இப்போது நீங்கள் படிக்கப் போவது ஒரு நான்-லினியர் பதிவு. அதாவது ஒரு அரை மணி நேரம் இளையராஜாவை பற்றி நினைத்தால் என்னென்ன பாடல்கள் நினைவில் வந்து அலை மோதிவிட்டு போனதோ அந்த பாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். காலக்கிரமமாகவோ, அகர வரிசைக்கிரமமாகவோ, நடிகர்களின் வரிசையாகவோ, இயக்குனர்களின் வரிசையாகவோ, காதல்,சோகம், பாசம் போன்ற பகுப்புகளின் வரிசையாகவோ இது இருக்காது. ஒரு ரசிகனின் அரை மணி நேர பிதற்றல்கள் இது.
தாய் மூகாம்பிகையில் வரும் "ஜனனி ஜனனியும்", அலைகள் ஓய்வதில்லையின் "புத்தம் புது காலை"யும், குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்யும் ஆவாரம்பூ விடலைப்பையன் பாடும் "மந்திரம் இது மந்திரம்"மும், ரேக்ளா ரேஸ் முடிந்து நாலைந்து பேர் முரட்டுக்காளை ரஜினியை தூக்கி "அண்ணனுக்கு ஜே!" சொல்லி சூப்பர்ஸ்டார் பாடும் "பொதுவாக என் மனசு தங்கம்"மும், கேப்டனின் பிரபாகரனில் ரம்யா கிருஷ்ணன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போடும் "ஆட்டமா"வும், தண்ணீர் சொட்டும் முற்றத்தில் நின்று சொட்டுக்களை கையால் அலசி கஸ்தூரியின் ஆசைக்கு பிரபு பாடும் "சின்ன சின்ன தூறல் என்ன"வும், மணியின் மௌனராகத்தில் மைக் இல்லாமல் மோகன் பாடும் "நிலாவே வா"வும், நாயகனில் கடற்கரையோரத்தில் அந்த சிறுவன் இருகைகொண்டு கிளாஸ் டீ பிடித்து குடிக்கும் போது "ஆ... ஆ..." என்று ஆரம்பித்து வரும் "தென்பாண்டி சீமையிலே"யும் வேலு நாயக்கர் பேரன் அவரிடம் "நீங்க நல்லவனா கெட்டவனா" கேட்கும்போது வரும் பி.ஜி.எம்மும், சிங்காரவேலன் கமல் குஷ்பூவை ஸ்ட்ரக்ச்சரில் படுத்துக்கொண்டே தள்ளிக்கொண்டு போய் பாடும் "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்"யும்,
கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் பாக்கி இருக்கு...
மதுவையும் திராட்சையையும் வாயால் ருசித்து டிம்பிள் கபாடியாவை கண்ணால் ரசித்து விக்ரம் கமல் பாடும் "மீண்டும் மீண்டும் வா"வும், அம்பிகாவை கமல் ராதா கிருஷ்ணன் போஸில் இடுப்பில் ஒரு கையும், மேலே தூக்கிய கையோடு மறு கையும் கொண்டு நடுக் கூடத்தில் அரவணைத்து பாடும் "வந்தாள் மஹா லக்ஷ்மியே..."யும், அதே அம்பிகாவை காக்சிசட்டையில் கட்டிபிடித்து கமல் கேட்கும் "கண்மணியே பேசு..."வும், இயக்குனர் சிகரத்தின் உன்னால் முடியும் தம்பியில் சீதாவுடன் சைக்கிளில் சென்று தரையில் விழுந்த பூக்கள் தானாக மரத்தின் மேல் செல்லும் போது கமல் பாடும் "இதழில் கதை எழுதும் நேரமிது .."வும், கார்த்திக்கை அந்த புதுமுக குண்டு நடிகை "எஸ் ஐ லவ் திஸ் இடியட்" என்று காதலுடன் திட்டி, பாடும் நிலா பாடிய "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்"மும், "காளிதாசன் உன்னை கண்டால் மேகதூதம் பாடுவான்" என்று சரணத்தில் அமைந்த "வா வா வா கண்ணா வா" என்ற வேலைக்காரர் ரஜினி அமலாவை பனி பிரதேசத்தில் பரதநாட்டியம் ஆட விட்டு பாடியதும், கமல்ஹாசன் கம்பு சுழற்றி கெளதமிக்கு வீரம் காண்பித்து பெரியத் தேவர் மகனாக "சாந்து பொட்டு சந்தன பொட்டு" இட்டும் ரேவதியை "இஞ்சி இடுப்பழகி" என்று வர்ணித்து பாடியதும்,
இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு...
வயதில் அரை செஞ்சுரி போட்ட நடிகர் திலகத்தை நாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனர் இமயம் சிவாஜிகணேசனுக்கு தந்த முதல்மரியாதையில் வந்த "பூங்காற்று திரும்புமா" வும் மணல் வெளியில் ஓடி வரும்போது வசனத்திற்கு வேலை தராத அந்த புல்லாங்குழல் இசையும், மேட்டுக்குடி ஜனங்கள் கேட்கும் இடத்தில் சேரிக்கும் பாட்டு படி என்று "சிந்து" சுகாசினி "பைரவி" கட்டிய சிவகுமாரை கேட்கும் "பாடறியேன்... படிப்பறியேன்..."னும், பி.எஸ்.ஏ சைக்கிள் கொண்டு நண்பர்களுடன் தாத்தா ஊரில் பச்சை பசுமையில் சுற்றும் கார்த்திக்கை வருஷம் பதினாறில் "ஏய் அய்யாசாமி.. உன் ஆளை காமி" என்று சார்லி மற்றும் நண்பர் மும்பையிலிருந்து வந்திறங்கிய (படத்தில்) ஒல்லி குஷ்புவை காட்டச் சொல்லி பாடியதும், அதே குஷ்பூவை கிழக்கு வாசலில் "தளுக்கி தளுக்கி தான்" என்று சின்னி ஜெயந்துடன் கார்த்திக் வரப்பில் வெறுப்பேற்றியும் ரேவதியை "பச்சமலை பூவு" பாடி தூங்க வைத்ததும், கட்டு கட்டாக வேலங்குச்சி, ஆலங்குச்சி அனுப்பி எஜமான் ரஜினியை காதலித்து மீனா பாடும் "ஆலப்போல் வேலப்போல்"ம்,வெள்ளை வேட்டி சட்டை போட்டு வழித்து தலை சீவி சந்தனப் பொட்டிட்டு சின்னக்கவுண்டர் சுகன்யாவின் முத்து மாலையை பிடித்து அருவி விழும் பாறையில் இழுக்கும் போது பாடும் "முத்து மணி மாலை"யும், பி.சி ஸ்ரீராமின் ஒளி அலைகளின் நடுவே ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிரபுவை நினைத்து அமலா பாடும் "நின்னுக் கோரி வரணு"மும், மழலைப் பட்டாளங்க ளை வைத்து மணி எடுத்த அஞ்சலியில் வரும் "மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி"யும்
இன்னும் இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு...
கேம்ப் ஃபயர் மூட்டி கிடார் இசைத்து ரேவதி முன் முரளி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"ம், அடவு கட்டி ஆட ஆசைப்படும் நாசர் அரிதாரம் பூசிய அவதாரத்தில் வரும் "ஒரு குண்டு மணி குலுங்குது.."வும், அமலாவை தேடித் தேடி மோகன் பாடும் "தேடும் கண் பார்வை தவிக்க..."வும், புதுப் புது அர்த்தங்களில் காதலுக்கு குருவாயூரப்பனை சாட்சியாக வைத்து எஸ்.பி.பி ரகுமானுக்கும் பொசஸிவ் கீதாவுக்கும் பாடிய "குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு"ம், புது நெல்லு புது நாத்தில் தோளில் தூக்கி கொண்டு போகும் மச்சானை காலில் கிச்சு கிச்சு மூட்டி சுகன்யா பாடும் "கருத்த மச்சான்... கஞ்சத்தனம் எதுக்கு வச்சா"னும், பாபு நடித்த பாரதிராஜாவின் என் உயிர்த் தோழனில் வரும் "ஏ ராசாத்தி ராசாத்தி"யும், காதலியின் நினைவில் ராத்திரி ராத்திரி ஊரில் உள்ளோருக்காக கையில் காதலி கொலுசு தட்டி விஜயகாந்த் பாடிய படத்தில் ரேவதி கோயிலில் பரதநாட்டியம் ஆடும் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ"வும், சகல கலா வல்லவனான கமல் அம்பிகாவுடன் கயற்றுக் கட்டிலில் படுத்து பாடும் "நிலா காயுது..."வும், நந்திதா தாஸ் பார்த்திபனின் வீட்டு வேலைக்காரியாகவும் முன்னாள் காதலியாகவும் வரும் அழகி படத்தில் வரும் "பாட்டு சொல்லி பாடச் சொல்லி"யும், டிக் டிக் டிக்கில் பரத நாட்டியம் ஆடும் மாதவியை கமல் படுத்து படுத்து போட்டோ எடுக்கும் "பூ மலர்ந்திட மலர்ந்திடும்"வும், கண் தெரியாத ராஜபார்வை கமல் காதலி மாதவி மேல் கை பட்டும் படாமலும் பாடிய "அழகே.. அழகு.. தேவதை.."யும், கொஞ்சம் குண்டான குஷ்பூ சத்யராஜுடன் ப்ரம்மாவில் பாடும் "வருது வருது இளங்காற்றும், பல் காட்டி சிரித்தும், சீறியும் சீயான் விக்ரம் நடித்த பிதாமகனில் வரும் "இளங்காற்று வீசுதே"யும், பைத்தியம் பிடிக்கும் கல்லூரி மாணவனாக விக்ரம் நடித்த சேதுவில் வரும் "மாலை என் வேதனை கூட்டுதடி"யும், கயிறு கட்டி மரத்தின் மேல் ரேவதியை தூக்கி பாண்டியன் மண் வாசனையில் பாடும் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு"ம் ................................................................................................
முடியலை... இன்னும் இந்த பட்டியல் முடியலை.. இவ்வளவும் கேட்பதற்கும் இது பூபாளமா, மோகனமா, மத்யமாவதியா, நிலாம்பரியா, கரஹரப்ப்ரியாவா, சங்கராபரணமா, தோடியா, வசந்தாவா, சாரங்காவா என்றெல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லாமல் அப்படியே ரசிக்க வைத்த இசைதேவன், இசைஞானி, இளையராஜாவிற்கு இந்த ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு. போன வருஷம் ராஜாவுக்கு எழுதிய வாழ்த்தை எடுத்து தலைப்பை மாற்றி பாட்டையெல்லாம் போல்ட் பண்ணி இங்கே போட்டுட்டேன்.
-
51 comments:
இளையராஜா ரசிகரென்றால் மிகையாகுமா?
nan thedum sevanthi poovithu(ilayarajavin aaaaaaa especially great)....(dharma pathini)....manjam vantha thenral(mouna ragam)....karthik and banupriya in keeravani song, banupriya in malayil yaro manathodu pesa...
ninaivil neenga padalgal ayiram aiyiram...
இன்னிக்கு காலேல 'ஜனனி ஜனனி'யோட தான் என் பொழுது விடிஞ்சுது... எல்லாமே ரொம்ப அருமையான songs! நல்ல post!
my list will also include -- maalayil yaaro, maasi maasam aalaana ponnu, vanthathe kunkumam (kizhakku vaasal), aanantha raagam ketkum kaalam, enthan nenjil neengaatha thendral neethaana, kaathal oviyam, thoongaatha vizhikal...
cha! it could go on forever!!! thanks for filling up my thoughts too with your melodies!!
யுககலைஞன் இளையராஜா மிக சரியான அழைப்பு வெங்கட்
பதிவிற்கு நன்றி நண்பா
மற்றவர்கள் இசையமைத்த பாடலையும் இளையராஜான்னு சொல்ற அளவுக்கு கண்மூடித்தனமான காதலா உங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் மேல்!
விடிய விடிய - எம்.எஸ். விஸ்வநாதன், ஆவாரம்பூவு - வீ.எஸ். நரசிம்மன், தேடும் கண் பார்வை, சின்ன சின்ன தூறல் - எம்.எஸ். விஸ்வநாதன் & இளையராஜா
attagaasaamaana paattugal nandri
கடலோரகவிதைகள் ’’அடி அத்தாடி இளமனசொன்னு ரெக்கை கட்டி’’ பாடலை நேற்று ரசித்து கேட்டு கொண்டிருக்கும்பொழுது ஆர்.வி.எஸ் நிச்சயம் இளையராஜா பதிவு போடுவார் என நினைத்துக் கொண்டிருந்தேன்...இப்படி முச்சுமுட்ட முட்ட போட்டு அசத்தி விட்டீர்கள்...
சகரசிகனாக வாழ்த்துக்கள் பாராட்டுகள்....
@அப்பாதுரை
அப்டின்னா.... தல.. பிரியலை.. ;-))
@Eswari
லிஸ்ட் ரொம்ப பெருசுங்க.... இன்னும் பத்து பதிவு தாங்கும்.. ;-))
@Matangi Mawley
அதோட மட்டும் இல்லை.... படத்துல போட்ட எல்லாப் பாட்டையும் ஹிட் பண்ணுவாரு.... ரஜினிக்கும் கமலுக்கும் ஏகப்பட்ட ஹிட்ஸ்... ராமராஜன், ராஜ்கிரண் போன்றோரின் வாழ்வு ராஜா கையில் இருந்தது.... நன்றி மாதங்கி. ;-))
@A.R.ராஜகோபாலன்
நன்றி கோப்லி! ;-))
@MSV. Rasigar
சிலது தப்பா சொல்லிட்டேனா? ஸாரி! பழைய பாட்டு எது போட்டாலும் "கண்ணதாசன் பிச்சிட்டாம்ப்பா" என்பார்கள். அது போல தப்பு பன்ணிட்டேன். ஒரு ரசிக வெறியில ராஜாவின் ஆரம்ப கால கட்டத்துல வந்த படங்களை அவர்தான் மியூசிக் போட்டார்ன்னு கண்மூடித்தனமா சொல்லிட்டேன். கரெக்ட் பண்ணியதற்கு நன்றி.
இதுல ராஜாவும், எம்.எஸ்.வியும் சேர்ந்து பண்ணின படங்களை தெரிந்துதான் ராஜான்னு போட்டேன். ;-)))
@எல் கே
நன்றி எல்.கே. ;-))
@பத்மநாபன்
ஹா.ஹா.. உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்த திருப்தி எனக்கு. நன்றி. ;-))
எனக்குப்பிடித்தவை: நான் தேடும் செவ்வந்திப்பூவிது, பாட்டாலே புத்தி சொன்னார். கண்ணீரை வரவழைத்த பாடல்கள் "நாடு பார்த்ததுண்டா" (படம்: காமராஜ்) மற்றும் "நல்லதோர் வீணை செய்தே.."(படம்: பாரதி).
msv rasigar நேராச் சொன்னதை நான்.. ஹிஹி. அவ்வளவு தான். நீங்க இளையராஜா ரசிகர்ன்றது மிகையில்லை.
வாழ்த்த வயது இல்லை
இருந்தாலும்
இசை மேதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பகிர்விட்ட உங்களுக்கும்
//... படத்துல போட்ட எல்லாப் பாட்டையும் ஹிட் பண்ணுவாரு.... //
அட, அப்டியாஆ?
@! சிவகுமார் !
எல்லாமே நல்ல பாடல்கள். நன்றி சிவா! ;-))
@அப்பாதுரை
சரிங்க தல... புரிஞ்சுகிட்டேன். ஒரு வேகத்துல அப்படி எழுதிட்டேன். எம்.எஸ்.வி. ரசிகர் மன்றத்தால நான் அடி வாங்கப்போறேன். ;-))))
@siva
நன்றி சிவா! ;-)
@அப்பாதுரை
நெசமாத்தான் பாஸு.... ;-))
அருமையான கலெக்ஷன்ச் மைனரே.. இளையராஜாவின் இசையென்னும் இன்பவெள்ளத்தில் திளைக்கச் செய்து விட்ட உங்களுக்கு நன்றி...
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! ;-)
இன்னொரு ராஜாவின் பக்தனின் வாழ்த்துக்கள். அந்திமழை நான் தேடும் செவ்வந்திப்பூவிது எனக்கு மிகமிகமிக பிடித்த ராஜராகங்கள்.
தெரியாத் தனமா தேன்கூட்டைப் போய்க் கலைச்சு விட்டுட்டீங்களே ஆர்விஎஸ்?
ஹிந்தி பாடல்களை தமிழ் நாட்டுக்குள்
நுழையவிடாமல் செய்த பெருமை
இளைய ராஜா அவர்களைத்தான் சாரும்
உங்கள் பாடல் பட்டியலும் மிக அருமை
ஆமா.. டி.ராஜேந்தருக்கு இல்லே கொடி பிடிச்சீங்க? அம்பேலா?
@வந்தியத்தேவன்
நன்றி பொன்னியின் செல்வரே! அவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி விசிட் பண்ணுங்க ப்ரதர். ;-))
@சுந்தர்ஜி
கரெட்டு தான் ஜி. சொட்டு சொட்டா இசைத் தேன் சொட்டுது... ;-))
@Ramani
ஆனாலும் ஹிந்தி வந்தது சார்! ஆக்கிரமிக்க முடியலை.. சரியா?
கருத்துக்கு நன்றி சார்! ;-)
@அப்பாதுரை
விஜய டி ராஜேந்தருக்கு யாராலும் கொடி பிடிக்க முடியாது அப்பாஜி! அதுசரி.. கொடி பிடிக்கிரதுன்னா என்ன ஜி? ;-))
இளையராஜா இப்போது இளைத்த ராஜாவாகி விட்டார் போலும். அல்லது நம் ரசனைதான் மாறி விட்டதோ...பழைய ராஜாவைக் காணோம்...!
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
இனித்திடும் இசை வெள்ளம்.
எல்லா பாட்டுமே ரொம்ப அருமை அண்ணா. "என்னை தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி? (டைன் டைன் டைன்) எனக்கு சொல்லடி?" பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ...:)))
எல்லா பாட்டுலையும் ஹீரோ எங்க கையை வெச்சுண்டு இருந்தார்னு எல்லாம் உபரிதகவல்கள் குடுத்து உங்களோட மைனர்வாள் பேரை நிலைநாட்டிட்டேள் மைனரே!
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
அட, நான் இந்த பதிவு படிக்க ஆரம்பித்து ஒரு வருஷம் ஆச்சா! நம்பவே முடியல்லை. போன வருஷம் சும்மா இளையராஜா பற்றி ஸ்கேன் செய்ததில், உங்கள் பதிவை பிடிதேன். பிறகு, எல்லா பழைய சங்கதிகளையும் படித்தேன்.
ராஜாவும் வயலினும், ராஜாவும் குழலும், ராஜாவும் கர்நாடக சங்கீதமும் என நிறைய போடலாம், செய்வீரா?
நன்றி ராஜா பாடல்களுக்கு.
ரகு.
இளையராஜா: ஒரு யுகக் கலைஞன் பிறந்த நாள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ஆயிரம் ரகுமான் வந்தாலும் இளையராஜாவை அசைச்சுக்க முடியாது. உங்கள் ரசிகர் மன்றத்தில் என்னையும் உறுப்பினரா சேர்த்துக்கங்க தலிவா ...
@ஸ்ரீராம்.
மஹாபாரத இறுதியில் அர்ஜ்ஜுனனுக்கு நேரும் சம்பவம் நினைவுக்கு வருகிறது ஸ்ரீராம். வேறு எதுவும் சொல்வதற்கில்லை. கருத்துக்கு நன்றி. ;-))
@ரிஷபன்
நன்றி சார்! ;-))
@மாதேவி
இசை மழையில் பிறந்த வெள்ளம். நன்றி மாதேவி. ;-))
@தக்குடு
கடைசி வரில நிமிண்டு விட்டுட்டு போறே... நன்றிப்பா.. ;-))
@மாலதி
நன்றிங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும். அடிக்கடி வாங்க . ;-))
@ரகு.
பொறுமையா ஒரு வருஷம் நான் எழுதியதை படித்ததற்கு நன்றி. நிச்சயம் அந்த தலைப்புகளில் பதிகிறேன். நன்றி சார்! ;-))
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். ;-))
எனக்கு ரகுமானையும் ரொம்ப பிடிக்கும் சிவகுமாரன். இருவரும் வெவ்வேறு சுவைகளில் இசையமுது கொடுத்தவர்கள். ஒருவர் கொம்புத்தேன் என்றார் மற்றொருவர் மலைத்தேன். நீங்க தான் ரசிகர் மன்ற பொறுப்பாளர். கருத்துக்கு நன்றி. ;-))
அனைத்துமே இனிமையான பாடல்கள். இவ்வளவு பாடல்களையும் அந்தந்த காட்சிகளுடன் நினைவு வைத்து கொண்டு எங்களுக்கு தொகுத்து பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுகள்.
@கோவை2தில்லி
விஷுவலாகவும் என்னைக் கவர்த்த பாடல்களை தொகுத்தேன். ரசிப்பிற்கு நன்றி. ;-))
ராஜா சார் படிக்க நேர்ந்தால், நிச்சய்மாக நெகிழ்ந்து விடுவார்
Post a Comment