இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் உழைத்துக் களைத்து அலுவலகத்தில் இருந்து வாரி சுருட்டிக்கொண்டு கிளம்பினால் வீடு போய்ச் சேர பத்து பத்தரை ஆகிவிடும். லாரி சூழ் திருமங்கலத்தில் பதினாறு கால் லாரிகளின் பேரேட் வெள்ளத்தில் நீந்தி, ஈருடல் ஓருடலாக வண்டி ஓட்டிக் கதறடிக்கும் சென்னை நகரின் 'மிட்டா மிராசு' மாநரக பேருந்துகளைச் சமாளித்து, "வாடா..வா... நீயா நானா பார்க்கலாம் ஒரு வீல்" என்று அவர்கள் வண்டிச் சக்கரம் நம் வாகனச் சக்கரத்தில் உரசித் தேய்க்க வரும் அன்பின் ஆட்டோ அன்பர்களுக்கு இடிக்காமல் டிமிக்கி கொடுத்துவிட்டு இல்லாளுடன் இல்லத்தை அடையும் போது கீழ்வானம் விடிந்து விடுகிறது. சில வீடுகளில் வாசல் பெருக்கி கோலம் போட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
எழுதும் கனல் உள்ளத்தில் ஜிகுஜிகுவென்று ஜ்வாலையாய் தகிக்க தலை தூக்காமல்; டீ.வியில் அகாலத்தில் வரும் சீரியல்கள் எதுவும் பார்க்காமல்; அரக்கபரக்க அள்ளிப்போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு தணியாத எழுத்தார்வத்தில் கணினி முன்னால் தஞ்சமடைந்தால் பின்னாடியே விரட்டிக்கொண்டு வந்த வீட்டம்மாவின் "இனிமே.. எழுதப் போறீங்களா?" என்ற ஆச்சர்யம்+மிரட்டல் கலந்த அக்கறையான வினாவிற்கு "இல்ல..இல்ல... ஒரு பத்து நிமிஷம்" என்று கல்யாணமான ஆடவர்க்கே உரித்தான ட்ரேட்மார்க் "ஹி ஹி"யுடன் கெஞ்சித் தமிழ்த் தொண்டாற்ற உட்காரும் போது சுஜாதா, தி.ஜா, லா.ச.ரா, கி.ரா, பாரா போன்ற ஆளுமைகள் அலமாரியில் இருக்கும் புத்தகங்களிலிருந்து தலையை எக்கி ஒரு ஏக்க லுக் விடுவார்கள். ச.ச்சே. இப்படி ஒரே வரியில ஒரு பாரா எழுதுறது அழகா?
சமாதானப்படுத்த யாராவது ஒருவரைத் தூக்கி மடியில் உட்கார்த்திவைத்துக் கொண்டு அரை மணி அமைதியாக தாலாட்டிப் புரட்டினால் அடுத்த நாள் விடிவதற்கு இன்னும் 45 மணித்துளிகளே பாக்கி இருக்கும். என்னைப் போன்ற ஆனா, ஆவன்னா தெரிந்த அரிச்சுவடி அறிஞர்கள் கூட சகட்டுமேனிக்கு தனது கருத்துக்களை அள்ளித் தெளிக்க, பொளந்து கட்ட; ஏதுவாக கூகிள் கம்பெனியாரின் தரமான தயாரிப்பான ப்ளாக் என்ற சாதனத்திற்குள் நுழைந்து அரைமணி மூச்சுவிடாமல் தட்டு தட்டென்று தட்டி எடுத்தால் ஒரு பதிவிலக்கியம் சுடச்சுட ரெடி. எழுதி முடித்ததும் நாடி சமநிலைக்கு வந்து மனசுக்குள் ஒரு நிம்மதி பிறக்கும். ஸ்வாசம் அமைதி பெறும். ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படங்களுக்கு உலாவியில் உலகமெங்கும் துழாவி (இதுதான் கௌரவமான மின்சாரப் பிச்சை) பதிவுக்கு சற்றேரக்குறைய பொருந்தும் படம் ஒன்று கிடைத்துவிட்டால் அந்த அர்த்தராத்திரியில் உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்த ஆனந்தம். மனதில் உற்சாக பூரிப்பு.
முகப்புத்தகத்தில் மனுஷ்யபுத்திரன் "எழுத்தாளன் ஒரு விளையாட்டு வீரனைப் போல ஆரோக்கியம் பேண வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இணையத்தில் நடக்கும் சில கொடுஞ் சமர்களைப் பார்த்தால் எதற்கு என்று புரியும். "சங்கு அறுப்பது எங்கள் குலம்" என்று ஏ.பி நாகராஜனின் திருவிளையாடல் வசனத்திற்கேற்ப வார்த்தைப் போர் புரிகிறார்கள்.
சென்னை நகர சாலைகளின் வழியே ஒரு அரை மணி இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் உருட்டி தேர்ப்பவனி வருவதன் மூலம் ஜிம்மில் ஒரு மணி வியர்க்க விருவிருக்க உடற்பயிற்சி செய்ததன் பலனைப் பெறலாம். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் (பண்டிகைக்காலங்களில் வடபழனி மற்றும் கோயம்பேடு சிக்னல்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூடுதலாய் சேர்க்க) வீதிகளில் கார்க் குடும்பம் நடத்தும் என்போன்ற ஜீவன்களுக்கு வியாஸ பகவான் சொல்லச் சொல்ல கொம்பொடித்து எழுதிய விக்னராஜன் வேண்டாம் அட்லீஸ்ட் ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் (தமிழில்) மென்பொருள் இரவலாகக் கிடைத்தால் நான் பாக்கியவான். பதிவெழுதப் போதுமானது.
நான் எழுதுவதற்கு எனக்கு எந்த எழுத்தாளப் பின்புலமும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு முன்ஜென்ம தொடர்பு எதுவும் உண்டா என்பதற்கு ஆவி அமுதா அல்லது விக்கிரவாண்டி ரவிசந்திரன் உதவுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம். எனக்கு நினைவு தெரிந்து நிறைய கிறுக்கியிருக்கிறேன். புதுப் பெயின்ட் வாசம் மாறாத பளீர் சுவற்றில், புது ஃபவுண்டன் பேனா வாங்கி பிட்டுப் பேப்பரில், புது விடைத்தாள் வாங்கி பரீட்சை பேப்பரில். நேர்கோடும், வளையங்களுமாய் நெளிநெளியாய்த் தெரியுமே ஒழிய கண்ணில் ஒற்றிக்கொள்ளும் லக்ஷ்ணமான எழுத்தாக என்றுமே எழுதியதில்லை. ரிசர்வ் பேங்க் கவர்னர் போல ஐந்து ரூபாய்த் தாளில் கிறுக்கி அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவமும் உண்டு. நான் எழுதும் தேர்வு எண் சுமாராக திருத்துபவர்களுக்கு புரிந்ததால் எக்ஸாமில் பாஸ் செய்தேன் என்று என் மாதாவின் மாதா தனது ஸ்நேகிதாளிடம் சிலாகித்ததுண்டு. இன்றும் பேனா பிடித்து பேப்பரில் எழுதவேண்டும் என்றால் நிச்சயம் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுத்திருக்க மாட்டேன்.
சரி, எதற்காக எழுதுகிறேன். இந்தக் கேள்வி விடாமால் சுற்றிச் சுற்றி என் நெஞ்சை அரிக்கிறதா என்று கேட்கிறீர்களா? இல்லையில்லை. சமூக அக்கறையுள்ள சுற்றமும் நட்பும் பொதுநலன் கருதி நைநையென சதா என்னிடம் குடையும் கேள்வி இது. குட்டியில கழுதை கூட அழகா இருக்கும் என்று அடிக்கடி என்னைப் பார்த்து என் பாட்டி இளமையில் கூறிய கூற்றுக்கு ஏற்ப முதலில் நான் கிறுக்கிய கன்னி எழுத்திற்கு "ஓ.. பிரமாதமாயிருக்கே" என்று பின் விளைவுகள் தெரியாமல் சுற்றியிருந்த நண்பர்கள் விளையாட்டாகச் சொல்லித் தொலைத்துவிட்ட புகழுரையில் என்னை மறந்து எழுதுகிறேன்.
எழுதுவதன் மூலம் 'ஏ'க்கு அப்புறம் 'பி', 'பி'க்கு அப்புறம் 'சி' என்று சீராக வரிசைப்படுத்துதல் இலகுவாகிறது. அடுத்தவரை பிடிங்கித் திங்கும் பேச்சு குறைந்திருக்கிறதா என்று என்னை சுற்றியிருக்கும் பெருமக்களுக்குத் தான் தெரியும். ஏற்கனவே சோம்பேறியாய் கட்டிக்கிடந்த கற்பனைக் குதிரை இன்னும் அசுரத்தனமாய் நான்கடி வளர்ந்து அடங்காமல் துள்ளிக்குதித்து தறிகெட்டு ஓடுகிறது. பிழையின்றி நன்றாகத் தமிழ் எழுதும்/பேசும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இவ்வளவு வருடங்களுக்கு பிறகு தாய்மொழித் தமிழின் அபார வீச்சு புரிகிறது.
அசைந்தாடிவரும் எருமைமாட்டிற்கு ஒதுங்கி இடது பக்கம் டாஸ்மாக் பாரில் முட்ட முட்டக் குடித்துவிட்டு களைத்து திரும்பும் உற்சாகபானப் பிரியனைப் இடிக்காமல் அவனுடைய ஸ்ட்ரிப் டீஸ் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கும் போதோ, கோயம்பேடு பேருந்துநிலையம் தாண்டி மூத்திரச் சித்திரச் சுவர் அருகே அரையிருட்டில் 'கஸ்டமருடன்' ஒதுங்கி பேரம் பேசும் சோரம் போனவளைப் பார்க்கும்போதோ, ஆட்டோரிக்ஷாவில் டிரைவர் சீட்டில் தொங்கிக்கொண்டு அப்பாவின் டாக்டர் கனவைச் சுமந்துகொண்டு வாரயிறுதி விடுமுறையின் கனவைக் கண்களில் ஏந்திக்கொண்டு கூட்டமாக பள்ளி செல்லும் டிராயர் சிறார்களைக் கண்ணுரும்போதோ, பதின்மவயதின் எல்லையில் இருக்கும் பெண்பிள்ளைகள் பருவ எல்லைத் தாண்டி உல்லாச இளைஞனுடன் 'பில்லியன் பல்லி'யாக பறக்கும்போதோ, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன பொண்டாட்டி ஹெல்மெட்டுக்குள் அடைபட்டிருக்கும் காதுக்கு கேட்கும்படி பின்னால் இருந்து சமாதானமாக ஓதியும் சத்தமாக ஏசியும் ஏற்ற இறக்கங்களுடன் கணவனுடன் குடும்பப் போர் நிகழ்த்தும் போதும் நிறையக் கதைகள் எழுதக் களன் கிடைக்கும். "பாம்..." என்று முதுகில் ஹாரன் அடித்து கனவைக் கலைத்து வண்டியை விரட்டுவார்கள். வீட்டிற்கு வருமுன் கரு அல்பாயுசில் கலைந்துவிடும்.
கடந்த சில பாராக்களில் பார்த்தது உழைக்கும் தின எழுத்தார்வக் காட்சிகள்.
வார இறுதியிலோ அல்லது விடுமுறை தினங்களில் இரண்டு பதிவெழுதலாம் என்று ஆர்வ மிகுதியில் உட்கார்ந்தால் பாசம் இருகையையும் இருக்கக் கட்டிப் போட்டுவிடுகிறது. "அப்பா! பீச்சுக்கு போலாம்ப்பா..." என்று ஒரு வாரம் படித்துக் களைத்த குழந்தைகள் கேட்கும் போது கிளம்பவில்லை என்றால் "நீ எல்லாம் ஒரு அப்பனா?" என்று அவர்கள் ஏசக் கூடும் என்றஞ்சி ஜீன்ஸ் மாட்டிக் கொண்டு ஓடவேண்டியிருக்கிறது. சக எழுத்தாள சம்சாரிகளும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கக் கூடும். எண்ணத்தின் ஊற்றுக்கண் பிளந்து விஷயங்கள் மண்டையிலிருந்து வார்த்தை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் போது "சுண்டல் வேணுமா சார்?" என்பார் தே.மா.பட்டாணி சுண்டலார். மென்டலாகிப் போனேன் நான்!
பீச்சாங்கரையில் குல்ஃபி ஐஸ் வாங்கிக் கொடுத்து அரை மணி செலவிட்டு "வீட்டுக்கு திரும்ப நாம் அவசரப்படுகிறோம்/ எழுதுவதற்கு கை அரிக்கிறது" போன்ற முகாந்திரங்கள் தெரியாமல் நாசூக்காக அவர்களை தாஜா செய்து வீடு திரும்பும் போது இரவு மணி ஒன்பது. "நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும் சீக்கிரம் சாப்ட்டு படு" என்று செல்வங்களை படுக்கையறைக்கு விரட்டி, "அப்பாடா.."ன்னு கணினி முன்னால் உட்கார்ந்தால் "நாளைக்கு ஆபீஸ் உண்டு. மீட்டிங் இருக்கு. நா சீக்கிரம் போகணும். சீக்கிரம் வந்து படுக்கற வழியைப் பாருங்க" என்று கண்களையுருட்டி எஜமானியம்மாவின் ஆர்டர் பறந்து வரும்.
இப்போது மணி ராத்திரி பதினொன்னரை. இன்னொருமுறை தூங்குவதற்கு அழைப்பு வருவதற்குள் படுக்கையில் போய் சாய்ந்துவிடுகிறேன். நாளைக்கு ஆபிஸ் உண்டு!
பின் குறிப்பு: இது தமிழ்மணத்திற்காக என் புகழ் மணம் பரப்ப எழுதப்பட்ட அனுபவக் கட்டுரை. பதிவெழுதும் சம்சார பதிவர்களின் தினசரி நாட்குறிப்பாகக் கூட இதை பாவிக்கலாம். தவறில்லை.
பட உதவி: http://www.flickr.com/photos/tomthrop/
படக் கருத்து: படிப்படியாக எழுத்தாளனாக முன்னேறவேண்டும் என்ற நோக்கில் போடப்பட்ட படம் இது.
-
78 comments:
ரைட்டு!
தமிழ் மண நட்சத்திரத்திற்கு நட்சத்திர வாழ்த்துகள். நீங்கள் சொல்லுவது சரிதான். பயணிக்கும் பொழுது கிடைக்கும் கரு பிறகு கலைந்துவிடுகிறது. இப்பொழுது கதைகளை கவிதையாக்கி பஸ்ஸில் ஓட விட்டுவிடுகிறேன்
அருமை!
நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
தமிழ்மணம் பாடாய்ப் படுத்துது. ஒரு நல்ல வாக்கு சொல்ல விட்டாலும்..........க்கும்......
தமிழ் மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் ஆர் வி எஸ்.
வாழ்த்துக்கள். சம்சார சாஹரத்தின் நடுவில் கணினியில் அமர்வதோ படிப்பதோ பதிவு எழுதுவதோ பதிவு எழுதுவதோ எவ்வளவு கஷ்டங்கள் என்று வெகு அருமையாகவே சொல்லிவிட்டீர்கள்.
நமது ரசனை, நம்முடன் கூட வீட்டில் உள்ளவர்களுக்கு இருப்பதில்லை. அது தான் இதில் உள்ள கஷ்டம்.
ஆனால் ஒன்று அவர்களுக்கும் இதுபோல ரசனை ஏற்பட்டால், அது இதைவிட கஷ்டமாகிவிடும்.
சமையல் சாப்பாடு குடும்ப நிர்வாகம் எல்லாமே குட்டிச்சுவராகி விடும். ஏற்கனவே இந்த டி.வி. சீரியல்கள் வேறு அவர்களைப்பாடாய் படுத்தி பம்பரமாய் ஆட்டி வருகிறது.
நல்ல சுவையான பதிவுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ஆஹா!! ஒரு வாரம் தமிழ் மணத்துல கச்சேரியா!!! நல்ல நாள்லயே ஹரித்ரா நதி கரை புரண்டு ஓடும் இப்ப கேக்கவா வேணும்! பதிவரின் நாட்குறிப்பை குறிப்பால் உணர்த்திய விதம் அருமை!ஆவலுடன் நட்சத்திர(தின்) பதிவுகளுக்கு ரசிகமணி சகிதமாய் காத்திருக்கிறேன்.முத்து முத்தான கமண்டிர்கு அவர் பொறுப்பு! 'தத்துபித்து' கமண்டிர்கு அடியேன் பொறுப்பு!..:)
@ வைகோ சார் - வீட்டில் ரசிக்காட்டி என்ன சார், அதான் உலகத்தின் எதோ மூலையில் இருப்பவர்கள் எல்லாம் (ர)சிரிக்கறாளே!! அந்த திருப்தி போதும்!
@ விக்கியுலகம்
நன்றிங்க.. ;-))
@எல்.கே
நீங்க அசத்துங்க... பஸ், காரு, ஏரோப்ப்லேன்னு... ;-)))
@துளசி கோபால்
நன்றிங்க மேடம்! ;-))
@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்! ;-))
@வை.கோபாலகிருஷ்ணன்
சார்! ஒரு சின்னத் திருத்தம்.. வீட்ல அவங்களுக்கும் பிடிக்கும்.. ஆனா கொட்ட கொட்ட முழுச்சிகிட்டு எழுதறது பிடிக்கலை.. நம்ம பொழப்பு அப்படியிருக்கு.. ராத்திரிதான் எழுத முடியுது.. என்ன செய்யறது.. ;-)))
@தக்குடு
//@ வைகோ சார் - வீட்டில் ரசிக்காட்டி என்ன சார், அதான் உலகத்தின் எதோ மூலையில் இருப்பவர்கள் எல்லாம் (ர)சிரிக்கறாளே!! அந்த திருப்தி போதும்!//
ஏம்ப்பா நீ வேற... மொதலுக்கே மோசம் வந்துடும் போலருக்கே... ரொம்ப நாழி கண் முழிக்க வேண்டாம்ன்னு நல்லது சொல்றாங்கப்பா... (ரொம்ப பயமா இருக்கு) ;-)))))))
வாழ்த்துக்கு நன்றி. ;-))
தமிழ் மண நட்சத்திரத்திற்கு நட்சத்திர வாழ்த்துகள். RVS!
சாதனைப் படிகள் உயரட்டும். வாழ்த்துக்கள்.
ஆர்.வி.எஸ் நட்சத்திரமாய் ஜொலிக்கிறீர்கள் தமிழ்மண முகப்பில்.மனம் நிறைந்த வாழ்த்துகள்.எழுத்தாளன் ஒரு விளையாட்டு வீரன்போல.சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது !
ஆர்விஎஸ்!
இன்னும் இந்தத் தமிழ் மண முகப்பைச் சென்று பார்க்கவில்லை. எனக்குப் புரியவும் இல்லை. எனிவே எல்லாரும் கைதட்றதுல இருந்து வசனம் புரியாத காட்சிகள்ல தட்ற மாதிரி நானும் தட்டிடறேன். வாழ்த்துக்கள். இன்னிக்கிப் பேசும்போது அது என்னனு சொல்லும்.
பதிவிலக்கியம் எழுதத் துடிப்பவனின் தாகத்தை விலாவாரியாய்ச் சொன்னது.கேடுகெட்ட இந்த சமூகத்தில் எழுதுபவனின் அவஸ்தை யாருக்கும் தெரியாது. அவனுக்கு அங்கீகாரமும் கிடையாது.பாரதியானாலும் சரி-புதுமைப்பித்தன் ஆனாலும் சரி-கு.ப.ரா. ஆனாலும் சரி.
போகட்டும். சென்னை நெரிசலில் வாகனம் ஓட்டுவது போன்ற காட்சி அமைப்பைக் கொஞ்ச நாளைக்கு நீர் எழுதக்கூடாது என்கிற தடையுத்தரவு இந்த இடுகைக்குப் பின் ஒருமாத காலத்துக்கு அமலில் இருக்கும்.கவனம்.
சென்ற வாரம் வலைச்சரம்.... இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரம்.....
கலக்கறீங்க மைனரே....
ஒரு வலைப்பதிவாளரின் தினம் தினம் போராட்டத்தினை அழகாய் வெளிப்படுத்தியது உங்கள் பகிர்வு.....
ஒரு திடுக்கிடும் கேள்வியை உங்களிடம் கேட்கட்டுமா?
நீங்கள் எழுதுவது இலக்கியமா?
@பெசொவி
நட்சத்திர நன்றி!! ;-))
@மாதேவி
நன்றி மாதேவி! ;-))
@ஹேமா
ரொம்ப நாளைக்கப்புறம் இங்க வரீங்க! ரொம்ப நன்றி ஹேமா! ;-))
@சுந்தர்ஜி
அன்றாடம் நான் சந்திக்கும் அந்தக் கொடுமையை எப்படி நான் எழுதாமல் இருப்பது ஜி! உங்கள் ஊரில் மொத்தமே நூறு வண்டிகள் தான் ஓடுகிறது. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்! ;-))))
(பாயின்ட் வெல் டேக்கன். ;-))) )))
நன்றி ஜி! ;-)
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல.. ;-))
@bogan
எந்த கேள்விக்கும் நான் திடுக்கிட மாட்டேன். வெட்டி அரட்டையடித்த வாய் பயப்படாது.
இது இலக்கியமா என்று கேட்டால், நான் ஆம் என்று தான் சொல்வேன். பதறாதீர்கள்.
இது 'குழந்தை இலக்கியம்'. என் போன்ற தமிழ் அரைகுறையாய்த் தெரிந்தவர்கள் எழுதுவது குழந்தை இலக்கியம் என்றழைக்கப்படும். காஃப்கா, செகாவ், காம்யு, கார்சியோ போன்றோர் எழுதுவது வெளிநாட்டு இலக்கியம். தி.ஜா, லா.ச.ரா, புதுமைப் பித்தன், ஜி. நாகராஜன், போன்றோர் எழுதியது உள்நாட்டு இலக்கியம்.
வேண்டுமென்றால் 'அரைகுறை குழந்தை இலக்கியம்' என்று கூட சொல்லலாம்.
உங்களைப் போன்றோர் இப்படி ஒரு கேள்வி கேட்டு கமென்ட் போடுவது என் பாக்கியம். நன்றி. ;-)))
வாழ்த்துக்கள்.
இதுவரை எழுதியதில் இதற்கு உச்சாணிக்கிளை. பிரமாதம்.
@அப்பாதுரை
வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி. ;-))) தன்யனானேன்! ;-)) நன்றி.
Congrats for STAR week.
@VISA
Thank You!! ;-))
பகிர்வு அருமை. மின்னும் நட்சத்திரத்திற்குப் பாராட்டுக்கள்.
அருமையா எழுதி இருக்கீங்க.
//லாரி சூழ் திருமங்கலத்தில்,ஏதுவாக கூகிள் கம்பெனியாரின் தரமான தயாரிப்பான ப்ளாக் என்ற சாதனத்திற்குள்,சொல்ல கொம்பொடித்து எழுதிய விக்னராஜன் வேண்டாம் அட்லீஸ்ட் ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் (தமிழில்) மென்பொருள் இரவலாகக் கிடைத்தால், முன்ஜென்ம தொடர்பு எதுவும் உண்டா என்பதற்கு ஆவி அமுதா..
எண்ணத்தின் ஊற்றுக்கண் பிளந்து விஷயங்கள் மண்டையிலிருந்து வார்த்தை வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் போது "சுண்டல் வேணுமா சார்?" என்பார் தே.மா.பட்டாணி சுண்டலார் //
சிரிச்சுட்டே இருக்கேன்.. :)
தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.
தமிழ் மண நட்சத்திரத்திற்கு நட்சத்திர வாழ்த்துகள்.
மொதல்ல நட்சத்திர வாழ்த்துகள்..
தமிழுக்கு கடமையாற்ற ஒரு படைப்பாளி எப்படியெல்லாம் சிரமப்படவேண்டியிருக்குன்னு இதைவிட விளக்கமா யாராலயும் சொல்லமுடியாது :-)
இன்றுதான் தங்கள் வலைச்சர பதிவுகள்
அனைத்தையும் படிக்க முடிந்தது
தாங்கள் எழுதலைவிட படிப்பதிலும்
பதிவுகள் எழுதுதலைவிட
பதிவுகளை தொடர்வதிலும் காட்டும் சிரத்தை
பிரமிக்க வைக்கிறது
நீங்கள் எழுவது இலக்கியமா எனக் கேட்ட
பதிவுலக நண்பருக்கு தாங்கள் சொல்லியுள்ள பதில் அருமை
பதிவுலகில் தங்களைத்தான் நான் முன்னோடியாகக்
கொண்டுள்ளேன்.நீங்களே என் பதிவினை
அறிமுகம் செய்தது பெருமையளிப்பதாக உள்ளது.நன்றி
சுந்தர்ஜி போலவே நானும் புரியாமலே பாராட்டுகிறேன்.
"ஒரு வித்து உள்ளே விழுந்து விட்டால் தேள் கொட்டிக் கொண்டேயிருக்கும், ஒரு எழுத்தின் விதைக்கும், அதன் வளர்ச்சிக்கும் விதமோ வரையோ வகுக்க முடியவில்லை. எழுத்து இரக்கமற்ற எசமானி.” உங்கள் பதிவும் அனுபவமும் லா.ச.ராவின் முன்னுரையை நினைவு படுத்துகிறது. 25 வருடமாய் இந்த தேள் கொட்டலை அனுபவித்தவள் நான்.
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்! ;-)
@இளங்கோ
பாராட்டுக்கு நன்றி இளங்கோ. ஒரு வாரமும் எழுதணுமாம். என்ன எழுதறதுன்னு அப்பப்ப முடிவு செய்யறேன். உங்களை நெனச்சாத்தான் பாவமா இருக்கு.. ;-))
@ராஜ நடராஜன்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க... ;-))
@ஷர்புதீன்
நன்றிங்க... ஸ்டார் நன்றி. ;-))
@அமைதிச்சாரல்
தமிழ்த்தொண்டு.. லொள்ளு? ;-))))
வாழ்த்துக்கு நன்றி. ;-)
@Ramani
ரொம்ப நன்றி சார்!
நான் மிகச் சிறுவன். எழுதிப் பழகுகிறேன்.
கேள்வி கேட்ட போகன் சாரை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். கயிற்றின் மேல் நடப்பது போன்ற ஒரு மேட்டரை எடுத்துக்கொண்டு அந்தரத்தில் அந்தக் கயிற்றில் ஆனந்த நடனம் ஆடுகிறார். அற்புதமாக எழுதுபவர். நிறைய பெரும் எழுத்தாளர்களின் புஸ்தகங்களை படிக்கிறார். நம்மது ஒன்னும் அவ்வளவு சோபிக்கலையே என்று ஆதங்கத்தில் கேட்கிறார். நன்றாக எழுதுவதற்கு முயற்சி செய்வோம்.
மீண்டும் நன்றி. ;-))
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
மேடம்! தமிழ்மணம் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு ப்ளாக் திரட்டி! அதில் நட்சத்திர பதிவராக ஒரு வாரம் என்னை அவர்கள் வலைப்பூவின் நெற்றியில் வைத்திருப்பார்கள். அங்கே வருவோர் போவோர் எல்லோரும் நம்மை பார்ப்பார்கள். நமக்கு ஒரு இலவச விளம்பரம். அவ்வளவுதான்.
உங்களது கருத்து என்னை சீர்த்தி மிகுந்தவனாக்கட்டும். (சீர்த்தி=கீர்த்தி கவிக்கோ ஞானச்செல்வன் ஒரு புஸ்தகத்தில் கூறுகிறார்) ;-)))
மிக்க நன்றி. ;-))
தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துகள்.
போகனின் கேள்வி திடுக்கிட வைத்தது. திடுக்கிடும் பதில், அல்லது சுவாரசியமான பதிலையாவது எதிர்பார்த்தேன்.. :)
க்க்கும்.. போகனை நீங்கதான் மெச்சிக்கணும்.. என்ன எழுதுறாரு பொல்லாத எழுத்து?
முகப்பில் பார்த்தேன்.தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
எழுத்தார்வ ஆண் பதிவர் படும் பாடுகள் போல பெண் பதிவர்கள் பாடு இரு மடங்கு
திண்டாட்டமே.
எழுத்தில் இலக்கியம் என்பது காலம் தீர்மானிப்பது. எழுதுபவர்கள் அல்ல. குழந்தை இலக்கியம் பதில் ரசிக்க வைத்தது. (ஆமாம்...இலக்கியம் என்றால் என்ன? ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப் படுத்திப் பாடுங்கள்...சே...சொல்லுங்கள்...)
அடுத்த வார கமிட் மென்ட் என்றவுடனே ஊகித்தேன் ...சஸ்பென்ஸ் இருக்கட்டும் என சொல்லவில்லை
வலைச்சரம் அடுத்து தமிழ் மண நட்சத்திரம் - வாழ்த்துகள் ... நட்சித்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்க தொடரட்டும் இவ்வாரமும் இனிதாக ....
(வலையை இரு நாட்களாக நெருங்க முடியவில்லை .... சரி செய்து விட்டு பதிவிலக்கிய்துக்கு வருகிறேன் )
@ஓலை
ஓலையிடமிருந்து வந்த வாழ்த்தோலைக்கு நன்றி. ;-))
@அப்பாதுரை
இந்தக் கேள்வி எப்படியாவது என்றாவது எனக்கு வரும் என்பதால் நான் திடுக்கிடவில்லை. ஆகையால் திடுக்கிடும் பதில் தரவில்லை. போகனைக் காணோமே! ;-))
//அப்பாதுரை said...
க்க்கும்.. போகனை நீங்கதான் மெச்சிக்கணும்.. என்ன எழுதுறாரு பொல்லாத எழுத்து?//
ஏன் சார்! ஏன் சார்!.... ;-)))
@raji
வாழ்த்துக்கு நன்றி!
அப்படியா! நீங்களும் ஒரு இலக்கியம் பதியுங்களேன்! ;-))
@ஸ்ரீராம்.
இந்த நட்சத்திர வாரத்திற்குள் ஒரு பதிவு... நானறிந்த இலக்கியம் பற்றி... (ரொம்ப பெருசா எதிர்பார்த்துடாதீங்க... ) ;-))
கருத்துக்கு நன்றி. ;-))
@பத்மநாபன்
ஆள் வரலைன்ன உடனேயே புரிஞ்சுது... ஜி! உங்கள் கமெண்ட்டுக்கு காத்திருக்கிறேன்! ;-))
//பதிவெழுதும் சம்சார பதிவர்களின் தினசரி நாட்குறிப்பாகக் கூட இதை பாவிக்கலாம். //
உண்மைதான்!
வலைச்சரம் மற்றும் தமிழ்மணம் இரண்டிற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.
சிறிது காலம் வலை உலகை வீட்டு பூவுலகிற்கு சென்றிருந்தேன். இன்னும் சிறிது காலம் வலை உலகில்தான் வாசம் செய்ய உள்ளேன். அடிக்கடி (ச/சி)ந்திப்போம்.
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
எழுத்தில் இலக்கியம் காலம் தீர்மானிப்பதா? இலக்கியம் என்றால் என்னவென்று ஆளாளுக்குக் கருத்திருந்தாலும் காலப் பரிமாணம் பொருந்துமா தெரியவில்லையே ஸ்ரீராம்?
தமிழ்மணம் தளம் லேசில் நினைவேற மாட்டேங்குதே?
'சிறிது காலம் உலகை விட்டு பூவலகிற்கு சென்றிருந்தேன்'
ஆ! அமைதி அப்பா! :)
//"காலப் பரிமாணம் பொருந்துமா தெரியவில்லையே ஸ்ரீராம்"//
இதோ நான் ஒரு இலக்கியம் எழுதப் போகிறேன் என்று யாராவது சொல்ல முடியுமா? வாசகர்களால் படிக்கப் பட்டு காலத்துக்கும் நின்றபின் பின்னாளில் அது காலத்தை வென்று நின்றால் இலக்கியமாக அறியப் படலாம்.
@போகன்
கோச்சுகாதீங்க. இலக்கியம்னா என்ன ?? படிச்சா புரியாம இருக்கனுமா ??? அதுக்குப் பேருதான் இலக்கியமா ??
எங்களை (எனக்குத் தெரிஞ்ச சில
பேரையும் சேர்த்துக்கறேன் ) பொறுத்தவரை படிச்ச புரியணும் ஆபாசம் கொச்சைப் படுத்துதல் இருக்ககூடாது. அதுதான் இலக்கியம்.
மறுபடியும் கோச்சுகாதீங்க. எனக்குத் தெரிஞ்சத சொன்னேன் அம்புட்டுதான்
அடப்பாவமே. பதிவுகள் மட்டும்தான் இலக்கியம் இல்லைன்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்ப நானெல்லாம் இலக்கியவாதியா? வாழ்த்துகள். நல்ல ஆரம்பம்.
இளா
@அமைதி அப்பா
நன்றி அப்பா!
வலையுலகு பூவுலகுன்னு கமேன்ட்டுலையே கலக்குறீங்களே தல! ;-))
@கோவை2தில்லி
மிக்க நன்றி சகோ!
@அப்பாதுரை
தல! பத்த வச்சும் இன்னும் பாகனைக் காணோமே! ;-))
@ஸ்ரீராம்.
நல்ல கருத்து ஸ்ரீராம்! ;-))
@இளா
வாங்க இளா! நாமெல்லாரும் இலக்கியவாதிகள் தான். சந்தேகமேயில்லை. ;-)) (இந்த இலக்கியம் பட்ற பாடு.... அடாடா......)
அடிக்கடி வாங்க சார்! ;-)))
ஸ்ரீராம் நீங்க சொல்லுறது கொஞ்சம் புரியுது - காலத்தை வென்று நின்றால் அது இலக்கியம்னு இலக்கியத்தை define பண்றீங்களா? அப்ப இலக்கியம் படிக்கணும்னா ஆசிரியர் எழுதி பத்து பதினஞ்சு அம்பது வருசம் கழிச்சுல்ல படிக்கணும்னு பொருளாகுது? புதுமைப்பித்தன் எழுதின சில கதைகள் எழுதி முடிச்சதுமே இலக்கியமாச்சுனு தோணுது. ஒரு வேளை காலம் கடந்தும் படிக்க முடிந்தால் அது இலக்கியம்னு சொல்றீங்களா? ஜெயகாந்தனோட சில கதைகளை இப்ப படிச்சா இருபது வருசம் முன்னாடி படிச்ச அளவுக்கு ஈர்க்கமாட்டேங்குது. காலப் பரிமாணம் இலக்கிய ரசனையில் சேர்க்குறது இன்னும் என்னவோ பொருத்தமா தோணலியே?
//புதுமைப்பித்தன் எழுதின சில கதைகள் எழுதி முடிச்சதுமே இலக்கியமாச்சுனு தோணுது// சரியா சொன்னிங்க.. ஸ்ரீராம் சொல்ல வந்ததும் இதைத்தான் நினைக்கிறேன்...சமகாலத்திலேயே போற்றப்பட்டு.. அந்த உந்துவிசை வற்றாமல் தொடர்வது இலக்கியம் .
அவ்வளவு சுலபமா விட்டுற முடியுமா பத்மநாபன்? அதுனா இது, இதுனா அதுனு சொல்லி இழுத்தடிக்க வேணாமா?
//அதுனா இது, இதுனா அதுனு // இலக்கியம்.. விட்ருங்க சாமி என்னைன்னு சொல்றவரைக்கும் விடக்கூடாதுங்கிறிங்க...
வேணா இப்படி வச்சிக்கலாம்...இலக்கியான்னு ஒரு பொண்ணு எழுதினா அது இலக்கியம்....ஓகேயா...
வாசகர்கள் மனதில் நிற்பதைப் பொறுத்தது என்று சொல்லலாமா...சில சமயம் உங்களுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காமல் போகலாம். எனக்குப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்...பெரும்பான்மைக் கருத்துன்னு வச்சிக்கலாமா...
சரி...புதுமைப் பித்தனை விடுங்க...தி ஜா எல்லாம் விடுங்க...சுஜாதா எழுத்து இலக்கியமா இல்லையா? அவர் எழுதின லாண்டரி லிஸ்ட் கூட பதிப்பிக்கப் பட்டு, ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றது...!
இலக்கியம் என்பதற்கு என்ன defnition சொல்லலாம், அப்பாதுரை, பத்மநாபன்..
காலம் கடந்து நின்று ரசனை மிக்கவர்களின் பேராதவரவைப் பெற்றால் அது இலக்கியம். இப்படி ஒரு விளக்கம் சொன்னால்... ரசனையின் அளவுகோல் என்ன? என்ற கேள்வி எழுந்து நிற்கும்.
சினிமாக்களில் ஏ , பி, சி சென்டர்கள் போல... ஏ இலக்கியம், பி இலக்கியம், சி இலக்கியம் என்று சொல்லலாமா?
அப்பாஜி! விளக்கம் ப்ளீஸ்... ;-)))
ஸ்ரீராம்... சுஜாதா எழுதியது ஒண்ணுமே இல்லைன்னு சில வலைகளில் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்... என்ன சொல்வது என்று தெரியவில்லை?
'ஆ' என்ற Auditory Hallucination நாவல் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கு. இப்போதைய தலைமுறை படித்தால் அவர்களுக்கும் எப்போதும் நினைவில் இருக்கும்.. அப்படியென்றால் அது இலக்கியம் தானே!
அப்பாஜியின் "லிக" என்றைக்கும் எனக்கு மறக்காது... அப்படியென்றால் அதுவும் இலக்கியம் தானே!
என்ன சொல்றீங்க... ;-))
ஸ்ரீ ... இலக்கியத்தை விடுவதில்லைங்கற இலக்கோடு இருக்கிங்க,,, ம் ,,, பாயிண்டை பிடிச்சிட்டேன்.. ஒரு இலக்கோடு எழுதுவது எல்லாமே இலக்கியம்...
எழுதினா மட்டும் போதுமா.. அதே இலக்கோடு படிக்கப்பட்டால் தானே இலக்கியம் பத்துஜி! ;-))
அன்பு ஆர்.வீ.எஸ்! சேச்சே! ரொம்ப லேட்டா வந்துட்டேன்.
முதல்ல நட்சத்திர வாழ்த்தைப் புடிங்க.
நீங்க எழுதுறது இலக்கியமான்னு இங்க டோலோத்சவம் நடக்கிறதை மிஸ் பண்ணிட்டேன்.
அண்ணாச்சிங்கிற உரிமையில சொல்றேன்.. உம்ம எழுத்து இலக்கியம் அல்ல.. அல்லவே அல்ல!
அது.. 'கலக்கி'யம் .. கலக்குறீங்க தானே..அதனால.
இலக்கியம் எனில் கம்பனும், இளங்கோவும் எழுதின வரை மட்டுமே என்பார் உண்டு.
பாரதிவரை பாதை இலக்கியத்துக்கு உண்டு என்றொரு கட்சி..
நேற்றைய எழுத்தாளர்கள்... மற்றும் இன்றைய எழுத்தாளர்களின் படைப்புகள் எல்லாமே இலக்கியமா அல்லவா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு வாசகனின் இலக்கியம் இன்னொரு வாசகனுக்கு குப்பை.
நல்ல இலக்கியம் கூட கடவுள் போலவோ என்னவோ? அதை இன்னமும் யாரும் பார்க்க வில்லையோ? பல கடவுளர் போல பலவும் அவரவர் நம்பிக்கை தொட்டு இலக்கியமாகின்றனவா?
இலக்கியம் என்ற ஒன்றே இல்லை எனும் வாதம் கூட உண்டல்லவா?
ஏதோ.. மனசை தைக்கும் படைப்பு இலக்கியம்.. அதில் நேற்றய பிரமிப்பு இன்று படிக்கும்போது எழாமல் போகலாம்.. நம் ரசனைகள் மாறியும் வளர்ந்தும் வருவதால் இது நிகழ்கிறது.
நேற்று ரசித்ததை இன்றும் ரசனையின் நினைவில் மீண்டும் படிக்க அமரும் போது, நேற்றைய மனநிலைக்கு பின்னோக்கி சென்றால் மீண்டும் ரசிக்க இயலும்..
அறிவும் அனுபவமும் கூட இலக்கிய நுகர்ச்சிக்கு தடையாகிறதா அப்பாதுரை? வாங்க! ஒரு கை போடுங்க!
@மோகன்ஜி
அண்ணா.. ரெண்டு நாள் முனாடியே ரெண்டு கையையும் மேலே தூக்கி சரண் அடைஞ்சுட்டேன்.. நம்மளது குழப்பியம்... கலக்கியம் கூட கிடையாது... விளக்கம் அருமை.. நன்றி.. ;-))
//சுஜாதா எழுதியது ஒண்ணுமே இல்லைன்னு சில வலைகளில் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்... என்ன சொல்வது என்று தெரியவில்லை?//
இதை சொல்லும் அறிவு ஜீவிகள் அவரை படித்து நாலு எழுத்து எழுத பழகியவர்கள் தான்.. அவ்ர்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம்... உளைத்து கொண்டிருக்கட்டும் என விட்டு விட வேண்டியது தான்....
அடுத்தடுத்த வாரத்தில் வலை சரம் & தமிழ் மணம் இரண்டிலும் வேறு யாரும் எழுதின மாதிரி தெரியலை. அந்த வகையில் ரிக்கார்ட் பிரேக். வாழ்த்துக்கள் RVS
Post a Comment