான காரியம். அன்னிக்கி சாயரட்சை அட்லீஸ்ட் நாலுபேருக்கு உங்களுடைய ரெசியுமேவை அனுப்பியிருந்தீர்கள் என்றால் நீங்கள் சமர்த்தர்.

எங்கேயும் எப்போதும் சந்தேகம்:-

"As I am suffering from fever" னு லீவு போட்டுட்டு ஃபேஸ்புக்ல “மச்சி! நா மங்காத்தா பார்த்துக்கிட்ருக்கேன்”னு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றவங்களுக்கு சீக்கிரம் ஆபிஸ்ல கெட்டிமேளம்னு சொல்லத் தேவையில்லை. இதெல்லாம் நுனிக் கிளையில உட்கார்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டும் அதிபுத்திசாலிகள்.

நேற்று சேர்ந்த கம்பெனியில் காப்பி டீ கவுண்டர் முன்னாடியே ஒற்றைக்காலில் முகாமிட்டு தவமிருக்காமல் கொஞ்சம் உங்கள் சீட்டில் உட்கார்ந்திருக்கவும் பழகிக்கொள்ளுங்கள். அடிக்கடி சீட்டில் ஆள் கிடைக்கவில்லை என்றால் உங்களது சீனியருக்கு உங்கள் வேலை மேலும் வேலை கெட்ட வேளை மேலும் சந்தேகம் வரும்.

உங்களுக்கு வரும் ஃபார்வேர்ட் மெயில்களின் லட்சணம் மற்றும் நீங்கள் வலையில் வலை வீசித் தேடிப் பார்க்கும் சைட்டுகள் போன்றவற்றை வைத்து உங்களை எடைப்போட்டு விடுவார்கள். கம்பெனி இரகசியங்களை எதுவும் வெளிஆட்களுக்கு அனுப்பி “மச்சி பார்த்தியா” என்று பெருமை பீத்திக் கொண்டீர்கள் என்றால் தொலைந்தீர்கள். அப்புறம் நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். ஹெச்.ஆர் உங்கள் மீது ஒரு கண் வைத்துவிட்டால் நிச்சயம் உங்கள் சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் கை வைத்துவிடுவார்கள். ஜாக்கிரதை!!


உஷ்..... இந்த இரகசியங்களை படிக்கும் உங்களுக்கும் எழுதிய எனக்கும் இடையில் மட்டும் இருக்கட்டும். வேறு யாருக்கும் சொல்லாதீர்கள்! நன்றி!!

இந்தக் கட்டுரை இவள் புதியவள் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails