அது ஒரு பௌர்ணமி இரவு. ஸரத் பருவம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் ஒரு மழை பெய்து ஊரைக் குளிரூட்டி சற்றுமுன் தான் ஓய்ந்திருக்கிறது. பெரிய பெரிய மரங்களின் பச்சைப்பசேல் தளிர் இலைகளில் இருந்து சொட்டுச்சொட்டாய் நீர் வடிகிறது. மாதாந்திர பௌர்ணமிகளில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு என்றுமே முதலிடம். தனி விசேஷம். காலடி வைக்கும் புல் தரையெங்கும் ஜில்ஜில்லென்று பாதம் மூலம் தலைக்கேறி தாக்கும் குளிர்ச்சியான மழைத் தண்ணீரின் தடங்கள். சுற்றுப்புறமெங்கும் ஒரு எல்லையில்லா அமைதி. சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னை அவிழ்த்துக்கொண்டுப் புறப்பட்ட மெல்லிய காற்றின் ஓசையை அதைக் கிழித்துக் கொண்டு பூச்சிகளும் சில்வண்டுகளும் போட்டி போட்டுக்கொண்டு தொடர் கச்சேரி போல நீண்ட நேரமாக ரீங்காரமிடுகின்றது. காற்றும் வண்டினமும் சேர்ந்து இந்த மனம் மகிழும் தருணத்தைச் சிறப்பிக்க விருந்தினர் யாரையோ எதிர்ப்பார்க்கிறார்கள் போலும்.
தன் மேல் தீராக் காதல் கொண்ட கோபியருடன் இன்றிரவு நடனமாட முடிவு செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். பட்டாடைகளை எடுத்து உடுத்தி அழகு பார்த்தான். சிகைக்கு முன்னால் நெற்றிச்சுட்டி போல தங்கக் கிரீடம் அணிந்து அதற்கு சிகரமாய் மயிற்பீலி வைத்து தன்னைக் கண்டவுடன் காதலிக்கத் தூண்டும் வண்ணம் தயாரானான். இதழ்களில் தனது மந்தகாசப் புன்னகையை எடுத்துப் பொருத்திக்கொண்டான். ஸ்த்ரீகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் நெஞ்சையள்ளும் மணம் பொருந்திய மல்லிகை மலர் மாலையை எடுத்துக் கார்வண்ண மாரின் மேலே சார்த்திக் கொண்டு ராஸ நடனம் புரிய குதூகலமாகக் கிளம்பினான்.
ஒரு நாட்டியக்காரர் ஒன்றுக்கும் மேற்பட்ட நடன மங்கையருடன் நடம் புரிவது ராஸ நடனம் என்று வேதங்களில் இருக்கிறது. ஸரத் பருவத்தில் வரும் பௌர்ணமி இரவுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ராஸ நடனமாடியதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கோபிகைகளுடன் ஆரத்தழுவி ஸ்ரீகிருஷ்ணர் நடம் புரிந்தது யோக மாயை என்று அழைக்கப்படுகிறது. ஜடவுலகில் யவ்வனப் பருவத்து யுவனும் யுவதியும் கட்டிப் பிடித்து நடம் புரிவதை மஹாமாயை என்பார்கள். யோகமாயைக்கும் மஹாமாயைக்குமான வித்தியாசத்தை தங்கத்துக்கும் இரும்புக்குமான வேறுபாடு என்பதை நாம் அறியவேண்டும். இரண்டுமே உலோகம் என்றாலும் அதனதன் மதிப்பு நாம் நன்கு அறிவோம்.
மலர்மாலைகள், பட்டாடைகள், மயிர்பீலி சகிதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ராஸ லீலா புரிந்த போது அவருடைய வயது 8. கிருஷ்ணனுக்கும் கோபியருக்கும் உண்டான காதலை “பரகீய ரஸ” என்று விவரிக்கிறார்கள். மணமான ஆணோ, பெண்ணோ மற்றொரு மணமான கணவன் மனைவி மேல் காதல் கொள்வதை “பரகீய ரஸ”ம் என்பார்கள். பரமாத்மாவுடன் இத்தகைய ஜோடியினர் புலனின்பங்கள் மேல் பற்றுக்கொள்ளாமல் அன்பை மட்டும் செலுத்தி காதலிப்பது பரகீய ரஸத்தில் சேர்கிறது. சிற்றின்பங்களில் நாட்டமில்லாமல் பேரின்பரசத்தை பருக வைக்கும் கண்ணபரமாத்மா மேல் கோபியர் கொண்ட பரகீய ரஸக் காதல் கலியுகத்தில் நடக்கும் கள்ளக்காதல் கண்றாவி வகையறாக்களில் சேராது.
மல்லிகை மாலை அணிந்து கொண்டு கையில் புல்லாங்குழலுடன் அந்த நிலாப்பொழியும் நதிக்கரைக்கு வந்தான் கண்ணன். இளஞ்சிவப்பு நிறத்தில் சந்திரன் உதித்திருந்தான். தொடுவானத்தில் அவன் புறப்பட்ட அந்த இடம் முழுவதும் குங்குமப்பூவை வாரி இறைத்தார்ப் போல செக்கச்செவேலென இருந்தது. நதிக்கரையில் மல்லியும், முல்லையும் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கின. சம்பங்கியின் வாசம் ஒரு தனி மயக்கத்தை ஏற்படுத்தியது. நீலோத்பல மலர்களும், சங்கு புஷ்பங்களும் அவன் காலடியில் விழுந்து மெத்தையாயின. பலவிதமான புஷ்பங்களில் வயிறு முட்ட தேனுண்டு போதையில் தள்ளாடியபடி காற்றில் மிதந்தன வண்டுகள்.
இமையிரண்டையும் மூடி மோகனப் புன்னகையை சிந்தவிட்டு தனது குழலை எடுத்து கானம் வாசிக்கத் தொடங்கினான். அந்த நதிக்கரையோர கானகத்திலிருந்து முதலில் ஒரு முயலும், மானும் குதித்து அவனருகில் இடம் பிடித்தன. உயிரைப் பிடித்து தொரட்டி போட்டு இழுக்கும் அந்த குழலிசைத் தொடர ஒரு புள்ளிக்கலாப மயில் ஆடிவந்து தோகைவிரித்து நின்றது. கிருஷ்ணன் தோளில் இடம்பெற்றிருந்த அங்கவஸ்திரம் அசைய நல்ல குளிர்க் காற்று தென்றலாய் வீச ஆரம்பித்தது. பௌர்ணமி முழு நிலவு தனது கிரணங்களை ஒரு சேரக் குவித்து அவனை நோக்கி ஒளிக்கற்றைகளை வாரியிறைத்தது. முன்னால் சொறுகியிருந்த மயிற்பீலி அசைந்தாடியது. வைரக்கற்களை வாரி இறைத்தது போல நட்சத்திரங்கள் வானில் சுடர்விட்டு ஜொலித்தன. ஒரு மந்திரசக்திக்கு கட்டுண்டது போல கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையில் இயற்கை ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அங்கே சிறைப்பட்டது.
குழலிசையின் கானம் ஊருக்குள் கேட்டதும் கோபியரின் உள்ளம் உடனே கிருஷ்ணரைக் காணத் துடித்தது. அவர்கள் முகம் தாமரை போல மலர்ந்தது. அவன் குழல் வாசிக்கும் அந்த நதிக்கரை பிருந்தவனத்தில் வம்சீவடா என்ற இடத்திலிருந்தது. மேலே அணியவேண்டிய வஸ்திரங்களை கீழேயும், கீழே போட வேண்டியதை மேலேயும் போர்த்திக் கொண்டோ அல்லது வெறுமனே சுற்றிக்கொண்டோ ஆளாய்ப் பறந்தார்கள். குழந்தைக்கு பால்சோறு ஊட்டிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே கைகூட அலம்பாமல் சாதக்கையோடு விரைந்தார்கள். கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த கோபியர் சிலர் அப்படியே போட்டுவிட்டு ஓடினர். மணமாகாத மங்கையர் சிலரை அவர்களது தந்தையர் தடுத்துப் பார்த்தனர். தரையில் பாயை விரித்து படுத்த சில கோபியர் ஆடை அலங்கோலமான நிலையில் சுருட்டிக்கொண்டு பறந்தனர்.
குழலிசைப்பவனும், ஆடுபவனும் பரமாத்மா என்றறியாத கோபியர் ஒரு சிறுவனுடன் ஆடிப்பாடி மகிழ ஒருவரை ஒருவர் முண்டியடித்து அந்த ஆற்றங்கரையோரம் குழுமியிருந்தனர். ஒரு வாலிப சேனையாக தன்னைச் சூழ்ந்த கோபியரைப் பார்த்து கிருஷ்ணர் “இந்த அகால நேரத்தில் உங்களுக்கெல்லாம் இங்கென்ன வேலை?” என்று வினவினார்.
அவருடன் களிநடனம் புரிய வந்த அனைத்து கோபியரும் மனமுடைந்தனர். “கிருஷ்ணா!
அனைத்தும் அறிந்தவன் நீ!
எங்களின் காதல் தலைவன் நீ!
சுவாசக் காற்று நீ!
உடம்பில் உறையும் உயிர் நீ!
எங்களின் பாதுகாவலன் நீ!
அனாதரட்சகன் நீ!
ஆபத்பாந்தவன் நீ!
எங்கள் அங்கமெங்கும் அரைத்துப் பூசிக் கொள்ளும் மஞ்சள் நீ!
மேனியைத் தொட்டுத் தழுவும் ஆடை அணிகலன்கள் நீ!
எங்கள் ஹிருதயத்தின் துடிதுடிப்பு நீ!
எங்கள் இளமைக்கு அதிபன் நீ!”
என்றெல்லாம் பலவாறாக அவனைத் துதித்தனர்.
“கோபியரே! இப்போது நள்ளிரவு கடந்து விட்டது. இந்தக் கானகத்தில் நிறைய கொடிய விலங்கினங்கள் வசிக்கின்றன. அவைகளால் உங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்து விட்டால் என்ன செய்வது. நீங்கள் உங்கள் குழந்தைகளை, கணவன்மார்களை, அண்ணன், தம்பி மார்களை, தாய் தகப்பன்களை விட்டுவிட்டு என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். இது தகாத செயல். இப்போது அவர்கள் உங்களைத் தேடிக்கொண்டிருப்பார்கள். தயவுசெய்து எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகருங்கள்” என்று குரலில் கொஞ்சம் பொய்யான கோபத்தை வரவழைத்துக் கொண்டு சிடுசிடுத்தார் அந்த மாயவன்.
அவன் ஆரத்தழுவி முத்தமிட மாட்டானா என்ற விரக ஏக்கத்தில் ஓடிவந்தவர்கள் திகைத்தார்கள். இதைக்கேட்ட அவரது ஆத்ம சகாக்களான கோபியர்களுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவர்களது கருமேகம் போன்ற கண்களிலிருந்து கண்ணீர்மழை பொழிய தயாராக இருந்தது. “ஏன் எங்கள் கூட நீ ஆட மாட்டாயா?” என்று வாயெடுத்து எவரும் கேட்கவில்லை. எந்த கோபியரும் நிமிர்ந்து மற்றொருவரை பார்க்காமல் நிலம் நோக்கியிருந்தார்கள். “ஐயனே! இப்படி எங்களை சோதிக்கலாமா?” என்று கண்ணீரும் கம்பலையுமாக கால்களால் அந்த ஆற்றங்கரை மணலில் கோடு கிழித்தார்கள். முகம் வாடிய மலரென ஆகி மனம் வெம்பி நொந்தார்கள்.
இதற்கு மேலும் அவர்களை சோதிக்ககூடாது என்று முடிவு செய்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது சிருங்கார ரஸம் ததும்பும் நடனம் புரிய ஆரம்பித்தார். வருத்தமடைந்த அனைத்து கோபியரும் உற்சாகமடைந்தனர். சந்தோஷத்தில் கிருஷ்ணர் மீது முட்டி மோதி குதூகலித்தார்கள். ஒவ்வொரு கோபியருடனும் கைகளைத் தட்டியும், இடுப்பில் கைகோர்த்து இடையோடு இடை சேர இழுத்து அணைத்தும், முன்னாலும் பின்னாலும் கைகளால் உரசியும் நடனத்தில் ஈடுபட்டார் இறைவன். கிருஷ்ணரின் சிருங்கார ரஸத்தில் ஊறி ராஸ நடனத்தை காதலில் மயங்கிய நிலையில் கோபியர்கள் ஆடினார்கள்.
கிருஷ்ணருடைய திருக்கரங்கள் எந்த கோபிகா ஸ்த்ரீயின் மேல் தீண்டுகிறதோ, அவளை மற்ற கோபியர் செல்லமாக சீண்டி கிண்டலடித்து கேலி பேசிச் சிரித்தனர். ஸ்ரீகிருஷ்ணரின் குழலோசையும், கோபியரின் சிரிப்பொலியும் நதிக்கரையோர கானகத்தில் இருந்த காட்டு விலங்கினங்களைக்கூட முயக்கமுறச் செய்தன. முத்தமிட்டும், கட்டியணைத்து தூக்கியும், கைகள் பின்னப் பின்ன நடனமும் புரிந்து கோபியர்களை சந்தோஷப்படுத்தினார்.
விடிய விடிய இதுபோல பகவான் ஸ்ரீகிருஷ்ணருடன் ராஸ நடனம் புரிந்துவிட்டு அனைவரும் மறுநாள் அதிகாலையில் தத்தம் வீடுகளுக்கு திரும்பினர்.
**
பரீட்சித்து மஹாராஜா சுகப்பிரம்மத்திடம் “இந்த ராஸ லீலையால் என்ன பயன்?” என்று கேட்கிறார். அதற்கு சுகர்
“ராஸ லீலை கிருஷ்ணனுடைய அளவில்லா அன்பின் வெளிப்பாடு. அவனுடைய பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவனுடன் கலப்பதற்கான மொழி. பக்தர் அல்லாதோரை கவர்ந்திழுக்கும் தந்திரம். இதனால் இவனுடன் கலந்த பிறகு அனைவரும் தெய்வீகத் தன்மையும் நிலையும் அடைகின்றனர்” என்று பதிலளித்தார்.
21-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. போன வருஷம் எழுதியதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
இந்தக் கட்டுரை அதீதத்தில் வெளிவந்துள்ளது.
பட உதவி: http://www.krishna.com
24 comments:
//அனைத்தும் அறிந்தவன் நீ!
எங்களின் காதல் தலைவன் நீ!
சுவாசக் காற்று நீ!
எங்கள் அங்கமெங்கும் அரைத்துப் பூசிக் கொள்ளும் மஞ்சள் நீ!
அங்கமெல்லாம் தொட்டுத் தழுவும் ஆடை அணிகலன்கள் நீ!
இருதயத்தின் துடிப்பு நீ!”//
கிருஷ்ண லீலைகளை மனமொன்றி நின்று கோர்த்துள்ளீர்கள்….ராஸ என்பதற்கு இப்பொழுது தான் அர்த்தம் புரிந்தது… கிருஷ்ணத்தில் புரிந்து கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது… கோகுலாஷ்டமிக்கு பொருத்தமாய் அழகான பதிவு……
அனேகமாய் முதல் சீடையும் பால் பாயசமும் எனக்குத்தான் என நினைக்கிறேன்...
கோகுலாஷ்டமிக்குத் தக்க நல்லதோர் பகிர்வு. ராஸலீலை... கிருஷ்ணருக்கு அப்போது 8 வயது. சரியான விஷயம்.
இதை இப்போது அப்படியே அப்பட்டமாய் உருமாற்றி விட்டனர் நிறைய பேர் என்பது தான் வருத்தமான விஷயம்.
சுவையான எழுத்து. தொடரட்டும் உங்கள் எழுத்து லீலை.... :)
அருமையான நடை. ரசித்துப் படித்தேன். கருவும் காரணமாக இருக்கலாம் :)
விரக ஏக்கம் பேரின்ப நாட்டத்தின் அறிகுறியா? இடுக்குதே?
நல்ல பதிவு
கோகுலாஷ்டமியை முன்னிட்டு வெளியிட்டுள்ள இந்த
ராஸலீலைப் பதிவைப்படிக்க மனம்
ஒரு நிமிடம் சூழலை மறந்து போனது
கோகுலத்தில் அந்த கோபியர் கொஞ்சும்
ரமணனின் நினைவில் நிலைத்தது
வர்ணனைகளும் நடையும் அற்புதம்
மனதை மயக்கும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கோகுலாஷ்டமியன்று, அந்த கோபியர்கள் கொஞ்சும் ரமணனாகிய ஸ்ரீ கோபாலகிருஷ்ணனிடம் எங்களையும் கொண்டு போய் சேர்த்து விட்டீர்கள்.
//“ராஸ லீலை கிருஷ்ணனுடைய அளவில்லா அன்பின் வெளிப்பாடு. அவனுடைய பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவனுடன் கலப்பதற்கான மொழி. பக்தர் அல்லாதோரை கவர்ந்திழுக்கும் தந்திரம். இதனால் இவனுடன் கலந்த பிறகு அனைவரும் தெய்வீகத் தன்மையும் நிலையும் அடைகின்றனர்”//
ஆஹா! இது பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு சொல்வது போல சுகப்பிரும்மம் நம் எல்லோருக்குமே சொல்லியுள்ளார்கள். கண்ணனுடன் கலக்கக் கசக்குமா என்ன!
நல்ல பதிவு. பகிர்வுக்குப்பராட்டுக்கள்.
வாழ்த்துக்கள். நன்றிகள்.
அளவில்லா அன்புடன் vgk
கோபியர் கொஞ்சும் ரமணனை மானசீகமாக
மனதிற்குள் செலுத்தியதற்கு மிக்க நன்றி ஆர் வி எஸ் சார்!
அந்த மன்னார்குடி கோபாலன் தங்களை சீரும் சிறப்புமாக வைத்திருக்கட்டும்
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்...! கண்ணனைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணமே உங்கள் கை விரல்களில் புகுந்து வார்த்தைகளை நடனம் புரிய வைத்து விட்டன போலும். (அது சரி, பாவம் அந்த கோபிகைகளின் கணவர்கள்...ரா முச்சூடும் தேடி வராமலா இருந்திருப்பார்கள்..?!) ராசலீலா வுக்கு எனக்கும் அர்த்தம் இன்றுதான் தெரியும். "நவநீதன் கீதை போதை தராதா...ராச லீலைகள் தொடராதா...(ராச லீலை என்று டைப்பினால் ராசா லீலை என்று கூகிள் தமிழி பயமுறுத்துகிறது. ராசா இன்னும் லீலை செய்தால் என்ன ஆவது...!)
ரஸமான பதிவு.
கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.
குழலோசை கேட்கிற நேரம் இது...
@பத்மநாபன்
நன்றி ரசிகமணி அவர்களே!! கிருஷ்ணனைப் பற்றி இன்னும் நிறைய தொடுக்கலாம் என்று விருப்பம். பார்க்கலாம்.. :-))
@பத்மநாபன்
நீரே முதல்வன்!! :-))
@வெங்கட் நாகராஜ்
தலை நகரத்திற்க்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன். :-))
@அப்பாதுரை
விரக இன்பத்தின் மூலம் கூட பேரின்பத்தை அடையலாம் என்று கூறுவதாக கூட இருக்கலாம்.
சித்தார்த்தர் புத்தராக சன்னியாசக் கோலம் பூணுவதற்கு முன்னர் அவருடைய படைத் தளபதிக்கும் அவருக்குமிடையேயான சம்பாஷனை என்று ஓரிடத்தில் படித்தேன்.
அதில்..
அந்தத் தளபதி பெண்ணாசையில் மிகுந்த விருப்பம் உள்ளவன். அவனிடம் “ நீ ஆசையை விட்டொழி” என்று உபதேசம் செய்கிறார் புத்தர். அதற்கு அவன் “இந்த ஆசையை விட்டால் என்ன பயன்” என்று கேட்கிறான். புத்தர் “ நீ பேரின்ப நிலையை அடையலாம்” என்கிறார். உடனே அவன்
“இப்போது கூட நான் பேரின்ப நிலையை அடிக்கடி அடைகிறேனே” என்றானாம்.
அது போலவோ!!!
என் அறிவுக்கு எட்டிய வரை.....
கருத்துக்கு நன்றி அப்பாஜி!!! :-)))
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி. முதல் வருகைக்கும் கருத்துக்கும். :-))
@Ramani
பாராட்டுக்கு மிக்க நன்றி ரமணி சார்! :-))
@வை.கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி கிருஷ்ணரே!! :-))
@raji
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.. :-))
@ஸ்ரீராம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
நாங்க என்.ஹெச்.எம்முக்கு மாறிட்டோம்.. அப்ப நீங்க...
@ரிஷபன்
ரொம்ப நன்றி சார்! :-))
@மாதேவி
உங்களுக்கு நேரமே இல்லையா? இந்தப் பக்கமே ஆளைக் காணோம்?
நன்றிங்க..:-))
RVS
பாகவத புராணத்தின் படி கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் இருந்து தனது எட்டாவது வயதில் கம்சனைக் கொல்ல கிளம்பினார். அவர் பிறந்தது ஸ்ரவண மாசத்து அமாவாசைக்கு முந்தய அஷ்டமி. ஸ்ராவண மாசத்தில் இருந்து மூன்றாவது மாதம் ஐப்பசி. அந்த பௌர்ணமி ராச லீலை நடந்தாக சொல்லபடுகிறது. எனவே அவரின் 7.25 வயதில் இது நடந்திருக்கிறது.
பக்தி ஒன்பது வகையானது. அதில் ஒன்று சாக்யம் (साक्यं). கடவுளை துணைவனாக எண்ணி அவன் மீது பக்தி செலுத்துவது - அவனை அடைவது. கோபியர்கள் இந்த சாதனம் மூலமாக தங்களின் ஜீவாத்மாவை கிருஷ்ண பரமாத்மாவில் இணைத்தார்கள்.
வேத வியாசர் மகாபாரத்தை எழுதிய பின்னரும் திருப்தி இல்லாமல் இருந்தாரம். அதில் கிருஷ்ணரின் வாழ்கையை முழுவதும் கூற முடியவில்லையே என்ற குறை இருந்ததாம். நாரதரின் உபதேசப்படி ராச லீலையை உள்ளடக்கிய பாகவத புராணம் எழுதிய பின்னரே அந்த குறை நீங்கியதாம்.
@SRINIVAS GOPALAN
சார்! முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ராச லீலை விளக்கத்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
மீண்டும் மீண்டும் வருக. :-))
Post a Comment