Friday, January 14, 2011

மன்னார்குடி டேஸ் - பொங்கலோ பொங்கல்

sugarcane vendorசந்தைப்பேட்டையிலும், மனிதர்கள் மண்ணை ஈரம் பண்ணாத பேருந்து நிலைய சுற்றுப்புறங்களிலும், தேரடி பெரியகோயில் துவஜஸ்தம்பம் அருகிலும், கீழப்பாலம் மணி டீக்கடை ஓரத்திலும், பெரிய ஆஸ்பத்திரி அருகில் பாலக்காட்டு ஐயர் கிளப் கடை ஜன்னலோரத்திலும், பச்சைப் பசேல் தோகை விரித்து எட்டு அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய் கட்டு கட்டாய் கருப்பிளம் பெண்ணாய் கூட்டமாக வளைந்து நிற்கும் கரும்புகள் விற்பனைக்கு காத்திருந்தால் அதுதான் அந்த வருடத்திய பொங்கலின் முதல் அறிகுறி. உழவர்களும் மண்ணின் மைந்தர்களும் நிரம்பி இருக்கும் மன்னையில் பொங்கல் நாட்கள் ஒரு உற்சாக திருவிழா. பயிர்கள் நாலு போகம் விளைந்த காலங்களும் உண்டு. நல்ல வளமான பூமிதான். சென்னை போல நூறுகளின் மடங்கில் போர் தோண்டி பூமாதேவியை ரொம்ப சிரமப் படுத்தவேண்டாம். அவளை லேசாக வருடி விடுவது போல முப்பது அடிகளில் நல்ல தண்ணீர் கிடைத்த காலம் அது. பக்கத்தில் மாயவரம் பகுதி இதை விட வளமானது, பதினைந்து அடிக்கு ஒரு பைப் இறக்கினால் கூட இளநீர் போன்ற சுவைநீர் முகத்தில் பீச்சியடிக்கும். 

ஊரில் தமிழர்களின் தலைப்பண்டிகையான பொங்கல் மூன்று நாட்கள் குதூகல கொண்டாட்டம். "அப்படிச் சொல்லுய்யா....நாங்களும் யூத்துதானே..." என்று பரதம் ஆடி அபிநயித்து பளீரென்று வெண் பற்கள் தெரிய சிரிக்கும் கார்மேக சாலமன் பாப்பையாவோ "ஆமாண்டி நேத்திக்கு வரும் போது முழுச்சு முழுச்சு கண்ணா முழி பிதுங்கி வெளிய விழற மாதிரி வச்ச கண் வாங்காம பார்த்தானே அவனேதான்" என்று வீட்டில் யாரையும் நோக்காமல் காதுக்கு நோக்கியா கொடுத்து இளசுகள் ரகஸிய அரட்டை அடிக்க உதவும் விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ ஆக்கிரமிக்காத பொங்கல் நினைவுகள் என்றுமே கரும்பு தான். இப்பெருநாளில் ஊரில் காவி சட்டையோ கருப்பு சட்டையோ பாகுபாடு இல்லாமல் சூரியனுக்கு நன்றி சொல்லும் Thanks Giving பெருவிழா. இந்த பண்டிகையை கருப்பு சட்டை இயற்கைக்கு வந்தனம் என்று சொல்லும். காவி சட்டை சாமி கும்புடுறோம் என்று சொல்லும். விழா நோக்கம் வேறாக இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு பண்டிகை நாள் என்ற சந்தோஷ ஜுரம் எல்லோருக்கும் பற்றிக்கொள்ளும்.

மார்கழி மாசத்தின் மிச்ச சொச்ச குளிர் இன்னும் இருக்கையில் வரும் போகி தினம் பழசை எரிக்கவும் குளிர் காயவும் தோதாக இருக்கும் நாள். எல்லோர் வீட்டிலும் நிச்சயம் கிழிந்த பழைய கோரைப் பாய் எப்படி ஒவ்வொரு போகிக்கும் எரிக்கப்படுகிறது என்பது விடை காண முடியாத கேள்வி. ஒற்றை ஹவாய் செருப்பு, காது போன நைலான் மற்றும் நாலு மாசம் தவணை முறையில் பின்னிய ஒயர்க் கூடை, பஞ்சு போன தலைகாணி, உடைந்து போன முக்காலி என்று சகலமும் எறியும் நெருப்பிற்கு ஆஹுதியாக இடப்படும். இப்படி தீ நன்றாக பற்றிக்கொண்டு திகுதிகு என்று எரியும் போது கோபி தீபாவளி முடிந்து ரொம்ப நாள் கழித்து ரகசியமாக பாதுகாத்து வைத்த பச்சை நூல் இறுக்கி சுற்றிய ஆட்டம் பாம் ஒன்றை எரிகிற கொள்ளியில் அசால்ட்டாக தூக்கிப் போட்டான். அது வெடித்து சிதறி அந்தப் பழம் பாயின் தீப்பிடித்த கோரை ஒன்று அப்போது அன்னநடை பயின்ற எங்கள் தெரு அப்சரஸ் ஒருத்தியின் புதுப் பட்டுப் பாவாடையில் விழுந்து பட்ட இடம் பொசுங்க... அவள் குய்யோ முறையோ என்று அலற... பாம் போட்டவன் தப்பிக்க... ஒரு பாவமும் அறியாத இந்த பச்ச 'மண்ணு' மாட்ட... ஏற்பட்ட ரகளையில் ஒரே அமளி துமளி ஆகிப்போனது ஒரு பழைய போகி நாளின் கதை. போகியில் கண்டது கடயதை எரித்தாலும் பொறாமை, பொச்சரிப்பு போன்றவைகளை எரிப்பதற்கு யாரும் முயலவில்லை முன்வருவதும் இல்லை. அதெல்லாம் பத்திக்காது போலருக்கு.
pongal paanai

பொங்கலன்று வேங்குழல் ஊதும் கிருஷ்ண பரமாத்மா போல் எல்லோர் கையிலும் கரும்பென்ற கருப்பு ஃபுளூட் இருக்கும். தோகையையும் அடிவேர்ப் பகுதியில் கொஞ்சமும் விட்டு வெட்டிவிட்டு நம்மை விடப் பெரிதாக இருக்கும் கரும்புடன் மதில் கட்டையில் கூடுவோம். இடுப்பில் மடித்துக் கட்டிய வேஷ்டியும் நெற்றியில் விபூதிப் பட்டையும் ஒரு கையில் மடாதிபதி போல கரும்பும் வைத்திருக்கும் என்னைப் பார்த்து நவயுக பட்டினத்தார் என்று ஒன்றிரண்டு மாமிகள் சிலாகித்தார்கள் என்று ஸ்ரீராம் சொன்னான். ஒரு வார்த்தை பேசிவிட்டு முன்பற்களால் தோலை இழுத்து இழுத்து துப்பிவிட்டு ஐந்துமுறை கடித்து கரும்புச்சாறு உள்ளே போன பின்னர் மறுபடியும் அடுத்த வார்த்தை வாயிலிருந்து வெளிவரும். உட்காரும் மதில் அளவிற்கு துப்பிய கரும்பு சக்கை சேர்ந்து விடும். ஒரு தெருவே கூடி நின்று கரும்பு சாப்பிட்டது அங்கேதான். பொங்கலன்று ஆரம்பிக்கும் கரும்புத் தீனி நிச்சயம் ஒரு வாரம் வரை இருக்கும். சூடு தாங்காமல் வாயின் இரு ஓரத்திலும் புண்ணாகி வாய்வெந்து நொந்து போனவர்களும் எங்கள் திருக்கூட்டத்தில் உண்டு. கொஞ்சம் குண்டாக உருண்டு வரும் அப்புவை பார்த்து கையை துதிக்கை போல ஆட்டி பிளிறி ரெண்டு கரும்பு துண்டங்கள் வெட்டிக் கொடுத்து அதே தும்பிக்கையால் அடி ஆசீர்வாதம் பெற்றான் ஸ்ரீராம். 

அது பாவாடை தாவணிகளின் பொற்காலம். பொங்கலுக்கு பல வர்ண ஹாஃப் சாரிகளில் பதினெட்டுகள் வலம் வரும். Ethnic dressing. மாந்தளிர் மேனிக்கு அவர்கள் அணியும் அரக்கு கலர் ஹாஃப் ஸாரி பல விடலைகளின் ராத்தூக்கத்தை கெடுக்கும். பி.எஸ்.ஏ கம்பெனியினர் பெண்களுக்கு பார் இல்லா சைக்கிள் விட்டிருந்த காலம். சுரேஷ் நதியா ஜோடி திரைப்படங்களில் தனித்தனி சைக்கிள்களில் ஜோடியாய் சுற்றிய காலம். பாவாடை தாவணிகள் சைக்கிள் ஓட்டும்போது சக்கரத்தில் சிக்காதா அதை எடுத்துவிட மாட்டோமா என்று சைக்கிள் சீட்டுக்கு மேலே பார்க்காமல் கீழேயே பார்த்துக் கொண்டு 'பொண்'னான வாய்ப்பை தவறவிட்ட ப்ரஹஸ்பதிகளும் உண்டு. அக்கா தங்கைகளுக்கு பொங்க காசு கொடுக்க அக்கம்பக்கம் அயலூர்காரர்கள் கூடவே தன் எட்டுக்கல் பேசரி போட்ட ஆத்துக்காரி மற்றும் பொண் கொழந்தைகளுடன் வரும்போது தெருவே அந்த ஃபாரின் ஃபிகரை கண்கொட்டாமல் பார்த்து வெட்டிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு என்றைக்கும் இல்லாத திருநாளா "என்ன மாமா சௌக்கியமா? இப்பெல்லாம் நம்மூறு பக்கம் வரதே இல்ல.. அடிக்கடி வாங்கோ.." என்று வருங்கால மாப்பிள்ளைகளின் ராஜ உபசாரம் தெருவெங்கும் கிடைக்கும். ஒரு பாவமும் அறியாத நான் அவர்களுடன் உட்கார்ந்து தேமேன்னு இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பேன். ஓ. இப்போ நான் பொங்கல் பற்றி எழுதணும் இல்ல.... ஓ.கே அடுத்த பாராவுக்கு வாங்க...

maattu pongal

மாட்டுப் பொங்கல் தான் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் நாள். மாடல்ல மற்றவை எவை என்று அன்று ஊரே அல்லோகலப்படும். உடனே வழக்கமா எல்லோரும் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு "ஹாப்பி பொங்கல்" என்று மாட்டுப் பொங்கல் அன்று சொல்வார்களே அதனால் தானே என்று கேட்கக் கூடாது. மாடு இருக்கும் வீடுகளில் ஆயர் குலம் உதித்த தங்கராசுக் கோனார் தான் பால் கறக்கும் தலைமை காண்ட்ராக்ட். தலையில் சிகப்பு வண்ண காசித்துண்டின் முண்டாசோடு சைக்கிளில் வந்திறங்கும்போது பானுப்ப்ரியா தங்கை யாரும் சிக்க மாட்டாளா பாடி கறக்கமாட்டோமா என்ற ஏக்கம் அவர் கண்களில் வழிவது தெரியும். மாட்டுப் பொங்கல் அன்றைக்கு அதிகாலையில் ஒவ்வொரு வீடாக வந்து மாட்டை பத்திக் கொண்டு போய்விடுவார். எல்லா மாடுகளையும் குளம் குட்டை ஓரத்திலோ அல்லது ஆத்தோரத்திலோ விரட்டிச் சென்று வைக்கோல் மற்றும் தேங்காய் நார் போட்டு அழுக்கு நீங்க குளிப்பாட்டி, நெற்றிக்கு சந்தனத் திலகம் குங்குமம் இட்டு, கழுத்துக்கு வெண்கல மணி கட்டி, கலர் கலர் நெட்டி மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்வர். டிரஸ் மாட்டிவிடாதது ஒன்றுதான் குறை. கழக கட்சியினர் கருப்பு சேப்போ அல்லது கருப்பு வெள்ளை சேப்போ மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துவர். ஒரு வருஷம் கருப்பு சேப்பாய் இருந்த கொம்புகள் மறுவருஷம் நடுவில் வெள்ளை அடித்துக் கொண்டதும் உண்டு.

kurathiஎல்லாம் முடிந்து சாயந்திரம் தூரத்தில் "டன்.டன்.டன்..டண்டணக்கா... டன்.டன்.டன்..டண்டணக்கா.." என்று தம்பட்ட சத்தம் கேட்டால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க மாடு வரவேற்புக்கு தயாராகி விடுவோம். ஏனென்றால் பத்திக் கொண்டு போன மாடுகளை அவரவர் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கும் வைபவம் நடைபெறும். அப்போது குறவன்-குறத்தி டான்ஸ் போட்டு தப்புத் தாளங்களுக்கு தப்பில்லாமல் ஆடிக்கொண்டே வருவார்கள். மாடுகளுக்கு முன் புது வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டு தலைக்கு தலைப்பா போல முண்டாசு கட்டி நன்றாக "ஃபுல்"லா தள்ளாடாத தங்கராசு தனது அணிக்கு தலைமை வகித்து கம்பீரமாக நடந்து வருவார். நாங்கள் கூட்டமாக ரோடோரத்தில் குறவன்-குறத்தியோடு ஆடாமல் ரசித்துக்கொண்டு வருவோம். கருப்பாக இருந்தாலும் கன்னத்துக்கு அரை இன்ச் பவுடர் போட்டு, ரோஸ் கலர் ரூஜ் தடவி, தலைக்கு கொண்டையிட்டு, அந்தக் கொண்டையை சுற்றி உதய சூரியன் போல கலர் கலராக கோழி இறகு சொருகி அலங்காரம் செய்து கொண்டு, டைட்டாக பளபளக்கும் ஜிமிக்கிகள் வைத்து தைத்த ஒரு ஜாக்கெட் மற்றும் ஒரு ரோஸ் கலர் குட்டை பாவாடை போட்டு தப்புக்கு தகுந்தவாறு ஆடுவதை பார்த்துக்கொண்டே மாடுகளின் ஊர்வலத்தில் தடிமாடுகளாக நாங்களும் பங்கேற்போம். ஒரு முறை கடைசி மாடு விடும் வரை அந்த ஆட்டம் பார்த்துக் கொண்டு போன ஸ்ரீராம், குறவன் குறத்தி வேஷம் கலைக்கும் இடம் வரை சென்று விட்டு அலறியடித்துக்கொண்டு சீட்டின் மேலே உட்காரமால் சைக்கிளில் பறந்து வந்து "டேய்.. அந்தக் குறத்தி... குறத்தி.. குறத்தி....ஆம்பளைடா..." என்று மூச்சிரைக்க கூவிக்கொண்டு வந்தது பல வருடங்கள் கடந்து இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

காணும் பொங்கல் (அ) கணு பற்றி இப்போது எழுதினால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் எழுதவில்லை என்று தெரிவித்து வருத்த கார்டு போட்டுவிடுகிறேன்.

எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். (மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூட... :-) :-)  )

பட உதவி: trsiyengar.com , http://www.4to40.com http://shanthisthaligai.blogspot.com
குறத்தி படம்: http://picasaweb.google.com/lh/sredir?uname=krishnandhanapal&target=ALBUM&id=5094836275045528065

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். நன்றி.

-

50 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

மன்னார்குடி மாயவரம் ரெண்டும் வந்திடுச்சு, சூப்பர். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

MANO நாஞ்சில் மனோ said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மூன்று பதிவுகள் போட்டுள்ளேன் முடிந்தால் படிக்கவும் ப்ளாகர் அப்டேட் ஆவதில்லை.

இளங்கோ said...

நினைவுகள் அருமை அண்ணா..
உங்களுக்கும், வீட்டில் உள்ளோருக்கும் எனது தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Madhavan Srinivasagopalan said...

//புவனேஸ்வரி ராமநாதன் said.. "மன்னார்குடி மாயவரம் ரெண்டும் வந்திடுச்சு, சூப்பர். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். "//

அமாம்.. ஒங்களுக்கு பிடிச்சா ரெண்டு ஊருமே வந்திடிச்சி..

@ ஆர்.வி.எஸ். அஞ்சாவது பாரா தேவையான்னு நெனைச்சேன்.. போனாப் போகுதுன்னு கடைசி வரி எழுதி.. சமாளிச்சிட்டீங்க..

ஆம்பிளைதான.. திருநங்கை இல்லியா ?

Anonymous said...

இனியவை பொங்கட்டும்..
இனிதே துவங்கட்டும்...
பொங்கலோ! பொங்கல்!!

ஆர்வா said...

சென்னையிலேயே பொறந்து வளர்ந்ததால எனக்கு இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைக்கல.. உங்கள் அனுபவங்கள் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது.. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

raji said...

//சென்னை போல நூறுகளின் மடங்கில் போர் தோண்டி பூமாதேவியை ரொம்ப சிரமப் படுத்தவேண்டாம். அவளை லேசாக வருடி விடுவது போல முப்பது அடிகளில் நல்ல தண்ணீர் கிடைத்த காலம் அது//

முற்றிலும் உண்மைதான்

//அது பாவாடை தாவணிகளின் பொற்காலம். பொங்கலுக்கு பல வர்ண ஹாஃப் சாரிகளில் பதினெட்டுகள் வலம் வரும். Ethnic dressing.//

இன்று அந்த ட்ரஸ்ஸை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே :)

அப்பாதுரை said...

குறத்தி சிரிக்க வைத்தது.
காணும் பொங்கலில் சஸ்பென்ஸ்ல விட்டீங்களே?

பொன் மாலை பொழுது said...

நல்லாஇருக்கு R V S. உங்க நண்பர் ஸ்ரீ ராம் மாதிரி ஊருக்கு ஒருவர் இருப்பார் போலும். அங்கு மாட்டு பொங்கல் என்றல் எங்க ஊரில் முத்து பல்லக்கு திருவிழா. :))

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா…..

ஜிமிக்கி இல்லாத ஆர்.வி.எஸ். பதிவா

ம்ம்ம்ம்ம்ம்…..

இனிய நினைவுகளைத் தட்டி எழுப்பிய பகிர்வு நண்பரே…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நம்ப ஊரு இல்லாமே எழுத முடியுமா... எங்கம்மா படிச்ச ஊரு மாயவரம்.. ;-)

RVS said...

@sakthistudycentre-கருன்
கரெக்க்ட்டுதான்.. நானும் அதையே ரிபீட்டிக்கிறேன்.. ;-) அடிக்கடி வாங்க.. ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றிங்க.. உங்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி.. உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)
உங்கள் ப்ளாக் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.. ;-)

RVS said...

@இளங்கோ
ஏன் டெம்ப்ளட் கமென்ட் என்று கேட்கமாட்டேன். ;-)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
அஞ்சாவது பாரா மாதிரி அஞ்சு பதிவிற்கு மேட்டர் உள்ளது. அடக்கி வாசிக்கிறேன்..
நன்றி மாதவா.. பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@"குறட்டை " புலி
நன்றிங்க.. முதல் வருகைக்கும் பொங்கல் வாழ்த்துக்கும். உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். அடிக்கடி வாங்க..
அதென்னங்க குறட்டை புலி.. ரொம்ப வித்யாசமான பேரா இருக்கே? ;-) ;-)

RVS said...

@கவிதை காதலன்
நன்றி நண்பரே.. சிறுவயதில் வீடு தாங்காமல் வீதியில் அலைந்ததால் வந்த பலன் இது ஒன்று தான். கருத்துக்கு மிக்க நன்றி. பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@raji
ஏன்னு தெரியலை.... அந்த டிரஸ்ல எந்தப் பொண்ணும் அடக்கமா தெரியும்.. இப்போ ஏதாவது யதார்த்த படங்கள்ல இடுப்பை சுத்தி சுத்திவிட்டு அனுப்பறாங்க.. கருத்துக்கு நன்றிங்க.. பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி. உங்களுக்கும் உங்கள் 'குடும்ப'த்திற்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். என்ன பிசியா? ;-)

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி ஒரு அஞ்சாறு பதிவுக்கு மேட்டர் இருக்கு. காணும் பொங்கலை எழுதினா என்னை கண் காணாம பண்ணிடுவாங்களோ அப்படின்னு ஒரு பயம். நா தைரியசாலி தான் ஆனா பாருங்க எல்லார்கிட்டேயும் கொஞ்சம் மரியாதை.. அவ்வளவுதான்.. (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குப்பா..) ;-);-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
ஆமாம் மாணிக்கம். உங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
அந்த அஞ்சாவது பாரால நிறைய இடத்துல சான்ஸ் வந்துச்சு.. நான் எழுதலை.. பொங்கல் வாழ்த்துக்கள் தலைநகரத் தலையே.. ;-)

பத்மநாபன் said...

பொங்கல் சுக காலத்தை அப்படியே இறக்கிவிட்டீர்கள்..

சுகமே சுகம்.....கொத்தாக பள்ளி விடுமுறை ஒரு வாரம் வரை கிட்டும்.... முதலில் டி.வி சனியன் இருக்காது ... போகி எரிப்பு, அடுத்த நாள் சர்க்கரை பொங்கல்....சூட்டில் ஒரு சுவை....ஆறினால் ஒரு சுவை ..
மாட்டுப் பொங்கல் ...மாடுகளை குளிப்பாட்டி ....வாய் கழுவி ..பொங்கல் ஊட்டி ராஜ மரியாதை செய்வார்கள்...கால்நடை அபிமானம் பொங்கும் நாட்கள்.

காணும் பொங்கலில் அப்படி என்ன சஸ்பென்ஸ்....தாவணிப்பெண்கள் பூப்பறிக்க செல்வார்கள்.... ஆவாரம்பூக்களை அவர்கள் பறிப்பார்கள்..
சற்று உயரத்தில் இருக்கும் செம்பருத்திப்பூக்களை பறிப்பதற்கு உதவ தயாராக இருப்போம்...

குறத்தியின் எல்லா அலங்காரத்தையும் சொல்லிவிட்டு கடைசியில் வேடமிட்ட குறவனின் குத்தாட்டம் தான் அத்தனையுமா....

நீச்சல்காரன் said...

ஊரைச் சுற்றிக் காட்டிய நிறைவான பதிவு.
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

பத்மநாபன் said...

பொங்கல் சாப்பிட்டு விட்டு இட்லி வடையும் சாப்பிட போய் வாருங்கள்..

சோ... நான்ஸ்டாப் காமெடி.. மனம் விட்டு சிரித்து வரலாம் ...காமெடியை காமெடியா எடுத்து ..
http://idlyvadai.blogspot.com/

ஸ்ரீராம். said...

அனைவர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

R.Gopi said...

மன்னை ஆர்.வி.எஸ். அவர்களே..

இனிய நினைவுகளை உள்ளடக்கிய சூப்பர் பொங்கல்... கல கல கல...

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்றும் வலைத்தோழமைகள் அனைவர்க்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

பொங்கலோ பொங்கல் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post.html

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம் http://jokkiri.blogspot.com/2011/01/blog-post.html

R. Gopi said...

பொங்கல் வாழ்த்துகள். பதிவு வழக்கம் போல சூப்பர்.

எழுத்தில் நிறைய மெருகேறி இருப்பதாகத் தோன்றுகிறது. வாழ்த்துகள்

RVS said...

@பத்மநாபன்
அரபு நாட்டின் பொங்கல் எப்படி உள்ளது பத்துஜி?
காணும் பொங்கல் உங்கள் அனுபவத்தில் பாதி கதை சொல்லியாயிற்று.. இனி நான் சொல்ல என்ன இருக்கிறது.. ;-) ;-)
குறவன்-குறத்தி மேட்டரே ரெண்டு பதிவு தேறும். சுருக்கி போட்ட விஷயங்கள் இவை. ;-)

RVS said...

@நீச்சல்காரன்
நன்றி நீச்சல்காரரே! உங்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@பத்மநாபன்
கேட்டேன்... கேட்டேன்.. முன்னாலேயே தமிழ் புத்த்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னதை. அவர் அலப்பறை யாருக்கு வரும்... ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றிங்கண்ணா.. உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@R.Gopi
நன்றி கோபி! என் நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)
உங்கள் சைட்டும் பார்க்கிறேன். ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
நன்றி கோபி ராமமூர்த்தி :-)
எழுத்தில் மெருகா.... ஹி... நன்றி.. நிறைய புத்தகம் படிக்கிறீங்க.. கொஞ்சம் அப்பப்ப அதைப் பத்தியும் போடுங்க.. உங்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

பத்மநாபன் said...

இங்கு ஓமன் பாலையில் நம் தமிழ்க் கூட்டம் கொஞ்சம் இருப்பதால் மெஸ்ஸில் சர்க்கரைப் பொங்கல் செய்யச் சொல்லி காலையில் ஜமாய்த்தோம்...முதலில் போனவர்களுக்கு முந்திரி கிடைத்தது...மத்தபடி வழக்கமான வேலை நாள்...

Unknown said...

மன்னார்குடியில் பொங்கல் நினைவுகளை அருமையா எழுதி இருக்கீங்க.
பகிர்வுக்கு நன்றி.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தக்குடு said...

//மாந்தளிர் மேனிக்கு அவர்கள் அணியும் அரக்கு கலர் ஹாஃப் ஸாரி பல விடலைகளின் ராத்தூக்கத்தை கெடுக்கும்//

//பாவாடை தாவணிகள் சைக்கிள் ஓட்டும்போது சக்கரத்தில் சிக்காதா அதை எடுத்துவிட மாட்டோமா என்று சைக்கிள் சீட்டுக்கு மேலே பார்க்காமல் கீழேயே பார்த்துக் கொண்டு 'பொண்'னான வாய்ப்பை தவறவிட்ட ப்ரஹஸ்பதிகளும் உண்டு//

//பாலக்காட்டு ஐயர் கிளப் கடை ஜன்னலோரத்திலும், பச்சைப் பசேல் தோகை விரித்து எட்டு அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய் கட்டு கட்டாய் கருப்பிளம் பெண்ணாய் கூட்டமாக வளைந்து நிற்கும் கரும்புகள் விற்பனைக்கு காத்திருந்தால் அதுதான் அந்த வருடத்திய பொங்கலின் முதல் அறிகுறி.//

மிகவும் ரசித்த இடங்கள், அந்த அரக்கு பாவாடையுடன் நீங்க அடிச்ச லூட்டி எல்லாம் அடுத்த பதிவில் வெளி வருமா??..;PP

raji said...

கணு பற்றி எழுத முடியாததற்கு வருத்த கார்டு போட்டிருக்கிறீர்கள்.முடிந்தால் கணு பற்றிய "சோளிங்கரும் கணுப்பிடியும்" என்ற என் பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Unknown said...

ஒளி பிறக்கட்டும் ,

இருள் விலகட்டும்,

அருள் கிடைக்கட்டும்,

பொருள் பெருகட்டும்,

புகழ் பரவட்டும்,

நலம் வளரட்டும்,

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும்

எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைத் திருநாள்,

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Nandri vadyare,

தங்களன்புள்ள,

Gurukannan, Dubai.

RVS said...

@பத்மநாபன்
//முதலில் போனவர்களுக்கு முந்திரி கிடைத்தது//

தூள் கமென்ட்.. பத்துஜி ;-)

RVS said...

@ஜிஜி
நன்றிங்க... இன்னும் ரெண்டு பதிவுக்கு இருக்கு.. அடுத்த வருஷ பொங்கலுக்கு வச்சுக்கலாம்... ;-)

RVS said...

@தக்குடு
ஒரு குடும்பத்துல கும்மி அடிச்சு பாக்கறதுல உனக்கு என்னப்பா அவ்வளவு ஆனந்தம்? ;-) ;-)
(அப்பாடி! இனிமே ஒன்னும் கேள்வி இருக்காது..)

RVS said...

@raji
அவசியம் படிக்கறேன் ராஜி மேடம்.. ;-)

RVS said...

@JAGADEESAN GURUKANNA
//Nandri vadyare, //
அப்டி போடுங்க...உங்களோட முதல் வரவு.. நன்றி .. அடிக்கடி வாங்க..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-) ;-)

Unknown said...

Vadyare,

I came & commented to u 3/4 times. I am siliently watching all your posts. நானும் தஞ்சாவூர்காரன். உங்கள் பதிவை வாசித்து என்னுடைய பழைய வாழ்கையை நினைவு கூர்கிறேன்.

நன்றி நன்றி நன்றி:-):-)

RVS said...

JAGADEESAN GURUKANNA
அப்படியா... மிக்க நன்றி தோழரே.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails