Thursday, July 14, 2011

காதல் கணினி

satyamcinemas


வெள்ளிக்கிழமை சத்யம் திணறத் திணற நிரம்பி வழிந்தது. கூட்டத்தில் பேர் பாதி முப்பதுக்குள் இருக்கும் ஐ.டி யுவன்கள் யுவதிகள். பொட்டித் தட்டி பிழைக்கும் அனேகருக்கு அது டி.ஷர்ட், டெனிம் ஜீன்ஸ் மாட்டும் ஒய்யார தினம். கேஷுவலான வாரக் கடைசி. உழைத்து அயர்ந்த மூளைக்கு ஓய்வு நாள்.

தோள் மேல் கை போட்டு “ச்சே ஏண்டா மச்சி சீக்கிரம் வந்தே? ஒரு டக்கர் ஃபிகரு எனக்கு செட் ஆய்டும் போல இருந்திச்சு. உன் முட்டை முழிக் கண்ணைப் பார்த்ததும் பயந்து எஸ் ஆயிடுச்சு” என்ற முறுக்கேறிய வால்..லிப்ப வயசனும், ஏற்கனவே ஃபிகர் செட்டானவர்கள் தன் ஸ்வீட்டியுடன் கைக்குள் கை நுழைத்து கயிறு போல முறுக்கி ‘X' ஆக்கி பட்டர் ஸ்காட்ச் கோன் ஐஸ்க்ரீமை எம்எல் எம்எல்லாக மெல்ல நாவால் தடவி சாப்பிடுவதும், அகாடமி அவார்ட்ஸ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் ஹாலிவுட் நாயகிகள் போன்று எல்லாவற்றையும் திறந்து போட்டுக்கொண்டு ’திவ்யதரிசன’ உடையணிந்து சிலரும், “எப்போ வருவாரோ. எந்தன் கலி தீர” என்று வாசல் கேட் மேல் விழி வைத்து தோள் பையோடு காத்திருக்கும் நேர்மையான காதலரும் பொங்கி வழியும் தியேட்டர் வாசல் தான் வாழ்வில் அந்தத் தருணத்தில் மனமகிழ்ச்சியான மக்களைச் சந்திக்க ஒரே இடம். நடு ரோட்டில் குழந்தை குட்டியோடு பவுடர் பூசிய குலமகள் ஆட்டோ சவாரியாக வந்து இறங்கினாள். காட்சி நேரம் நெருங்க நெருங்க ஒவ்வொன்றாக நிறைய தலைகள் அங்கே சேர ஆரம்பித்தது.

எதிரே சன்னா சமோசா, சுண்டல், பானி பூரி விற்கும் பான்பராக் பவள வாய் ராஜஸ்தான் சேட்டு கடையிலும் கையில் சிறு தட்டேந்தி கூட்டம் அலைமோதியது. “க்யா..க்யா..அச்சா..அச்சா..” என்று கஸ்டமர் மனம் கோணாமல் உபசாரம் செய்து ”ஹாட் சமோஸா. அமேஸிங்” என்று ஊர் சுற்றிப் பார்க்க வந்த வெள்ளைக்கார தம்பதிகளின் வெண்ணை தடவிய வாயில் இருந்து நீர் ஒழுக சர்ட்டிஃபிகேட் வாங்கிக் கொண்டிருந்தார் சேட்டு. வாசலில் நின்று கொண்டு பலர் மும்முரமாக வாய்க்கும் கைக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பச்சையும் சிகப்புமாக வண்ண வண்ண திரவங்களை சைட் டிஷ்ஷாக ஊற்றிக் கலந்தடித்தார்கள்.

ஆயுதபூஜைக்கு மட்டும் குளிக்கும் ஒரு அழுக்கு மாநகர பஸ் சேட்டுக் கடையில் அடுக்கி வைத்திருந்த சமோசாக் குன்று மேலே புழுதி வாரி தூற்றி கியர் பாக்ஸ் உடைய “டட்ட்டட்”டென்று கதறிக் கொண்டே சென்றது. ஆண்களும் பெண்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்த அந்த நடக்கும் பஸ்ஸிலிருந்து பூனையின் லாவகத்தோடு குதித்து இறங்கினான் அழகிய மணவாளன். (இங்கே அழகிய என்பது உரிச்சொல் அல்ல.)  “டே! சாவு கிராக்கி” என்று கை நீட்டித் திட்டி வசவு மழை பொழிந்து கட் அடித்து சென்றது ஒரு “சேலையைப் பார்க்காதே! சாலையைப் பார்!!” என்ற திருவாசகம் பின்பக்கம் தீட்டியிருந்த ஆட்டோ.

“டேய்... எவ்ளோ நாழிடா..”  பரபரத்தான் பின்னால் பர்ஸ் புடைத்த கருப்பு ஜீன்ஸ் போட்ட ஒரு பையன். வெள்ளை பனியனில் நான்கு விரல் மடக்கி நடுவிரல் மட்டும் அசிங்கமாக ஆகாசத்தைப் பார்த்து குத்துக்க நீட்டியிருந்த பனியனளவு மணிக்கட்டுக்கரம் ஒன்று வரையப்பட்டிருந்தது. தேங்காயெண்ணய் காணாத தலை பாகவதர் கட்டிங்கில் பறந்தது. உதடுகளுக்கிடையில் கிங்ஸ் புகைந்தது. பற்களுக்கு இடையில் ஜவ்வாக ரிக்லீஸ் கடிபட்டுக் கொண்டிருந்தது. நவயுக இளைஞன்.

“இல்ல அஜய். திடீர்னு ஆறு மணிக்கு மேல தேவையே இல்லாம மீட்டிங்னு உக்கார வச்சுட்டான் அந்த மேனேஜர் புண்ணாக்கு. கிளையண்ட் போட்டு அவனைப் புடுங்கினா குலை நடுங்கிப் போய் அவனைச் சுத்தி நம்மளை உட்கார வச்சுக்கிறான். ஒரு நாள் அவனுக்கு இருக்கு...”

“நீ சொன்ன பார்ட்டி வருமாடா?”

”நிச்சயமா வரும்”

“என்னடா... டல்லா வந்துருக்கே.. வண்டியெங்க..”

“மேனஜரை கிக்கரா நினச்சு ஆத்திரம் பூராவையும் அது மேல காமிச்சேன். கிக்கர் புட்டுக்கிச்சு. அப்டியே ஆபீஸ்ல உட்டுட்டு அவசரம் அவசரமா பஸ்ஸை புடிச்சு ஓடி வரேன்”

“தம் வேணுமா?”

”இல்ல.. எங்கிட்ட இருக்கு” அ.மணவாளன்  பெட்டியிலிருந்து சிகரெட் ஒன்றை அழகாக தட்டி எடுத்து வாயில் சொருகி அதன் தலைக்கு சிதையூட்டினான். தேர்ந்த யோகக் கலைஞன் ப்ராணாயாமம் செய்யும் சிரத்தையுடன் சிகரெட்டை ஆழ உள் இழுத்து வெளியே விட்ட புகையில் அவன் மனதின் ஆசைக் கசிந்தது. அவன் சத்யம் தியேட்டர் வாயிலோரம் வலது காலை பின்பக்கம் மடக்கி சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து நின்று அந்தப் ’பார்ட்டி’க்கு காத்திருக்கும் வரையில் அ.மணவாளனைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ.

கல்யாணமாகி ஏழெட்டு வருடங்கள் புழுபூச்சியில்லாமல் தவமாய்த் தவமிருந்து கோயில் குளங்களாக சுற்றி அங்கப் பிரதக்‌ஷிணம் செய்து அ.மணவாளனைப் பெற்றப் புண்ணியவதியின் பெயர் வேதா என்கிற வேதவல்லி. தகப்பனார் மேல் வரும்படி ஏதும் வராத சுத்தமாக பவர் இல்லாத ஏதோ காமாசோமா அரசாங்க அலுவலகத்தில் ஃபைல் மலைக்கு பின்னால் உட்கார்ந்து சதா தும்மல் வரத் தூசிக் காகிதம் புரட்டிக் கொண்டிருக்கும்; ”A2 எங்கய்யா?” என்று உத்யோகஸ்தர்களால் அழைக்கப்படும் அஸிஸ்டெண்ட் நரசிம்மன்.

பெரிய பெரிய கட்டம் போட்ட சட்டையும் அதற்கு துளிக்கூட மேட்ச்சிங் இல்லாத தொள தொளா பேண்ட் அணிந்து ஹவாய் செருப்போடு டி.வி.எஸ் ஐம்பதில் இடது கைப்புற ரோடோரமாக தினமும் அலுவலுக்கு செல்லும் ஒரு சராசரி மத்யமர். வீடு கட்டுவதற்கு வாங்க முடியாத கிரௌண்டை தலையில் தாராளமாக வாங்கியிருந்தார். கிலோவுக்கு எட்டணா குறைத்துக் கொடுக்கிறார்கள் என்று ஒரு மைல் தாண்டிச் சென்று ஆந்திரா அரிசி மண்டியில் இருந்து நெல்லூர்ப் பொன்னி ரைஸ் வாங்கி வந்து பொங்கித் தின்னும் சிக்கனர். வேதவல்லியின் உதவாக்கரைத் தம்பியையும் மூஞ்சி காண்பிக்காமல் வீட்டில் உட்கார வைத்து படியளக்கும் புண்ணியவான்.

போதும். அதோ பார்ட்டி நெருங்கி விட்டாள். மணா பதறிப் போய் சிகரெட்டின் ஆயுளை காலில் நசுக்கி முடித்தான்.

“ஹாய் மணா” தூரத்திலிருந்தே கையசைத்தாள்.

நெருங்கிய பின் “ஹாய் மிருதுளா. மீட் மை ஃப்ரெண்ட் அஜய்.”

“ம். ஆஃபிஸ்ல பார்த்திருக்கேன். உன்னோட ’தம்’ கம்பெனி. கரெக்ட்டா”

அருகில் வந்ததும் மணா என்று செப்பிய அவளது வாய் மல்லிகையாய் கமகமத்தது. அஜய் ஒரு கணம் நிலை தடுமாறினான். அவளோடு வலியக் கை குலுக்கினான். மலர்க்கரம் சேரும் போது அவனுடம்பில் பல அமிலங்கள் தாறுமாறாய் சுரந்தன. காதிற்குள் ஒருசேர ஆயிரம் பேர் சேர்ந்து வாசிக்கும் மங்கலமான வீணை இசைக் கேட்டது. ஜீன்ஸ் போட்ட மஹாலெக்‌ஷ்மியாக தெரிந்தாள். மேனி முழுவதும் ஃபேர் அண்ட் லவ்லியாக இருந்தாள். ஷாம்ப்பூ விளம்பரங்களில் திரையில் பொய்யாகப் பார்த்த குதிக்கும் கேசம் இவளிடம் நிஜமாகவே பந்து பந்தாக சுழன்று விளையாடிக் கொண்டிருந்தது.

காதுகளில் தொங்கிய அந்த வளையங்கள் எப்போதும் முதல் ஆளாய் ஆடி அவள் பேசுவதை ”ஆமாம் ஆமாம்” என்று ஆமோதித்தன. நேருக்கு நேர் பார்ப்போர் கண்ணுக்கு பாரமாக டீ-ஷர்ட் அணிந்திருந்தாள். அதற்கு அடுத்த பெரிய சைஸ் டீ-ஷர்ட் முன்னால் நிற்போரை கொஞ்சம் பெரு மூச்சு விடாமல் காப்பாற்றும். மணாவிடம் எதற்கோ கண்ணகி “தேரா மன்னா” என்று சிலம்பு பிடித்த கை போஸில் தூக்கிப் பேசிய போது சிறிய தளிர் இடுப்பு பளீர் வெள்ளை நிறத்தில் குட்டி மடிப்பாக கொஞ்சூண்டு வெளியே துருத்தியது. இ.மடிப்பு சமீப கால பர்கர், பிஸாவின் கைங்கர்யமாக இருக்கலாம்.

“ஏய்! எங்கயிருக்கே” என்று அஜயின் முகத்துக்கு நேரே கை சொடுக்கினாள் மிருது.

“என்னப்பா! எதுவும் ஃபீலிங்ஸா...உன் ஆள் யாரவது வரேன்னு வரலையா? ” சரமாரியாக கேள்விகளை அடுக்கினாள்.

“இல்ல..அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஷோ ஆரம்பிக்கரத்துக்கு இன்னும் கால் அவர் இருக்கு.. எதாவது சாப்பிடுவோமா?” என்று தன் ’கெட்ட’ கனவைக் கலைத்து சமாளித்தான் அஜய்.

அ.மணவாளனும், மிருதுவும் கை கோர்த்து ஒரு கையை பத்து விரலாக்கிக் கொண்டார்கள். அஜய் அந்த ஜோடியின் பின்னால் அரையடி விட்டுத் தொடர்ந்தான். அவளுக்கு சிலசமயம் பனியனுக்கு வெளியே சண்டே லாங்கர் தேன் மண்டேவாக இருந்தது. உள்ளே இழுத்து விட்டுக்கொண்டாள். அவன் கண் மிருதுக்கு பின்னால் LEE அச்சடித்த லேபிளுக்கு கீழே ஆபாசமாக தொடர்ந்தது. பக்கத்து மேம் பாலத்தின் அடியில் கோலா பானங்கள் மாலையாக அணிந்த ஒரு குளிர்பானக் கடைக்குள் மூவரும் நுழைந்தார்கள்.

“கோக் ஆர் பெப்ஸி” உற்சாகமாகக் கேட்டான் அஜய்.

“என் மணாக்கு என்ன புடிக்குமோ அதுதான் எனக்கும்” சரோஜாதேவி சாயலில் கொஞ்சினாள் மிருது. உதடு மணாவின் கன்னத்தில் இடிக்கும் அழகிய அபாயத்தில் சரேலென்று திரும்பினாள்.

“ஊம்...ஆமணக்கு...வாங்கித் தரட்டா” சொல்லிச் சிரித்தான் அஜய்.

“யேய்! ஸ்ப்ரைட் சொல்லு”

“ரெண்டு ஸ்ப்ரைட்.. ஒரு கோக்” பர்ஸைப் பிரித்து சிரித்த சலவை காந்திகளில் ஒன்றை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினான் அஜய். கடையின் கண்ணாடியில் மணா அர்த்தநாரியாய் தெரிந்தான்.

“டேய். நா தரேன்..” அவன் கையை தட்டிக் கொண்டு முந்தினான் மணா.

“பரவாயில்லை... கல்யாணத்துக்கு பேச்சிலர் பார்ட்டி ட்ரீட் குடுக்கும் போது இதுக்கும் சேர்த்துக் குடு.”

மணாவும் மிருதுவும் சிரித்தார்கள்.

வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கீபோர்டும் கையுமாக வேலைப் பார்த்த பிறகு அன்றைக்கும் மறுநாளும் ஊர் சுற்றுவது அவர்களது வாடிக்கை. கும்பகோணத்துப் பொண்ணு மிருதுளா. மணாவிற்கு திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு பின்புறம் ஒரு ஓட்டு வீடு. காவிரித் தண்ணீர் இருவரையும் சுலபமாக சேர்த்து வைத்துவிட்டது. அந்த மீசையில்லாத வடக்கத்தியாள் நடத்தும் மென்பொருள் கம்பெனியில் சேர்ந்தவுடன் “ஐ, மைசெல்ஃப், கோ, கம், வாட்டு, ஹவ்வு, வேரு...” என்று திக்கிக் திணறி முதல் நாள் ஆங்கிலம் பேசியதில் “நீங்க டவுன் சவுத்தா?” என்ற ஆதாரக் கேள்வியை முதன் முதலாக கேட்டது மிருதுதான். அன்று வெள்ளைச் சுடிதாரில் தங்கமென ஜொலித்தாள்.

“ஆமாம்.. நீங்க?” வாய்க்குள் ஒரு சேனை ஈ புகும் அளவிற்கு விரித்திருந்தான்.

“நா கும்பகோணம்”

“கும்பகோணத்ல எங்க?”

“சாரங்கபாணி கோயில் இருக்குல்ல.. அந்த தேர் நிறுத்தியிருக்கும் பக்கத்து சந்து திரும்பி லெஃப்ட்ல போய்.....”

இப்படி நான்கடி தள்ளி நின்று பேச ஆரம்பித்து ஒன்றாக இரண்டடியில் லன்ச் சாப்பிட்டார்கள், ஓரடியில் தேநீர் அருந்தினார்கள், ஒரு இன்ச் இடைவெளியில் இருசக்கரத்தில் பயணித்து தங்கும் விடுதிக்கு புறப்பட்டார்கள், காலையில் உள்ளன்போடு குட்மார்னிங் சொல்லிக் கொண்டார்கள், கடைசியில் ஒரு சுப முகூர்த்த நாள் பின் மாலைப் பொழுதில் ஆஃபிஸ் கான்டீனில் மூக்கும் மூக்கும் இடிக்க “ஐ லவ் யூ” என்று ஒருவருக்கொருவர் முனகிக்கொண்டு காதலிக்கத் தொடங்கினார்கள்.

”ஏய்... படம் போட்ருவான். எனக்கு ஆரம்பத்ல வர சென்ஸார் சர்டிபிகேட்லேர்ந்து சினிமா பார்த்தா தான் தியேட்டர்ல பார்த்த திருப்தி இருக்கும்..வா..வா.” மணாவை கையை பிடித்து இழுத்தாள்.

“ஏன்.. படம் ஏவா யூவான்னு பார்க்கனுமா?”

“ச்சீ.. வா உள்ள...” என்று இம்முறை இடுப்பை சுற்றி இழுத்தாள்.

அஜய் அந்த அன்யோன்யச் செயலில் தானாக தியேட்டர் உள்ளே இழுக்கப்பட்டான்.

”ட்...ரி....ங்......” என்று மணியடித்து படம் போட்டார்கள். ஸி வரிசை. 1,2,3 ஸீட் நம்பர். சுவரோர ஒன்றில் ஏதோ அசிங்கமாக இருந்தது என்று இரண்டில் மிருதுவை உட்காரவைத்து இருபுறமும் மணாவும் அஜயும் உட்கார்ந்து கொண்டார்கள்.

“டேய்! பாப் கார்ன் வாங்கலையே” அஜய் தான் ஆரம்பித்தான்.

”சரி வா! நாம ரெண்டு பேரும் போய்ட்டு வரலாம்” என்று எழுந்தாள் மிருது.

“குவிக். சீக்கிரம் வாங்க” என்று திரையில் ஹிரோயின் மழையில் நனைவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு உட்கார்ந்தான் மணா.

பத்து நிமிடத்திற்கு பிறகு அஜய் இரண்டு கையிலும் பாப் கார்ன் பாக்கெட்டுடன் இருட்டில் காலைத் தேய்த்து தேய்த்து வந்து உட்கார்ந்தான்.

“மிருதுளா வரலை...”

“உன் கூடத் தானே வந்தா... எங்க போனா”

"உள்ள தான் வந்தா மணா”

“சரி.. ரெஸ்ட் ரூமுக்கு போயிருப்பா... வருவா நீ படத்தப் பாரு”

திரையில் கதாநாயகன் உரிமைக்காக போராடினான்.

மிருதுளா வரவில்லை.

அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தான். போர்க்கொடி பிடித்தான்.

மிருதுளா வரவில்லை.

போலீசிடம் லத்தியடி வாங்கினான்.

மிருதுளா வரவில்லை.

மரத்தைச் சுற்றி நாயகியுடன் டூயட் பாடினான்.

மிருதுளா வரவில்லை.

நாயகியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மிருதுளா வரவில்லை.

வெறுத்துப் போன நாயகி தற்கொலை செய்து கொண்டாள்.

“டேய். என்னடா இன்னமும் காணோம் இண்டெர்வலே விட்ருவான் போலருக்கே” கிசுகிசுத்தான் மணா.

“தெரியலை மணா... வெளியப் போய் பார்ப்போமா”

“ம். சரி வா...”

கேக், பாப் கார்ன் விற்பவர்கள் இண்டெர்வெல் கூட்டதிற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள். சாஃப்டி ஐஸ்க்ரீம்காரர் கஸ்டமர் என்று பார்த்து சிரித்தார். சிகப்பு கலரில் படி ஆரம்பிக்கும் இடத்தில் நியானில் “EXIT" ஒளிர்ந்தது.

”ஸார்! வெள்ளைக் கலர் டீ-ஷர்ட் போட்டுகிட்டு ஒரு பொண்ணை இந்தப் பக்கம் பார்த்தீங்களா”

“ஹி..ஹி.. என்ன தம்பி. இப்ப அல்லாருமே பனியன் போட்டுகிட்டுத் தானே சுத்துதுங்க.. எது பொம்பளையா லச்சணமா இருக்குங்க...” என்று கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு பற்றி பிரசங்கம் ஆரம்பித்தார்.

இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள். படிகளில் படபடக்க வேகவேகமாக இறங்கி வெளியே வந்தார்கள்.

“டேய்.. அங்கப் பாருடா.. அங்கப் பாருடா” என்று தரைதளத்தில் இருந்த அந்தப் பெரிய கண்ணாடி ஜன்னலைப் பார்த்துக் கூவினான் அஜய்.

“என்னடா? எங்க...”

“அங்க..அங்க.....”

அஜய் கை காட்டிய திக்கில் ஹெல்மட் அணிந்த ஒரு ஆறடி உயர இளைஞனின் புல்லட்டில் தோள் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள் மிருதுளா.

மணா விக்கித்துப் போய் செய்வதறியாது நின்றிருந்தான்.

-தொடரும்

பட உதவி: http://www.flickr.com/photos/balu/

42 comments:

raji said...

தொடரும் போட்டிங்களா?
ஓக்கே தொடரவும்.

bandhu said...

//ஏதோ காமாசோமா அரசாங்க அலுவலகத்தில் ஃபைல் மலைக்கு பின்னால் உட்கார்ந்து சதா தும்மல் வரத் தூசிக் காகிதம் புரட்டிக் கொண்டிருக்கும்; ”A2 எங்கய்யா?” என்று உத்யோகஸ்தர்களால் அழைக்கப்படும் //
//
// ஒரு கையை பத்து விரலாக்கிக் கொண்டார்கள்//
//சமோசாக் குன்று மேலே புழுதி வாரி தூற்றி கியர் பாக்ஸ் உடைய “டட்ட்டட்”டென்று கதறிக் கொண்டே சென்றது//
வர்ணனைகள் சரளம்! பிரமாதமாக இருக்கிறது!

Unknown said...

வணக்கம்
நீண்ட நாட்கள் கழித்து....

ஒரு பிரபல கதை ஆசிரியர் எழுதிய தொடரும் கதை படித்த சந்தோசம்
வாழ்க வளமுடன் மன்னை மையினர் வாள்.

Unknown said...

உங்கள் கதைகளில் வழிந்தோடும் நிதர்சன வார்த்தை பிரவேகம்
கொள்ளை அழகு

ஸ்ரீராம். said...

//"அஜய் கை காட்டிய திக்கில் ஹெல்மட் அணிந்த ஒரு ஆறடி உயர இளைஞனின் புல்லட்டில் தோள் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள் மிருதுளா"//

அது மிருதுளாவோட அண்ணன்தானே....!

பத்மநாபன் said...

சரள வர்ணனைகளும் , உரையாடல்களும் கணினிவாழ் கண்ண, கன்னியரை முன்நிறுத்துகிறது ....

RVS said...

@raji
சரிங்க மேடம். ;-)

RVS said...

@bandhu
பாராட்டுக்கு நன்றி. இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு போலருக்கு.;-)))

RVS said...

@siva
சிவா! எனதருமைத் தம்பி... நன்றி.. ;-)

RVS said...

@Rathnavel

நன்றிங்க ஐயா! ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
இல்லைன்னு சொன்னாலும் சஸ்பென்ஸ் இல்லை. ஆமாம்னு சொன்னாலும் சஸ்பென்ஸ் இல்லை... என்ன சொல்லலாம்? I am thinking....

நன்றி. ;-)

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! வளக்கட்டா... முடிக்கட்டா?

என்ன சொல்றீங்க... ;-)

பத்மநாபன் said...

உங்களிடம் உள்ளது என்ன மென்பொருளோ ? அதுவும் பெண் பொருள் என்றால் அப்படி ஒரு தடையில்லா ஓட்டம் ...வளர்த்துங்க ...வளர்த்துங்க

அப்பாதுரை said...

'மிருதுளா வரவில்லை'னு நாலு தரம் படிச்சதும் வந்த திக்திக் கடைசி வரியில் காணாமப் போயிடுச்சு. இருந்தாலும், ஜிவ்னு ஏறுது கதை. அவரோட இன்ப்லுயன்ஸ் நிறைய இடங்கள்ள துல்லியமா தெரியுது. சன்னமா தெரியுதுனு சொல்லணுமோ? கதை முடிச்சுருச்சுனு நெனச்சேன் - ஓரமா தொடரும் போட்டிருக்கீங்களே?

Ponchandar said...

”சண்டே லாங்கர் தேன் மண்டே” - எழுத்தில் நிறைய நாட்களுக்குப்பின் பார்க்கிறேன்.

RAMA RAVI (RAMVI) said...

அற்புதமா ஆரம்பித்து இருக்கீங்க RVS சார்.அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

Madhavan Srinivasagopalan said...

Sriram Asked //அது மிருதுளாவோட அண்ணன்தானே....! //

இல்லை சார்.. எனக்கு தங்கையே கெடையாது..

ஸ்ரீராம். said...

Madhu jolludu....//"இல்லை சார்.. எனக்கு தங்கையே கெடையாது."//


அது சரி....!

வெங்கட் நாகராஜ் said...

வர்ணனைகள் அனைத்தும் அருமை.... இனிய தொடக்கம்.... தொடருங்கள்.

ரிஷபன் said...

பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருக்கு..
பில்டிங் எப்படி வருதுன்னு பார்ப்போம்..
வர்ணனைகள் கலக்கல்

அப்பாதுரை said...

மிருதுளாவோட அண்ணன் இல்லே ஸ்ரீராம்.. அது மிருதுளாவே இல்லை, அவளோட இரட்டை. என்னாங்கறீங்க சச்சுபெஞ்சு.. rvsனா சும்மாவா?

இராஜராஜேஸ்வரி said...

பரபர உற்சாக தொடக்கம். பாராட்டுக்கள்.

Sivakumar said...

//வீடு கட்டுவதற்கு வாங்க முடியாத கிரௌண்டை தலையில் தாராளமாக வாங்கியிருந்தார்.//

வேணாம். அவர் பாவம் நம்மை சும்மா விடாது. நாளைக்கே நமது தலையிலுமோர் மைதானம் மையம் கொள்ளலாம்.

Angel said...

அருமையான வர்ணனை !!! . சத்யம் தியட்டர் கிட்டே நிக்கற மாதிரி ஃபீலிங் .

எல் கே said...

வர்ணனைகள் அமர்க்களம் சாரே. மணவாளனை கழட்டிவிடுவான்னு தெரிஞ்சது

RVS said...

@பத்மநாபன்
//பெண் பொருள்// அப்டி போட்டுத் தாக்குங்க.... ;-)

RVS said...

@அப்பாதுரை
இப்பத்தான் யோசிக்கிறேன் அப்படியே முடிச்சுருக்கலாம். தொடர நேரமே இல்லை.. :-)

RVS said...

@Ponchandar
நன்றிங்கோ! ;-)

RVS said...

@RAMVI
நன்றிங்க மேடம்! அடுத்த எபிசோடுகளும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்! ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan

சுத்தமா எனக்கு ஒன்னும் பிரியலை! ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
உங்களுக்கு புரிஞ்சுதா! சரி ஓ.கே! ;-)

RVS said...

@kggouthaman
சரி சார்! ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தல. தொடர்கிறேன்! ;-)

RVS said...

@ரிஷபன்
போட்டுத் தாக்கற வேலையில பில்டிங் வீக் ஆயிடுமோன்னு ஒரு பயம். எப்ப நா தொடர் எழுத ஆரம்பித்தாலும் ஒரு ப்ராப்ளம் வந்து நிக்குது. இனிமே சிறுகதைதான்னு முடிவு பண்ணிட்டேன்!
பாராட்டுக்கு நன்றி சார்! :-)

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி! உங்களுக்கு இன்னும் சிலிகான் காதலி ஹாங்ஓவர் தீரலைன்னு நினைக்கறேன்! :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். ;-)

RVS said...

@! சிவகுமார் !
ஏன் சிவா! அதற்கான அறிகுறி எதுவும் உங்களுக்கு இருக்கா! ;-)

RVS said...

@angelin
நன்றிங்க.. அடுத்த பார்ட் இன்னும் சிறப்பா எழுதனும்னு நினைக்கிறேன். நேரம் ஒத்துழைக்க மாட்டேங்குது. ;-)

RVS said...

@எல் கே
சாரே சுகந்தன்னே! மிக்க நன்றி! ;-)

எல் கே said...

/சாரே சுகந்தன்னே/

பரம சுகம்

தக்குடு said...

உங்களோட வர்ணணை நன்னா இருக்கு ப்ரமாதமா இருக்கு!னு டைப்பி டைப்பி கீபோர்டே தேய்ஞ்சு போயாச்சு! இருந்தாலும் மனசு கேக்கர்தா?? ரசித்தேன் மைனரே!!..:)

@ பத்துஜி - நம்ப ஆளு 3 பக்கம் தம் கட்டி எழுதும் நல்ல பேரை நீங்க 3 வார்த்தை கமண்ட்லையே அள்ளிண்டு போயிடறேள். நீங்க வயத்துல இருக்கும் போது உங்க அம்மா திருக்குறள் படிச்சுண்டு இருந்தாங்களோ??..:))

சிவகுமாரன் said...

கதை வெண்ணை மாதிரி வழுக்கிக் கொண்டு போகிறது. இந்த I.T.காரங்களை நெனைச்சு ....ஹ்ம்... காதுல புகை வந்தது தான் மிச்சம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails