Thursday, February 24, 2011

கபடவேடதாரி



ஒரு ஹனுமத் ஜெயந்தியில் காலை ஒன்பது நாற்பதுக்கு கல்யாணி ஹாஸ்பிடல் அதிர அழுது பிறந்தவனுக்கு ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய்விட்டு குங்குமம் ஒட்டிய துளசி பிரசாதமும் கையுமாக இந்தப் பெயர் வைத்தது அவன் அப்பா. முட்டி போட்டு தவழ்ந்து வீட்டுக் கூடத்தில் விளையாடும் போது கூட வாயை உப்பி கொழக்கட்டை அடைத்த கன்னம் போல வலம் வருவான். "வச்ச பேருக்கு பங்கம் வரமா நடந்துக்கறான் பாரு..." என்று விளையாட்டாக கூடி நின்று சொந்தபந்தங்கள் கிண்டலடித்து நகைச்சுவை கும்மியடித்தன.

"போன வாரம் தஞ்சாவூர்லேர்ந்து கோகுல் வந்தப்ப கொடுத்த அரையணா கிளு கிளுப்பையை கூட கதை மாதிரி ஜோரா தோள் மேல போட்டுக்கிட்டு மூலையில உக்காந்திருந்தது.." என்று ரொம்பப் பெருமையாக ஊராரிடம் மெச்சிக் கொண்டாள் அவன் அம்மா. இரண்டு மூன்று வயதில் "அனுமந்து..மாமாக்கு உம்மாச்சி ஸ்லோகம் சொல்லிக்காமி" என்றால் எந்த உம்மாச்சி என்று கேட்காமல் "புத்திர் பலம் யாஷோதைர்யம்..." என்று ஆஞ்சநேயர் ஸ்லோகம் தான் சொல்வான். இப்படி பிறந்ததிலிருந்து உண்டான நெருக்கமான பந்தம் அவனுக்கும் அனுமாருக்கும். ஸ்கூல் படிக்கும் போது ஃபான்சி டிரஸ் காம்ப்பெட்டிஷன் வந்தால் நீள தாம்புக் கயிறு எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு பின்னால் வால் விட்டு கன்னத்தை 'உப்' பண்ணிக்கொண்டு வேஷத்திற்கு தயாராகிவிடுவான். 

பாண்ட் போட்டு அழகு மயில்களை நோட்டம் விடும் வயது எட்டியபோது ஒரு டை ஹார்ட் அனும பக்தன் ஆனான் அனுமந்து. பிரதி சனிக்கிழமை உபவாசம் இருப்பது. ராமர் கோயில் பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சார்த்துவது, மாதம் ஒரு சனிக்கிழமை 108 வடமாலை சார்த்துவது என்று கிட்டத்தட்ட ஆஞ்சநேயர்க்குள் ஐக்கியமானான். "அனுமந்து பார்த்துடா ஆஞ்சநேயர் நெஞ்சை கிழிச்சு காமிக்கற படத்தில எல்லாம் காலேண்டர்காரங்க இனிமே உன்னைப் போட்டுடப் போறாங்க" என்று நண்பர்கள் கலாய்த்தார்கள். இதைவிடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஜானகிராமன், கல்யாணராமன் என்று பெயர் கொண்டவர்களிடம் அளவுக்கு அதிகமான மரியாதையுடன் நடந்துகொண்டான். சீதாராமன் என்று பெயர் இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக பயபக்தியுடன் விழுந்து சேவித்து விடுவான். அது என்னடா சீதாராமன் மாமாட்ட அவ்ளோ பக்தி என்று கேட்டால் "அவர் பேர்ல தாயாரே இருக்காளே.." என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு பக்திரசம் மேலோங்க சொல்லி பூரிப்படைவான்.

படித்து நல்ல வேலைக்குபோனான். வீட்டிலிருந்து ஆபிஸ் சென்று சீட்டில் உட்காரும் வரை கண்ணில் தென்படும் அனுமார் சுவாமி கோயில்கள் ஆறு. அனைத்திற்கும் தாவாங்கட்டையில் ஒரு போடு போட்டுக்கொண்டு கொக்கி மடக்கிய ஆள்காட்டி விரலை கிஸ் அடித்துவிட்டு தான் செல்வான்.

போன வாரம் வியாழக்கிழமை ஆறு கெஜம் புடவை, ரெண்டு முழம் ஜாக்கெட் தலையில் ஒரு முழம் பூவோட வந்த பக்கத்து சீட் மல்லிகாவை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் அனுமந்து. சின்னக் குழந்தைபோல குலுங்கி குலுங்கி அழுத மல்லிகா புருஷனுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கா? சொல்லுங்க...

பின் குறிப்பு:  மெய்யாலுமே இப்படி ஒரு கேரக்டரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

பட உதவி: http://commons.wikimedia.org/
-

32 comments:

geetha santhanam said...

அனுமன் வேஷமிட்ட ராவணனாயிருக்கானே

ஸ்ரீராம். said...

மனோதத்துவ ரீதியாக அணுக வேண்டிய விஷயம்...

இராஜராஜேஸ்வரி said...

லுங்கி குலுங்கி அழுத மல்லிகா புருஷனுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கா? சொல்லுங்க...//

ஆஞ்சநேயர் கோவிலில் போய் வேண்டிக்கச் சொல்லுங்க....

அப்பாதுரை said...

அதே,அதே!
>>ஆஞ்சநேயர் கோவிலில் போய் வேண்டிக்கச் சொல்லுங்க....

பத்மநாபன் said...

மல்லிகாவுக்கும் அனுமார் மேல் அதீத பக்தியாக இருக்கும் ...

இளங்கோ said...

//போன வாரம் வியாழக்கிழமை ஆறு கெஜம் புடவை, ரெண்டு முழம் ஜாக்கெட் தலையில் ஒரு முழம் பூவோட வந்த பக்கத்து சீட் மல்லிகாவை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் அனுமந்து. சின்னக் குழந்தைபோல குலுங்கி குலுங்கி அழுத மல்லிகா புருஷனுக்கு ஆறுதல் சொல்ல யார் இருக்கா?//

அட ராமா !!!

பொன் மாலை பொழுது said...

அளவற்ற காமம் சகலத்தையும் மாற்றி விடும். எங்கும் உள்ளதுதான் இது.

suneel krishnan said...

இதுதான் கதையில ட்விஸ்ட் :)

அப்பாதுரை said...

பத்மநாபன் கமென்டா சும்மாவா?

Chitra said...

பின் குறிப்பு: மெய்யாலுமே இப்படி ஒரு கேரக்டரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.



....அப்புறம் எப்படி கதைன்னு நினைச்சுட்டு போக முடியும்? ம்ம்ம்ம்......

raji said...

இது போல அபத்தமாக அலையும்
கேரக்டர்கள் நாட்டில் உண்டுதான்.

ஆசாரம் அனுஷ்டானம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு
டி வி யில் போடும் படங்களின் நடிகையை
வக்கிரமான கமென்டுடன் பார்க்கும் மனவக்கிரம்
உடையவர்களும் உண்டு

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! அனுமந்து ஆஞ்சநேய பக்தன் என்று தப்பா நினைசுகிட்டிருக்கீங்க.. அவன் 'வாலி'யின் பக்தனாயிருக்கலாமில்லையா?

Madhavan Srinivasagopalan said...

//பின் குறிப்பு: மெய்யாலுமே இப்படி ஒரு கேரக்டரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். //

யாரது ? தெரிசுக்கலன்னா, அநேக்கு, தலை வெடிச்சுடும் போல இருக்கு..!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தன்னை பிரம்மச்சாரியின் ரோல் மாடல் போல் காண்பித்துக்கொண்டு கடைசியில் தங்கள் சுயரூபத்தைக் காண்பித்த மனிதர்களை நானும் அறிவேன் ஆர்.வி.எஸ்.

அனுமான் என்பது நீங்கள் தொங்கவிட்டுள்ள முகமூடிகளில் அவர்களுக்கானது.

பின்குறிப்பு தனியாகத் தேவையில்லை.நாங்கள் நம்புகிறோம்.

RVS said...

@geetha santhanam
ஒரு வரியில் நறுக்கு தெரித்தார்ப்போல ஒரு கமெண்ட்டு.. நன்றி. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
அப்டியா? ;-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஹி.ஹி.. அற்புதமா இருக்குங்க.. உங்க கமெண்ட்டு.. ;-)

RVS said...

@அப்பாதுரை
நன்றி அப்பாஜி! ;-)

RVS said...

@பத்மநாபன்
இதுதான் ரசிகமணியின் நச் கமென்ட் என்பது.. ;-) ;-)

RVS said...

@இளங்கோ
சூப்பர் இளங்கோ.... ராமனை கூப்பிட்டீங்க பாருங்க.. அங்க தெரியுது உங்க சாமர்த்தியம்.. ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
சரிதான் மாணிக்கம்... காமத்தீயில் வெந்து சாவோர் பல.. ;-)

RVS said...

@dr suneel krishnan
ஆமாம். டாக்டர்.. டுவிஸ்டு கதை.. கருத்துக்கு நன்றி. ;-)

RVS said...

@அப்பாதுரை
உங்க கோஷத்துல நானும் கலந்துக்கறேன் அப்பாஜி! ;-)

RVS said...

@Chitra
மடக்குரீங்களே சித்ராஜி!!
புனைவு கொஞ்சம் நினைவு கொஞ்சம்... ஹா..ஹா.. ;-) ;-)

RVS said...

@raji
பசுத்தோல் போர்த்திய புலிகள் உலாவும் இடம் இது அப்படீங்கறீங்க.. சரியா? ;-) ;-)
கருத்துக்கு நன்றி.. விரல் சரியாயிடுச்சா? ;-) ;-)

RVS said...

@மோகன்ஜி
அண்ணா.. என்ன மாதிரியான ஒரு டுவிஸ்டு கமெண்ட்டு? ;-) ;-) ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா.... இந்த மாதிரி அசடையெல்லாம் நீ தெருஞ்சிக்க வேண்டாம்.. நீ ரொம்ப நல்லவன்.. ;-)

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! உங்கள் பகுதியில் கவிதை மழையில் தினம் நனைகிறேன் நான். மிக்க நன்றி. ;-)

ADHI VENKAT said...

அனுமந்து இப்படி பண்ணிட்டானே!

RVS said...

@கோவை2தில்லி
ரொம்ப மோசம்! ;-)

ரிஷபன் said...

அனைத்திற்கும் தாவாங்கட்டையில் ஒரு போடு போட்டுக்கொண்டு கொக்கி மடக்கிய ஆள்காட்டி விரலை கிஸ் அடித்துவிட்டு தான் செல்வான்.

பொதுவா பொண்குழந்தைகள் தானே இப்படி ப்ரே பண்ணுவா..

RVS said...

@ரிஷபன்
பெண்களைப் பிடிக்கும்ன்னு சிம்பாலிக்கா காட்டினானோ? ;-)
கருத்துக்கு நன்றி சார்!;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails