என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகள் ஆபிசில் உழைத்துக் கொட்டிவிட்டு அக்கடான்னு கிளம்பி வீட்டிற்கு சென்று ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு கட்டையை நீட்டலாம் என்ற எண்ணத்தில் மின்னல், இடி மற்றும் மழை மூன்றும் நேற்றிரவு இறங்கியது. மாலை ஆறு மணியில் இருந்தே குழாயடி சண்டை போல கடமுடாவென்று வானத்தின் ஒரு மூலையில் இருந்து கருவிக்கொண்டிருந்தன.
ஆங்காங்கே கலைந்து கிடந்த தொண்டர் மேகங்களை தலைவர் மேகம் கை பிடித்து ஒரு கூட்டமாக அழைத்து வந்தது. திரண்டு வந்த மழை மேகங்கள் கொஞ்சநஞ்சம் தெரிந்த சூரியனை மிரட்டி உள்ளே போகச் சொல்லிவிட்டு பூமியோடு ஒரு காட்டு யுத்தம் நடத்தியது. வானம் பார்க்க நின்ற அவ்வளவு இடங்களும் அழுக்கு தீர ஆசையாய்க் குளித்தன. ஆனாலும் ஒரு மணிநேரக் குளியல் கொஞ்சம் அதிகம் தான்.
சேப்பாயி குளித்துவிட்டு மங்களகரமாக நின்றது. மழைக்கு நனையாமல் ஓடிவந்து ஏறிக்கொண்டேன். முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் மழை அலம்பி துடைத்த ரோடில் வண்டி வழுக்கிக் கொண்டு ஓடியது. ஆங்காங்கே யானைக்கு பள்ளம் பறித்தது போல பொறி இருந்த ரோடில் கழுகுக் கண்ணாக பார்த்து குறி தவறாமல் ஓட்டினேன்.
CMBT என்ற தரைவழி பன்னாட்டு முனையம் ஒன்று கோயம்பேடு என்ற திவ்ய க்ஷேத்ரத்தில் இருக்கிறது. அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தலத்தைக் கடந்து தான் நான் என் உறைவிடம் செல்ல வேண்டும். ஆங்கே நட்டு வைத்திருக்கும் சிக்னல் கம்பங்களை ஏதோ துணி காயப் போடும் கொடிகம்புக்கு சமமாக மதித்து பேருந்து ஓட்டுனர்கள் கட் அடித்து ஓட்டுவார்கள். சிக்னலின் சிவப்பும், மஞ்சளும், பச்சையும் திருவிழாவுக்கு கோயிலுக்கு கட்டிய சீரியல் பல்புகள். சிக்னல் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் போலீசு "இவர்கள் இவ்ளோ சாமர்த்தியசாலிகளா?" என்ற வியப்புடன் மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். நேற்றைய ராட்சஷ மழை நேரத்தில் அந்தக் கோயம்பேடு பேருந்து நிலையம் குருஷேத்ரம் போல காட்சியளித்தது.
கோயம்பேடு முனையத்தில் இருந்து வெளியூர் செல்லவும், உள்ளூர் பஸ்கள் முனையத்திற்கு உள்ளே செல்லவும் ஏகநேரத்தில் எத்தனித்தன. எப்போதுமே கோயம்பேடு யார் அரசாட்சியில் வருகிறது என்று உள்ளூர் வெளியூர் டிரைவர்கள் மத்தியில் ஒரு மறைமுக யுத்தம் நடந்துகொண்டிருக்கும். நேற்று மழையை சாக்காக வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தனது ரதங்களை முகத்திற்கு முகம் நிறுத்தி மழை சாட்சியாக அடித்துக் கொண்டார்கள்.
ஒரு நானூறு மீட்டர் தூரத்தை கேவலம் இரண்டே மணி நேரத்தில் கடந்தேன். இதுபோல சுற்றமும் சூழமும் கட்டியணைத்துக் கொண்டு நடுவீதியில் நிற்கும் நேரத்தில் அவர்களின் அன்புக்கு எல்லையே இருக்காது. ஆட்டோ அன்பர்கள் தன் மூக்கை நுழைத்து பத்து பேரை ஏற்றி தொப்பை பெருத்த தனது வாகனத்தை கிடைத்த கேப்பில் அவசரமாக திணிப்பார்கள். இரண்டு காலையும் பப்பரக்கா என்று பரப்பிக்கொண்டு, பத்து வருஷமாக சென்னையில் வண்டி ஓட்டினாலும் பத்து நாளைக்கு முன்னால் தான் டூ வீலர் பழகியது போல, கார் போகவேண்டிய இடைவெளியில் இருசக்கர வாகனம் ஓட்டும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் கோஷ்டி அடிக்கும் லூட்டி அலாதியானது. காலை மடக்கி வண்டிக்குள் வைக்கும் பொது மறுபடி ப்ரேக் அடித்து ஒரு ஆட்டம் ஆடி காலைப் பரப்பிக்கொள்வார்கள். லைசென்ஸ் கொடுத்த ஆர்.டி.வோவை பசித்த புலி தின்னட்டும். வாத்தியாருக்கு நன்றி.
இன்னும் சிலர் கிடைத்த சந்தில் சிந்து பாடும் இளஞ்சிட்டுக்கள். ரோடு ரோமியோக்கள் ஒரு கழைக் கூத்தாடியின் லாவகத்தோடு வண்டியோடு ப்ரேக் டான்ஸ் ஆடி கோதாவில் நுழைவார்கள். நம்முடைய கார்க் கண்ணாடியை உரசி பக்கத்தில் வந்து நின்று ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போல ஜன்னல் ஊடுருவி உற்று நோக்குவார்கள். நேற்றைக்கு ஒரு இருசக்கரானாதி வயிற்றை பிடுங்கிய பசியில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடந்து எதிர்திசை கையேந்தி பவன் பரோட்டா கடைக்கு சென்றுவிட்டார். தன் பங்கிற்கு அந்த நூறடி ரோடில் இரண்டடி அவர் எடுத்துக்கொண்டார்.
பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாமல் எல்லா பேருந்துகளும் திணறிக்கொண்டிருக்க, அவற்றின் உள்ளே நிற்க திராணியில்லாமல் கையில் பெட்டியோடும், இடுப்பில் புட்டிப்பால் குடிக்கும் குழைந்தையோடும் அட்சதை போல பெய்துகொண்டிருந்த மழையில் இறங்கி நடந்தார்கள். சமூக நலனை கருத்தில் கொண்டு ரோடோரத்தில் பள்ளம் நோண்டிய ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியின் செயற்கரிய செயலில் ஒருவர் பையோடு கீழே விழுந்து அந்த சாக்கடை சமுத்திரத்தில் முழுகி முத்தெடுத்தார்.
பஸ் ஸ்டாண்டில் பாலிதீன் கவர் மூடி பானி பூரி விற்கும் வடக்கத்திய இளைஞர்கள் சிலர் அந்த மழை நீரை சுவை நீராகக் கருதி பானியுடன் பானியை கலந்து கரையேறி சென்றார்கள். நாளைக்கு வெய்யில் அடித்தால் நனைந்த பூரி இன்னும் சுவையாக இருக்கலாம். ஒரு மாதிரி வாசனை அடித்தால் பேர் பாதி விலையை குறைத்து விற்பனையை கூட்டலாம். மதியூக விற்பனையாளர்கள் ஜெயிப்பார்கள்.
பதினொன்று முப்பதிற்கு என்னுடைய நன்நடத்தை காரணமாக ரிலீஸ் செய்தார்கள். முக்கி முனகிய சேப்பாயி எடுத்தாள் ஒரு ஓட்டம். இரண்டு நாட்கள் முன்னால் ஏதோ வெளிநாட்டு சதியில் சாலையோர பெருமரத்தின் கிளை ஒன்று முறிந்து என்னுடைய சேப்பாயியின் முகத்தில் விழுந்து அழகுச் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த துர்ப்பாக்கிய நிலை இன்றும் நேரக்கூடாது என்று பயந்து சாலையை பார்த்த நேரத்தை விட அண்ணாந்து பார்த்து வண்டி ஒட்டிய நேரம் தான் ஜாஸ்தி. நல்லவேளை எங்கள் பேட்டையில் நான் நுழையும் வேளையில் ஊர் அடங்கியிருந்தது.
வகைவகையான இலவசங்கள் அள்ளித் தரும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் வெள்ளை வேஷ்டி சட்டை மகோத்தமர்கள் இதுபோல பொது அவலங்களை களைவதற்கு முயற்சி எடுத்தால் அவர்கள் வீட்டில் இரவோடு இரவாக பொன் விளையும். இது அகஸ்தியர் அவரது ரஸவாத புத்தகத்தில் எழுதியிருக்கும் ரகசியக் குறிப்பு.
பின் குறிப்பு: இதுபோல மராத்தான் இன்ச்சிங் காம்பெடிஷன் போட்டிகளின் போது கொரிப்பதர்க்கோ குடிப்பதற்கோ கையில் ஏதோ சரக்கு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது நேற்றைய இராக்கூத்தில் நான் கற்ற நீதி!
பட உதவி: vinodvv.posterous.com (இது நேற்றைய மழையில் எடுத்தது அல்ல. இருந்தாலும் எல்லா மழைக்கும் பொருத்தமான சாலைப் படம். என்னை மிகவும் கவர்ந்தது.
-
30 comments:
உங்கள் காட்டில் மழை பெய்துள்ளது. அவ்வப்போது சகஜமாக தெருவில் நிகழும் மழைக்கூத்துக்களை, உங்கள்பாணியில் நகைச்சுவையாகவே எழுதியுள்ளீர்கள்.
//கொரிப்பதர்க்கோ குடிப்பதற்கோ கையில் ஏதோ சரக்கு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது நேற்றைய இராக்கூத்தில் நான் கற்ற நீதி!//
சரக்கு இருந்தால் போதும் கவலையே இல்லை என்று சிலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நான் சரியாய் வீட்ல மாட்டிகிட்டேன் ஆர் வீ எஸ். எங்கயும் போக முடியலை செம எரிச்சல்
நானும் மழை நாளில் சென்னையில்தான் இருந்தேன்
மழையில் ட்ராஃபிக் நெரிசலில் இரண்டு மணிநேரம்
மிகவும் அவதிப்பட்டேன்
சென்னைவாசிகளைப் பார்த்து மனம் சங்கடப்பட்டது
குறிப்பாக கார் வைத்துள்ளவர்களைப் பார்த்து
பாவம் சிவப்பாயி..முதல் அனுபவமா
அனேகமாக அரண்டுதான் போயிருக்கும்
அழுத்தித் துடைத்து ஆறுதல் சொல்லுங்கள்
உள்ளூர் வெளியூர் அரசாங்க , ஆம்னி பஸ் கூட்டங்களோடு கோயம்பேடு கொடுமைதான் ... ... 400 மீட்டருக்கு 2 மணி நேரமா ... 10 கிமி சுத்தினாலும் பரவாயில்லை என்று நீங்க ரூட்டை மாற்றுவது தான் நல்லது .......
excellent! ரசித்துப் படித்தேன்.
சென்னை வரலாமா கூடாதா என்று யோசிக்கிறேன்.
சேப்பாயிக்கு என்ன ஆச்சுனு விவரம் போடாம விட்டுட்டீங்களே?
நானும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததுபோன்ற உணர்வு.:))
@வை.கோபாலகிருஷ்ணன்
கருத்துக்கு மிக்க நன்றி சார்!
எனக்கும் சரக்கு பற்றிய விஷயங்கள் கேள்விப்பட்டதுவே!!
@எல் கே
என்னாது.. வீட்ல மாட்டிக்கிட்டேன்... எரிச்சலா?
இப்பதான் வீட்ல லீவுக்கு ஊருக்கு போயிட்டு திரும்ப வந்தாங்கன்னு நினைக்கிறேன். இப்படி ஒரு கமெண்ட்டை அவங்களுக்கு காமிப்பீங்களா? டூ மச். ;-))))))
@Ramani
அன்னிக்கி சென்னையில இருந்தீங்களா.. ஐயோ பாவம்... ;-))
கருத்துக்கு நன்றி சார்! ;-))
@பத்மநாபன்
பத்து கி.மீ சுத்தலாம்... ஆனா சில நாட்களில் இந்த ரோடில் ட்ராபிக் இல்லாமல் இருக்கும். அதுவே நம்மை மீண்டும் மீண்டும் இந்த பொறியில் வந்து விழவைக்கிறது. கருத்துக்கு நன்றி பத்துஜி! ;-))
@அப்பாதுரை
நன்றி அப்பாஜி!
போன வெள்ளிக்கிழமை ஆபிஸ் வரும் வழியில் ஒரு பெரிய மரத்தின் கிளை முறிந்து சேப்பாயி மேல் விழுந்துவிட்டது. அடியை தான் வாங்கிக் கொண்டு எங்களை காப்பாற்றினாள். ஆர்.சி புக் வருவதற்கு முன்பே இன்சூரன்ஸ் க்ளைம் செய்துவிட்டேன். தலைக்கு வந்தது கார் தலையோடு போயிற்று..
விசாரிப்புக்கு நன்றி சார்! ;-))
@s.prabhakaran -s.dharmalingam
பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு வந்ததற்கு நன்றி. ;-))
திரண்டு வந்த மழை மேகங்கள் கொஞ்சநஞ்சம் தெரிந்த சூரியனை மிரட்டி உள்ளே போகச் சொல்லிவிட்டு பூமியோடு ஒரு காட்டு யுத்தம் //
ஸ் ஸ்டாண்டில் பாலிதீன் கவர் மூடி பானி பூரி விற்கும் வடக்கத்திய இளைஞர்கள் சிலர் அந்த மழை நீரை சுவை நீராகக் கருதி பானியுடன் பானியை கலந்து கரையேறி சென்றார்கள். நாளைக்கு வெய்யில் அடித்தால் நனைந்த பூரி இன்னும் சுவையாக இருக்கலாம். ஒரு மாதிரி வாசனை அடித்தால் பேர் பாதி விலையை குறைத்து விற்பனையை கூட்டலாம். மதியூக விற்பனையாளர்கள் ஜெயிப்பார்கள். //
ராக்கூத்துல இவ்வளவு நடக்குதா.... தொடர்ந்து நடக்கட்டும்... நீங்கள் களைப்பாகலாம்... அதில் நாங்கள் இளைப்பாருகிறோம் :):):)
ரொம்ப நல்ல படைப்பு...
@ரசிகன்!
ரசிகனின் ரசிப்பிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி. ;-))
இன்ச் இன்ச்சா கார் நகர்ந்தாதான் இந்த மாதிரி இடுகை கிடைக்குது.
இராக்கூத்து செம குத்து ஆர்விஎஸ்.
எனக்கும் கூட வருகிற மாதிரியான பதிவு கலக்கல்..
@சுந்தர்ஜி
நன்றி ஜி!
கூத்தை ரசித்து குத்தியதற்கு... ;-))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன்!
ரொம்ப நாளா ஆளையே காணுமே! ;-))
ஒரு நானூறு மீட்டர் தூரத்தை கேவலம் இரண்டே மணி நேரத்தில் கடந்தேன். இதுபோல சுற்றமும் சூழமும் கட்டியணைத்துக் கொண்டு நடுவீதியில் நிற்கும் நேரத்தில் அவர்களின் அன்புக்கு எல்லையே இருக்காது.
ஹா.. ஹா.. உங்க கஷ்டம் இப்படி எல்லாருக்கும் ஹேப்பியா மாறிடுச்சு..
சேப்பாயி தான் பாவம். :(
ஆங்காங்கே கலைந்து கிடந்த தொண்டர் மேகங்களை தலைவர் மேகம் கை பிடித்து ஒரு கூட்டமாக அழைத்து வந்தது
GREAT!
/என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகள்//
அதுசரி..
//நல்லவேளை எங்கள் பேட்டையில்//
சைதாப்பேட்டை..தேனாம்பேட்டை..குரோம்பேட்டை?
// கையில் ஏதோ சரக்கு வைத்துக் கொள்ளவேண்டும்//
முரசொலி???
சேப்பாயி SAFE ஆயி வீடு வந்து சேந்தா சந்தோஷம்.
சுவாரஸ்யம். வார்த்தைகளில் சரளமாக விளையாடியிருக்கிறீர்கள்.மழைக்குப் பின் விளைவாக எங்களுக்கெல்லாம் இரவு மூன்று வரை மின்சாரம் இல்லை.
@ரிஷபன்
நன்றி சார்! ;-))
@இளங்கோ
ஆமாம். ;-(
@bogan
Thank you!
@! சிவகுமார் !
சேப்பாயி safe ஆயி... ரசித்தேன் சிவா... நன்றி.. ;-))
@ஸ்ரீராம்.
நன்றி.
எங்களுக்கும் மூனுக்கு தான் மின் வந்தது. ;-(
அதைப் பற்றி விரிவாக தனிப் பதிவாக எழுதலாம் என்று விருப்பம். ;-))
மழைல கார் நகரமுடியாம நின்னா தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இந்த மாதிரி இலக்கியதரத்தோட ஒரு கட்டுரை கிடைக்கும் அப்பிடின்னா 'மழை நல்லது'...:)
@தக்குடு
Thank you Boss! ;-))
Post a Comment