Saturday, February 26, 2011

மன்னார்குடி டேஸ் - ஆடிய கதா

முன் குறிப்பு: இது கிரிக்கெட் ஆட்டம் பற்றிய பதிவு அல்ல. உலகக்கோப்பை நடந்துவரும் இவ்வேளையில் மன்னையில் போட்டி முடிந்ததும் அல்லது அதற்கு முன்னரும் தெருவில் குளத்தங்கரை படித்துறை வாயிலில் உள்ள மதில் சுவற்றில் (குட்டிச் சுவருன்னு சொல்ல வேண்டாமேன்னுதான்) உட்கார்ந்து வாய்ப்பந்தல் போடும் கி.கதைகளும் மற்றும் மைதானத்தை டான்ஸ் மேடையாக்கி கதகளி, குச்சிபுடி விளையாண்ட மக்களைப் பற்றியும் எழுதலாம் என்று விருப்பம். முகப்புத்தகத்தில் வந்து தெருவில் என்னுடனாடிய நண்பன் கோப்லி உரிமையுடன் எழுதக் கேட்டவுடன் பதியவேண்டும் என்று நினைத்தேன். பகிர்கிறேன்.

*********
ராப்பூரா கொட்டக் கொட்ட கண்முழித்து கண் எரிய டி.வியில் கிரிக்கெட் பார்த்தாலும் மறுநாள் பல் கூட தேய்க்காமல் காலை ஓசி ஹிந்துவில் ஸ்கோர்கார்டுடன் ரிப்போர்ட் வாசிக்கும் இன்பமே தனி. இதுபோல அன்றைக்கு  விளையாடிய மேட்ச்களுக்கு இரவில் தெருவிளக்கில் நனையும் மதிலில் உட்கார்ந்து ஹர்ஷா போகலே, ரவி சாஸ்திரி, கவாஸ்கர் பாணியில் குழுமி யார் செய்த குற்றத்தால் தோற்றோம், எவன் சதி செய்தான், அழுகுணி ஆட்டம் ஆடியது யார் போன்றவற்றை அலசி ஆராய்வோம். கெலித்தால் சிரிப்புக் குரல்கள் நான்கு கரைகளிலும் எதிரொலித்து வெற்றியை பறை சாற்றும். தொடர்போட்டிக் கால ராவேளைகளில் எங்களது காரசாரமான பேச்சுவார்த்தையில் தூங்கும் குளம் முழித்துக் கொண்டு படித்துறையில் 'ப்ளக்..ப்ளக்' என்று சிறிது சலம்பும்.

இருபது ஓவருக்குள் அணியில் பதினொன்றாம் நம்பரில் இருக்கும் பிரகிருதிக்கு கூட ஒரு பந்திற்காவது மட்டை பிடிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை இருக்கும். மட்டையில் பட்ட ஒரே ஒரு பந்து பத்து தப்படி உருண்டோடி தடவித் தடவி தத்தக்கபித்தக்காவென்று ஓடி ஒரு ரன் சேர்த்து விட்டால் ராஜகோபாலஸ்வாமியின் வானளாவிய கோபுரத்தின் கலசத்தை ஏறி பிடித்தது போன்ற ஒரு உணர்வோடு ஜிவ்வென்று அன்று முழுதும் ஆகாசத்தில் பறப்பான். ரெண்டு நாள் தெருவில் எப்போ எங்கே பார்த்தாலும் "அந்த ஃபிலிக் பண்ணிட்டு ஒரு ரன் ஓடினேன் பாரு.." என்று என்னத்த கண்ணையா மாதிரி அதே டயலாக். கேட்கும் காதுக்கு வாய் இருந்தால் அழும்.

"என்னதான் இருந்தாலும் நீ அந்த சிங்கிள் எடுக்க ஓடியிருக்கக் கூடாது. மேச்சே டர்ன் ஆயிடுச்சு.." என்று தான் முதலில் விவாதப் பேச்சு ஆரம்பிக்கும். அணியின் அனைத்து வீரர்களும் வேஷ்டியுடனோ அல்லது கைலியுடனோ மதில் கட்டைக்கு டின்னருக்கு பின்னர் சீரிய இடைவெளியில் வந்து சேருவர். பருவகாலத்திர்க்கு ஏற்ப மேல்சட்டை போட்டுக்கொள்வது தீர்மானிக்கப்படும். எம்மேனியும் உருகும் சுட்டெரிக்கும் கோடையில் திறந்தமேனி தான். தெக்ஷினாமூர்த்திக்கு ஆலமரம் போல மதில் கட்டை பின்னால் எங்களுக்கு மாரியாத்தா அருள் குடியிருக்கும் தலைவிரித்து நிற்கும் ஒரு மிகப்பெரிய வேப்ப மரம். குளம், மதில், மரம். அது ஒரு வரம். பூலோக சொர்க்கம். ரன் ஓடிய பெருமகனாரும் அவரால் அவுட் ஆக்கி பெவிலியனுக்கு ஒட்டப்பட்டவருக்கும் நடக்கும் சூடான சுவையான விவாதம் இரவு வெகுநேரம் வரை தொடரும். கடைசியாக எங்களை தாங்கிய மதில்கட்டை "வீட்டுக்கு போங்கடா விளக்கெண்ணைகளா..." என்று திட்டுவதற்கு முன்னர் பின்னால் தட்டிக்கொண்டு நடையை கட்டுவோம்.

cricket

எப்போதுமே ஸ்ரீக்கு ஓட்டம் தகராறு. நிறைய போட்டிகளில் எதிராளியுடன் கபடி விளையாடுகிறோமோ அல்லது கிரிக்கெட்டா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படும். ஏறு கோடு தொட்டு பாடித் திருப்பும் கபடி வீரர் மாதிரி பாதி பிட்ச் வரை ஓடிவந்துவிட்டு எதிர்முனையில் யாரோ அடிக்க துரத்துவது போல கிளம்பிய இடத்திற்கே பின்னங்கால் பிடரியில் அடிக்க திரும்பி ஓடிச் சென்று தன் விக்கெட்டில் அடைக்கலமாகி விடுவான். திருப்பிவிடப்பட்ட பிரகஸ்பதியை, விலுக்கென்று தன் திசையில் ஓடி மறுமுனையில் விழுந்து புரண்டு ரன் அவுட் ஆகும் கூட்டாளி ஆட்டக்காரரை, ப்ருஷ்டத்திர்க்கு பேட் முட்டுக்கொடுத்து ஹாயாக நின்றுகொண்டு கண்ணாரக் கண்டு ரசிப்பான்.

இப்படி அவுட் ஆக்கிய தலைவரை ஈவ்னிங் குளத்தாங்கரை மீட்டிங்கில் கிழி கிழி என்று கிழித்துவிடுவார்கள். ரன் எடுக்காமல் கட்டைப் போட்டு ரொம்பவும் ரம்பம் போடும் ஆட்டக்காரர்களை ராமன் துணையுடன் வாலியை வலிய சண்டைக்குக் கூப்பிட்ட சுக்ரீவன் போல "எஸ்ஸ்ஸ்ஸ்.." என்று துரிதகதியில் கூப்பிட்டு அவரை கிரீஸை விட்டு வெளியே நடுவழிக்கு அழைத்து வந்து "நோ....." என்று கண்ணெதிரே தற்கொலை செய்துகொள்ளும் காதலியை நிறுத்தச் சொல்வது போல பீறிட்டு அலறி அவுட் ஆக்கும் மிகப்பெரிய வித்தை நிறைய ஆட்டங்களில் வெற்றிக்கு வித்திடும். அடுத்த ஆட்டத்தில் கட்டாயம் இந்த வாலி சுக்ரீவன்கள் இடம் மாறிக்கொள்வார்கள். பழிவாங்கும் படலங்கள் தொடரும்.

"இண்டியா கேட்" போல இருகால்களை விரித்து குனிந்து பந்தை அள்ளமுடியாமல் பவுண்டரிக்கு நழுவ விட்டவர்களை பிடித்து ஒரு ராவு ராவிவிடுவார்கள். "கவுட்டிக்கு கீழே குனிஞ்சு தத்தி தத்தி போகும் பால் எப்படி ஃபோர் போறதுன்னு பாக்கராண்டா..சரியான தத்திடா.." என்று வெறுப்பேற்றும் போது அணியில் புதிதாய்த் சேர்ந்த சில இளம் வீரர்களுக்கு கண்களில் ஜலம் முட்டும். காட்ச் நழுவ விடும் போட்டிச் சருக்கர்களைப் பார்த்து "எங்கயாவது கோயில்ல உண்ட கட்டி வாங்கப் போயேன்" என்றும் "பந்து என்ன ரொம்ப சுடுதா.. கையில விழுந்தாலே அப்படியே உதறிடுற.." போன்ற சிந்தனையைத் தூண்டும் திட்டுக்கள் ஏராளம். இரண்டு மூன்று தென்னைமரம் உசரத்திர்க்கு வானளாவிய தூரம் மேலெழும்பும் பந்துக்கு நாலு பேர் கூடி நின்று இருகையையும் பிச்சை எடுக்கும் போஸில் வைத்துக்கொண்டு நின்று ஒருத்தரும் பிடிக்காமல் பந்தை நடுத்தரையில் தாரைவார்த்து விட்ட கேட்சுகள் கணக்கிலடங்கா.

இவ்வகை கேட்சுகள் பிடிப்பது எப்படி என்று அன்றைக்கு குளத்தங்கரை மரத்தடியில்  நிச்சயம் கோச்சிங் உண்டு. "லீவ் இட் எவனாவது சொன்னீங்கன்னா... இன்னொருத்தன் நவுந்துடுவான்....என்னதான் கருமம் ஆடரீங்களோ.." என்று கைலியும் மேல்துண்டுமாய் எங்கள் கோச் அண்ணன் மொக்கு (எ) மோகன் சொல்லும் போது துக்கம் தொண்டையை அடைத்து எல்லோரும் இழவு வீட்டில் நிற்பது போன்று முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு நாணிக்கோணி நிற்பர். "வாயில என்ன கொளக்கட்டையா?" என்று கேட்டு யாராவது விளக்கம் சொல்லிவிட்டார்கள் என்றால் போச்சு. அவ்வளவுதான். "உக்ஹும்..இங்க நல்லா வக்கனையா பேசு.. கிரவுண்டுல கேச்சு பிடிக்காம அண்ணாந்து வானத்துல போற காக்காவ எண்ணிக்கிட்டு வேடிக்கை பாரு..." என்ற ரசனையான திட்டு காதில் வந்து ஈட்டிபோல பாயும்.

எந்த ஒரு போட்டிக்கு முன்பும் குளத்தங்கரையில் கேப்டன் தலைமையில் மந்திராலோசனை நடக்கும். (யாரும் நடப்பு அரசியல் காட்சிகளை பிடிவாதமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். இது கிரிக்கெட் கேப்டன் தான்.) சிலசமயங்களில் சதியாலோசனை பலசமயங்களில் மதியாலோசனை. பேப்பர் பேனா கொண்டு மைதானம் வரைந்து எவரெவர் எங்கு எப்படி நிற்க வேண்டும், எப்படி பிடிக்கவேண்டும், எப்படி பந்து வீச வேண்டும், எப்படி ஓட வேண்டும் என்று பல வியூகங்கள் அமைத்துவிட்டு மறுநாள் போட்டிக்கு போனால் வியவகரித்த ஒன்றில் கூட முதல் நாள் பேசியதுபோல விளையாட மாட்டோம். ஆஃப் சைடில் கும்பலாக தோளோடு தோள் இடிக்கும் படி எல்லோரையும் வரிசையாக படைபோல நிறுத்தி பந்து வீசச் சொன்னால் அங்குலம் தப்பாமல் துல்லியமாக கால்புறத்தில் பந்தை வீசி ஆறும் நான்குமாக கர்ணபரம்பரையில் தோன்றியது போல வாரி வழங்குவர். "சும்மா போய் விளையாண்டாலே ஜெயிப்போம். ...மொதெல்ல இந்த வெட்டி மீட்டிங் போடறதை நிறுத்தனும்" என்று ஏகமனதாக முடிவெடுத்தவுடன் சுற்றுவட்டாரத்தில் நல்ல பெயர் எடுத்தோம் என்று நினைவு.

"மொத்தம் மூணு பந்து தெரிஞ்சுது.. எல்லா தடவையும் நடு பந்தைப் பார்த்து நச்சுன்னு பேட்டை சுத்தினா அதெல்லாம் தன்னால சிக்சர் போவுது....". தண்ணி அடித்துவிட்டு விளையாடி சிக்செர் சிக்செராக அடித்து வெளுத்து வாங்கிய எங்கெளுக்கெல்லாம் சூப்பர் சீனியர் எங்கள் கோச்சின் நண்பர் கமலக்கண்ணன் அண்ணாவிடம் மேச் முடிந்து பேட்டிகாண்கையில் அவர் போதையாக சொன்னது இது. இதுவல்லாமல் எங்கள் பள்ளி கிரிக்கெட் டீம் கோச் திரு.ராமு சார் ஒரு சிலரை புதுவிதமாக ட்ரீட் பண்ணுவார். வடுவூர் சுரேஷ் என்னும் ஒரு அன்பருக்கு போட்டி துவங்கும் முன் மைதானத்தின் மூலையில் இருக்கும் மாமரத்தடிக்கு கொண்டு சென்று பிடரியில் நாலு தட்டி தட்டி பின்னர் தான் விளையாடுவதற்கு உள்ளே அனுப்புவார். காரணம் கேட்டால் அப்போதுதான் நன்றாக பவுலிங் போடுவான் என்பார். அது அப்படியே நூறு சதம் பலிக்கும். சாருக்கு மரியாதையான ஒரு தனிப் பதிவு பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில். 

பின்குறிப்பு: ஒன் டே மற்றும் ட்வென்டி ட்வென்டி மாதிரி எழுதலாம் என்று நினைத்தால் டெஸ்ட் மேச் அளவிற்கு இந்தப் பதிவு வளர்ந்துவிட்டது. நடந்த சம்பவங்கள் இதுபோல இன்னும் நாலு பதிவுகள் காணும் என்றாலும்... இப்போது இதை ஸ்டம்ப்பை பிடுங்கி நிறைவு செய்வோம். இந்த உலகக் கோப்பையில் "ஜெயம் நமக்குதான்", "மங்களம் உண்டாகட்டும்" போன்ற வெற்றி வாசகங்களை கொண்டு இந்தியாவை ஊக்கப்படுத்தினால் யார் அந்த ஜெயமும் மங்களமும் என்று கேட்கிறார்கள். நாடு நன்றாக இருக்கட்டும். நன்றி.

படக் குறிப்பு: நிச்சயமா நாங்கள் விளையாண்ட மைதானங்கள் இவ்வளவு செழுமையாக பசுமையாக இல்லை. படம் நன்றாக இருந்ததால் இங்கே இடம் பெற்றது. http://www.guardian.co.uk/

(ச்சே.. ஒரு குறிப்பற்ற பதிவுல எவ்ளோ குறிப்பு.. குறி பார்த்து சுடனும் இவனை..;))) )

-

28 comments:

அப்பாதுரை said...

க்ரிகெட் அறுவை என்று தீர்மானித்ததலிருந்து க்ரிகெட் பக்கம் அதிகம் போகவில்லை. உங்க பதிவு அறுவையில்லை..
சதியாலோசனைக்கும் மதியாலோசனைக்கும் வித்தியாசம் கண்டீர்களா?

அப்பாதுரை said...

மூணு பந்து கமென்ட்... ஆமா, இது எந்த வயசுல நடந்துச்சுங்க?

ARR said...

நல்ல நண்பனுக்கு நல்ல நன்றி
அற்புதம் , அசத்திட்டே வெங்கட் !
மீண்டும் மன்னை மதிலில் , சிரித்து , கோபப்பட்டு , சில நேரங்களில் அழுத காலங்களை
உன் வலிமையான எழுத்து , திரும்ப தந்தது
தொடரட்டும் உன் மனதில் மதில்.............
திரும்ப ஒரு அஞ்சி தடவையாவது படிக்கணும்.

தக்குடு said...

பழைய ஊர் கதை பேசர்து எப்போதுமே ஆனந்தம்தான், நல்ல சுவையான கோர்வை // இப்படி எல்லாம் கமண்ட் போட்டா அப்புறம் ரசிகமணியோட ப்ராக்ஸியோனு எல்லாரும் தப்பா நினைச்சுப்பா, அதனால தக்குடு ஸ்டெல்ல ஒரு சந்தேகம் கேக்கட்டுமா? அப்போ 'மங்களம்' உண்டாகும்னு நம்பிக்கையோட இருக்கேள்...;)

Unknown said...

Vaduvur Suresh or Vaduvur Ravi? Ramu sir!

எல் கே said...

இப்ப அப்டேட் சரியா வருது .

அது சரி இப்ப மட்டும் என்ன பண்றாங்க இந்தியா டீம்ல ? ஸ்ரீசாந்த் ஒரு சைட்பந்து வீச சொன்ன சரியா இன்னொரு சைடில போடறான்

பத்மநாபன் said...

கிரிக்கெட்டை சரியான கட்டு கட்டி விட்டீர்கள்.. தொடர் நகைச்சுவையாக எல்லா பந்தையும் விளாசித்தள்ளிவிட்டீர்கள்...

Anonymous said...

உங்களோட டீம் மெம்பெர்கள் யாராவது இண்டியன் டீமில ஆடியிருக்காங்களா? அப்படியே நம்ம பழைய டீம பத்தி சொன்ன மாதிரி இருக்கு! ஹா ஹா..

வெங்கட் நாகராஜ் said...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் அனுபவங்கள் பற்றிய பகிர்வு. உங்கள் பாணியில் நகைச்சுவை சற்று அதிகமாகவே ஆங்காங்கே தெளித்து இருந்தது. நான் விளையாடிய கிரிக்கெட் பற்றிய எண்ணங்களும் அவ்வப்போது வந்து போனது :)

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா வெளையாடுறாங்க....

ரிஷபன் said...

மன்னார்குடி என்றதும் வெண்ணைத்தாழி உற்சவம் ஞாபகத்துக்கு வந்தது.. ஹரித்ரா நதி.. கனு அன்று கோபிநாதன் கோவிலில் ராஜகோபாலன் மட்டும் தனியே இருக்கும் அந்த மதிய நேரம்.. ராகமாலிகையாய் அர்ச்சனை செய்யும் தீட்சதர்.. ம்ம்..

RVS said...

@அப்பாதுரை
அந்தக் காலத்தில் கிரிக்கெட் உலகத்தில் சஞ்சரித்தோம். பேச்சு மூச்சு எல்லாம் கிரிக்கெட். சதி மதி விளக்கங்கள் உங்கள் வாயால் கேட்க விருப்பம் தல. ;-)

RVS said...

@அப்பாதுரை
பத்தாவதுக்கு மேல.. நாங்க தண்ணி போடலை ஜி! போட்ட ஆளு சொன்னதைக் கேட்டோம்.. ;-)

RVS said...

@RAGHUWANTH

Thanks Gopli! ;-)

RVS said...

@தக்குடு
கமென்ட் நல்லா அழகா இருக்கு.
மங்களத்தைதான் கேட்கணும் தக்குடு.. ;-))))))

RVS said...

@Kiru
சுரேஷா.. ரவியா.. முடி வந்து மூஞ்சியில விழும்.. ஒடிசலான தேகம்.. பந்து ஆனா சுள்ளுன்னு விழும்.. செட்டி ரவி உண்டு.. இது ரவியா சுரேஷா.. ;-)))))

ராமு சாரைப் பத்தி ஒரு எபிசொட் எழுதலாம்.. ;-))

RVS said...

@எல் கே
ஆமாம். எல்.கே. மீசை வச்சுகரதிலையும், ஆட்ல போஸ் கொடுக்கரதுலையும் தான் இருக்காங்க... வேற ஒன்னுத்துலையும் இல்ல.. ;-)

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! லோடு லோடா நினைவுகள் இருக்கு.. முடிஞ்சவரை சுவாரஸ்யமா தர ட்ரை பண்றேன்....;-)

RVS said...

@Balaji saravana
எக்ஸாட்லி. தெரு கிரிக்கெட் விளையாடற மாதிரி தான் இருக்காங்க.. ஹா.ஹா..ஹா.. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நிச்சயமா கிரிக்கெட் விளையாண்ட விளையாடற எல்லோருக்கும் இதுபோல சில நினைவுகள் இருந்திருக்கும். அதில் கொஞ்சமாவது நான் தூண்டியிருந்தா மகிழ்ச்சிகள்.. ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி மனோ! பதிவு தவறாமல் கருத்துரைப்பதற்கு ஒரு நன்றி. ;-)

RVS said...

@ரிஷபன்
ஸார்! அடுத்தது மன்னார்குடி டேசில் ராஜகோபால ஸ்வாமியின் பங்குனிப் பெருவிழா... எல்லாத்தப் பத்தியும் எழுதறேன்.. வந்து சேவிச்சுட்டு போங்கோ.. ;-) ;-)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் நாட்களும் மீண்டன ஆர்விஎஸ்.

//என்னதான் இருந்தாலும் நீ அந்த சிங்கிள் எடுக்க ஓடியிருக்கக் கூடாது. மேச்சே டர்ன் ஆயிடுச்சு.."//

//சும்மா போய் விளையாண்டாலே ஜெயிப்போம். ...மொதெல்ல இந்த வெட்டி மீட்டிங் போடறதை நிறுத்தனும்"//

விளையாட்டாய் இருந்த அன்றைய கமெண்ட்கள் இன்றையத் தொழிலுக்குப் பொருந்துவதுதான்
இன்மையான முரணோ?

வழக்கமான ஐந்தெழுத்து பாராட்டுத்தான் ஆர்விஎஸ்.

RVS said...

@சுந்தர்ஜி
மிக்க நன்றி ஜி! விளையாட்டா எழுதினேன்... ;-))))))))))

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கே அடிக்கடி வரேன் இனி

RVS said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.. அடிக்கடி வாங்க.. ;-)))))))))))

Unknown said...

அண்ணே கொஞ்சம் லேட்
ஆணி அதிகம் இருந்ங்க படிச்சிட்டு வரேன்

Unknown said...

அண்ணே
செமைய இருக்கு
நல்ல உணர்ந்து எழுதி இருக்கீங்க.
மீண்டும் வருகிறேன்
ஒரு சில இடங்கள் மிக அருமை
"வானத்துல போற காக்காவ எண்ணிக்கிட்டு வேடிக்கை பாரு..//ஹஹா

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails