இந்த ஆற்றங்கரையோர அரச மரத்திற்கு ஏறக்குறைய இருநூறு வயதாவது ஆகியிருக்கும். ஒரு சில கிளைகளில் தளிர் பச்சையில் துளிர் விட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த இலைகள் இன்னமும் அது இளசுதான் என்று ஊருக்கு சொல்லிக்கொண்டிருந்தன. தன் பெயருக்கு ஏற்றார்போல ஒரு அரசன் போல கம்பீரமாக நெடிதுயர்ந்து அந்த கிராமத்து வாசலில் ஸ்திரமாக நின்றிருந்தது. மர அடிவாரத்தில் இருந்து மேலே அண்ணாந்து பார்க்கும் போது மன்னன் அதிகாரமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு தன் சேனையை நோக்கும் கோலத்தில் இரண்டு பெருங் கிளைகள் இருந்தது. மானிடப் பதர்களுக்கு வயசானால் தள்ளாமை வந்து உடல் லொடலொடத்து தளர்ந்து விடுகிறது. வருஷங்கள் உருண்டோட உருண்டோட மரம் அசாத்திய வலிமை பெறுகிறது. இந்தக் கிராம குடும்பங்களின் ஐந்தாறு தலைமுறைகளின் சுக துக்கங்களை கண்ட அரசமரம் அது.
அரசமரமும் பக்கத்தில் கொலுவீற்றிருக்கும் மாரியம்மனும் அந்த கிராமத்தின் தனிப் பெரும் விசேஷ அடையாளங்கள். அந்த அரசமர நிழலில் இருந்த ஆத்தாளை கமிட்டி அமைத்து இரு வருடங்கள் வசூலுக்கு அலைந்து கோயில் கட்டியது அந்த ஊர்க்காரர்கள் தான். க்ரில் கதவு போட்டு சிறிய கோபுரத்தில் மாயவரம் ஸ்தபதியின் சுதை வேலைப்பாடுடன் அமைந்த லக்ஷணமான கிராமத்து கோயில். மரத்தின் அடிவேர் எட்டித் தொடும் தூரத்தில், காய்ந்து விழுந்த இலையை கடத்திக்கொண்டு போகும் எத்தனப்பில் சுழித்து ஓடும் பாமணியாற்றின் சலசலப்பில், அரசமர இலைகளின் சரசரப்பு உரசல்களில், மரத்தில் மறைந்து உட்கார்ந்து வலியன் குருவிகள் எழுப்பும் "கீச்..கீச்..கீச்.." சப்தங்களும், எதிரே இருக்கும் "ஹோ..." என்ற பச்சை வாசனை கிளம்பும் வயற் பெருவெளியில் இருந்து வீசும் "ஸ்..ஸ்..ஸ்.." என்ற பெருங்காற்றும் அந்த மாரியாத்தாளுக்கு மதிய நேர இன்னிசைக் கச்சேரி.
சுட்டெரிக்கும் மண்டை காயும் வெய்யிலுக்கும், உடம்பு குளிர அடித்துப் பெய்யும் மழைக்கும் பலரும் ஒதுங்கும் பிரம்மாண்டமான இயற்கை அளித்த பச்சைக் குடை அது. கிராமங்களுக்கு இடையில் ஒற்றையடிப் பாதையில் சைக்கிளில் சென்று "பாபு" குச்சி ஐஸ் விற்கும் வியாபாரி, அலுமினிய அண்டா குண்டான் விற்கும் டி.வி.எஸ். 50, வயல் வரப்புகளில் அறுத்த புல்லுக்கட்டை தலையில் சுமந்து கொண்டு வீடு திரும்பும் ஜாக்கெட் போடாத தோல் சுருங்கிய ஆத்தா, ஐந்தாறு மாடுகளை ஒருவனாய் மேய்க்கும் தலைக்கு முண்டாசு சுற்றிய சின்னப் பயல் என்று சகலரும் காற்றாட ஓய்வெடுக்கும் இடம்.
"சிலுசிலுன்னு அப்படியே ஆள கிறங்க அடிக்கற காத்துப்பா.." என்று தினமும் ஆற்றிற்கு அக்கரையில் இருக்கும் தன் பங்கிற்கு வெள்ளாமை பார்க்க வரும் தலையாரி சுப்பண்ணன் சிலாகிப்பார். மாரியாத்தாளை கன்னத்தில் போட்டுக்கொண்டு வெளியே எலும்பிச்சம் பழம் குத்தி காய்ந்து இருக்கும் சூலத்தின் அருகில் இருக்கும் துன்னூரை அள்ளியெடுத்து முன்நெற்றியில் வெள்ளையடித்துக் கொண்டு தோள் துண்டை உதறி புடைத்திருக்கும் அரசமர வேரில் ஐந்து நிமிடமாவது உட்கார்ந்து இளைப்பாறிய பிறகுதான் பயணிப்பார். இன்றைக்கு இந்த இடம் அல்லோகலப்படுகிறது. இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு அந்த அரசமர மாரியம்மனுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழா. காவடியும், கஞ்சி காய்ச்சுதலும், தீமிதியும், கரகமும், ஆர்க்கெஸ்ட்ராவும் அமர்க்களப்படும். கலர் கலர் சீரியல் விளக்கு சுற்றி மரத்தை பல்பு நெக்லஸால் அலங்கரித்திருந்தார்கள். கிளைகளுக்கும் இலைகளுக்கும் நடுவே ஊடுருவிப் போன விளக்குகள் பல வர்ணங்களில் ஜொலித்தது. "ராஜா" என்று தனது வாயில் எழுதிய இரண்டு பெரிய கூம்பு ஸ்பீக்கர்கள் காதில் மாட்டும் தொங்கட்டான் போல மரத்தில் தொங்கின. "மாரியம்மா..எங்கள் மாரியம்மா..." என்று எல்.ஆர்.ஈஸ்வரி அதன் வழியாக சுத்துப்பட்டு கிராமங்கள் எங்கும் பக்தி மணம் பரப்பி பாடிக்கொண்டிருந்தார். அது ஒரு ரம்மியமான இரவும் பகலும் சேரும் சந்தியாக்கால நேரம்.
திருவிழாக் காலங்களில் ராத்திரி எட்டு மணிக்குப் பிறகு தான் சினிமாப் பாட்டுக்கு அனுமதி. அதற்கு முன்னர் "சாமி பாட்டுதான் போடணும்" என்று ஊரார் கண்டீஷனாக சொல்லியிருக்கிறார்கள். போன வருஷம் சரியாக ஆறு மணிக்கு சந்திகால ஆரத்தி எடுக்கும் போது "மாசி மாசம் ஆளான பொண்ணு" பாட்டு போட்டு ஊர்ப் பெருசுகளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். முருகேசு வாத்தியார் பெரிய மவ எழில் வந்தாக் கூட காதல் பாட்டு எதுவும் போட்டு மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நிதானமாக இருந்தான் சிவா.
"சிவா.. ஏலே சிவா!" என்று எல்.ஆர்.ஈஸ்வரியை விட சத்தமாக கத்திக் கூப்பிட்டான் அவன் நண்பன் கதிர்.
கோயில் வாசலில் நின்றிருந்தவனை என்ன என்பது போன்ற முகபாவத்துடன் திரும்பிப் பார்த்தான். அங்கிருந்த படியே கண்ணை பரதநாட்டிய தாரகை போல இடம் வலமாக அபிநயித்து கோயிலை வலம் வரும் பாவாடை தாவணி கூட்டத்தை காண்பித்தான். எழிலும் எழில் சார்ந்த நண்பிகள் குழாமும் கும்மாளமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
பச்சை தாவணியில் பளபளவென்று எழில் வழிய இருந்தாள் எழில். எழிலரசி என்ற பெயருக்கு வஞ்சனை செய்யாமல் ஏற்ற இறக்கங்களுடன் அம்சமாக தெரிந்தாள். ரெட்டை ஜடை பின்னல் போட்டு ஒரு முழம் மல்லியை குறுக்குத் தோரணமாக பின்னந்தலையில் சூடியிருந்தாள். கைகளில் கண்ணாடி வளையல்கள் க்ளிங்க்ளிங். கால்களில் வெள்ளிக் கொலுசுகள் ஜல்ஜல். வரும் ஜூன் மாதம் டவுன் ஸ்கூல் படிப்பை முடித்துக்கொண்டு காலேஜ் சேரப் போகிறாள். அந்த கிராமத்திலேயே அந்த சிகப்பு கலரில் அவள் மட்டும்தான். அழகுக்கு எப்பவுமே திமிர் உண்டு. அவளிடத்தில் அது கொஞ்சம் கூட இல்லாததுதான் ஆச்சர்யம். குளத்தாங்கரையில் அவள் குளிக்கப் படியிறங்கும் போது ஆண்கள் படித்துறையில் பலர் சறுக்கி விழுவார்கள். ராமராஜன் பாட்டும் ரஜினிகாந்த்தின் ஸ்டைலும் பிடித்த வித்தியாசமான வாலிபி.
சட்டையில்லாத சிகப்பு வேட்டி பூசாரி துண்ணூறு குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தார். கன்னங்கரேல் தேகத்தில் நெற்றியில் மட்டும் குங்குமத்தை பெரிய தீற்றலாக இட்டிருந்தது பார்க்க கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருந்தது. தீபாராதனை எடுத்து வரும் போது அந்த ஒளியில் நிழலாக தெரியும் முகம் இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியது.
"ஆத்தா வரலியா?" என்று கரகரத்து குங்குமம் கொடுக்கும் போது விசாரித்தார்.
"இல்லீங்க.." என்று இரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டாள்.
விபூதி குங்குமப் பிரசாதம் வாங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை வலம் வந்தாள். இந்தச் சுற்றுக்கு கோவில் பின்னால் அரையிருட்டில் காத்திருந்தான் சிவா. வலதுகைப் பக்கம் இருந்த ஒரு பஸ் மட்டும் செல்லும் அகலம் இருந்த தார் சாலையில் ஒரு புல்லட் படபடத்தது. அருகேயிருந்த மரத்தின் பின்னே ஓடி ஒளிந்துகொண்டான் சிவா.
அவன் நினைத்தது சரியே!
யார் அது?
தொடரும்...
பின் குறிப்பு: கொஞ்சம் விவரங்கள் கொடுத்து எழுத ஆரம்பித்தால் குறுந்தொடரில் போய் முடிகிறது. பட உதவி:http://images-mediawiki-sites.thefullwiki.org/
-
31 comments:
தொடரும்...
பின் குறிப்பு: கொஞ்சம் விவரங்கள் கொடுத்து எழுத ஆரம்பித்தால் குறுந்தொடரில் போய் முடிகிறது.
......வரலாறு முக்கியம், அமைச்சரே. தொடருங்கள்.... தப்பில்லை. :-)))
கிராமிய மணம் நல்லாவே வீசுது.தொடரட்டும்
உங்கள் கிராமத்து தேவதை தகதகக்கிறாள். விஷயத்துக்கு வந்துட்டீங்கன்னு நிமிர்ந்து உட்காரும் போது நடுவுல ஒரு புல்லட்டைவிட்டு கார்டு போட்டுட்டீங்களே தல! நாங்கல்லாம் எழுதினா அது குறுநாவல். மச்சினரே!நீங்க எழுதினா அது
'குறுகுறு' நாவல்
//"சிவா.. ஏலே சிவா!" என்று எல்.ஆர்.ஈஸ்வரியை விட சத்தமாக கத்திக் கூப்பிட்டான் அவன் நண்பன் கதிர்//
:))
ஆரம்ப வர்ணனைகளும் அபாரம்.
தொடரா எழுதறீங்க...
வார்த்தைகள் அழகாகப் பொருந்துகிறது உங்கள் எழுத்தில். சுவாரஸ்யம். வாழ்த்துகள்.
'குறும்புடன் ஒரு குறு நாவல்'னு சொல்லலாம் போலருக்கு. அட்டகாசமா இருக்கு, ஒரு அரசமரத்துக்கு இப்படி கூட அறிமுகம் தரலாம்னு இப்பதான் தெரியர்து.ஜல்ஜல் க்ளிங் க்ளிங் பகுதிகளில் வரும் உங்கள் இளமைதுள்ளல் மொத்தத்தில் 'ஜில்ஜில்'.
கிளிங் கிளிங் சத்ததோட ஒரு கலக்கல் இளமை தொடர்!
செம அண்ணா! பட்டய கிளப்புங்க ;)
//அந்த கிராமத்திலேயே அந்த சிகப்பு கலரில் அவள் மட்டும்தான். //
தமிழ் சினிமா ஏதாவது இயக்கப்போறீங்களா?
//அருகேயிருந்த மரத்தின் பின்னே ஓடி ஒளிந்துகொண்டான் சிவா.//
என்னப்பத்தி எழுதுறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்..
அருமையான விவரணைகள்.. நாவலாகக்கூட எழுதலாமே..
கிராமத்து பாட்டுகாரன்.....
கிராமத்து கதை . அருமையா ஆரம்பிச்சிருக்கு. தொடரட்டும்.
மரத்தை சுற்றி சுற்றி டூயட்லாம் பாடுவாங்களா!
நிறைய இடங்களில் 'மாசி மாசம்' டைப் நகைச்சுவையோடு கூடிய விவரங்கள் பிரமாதம்.
//யார் அது?//
எங்களுக்கு எப்படித் தெரியும்.. நீங்க தான் சொல்லணும்.
ஒருவேளை, தேர்தல் சமயம் அப்படிங்கறதால ஏதாவது கட்சி ஆளா இருக்குமோ?
Police.. ?
இல்ல.. லவ்வரோட அண்ணா, அப்பா, மாமா இத்யாதி...
நீங்களே சொல்லிடுங்க :)
where is part two?
@Chitra
Thanks Chitra for encouraging. ;-))
@raji
நீங்க இப்ப லீவ்ல இல்ல. ;-))
@மோகன்ஜி
ஓ... அண்ணா... குறுகுறு... ரொம்ப நன்றி.. ;-))
@ஸ்ரீராம்.
நன்றிங்க ரெண்டாவது பார்ட் போட்டுட்டேன். ;-)
@வித்யா
நன்றிங்க.. தொடர்ந்து படிங்க.. ;-))
@தக்குடு
தக்ஸ்... பாராட்டுக்கு நன்றி... எல்லா பார்ட்டும் படிக்கணும். ;-))
@Balaji saravana
நன்றி தம்பி. ;-))
@! சிவகுமார் !
சினிமா ரேஞ்சுக்கு இருக்குன்னு சொல்றீங்க... நன்றி.. சிவா.. ;-))
@அமைதிச்சாரல்
என்னது நாவலா?
நாலு பார்ட்டுக்கே மக்கள் தாங்க மாட்டேங்கறாங்க.. ;-)))
பாராட்டுக்கு நன்றி. ;-)
@MANO நாஞ்சில் மனோ
டைட்டில் நல்லா இருக்கு மனோ. ;-))
@கோவை2தில்லி
நிச்சயம் டூயட் பாடுவாங்க... தொடர்ந்து படிங்க சகோ. ;-))
@அப்பாதுரை
ரசித்ததற்கு நன்றி ஜி! ;-))
@இளங்கோ
மாமா தான்... இளங்கோ... மேல படிங்க சில ட்விஸ்ட் வச்சுருக்கேன். ;-))
@Krish Jayaraman
சேகர்
போட்டாச்சுப்பா... ;-))
சிவப்பு நிற கிராமத்து தேவதை - மணக்கிறது கதை!! நடுநடுவே வரும் நல்ல விவரணைகள் உங்கள் கதைக்கு மெருகூட்டுகின்றன. தொடரட்டும் மன்னை மைனரே...
கிராமத்து தேவதைகள் ;)) வரட்டும்...வரட்டும்.
வர்ணனையின் சுவராஷ்யத்தை ரசிக்க அவ்வப்பொழுது படித்து விட வேண்டும் .... தொடர் முடிய காத்திருந்தால் மனம் கதைக்கு தாவி விடுகிறது ...
எழில் பெயரே எழில் அதிலும் எழிலை வர்ணித்த விதம் மிக எழில்....
Post a Comment