Friday, July 8, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி


அது ஒலிநாடாக்கள் கோலோச்சிய காலம். எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் முதற் பாதியிலும் வட்டுத் தட்டை தட்டி கீழே இறக்கி தள்ளிவிட்டு நாடா படுவேகமாக முன்னேறியது. மீண்டும் நாடாவை உருவி வெளியே இழுத்து விட்டு தட்டு முன்னேறியது. ஆதி காலத்தில் பெருந் தட்டு. இப்போது குறுவட்டு. எகோ, மெல்ட்ராக் நிறுவனங்கள் டப்பா டப்பாவாக விற்று தீர்ந்து கொண்டிருந்தன. "இப்படத்தின் பாடல்களை ECHO கேசட்டுகளில் கேட்டு மகிழுங்கள்" என்று மஞ்சள் கலரில் டைட்டிலில் போடுவார்கள். மோவாய்க்கு புறங்கையை முட்டுக்கொடுத்து இசைச் சின்னங்களின் பின்னணியில் நிழல் (silhouette) இளையராஜாவின் அரை மொட்டைத் தலை ஒரு பக்கம் இசையாக சாய்ந்திருக்கும்.

குனிந்து பார்த்தால் முகம் காட்டும் கண்ணாடியாய் சில்வர் கலர் "ஷார்ப்" என்ற விதேசி டேப்ரெக்கார்டர் எங்கள் வீட்டு ஹாலை ஒரு மரப்பெட்டிக்குள் சிம்மாசனமிட்டு அலங்கரித்தது. அன்றைய காலத்தின் ஹீரோ. நம் கண்ணைக் குத்தும் படியாக ஏரியலை ஒடித்து திருப்பினால் சிலோன் ரேடியோ தெளிவாக பன்னிசைக்கும். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் "சுப்ரபாதமும்", சூலமங்கலம் சகோதரிகளின் "கந்த ஷஷ்டி கவசமும்", நாகூர் ஈ.எம். ஹனிபாவின் "இறைவனிடம் கையேந்துங்கள்"லும்  பாடியது போக மீதமிருக்கும் நேரத்தில் காதலாய் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாடும். நாம் தினமும் மேலுக்கு குளிப்பது போல அப்பா அதை ஸ்ரத்தையாய் மஞ்சள் வெல்வட் துணியால் துடைத்து படு சுத்தமாக வைத்திருப்பார். விபூதி இட்டுவிடாததுதான் பாக்கி.

விஷமக்கார சிறுவர்கள் கையில் கேசட் சிக்கினால் நடுவில் விரலை விட்டு நாடாவை உருவி எடுத்து நரசிம்ம மூர்த்தி ஹிரண்யகசிபுவை குடலை உருவி கழுத்தில் போட்டுக்கொண்டது போல நாடாவை மாலையாக போட்டுக் கொண்டு விடுவார்கள். சில சமயங்களில் டேப் ரெக்கார்டரின் ஹெட்-இல் நாடா சிக்கிக்கொண்டு மக்கர் பண்ணும். "இத்தத்தத்.தத். .....து ... சா.ஆ யும்..." என்று "இது சாயும் காலமா"வை வலிப்பாக இழுத்தால் அது அந்த நொடியில் சாய்ந்து விட்டது என்று அர்த்தம்.  தொழில் கீர்த்தி பெற்ற ஒரு சிற்பியின் லாவகத்தோடு ஸ்க்ரூ டிரைவர் அல்லது டெஸ்டர் துணையோடு டேப் அறுந்து போகாமல் நோண்டி வெளியே எடுத்தால் நீங்கள் ஒரு டேப் மாஸ்டர்.

புழுதி தேசமான இந்தியாவில் பிரஜைகளின் மர்ம ஸ்தானம் தவிர தூசி அடையாத இடம் எது. "டேய் ஸ்டீரியோ சரியா எடுக்கலை.ஹெட்ல தூசி படிஞ்சிருக்கு. ச்சில்லிங் எஃபெக்ட் இல்லை. உங்க வீட்டு வண்டிலேர்ந்து பெட்ரோல் கொஞ்சம் எடுத்து பஞ்சுல நனச்சுண்டு ஹெட்டை லேசா தேச்சா பிரமாதமா பாடும்" என்று என்னைவிட வயதில் சிறியதெல்லாம் அட்வைஸ் கொடுத்து அதன் தலையை பெட்ரோல் தேய்த்து ஸ்நானம் செய்வித்து கெடுத்துவிட்டார்கள். "ஒண்ணுத்தையும் உருப்படியா வச்சுக்க யோக்கிதை இல்லை." என்ற பாராட்டு பத்திரமும் "லாயக்கத்தவன்" என்ற பட்டமும் கொடுத்து வீட்டில் என்னை கௌரவித்தார்கள்.

வாசல் தூணிலும் ஷட்டர் கதவிலும் R - என்ற ஆங்கில எழுத்துக்கு மேலே ராஜாவின் கிரீடம் வரைந்தது ராஜ் மியூசிக்கல்ஸ். அவர்கள் உள்நாட்டு தயாரிப்பு கேசட்டுகள் உலகத்தரம் வாய்ந்தது. கொடுத்த காசிற்கு வஞ்சனை இல்லாமல் ஒரு மாதம் கியாரண்டியாக பாடும். பஸ் ஸ்டாண்ட் வடவண்டை பக்கம் அனைத்து இந்தியப் பிரஜைகளின் ஜீன்களில் இருக்கும் ஒரே நல்ல பழக்கமான பொதுவெளியில் "நம்பர் 1" இருக்கும் இடத்திற்கு நேராக உள்ள ஆடியோக் கடை. கருகருவென்று நீக்ரோவின் சுருட்டை முடியும், உதடோடு முடியும் அளவெடுத்து வளர்ந்த மீசையும் உள்ள கருப்பு ராஜா நம் ராஜ். ராஜ் மியூசிக்கல் உரிமையாளர். எங்களூர் ஆடியோ ஜாக்கி. கட்டம் போட்ட கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு ஏறிக்குதித்து ரெக்கார்டிங் செய்வதற்கு கடையின் உள்பக்கம் போய்விட்டால் நாதப் பிரம்மம் ஆகிவிடுவார். ஒரு கேசட்டின் 'A' மற்றும் 'B' பக்கம் முழுக்க எனக்கு "கீதா.. சங்கீதா..." என்ற ரசமான பாடலை பதிவு செய்து கொடுத்து காதல் பயிர் வளர்த்து சிறகு முளைத்த "தந்தன...தந்தன" தேவன் ஆனார்.

விடலைகளுக்கே உரித்தான அந்த வயசு ஹார்மோனின் தேவையான "லவ்வு" பாடல்கள் தொகுப்பு கேட்டால் கைவசம் பதிந்து வைத்திருக்கிற ஒரு மாஸ்டர் கேசட்டின் பாடல்கள் சிட்டை தூக்கிக் காண்பிப்பார். பெரும்பாலான அரும்புமீசைக்காரர்களுக்கு பார்த்ததும் நிச்சயம் பச்சென்று பிடிக்கும் பாடல் பட்டியல் அது. பானைக்குள் ஸ்பீக்கர் வைத்து, சத்தமாக "மல்லு வேட்டி கட்டியிருக்கு அதுமேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சு.." பாடும் போது வேட்டியோடு வீட்டு வாசலில் நின்று கொண்டு ஃபிகர் வெட்டுவார்கள். ஃபிகர் வெட்டுதல் என்ற நுண்கலை வட்டார வழக்குகளில் பலவிதமாக பேசப்படுகிறது. கலர் பார்த்தல், சைட் அடித்தல், நூல் விடுதல், கரெக்ட் பண்ணுதல் போன்ற சில கலைச் சொற்களாலும் இது அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக வரும் அருங்கலை.

பெயர்ப் பலகையில் டைனோசர் படம் போட்டு ஜுராசிக் பார்க் என்ற ஒரு ஆடியோ கேசட் கடை "இன்று முதல் பெரிய போஸ்ட் ஆபிஸ் எதிர்ப்பு'ர'ம் உதயமாகிறது" என்று நோட்டீஸ் அடித்து தெருத்தெருவாக விநியோகித்து ஆரம்பித்தார்கள். ஐயிரு பூஜை போட்டுவிட்டு போனவுடன் கலர் உடைத்துக் குடிக்கக் கொடுத்தார்கள். நான் உட்பட ஊரில் வெகுஜனத் தொடர்பு இருப்பவர்களுக்கு சர்வ மரியாதை செய்தார்கள். கல்யாணத்திற்கு தாம்பூலப் பை கொடுப்பது போல அன்றைய லேட்டஸ்ட் ஹிட்ஸ் பதிந்து ஒரு லோகல் கருப்பு கேசட் கொடுத்தார்கள். ஐந்து நாட்கள் பாடிவிட்டு அது உயிர் நீத்தது. கடை வெற்றிகரமாக அறுபது நாட்கள் திறந்திருந்தது என்று என் ந்யூரானின் சிறிய முடிச்சு சொல்கிறது.

பிறந்தால் தாலாட்டு, கட்டையை நீட்டினால் ஒப்பாரி, காதலித்தால் டூயட், ஆத்ம விசாரத்திர்க்கு கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள், நாற்று நட களை பறிக்க நாட்டுப்புறப் பாடல்கள், காலையில் எழுந்தால் "துதிப்போர்க்கு துன்பம் போம்" என்று வாழ்க்கையின் எல்லா நேரங் காலத்திற்கும் பாட்டு இருப்பது போல பஸ்ஸில் பயணத்தால் "டேப்பு பாடுமா?" என்று கேட்டுக்கொண்டே ஏறுவோர் பலர் அப்போது வாழ்ந்தார்கள். காதுகளில் சொருகிக்கொண்டு அலைந்து திரிவது வழக்கத்தில் இல்லை. யாராவது பரவாக்கோட்டை,மூவாநல்லூர் பார்ட்டி சிங்கப்பூர் போய்விட்டு வந்தால் ராஜா திரைப்பாடல் ரெகார்டிங் செய்வதற்கு காதில் மாட்டிய ஹெட் ஃபோன் சைஸில் ஒன்றை மாட்டிக்கொண்டு இடுப்பு பெல்ட்டில் ஒரு கிலோ எடைக்கு வாக்மன் சொருகியிருப்பார்கள். எடை தாங்காமல் பெல்ட் அறுந்து பேன்ட் அவிழ்ந்து விழும் அபாயத்தில் ஊர் சுற்றுவார்கள்.

பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு தாங்கள் பதிந்த அரும்பாடல் தொகுப்பை ப்ரைவேட் பஸ் டிரைவர்களிடம் கொடுத்து காது குளிர கேட்டுக்கொண்டு பயணிப்பார்கள். "லோக்கல் கேசட்டு கொடுக்காதீங்க.. ஹெட் போயிரும்" என்று பிகு பண்ணிகொள்ளும் டிரைவர்களை தாஜா செய்ய அவர்களை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். 'எட்டு' என்ற சனியின் நம்பர் கொண்ட பஸ் வயற்காட்டை தாண்டி எங்கள் கல்லூரிக்கு உள்ளே கொண்டு போய் சேர்க்கும். அதை மிஸ் பண்ணும் சமயங்களில் வரும் ப்ரைவேட் பஸ் டிரைவர் "வேலு" க்ளோஸ் பிரண்ட் ஆனார். சின்னக்கவுண்டர் விஜயகாந்த் போல தலையை தூக்கி சீவி சந்தனப் பொட்டு வைத்து அசத்துவார். "முத்து மணி மாலை...என்னத் தொட்டு தொட்டுத் தாலாட்ட" பதிந்த எந்த வீணாப்போன கேசட் கொடுத்தாலும் அண்ணன் தயங்காமல் தொடையில் தட்டிப் போடுவார்.

கல்லூரி விட்டு அந்தியில் தொந்தி கண்டக்டர் வரும் கணேசாவிலும் இந்தச் சிறப்பு வசதி உண்டு. "ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே" என்ற ஆந்திர தேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு "டமக்கு டமக்கு" பாடலைப் போட்டு படுத்துவான் ஒரு நண்பன் என்கிற இசைத் துரோகி. பாடலைக் கேட்காமல் நாம் ஜன்னல் வழியாக வேறுதிசையில் எரிச்சலோடு பார்த்துக்கொண்டு வந்தால் வலிய வந்து தாவாங்கட்டையைப் பிடித்து தலையைத் திருப்பி "எப்படியிருக்கு?" என்று தாளகதிக்கு தலையை ஆட்டிக்கொண்டே கேட்பான். நமக்கு அப்படியே கதிகலங்கி போய்விடும். நம் கடித்த பற்களின் இடையே "சூப்பர்" வழியும்.

எக்கோ ரெகார்டிங் என்று ஒரு ஸ்பெஷல் பாடல் ஒலிப்பதிவு முறை கொஞ்ச காலம் பிரசித்தி பெற்றது. நிர்ஜனமான கோயில் பிரகாரங்களில் "அம்புலு"ன்னு கூப்பிட்டால் கடைசியில் சுந்தரத் தெலுங்கில் "லு..லு..லு..." என்று பிரகாரம் பேசி அடங்குமே அதைப் போல் பாடலை ரிகார்ட் செய்வார்கள். இந்தக் கால ரீமிக்சுகளுக்கு முன்னோடி. அது போல ஏதாவது ஒரு கேசட் பஸ் பயணத்தில் கொடுத்துவிட்டார்கள் என்றால் ரொம்ப சந்தோஷம். தலை, உடல், கால் என்று மூன்று இடங்களில் ஸ்பீக்கர் பொருத்தி இருக்கும் பஸ்களில் முதல் ஸ்பீக்கரின் எக்கோ இரண்டாவதில் பட்டு அப்புறம் முதலிரண்டும் ஜோடியாக கைகோர்த்து மூன்றாவதில் மோதி ஒரு இசைப் பிரளயமே அந்தப் பேருந்தில் நிகழும். ஒரு பொன் மாலைப் பொழுதில் பிறந்ததிலிருந்து அறுபது எழுபது வருடங்களாக இசை கேட்ட காதை குளிர் காலத்தில் ஸ்கார்ஃப் சுற்றிக்கொள்வது போல காதைச் சுற்றி இறுகக் கட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார் ஒரு வெள்ளைச் சட்டை பெரியவர். இறைவன் அவரை ஆட்கொண்டு விடக்கூடாதே என்று நான் கவலைப்பட்டேன்.

"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா..." பாடலில் முதல் நாற்பத்து நான்கு வினாடிகளில் அந்தரத்தில் சுழன்று பறந்து கார்த்திக் கைக்குப் போய் டேப்பில் சங்கமமாகும் கேசட் போல இது இன்னும் ஐந்தாறு பதிவுகள் தாங்கும் குதூகல கச்சேரி. முடிந்தால் பிறகு வேறொரு பதிவில் மிச்சம் மீதி....

-

35 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான மலரும் நினைவுகள்.. மனதில் விகசித்த நினைவலைகளுக்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

விஷமக்கார சிறுவர்கள் கையில் கேசட் சிக்கினால் நடுவில் விரலை விட்டு நாடாவை உருவி எடுத்து நரசிம்ம மூர்த்தி ஹிரண்யகசிபுவை குடலை உருவி கழுத்தில் போட்டுக்கொண்டது போல நாடாவை மாலையாக போட்டுக் கொண்டு விடுவார்கள்.//

சின்னப் பிள்ளைகள் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்வது ரொம்பத்தான் சிரமம் அப்போது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அருமை.அருமை.ஆர்.வி.எஸ்.செம்ம செம்ம ஃபார்ம்.

அது சரி. ஒழுங்கா ஓடற பாட்டை ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பட்டனையும் ப்ளே பட்டனையும் ஒண்ணா அழுத்தி பாட்டை வேகமா கீச்கீச்சென்று கத்த விட்டு இசைக்கொலை செய்ததில்லையா? அல்லது விடுபட்டுவிட்டதா?

பத்மநாபன் said...

பாட்டு பற்றிய பதிவு என்றாலே பார்ட் பார்ட்டா பிரிச்சிருவிங்க...அந்த பாட்டுப் பதிவ பற்றியேன்னா கேட்கவா வேணும்...

இளையராஜா கோலோச்சிய கேசட் காலம்
வசந்த காலம்... அழகான படப்பிடிப்பு...

முரளிகண்ணன் said...

அருமை. அடுத்த பகுதிகளுக்காக வெயிட்டிங்

Angel said...

//பாடல்கள் தொகுப்பு //முதல் மரியாதை /பூங்காற்று திரும்புமா (SALAD DAYS!!!)அப்புறம் எங்க ஊர் பாட்டுக்காரன் பாடல்கள் எல்லாமே அப்போ FAMOUS தானே .

Angel said...

//சில்வர் கலர் "ஷார்ப்" என்ற விதேசி டேப்ரெக்கார்டர் எங்கள் வீட்டு ஹாலை ஒரு மரப்பெட்டிக்குள் சிம்மாசனமிட்டு அலங்கரித்தது. //
எங்க வீட்லயும் இருந்தது .
அருமையான மலரும் நினைவுகள்

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்! ;-)
கேசட்டை கைக்கெட்டா தூரத்தில் வைத்திருப்போம். ;-))

RVS said...

@சுந்தர்ஜி
விட்டுட்டேன் ஜி! அதையும், அதில் ரிகார்ட் பண்ணுவதையும். ஒரு நல்ல ஒரிஜினல் கேசட்டில் நடு நடுவே "யாரு என்ன சொல்லுவா.. உம்... சொல்லுடா..."ன்னு நாங்க பேசி ரெகார்ட் பண்ணியதை.
டெய்லி கமிட்மென்ட் என்பதால் சில விஷயங்கள் விடுபட்டுப் போய்விட்டது..

உங்கள் அசாத்திய ஞாபகத்திற்கு ஒரு வணக்கம். நன்றி ;-))

RVS said...

@பத்மநாபன்
ஆமாம் பத்துஜி!
எங்க போனாலும் ராஜாங்கம் தான். அமர்க்களப்படுத்தினார். ;-)

RVS said...

@முரளிகண்ணன்
முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.. விரைவில் பதிய முயற்சிக்கிறேன். நன்றி. ;-))

RVS said...

@angelin
அந்தப் பாடல்களின் 'உள்ளிழுப்பு' இப்போது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தவர்கள் எம்.எஸ். தான் டாப் என்பார்கள். நான் ரகுமானையும் ரசிப்பேன், ராஜாவையும் ரசிப்பேன். ஏன் நல்ல பாட்டை யார் இசையமைத்தாலும் பிடிக்கும்.
கருத்துக்கு நன்றிங்க. ;-))

A.R.ராஜகோபாலன் said...

அமர்க்களமான எழுத்து நடையில்
ஜமாய்க்கும் ஜகல்பந்தி

ADHI VENKAT said...

பாட்டுப் பதிவு ஜோராக இருந்தது. திருமணமாகி தில்லி வந்த புதிதில் ஒரு நாளைக்கு 10 கேசட்டாவது போட்டு கேட்பேன். இன்னும் கேசட்டுகளை பத்திரமாக வைத்திருக்கிறோம்.

மாலை வேளையில் பஸ்ஸில் பாட்டுக் கேட்டுக் கொண்டு போவது மிகவும் பிடித்தமான விஷயம். இளைராஜாவாக இருந்தால் இந்த பயணம் இன்னும் தொடரக் கூடாதா என நினைப்பதுண்டு. சென்ற முறை திருச்சியில் இன்னும் ஒரு முறை இந்த பஸ்ஸில் சென்று விட்டு வரலாம் என்று கூறினேன்.

Simulation said...

நீங்கள் "கேசட் ப்ளேயர் பீரியட்" என்றால் நாங்கள் "ரெக்கர்ட் ப்ளேயர்" பீரியட்.http://simulationpadaippugal.blogspot.com/2008/09/blog-post.html - சிமுலேஷன்

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவுகள் மைனரே.... எத்தனை எத்தனை ஒலிநாடாக்கள் என்னிடம் இருந்தது. சில சமயங்களில் மாட்டிக்கொண்டு விடும் இவற்றை சேதாரமில்லாமல் எடுப்பது ஒரு கலை மற்றுமில்லை, மிகுந்த பொறுமையும் வேண்டும்...

தில்லி வந்த புதிதில் இதற்காகவே பிலிப்ஸ் பவர்ஹவுஸ் நாங்கள் தங்கி இருந்த அறையில் வாங்கி வைத்திருந்தோம்..... அப்போது வாங்கிய, பதிந்த ஒலிநாடாக்கள் இன்னமும் என்னிடம் இருக்கிறது. அதைக் கேட்கத் தான் முடிவதில்லை...

ஃபாஸ்ட் ஃபார்வார்ட் ரெகார்ட் செய்யும் போது வரும் அந்த பாடலின் இசை கேட்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது.....

மாதேவி said...

அது ஒருகாலம்.....

இளங்கோ said...

மலரும் நினைவுகள் :)

raji said...

//நிர்ஜனமான கோயில் பிரகாரங்களில் "அம்புலு"ன்னு கூப்பிட்டால் கடைசியில் சுந்தரத் தெலுங்கில் "லு..லு..லு..." என்று பிரகாரம் பேசி அடங்குமே அதைப் போல் பாடலை ரிகார்ட் செய்வார்கள்.//

//ஒரு பொன் மாலைப் பொழுதில் பிறந்ததிலிருந்து அறுபது எழுபது வருடங்களாக இசை கேட்ட காதை குளிர் காலத்தில் ஸ்கார்ஃப் சுற்றிக்கொள்வது போல காதைச் சுற்றி இறுகக் கட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார் ஒரு வெள்ளைச் சட்டை பெரியவர். இறைவன் அவரை ஆட்கொண்டு விடக்கூடாதே என்று நான் கவலைப்பட்டேன்.//

வர வர உங்க கற்பனைக்கும் நகைச்சுவைக்கும் அளவில்லாம போய்க்கிட்டிருக்கு.
இதை நான் தன்மையாகக் கண்டிக்கிறேன்

படிச்சுட்டு வாய் விட்டு சிரிச்சா பக்கத்துல எல்லாரும் (முக்கியமா என் பொண்ணு)என்னைத்தான
ஒரு மாதிரியா பாக்கறாங்க.எழுதின உங்களைப் பத்தியா ஒரு மாதிரி
நினைக்கப் போறாங்க? :)))

RVS said...

@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி ;-))

RVS said...

@கோவை2தில்லி
பஸ்ஸும் பாட்டும் சுகமான இணைகள். கருத்துக்கு நன்றி சகோ. ;-)

RVS said...

@Simulation
பிளேயர் எங்கள் ஊர் சிவன் கோவிலில் மார்கழி மாசம் போடுவார்கள். ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்று வெ.நா. ;-))
கருத்துக்கு நன்றி ;-))

RVS said...

@மாதேவி
ஆமாங்க சிஸ்டர். ;-))

RVS said...

@இளங்கோ
தம்பி ரைட்டு.. ;-))

RVS said...

@raji
ரசித்து படித்ததற்கு நன்றி சகோ. ;-))
பொண்ணுகிட்ட இந்த மாமனைப் பற்றி நல்லவிதமா சொல்லிவையுங்க... நன்றி.. ;-))

ரிஷபன் said...

நிர்ஜனமான கோயில் பிரகாரங்களில் "அம்புலு"ன்னு கூப்பிட்டால் கடைசியில் சுந்தரத் தெலுங்கில் "லு..லு..லு..." என்று பிரகாரம் பேசி அடங்குமே அதைப் போல் பாடலை ரிகார்ட் செய்வார்கள்.

உங்க அப்சர்வேஷனே தனி!
ரொம்பவே ரசிச்சேன்..

RVS said...

@ரிஷபன்

Thank you very much Sir!! ;-)

Ponchandar said...

அப்போ ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்த நேரம். புதன்கிழமை சித்ரஹார் ஒளிபரப்புவார்கள். ஹிந்தி பாட்டுக்கு தொலைக்காட்சியில் சத்தத்தை குறைத்துவிட்டு டேப்பில் அதற்கு ஏற்றவாறு தமிழ் பாட்டை சிங்கொரனைஸ் பண்ணி கேட்போம். TDK கேஸட் மிகவும் பிரபலம். 90 கேஸட்-களுக்கிடையில் 120 கேஸட்டும் அரிதாக கிடைக்கும். அதை மோட்டார் இழுக்காது என்றும் குறை கூறுவர்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

விண்மீன் வார வாழ்த்துக்கள்...

இன்னும் சிறிய பத்திகளாகப் பிரிக்கலாம் என்பது எனது அனுமானம்..

ஆனால் பதிவு செம ஸ்பீட்..

மோகன்ஜி said...
This comment has been removed by the author.
RVS said...

@Ponchandar
கரெக்ட். இன்னும் நிறைய எழுதலாம். நிறுத்திக்கொண்டேன். கருத்துக்கு நன்றி. ;-)

RVS said...

@அறிவன்#11802717200764379909
இந்த பத்தி பிரிப்பது மட்டும் சுட்டுப் போட்டாலும் வர மாட்டேங்குது. சில சமயம் ஒரே பொருளில் எழுதும் போது அந்தக் கருத்து முடியும் வரை பத்தியைப் பிரிக்க முடிவதில்லை. முயற்சி செய்கிறேன்.

பாராட்டுக்கு நன்றி. ;-)

சாந்தி மாரியப்பன் said...

//தொழில் கீர்த்தி பெற்ற ஒரு சிற்பியின் லாவகத்தோடு ஸ்க்ரூ டிரைவர் அல்லது டெஸ்டர் துணையோடு டேப் அறுந்து போகாமல் நோண்டி வெளியே எடுத்தால் நீங்கள் ஒரு டேப் மாஸ்டர்//

இதையெல்லாம் நானும் செஞ்சதுண்டு. அப்படியே தப்பித்தவறி அறுந்துபோனாலும், அதுக்குன்னே அப்பல்லாம் ஒரு பசை கிடைக்கும். தடவி ஒட்டிடறதுதான்..

அப்படியும் வேலைக்கு ஆவலைன்னா, கண்ணை மூடிக்கிட்டு, அறுந்த நுனிகளை மெல்லிய முடிச்சுப்போட்டுட்டு பாடவெச்ச பிரதாபங்களையும் நிகழ்த்தியிருக்கேன் :-))))))))

Kri said...

ippo thaan thoongi ezundhu itha padichen. Pazaiya Ananda Vikatan-na padicha mathiri irrukku! Kalakalls!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails