Wednesday, March 30, 2011

கொலை முஹூர்த்தம்

sunny afternoon
மதிய நேர நகரம் சோம்பேறியாய் நகர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் சூரியன் சுறுசுறுப்பாய் எல்லோரையும் தனது கிரணங்களால் நாற்பது டிகிரிக்கு சுட்டு வறுத்துக் கொண்டிருந்தான். வேர்க்க விறுவிறுக்க அடித்து பிடித்துக் கொண்டு பஸ்ஸுக்கு ஓடி முட்டி மோதி ஏறுபவர்கள் இல்லை. பஸ்ஸில் ஈருடல்கள் ஓருடலாக வியர்வையோடும் வாசனையோடும் இரண்டற கலந்து நிற்கும் 'ஆஃபீஸ் கோயர்ஸ்' கூட்டம் இல்லை. இளவட்டங்கள் பஸ்ஸின் மொட்டை மாடி மேல் உட்கார்ந்து "டமக்கு.. டமக்கு" என்று தட்டிக்கொண்டு கொண்டாடும் பயங்கர 'பஸ்டே'க்கள் இல்லை. "ஸ்கூல் பஸ் வந்தாச்சு"வில் "ச்சூ..." என்று ஆரோஹனத்தில் மேல் ஸ்தாயி பிடித்து அவசரகதியில் பாடுபவர்கள் இல்லை. ரெண்டு விரக்கடை இடைவெளியில் ஆதூரத்துடன் நம்மை செல்லமாக அணைத்து ஓட்டும் அன்பான ஆட்டோ நண்பர்கள் இல்லை. அடுத்த பாராவில் இருக்கும் இன்னும் சில இல்லைகளும் இந்த சீனில் உண்டு.

"நாங்களும் குப்பை பொறுக்குகிறோம் பார்!" என்று மார் தட்டி நடு ரோட்டில் அடாவடியாக நின்று கொண்டு நகரை சுத்தம் செய்யும் மாநகராட்சி லாரிகள் இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் கருப்பு நிறத்தின் பல படிமான நிறப் பிரிகைகளில் வாகனப் புகை மண்டலம் இல்லை. தவிச்ச வாய்க்கு இப்போதே தண்ணீர் தருகிறோம் என்ற ரோடைக் கழுவி இருசக்கராதிகளை தலையோடு கால் குளிப்பாட்டி ஓடும் மெட்ரோ வாட்டர் லாரிகள் இல்லை. ஒன்பதரை பத்துக்குள் அலுவலக கட்டிட பார்க்கிங்கிற்குள் போய் அமைதியாக உட்கார்ந்து கொள்ளும் கடமையுணர்வுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர அடிமை வாகனங்களின் சந்தடி இல்லை. மோட்டார் அன்பர்களின் பல தரப்பட்ட ஹாரன் ஒலி எழுப்பி செய்யும் தெருவோர ஆர்க்கெஸ்ட்ராவின் இன்னிசை இல்லை. சுமாராக இருக்கும் கல்லூரிப் பெண்களின் நடமாட்டம் கூட ரோடுகளில் இல்லை. அதைப் பார்ப்பதற்கு அழுக்கு ஜீன்ஸ் போட்ட வெட்டிப் பையன்களும் சுற்றுவட்டாரத்தில் இல்லை. அப்படிப் பட்ட இந்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.

புடவை தலைப்பால் பின்புறம் கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டு சோஃபாவில் சாய்ந்து சன், ஜெயா என்று ஏதாவது ஒரு கேளிக்கை பெட்டியில் இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்ட ஒரு உன்னத உதாரண புருஷன் சீரியலோ, அல்லது இரண்டு புருஷன் வைத்துக் கொண்டு மூன்றாவது தேடும் கற்புக்கரசிகள் சீரியலோ பார்க்கலாம் என்று உட்கார்ந்திருக்கும் வேளையில் தான் அது நடந்தது. வாசலில் ஒரே அலறல். "டாய்.... ஆய்@!#@ #த்தா..." என்று யாரோ யாருடைய பிறப்பையோ சகட்டுமேனிக்கு கேள்வித் தாக்குதல் நடத்திக்கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். திரும்பவும் எதிரியின் ஆக்ரோஷ அடிக்கு ஆட்பட்டு பெவிலியனுக்கு தோற்று தஞ்சம் அடைந்தார்கள். "சிலிங்.. கிலீர்..." என்று கண்ணாடி நொறுங்கும் சத்தம் வேறு கேட்டது. சடசடவென்று கடைகளின் ஷட்டர்கள் ஆவேசத்துடன் இறங்கின. நடுவில் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி வேறு வயற்றில் புளியைக் கரைத்தது. சரோஜா நிமிர்ந்து நேரம் பார்த்தாள்.  பன்னிரண்டு அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது.

ஸ்கூலுக்கு போய் ரமணனை அழைத்து வரவேண்டும். அமளி நிற்குமா என்று தெரியவில்லை. முதலில் ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்தாள். அரக்கபரக்க இங்குமங்கும் அந்தத் தெரு தடித் தாண்டவராயன்கள் மலையாள தம்பிரான்கள் கட்டுவது போல கைலியை மேலே சுருட்டி தூக்கி சொருகிக்கொண்டு கட்டையை கையில் விசிறித் திரிந்தார்கள். அவளுக்கு அரைகுறையாய் கண்ணுக்கு தெரிந்தார்கள். ஒரு எமனேறும் வாகனம் அசால்ட்டாக இவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பொங்கும் நுரையாக எச்சில் ஒழுக பாதி ரோட்டை அடைத்து சமாதானமாக பார்த்துக்கொண்டிருந்தது. யாருக்கோ கொலை முஹூர்த்தம் குறித்து விட்டார்கள் போலிருக்கிறது. தெருவில் கூச்சல் இன்னும் அடங்கிய பாடில்லை. போலீஸ் எங்கே தூங்கப் போயிற்று? சட்டம் ஒழுங்கு ரொம்பத்தான் கெட்டுப் போய் விட்டது என்று அப்போது தான் நினைத்துக் கொண்டாள் சரோஜா.

திடீரென்று "ஐயய்யோ... போயிட்டானே...." பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள் ஆயா ஒருத்தி. கலவரத்தின் கைகலப்பு தெளிவாகக் கேட்டது. போரில் யாரோ ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். ப்ரீ-கே.ஜி விடும் நேரமாகி விட்டது. சரோஜா ரமணனை அழைத்து வருவது பற்றி மிகவும் கவலைப்பட்டாள். பக்கத்து வீட்டிற்குள் வேலைக்காரி உள்ளே நுழைந்தாள். வாசலில் அவளை நிறுத்தி அவள் வாயைப் பிடுங்கினாள் சரோஜா.
"என்னாச்சு கல்யாணி?"
"ஏதோ தகராரும்மா...அடிச்சுக்கரானுங்க..." நிற்காமல் உள்ளே செல்ல எத்தனித்தாள்.
"என்னவாம்?"
"தெர்லம்மா.."
"அட.. அங்கேயிருந்து வர.. உனக்கு தெரியாதா.." பிட்டைப் போட்டாள்.
"வுடும்மா..."
"என்னாச்சு...சொல்லு.." விஷயம் தெரியவில்லை என்றால் மண்டை வெடித்து சுக்குநூறாக சிதறிவிடும் போல இருந்தது சரோஜாவிற்கு.
"அந்தக் கடைசியில ஒரு நாட்டார் கடை இருக்குல்ல.. "
"ஆமாம்.."
"அதத் தாண்டி மாடியில போலிஸ்காரரு  ஒருத்தர் குடியிருக்காறு..."
"ம்.. செக்க செவேல்ன்னு உசரமா புல்லட்ல போவாரே..."
"ஆமா..அவரோட பொண்ணு தாம்பரம் தாண்டி ஒரு பல்லு காலேஜில படிக்குது.. அதுக்கும் ரோட்டுக்கு அந்தப் பக்கிட்டு இருக்கும் ஒரு ஆட்டோக்கார பயலுக்கும் லவ்வு.. ரெண்டு மூணு தடவை கூப்பிட்டு கண்டிச்சுப் பார்த்தாரு.. ஒன்னும் நடக்கலை.."
"ஏன் அவர் போலிஸ் தானே... ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிக்க வேண்டியது தானே ?""அவன் அதோ அந்த போஸ்டர்ல ஈன்னு பல்லைக் காட்டி இளிச்சு கிட்டு ஒருத்தர் இருக்காரே... அவர் கச்சியில அடிப்படை உறுப்பினரா இருக்கான்.. "
"அதனால...."
"போலிஸ்காரரால ஒன்னும் செய்ய முடியலை.. அதனால ரெண்டு அடியாளை செட் பண்ணி பெண்டு எடுக்க சொல்லிட்டாருன்னு பேசிக்கறாங்க...."
"இப்ப என்னாச்சு.."
"என்னாச்சு.. போலிசுக்கு ரெண்டு ரவுடியை தெரியும்ன்னா... ரவுடிக்கு நாலு பேரைத் தெரியாதா?... இவனும் அவனும் ரெண்டு பக்கமா நின்னுக்கிட்டு அடிச்சுக்கரானுங்க... இவன் ரத்த விளாரா நிக்கறான்... மண்டையில இருந்து பொத்துகிட்டு ஊத்துது.. அத்த வுடும்மா. போயி வேலையை பாப்போமா.... " சுரத்து இல்லாமல் சொல்லிக்கொண்டு வேலை செய்யப் போனாள்.

***

முக்குக்கு முக்கு டாஸ்மாக்கிலிருந்து ஃபுல்லாக வெளியேறியவர்கள் பிளாட்பாரங்களில் வாந்தி எடுக்கும் இரவு பதினோரு மணி. எப்பப் பார்த்தாலும் ஆபிஸ்ல வேலை.வேலை.வேலை. என்னக் கருமாந்திர ஆபீசோ.. ஊர் உலகத்துல இல்லாத பொல்லாத ஆபீசு.. என்று மனதுக்குள் சபித்துக்கொண்டு வாசலுக்கு வர பயந்து ஜன்னலில் நின்றிருந்தாள் சரோஜா. "டர்ர்... டர்ர்.. டர்ர்..." என்று அர்த்த ராத்திரி ஆட்டோ ஊர்வலம் திடீரென்று தெருவில் முளைத்தது. சரோஜா பிடித்திருந்த இரும்பு ஜன்னல் கம்பி கூட பயந்தது. சுகுமாரை இன்னும் காணலை. மனசு கிடந்து அடித்துக் கொண்டது. தெரு போர்க்களமாய் காட்சி தந்தது. போலிஸ்காரருடைய ரவுடி சேனைக்கும் தொழில்முறை ரவுடி சேனைக்கும் யுத்தம் தொடங்க ஆயத்தமாயிருந்தது.  காலையில் அடிபட்டவர்கள் இப்போது ஒன்று கூடி அடிக்க வந்திருக்கிறார்கள். திரும்பவும் கண்ணாடி நொறுங்கும் சத்தமும், கட்டை வீச்சும், விர்விர்ரென்று செயின் சுழற்றும் சத்தமும் பீதியை கிளப்பும். ரமணா நன்றாக தூங்கி விட்டான். எழுந்தால் அழுவான். மொபைல் பேசினாள். "பத்து நிமிஷத்ல இருப்பேன்" என்று வாக்குறுதி அளித்தான்.

பன்னெண்டாவது நிமிஷத்தில் வீட்டில் நுழைந்து கைலி மாற்றிக்கொண்டான். பனியனுடன் தட்டும் தண்ணீருமாக சாப்பிட உட்கார்ந்ததும்
"என்னாச்சு.. டல்லா இருக்கே.. லேட்டா வந்துட்டேன்னு கோபமா.. இனிமே லேட்டா வந்தா மல்லிப்பூ அல்வாவோட தான் வருவேன்..." என்று கொஞ்சினான்.
"ச்சே..ச்சே.. காலையில இங்கே ஒரே ரகளை.. கோடியில இருக்கிற போலீஸ்காரன் பொண்ணும் ஆட்டோகாரனும் லவ் பண்றாங்களாம். அடிதடி.. தெருவே ரெண்டு பட்டு போச்சு. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி திரும்பவும் ஒரு பத்து பதினஞ்சு ஆட்டோ இங்க ரவுண்டு அடிச்சுது.. அதான் பயந்து போயிட்டேன்.." என்று கலவரமாய்ச் சொன்னாள் சரோஜா.
"யாரோ..யாரையோ லவ் பண்ணினா நமக்கென்ன.. நம்பளை வந்து யார் என்ன செய்யப்போற.. இதுகெல்லாமா கவலைப் படுவாங்க..." என்று சமாதானம் செய்தான்.

கையலம்பி கொஞ்ச நேரம் டி.வி மேய்ந்தான். ஒரு ஊழல் இன்னொருவரை பார்த்து ஊழல் கொக்கரித்தது. ஒரு வாரிசு இன்னொரு வாரிசை இகழ்ந்து பேசியது. எல்லோரும் தலைவர்களாக உள்ள கட்சி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என்று முழங்கியது. பார்க்க ஒன்றும் சுரத்தாக இல்லை. ஒரு ஏப்பம் விட்டு ஜீரணத்தை கன்ஃபர்ம் செய்த பிறகு படுக்கையில் விழுந்தான்.

"டிக்". வீட்டின் லைட் அணைக்கப்பட்டது. விழித்திருந்த அந்த வீடும் இப்போது தூங்கிற்று. வெளியே சோடியம் வேபோர் விளக்கு பிரகாசமாய் நிர்ஜனமான சாலைக்கு விளக்கடித்துக் கொண்டிருந்தது.

***

மறுநாள் கடைகள் திறந்திருந்த அதே சோம்பல் மதியத்தில்... (எருமை மிஸ்ஸிங்)
"என்ன கல்யாணி...அப்புறம் என்னாச்சு.." கையை பிடித்து இழுக்காத குறையாக கூப்பிட்டாள் சரோஜா.
சலித்துக்கொண்டே "என்னம்மா..." என்றாள்.
"அதான்.. அந்த தகராறு...."
"அந்தக் கூத்த ஏம்மா கேக்கற... நேத்தே அந்தப் பொண்ணும் அந்த ஆட்டோகாரனும் ஓடிப்போய்ட்டாங்க... அதான் ராப்பூரா ஆட்டோல தேடிக்கிட்டு திரிஞ்சானுன்களே..."
"அப்புறம்..."
"அப்புறம் என்ன.. பேரன் பேத்தி பொறந்து நேரா வந்து கால்ல விளுவாங்க.. இவங்களும் சரி சரி போனாப்போவுதுங்கப் போறாங்க.. நாம நம்ம பொழப்ப பாப்போம்.." கட் செய்து விட்டு போய்விட்டாள்.

***

இரவு அதே பதினொரு மணி... சாப்பிடும் கணவனிடம்...
"ஏங்க இந்த விஷயம் தெரியுமா?"
"என்ன?"
"நேத்திக்கு தகராறு நடந்திச்சே.. அந்தப் பொண்ணும் பையனும் ஒடிப் போய்ட்டாங்களாம்?"
"ஆமாம். இந்நேரம் வத்தலகுண்டு பக்கத்தல மலையோர கிராமத்தில ரெண்டுபேரும் சந்தோஷமா இருப்பாங்க..."
இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் சரோஜா. சலனமே இல்லாமல் மோரை உறிஞ்சி குடிக்கும் அவனைப் பார்த்து அதிசயித்தாள்.
"என்ன சொல்றீங்க?" என்று கேட்ட அவள் விழிகள் ஆச்சர்யக் குறி போல விரிந்தது. அப்புறம் பயந்தது.
"அந்த போலீஸ்காரன் கூட இப்ப குடும்பம் நடத்தறது அவனோட ரெண்டாவது பொண்டாட்டியோட ஃபிரண்டு.  இந்தப் பொண்ணை அவங்க ரொம்ப சித்ரவதை பண்றாங்க. அவன் ஒரு இன்செஸ்ட். ஒருநாள் அந்த ஆட்டோகாரன் கூட இந்தப் பொண்ணை ரயிலடிகிட்ட ஒரு தடவை பார்த்தேன். தெருவில ரொம்ப நல்ல பொண்ணுங்கற அக்கறையில "ஏம்மா. இப்படி பண்றே..."ன்னு கூப்பிட்டு கேட்டப்ப, அவங்க ரெண்டு பேரும் எங்கிட்ட என்ன ஏதுன்னு விவரமாச் சொன்னாங்க. அதான் சேர்த்துவச்சுட்டேன்."
"என்னங்க.. இப்படி பண்ணிட்டீங்க....நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா..." என்று படபடத்தாள் சரோஜா. நிதானமாக கை அலம்பிக்கொண்டு வந்தான்.

"சரோஜா, நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாததில தான் இந்த உலகத்தின் சுவாரஸ்யம் அடங்கி இருக்கு. நாளைக்கி வர்றதை நாளைக்கி பார்ப்போம். மனசை போட்டு குழப்பிக்காம... வந்து படு..." என்று தைரியம் சொன்னான். சாப்பிட்டவுடன் உடனே படுக்காமல் கொஞ்சம் நேரம் பாட்டு கேட்டான். ரேடியோவில் "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா.." என்று விக்ரமும் த்ரிஷாவும் பாடிக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே நித்ராதேவியின் பிடியில் இருந்தவளை திரும்பிப் பார்த்து சிரித்தான்.

"டக்.டக்.டக்.டக்..". இந்த அகாலத்தில் வாசல் கதவை யாரோ தட்டுவது கேட்டது.



பட உதவி: http://globalfare.blogspot.com/

-

Tuesday, March 29, 2011

காதலுடன் கமல்

kamalசின்ன வயசில் இருந்தே எனக்கு கமல்ஹாசனைப் பிடிக்கும். ஏன் எதனாலன்னு தெரியாது. "எனக்கு கமலத்தான் ரொம்ப பிடிக்கும்". பத்தாவது படிக்கும் போது இப்படி சொன்னப்ப  கூடப் படித்த அரைடிராயர் ஒழுக்கசீலர்கள் "ஐயையே.. அவன் கன்னப்பின்னான்னு கிஸ்ஸு அடிப்பான். அவன புடிக்குமா"ன்னு அழகு காண்பித்து ஒதுங்கினார்கள். முத்தம் கித்தம் பித்தம்ன்னு ஒரு பாவமும் அறியாத வயசு புரியாத பருவம். காலேஜ் போனதுக்கப்புறம் ரஜினி கமல் என்று வித்தியாசம் பார்க்காமல் கட் அடித்து சினிமா பார்த்தது ஒரு காலம். ஒரு தீபாவளிக்கு குணாவும், தளபதியும் ரிலீஸ் ஆன போது ரஜினி படு ஸ்மார்ட்டா தலையை மேலே தூக்கி சீவி புத்தம் புது மோஸ்தரில் போஸ்டரில் ஸ்டைல் ஆக தெரிந்தார். நம்மாளு ஒரு மாதிரியா என்னைப் போல சைடு வகிடு எடுத்து ஒரு பக்கமாக தலைவாரி என்னை மாதிரி இல்லாமல் லேசா சித்தப் பிரமை பிடித்தவராக நடித்தார்.  என்ன இருந்தாலும், வாழ்வே மாயம், காக்கிச் சட்டை, சகலகலா வல்லவன், டிக்.டிக்.டிக்., உயர்ந்த உள்ளம், எனக்குள் ஒருவன், கலைஞன், உன்னால் முடியும் தம்பி, நாயகன், குரு, விக்ரம், வெற்றிவிழா, உல்லாசப் பறவைகள், தூங்காதே தம்பி தூங்காதே என்று பல படங்களில் மன்மதனை ஒத்த கமலை நாம் கண்ணார கண்டு ரசிக்க முடியும்.

சரி, எங்கயோ போய் விட்டோம். இப்ப இந்தப் பதிவு, நேற்றிரவு கொஞ்சம் சிலிர் காற்று அடித்த போது மொட்டை மாடியில் கேட்ட "முத்தம் போதாதே.. சத்தம் போடாதே" என்று எனக்குள் ஒருவனில் எஸ்.பி.பியும் ஜானகியும் ரொமான்டிக்காக என் வீட்டு சோனியில் பாடியபோது உதித்தது. எப்போதுமே காதலுக்கு ஜே போட்டு பாடுவதில் கமல் பிரசித்தம்.

ஷோபனா கொஞ்சம் உசரம் ஜாஸ்தி. கமல் ஹீல்ஸ் போட்டுகிட்டு நடிச்சாரோ?
இதழ் முத்தம் தரும்.. அதில் பித்தம் வரும்.. நாணமே ..நாணுதே..



அமலாவை கிச்சு கிச்சு மூட்டி, பல்லவனில் புட் போர்டு அடிக்க வைத்து... அமலா பயில்வான் காண்பிக்கும் கட்டம்... எஸ்.பி.பியும் லதாஜியும் .. சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணத் தேராட்டம்.
வளையோசை கல கல கலவென...



இந்தப் பாட்டை சேர்க்கவில்லை என்றால் கமல் பாபம் வந்து சேரும். இளையராஜாவின் இசை ராஜாங்கம். எஸ்.பி.பியும் ஜானகியும் பாடிய பாடல். காதுகளுக்கு தேன். கமல் காக்கிச்சட்டையில் கலக்கிய படம்...
கண்மணியே பேசு.. 


ஒரு போதையில் இருந்து மறு போதைக்கு வரவழைத்த நிரோஷாவுடன் கமல் பாடும் சூரசம்ஹாரம் படப் பாடல். அருண்மொழி பாடியது. நிரோஷாவுடன் கூட ரொமான்ஸ் பண்ணத் தெரிந்த கமல்....

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி..




பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பியில் எல்.கே.மலத்துடன் கமல் பாடும் டூயட். சைக்கிள் எழுந்திருக்க, மரம் பூச்சொரிய, இளமை துள்ளும் சீதாவுடன்....

இதழில் கதை எழுதும் நேரமிது....



ஒரு மாறுதலுக்கு குஷ்பு கிஸ் கொடுக்க ஆரம்பித்து கமல் கதை முடிக்கும் இந்த சிங்காரவேலன் படப் பாடல். எஸ்.பி.பி.. ஜானகி. குழலும், வயலினும் மாறி மாறி பின்னி பெடலெடுக்கும்.....

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்..



கொலைகாரப் பட்டம் கிடைத்து ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள பாடுபடும் கமல், ஈடு இணையில்லா இந்த்ரஜித்தாக நடித்த கலைஞன் படத்தில் இருந்து... ஜேசுதாஸ் ஜானகி பாடிய...

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா...



அம்பிகாவுடன் உயர்ந்த உள்ளத்தில் கிருஷ்ணர் போஸ் கொடுத்து நடு ஹாலில் ரொமான்ஸ் பண்ணும் கமல்.. இளையராஜா, எஸ்.பி.பி. ஜானகி. "டெட்லி ட்ரையோ!"

எங்கே என் ஜீவனே... கண்ணில் கண்டேனே...



பள்ளியறைப் பாடம் படிக்கும் வயதில் பள்ளிப் பாடம் படிக்கச் சொல்லும் ராதாவிடம் காதல் பேசும் கமல். ஒரு கைதியின் டைரி படித்தில் இருந்து..

ஏ.பி.சி நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. சோ ஈசி.. 


இரண்டாவது சரணம் முடிவில் எஸ்.பி.பியின் சிரிப்பிற்கும் கமல் நடிப்பிற்கும் அடாடா.. ஊர்வசி... கமல்.. அந்த ஒரு நிம்டம் படத்தில்.....

சிறிய பறவை சிறகை விரிக்க நினைக்கிறதே .. 



பின் குறிப்பு: இது ஒரு முடிவிலாப் பட்டியல். சட்டென்று தோணியதை இங்கே பகிர்ந்தேன்.

பட உதவி: mp3.tamilwire.com

-

செத்து ஒழி!



fear


உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா? 

பாவம் ஒரு பொண்ணா அவளும் என்ன தான் செய்வா. உன் கூட மாரடிக்கறதே அவளுக்கு வேலையாய்ப் போச்சு.

இதே வேற யாராவது செஞ்சிருந்தா அவ்ளோதான். ஈவ் டீசிங்க்ல புக் பண்ணி மாமியார் வீட்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி வூடு கட்டி கவனிச்சுருப்பாங்க. 

நான் அப்படி என்ன பண்ணினேன்னு மீசையை முறுக்கி கேக்கறியா. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். கல் நெஞ்சக்காரன் நீ.

அவ யார் தெரியுமா? அவளோட ஸ்டேடஸ் தெரியுமா உனக்கு? அவங்க வீட்ல அவ சொல்றதை தான் எல்லோரும் கையை கட்டி எதிர் பேச்சு பேசாம அடக்கமா கேக்கறாங்க. அவளுக்கு அவ்ளோ மருவாதி. நீ கொஞ்சம் கூட மதிக்காம அவ கைலயே ராங்கு காட்ற!! உம்..

முந்தாநாள் பாத்ரூம்ல போய் கதவை தாழ் போட்டு குளிக்க போயிருக்கா. நீ என்ன பண்ணின... என்ன பண்ணின... சீ. நினைக்கவே கூசுது. கதவுக்கு பின்னாடி மறைஞ்சு நின்னு உன் வேலையை காட்டியிருக்கே. சீ.ச்சீ... வெட்கம் கெட்டவனே.. அவ எப்படி அலறினா தெரியுமா.. ராஸ்கல்ஸ். உங்க குடும்பத்துக்கே வெட்கம் மானம் கிடையாதே.. உனக்கு எப்படி இருக்கும்?

சரி. அதை விடு. உன்னைக் கண்டாதான் பிடிக்கலைன்னு தெரியுது இல்ல. அப்புறமும் பெட்ரூம்ல உனக்கு என்ன வேலை. அடுத்தவங்க படுக்கையறைக்குள்ள நுழையறது அநாகரீகம் அப்படின்னு தெரியாது. அதுவும் எப்ப? ராத்திரியில. ஒரு கல்யாணம் ஆன பொண்ணோட அந்தரங்கமான அறையில நுழைஞ்சு அந்த நேரத்தில அவங்க மனசை காயப்படுத்தறதில உனக்கென்ன லாபம். உம். சொல்லு.  அவங்களுக்கெல்லாம் ஒரு ப்ரைவசி வேணாம். உன்னை மாதிரி ஒரு மானங்கெட்டவன் இந்த உலகத்திலயே கிடையாது.

அன்னபூரணி வாசம் செய்யும் இடம் அடுக்களை. அங்க கூட அவ நிம்மதியா இருக்க முடியலையே. அவ பின்னாடியே போய் நின்னு உன்னோட துஷ்டத்தனத்தை அங்கேயும் கொண்டு போய் காமிக்கற. முந்தாநாள் வாங்கின நான்-ஸ்டிக் தவா. உன்னைக் கண்ட எரிச்சல்லையும் பயத்துலையும் பதறிப் போய் தூக்கி அடிச்சு...   இப்ப அது Non-Usable தவா.

இன்னொரு விஷயமும் கேட்கனும். ஏதோ கொஞ்சம் ஆயாசமா ஆனந்தமா பால்கனியில நின்னுருக்கா. நிக்கக் கூடாதா? பாவம் இல்லை. நீ என்ன பண்ணின. பாவி.. ஏதோ fairy மாதிரி உல்லாசமா பறந்து வந்துருக்க. அவளுக்கு அப்டியே சப்தநாடியும் அடங்கிப் போச்சு. உன் கிட்டேயிருந்து தப்பிச்சா போதும்ன்னு விழுந்தடிச்சி ஓடியிருக்கா. நாளுக்கு நாள் உன்னோட அராஜகம் தாங்க முடியலை. 

எனக்குத் தெரியும். ஊழிக் காலம் வந்தாக் கூட நீ ஒழிய மாட்டே!! இப்ப அடிக்கறேன் ஹிட்டு..

நீ செத்து ஒழி

கரப்பானே!

பட உதவி: http://guardian.co.uk

-

Sunday, March 27, 2011

மாறுதல் செய்வோம்

எங்களோட தீவுல நாங்க ஃபுட்பால் பார்க்க ரொம்ப பிரியப்படுவோம். ஆனா பாருங்க யாருமே ஒரு தடவை கூட வெளையாண்டதில்லை. நாங்க இருக்கிற மிதக்கும் தீவுல ஒரு பொட்டு நிலம் கூட கிடையாது. எல்லா இடமுமே தண்ணிதான்.  இங்க நாங்க வெளையாடற ஒரே விளையாட்டு படகுப் போட்டி தான். அப்புறம் பெருசுங்கெல்லாம் சேர்ந்து புடிச்ச மீன்ல எது பெரிசு, எது ரொம்ப வெயிட் அதிகம் போன்ற அக்கப்போர் பேச்செல்லாம் தான்.

marudhal seivom

நாங்கெல்லாம் சேர்ந்து ஒரு கால்பந்து டீம் அமைக்கனும்ன்னு ஒரு நாள் எங்க கோஷ்டியில ஒரு பையனுக்கு ஐடியா ஒன்னு தோணிச்சு. எங்க கிராமத்து ஜனங்கெல்லாம் இதை பார்த்து "இது என்ன கொடுமை?"ன்னு எண்ணி சிரிச்சாங்க." போட் கடைக்கார  போன்மீ இதைப் பார்த்துட்டு "டேய்.. பசங்களா என்ன பண்றீங்க.. கும்பலா நின்னு தையாதக்கான்னு ஆடி மீனையெல்லாம் மிரட்டி வேற பக்கம் விரட்டுறீங்க..."ன்னு சொல்லி சத்தம் போட்டாரு. அதுக்கு எங்க க்ரூப்ல இருந்த நண்பன் பன்யாத் "மாமா.. நாங்க புட்பால் டீம் ஆரம்பிக்க போறோம். எதிர்காலத்துல நாங்கதான் உலக சாம்பியன்"ன்னு சந்தோஷமா கூச்சலிட்டு சாலஞ்ச் பண்ணினான். நாங்கெல்லாம் கூட நின்னு கோரஸாக ஆரவாரித்தோம். பதிலுக்கு போன்மீ "ஹே..ஹி. உங்களை சுத்தி என்ன இருக்கு பார்த்தீங்களா? நீங்கெல்லாம் எங்க இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியுதா?"ன்னு சொல்லி கெக்கெக்கேன்னு எக்காளமா சிரிச்சாரு. 

அவரு சொன்னதும் ரைட்டுதான். நாங்க பயிற்சி செய்ய எங்களை சுத்தி மைதானம் ஏது. எங்களுக்குள்ள ஒரே எண்ணமா ஒரு புட் பால் டீம் இருந்திச்சு. ஆனா ப்ராக்டீஸ் பண்ண மைதானம் இல்லை. எல்லோரும் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டோம். நண்பன் குண்டன் பில்லி ஆவேசமா நாம உடனடியா ஒரு பிச் தயார் பண்ணனும்ன்னு எந்திரிச்சி வீராவேசமா பேசினான். உடனே நாங்க எங்க மிதக்கும் கிராமத்தை சுத்தி இருக்கிற இடங்கள்ள இருந்து பழைய மரங்களை சேகரிக்க ஆரமிச்சோம். பழைய இத்துப்போன மீன்பிடி படகுகளை ஒன்னு சேர்த்து, அங்கங்க சுத்தி திரிந்து கொண்டு வந்த மரக்கட்டைகளை வச்சு ஸ்கூல் விட்டு வந்தப்புறம் கர்ம ஸ்ரத்தையாக ஆத்மசுத்தியுடன் பிச் தயாரிச்சோம். 

நீண்ட நாளைய கடும் உழைப்புக்கு அப்புறம் எங்களுக்கான ஒரு பிச் தயாரானது. ஓடி ஆடும் போதும் அந்த பிச் தண்ணியில நிக்கரதுனால தள்ளாடும், ஒரு கட்டை மேலேயும் இன்னொரு கட்டை கீழேயும் சமம் இல்லாமல் மேடுபள்ளமாக இருக்கும், ஏன் இன்னும் சில இடத்ல சின்னப் பசங்களா நாங்க அடிச்ச ஆணி துருத்திக்கிட்டு இருக்கும். அடிக்கடி பந்து தண்ணிக்குள்ள போய் நீச்சலடிக்க விழுந்துடும். பின்னாலையே நாங்களும் போய் தொபுகடீர்ன்னு விழுவோம். அதனால பிச் எப்போதும் தண்ணியா சொதசொதன்னு இருக்கும். வழுக்கும் வேற. பிச் ரொம்ப சின்னதா இருந்ததால எங்களோட ஃபுட்வொர்க் ரொம்ப பிரமாதமா அமைஞ்சு போச்சு. "ஹே..நீங்கெல்லாம் சாம்பியன் ஆவ முடியாதுப்பா..."ன்னு போட் கடைக்கார போன்மீ வயித்தை பிடிச்சுகிட்டு விழுந்து விழுந்து சிரிச்சாரு.

ஒரு நாள் நம்ம குண்டன் பில்லி கையில ஒரு நோட்டீஸ தூக்கி விசிறிகிட்டே ஓடிவந்தான். அது டவுனுல நடக்கப்போற "பங்கா கப்"ங்கற ஒரு நாள் கால்பந்து போட்டியின் அறிவிப்பு. இதைப் பார்த்தவுடனே எங்களுக்குள்ள பல பேர் பல விதமா பேசிக்கிட்டாங்க. "நம்மால கலந்துக்க முடியுமா? நமக்கு தகுதி இருக்கா"ன்னு ஆழமா யோசிச்சோம். கலந்து பேசினோம். கடைசியில போட்டியில கலந்துக்கறதுன்னு தீர்மானம் பண்ணினோம்.

போட்டியில கலந்துகிட்டு விளையாடறதுன்னு முடிவு பண்ணின பிறகு நாங்க டவுனுக்கு புறப்படற வேளையில போட் கடை பான்மீ "தம்பிகளா! உங்களோட ட்ரெஸ்ஸ பார்த்தா விளையாடப் போற மாதிரி தெரியலை.. இந்தாங்க இதை போட்டுக்கிட்டு போங்க..."ன்னு கையில ஒரு நீல கலர் டி-ஷர்ட்டை ஆட்டிக்கிட்டு அவரோட வழக்கமான சிரிப்பு இல்லாமல் எங்களை உற்சாகப்படுத்தும் வகையில பேசி சிரிச்சாரு. அப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சுது, இவ்ளோநாள் நாங்க ப்ராக்டீஸ் பண்றதை எங்க ஊர் முழுக்க கவனமா பார்த்திருக்கு. எங்களுக்கு ஊக்கமா டிரஸ், ஷூ எல்லாம் ஊர்ல வாங்கி கொடுத்தாங்க. இன்னும் கொஞ்சம் பேர் எங்களோட மேட்ச் பாக்கறதுக்கு எங்க கூடவே டவுனுக்கும் வந்தாங்க.

மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால எங்களுக்கு ஒரே பதட்டமா இருந்தது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நாங்க எங்களைப் பத்தி நினைச்சதை விட நல்லாத்தான் விளையாடறோம்ன்னு தோணிச்சு. அந்தப் பழைய கட்டு மரத் தோனியிலும், பழைய தட்டுமுட்டு மரத்திலும் தயாரிச்ச பிச்ல விளையாண்டது எங்களது திறமையை நல்லா செழுமையா வளர்த்திருந்தது. அவ்வளவு குட்டியோண்டு இடத்தில விளையாண்டதினால டவுன் மைதானத்தில இருந்த  அவ்ளோ பெரிய கோல் போஸ்ட்ல எங்களுக்கு ரொம்ப சுலபமா கோல் அடிக்க முடிஞ்சுது. ஊர் மக்கள் ஆச்சர்யத்தக்க வகையில நாங்கள் செமி பைனல் வரைக்கும் முன்னேறி வந்துட்டோம்.

செமி பைனல் மிகவும் மோசமா துவங்கிச்சு. ஒரே காட்டு மழை அடிச்சு பெஞ்சுது. எங்களோட ஷூக்குள்ளலாம் ஒரே தண்ணீ. எங்களோட போட்டிபோட்ட டீம் முதல் அரையில் ரெண்டு கோல் போட்டு முன்னனியில இருந்தாங்க. நாங்கெல்லாம் மனசுடைஞ்சு நொந்து போய்ட்டோம். எப்படி இந்த கேம்ல ஜெயிக்கரதுன்னு தெரியலை. அந்த மோசமான முதல் அரை மணிக்கு பிறகு நாங்க ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். எங்களோட தண்ணீ பூந்த ஷூவை கழற்றி வீசினோம். வெறும் காலோடு விளையாட ஆரம்பித்தோம். சொன்னா நம்பமாட்டீங்க.. ரொம்ப நல்லா ஓட முடிஞ்சுது. எங்க ஊர்ல நாங்க விளையாண்டதே இப்படித்தானே. அதனால எங்களுக்கு ரொம்ப சுலபமா இருந்திச்சு. பதிலுக்கு அசராம நாங்களும் முயற்சி பண்ணி ரெண்டு கோல் தட்டிட்டோம். ஆனா, கடைசி நிமிஷத்ல அவங்க அடிச்ச ஒரு கோல்னால ஜெயிச்சுட்டாங்க. நாங்க ரொம்ப சோகமாயிட்டோம். இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தது எங்களுக்கு சந்தோஷம்தான். எங்க ஊரே எங்களை பார்த்து ரொம்ப பெருமைப்பட்டுச்சு.  போன்மீ காலரியிலேர்ந்து "எலே.. நீங்கதான் டாப்பு..."ன்னு மகிழ்ச்சியா கத்தி மெச்சினாறு. எங்களுக்கு ரொம்ப உச்சி குளுந்துபோச்சு.

அப்புறம் ஃபுட்பால் தான் எங்க பான்யீ கிராமத்தின் முதன்மை பொழுதுபோக்கா மாறிச்சு. வழவழன்னு ஆணி குத்தாத சமமா இருக்கிற பிச்செல்லாம் தயார் பண்ணினோம்.
(இது Panyee FC -என்ற தாய்லாந்து நாட்டின் முன்னணி கால்பந்து அணியின் உண்மைக் கதை)

கீழே இருப்பது நான் இவ்வளவு நேரம் மேலே தமிழில் குதறி(உளறி) வைத்ததின் வீடியோ.


நன்றி.

நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு என்று ஒரு பின்னூட்டமாவது வரும் என்ற நம்பிக்கையில்...

பின் குறிப்பு: போன்மீ, பன்யாத் போன்ற தாய்லாந்து பேர்லாம் நான் சூட்டியது.

-

Friday, March 25, 2011

ஒரு துணை நடிகையின் கதை - IV

இந்த தொடருக்குள் முதன் முதலாக இப்போதுதான் நுழைந்தீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய அத்தியாவசிய மூன்று காரியங்கள் புல்லெட் பாய்ண்ட்டாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மேற்கொண்டு விசாரணைக்கு அந்த இரவு நேரத்திலும் பிசியாக இருந்த K-3 காவல் நிலையத்திற்குள் நுழைவோம். குற்றங்கள் குறையவில்லை.


************************** க்ளைமாக்ஸ் ரீல்**********************

"ஏட்டு எட்டு டீ வாங்கியாரச் சொல்லுங்க..." என்ற விருந்து உபசாரத்தோடு பஞ்சாயத்தை ஆரம்பித்தார் பாண்டித்துரை. ஐம்பதை எட்டித் தொடும் வயது. கட்டு மஸ்தான தேகம் அவரின் தினசரி உடற்பயிற்சிக்கு கட்டியம் கூறியது. சராசரி போலிஸ்காரர்களிடம் இருந்து அவருடைய அவயங்களும் நாகரிகமும் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போன்று இருந்தது. மாதம் இருமுறை வளர வளர ஒட்ட வெட்டும் அக்மார்க் போலீஸ் கிராப். ஓரத்தில் எலுமிச்சம்பழம் குத்தச் சொல்லும் நறு நெய் பூசி வளர்த்த மீசை. பளபள ஷூ. கருப்பான வலது கரத்திற்கு சிறுசிறு முடி போட்ட சிகப்பு கயிறு கட்டியிருந்தார். ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவாக இருப்பார். எட்டி உதைத்தால் எதிராளி பத்தடி பறந்து போய் விழுவான். அவர் ரத்தத்தில் போலீஸ் உத்தியோகம் ஊறியிருந்தது. எதிர் வரும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் கையால் நெஞ்சில் மெடல் குத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட சர்வ தகுதியும்  வல்லமையும் படைத்த உத்தமமான போலீஸ் ஆபீசர்.

ரைட்டர் தாண்டி காந்தி படத்திற்கு கீழே சோனாவிற்கு ஆசனம் கொடுத்து அமர வைத்திருந்ததில் அவரின் கண்ணியம் தெரிந்தது. அரசாங்க உதவி பெரும் ஒரு கால் இழந்த முன்னாள் இராணுவ வீரருக்கு சொந்தமான பங்க் கடையில் இருந்து டீ வாங்கி வரும்போது நிலா தெரியாமல் மூடியிருந்த வானம் லேசாக தூற ஆரம்பித்தது. ராம் மதியத்திலிருந்து ஓய்வொழிச்சல் இல்லாமல் அலைந்ததில் கலைந்த தலையும் பசியில் ஓசையிடும் வயிறோடும் கால் ஆடும் மர பெஞ்சின் ஒரு ஓரத்தில் அடுத்து என்ன நிகழுமோ என்ற பயத்தில் உட்கார்ந்திருந்தான்.

"என்ன மளையா" என்றார் அதிசயத்துடன் பாண்டித்துரை.
ஆவி பறக்க சூடான டீ எல்லோர் கையிலும் களைப்பு தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்டவுடன் பாண்டி ஆட ஆரம்பித்தார்.
"பாடி இப்ப எங்க இருக்கு?"
கேள்வியை வாங்கிய எதிரேயிருந்த தொப்பி அணியாத கான்ஸ்டபிள்
"ராயபேட்டா மார்ச்சுவரில.."
"டாக்டர் ரிப்போர்ட் கொடுத்துட்டாங்களா?"
"கொடுத்துடாங்கையா.."
"என்னவாம்?"
"கயித்தால களுத்த இறுக்கி கொன்னுருக்காங்க.."
"ம்.."
"சம்பவம் எப்ப நடந்துச்சாம்"
"ஏழரைலேர்ந்து எட்டுக்குள்ள..."
"ம்..."
நான்கு மாநில ரெஜிஸ்டிரேஷன் எண்களுடன்  நம்பர் ப்ளேட் தயாரித்து கடத்தலுக்கு பயன்பட்ட சீஸ் பண்ணிய, வேப்பமரவாசியான அண்டங்காக்கா எச்சமிட்ட சேப்பு குவாலிஸ் இப்போது அழுக்கு தீர மழையில் குளித்துக்கொண்டிருந்தது. வெளியே மழை நன்றாக அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இன்னமும் அச்சம் தீராமல் பேய் முழி முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் ராம். ஏதோ போதை கொஞ்சம் தெளிந்தார்போல விழிகளை உருட்டி இரண்டு பக்கமும் பார்த்தார் 'ராஜா-ராணி' ராகவன். கண்ணுக்கு எதிரே மங்கிய மசமசப்பான உருவத்திலிருந்து சரியாக ஜூம் செய்யப்பட கேமெராவின் வியூபைன்டரில் வந்து விழுந்தது போல சோனா கண்ணுக்கு தெரிந்தாள். கொஞ்ச நஞ்சம் எறும்பு கடிப்பது போல இருந்த போதை கூட இப்போ டாடா பை பை சொல்லிக் கொண்டு ஓடிப்  போய்விட்டது.

"என்னங்கப்பு.. தெரிஞ்சுதா... கடேசியா அவங்க போன்லேர்ந்து இந்தம்மா போனுக்குதான் கால் போயிருக்கு... என்னாச்சு சொல்லு..." என்று அதட்டினார்.
"இல்ல சார்! அவங்க எனக்கு ரொம்ப நாள் சிநேகிதம். அப்பப்ப பேசுவாங்க.." என்று வினயமாக பதிலளித்தாள் சோனா.
"உனக்கும் கொலையானாங்களே அவங்களுக்கு என்ன தொடர்பு?" கண்ணை மூடி நிதானமாக கேட்டார் பாண்டித் துரை.

"சினிமாவுக்கு ரெண்டு பெரும் நாயகியா நடிக்கணும்ன்னு நல்லா சம்பாதிக்கனும்ன்னு வந்தோம். பாலராஜா இயக்குனரோட படத்துல ரெண்டு பேருக்கும் ஒரு வேஷம் கிடைச்சுது. ஏதோ அன்னிக்கு வறுமைக்கு வயித்த கழுவ ஒரு வேலை மாதிரியும் கிடைச்சுது. அப்புறம் இன்னும் ரெண்டு படத்துக்கு வனஜாவை சில பேர்ட்ட சிபாரிசு பண்ணி ராகவன் சேர்த்துவிட்டார். அப்புறம் கொஞ்ச நாள்ல அவரே ஆசை நாயகியா நிரந்தரமா ஒரு வீடு வாங்கிக் கொடுத்து வச்சுக்கிட்டாறு."
 "அப்புறம்..."
"வேற ஒன்னும் இல்ல சார்!"
"சாகறத்துக்கு முன்னால போன்ல என்ன சொன்னாக..."
"இல்ல... இப்பெல்லாம் ராகவன் சார் கண்டுக்கவே மாட்டேங்கறாரு.. தலைகால் தெரியாம நிதானம் இல்லாம குடிச்சா இந்த அட்ரெஸ் தெரிஞ்சவங்க யாராவது கொண்டு வந்து விடறதோட சரி.. சில சமயம் ஒரு டீ..காப்பி போட்டு சாப்பிட்ரத்துக்கு கூட வீட்ல காசு பேர மாட்டேங்குது .."ன்னு சொல்லி அழுதாங்க சார்!"
"வேற ஒன்னும் இல்லையா..."
"இல்ல சார்!"
"ரெண்டு நாளைக்கு முன்னாடி ராத்திரி என்ன பேசுனாங்க" என்று ஏர்டெல் ஆசாமிகள் கொடுத்த எண்கள், கூப்பிட்ட தேதி, கிழமை, நாள், நட்சத்திரம் என்று முழு ஜாதகம் இருக்கும் லிஸ்டை தோளில் அங்கவஸ்திரம் போல போட்டுக்கொண்டு குடைய ஆரம்பித்தார் பாண்டித்துரை. ராகவன் தாகமே இல்லாமல் ஒரு தம்ப்ளர் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். வெளியே மழை இன்னும் கொஞ்சம் வலுத்தது. இங்கு புலன் விசாரணை சூடு பிடித்தது.
"ராகவன் சார் முதல் சம்சாரம் அவர் கிட்டயிருந்து எல்லாத்தையும் பிடிங்கிகிச்சு. இருந்தப்பவே அரையணா ஒருஅனா கொடுப்பாரு. இப்ப ரொம்ப சுத்தம்.. "ன்னு சொல்லிட்டு வனஜா அழுதா. நான் அவளுக்கு சமாதானம் சொன்னேன். சாரைப் பார்த்து நான் உனக்காக கேட்கறேன். நீ கவலையை விடுன்னு சொல்லி தைரியம் சொன்னேன்" என்று சரளமாக பேசினாள்.
ஓரத்தில் மௌனமாக உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராம்
"சார்! அவங்களை ஏன் சார் குடையறீங்க. யார் கொன்னாங்களோ அவங்களை போய் புடிங்க சார். சும்மா எங்களை கொண்டு வந்து பதினொரு மணிக்கு மேல இங்க உக்கார வச்சுகிட்டு. பாருங்க ராகவன் சார் எவ்ளோ வருத்தமா உட்கார்ந்திருக்காருன்னு. ராகவன் சாரை பத்தி உங்களுக்கு தெரியாது. அவரால சி.எம் கிட்ட கூட இப்ப நினச்சாலும் பேச முடியும்" என்று உதார் விட்டு எகிற ஆரம்பித்தான்.
லத்தியை சுழற்றி வேகமாக மேசையில் "டமார்..." என்று அடித்து 
"டேய்... இப்ப நீயி வாயப் பொத்திகிட்டு இருக்கியா..." என்று எழுந்து ருத்திரதாண்டவம் ஆடினார் பாண்டித்துரை. அவர் மீசை துடித்தது. நரம்பு நர்த்தனம் ஆடியது.

ஸ்டேஷன் கப்சிப் ஆனது. பா.துரையை அலட்சியபடுத்தி மழை மட்டும் விடாமல் தொணதொணவென்று பெய்தது கொண்டிருந்தது. சோனா மழைக்காக நடுங்கினாளா அல்லது பாண்டித்துரையின் ஆர்ப்பாட்ட கூச்சலுக்கா என்று தெரியவில்லை, கால் இன்னமும் தனியாக தடதடத்துக் கொண்டிருந்தது.
"இன்னிக்கி சாயந்திரம் எங்க இருந்தே" என்றார் சோனாவிடம்.
"ஏ.வி.எம்ல பக்தி படம் சூட்டிங். வேப்பிலை பாவாடை கட்டிக்கிட்டு அஞ்சாவது ப்ளோர்ல உட்கார்ந்திருந்தேன்."
"யார்ட்ட பொய் சொல்ற!"
"சத்தியமா சார்"
"இன்னொரு முறை சொன்னே முன் பல்லு எல்லாம் பேர்ந்துடும்..." என்று உருட்டினார் பாண்டித்துரை.
"சோமு இங்க வாங்க..." என்று அழைக்க மழைக்கு போலிஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கியவன் போல கே.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பு மேற்பார்வை உள்ளே வந்தான். சோனா அதிர்ந்தாள்.
"சொல்லுங்க...இவங்க இன்னிக்கி அங்க வந்தாங்களா?"
"இல்ல சார்! இவங்களை கூப்பிட்டப்ப ஆட்டோல எங்கயோ போய்கிட்டு இருக்கிற சத்தம் கேட்டது. வரலையான்னு கேட்டப்ப.. இன்னிக்கி ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னேன்னு கெஞ்சிச்சு... சரின்னு உட்டுட்டேன்..." என்று கைகட்டி சொன்னான்.
"இப்ப சொல்லு.. எங்க போயிருந்தே.. அடையார் தானே..."
"அபாண்டமா பேசாதீங்க சார்! உங்க வாய் புளுத்து போய்டும்.."
"என்னடி கண்ணகி மாதிரி சீரற.. மெட்ராச எரிச்சுடுவியோ.. " என்று கேட்டுக்கொண்டே நேராக ராகவனிடம் போய் கொத்தாக சட்டையை பற்றி நடு ஸ்டேஷனுக்கு தரதரவென்று இழுத்து வந்தார். இன்ஸ்பெக்டரின் எதிர்பாராத இந்த செயலால் தடுமாறினார் ராகவன்.
"சொல்லுங்க.. உங்களுக்கும் சோனாவுக்கும் என்ன தொடர்பு..."
போதை முழுவதும் போய் உடம்பெங்கும் வேர்க்க விறுவிறுக்க...
"எனக்கு ஒன்னும் தெரியாது சார். நான் அப்பாவி."
"அப்புறம் எதுக்கு இந்த பாவிக்கு அடிக்கடி சோனா போன் பண்ணறா"
"அது ஏதாவது பட சான்ஸ் இருக்கான்னு கேட்டு பண்ணுவா சார்"
"ஒரு நாளைக்கு பத்து தடவையா.. அது சரி அப்படியே இருந்தாலும் நீயே இப்ப எதுவும் படம் எடுக்கலை.. எவ்ளோ பேர்ட்ட டெய்லி கேட்டு படம் வங்கிக் கொடுப்பே.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு போன் பண்ணினா கூடவா.. பன்னெண்டு மணிக்கு படம் வாங்கி கொடுப்பியா இல்ல படுக்கை வாங்கி கொடுப்பியா...ம். சொல்லு..." என்று அந்த அங்கவஸ்திரத்தில் ஒரு பகுதியை பார்த்துக் கொண்டே மிரட்டினார் பா.துரை.
விசாரணை போன திக்கில் திக்கித்துப் போனான் ராம். அவனுக்கு ஆகாயம் கீழேயும் மேலேயும் இடம் மாறுவது போல இருந்தது. காதலி இன்னொருவனுக்கு கள்ளக் காதலி ஆனாளா என்று மனது உடைந்து இதயம் நொறுங்கினான்.
"எங்கே உன் கையை நீட்டு....." என்று அவளுக்கு கட்டளையிட்டார்.
இரு கையின் ஆயுள் ரேகை பாயும் இடங்களில் தடிமனாக சிகப்பாக ரத்தம் கட்டியிருந்தது. ராம் மூர்ச்சையானான். ராகவன் எல்லாம் முடிந்தது என்று எண்ணிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நடு கூடத்தில் குத்த வைத்து கீழே உட்கார்ந்தார்.
"இனி மறைச்சு பிரயோஜனம் இல்லை.. சொல்லு..."
"எனக்கு வாழ்க்கையில பணம் சம்பாரிக்கறது ஒன்னு தான் குறி. என் அழகால இந்த உலகத்தை வாங்கிடலாம்ன்னு நினச்சேன். ஒன்னும் ஆகலை. என்னோட குடும்பத்தை பிரிந்தேன். காதல், கத்திரிக்கா கொள்கைன்னு இந்த ஆள் மாதிரி என்னால இருக்க முடியலை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைன்னு படிச்சுருக்கேன். ஒன்னும் பெருசா கோபுரத்துக்கு போக முடியலை. அப்பத்தான் இருக்க ஒரு வீடாவது நமக்கு வேணாமான்னு, ராகவன் சார் கிட்ட கொஞ்சம் நெருங்கி பழக ஆரமிச்சேன். எப்பப் பார்த்தாலும் அவர்ட்ட பணம் பணம்ன்னு நச்சரிச்சுக்கிட்டு இருந்த வனஜா கிட்டேயிருந்து அவருக்கும் விடுதலை தேவைப்பட்டது. அவளை கழுத்தை நெரித்து கொன்னுட்டு தற்கொலைன்னு ப்ரூவ் பண்றதுக்கு பாடிய எரிய விடறத்துக்காக அடுப்படியில கேசை திறந்து ரெடியா வச்சுருந்தேன். கட்டில்ல உட்கார்ந்து பேசிகிட்டே இருந்தப்ப குளிக்க கிளம்பினா." கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டாள் சோனா. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான் ராம்.

"அப்படியே பெட்ரூம் ஓரத்துல கட்டியிருந்த கொடி கயிறை எடுத்துகிட்டு பின்னாலையே போனேன். மொதெல்ல திமிறினா. நல்லா சுருக்கு போட்டு அழுத்திக் கொன்னேன். பாடிய அடுப்படிக்கு கொண்டு போறதுக்கு முன்னாடி கேஸ் எவ்ளோ பரவியிருக்குன்னு எட்டிப் பார்க்கறதுக்கு போனேன். அப்ப மாடிப் படியில யாரோ ஏறற சத்தம் கேட்டது. கதவை சார்த்தாம வந்துட்டோமேன்னு பயப்பட்டேன். இது உள்ள நுழைஞ்சு எட்டி பார்த்து பயந்து நின்னுக்கிட்டு இருந்தப்ப பின்னால நைசா  நழுவி ரோடுக்கு ஓடி ஆட்டோ ஏறி ரூமுக்கு போய் தலைவலிக்குதுன்னு படுத்துக்கிட்டேன். நீங்க போன் பண்ணி இந்தம்மாவை அனுப்பி என்னை இங்க கூட்டிகிட்டு வந்துட்டீங்க." என்று முழுசாக எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்தாள்.
"நீங்க ஏன் காசு கொடுத்து ராமை வனஜா வீட்டுக்கு அனுப்புனீங்க?" என்ற பா.துரை கேள்விக்கு
"அடிப்படியில தீ பிடிச்சு எரிஞ்சு வனஜா செத்துட்டாங்கறதை கன்ஃபர்ம் பண்ணிக்கவும், என் மேலே யாருக்கும் சந்தேகம் வராம இருக்கனும்ன்னும் தான் அப்படி செஞ்சேன் .." என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார் ராகவன்.

காதலும், காதலியையும் தொலைத்து விட்ட சோகத்தில் ராம் பைத்தியம் பிடித்தது போல இருந்தான். ராகவனையும், சோனாவையும் அற்ப மானிட பதர்களாக பார்த்தான்.
ராமை பார்த்து "நீங்க போகலாம்" என்றார் பாண்டித்துரை.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான் ராம். மழை விட்டிருந்தது. விடியற்காலை சந்திரன் குளிர் பிரகாசம் கொடுத்துக்கொண்டிருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் இவனை பார்த்து சிரித்தன. ஆவின் பால் வேன் வலது பக்க மஞ்சள் நிற இண்டிகேட்டர் போட்டு திரும்பியது. தெருநாய் ஒன்று குப்பைத் தொட்டியை முகர்ந்து பார்த்துவிட்டு ஓடியது. நாளைக்கு நல்ல பொழுதாக விடியும் என்ற நம்பிக்கையில் அந்தத் தெருவின் கடைசி தெருவிளக்கின் கீழே நிதானமாக நடந்து சென்றுகொண்டிருந்தான் ராம்.

(இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், குணசித்திர வேடங்கள், உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கிறது)



பட உதவி: zazzle.com.au

பின் குறிப்பு: இதுவரை பொறுமையாக படித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டத்தில் ஆஸ்கர் பெறுவேன் நான். நன்றி.

-

Thursday, March 24, 2011

ஒரு துணை நடிகையின் கதை - III

கதை உள்ளே தொபகடீர்ன்னு குதிக்கும் முன் மேலே இருக்கும் ரெண்டு குட்டியையும் ச்.சீ..சீ.. சுட்டியையும் படிக்காதவங்க மொதெல்ல படிச்சுடுங்க....

**************************  மூன்றாவது ரீல் ****************************
பர்ஸ் திருட்டு கேஸ் எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு ஒரு குயர் டம்மி தாள் வாங்கியாரச் சொல்லும் ரைட்டர், கட்டை பிரேம் கண்ணாடி போட்டு வெற்றிலைச் சாறு ஒழுகும் வாயோடு இரண்டு மாதத்தில் ரிடையர் ஆகப்போகும் ஏட்டு, நாயர் கடை வாட்டர் டீ வாங்க ஒரு 302, வில்ஸ் ஃபில்ட்டர் சிகரெட்டு வாங்க ஒரு 402 சகிதமான K-3 காவலர் இல்ல சபையில் இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை ராம்மிடம் முதற்கட்ட விசாரணை ஆரம்பிக்கும் முன்...

clap cardவாலி படம் ரிலீசான புண்ணிய வருஷத்தில் வயதை மீறிய வனப்பமாக பாரி முனை பஸ் ஸ்டாண்ட், ராணி மேரி கல்லூரி பேருந்து நிறுத்தம், அயல் தேசத்து வாசனாவி திரவியங்கள்,லாப் டாப், ஐபாட், மெமரி  மற்றும் இதர எலக்ட்டிரானிக் ஐட்டங்களை குருவியாய் பறந்து வாங்கி வந்து கள்ளத்தனமாய் கடை போட்டு விற்கும் புறாக்கூண்டு கடைத்தெரு, பத்தடிக்கு எட்டடியில் பசுமாடு சாணி போட்டு அம்மனை மறைத்து நிற்கும் முப்பாத்தம்மன் கோயில் வளாகம் போன்ற எல்லா இடங்களிலும் ஆண்பால் பெண்பால் பேதமில்லாமால் அனைவரையும் அட்லீஸ்ட் அரை நொடி நேரமாவது ஸ்தம்பிக்க வைத்தவள் பொன்னா. கல்லூரிக்கு போகையில் சவாரி கேட்கும் சாக்கில் ஐந்து ஆட்டோவாவது "எங்க போகணும்?" என்று தலை துருத்தி கேட்காமல் போகாது. அவள் பெயர் தெரிய வந்தால்  "பொன்னாக்கு இலவசம்" என்ற வாசகம் எழுதி ஆட்டோ ஓட்டினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

கந்தையை கசக்கிக் கட்டிக்கொண்டு இளமை வாசனையுடன் கன ஜோராக புண்ணியம் பண்ணிய புஸ்தகத்தை மாருக்கு அணைத்துக்கொண்டு பஸ் ஏறும் போது கண்டக்டர் அந்த அழகுக்கு முதல் மரியாதை கொடுத்து எழுந்து நின்று டபுள் விசில் கொடுப்பார். வண்டி ஹோல் இல்லாத மின்ட் சுவைத்த வாயாக புத்துணர்வு பெரும். பெரிசுகள் திறந்த வாய் மூடாமல் பொக்கை காண்பிக்கும். சின்னஞ்சிறுசுகள் மெய்மறந்து சுயம் இழக்கும். ஜோடி சிகப்பு கண்ணாடி வளையல்கள் வலைக்கரங்களில் கிலுகிலுக்கும். காதுக்கு கல்யாணி கவரிங் ட்ராப்ஸ். காது கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக வழுவழு கழுத்துக்கும் இணையான அதே நட்டு நகைகள். மொத்தத்தில் ஐந்தடி ரெண்டங்குல கல்யாண்ஜி கவிதை.

அவள் கால் பட கல்லூரிப் படிகள் மாதவம் செய்திருந்தது. கல்லடி பட்டாவது அவளது கண்ணடி பட மாட்டோமா என்று ஜூனியர் சீனியர் வித்தியாசம் இல்லாமல் ஏங்கியவர்கள் பலர். சில சபல வழுக்கை ப்ரொஃபசர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாவது ப்ளாக் கிரவுண்ட் ப்ளோர் மாணவர்கள் கூட அவளோடு சேர்ந்து பிரார்த்தனையாக நான்காவது மாடி வரை தினமும் அவள் சரணம் சொல்லி "4 x பதினெட்டு படி" ஏறினார்கள். விரதம் இருந்து இருமுடி கட்டாததுதான் பாக்கி. அவ்வளவு ராட்ஷஷ பிரேமை கலந்த பக்தி. இறுதியாண்டு உயிரியல் இரண்டாவது செமஸ்டர் முடியும் தருவாயில் ஒரு நாள் மெயின் க்ரில் கதவு தாண்டியதும் புன்னை மரத்தடியில் "ஏழுமலையான் பிலிம் சர்க்யூட்" என்ற அழுக்கான வேன் பின்புற கண்ணாடியில் நின்ற திருக்கோல வெ.ஜலபதி படத்துடன் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

கலர் பேப்பர் சுற்றிய புஷ்டியான விளக்குகளை லைட் மேன்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்த ரெண்டு லைட் பாய்கள் ஆளுக்கொரு கை கொடுத்து சுமந்து கொண்டு இங்குமங்கும் சென்றுகொண்டிருந்தார்கள். புல் தரைகளில் கருப்பு ஒயர் பாம்புகள் கண்டமேனிக்கு நெளிந்தன. தோளில் சிறிய தேங்காய்ப்பூ துண்டைப் போட்டுக் கொண்டு அந்த பத்து பதினைந்து மரத்தடி சூழ்ந்த கல்லூரி சோலையில் "இப்டி.. இப்டி.. இந்தப் பக்கம்.. ஏய்.. அத அங்க வைக்காத.. ரிப்லேக்டர் வக்கர இடமா அது.. ட்ராலி உள்ள போகுமா.. ரெட்  ரோஸ் அம்பது வந்துருச்சா... எங்க போனான் இந்த ஓணான்... நீ போடா.. போடா.. " என்று சகலருக்கும் கட்டளை பிறப்பித்து உலாத்தினார் அந்த சினி யூனிட் முக்கியஸ்தர். மர நிழலில் ஒருவர் அனாவசிய குடைபிடிக்க கையில் கண்ணாடியுடன் சிகப்பு லக்மே குச்சி கொண்டு இதழுக்கு வர்ணம் அப்பிக் கொண்டிருந்தாள் திரையுலக கனவுக்கன்னி. க.க. நாற்காலிக்கு பின்பக்கம் நின்று கொண்டு கேசத்தை வாரி அலையாக்கிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெரியவர். பக்கத்து மர அடிவாரத்தில் எடுக்கப் போகும் காட்சிக்காக ஹீரோயினுக்கு கூட கிளாசுக்கு போகும் எடுபுடி காலேஜ் பெண்கள் தலையில் ஜோடித்துக்கொள்ள சிகப்பு ரோஜாவுக்காக காத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்ததிலேயே ஒரு இளமையான காலேஜ் பெண்ணின் ஆறு மாதக் கைக் குழந்தை மரத்தில் கட்டிய சேலைத் தொட்டிலில் கையை சூப்பிக்கொண்டு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

ரீல் காலேஜ் பெண்களை தாண்டி ரியல் கல்லூரிப் பெண்கள் வாயாடிக்கொண்டே கடந்து போனார்கள். குதிரை வால் கூந்தலுடன் அன்ன நடையில் போன பொன்னாவின் பளபளப்பு ரிப்லேக்டர் வெளிச்சத்தை மீறி ஏவல் செய்துகொண்டிருந்த தோளில் குட்டித் துண்டு போட்டவரின் கண்களைக் கூசியது. அந்த ஏழையின்  அழகு அமோகமாக அவரை ஈர்த்தது. ட்ராலியையும், க.கன்னியையும், சினிமாக் கல்லூரி பெண்களையும், வண்ண விளக்குகளையும், ராட்சத விசிறிகளையும் பார்த்துக்கொண்டே வந்தவள் சட்டென்று திரும்பும் போது பட்டென்று குட்டித் துண்டு முக்கியஸ்தரின் சட்டைக்கு பட்டன் போடாத பொசுபொசுவென்ற சுருள் முடி மார்பில் தனது மெல்லிய தோளால் வலுவாக இடித்துவிட்டாள். அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டார்.

"ஸாரி!"  இருவரும் சேர்ந்தே பஜனை பாடுவது போல மாப்பு கேட்டார்கள்.
"நா வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்.. உங்களை கவனிக்கலை.." என்றாள் ஒருவித நாணத்துடன் பொன்னா.
"பரவாயில்லை.. நானுந்தான் பார்க்கலை.. "
இத்தோடு இந்த சம்பாஷனை நின்றிருந்தால் இந்தக் கதை கருப்பொருள் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கும்.
"என்ன படம்..." வலிய கேட்டாள் பொன்னா.
"ரஜினி சார் படம்..." வழிய சொன்னான் குட்டித் துண்டு.
"அண்ணே... ரோஸ் கிடைக்கலையாம்.. மல்லிப்பூ தேவலாமான்னு ஓணான் கேக்கறான்.." கூவிக்கொண்டே ஒரு கையில் ஃபோனோடு ஒரு எடுப்பு ஓடி வந்தான்.
"டேய்.. கட்டுபடியாகாதுடா.. ஏற்கனவே நம்மாளு அண்டர்வேர்லேர்ந்து காசு எடுக்க சொனங்கராறு.."
"ஒரு நிமிஷம்" என்று அவளிடம் கை காண்பித்துவிட்டு மொபைலை வாங்கி..
"டே. மார்க்கெட் கோடியில எஸ்.ஜே வாடாமலர்கள்ன்னு ஒரு கடை இருக்கும். கஜேந்திரன் அப்படின்னு கருப்பா ஒருத்தர் கல்லாவுல உட்கார்ந்து பூத்தொடுத்துகிட்டு இருப்பாரு. நான் சொன்னேன்னு சொல்லு.. ரேட்டு கொஞ்சம் பார்த்து போட்டு கொடுப்பாரு.. ஆளுக்கு குறைஞ்சது ரெண்டு முழமாவது வேணும்.. மல்லி இல்லைன்னா ஜாதி வாங்கிட்டு வா.. பொண்ணுங்களுக்கு பூ வாங்கிக்கொடுத்தா போற வழிக்கு புண்ணியம். அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணு...."
"இந்தா பிடி.. ஓணான் திரும்பவும் ஃபோன் பண்ணினா எங்கிட்ட குடு..." என்று எடுப்பை அனுப்பி விட்டு
"உம் சொல்லுங்க.." என்றான் அங்கு நின்றிருந்த பிரம்மன் செதுக்கி வைத்த உயிர்ச்சிலையை பார்த்து.
"இல்ல.. என்ன படம்ன்னு கேட்டேன். "
"ஹாங்... ரஜினி சார் படம்.. தமன்னா ஹீரோயின்... நீங்க கூட அசப்புல பார்க்க ஹீரோயின் மாதிரி தான் இருக்கீங்க.." ஆயிரம் குடம் ஜொள்ளுடன் வழிந்தான்.
"நீங்க யாரு டைரக்டரா..." என்று பதிலுக்கு வெள்ளந்தியாக கேட்டாள் பொன்னா.
"ஹி..ஹி.. உங்க வாய் முஹூர்த்தம் ஆரேனான்னு பார்ப்பம்.."
"நீங்க யாரு..."
"அண்ணே! ஓணான் லைன்ல.." என்று கரடியாக புகுந்தான் எடுப்பு.
என்னென்ன எவ்வளவு வாங்க வேண்டும் என்று சடுதியில் சொல்லிவிட்டு இவளைத் திரும்பி பார்க்கையில் வகுப்பிற்கு நேரம் ஆகி விட்டதென்று அவள் கையை பிடித்து தரதரவென்று சிநேகிதிகள் இழுத்துப் போக ஆரம்பித்திருந்தார்கள். அவள் தலை அனிச்சை செயலாய் இவனைப் பார்க்க திரும்பியது.
"அப்புறம் பார்க்கலாம்.. பேரைக் கூட சொல்லாம போறீங்களே." குரல் விட்டான் இவன்.
"பை...பை.. பொன்னா... உங்க பேரு..." எதிர்க் குரலிட்டாள்.
"ராம்."
வம்பளந்த தோழிகளுடன் களுக் என்று சிரித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வகுப்பிற்கு விரைந்தார்கள்.

பத்து நாட்கள் நடை பெற்ற கல்லூரி காதல் காட்சியில் படத்தின் ஹீரோ ஹீரோயின் காதலிப்பதை விட ராம்-பொன்னா காதல் உரம் போட்ட பொன்னி அரிசி போல தளதளவென்று செழித்து வளர்ந்தது. இருவரும் கால் கண், அரைக் கண் பார்த்தது போக கண்ணோடு கண் பார்த்தார்கள். வெட்கம் மண் பார்க்க வைத்தாலும், ஆசை கண் பார்க்க வைத்தது. இரண்டடி, ஓரடியாகி அப்புறம் ஒரு நாள் பீச் கண்ணகி சிலை மார்பில் தரை அடிவாரத்தில் மடியோடு மடியாகிப் போனது. செக்கரட்டிரியேட்டில் ரூ 3200 அடிப்படை சம்பளத்தில் நிதி இலாகாவில் அட்டெண்டர் வேலை பார்க்கும் மாரிமுத்துவுக்கு அவரது டிரைவர் நண்பர் போஸ் அளித்த உளவுத் தகவலில் வீடு ரெண்டு பட்டது. இவள் காதலித்ததால் இவளின் தங்கையை எந்த கிறுக்கன் கலியாணம் செய்து கொள்வான் என்ற பேச்சு எழுந்தது.
"படிக்கும் போதே என்னடி லவ்வு.." என்று குடித்துவிட்டு அப்பன்காரன் ஜவ்வு கிழிய அடித்ததில் பாசம் போய் இன்ஸ்டன்ட் பணம் பார்க்கும் எண்ணம் வந்தது.

ஒரு மாலை நேர பீச் சந்திப்பில்...
"எனக்கு எதுனா வேலை வாங்கித் தரியா" என்று வாஞ்சையுடன் ராமைக் கேட்க அவன் திரையுலகில் பிரபலமான "பா" வரிசை வெற்றிப்பட இயக்குனரான பாலராஜாவிடம் ஆட்டோவில் இட்டுச் சென்றான்.
"பேர் என்னா" என்று அலட்சியமாக புகையை ஆகாயத்திற்கு அனுப்பிவிட்டு சிகரட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கி சாகடித்துக் கொண்டே கேட்டார் அந்த ஜாம்பவான். முன்னால்  டீ பாயில் ப்ளாக் டீ கலரில் ஒரு திரவத்திற்குள் ஐஸ் மிதந்து கொண்டிருந்தது.
"பொன்னா"
"என்னா"
"பொன்னா"
"ரொம்ப கிராமாந்திரமா இருக்கு.. சோனான்னு வச்சுக்க.. ஸ்டைலா இருக்கும். அடுத்ததா லவ்வாயணம் அப்படின்னு ஒரு யூத் சப்ஜெக்ட் பண்றேன்.. அதுல ஏதாவது தர முடியுமான்னு பார்க்கிறேன்.." என்று பெரிய மனது வைத்தார்.

அதிரடியாக சினிமாவில் நுழைந்ததால் தங்கையின் எதிர்காலம் எண்ணி வீட்டை விட்டு நிரந்தரமாக தள்ளி வைத்தார்கள். ஒரு நாள் மாலை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை சார்த்தினார் மாரிமுத்து. வாடகைக்கு ரூம் பிடித்து தங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள் பொன்னா என்கிற சோனா.

இந்த ராம் காதலி சோனாவின் மொபைலுக்கு தான் கடைசியாக பாத்ரூமில் இறந்து கிடந்த இந்தக் கதையின் முதல் பாரா பெண்ணிடம் இருந்து  கால் போயிருக்கிறது. அடையாற்றில் மொபைலில் நம்பர் பிடித்து பீச்சுக்கு வந்து இருவரையும் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஜீப்பின் பின் சீட்டில் உட்கார்ந்திர்ந்த ராம் பீச்சிலிருந்து ஸ்டேஷன் வரும் வரை ரீவைண்ட் செய்து பார்த்ததை நாமும் ஒட்டு கேட்பது போல இதுவரை ஓசியில் பார்த்தோம். விசாரணையை அடுத்த ரீலில் கடா மீசை பாண்டித்துரை கலகலப்புடன் தொடங்குவார். விசாரணையையும் கதையையும் சீக்கிரம் முடிப்போம் என்ற நம்பிக்கையுடன்......

தொடரும்...
பட உதவி: http://mississaugakids.com/

-

Wednesday, March 23, 2011

ஒரு துணை நடிகையின் கதை - II


********************** இரண்டாவது ரீல் *************************
cinema reelரோடோர மர நிழலில் ஒதுக்கி நிறுத்திய போலீஸ்காரர்களை பார்த்து கலவரப்பட்ட ராமிடம்..
"எங்கப்பா போரே..." என்று ஒரு ஆறு மாத கர்ப்பஸ்திரியான ஒரு காக்கி கேட்டது.
"மயிலாப்பூர் சார்" என்று ஐயாவுக்கு அடக்கமாக பதிலளித்தான் ராம்.
இரண்டு டூ வீலர்கள் அருகில் ஓட்டி வந்து போலிஸ் ஏதாவது சில்லறை தேத்துகிறதா என்று நோட்டம் விட்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனார்கள். ஹாரன் அடிப்பது ஒன்றே குறிக்கோளாய் ஒரு மாநரக பஸ் நிறைமாத புள்ளைத்தாச்சியாய் டிராபிக்கில் நீந்தியது.

ஹாரனுக்கு இருகைகளாலும் காதை பொத்திக்கொண்டு "இவர மைலாப்பூர் டாங்க்காண்ட வுட்டுடு" என்று ஒரு எட்டு மாதத்தை பில்லியனில் உரிமையோடு ஏற்றிவிட்டது. காலைத் தூக்கி போட்டு ஏறும்போது வண்டியை சரியாமலும், பின்னுக்கு குடை சாயாமலும் இருக்க காலால் ரோடில் சேறு மிதித்து பாலன்ஸ் செய்ய பிரம்ம பிரயத்தனப்பட்டான் ராம்.
"ஓ.கே சார்" என்று ராம் தலையாட்டி கிளம்ப பில்லியன் ரோடோரத்துக்கு ஒரு சல்யூட் வைத்தது.
பின் சீட்டில் போலிஸ் இருக்கும் தைரியத்தில் இத்திருநாட்டின் முக்கிய மந்திரிகள் போல அலட்சியமாக சிகப்பு சிக்னல் கடந்தான். பின்னால் இருந்து காங்கிரஸ் சின்னம் போல ஓரத்தில் இருந்த போக்குவரத்திடம் சை'கை' காண்பித்து ராமை சுலபமாக அழைத்துசென்றது எட்டு மாதம்.
"எங்க சார் வொர்க் பண்றீங்க" தோழமையாக விசாரித்தது எட்டு.
"ஃபிலிம் இண்டஸ்ட்ரில..."
"அது எங்க இருக்கு" என்று கேட்ட எட்டுவை ரியர் வியூ மிர்ரரில் ஒரு லுக் விட்டு..
"சினிமால சார்.."
"ஓஹோ.. வெரி குட். என்னவா இருக்கீங்க"
"ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட்"
"இந்தப் பக்கம் என்ன ஏதாவது ஷூட்டிங்கா..."
"இல்ல.இல்ல.. தெரிஞ்சவங்க ஒருத்தரை பார்க்க வந்தேன்.." என்று கொஞ்சம் தடுமாறினான்.
போலிஸ் பின்னால் இருந்தும் சைலன்சருக்கு பதில் தகரடப்பா கட்டிய இளந்தாரி ஆட்டோ ஒன்று இவனை கட்டடித்ததில் வெகுண்டான். துரத்தி சென்று பதிலுக்கு கட் அடிக்கலாம் என்றால் வண்டி சறுக்கிவிடும் அபாயம் ஏற்பட்டதால் நிதானத்திற்கு வந்து அமைதியானான்.

டாங்கில் அவரை இறக்கிவிட்டவுடன் பாரம் இறங்கி பெருமூச்சு விட்டு வண்டி ராமுக்கு நன்றி சொன்னது. நேரே சென்று அடுத்த வலதில் இருந்த பிக்னிக் பிளாசா பார் நிறுத்துமிடத்தில் வண்டியை நுழைத்து "ஓரமா போடுப்பா..." என்று சொன்ன செக்யூரிட்டியை கண்டுக்காமல் ஓரக்கண்ணால் பார்த்து இரண்டு வண்டிக்கிடையில் முன் வீலை மட்டும் சொருகிவிட்டு மேலே பார் இருக்கும் இடத்திற்கு ரெண்டு ரெண்டு படியாக ஏறி விரைந்தான்.

வெள்ளையில் ராஜா தேசிங்கு போல தலைப்பாகை அணிந்து சிரம் தாழ்த்தி கதவை திறந்து உள்ளே விட்ட பணியாள் வரும் போது இவன் டிப்ஸ் குடுப்பானா என்ற சந்தேகத்தில் பார்த்தான். உள்ளே நுழைந்த மாத்திரத்தில் சுருள் சுருளாக சுற்றிக்கொண்டிருந்த சிகரட் புகையை Passive Smoker-ஆக சுவாசித்தான். இரண்டு ஆரம்ப நிலை குடிகார சின்னப் பயல்கள், தினமும் ஒரு கொள்கையாக ஒரே ஒரு லார்ஜ் அடிக்கும் கண்ணியவான்கள், "பீரைத் தவிர நா வேற ஒன்னையும் தொடமாட்டேன்" என்று சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்தியவான்கள், சைட் டிஷ்ஷை மட்டும் பிளேட் பிளேட்டாக வேட்டு விடும் டீ டோட்லர்கள் என்று பலரும் சிரத்தையாக குடித்துக்கொண்டும் கம்பெனி கொடுத்துக்கொண்டும் போதையோடு உட்கார்ந்திருந்த பாரை கண்களால் துழாவினான். கண்ணாடி பாட்டில்களின் கைகெட்டும் தூரத்தில் எம்பி உட்காரும் குரோர்பதி சேரில் அமர்ந்து பொறுக்க சரக்கடித்துக் கொண்டிருந்தார் ராகவன். நான்காம் நம்பர் டேபிளுக்கு முட்டை பொறியல் சைட் டிஷ் எடுத்து வந்த அட்டண்டரை மயிரிழையில் இடிக்காமல் ரெண்டே எட்டில் அவரை அடைந்தான்.

"அண்ணே..."
"யாழு.." என்று திரும்பிய அண்ணனின் கண்கள் ரத்த சிவப்பாயிருந்தது.
"யாருப்பா அது... இவருக்கு ஒரு லெமன் கொடுப்பா..." என்று பக்கத்தில் கூப்பிட்டு ஆர்டர் செய்துவிட்டு, காதருகில் சென்று..
"அண்ணே... அடையார் அண்ணி... செத்துட்டாங்க..கொ...." என்று சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு "லை" அவன் காதில் கூட விழாத மாதிரி கிசுகிசுத்தான்.
ஏதோ புரிந்த மாதிரி பார்த்தார். தெய்வாதீனமாக உடனே லெமன் வந்தது. சரக்குக்காக அவர் நீட்டிய கோப்பையில் லெமனை ஊற்றி கொடுத்தான். இன்னும் இரண்டு கிளாஸ் தருவித்து கொடுத்தான் ராம்.
"பில்லு கொடுப்பா.."
பெரிய சேரில் இருந்து இறக்கும் போது தடுமாறினார். கீழே விழும் முன் தோளோடு சேர்த்து கைத்தாங்கலாக அணைத்துகொண்டான். சட்டைப் பையில் இருந்த ஒரு காந்தி நோட்டை உருவி கொடுத்துவிட்டு, மீதம் இருந்ததை "நீயே வச்சுக்கோ..." என்று தயாள குணத்தோடு தானம் வழங்கி படியிறங்கினான் ராம்.
"எழ்ங்க போழ்ற..." மழலையில் குழறிய ராகவனிடம் "அண்ணி... செத்துட்டாங்க.." என்று வண்டி எடுக்கும்போது கொஞ்சம் சத்தமாக பேசியது பக்கத்தில் வாயை கையில் ஊதி வாசனை தெரிகிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்த புதுசாக கல்யாணம் ஆன இளைஞன் அதிர்ச்சியாய் பார்த்தான்.

பீச்சாங்கரை பக்கமாக வண்டியை செலுத்தினான் ராம். தொப்பை பெருத்த போலிசை ஏற்றி வந்ததை விட சிரமமான காரியம் ஸ்டடி இல்லாமல் தீர்த்தவாரி ஆகி பின்னால் இருக்கும் ராகவனை அழைத்துபோவது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆங்காங்கே விளக்குகள் ஒளிரும் பத்தரை மணி மரீனா நகை நட்டு பூட்டிக்கொண்ட நவயுக நங்கை போல இருந்தது. இன்று இரவு பிரிந்து இருக்கவேண்டுமே என்ற கட்டயாத்தில் இருக்கும் காதலர்கள் இன்னமும் நகமும் சதையுமாக உட்கார்ந்து கொண்டும் சயனித்துக் கொண்டும் காதல் புரிந்து கொண்டிருந்தார்கள். சுண்டல் விற்ற காசை பெஞ்சில் உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். பட்டம் விற்கும் பரட்டை தலை அம்மணியின் ஜட்டி போடாத இரண்டு வயது கருகரு ஆம்பளை பிள்ளை  இன்னதென்று தெரியாமல் எதற்கோ "வீல்..வீல்.." என்று அழுதுகொண்டிருந்தான். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நூலை சுற்றிக்கொண்டிருந்தாள். "நாளைக்கு பாகற்காய் பிட்ளை பண்ணிடுறேன்.." என்று மறுநாளைய மெனுவை ஹியரிங் எய்ட் வைத்த அகமுடையான் காதில் ஓதிக்கொண்டு சென்றாள் மாமி ஒருத்தி. அந்த மாமியின் முட்டிக்கையில் ஒரு  பலமான இடி இடித்துக்கொண்டு காற்றில் கீழே விழும் துணிபோல மணலில் சாய்ந்தார் ராகவன்.
தள்ளாடிக்கொண்டு தள்ளாத வயதில் இருந்த மாமியை இடித்த ராகவனையும் ராமையும் "இடியாடிக் பீப்பிள்" என்று வைதார் ஹியரிங் எய்ட் மாமா.

வரும்வழியில் ஒரு குளிர்பானக் கடையில் வாங்கிய ஒரு லிட்டர் பிஸிலெரி தண்ணீரை ஊற்றி கையில் வாங்கி முகத்தில் அறைந்தான் ராம். ஒரு உதறலோடு மணலில் திரும்பி படுத்துக்கொண்டார் ராகவன். முகத்தை திருப்பி தட்டி தட்டி உலுக்கினான். இன்னமும் பாத்ரூமில் ஷவர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்குமா என்று ஒரு கணம் யோசித்தான். அவள் கொக்கி போல கிடந்ததை நினைக்கும் போது நெஞ்சு நடுங்கியது. மீண்டும் மீண்டும் "அண்ணே.. அண்ணே.." என்று தண்ணீர் தெளித்து உலுக்கி உருட்டிக்கொண்டிருந்தான். கொஞ்ச நாழியில் அலுத்துப்போய் எழுப்புவதை விட்டுவிட்டு ரோடுப் பக்கம் பார்த்தான். கமிஷனர் ஆபிஸ் நிறைய விளக்குகளுடன் ஜெகஜோதியாய் தெரிந்தது. உள்ளே இருப்போருக்கு ஒளிமயமான எதிர்காலம். நான்கு போலீசார் நிதானமாக ராம் இருக்கும் திசைக்கு நடந்து வருவதை பார்த்து திகைத்தான்.
"அண்ணே..அண்ணே..." என்று பரட்டு பரட்டு என்று அவரை சொரிந்தான். சில நொடிகளில் பூதாகார நிழல்கள் மறைக்க காக்கிகள் பக்கத்தில் நின்றார்கள்.

"நீதானே ராம்!"
"ஆமா சார்"
"உனக்கு சோனாவைத் தெரியுமா?" என்று கனைத்துக்கொண்டே கேட்ட இன்ஸ்பெக்டர் கேள்விக்கு பதிலளிக்காமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ராம். இன்னமும் தலை கவிழ்ந்து எதையோ பினாத்திக் கொண்டு மணலில் கிடந்தார் ராகவன்.
 "ம்..சொல்லு..." என்று கே-3 ஸ்டேஷன் அதட்டல் தோரணையை இங்கேயே ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.
ராம் வெலவெலத்தான்.
தொடரும் 

பட உதவி: http://sites.google.com/site/wisdubai/student-of-the-month/societyculturethroughworldcinema

-

Tuesday, March 22, 2011

ஒரு துணை நடிகையின் கதை

film cameraஇது ஒரு அப்பட்டமான கொலைதான். ராமிற்கு பயத்தில் கை கால்கள்  தடதடவென்று நடுங்கிற்று. இதயத்தின் லப் டப் சட்டென்று ஒரு வேக ஓட்டம் பிடித்தது. ஒரு தடவைக்கு இரண்டாம் முறை புத்தியை தீட்டிக்கொண்டு கண்ணை கசக்கி உன்னிப்பாக கவனித்தான்.  Strangulated. ஆயுதமாகப் பயன்பட்ட நைலான் கொடிக் கயிறு குழாயருகில் தேமேன்னு தொங்கிற்று. வெண்சங்கு கழுத்தில் கயிற்றின் அச்சு பீச் மணலில் கார் டயர் தடம் போல பதிந்திருந்தது. "சிர்ர்ர்.." என்று ஷவர் தண்ணீரை பூவாளியாய் இறைத்தது. கோணலாய் டைல்ஸ் தரையில் கொக்கி போல சரிந்து விழுந்து கிடந்த அவளுக்கு தண்ணீர் துளித்துளியாய் வாய்க்கரிசி போட்டதுபோல இருந்தது. சவத்திலும் லக்ஷனமாகத்தான் இருந்தாள். உயிர்ப்போடு இருந்தபோது கண்ணழகி என்று எல்லோரும் பாராட்டிய இரண்டும் கோலிக்குண்டு போல வெளியே பிதுங்கி வந்திருந்தது. நேற்று தான் ஐ ப்ரௌ த்ரட்டிங் செய்து புருவங்களை செயற்கை வில்லாக்கியிருந்தாள். கஷ்கட்டு வரை தூக்கி மேலே கட்டிய வெள்ளை உள்பாவாடை முட்டிக்கு கீழே வாக்சிங் செய்த வழுவழு வாழைத்தண்டை பளீரென்று காண்பித்தது. தங்க முலாம் பூசிய மாங்காய் டிசைன் போட்ட கொலுசு காலை அலங்கரித்திருந்தது. ஐப்பசி மாத அடை மழை போல ஷவர் தங்கு தடையில்லாமல் ஜோவென்று கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தது. மேனியில் வெள்ளைத் துணி இருக்கும் இடங்களின் உள்ளே இருப்பவைகளை வெட்கம் இல்லாமல் வெளியே காண்பித்துக் கொண்டிருந்தது விவஸ்த்தை கெட்ட பச்சைத் தண்ணீர். தலை முழுகாமல் இருப்தற்கு வெண்மை நிற ஷவரிங் கேப் அணிந்திருந்தாள்.


ஐம்பது நாட்கள் முக்கி முனகி ஓடிய அல்லது ஒட்டப்பட்ட 'ராஜா-ராணி' என்கிற அபூர்வ தமிழ்படத்தில் ஹீரோயினுக்கு பக்கத்தில் பச்சைத் தாவணியில் இடுப்பில் குடத்தோடு தண்ணீர் தூக்கிக்கொண்டு ஐந்தாறு பேரோடு பிரேமுக்கு ஓரத்தில் வந்து வெள்ளித்திரையில் ஒரு கால், ஒரு கை, அரை முகம் என்று பாதி தெரிந்தாள். அறிமுகம் என்று கூட டைட்டில் கார்டு போட முடியாத அளவிற்கு ஐம்பது செகண்ட் மட்டும் திரையில் நீடித்த புதுமுகம். பற்பசை விளம்பரங்களில் பவுடரோடும் லிப்ஸ்டிக்கோடும் பிரஷ் வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பது போல இவளும் முழு மேக்கப்போடு குளியலுக்கு இறங்கியிருக்கிறாள் போலிருக்கிறது. இப்போது இவள் குடியிருக்கும் இந்த அடையார் டூ பெட்ரூம் அப்பார்ட்மென்ட், தலையில் துண்டைப் போட்டுக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளர் 'ராஜா-ராணி' ராகவன் தனது அன்பு மிகுதியால் பரிசளித்தது. இழுத்து போர்த்திக்கொண்டு சில படங்களில் 'கௌரவமான' வேடங்களில் நடித்தாள். இழுத்து போர்த்திக்கொள்ள முடியாதபடி துணி உடுத்தி பல படங்களில் கிளுகிளுப்பாக வந்து பார்த்தாள். ஊஹும். ஒன்றும் பெயரவில்லை. எதிலும் சோபிக்கவில்லை. இண்டஸ்ட்ரியில் ராசியில்லாத நடிகையாகி பெயரிலிருந்து குடித்தனம் வரை ஒவ்வொன்றாக கைரேகை, வாஸ்து, ராசிக்கல், பெயரியல் என்று ஒருவர் பாக்கியில்லாமல் சேவித்து மாற்றிக்கொண்டு வந்து கடைசியில் 'ராஜா-ராணி'யுடன் பழக்கமாகி ஒருவழியாக அடையாரில் செட்டில் ஆனாள்.

ராகவன் படம் எடுக்கும் தொழிலில் படுத்துவிட்டாலும் இன்னமும் அதே கோதாவோடு வெளியில் நடமாடுகிறார். புதுப் பட பூஜைகள் கலந்துகொள்கிறார். மற்றவர்களுடன் தோளோடுதோள் கூட்டணியாக நின்று கொண்டு விஸ்வரூப பாடல்கள் ஸி.டி வெளியீட்டு விழாவில் முன்னணிகள் வழங்க சிரித்துக்கொண்டே பெற்றுக்கொள்கிறார். நகரின் தலைசிறந்த கிளப்களில் பதினொரு மணிக்கு மேலே சரக்கினால் வானத்தில் மிதக்கும் போது, அவரை நடுரோட்டிற்கு கொண்டு வந்த நட்சத்திர நடிகரை வாய்க்கு வந்தபடி வகைதொகை இல்லாமல் திட்டுவார். அவரினால் கலைத்துறையில் முன்னுக்கு வந்த தயாள குணம் படைத்த யாராவது ஒருவர் ஆட்டோகாரனுக்கு காசு கொடுத்து விருகம்பாக்கத்தில் இறக்கிவிடச் சொல்லுவார்கள். ஆட்டோகாரர் கைத்தாங்கலாக வீட்டில் இறக்கி விடுவதற்குள் அரை நூற்றாண்டு அசிங்க கதைகளை அரை மணி நேரத்தில் ராகவன் உளற கேட்டிருப்பார். சிலசமயங்களில் அடையார் முகவரி தெரிந்தவர்களின் உதவியால் அடையாறுக்கும் வந்து போகிறார்.

ஒரு சவத்திற்கு முன் எவ்ளோ நேரம் ராமை பாத்ரூம் வாசலில் நிற்க வைப்பது. பாத்ரூம் வரைக்கும் ராம் வந்தது தெரிந்தால் ராகவன் அவனை 'மேல்'நாட்டிற்கு நாடு கடத்திவிடுவார். "அண்ணி!" என்று சர்வமரியாதையாக அழைத்துக்கொண்டு மின்விசிறியால் கலைந்து கிடந்த புத்தகங்கள் படபடத்த படுக்கையை தாண்டி ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவிற்கு கதவு ஒருக்களித்திருந்த குளியலறை வரைக்கும் வந்துவிட்டான். ஹால் வரைக்கும் அடிக்கடி வருபவன் தான். ராகவன் கொடுத்தனுப்பிய புது ஐந்து ரூ.1000 சலவை நோட்டுகள் சட்டைப்பையில் வெளியே துருத்திக்கொண்டு இருந்தது. அதில் காந்தி அலாதியாக சிரித்துக்கொண்டிருந்தார்.

மொபைலில் ராகவனைக் கூப்பிட்டான். ஏழு மணிக்கு கிளம்பும்போது ஏ.வி.எம்மில் யாரிடமோ "அப்போ அவங்க ஹிந்தியில புகழின் உச்சாணியில இருந்தாங்க.. அவங்களை தமிழுக்கு கொண்டு வந்து ஒரு படம் பண்ணினோம் பாருங்க.. அது படம்.. சில்வர் ஜூபிலி. சும்மா பிச்சுகிட்டு ஓடிச்சு" என்று பழைய பல்லவியை பாடிக்கொண்டிருந்தார். பசித்த புலியிடம் வசமாக சிக்கிய ஆடு போல தலையை ஆட்டி கேட்டுக்கொண்டிருந்தார் எதிர்த்தாற்போல் உட்கார்ந்திருந்த ஐம்பது வயது வெள்ளை அண்ட் வெள்ளை. இப்போது "ஹலோ மை டியர் ராங் நம்பர்..." என்று யேசுதாஸ் இரண்டு முறை பாடிவிட்டார். ராகவன் அண்ணன் ஃபோனை எடுக்க காணோம். ஷவரை நிறுத்துவதா, அங்கேயே இருப்பதா, போலிசுக்கு போன் செய்யலாமா, இந்த வீட்டில் எதையாவது தொடலாமா, தொட்டோமோ நாம் மாட்டிக்கொள்வோமா என்று பலவிதமான கட்டளைகள் மூளையின் பல ந்யுரான்களில் இருந்து வெள்ளமாக வடிந்த வண்ணம் இருந்தது. குழம்பினான். குலதெய்வம் அன்னியூர் பேச்சியம்மனை வேண்டிக்கொண்டு மொபைலில் கூப்பிட்டவுடன் இந்தமுறை ராகவன் எடுத்தார்.
"யாழு..." என்று பேசிய அவர் வாய் வழுக்கியது.
அவனுக்கு புரிந்துவிட்டது. அண்ணன் குடி சித்தராகி இப்போது நீரில் நடக்கிறார்.
"அண்ணே! அண்ணி.. செத்துட்டாங்க..."
"எழ்ந்த அழ்ன்னி" நாக்கு சுழற்றியடித்து பேசினார்.
ச்சே.. என்று தலையில் அடித்துக்கொண்டு
"அடையார்... அடையார்ண்ணே.."
"அழ்ன்னிங்கற.. அழ்ன்னங்க்ற..."
"அண்ணிதான்னே! ஐயோ.. யாரோ கொலை பண்ணிட்டாங்க..."
"யாழ்ழு.... நீழு..."
இனி அவரிடம் ஃபோனில் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்துகொண்டான். மடமடவென்று வெளியே வந்து கதவை வெறுமனே சார்த்திக்கொண்டு கீழே வந்து ஹோண்டாவை உதைத்தான். வலுவான இளமை உதையில் உடனே உயிர்ப்பெற்று கிளம்பிற்று. இன்றைக்கு சனிக்கிழமை. நிச்சயம் பிக்னிக் பிளாசாவில் தான் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை அண்ணன் மது முகாமிட்டிருப்பார். யாராவது வகையாக சிக்கியிருப்பார்கள்.

மேம்பாலம் தாண்டி கூவம் பாலம் ஏறினான். படிப்படியாக வேகத்தை கூட்ட ஆக்சிலேட்டரை முறுக்கினான். ஆந்திர மஹிலா சபா வாசலில் நின்றிருந்த ரெண்டு கான்ஸ்டபிள்கள் கையை ஆட்டி மடக்கி அவனை ரோடோரத்துக்கு ஒதுக்கினார்கள். காக்கியை கண்டதும் குப்பென்று உடலில் இருந்து வியர்வை ஆறு போல பொங்கிற்று. நாக்கு வரண்டது. அவனையறியாமலேயே கண்களில் கலவரம் வழிந்தது. மின்சாரம் போல உடம்பெங்கும் ஒருவித பீதி பற்றிக்கொண்டது.


தொடரும்.

பின் குறிப்பு: மிகவும் ஜாக்கிரதையாக சிறுகதையாகத்தான் தொடங்கினேன். உஹும். முடியாது என்ற நிலையில் குறுந்தொடராக தொடர்கிறேன். போன முறை போல இல்லாமல் நிச்சயம் அடுத்த எபிசோடில் முடிக்கும் எண்ணத்துடன் இதை முடிக்கிறேன். நன்றி.
 
படக் குறிப்பு: படக் கேமரா கிடைத்த இடம் http://www.curtainsupinc.org
-

Monday, March 21, 2011

கூட்டணி (அ)தர்மம்

அது ஒரு அடர்ந்த வனம். அந்த அத்துவானக் காட்டில் ஒரு குள்ள நரி தன்னுடைய நண்பர்களான புலி, எலி, ஓநாய் மற்றும் கீரிப்பிள்ளையுடன் சுகஜீவனம் நடத்தி வந்தது. ஒரு நாள் அந்தக் காட்டில் நன்கு புஷ்டியாக வளர்ந்த ஒரு மானைக் கண்டார்கள். அடித்து ஐந்து நாட்களுக்கு உட்கார்ந்து சாப்பிடும்படியான நல்ல வாட்டசாட்டமான மான் அது. அந்தப் பகுதியின் மான் கூட்டத் தலைவன் போல இருந்தது. கண்ணெதிரே வேட்டையை பார்த்ததும் நாக்கை சப்புக்கொட்டினாலும் அந்த மானுடைய ஓடும் திறனும், சக்தியும் இவர்களை அதை நெருங்கவொன்னாதவாறு கட்டிப்போட்டு இருந்தது. நித்யமும் அதைப் பார்த்து "ஹும்....." என்று சேர்ந்தார்ப்போல் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இந்தக் கூட்டணி வேடிக்கைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டது.

KanikaNeedhi

எப்படியும் அந்த மானை ருசிக்கும் நோக்கோடு குள்ளநரி ஒருநாள் ஒர் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியது. நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து கூடிப் பேசும்போது குள்ளநரி ஒரு அபாரத் திட்டம் வகுத்து பின்வருமாறு பேசியது:
"தோழர்களே! நம்மிடம் மிக வலிமை வாய்ந்தது புலிதான். அவரால் தான் இந்த மானை அடித்து வீழ்த்தமுடியும்  இருந்தாலும் மான் மிகவும் இளமையாகவும் உறுதியாகவும் இருக்கிறது. முழு வலுவுடன் நன்றாக துள்ளிக்குதித்து மிகவேகமாக ஓடுகிறது. மேலும் நம்மைவிட கொஞ்சம் புத்திசாலியாகவும் தெரிகிறது. ஆகையால் புலி நினைத்தாலும் கனவில் கூட அதை அடித்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு துளிக்கூட இல்லை. ஆகையால் நான் ஒரு உபாயம் கூறுகிறேன். அந்த மான் தூங்கிக்கொண்டிரும் போது உருவில் சிறியதாக இருந்தாலும் நம் எலியார் சென்று அந்த மானின் காலைக் கடித்துவிட்டு வந்துவிடட்டும். கால் கடிபட்டவுடன் அந்த மானால் முன்னைப்போல் வேகமாக ஓடமுடியாது. காலை இழுத்துக்கொண்டு நொண்டி நொண்டித்தான் ஓடும். அந்த சந்தர்ப்பத்தில் நம் புலியார் ஓடிச்சென்று அதை அடித்துக் கொன்று விடுவார். அதற்குப் பிறகு நாம் அனைவரும் அதை பங்கு போட்டு கூட்டாக தின்னலாம்." என்று கதை, திரைக்கதை அமைத்து இயக்கம் புரிந்தது.

நினைத்தபடியே முதல் நாள் எலியார் புகுந்து மானின் காலைக் கடிக்க, அது மறுநாள் ஓடுவதற்கு திணற, புலியார் துரத்தி அடித்துக் கொன்றுவிட்டார். இப்போது எல்லோரும் விருந்துக்கு ரெடி. செத்துக்கிடக்கும் மானின் அருகில் உட்கார்ந்து கொண்ட குள்ளநரி, "நண்பர்களே! நான் இதை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் இந்த இரையை அருந்துவதற்கு முன் கைகளை அங்கிருக்கும் மடுவில் அலம்பிக்கொண்டு சுத்தம் செய்து திரும்பி வாருங்கள். அப்புறம் நான் போய் கைகள் கழுவிக்கொண்டு வந்தவுடன் எல்லோரும் சேர்ந்து இதை உண்ணலாம்" என்று தந்திரமாக வழிநடத்தியது.

எதிர்பார்த்தபடியே வேகவேகமாக முதலில் திரும்பியது வலுவான புலி. குள்ளநரி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தது. "என்னாயிற்று? ஏன் சோகமாக இருக்கிறாய்? நாம் நினைத்தபடியே மானை வீழ்த்திவிட்டோம். எல்லோரும் மகிழ்ச்சியாக உண்ணலாமே" என்று புலி குஷியாக அலம்பிய கைகளை தட்டிக்கொண்டே கேட்டது. அதற்கு குள்ளநரி "அதை ஏன் கேட்கிறீர்கள் புலியாரே, இந்த எலி சொன்ன வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை. அதனால் தான் சோகமாக இருக்கிறேன்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறியது.
"என்ன சொல்லிற்று? என்று பதிலுக்கு உறுமியது புலி.
"இந்தத் தீனி என்னால் தான் உங்களுக்கு கிடைத்தது. நான் மட்டும் மான் காலைக் கடிக்காவிட்டால் இந்த கிழப் புலி அடித்திருக்குமா என்று என்னிடம் சவால் விட்டுக் கேட்டது. கேவலம் அப்படி ஒரு எலி கேட்ட பின்பும் நாம் இதை உண்ணவேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று ஒரு பொய்யைச் சொன்னது.
"எனக்கு இன்னமும் தெம்பு இருக்கிறது. இப்படி ஒரு அற்ப பதரான எலியின் உதவியில் எனது வயிறை கழுவ நான் விரும்பவில்லை. என் சொந்த முயற்சியால் எனக்கு விருப்பப்பட்ட விலங்கை அடித்து சாப்பிடுவேன்" என்று வீராப்புடன் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தது புலி.

அடுத்தது வெகு ஜாலியாக கல்யாண சாப்பாடு சாப்பிடும் ஆசையில் சீட்டியடித்தபடி குதித்து வந்தது எலி.  "சற்றுமுன் தான் கீரிப்பிள்ளை வந்தது. புலி தனது அழுக்கு காலினால் இந்த மானை அடித்ததால் இதன் உடம்பில் விஷம் ஏறியுள்ளதாம். இதை சாப்பிட்டால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்றும் மிகவும் பசியாக இருப்பதால், நீ வந்தவுடன் உன்னை அடித்து நாங்கள் சாப்பிடலாம் என்றும் பிரியப்படுகிறது" என்று எலியிடம் ஒரு புருடா விட்டது குள்ளநரி. இதைக் கேட்ட மாத்திரத்தில் அலறியடித்துக்கொண்டு தனது வலைக்குள் போய் புகுந்துகொண்டது எலி.

இரையை சாப்பிட சித்தமாக வந்த ஓநாயிடம் "என்னவோ தெரியவில்லை புலி உன்னிடத்தில் மிகவும் கோபமாக உள்ளது. உன்னை தனது குடும்பத்தோடு உண்பதற்காக மனைவியை அழைத்து வருவதற்காக என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. இதற்கு மேலும் நீ இங்கு இருக்கிறாயா அல்லது தப்பித்து ஓடுகிறாயா. உனக்கு வசதி எப்படி." என்று மிரட்டியது. அரண்டு மிரண்ட ஓநாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டது.

கடைசியாக வந்த கீரிப்பிள்ளையை பார்த்து, "டேய் கீரி! இதுவரை வந்த எல்லோரையும் என்னுடைய புஜபல பராக்கிரமத்தால் அடித்து துரத்தி விட்டேன். வா! வந்து என்னுடன் முதலில் மோது. நீ ஜெயித்தால் பிறகு நீ ஒருவனே அனைத்தையும் சாப்பிடு" என்று முண்டா தட்டி சண்டைக்கு அழைப்பு விடுத்தது. புலியை கூட தனி ஒருவனாக இவன் ஜெயித்து விட்டானே என்று நம்பிய அந்த முட்டாள் கீரியும் பயந்து ஓடிவிட்டது. எல்லோரையும் விரட்டி விட்டு நிம்மதியாக தான் ஒருவனே அந்த முழு மானையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு சந்தோஷமடைந்தது அந்த குள்ளநரி.
மேற்கண்ட கதை ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் கணிக நீதியில் இடம் பெற்றது. துரியோதனன் என்னதான் மோசமான ஒரு பிள்ளையாய் இருந்தாலும் அவன் மீது தந்தைப் பாசம் கொண்டு வலிமை மிகுந்த பாண்டவர்களை எதிர்த்து போர் புரிவதா அல்லது சமாதானமா என்று குழம்பிய திருதிராஷ்ட்ரன் கணிகர் என்ற அரசியல் ஆசானிடம் ஆலோசனை கேட்டார். அப்போது ஒரு மன்னனானவன் கூட்டாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் கூறிய கதை தான் இது.

தற்போது நடந்து வரும் அரசியல் பேரங்களில், இந்தக் கதையில் இருந்து நமக்கு விளங்கும் கருத்தை தமாஷாக கீழ்கண்ட சமன்பாடுகளில் நாம் சரிபார்த்துக் கொள்ளலாம். புத்திக் கூர்மை படைத்த மக்கள் இன்னும் பல வழிகளில் அவரவர்களுடைய கற்பனைக்கு ஏற்ப இந்தக் கூற்றை சமன்படுத்திக் கொள்ளலாம்.
  1. வசிக்கும் நாடு = அடர்ந்த வனம் 
  2. வாக்குரிமை பெற்ற மக்கள் = மான்
  3. பெரிய கழகங்கள் = கு.நரி 
  4. பெ.கழகங்களை அண்டிப் பிழைக்கும் சிறிய கட்சிகள் =  புலி, எலி, கீரிப்பிள்ளை, ஓநாய்
  5. மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள்  = மானை எலி கடித்தல்
சென்ற பதிவு மிகவும் தக்குடுயூண்டு... ச்சே.. தக்கினியூண்டு இருந்ததாக புகார் கூறியவர்கள் இப்பதிவில் சந்தோஷப்பட்டுக்கொள்ளவும். போன பதிவு சிறியதாக இருந்ததால் அகமகிழ்ந்தவர்கள் இப்பதிவில்....... தயவு செய்து அடிக்க வரவேண்டாம்.

படம்: கூகிளில் வேட்டையாடி இந்த மிருகங்களின் படங்களை எடுத்து பிகாசாவில் இட்டு ஒரு கலக்கு கலக்கி அடியேனே கொலாஜ் பண்ணிய ஓர் அற்புத படம். அற்புதம், அதி அற்புதம் என்பதெல்லாம் ஒருவருக்கொருவர், மனசுக்கு மனசு வித்தியாசப்படுபவை என்பதை யாம் அறிவோம். நன்றி.

-

Sunday, March 20, 2011

சிரிச்சே ஆகணும்!

நாம ஒன்னும் ஷேக்ஸ்பியர் ஃபேமிலி இல்லை. இருந்தாலும் மௌலி இந்தக் காட்சியில் பண்ணும் அட்டகாசம் சொல்லில் அடங்கா. இவ்ளோ தூரம் அவரிடம் இங்கிலீஷ் பேசி படுத்தியதற்கு அதை எடுத்து ஊதிக் காட்டியிருக்கலாம்.

வாட் டூ யு டூ.
ஐ டூ நாதஸ்வரம்!


இந்த வார ஞாயிறு உலகக் கோப்பை போட்டியில் கழிந்தது. ஒன்றும் சுவாரஸ்யமான மேட்ச் இல்லை.  இருந்தாலும் நீண்ட நெடுநாள் கழித்து கிரிக்கெட் பார்த்தேன். கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் என்பதை எடுத்துக்காட்டிய டெண்டுல்கருக்கு நன்றி. ஒரு உலகக் கோப்பை போட்டியில் கர்ட்னி வால்ஷ் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் ரன் அவுட் ஆக்காமல் கையை கட்டிக்கொண்டு நின்றது நினைவுக்கு வந்தது. 

பை.பை.
-


Friday, March 18, 2011

தேடித் தேடி...

kanamal ponavalஅவளைத் தொலைத்துவிட்டேன். ஐ லாஸ்ட் ஹர். தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி பேசி பேஜார் பண்ணுகிறது என் மனஸ். "பவீ... பவிம்மா.. ஏய் பவீ..." என்று ஷூ காலோடே ஹால், கிச்சன், பெட்ரூம், பாத்ரூம், கொல்லைப்புறம் என்று எல்லா இடத்திலும் கடந்த பதினைந்து நிமிடங்களாக பம்பரமாய் சுற்றி சுழன்று தேடிவிட்டேன். எங்கடீ போன. ஹால் பேஃன் விசிறி அடித்த காற்றில் 'தி ஹிந்து'வும் ஆங்கில வார மாத இதழ்களும் டீப்பாயில் படபடத்தன. தாலியாய் மாட்டியிருந்த ஐ.டி கார்டை கழற்றி ஷோகேசினுள் எறிந்தேன். சுவரில் மாட்டிருந்த நாற்பது இன்ச் சோனி எல்.இ.டியில் பிரகாசமாக தெரிந்த சன் ம்யூசிக்கில் கமலும் சினேகாவும் "பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு... உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்..." என்று கேள்விகேட்டு என் சோகம் புரியாமல் ஜாலியாக பாடிக் காதலித்துக் கொண்டிருந்தார்கள். மணி பத்தரை என்று போன மாதம் லண்டன் விஜயத்தில் வாங்கிய சுவர்க் கடிகாரம் டிக்..டிக்..டிக்கி காண்பித்துக் கொண்டிருந்தது. 

எங்கே போயிருப்பாள்? திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவனாய் திரும்பவும் சமையலறை போய் அடுப்புக்கு கீழே உப்பு புளி மிளகாய் வைத்திருக்கும் மர அலமாரியை திறந்து பார்த்தேன். ச்சே. மூளை மழுங்கிவிட்டது. பதின்ம வயதில் அளவில்லாமல் பார்த்த தமிழ்ப் படங்களின் பக்க விளைவு இது. "படார்....டப்.." ஒன்றுமில்லை. அலமாரிக் கதவை ஆத்திரத்தில் அறைந்து சார்த்தினேன். ப்ளாக்பெர்ரியில் அவள் நம்பரை தட்டினேன். அருகாமையில் எங்கிருந்தோ "வசீகரா....என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்...." பாடியது. சோபாவிற்கு நடுவில் இருந்த கண்ணாடி டீப்பாயில் சோனியா காந்தி கையசைத்துக் கொண்டிருந்த அவுட்லூக் கீழேயிருந்து அவள் மொபைல் சிணுங்கிக் கொண்டிருந்தது. அவுட்லுக்கை நகர்த்தி லுக் விட்டதில் அவளது சாம்சங்கில் சென்ற மாதம் கொண்டாடிய என்னுடைய பிறந்தநாளுக்கு சிகப்பு கலர் டி ஷர்ட்டில் அவள் கைப்பட கிளிக்கிய நான் பேக்கு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தேன்.

எங்கே போயிருப்பாள்? காலையில் தேங்காய் சட்னிக்கு உப்பு போடவில்லை. "நான் ரொம்ப ரோசக்காரன்னு நீ அடிக்கடி நிரூபிக்கற..." என்று வம்பிக்கிழுத்தேன். பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்தவளை சும்மா விளையாட்டாதான் கேட்டேன்.  சுவற்றுக்கு சிரித்துவிட்டு அவள் பாட்டுக்கு தேமேன்னு பில் ப்ரைசனின் பழைய புக் தண்டர்போல்ட் கிட் சுவாரஸ்யமாய் படித்துக்கொண்டிருந்தாள். கான்வென்ட் எஜுகேஷன். எப்பவுமே தஸ்ஸு புஸ்ஸு. நானே டைனிங் டேபிளில் மறு மூலையில் இருந்த டாடா சால்ட்டை எக்கி இடது கையால் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டேன். டேபிளில் சிந்தியிருந்த சாம்பார் சட்டை பாக்கெட்டில் தொற்றிக்கொண்டது. இந்தக் கறை கெட்டது. போகாது. அவள் வீட்டில் இருந்தால் கூட அவளிடம் தோய்க்க சொல்வதில்லை. தட் தட் மேன் தட் தட் வொர்க். காந்தீயம். 

எங்கே போயிருப்பாள்? நேற்றைக்கு ராத்திரி ஊர் அடங்கினப்புறம் பீச்சுக்கு போயிருந்தபோது கூட இன்றைக்கு எங்கும் வெளியில் போவதாக என்னிடம் சொல்லவில்லை. அவள் கேட்ட பீச்சாங்கரை அவிச்ச வேர்க்கடலையை  "வேண்டாம்  பவி. ஹாம்ஃபுல். அத எந்தத் தண்ணியில் வேக வச்சாங்களோ" என்றேன். அதுவும் அவள் கரம் பற்றிய நாளில் இருந்து செய்வது போல "ஈ...." என்று முப்பத்தியிரன்டையும் காட்டி சிரித்துகொண்டு தான். பதிலுக்கு அவளும் வழக்கம் போல பல்லைக் காட்டாமல் புன்னகை மாதிரி ஒன்று புரிந்தாளே. வேறென்ன நடந்தது. பீச்சுல எங்களுக்கு முன்னாடி ஒரு ஜோடி காத்து நுழையக்கூட இடம் கொடுக்காமல் தோளோடு கால் ஈஷிக்கொண்டு பசையொட்டி நடந்து போனார்கள். எதிர்பாராத தருணத்தில் பக்கத்தில் வந்தவளின் அண்டா இடுப்பை அந்தப்பயல் கையை போட்டு தன் பக்கம் வெடுக்கென்று வளைத்து இழுத்தான். இதைப் பார்த்து வெகுண்டு போன எனது இளமை ஷன நேரத்தில் எழுந்து பக்கத்திலிருந்த அவள் கையை கோர்த்து இறுக அழுத்தியது. எவ்ளோ நாள் தான் பொறுக்கும். ஏதோ பாம்பு தீண்டியது போல பதறி விடுவித்து கையை உதறிக்கொண்டாள். அழுத்தியது அவளுக்கு ரொம்பவும் வலித்துவிட்டது என்றெண்ணி வீடு வந்து சேரும் வரை அடிக்கொருதரம் ரோடையும் அவளையும் பார்த்தபடி "ஸாரி... ஸாரிம்மா..ஸாரி பவி... ஏதோ ஒரு வேகத்துல.." என்று காரில் ஆயிரம் தடவையாவது ஜெபித்திருப்பேனே. சரி. அதுக்காக கடல வாங்கித் தரலைன்னா, கையை பிடிச்சு இழுத்தா கோச்சுக்கிட்டு ஓடிப்போய்டுவாங்களா? நா தொட்டு தாலி கட்டிய புருஷந்தானே?

"தலைக்கு ரெண்டு கையையும் முட்டுக்கொடுத்து சோஃபாவில் உட்கார்ந்திருந்தா பவி கிடைப்பாளா? முண்டம் எழுந்திரிச்சி எங்கயாவது போய் தேடிப்பாருடா" என்று உள்ளுக்குள்ளே இருந்து இன்னொரு பிரசாத் காட்டுக் கத்தலாக கத்தினான். "பொண்டாட்டியை காணோம் அங்க வந்தாளா"ன்னு கோயம்புத்தூருக்கு ஃபோன் போட்டு இந்த அகாலத்துல கேட்டா அவங்க அப்பாம்மா பதறிப் போய்டுவாங்க. என்ன பண்றதுன்னு புரியலை. சின்ன வயசுல சிலேட்டு தொலைச்சுர்க்கேன். பல்பம் தொலைச்சுர்க்கேன். ஏன் ஒரு தடவை ரேஷனுக்கு போய் அரிசி வாங்க சொன்னப்ப எலி கடிச்ச டவுசர் பாக்கெட்டில் போட்டு அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டே போயும் கூட சுளையாக அம்மா பக்கத்து வீட்டு அல்பத்திடம் கடன் வாங்கிய நூறு ரூபாய் நோட்டைக் கூடத் தொலைத்திருக்கிறேன். இன்றைய பொழுதில் ஒரு நாளைக்கு அக்குவாஃபினா தண்ணீருக்கே ரெண்டு நூறு ரூபாய்த் தாள் தண்ணியாய் செலவு செய்கிறேன். சரி அதை விடுங்க.  யாராவது பொண்டாட்டியை தொலைப்பார்களா?

தொலைச்சுட்டேனே. சரி போலீசில் போய் புகார் கொடுக்கலாம். கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசல் கதவை பூட்டும் போது "போலிஸ் ஸ்டேஷனா?" என்று எனக்கு கிலி வந்தது. இத்தனை மணிக்கு மேல் ஸ்டேஷனுக்கு போய்,  அவன் தாறுமாறா ஏதாவது கேள்வி கேட்க எக்குத்தப்பா பதிலுக்கு உளறி வச்சுட்டோம்.. போச்சு.. தீர்ந்தது எல்லாம். பேண்டை கழற்றிவிட்டு ஜட்டியோட களவாணிப் பயல்கள் கூட பெஞ்சுக்கு பக்கத்துல குத்த வச்சு உக்காராவச்சுட்டான்னா? நினைக்கும் போதே கைகால்கள் உதறல் எடுத்தது. மணிக்கட்டு வாட்ச் பதினொன்னரை காட்டியது. தெருவில் ஒரு ஈ காக்கா இல்லை. வேஷ்டியால் தெருவைப் பெருக்கிக் கொண்டு இந்திய திருநாட்டின் அடையாள குடிமகன் ஒருத்தன் வாயில் கோழை கோழையாய் எச்சில் ஒழுக யாரையோ "..த்தா... ஒங்க...$@!$@!*#@!" என்று ஆரம்பித்து கெட்ட வார்த்தைக்கு டிக்ஷனரி போடும் அளவிற்கு திட்டிக்கொண்டே போனான். அவன் பின்னாலையே தெருநாய் அவனோடு குலைத்துக் கொண்டே பேசிக்கொண்டு போனது. என் வீட்டு வாசல் கடந்தவுடன் "வு....வாவ்...வ்வே.." என்ற பெருத்த சப்தத்துடன் அடித்த சரக்கு அத்தனையையும் வாந்தி எடுத்துவிட்டு குப்பைத்தொட்டி அருகில் அப்படியே சரிந்துவிட்டான். அதற்கப்புறம் பேச்சுத்துணை இல்லாததால் நாய் வேறு வேலை பார்க்க வந்த திசையே திரும்பி ஓடியது. இப்ப வேடிக்கை தேவையா?

நாளைக்கு பக்கத்து வீட்டு லோச்சனா மாமி "பவி இருக்காளோ.." என்று கையில் கிண்ணத்துடன் காப்பி பொடிக்கோ சர்க்கரைக்கோ வந்து நின்னால் என்ன பதில் சொல்றது என்று ஒரு ஐந்து நிமிடம் யோசித்தேன். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் கதவை திறந்து கொண்டு மாடிக்கு ஓடினேன். வாசல் கதவை திறக்கவும் கரண்ட் போகவும் மிகச் சரியாக இருந்தது. "ஸ்.ஸ்.. அப்பா..." ச்சே மாடிப்படி ஓரத்தில் கிடந்த அந்தக்கால இரும்பு ஸ்டூலில் செமத்தியாக இடித்துக்கொண்டேன். கால் முட்டியில் வலி உயிர் போனது. தேய்த்துவிட்டுக்கொண்டே அந்த கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி மாடிக்கதவை திறந்தேன். ச்சிலீ....ர் என்று காற்று வந்து முகத்தில் மோதியது. மேலே பத்து நாள் வளர்ந்த இளம் நிலா தனியாக காய்ந்து கொண்டிருந்தது. நிலாவுக்கு சுற்றிலும் துணையே இல்லை. மேகமே இல்லாத நிர்மலமான வானம். அந்த இயற்கை டார்ச்சின் உதவியில் நான் ஏறிய இடத்தில் இருந்து இடது புறமாக பவனி புறப்பட்ட என் கண்கள் மணிரத்னம் பட கண்ணாளனே பாடல் காமெரா போல ஒரு சுற்று சுற்றி வலது புறம் வந்து நின்றது. கொடியில் காய்ந்து கொண்டிருந்த என் ஜட்டி பக்கத்தில் உரிமையாக தொங்கிய அவளது உள்ளாடைகள் அப்புறம் ஒரு துண்டு அப்புறம் மாடி ஓரத்தில் கிடந்த காய்ந்த தேக்கு மர இலைகள் அப்புறம் அந்தத் தண்ணீர் தொட்டி பக்கத்தில் மூட்டை போல ஏதோ இருந்ததே. மூளையில் இடறியதை பார்க்க மீண்டும் இரண்டாவது ஸ்கேனுக்கு புறப்பட்டது கண்.

மூட்டை பார்த்த இடத்தை மூளை சரியாக காட்டிக் கொடுக்க கண் திரும்பவும் தண்ணீர் தொட்டி அருகில் சென்றது. நிலா வெளிச்சத்தில் பார்க்கையில் யாரோ குப்புறக்க படுத்திருப்பது போல இருந்தது எனக்கு. நெஞ்சு படபடக்க பக்கத்தில் ஓடினேன். "ஆ..ஆ..." பார்த்ததும் பிளந்த வாய் மீண்டும் மூடவேயில்லை. ஐயோ! பவியே தான்.. காலில் ஏதோ பிச்சுபிச்சென்று ஒட்டியது. கையால் தடவிப் பார்த்தேன். மோந்து பார்க்கும் போது குப்பென்று ரத்த வாடை அடித்தது. ஒரு காலைத் தூக்கி ஆடும் போஸில் வைத்துக்கொண்டு நிலா வெளிச்சத்தில் பார்க்கையில் பிரவுன் நிறத்தில் ஒரு கொழகொழ திரவம் போன்று தெரிந்தது. ப்ளாக்பெர்ரி கீ பேடில் எதையோ அழுத்தி அதிலிருந்து எழுந்த வெளிச்சத்தில் உத்துப் பார்த்தேன். ஐயோ! பச்சை ரத்தம். கொலை!

தீர்மானமாக முடிவு செய்துவிட்டேன். இவளுக்கு கல்லூரியில் படிக்கிற காலத்தில் இருந்து ஒரு காதலன் இருந்திருக்கிறான். கோவையில் இருந்து சென்னை வந்தவுடன் அவனும் இவள் பின்னாடியே கூடவே வந்து பார்த்திருக்கிறான். தினமும் நான் ஆபிஸ் சென்றவுடன் தன்னுடன் சேர்ந்து வாழ இவளை வற்புறுத்தியிருக்கிறான். மஹா பதிவிரதையான இவள் அதற்கு முடியாது என்று மறுத்திருக்கிறாள். இன்றைக்கு கோபம் கொண்டு இவளை பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். அந்தக் கொடியவனிடம் இருந்து தப்பித்து மானத்தை காத்துக் கொள்ள மாடிக்கு ஓடி வந்திருக்கிறாள். துரத்தி வந்த அவன் பக்கத்தில் அந்த சிமென்ட் தொட்டியில் இவள் தலையை பிடித்து சொத்தென்று மோதி இவளை கொலை செய்திருக்கிறான். இப்போதே போலிசுக்கு போவோம் என்று எண்ணி நூறை டயல் செய்யலாமா என்று கையை கொண்டு போகையில் பிணமாகக் கிடந்தவள் லேசாக அசைவது போல தெரிந்தது. ஆடிப் போய்விட்டேன். பக்கத்தில் சென்று மூக்கருகில் கை வைத்து பார்த்தேன். அட! மூச்சு இருந்தது. "ம்.ம்.ம்..." என்று மெலிதாக முனகினாள்.

கொத்தாக அவளை இருகைகளில் ஏந்திக்கொண்டு கீழே ஹாலுக்கு ஓடி வந்தேன். நல்லவேளை கரண்ட் வந்திருந்தது. சோக் கெட்டுப்போன டியூப் லைட் ஹாலில் மினிக்கிக் கொண்டிருந்தது. சோஃபாவின் கைப்பிடியில் தலைவைத்து படுக்கவைத்தேன். தலையில் பொட்டுக்கு பக்கத்தில் இருந்து லேசாக டொமேடோ சாஸ் வழிந்தோடியது போன்று ரத்தச் சுவடு இருந்தது. அப்படியே திரும்பவும் தூக்கிக் கொண்டு காரில் ஏற்றி பின் சீட்டில் படுக்க வைத்தேன். இவளை பிழைக்க வைத்து யார் அந்தக் கொடூரன் என்று கண்டு பிடித்து போலீசிடம் ஒப்படைத்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளவேண்டும் என்று சபதம் எடுத்தேன். இருபத்து நான்கு மணிநேரமும் கல்லாக் கவுண்டர் திறந்து வைத்து பஜாரில் ஒரு ஆஸ்பத்திரி இயங்கிக் கொண்டிருந்தது. வண்டியை வாசலில் நிறுத்தி விட்டு "சிஸ்டர்..." என்று கத்திக்கொண்டே வரவேற்பில் ஓடினேன். ஸ்ட்ரக்சர் உருட்டிக்கொண்டு இரண்டு பேர் அழுக்கான வெள்ளை யூனிஃபார்மில் ஓடி வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு பந்து போல தூக்கி பவியை ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து வேகமாக தள்ளிக்கொண்டு போனார்கள்.

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த அந்த ஆஸ்பத்திரி ரிஷப்ஷனில் இருந்த அரதப் பழசு கடிகாரம் மணி இரண்டு காட்டியது. டூட்டி டாக்டர் ஒரு சின்னப் பையன். அவனிடம் என்ன ஏது என்று விளக்கிவிட்டு போட்டிருந்த ஐம்பது சேரில் துணைக்கு ஆள் இல்லாமல் நான் மட்டும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். இவ்வளவு டென்ஷனிலும் எப்படி தூங்கினேன் எப்போது கண் அசந்தேன் என்று தெரியவில்லை. ஒரு நர்ஸ் வந்து எழுப்பி "ஷி இஸ் ஆல்ரைட் நவ்" என்று சொல்லிவிட்டு போனாள். "எங்க இருக்காங்க.." என்ற என் கேள்விக்கு "ரூம் நம்பர் ஃபோர் நாட் டூ" என்று சொல்லிக்கொண்டே கொட்டாவி விட்டுக்கொண்டே இரவு டூட்டியில் தூங்கச் சென்றாள். ஓடிப் போய் பார்த்தால் பவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அசதியில் பக்கத்தில் போட்டிருந்த பெஞ்ச் போல இருக்கும் கட்டிலில் நானும் படுத்துவிட்டேன்.

காலையில் எழுப்பும் ப்ளாக்பெர்ரி அலாரம் துல்லியமாக ஆறு மணிக்கு அடித்து தனது கடமையை செவ்வனே செய்தது. டாய்லெட்டில் ஃப்ளஷ் சத்தம் கேட்டது. வந்து பெட்டில் உட்கார்ந்தவளை மெதுவாக விசாரித்தேன். விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
"ஸாரிங்க..."
நினைத்து சரியாகப் போய்விட்டது. யார் அந்தச் சண்டாளன் என்று நினைத்துக்கொண்டு "என்னாச்சும்மா?" என்றேன்.
"கல்யாணம் ஆன இந்த ரெண்டு மாசத்துல உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்." என்று கண்ணில் பெருகிய நீரை துடைத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சினாள். க்ளைமாக்ஸ் நெருங்குவது தெரிந்து இன்னும் படபடப்பாக
"நேத்து என்னாச்சும்மா.."
"இல்ல. எனக்கு சின்ன வயசுலேர்ந்தே அப்பப்ப ஃபிட்ஸ் வரும். நேத்திக்கு டி.வி பார்த்துகிட்டே இருந்தப்ப மாடியில போட்டுருந்த துணியை எடுக்கலைன்னு ஞாபகம் வந்துச்சு. சரின்னு ஓடிப் போய் எடுக்கப் போன டயத்ல பாழாய்ப் போற ஃபிட்ஸ் வந்துருச்சு. கை கால் இழுத்துக்க அப்படியே தொட்டியில மோதி கீழே விழுந்துட்டேன். எங்கே எனக்கு ஃபிட்ஸ் வரும்ன்னு சொன்னா நீங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களோன்னு எங்க வீட்ல இந்த விஷயத்தை மறைச்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. முதல் நாள்லேர்ந்தே எனக்கு இந்த பயம் இருந்துச்சு. உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமத் தான் இவ்ளோ நாள் உம்முன்னு இருந்துட்டேன். ரொம்ப ஸாரிங்க.. " என்று கண் கலங்கியவளை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டேன். 
"க்கும்.." என்று பின்னால் இருந்து தொண்டையை செருமிய நர்ஸிடம், ஒன்றுமே நடக்காதது போல  "இங்க ஃபிட்ஸ்க்கு யார் டாக்டர்..." என்று விசாரிக்க என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே பி.பி அளக்கும் கருவியை எடுத்துக் கொண்டு ஓடினாள். என்னுடைய பி.பி இப்போது நார்மலுக்கு வந்திருந்தது.

பட உதவி: https://www.google.com/profiles/dragonninja1982

-

Thursday, March 17, 2011

மன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா

rajagopalaswamy templeசாயங்காலம் ஆறு மணிக்கு மேல் "டன்..டன்..டன்.." என்று ஒத்தைக் கொட்டு கொட்டிக்கொண்டு செல்வர் ஸ்வாமி (சேனை முதல்வர்) நான்கு வீதிகளையும் வலம் வந்து நகரசோதனை போட்டு முடிந்த  பிறகுதான் மறுதினம் பெரிய  திருவிழா ஆரம்பம் ஆகும். கூடவே "கிணிங்...கிணிங்...கிணிங்..." என்ற ஒரு முழம் நீளம் இருக்கும் பெரிய கண்டாமணியின் ஓசையுடன் ஒரு பட்டர், ஏளப் பண்ண முன்னாடி ஒரு அரை ஆள் பின்னாடி ஒரு பொடி ஆள் என்று ரெண்டே பேர், ஒரு கையில் எண்ணைத் தூக்கோடும் மறுகையில் தீவட்டியோடும் மேல் சட்டைபோடாமல் அழுக்கு வேஷ்டியுடன் பிசுக்கு கையுடனும் ஒரு குட்டையான பிரகிருதி, ஒரு அமேரிக்கா பயணத்திற்கு மொத்த இந்தியாவையே அள்ளிக் கொண்டு போகும் பொட்டி சைஸ் பல்லக்கில் ஜிங்குஜிங்குன்னு தனியாக வீதியுலா வருவார். செல்வரை முள்ளுப் பொறுக்குற ஸ்வாமி என்று என்னைப் போன்ற அஞ்ஞானிகள் அந்நாளில் சொல்வர். பெரிய கோவிலில் பங்குனிப் பெருவிழா மன்னையையும் அதைத் தொட்டடுத்த பதினெட்டுப் பட்டி கிராமங்களையும் இணைக்கும் ஒரு கோலாகல பிரம்மோற்சவம்.  வான வேடிக்கைகளும், ஆட்டமும் பாட்டத்தோடும் ஊரே ஜேஜேவென்று இருக்க திருவிழா மொத்தம் பதினெட்டு நாட்கள் நடக்கும். மன்னை கலகலக்கும். திமிலோகப்படும். அப்புறம் விடையாற்றிக் கலை  விழா நிகழ்ச்சிகள் ஒரு பன்னிரண்டு நாட்கள். ஆக மொத்தம் குன்றம் ஏந்திக் குளிர் மழைக் காத்தவனுக்கு, அன்று ஞாலம் அளந்த பிரானுக்கு முப்பது நாட்கள் வருஷாவருஷம் தப்பாமல் விமரிசையாக நடக்கும் ஒரு பெருவிழா.

வரும் இறுதியாண்டுப் பரீட்சைக்கு ராப்பகல் அகோராத்திரியாக விழுந்து விழுந்து படித்து மூஞ்சி முகரை எல்லாம் ரத்த விளாராக அடிபட்டிருக்கும் போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அருள்புரிய ஸ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு பங்குனியில் விழா எடுப்பார்கள். தேரடி காந்தி சிலை தாண்டும்போது என்றைக்கு கீழக் கோபுரவாசல் தாண்டி வெளியே இருக்கும் மண்டபம் வரை கீற்றுப் பந்தல் போட்டு, நீலம் போட்டு வெளுத்த வெளிர்நீல வேஷ்டி துணியால் பந்தலுக்கு கீழே Upholstery அமைத்து, சீரியல் செட்டு தோரணங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ அன்றைக்கு மறுநாள் துவஜாரோஹனம். கொடியேற்றம். அதற்கு அடுத்த நாள், முதல் திருவிழாவான கொடிச்சப்பரத்தில் இருந்து தினமும் பாட்டியுடன் கோபாலன் தரிசனத்திற்கு கோயிலுக்கு சென்றுவர வேண்டும் என்றும் அர்த்தம்.

aandal alangaram

எண்பதுக்கு மேல் வயதாகியிருந்தாலும் கோயிலுக்கென்றால் இருபதை விட வேகமாக ஓடிவருவாள் என் பாட்டி. இறைநம்பிக்கை ஒரு உந்து சக்தி. புறப்பாடுக்கு முன்னர் முதலில் ஆகாயத்தை பார்க்க ஐந்தாறு ராக்கெட் பாண வேட்டு போடுவார்கள். "உஷ்.ஷ்...ஷ்ஷ்ஷ்..... டமால்...." ஐந்து முறை. அது தான் ஊராருக்கு சிக்னல். கோயிலை அடைய இன்னும் ஐந்து நிமிடம் பிடிக்கும் என்பதற்கு முன்னர் இருக்கும் தீயணைப்பு நிலையம் அருகில் வரும்போது அந்த வேட்டுச் சத்தம் கேக்காத காதில் ரவையூண்டு கேட்டுவிட்டால் அந்தக் கூன் விழந்த முதுகோடு "கோபாலா....கோபாலா..." என்று பக்தியில் கதறிக்கொண்டு மான் போல துள்ளி ஓடுவாள். முதல் நாள் ராத்திரி முழுக்க கழன்று போகும் படி வலித்த பாட்டியின் கால் வெடி சத்தத்திற்கு பின் நூறு மீட்டர் தடகள ஓட்டப்பந்தய போட்டிக்கு முயன்றுகொண்டிருக்கும். "பாட்டீ... மெல்லப் போலாமே.." என்று எதிர்ப்படும் யாராவது கேட்டால் "புறப்பாடு பார்த்தால் எமப்பாடு இல்லடா...." என்ற தனது உயர்ந்த இறை நம்பிக்கையை உதிர்த்துவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் விசுக்விசுக்கென்று வேகமாக நடையை கட்டுவாள்.

ஒரு கச்சலான தேகத்தோடு குழி விழுந்த கன்னத்தோடும் சர்ஃப் போட்டு வெளுத்த தலையோடு முதலாம் குலோத்துங்கன் கட்டிய பிரம்மாண்டமான, நீங்களோ நானோ ஒத்தையாக கட்டிப்பிடிக்க முடியாத, கருங்கல் தூண் அருகில் ஒருவர் பட்டுத்துணி சுற்றியிருக்கும் மேளம் போல ஒரு வாத்தியத்தை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு வாசிப்பார். இரண்டு பக்கமும் ஜவ்வுத் தோல் இருக்கும் ஆனாலும் அது மேளம் என்ற வகையறாவிலும்  அடங்காது. அதை குச்சியால் தட்டி வாசிக்கலாம் ஆனால் கையால் அடித்து வாசிக்கமுடியாது. அலக்கு போல நுனி வளைத்த மூங்கில் குச்சியால் "டன்..டன்.." என்று அடித்துவிட்டு அரைவினாடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு "டன்.டன்..." என்று தொடர்ந்து ஸ்வாமி புறப்பாடு ஆகும் வரை வாசிப்பார். அது நம் செவிகளை நிரப்பும் ஒரு ஆனந்தக் கொட்டு.

maadumeikkumதலையை முண்டனம் செய்த பாட்டிகள், இளம் அம்மாக்களின் இடுப்பில் தொத்தியிருக்கும் விரல் சூப்பும் கைக்குழந்தைகள், அங்கே இங்கே ஓடி விளையாடும் அரை டிக்கெட்டுகள், வேஷ்டி சட்டையில் ஸ்கூல் வாத்தியார்கள், ரிடையர் ஆன பாங்க் மானேஜர்கள், மடிசாருடன் வந்திருக்கும் தீர்க்கசுமங்கலி மாமிகள், தன் வயதொத்த தசை சுருங்கிய சகாக்களுடன் "அந்தகாலத்லேல்லாம்..." பேசும் அழகுத் தாத்தாக்கள், நண்பர்கள் புடைசூழ முற்றிய பக்தியில் வாலிப வயசுக் காளைகள்,  பாவாடை சட்டையிலும் மற்றும் பாவாடை தாவணியிலும் அமர்ந்திருக்கும் மன்னார்குடியின் மயில்கள் என்று சகலரும் ஸ்வாமி சன்னதி முன்பு ஆளுக்கொரு படியில் உட்கார்ந்து திரை திறக்கும் வரை காத்திருப்போம். திரை திறக்கும் வரை கன்னியரும் காளையரும் எதற்கோ திரும்பி திரும்பி ஒருத்தரை ஒருத்தர் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்களோடு சேர்ந்து உள்கோபுரங்களின் இடைவெளிகளில் ஊடாக சந்திர பகவானும் அந்த கள்ளனின் தரிசனத்திற்கு மேகத்திலிருந்து எட்டிப்பார்த்து ஆவலோடு காத்திருப்பான். ராஜா அலங்காரத்திலோ, கண்ணன் அலங்காரத்திலோ கோபாலனை பார்க்கும்போது ஒரு இனம்புரியாத பூரிப்பு வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும். ஏகோபித்த "கோபாலா...கோபாலா.." கோஷம் எல்லோரையும் ஒரு பரவசம் ஆட்கொள்ளும். ஸ்வாமி புறப்பாட்டின் போது பார்த்த கற்பூர ஆரத்தியுடன் அந்த யானைப் பிளிறல் வாத்தியத்தையும், இடைவெளியில்லாமல் அடித்த கொட்டு மேளமான "டன்...டன்..டன்"ன்னும் வெகு நேரம் வரை காதில் ஒலிக்கும் கண்ணிலும் ஒளிரும். எமப்பாடு நீங்கும்.

பந்தலடி தாண்டி திருப்பாற்கடல் தெருவில் இருக்கும் யானைவாகன மண்டபத்தில் இருந்து தான் முக்கால்வாசி நாட்கள் இரவு ஒன்பது மணி வாக்கில் ஸ்வாமி புறப்பாடு செய்வார்கள். எங்கள் வீட்டிலிருந்து பாட்டியால் அந்த மண்டபம் நடந்து போகும் தூரத்தில் இல்லாததால் ஒரு மேற்கூரை உள்ள ஒத்தை மாட்டு வாடகை வண்டியில் செல்வோம். வண்டி உள்ளே வைக்கோல் பிரி போட்டு மேலே ஐந்தாறு உர சாக்கை ஒன்றாய் தைத்து பாயாய் விரித்திருப்பார் எங்கள் ஆஸ்தான வண்டிக்காரர் வெங்கடாசலம். வைக்கோல் சோஃபா அப்பப்போ வண்டியின் குலுங்களுக்கு தக்கபடி சுருக்கென்று குத்தும் அல்லது இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டும். குச்சிகுச்சியான கையும் காலும் ஒடுங்கிய வயிறும் சேர்த்து காற்று சற்று வேகமாக அடித்தால் பஞ்சாய் பறந்து விடும் ஈர்க்குச்சி சரீரம். கண்கள் இரண்டிலும் வெள்ளை விழுந்து மல்லிப்பூ பூத்திருக்கும். வாழ்நாள் முழுவதும் சட்டை காணாத திறந்த கரிய மார்பு. இடுப்பில் மடித்துக்கட்டிய நாலுமுழம் வேஷ்டி. அரைமணிக்கொருதரம் அடைத்து குதப்படும் பன்னீர்ப் போயிலை வாய்.

புறப்பாட்டிற்கு வேட்டு போட்டால் "ஹை... ஹை..." என்று மாட்டை வாலைத் திருகி விரட்டி திருக்கைவால் சாட்டையால் மாடு பூட்டியிருக்கும் கட்டையில் "சுளீர்..சுளீர்" என்று சத்தம் வர இரண்டு முறை அடித்து விளாசுவார். மாட்டின் மேல் ஒரு அடி விழாது. டாப் கியர் மாற்றிய நெடுஞ்சாலை பி.எம்.டபிள்யு போல "டக்..டக்..டக்.."கென்று மாட்டு வண்டி குதிரை வண்டியாய் ஜில்லென்று பறக்கும். ஏ.ஸி கோச்சுகளில் கிடைக்காத ஒரு குளிர்ந்த காற்று முகத்தை வருடும் போது சொர்க்கபூமியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். மனசு விட்டுப்போகும். இதே வண்டிதான் பாட்டியை சந்திரசேகரன் டாக்டர் வீட்டிற்கு போகும்போதும்.


gopalanசங்கும் சக்கரமும் போட்ட நீலத் திரை திறந்து பாற்கடல் வாசனான கோபாலனை கண்டபேரண்ட பட்சியிலோ, சிம்ம வாஹனத்திலோ, தங்க சூர்யப் பிரபையிலோ பார்த்துவிட்டால் பாட்டிக்கு நிலை கொள்ளாத பேரானந்தம். வண்டியேறி வீட்டில் வந்து இறங்கும் வரை "கையில அந்த சாட்டையும், சேப்புக் கல் ரத்தனம் பதிச்ச ஜிகுஜிகு பேண்ட்டும், இடுப்புல தொங்கற ஸ்வர்ண சாவிக்கொத்தும், தலைக்கு தகதகன்னு ஜொலிக்கிற ரத்ன கிரீடமும், நெஞ்சுல பச்ச பசேல்னு மரகத பதக்கமும், கொழந்த மாதிரி சிரிச்ச முகமும், கொஞ்சமா சாஞ்சு நின்நுண்டுருக்கிற ஒய்யாரமும்..... நம்மூர் கோபாலன் அடாடா... அழகு...கொள்ள அழகுடா..." என்று கோபாலனை வாயார வர்ணிப்பாள். இத்தனைக்கும் வெறும் பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் பாட்டியோட கண்ணாடி போட்ட பழைய கண் காட்டிய கோபாலனின் திருக்கோலம் இது. கண்ணாடியோ கண்ணோ இல்லாமலேயே ஐம்பது வருடங்கள் கோபாலனைப் பார்த்துப் பழகிய பாட்டியின் மனக்கண் காண்பித்த கோலமல்லவா அது!

பதினாறாம் திருநாளான வெண்ணைத்தாழி உற்சவத்தில் வெள்ளிக் குடத்தை இடுப்போடு கட்டிக்கொண்டு தவழும் கண்ண பரமாத்மாவை பல்லக்கில் வைத்து ஊர் சுற்றிக் காண்பிப்பார்கள். முன் புறம் வெண்ணைக் குடத்தை கட்டியிருக்கும் கண்ணனின் திருமுகத்தை காணவும், பின்புறம் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பின்னல் அலங்காரத்தை கண்டு தரிசிக்கவும் பல்லக்கின் முன்னும் பின்னும் மக்கள் அலைமோதுவார்கள். ஒரு ரூபாய்க்கு பூவரசு இலையில் பொட்டு வெண்ணை வாங்கி கண்ணன் மேல் வீசி எறிவது அன்றைய தினம் எங்கள் ஊர் பக்தகோடிகளுக்கு ஓர் ஆன்மீக விளையாட்டு. பக்தர்கள் தாகசாந்தி செய்துகொள்வதற்கு கடைத்தெருவெங்கும் இலவச மோர் விநியோகப் பந்தல்கள் இருக்கும். இக்காலத்தில் பலூன் மற்றும் விளையாட்டு சாமான்கள் விற்போர் வயிறு நிறையும். வாழ்வு தழைக்கும்.

அன்றிரவு வெண்ணைத்தாழி மண்டபத்தில் இருந்து புறப்படும் தங்கக் குதிரை வாகனம் ஒரு முக்கியமான திருவிழா. ராஜா அலங்காரத்தில் ராஜகோபாலனை வெட்டுங்குதிரையில் அமர்த்தி வையாளி ஓடி வீதியுலா நடத்துவார்கள். ஒவ்வொரு ஓட்டத்திற்கும் "ஊய்...ஊய்...ஊய்.." என்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சப்தம் இரவு முழுவதும் விண்ணைப் பிளக்கும். பந்தலடி பகுதியில் எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். வான வேடிக்கைகளும் கரகாட்டம் குறவன் குறத்தி என்று பந்தலடி மற்றும் ராஜ வீதி திமிலோகப்படும். கூட்டம் அம்மும்.

thirutherஅடுத்த நாள் திருத்தேர். தேரின் முன் பகுதியில் நான்கு பெரிய அசுவங்களை கட்டி வைத்திருப்பார்கள். தேர்வடம் பிடிப்பது எங்கள் பள்ளியின் கைங்கர்யம். மூன்று மணியளவில் சீருடையில் வந்து வடம் பிடித்து ஆறு ஆறரை மணிக்கு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்துவோம். நடுநடுவே தேர் நிற்கும்போது பள்ளியின் பொடிப்பயல்களை அந்த வடத்தில் உட்காரவைத்து தலைக்கு மேலே தூக்கி தொப்பென்று கீழே போட்டு விளையாடுவார்கள். பல கிராமத்தில் இருந்து ரோட்டில் கடைவிரித்திருக்கும் வியாபாரிகள் சட்டிப்பானை, மஞ்சள் கிழங்கு போன்றவை விற்பார்கள்.

பின் குறிப்பு: கருட வாகனத்தில் இரட்டைக்  குடை சேவையும், தங்க சூர்யப் பிரபையும், தேரடியில் கோபாலன் எழுந்தருளும் ஹனுமந்த வாகனமும், கோபிநாதன் கோயிலில் இருந்து புறப்படும் வெள்ளி சேஷ வாகனமும், சின்னதாக உருண்டு வரும் கோரதமும்  இந்தப் பதிவில் நான் விட்ட மற்றும் சில முக்கிய திருவிழாக்கள். இதுமட்டுமன்றி விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக் கடைகள் பற்றி ஒரு தனி பதிவு போடும் அளவிற்கு சரக்கு உள்ளதால் சட்டென்று இந்தப் பதிவை முடித்துவிட்டேன். நிச்சயம் அடுத்த பார்ட் உண்டு. இந்த வருடம் மார்ச் 23-லிருந்து ஏப்ரல் 9-வரை பங்குனிப் பெருவிழா நடைபெறுகிறது.

பட உதவி:
  1.  முன்னால் இருக்கும் மண்டபத்துடன் பெரியகோயில் படம் கிடைத்த இடம் http://www.travel247.tv/
  2. சொக்க வைக்கும் ராஜகோபாலனின் ஆண்டாள் அலங்கார படம் கிடைத்த இடம்  http://divyadarisanams.blogspot.com 
  3. மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் எம்பெருமான் கிடைத்த இடம் http://municipality.tn.gov.in/Mannargudi/
  4. பேண்ட் போட்ட கோபாலன் படம் கிடைத்த இடம் http://4krsna.wordpress.com
  5. திருத்தேர் கிடைத்த இடம் http://mannargudirajagopalaswamytemple.com

-

Tuesday, March 15, 2011

யோஷிகி என்ற ஜப்பானிய நாயன்மார்

ரொம்ப நாட்களாக திண்ணை துடைச்சு விட்ட காலி. பக்கமே வரமுடியவில்லை. ஒரு நான்கு நாட்களாக சிறுகதை, குறுந்தொடர் என்று என் வலைப்பக்கம் வரும் நிறைய(?!?) பேரை ஏகத்துக்கும் பேனாக்கத்தி காட்டி மிரட்டியாயிற்று. அச்சத்தில் அரண்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.

**************** அரசியல் *********************
பங்கீடுகள், பணப் பட்டுவாடா, தொகுதிப் பட்டுவாடா போன்ற மரியாதை இல்லாத "வாடா.வாடா..."க்கள் அனுதினமும் நம்மைச் சுற்றி அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. ஐயாக்களும், அம்மாக்களும், தளபதிகளும், மொழிமான இனமானத் தலைவர்களும், ஏழைப் பங்காளர்களும், தோழர்களும் நம் மேல் புழுதி படர காரில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள்.

ஐந்து வருடம் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு இந்த ஒரு மாதம் இரவுபகல் பாராது ரத்தம் சிந்தி ரவுண்டு கட்டி உழைப்பார்கள். தொண்டர்கள் பிரியாணியிலும் மில்லியிலும் மிதப்பார்கள். குண்டர்கள் அடிதடியை விட்டுவிட்டு வாக்கு சேகரிப்பார்கள். இச் சூறாவளியில் மாட்டிக்கொள்ளாமல் இந்த தேர்தல் போர் காலகட்டத்தில் ஒழுங்கு மரியாதையாக காந்தி மகானின் மூன்று குரங்குகள் போல ஓட்டுரிமை உள்ள குடிமகன்களான நாம் நடந்து காட்ட வேண்டும். தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கட்டுப்பட்டு சென்னையை வாகனங்கள் ஓட்டுவதற்கும், பிளாட்பாரங்கள் மேல் பொதுஜனங்கள் நடப்பதற்கும், மற்றவர்கள் புழங்குவதற்கும் தாராள மனது வைத்து பதாகைகள் நீக்கி ஒரு மாதத்திற்கு ஒழித்துக் கொடுத்திருக்கிறார்கள்.  தானைத் தலைவர்களுக்கு நன்றி. அடுத்த மேட்டர் போவோம்...

**************** யோஷிகி என்ற நாயன்மார் ********************
போன ஞாயிறு டிவிக்கு டிவி ரியாலிட்டி எண்டர்டைன்மென்ட் ஷோ காண்பிப்பது போல சுனாமி படம் காட்டிவிட்டார்கள். ஒரு கூகிள் எர்த்  படத்தில் ஆங்காங்கே வீடுகளும் பசும்புற்களும் இருக்கும் இடத்தை ஒருபக்கமும் அலை வந்து அழித்துவிட்டு போனபின் மொட்டையடிக்கப்பட்ட இடத்தை இன்னொரு பக்கத்தில் வைத்து ஒப்புமை படுத்தி காண்பித்தார்கள். இயற்கையின் அளப்பரிய முடியாத ஆற்றல் மனித குலத்திற்கு இன்னமும் சவால் தான். இந்த சுனாமி பற்றிய ஒரு சில புல்லட் பாய்ண்ட்கள் கீழே
  1. பெண்ணென்றும் பாராமல் பூமா தேவியை ஒரு தட்டு தட்டி தனது பாதையில் இருந்து நான்கு இன்ச் அளவிற்கு நகர்த்தி போட்டுள்ளது சமீபத்திய ஜப்பான் சுனாமி என்கிற ராட்சஷன்.
  2. கிழக்கு ஜப்பானின் சில பாகங்களை பல ஜீவராசிகளின் சேத செலவில் பன்னிரண்டு அடிகள் வடஅமேரிக்கா பக்கம் அலேக்காக நகர்த்தி வைத்துள்ளது.
  3. இந்த பூகம்பம் பூமிப் பந்தை கொஞ்சம் வேகமாக சுற்றிவிட்டு ஒரு நாளின் ஆயுசை 1.8 மைக்ரோ செகண்டுகள் குறைத்து விட்டது. சர்வ நாட்டிலும் எல்லோருடைய ஆயுசுளும் ஒவ்வொரு நாளுக்கும் அவ்ளோ செகண்ட் அப்பீட். எமனும் சித்ரகுப்தனும் எல்லோருடைய ஆயுள் கணக்கையும் டேலி செய்வதற்கு ஓவர் டயம் செய்யணும்.
  4. ஜப்பானிய மக்களுக்கு இதோடு மட்டுமல்லாமல் அணு உலைகள் வெடித்து சிதறியது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல மற்றொரு அதிர்ச்சி. 
  5. சகல இன்பங்களையும் அனுபவித்துக்கொண்டு தமிழக அரசின் வண்ணத் தொலைக்காட்சி வாங்கும்போது அடாவடி செய்யும் நாமெங்கே, இத்தனை துயரத்திலும் நிவாரணங்களைப் பெறுவதற்கு ஒரு தள்ளுமுள்ளு அடிதடியில்லாமல் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளும் ஜப்பானியர்கள் எங்கே! பார்க்கும்போது நெஞ்சு நெகிழ்கிறது.
சுனாமி மேட் இன் ஜப்பான் பார்த்த போது சமீபத்தில் படித்த தி.ஜாவின் யோஷிகி ஞாபகத்திற்கு வந்தது.

ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு செல்லும் ஒருவர் அந்நாட்டில் சந்திக்கும் நண்பரின் பெயர் யோஷிகி. யோஷிகி இங்கு இந்தியாவில் இருக்கும் சுற்றுலா சென்ற நண்பரின் நண்பர். முதல் நாள் சாயந்திரம் விடுதிக்கு வந்து ஊர் சுற்றிக் காண்பிப்பதாக வாக்களித்திருந்தார் யோஷிகி. அவரால் வர இயலவில்லை என்று விடுதியில் சொல்லிவிட்டு வந்த விருந்தாளியின் சௌகரியத்திர்க்கு பங்கம் வராமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுகிறார். மறு நாள் காலையில் வந்து நாள் முழுக்க சிரிக்க சிரிக்க ஊர் சுற்றிக் காண்பிக்கிறார். நடு நடுவே நிறைய முறை போன் பேசினார். அவர் ஒரு வியாபாரி. ஜப்பானிய மக்களின் பழக்க வழக்கங்கள் அந்த சிரிப்பு இவற்றை பற்றியெல்லாம் அங்கு சுற்றுலா போனவர் சிலாகித்து யோஷிகியிடம் பேச அவர் பெருமகிழ்ச்சியுருகிறார். இரவு கொண்டு வந்து மீண்டும் விடுதியில் விட்டுவிட்டு மறுநாள் தன்னால் வர இயலாது என்றும் பத்திரமாக நாடு திரும்ப வாழ்த்தையும் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறு நாள் காலையில் அந்த விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணோடு கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வருகையில் அந்தப் பெண் "யோஷிகி ஏன் முதல் நாள் சாயந்திரம் வரவில்லை தெரியுமா?" என்று இவரிடம் கேட்க இவர் என்னவென்று தெரியாமல் முழிக்க அதற்கு அந்தப் பெண் அவருடைய ஒரு கிளைக் கடை பெருந்தீயில் பற்றி எரிந்து நாசமாகிப் போனதை சொல்கிறாள். அதோடு மட்டுமலாமல் அவருடைய ஒரே தம்பி அந்த தீவிபத்தில் பலத்த காயமடைந்ததையும் சொல்கிறாள். அவரால் ஏன் நாளை வரமுடியாது தெரியுமா என்று கேட்கிறாள். ஏற்கனவே விக்கித்துப் போயிருந்தவர் "ஏன்?" என்று கேட்க, பலத்த தீக்காயமடைந்த அவரது தம்பிக்கு நினைவு தப்பிப்போய் பிழைப்பாரா மாட்டாரா என்ற கதியில் கிடப்பதாக ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் வந்ததாக சொன்னாள். சுற்றுலா சென்ற மனிதர் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆடிப்போய் விட்டார். கடைசியில் இந்த விவரங்களை அந்த சுற்றுலா நண்பருக்கு அளித்ததற்காக வருத்தப்படுகிறாள் அந்த சப்பை மூக்கு சப்பான் பெண்.
 .....என்பதாக கதை முடிகிறது..

இந்தக் கதை முழுவதும் ஜப்பானியர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய எதற்கும் அயராத உழைப்பு, அத் தேசத்தின் அழகு என்று பல விஷயங்களை எழுதியிருக்கிறார் தி.ஜா. தனக்கு ஏற்பட்ட பேரின்னலைக் கூட பொறுத்துக்கொண்டு விருந்தினரைக் கவனித்த யோஷிகி,  இறைவனிடம் அளவு கடந்த அன்பு கொண்டு மகன் பாம்பு கடித்து இறந்ததைக் கூட மறைத்து திருநாவுக்கரசுப் பெருமானுக்கு அமுது படைத்த அடியார்க்கு அடியாரான அப்பூதியடிகள் போலத்தானே. கதையாக இருந்தாலும் அவருக்கு ஒரு ஜே!

***************** கைலி கம்பெனியார் கவனத்திர்க்கு ******************
இடுப்பில் வெறும் ஒரு அடையாளமாக கைலியை கட்டிக்கொண்டு வடிவேலு நடித்த பல படங்களை பார்த்திருக்கிறோம். அதுமாட்னுக்கு தேமேன்னு இடுப்புல தொங்கும். ஆனால் ஆடுகளத்தில் ஒரு பாட்டு முழுக்க கைலியை தூக்கி இரண்டு கையிலும் கிளிப் போட்டு மாட்டிவிட்டு ஆடும் தனுஷ் இவ்வளவு நாள் வடிவேலு செய்த சாதனையை முறியடித்திருக்கிறார். யாராவது கைலி கம்பெனியார் விளம்பரத்துக்கு யூஸ் பண்ணிக்கலாமே! அதை அவுத்து பக்கத்தில் வைத்துவிட்டு துணித் தொந்தரவு துளியும் இல்லாமல் ஒரு குத்த்தாட்டம் போட்டிருக்கலாம். சின்னப் பசங்க மத்தியில் பிரபலமான இந்தப் பாடல் பக்கத்து வீட்டு யு.கே.ஜி படிக்கும் குட்டிப்பொண்ணு ரேவதி ஸ்கர்ட்டை தூக்கிக்கொண்டு ஆடும் போது தான் ரொம்ப விகாரமாயிருந்தது. இந்தப் படத்தில் பாட்டுகொருத் தலைவர் எஸ்.பி.பி தனது புத்திரனுடன் சேர்ந்து பாடிய அய்யய்யோ நெஞ்சு அலையுதுடி சூப்பெர்ப் சாங். பாக்கறதுக்கு ஓ.கே. கேக்கறதுக்கு டபுள் ஓ.கே.



******************** ரம்மியமான குட்டை *******************
 கீழ்காணும் படம் எனது கோயில் சுற்றுலாவில் பத்து வீடு, நாலு பசு மாடு, ரெண்டு எருமை மாடு, ஆறேழு ஆட்டுக்குட்டி மட்டும் இருந்த ஒரு இயற்கை எழில் கொஞ்சும், குருவிகளும் மைனாக்களும் குக்கூ பாடிக்கொண்டிருந்த ஒரு அமைதியான கிராமத்தில் இருந்த ரம்மியமான குட்டை. அந்த ஊருக்கு இது குளமாக இருந்தாலும் ஏழு வேலி பரப்பளவில் ஏரி போன்ற குளம் பார்த்த எனக்கு இது குட்டை போலத்தான் காட்சியளித்தது. இந்தப் படம் என் கை வண்ணம்.

scene


பின் குறிப்பு: பதிவின் நீளம் கருதி இம்முறை திண்ணையை இத்தோடு கலைத்தாயிற்று. நன்றி.

-


ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails