Friday, December 31, 2010

கடேசிப் பதிவு

அப்பாடா ஒழிந்தான் எதிரி! இவ்வளவு காலம் பதிவுலகை பிடித்து ஆட்டிய ஏழரை நாட்டு சனி விலகியது, பின்னூட்டத்தில் நக்கலடிக்கும் பிசாசு ஒழிந்தது, பாட்டு கூத்து என்று பதிவெழுதி ப்ளாக்கில் எந்தொரு சத் விஷயங்களின் சாரமே இல்லாமல், இலக்கியமே இல்லாமல், இலக்கணமே தெரியாமல் நம்மையெல்லாம் பீடித்த ஒரு வைரஸ் இன்றோடு அழிந்துவிட்டது என்று தலைப்பை பார்த்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று டி.கே. பட்டம்மாள் குரலில் (தோ பார்டா.. இங்கேயும் பாட்டு...) நீங்கள் துள்ளிக் குதித்து சந்தோஷத்தில் மிதப்பது என் அஞ்ஞானக் கண்களுக்கு இங்கிருந்தே தெரிகிறது. அப்படி எல்லாம் ஒரு விடுதலை உங்களுக்கு அவ்வளவு சுலபத்தில் சீக்கிரத்தில் கிடைக்காது.

happy new year


ஊரில் ரொம்ப வருஷங்களுக்கு டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி எந்த கொட்டாய்க்கு ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்க்க போனாலும் சரியாக நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு படத்தை பாதியில் நிறுத்திவிட்டு சகலகலாவல்லவனில் கமல் மோட்டார் சைக்கிளில் சர்க்கஸ் காண்பிக்கும் பாடலைப் போட்டு எல்லோருக்கும் எஸ்.பி.பி ஹை எவரிபடி.. விஷ் யூ அ ஹாப்பி நியூ இயர்... என்று புத்தாண்டு வாழ்த்துப் பாடுவார். இதே பதிவில் கடைசியில் நானும் இதை செய்திருக்கிறேன். இரவு பனிரெண்டு தான் என்று இல்லை உங்கள் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் கேட்கலாம் கொண்டாடலாம்.

நடு ராத்திரி வரை கண் முழித்து குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து அரட்டை அடித்து மணி சரியாக பனிரெண்டு அடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தெப்பக்குளத்தின் நாலு கரையையும் சுற்றி வந்து சைக்கிள் மணியை டிங்கிடிங்கி "ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்" என்று வாழ்த்துக் கூச்சல் இடுவர். எந்த வீட்டில் இருந்தும் மருந்துக்கு ஒரு ஆள் கூட வந்து எட்டிப் பார்த்து எதிர் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். வயதான பெருசு யாராவது தூக்கம் வராமல் அர்த்தராத்திரி அற்ப சங்கைக்கு எழுந்து வந்தால் "போக்கத்தவங்களா போய் படுங்கோடா... நடு ராத்திரில கூச்சல் போட்டுண்டு..." என்று சொல்லிவிட்டு கொட்டாவி விட்டு தூங்கிக் கொண்டே சாலையை கடந்து திண்ணையில் போய் சரிந்துவிடுவார்கள். பனிரெண்டு மணிக்கு தான் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இல்லை. நிதானமாக பாப்பையா பட்டிமன்றம் பார்க்கும் போது சொன்னாலும் அது புத்தாண்டு வாழ்த்துதான்.

குடிமன்னர்கள் "மாப்ள.. இன்னிக்கிதான் இந்த வருசத்தோட கடேசி நாள்.. ஃபுல்லா அடிடா.." என்று கார வேர்க்கடலையும் கையுமாக ஆஃப் ஃபுல் என்று நெப்போலியன் மான்க் வாங்கி நண்பர்களுக்கு சுதி ஏத்தி விட்டு மட்டையாக்கி மடக்கி வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போய் விட்டு வருவார்கள். நம் நாட்டில் ஜனநாயகத்தை பார்க்கவேண்டும் என்றால் டாஸ்மாக் பாரில் பார்க்கலாம். அவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள். அன்னதானத்தை விட சிறந்தது பாரில் சிகரெட் தானம். இல்லேன்று வருவோர்க்கு வாரி வழங்கி அவர்களை ஊக்குவிப்பார்கள். வருகிற புத்தாண்டில் பாருக்கு வெளியே உள்ள பாரிலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓர் குலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

புத்தாண்டில் ஸ்வாமி பார்க்க கோவிலுக்கு போவது மற்றுமொரு முக்கியமான விஷயம். முண்டியடித்துக் கொண்டு புத்தாண்டு காலையில் பார்த்தால் தான் நமக்கு அருள் புரிவார் இல்லையென்றால் "போடா.. அசடு... முதல் தேதி பார்க்கவில்லை.. அதனால் சொர்க்கத்தில் உனக்கு சீட் இல்லை" என்று விரட்டிவிடுவார் என்று எண்ணிக்கொண்டு பெரியவர், சிறியவர், வயதானர் முடிந்தவர் முடியாதவர் என பார்க்காமல் ஏறி மிதித்துக் கொண்டு ஸ்வாமி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வது. இப்படி ஸ்வாமி கும்பிட்டால் நிச்சயம் அருள் புரிய மாட்டார். அப்புறம் அந்த ஒரு நாளைக்கு மட்டும் தான் ஸ்வாமி தரிசனம் செய்வது போல அப்படி ஒரு அலப்பறை. அன்று முழுக்க எப்ப வேண்டுமானாலும் சேவிக்கலாம். கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் ஆலயத்தில் தரிசனம் செய்வது உகந்தது. உள்ளம் திருக்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் கணக்காக தேமேன்னு வீட்டில் உட்கார்ந்திருக்கும் சில ப்ரஹஸ்பதிகளும் உண்டு. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. போய் ஒருமுறை கடவுளர்க்கும் ஹாப்பி நியூ இயர் சொல்லலாம். தப்பில்லை.

அப்புறம் சிகரெட் பிடிப்பதை விடுவது, தண்ணியடிப்பதை தவிர்ப்பது, புத்தாண்டில் டைரி எழுதுவது என்று புதுப்புது அரிய முயற்சிகள் எல்லோரும் செய்வதுதான். சிகரெட்டை விட சிறந்த வழி நினைக்கும் போது அக்கணமே புகைக்கும் கிங்க்ஸ்சை காலடியில் போட்டு நசுக்குவதுதான். குடும்ப வாத்தியாரிடம் (ப்ரோஹிதர்) சென்று நாள் நட்சத்திரம் பார்த்தெல்லாம் புகையை நிறுத்த முடியாது. வருஷத்தின் கடைசி ராத்திரி 11:59 ஒரு சிகரெட் பிடித்துவிட்டு மறுநாள் காலை 11:59 க்கு கையில் வத்தி ஏற்றி வைத்த நிறைய போதை அடிமைகளை பார்த்திருக்கிறேன். டைரி எழுதுவது என்பது புத்தாண்டு தொடக்கத்தின் ஒரு தவிர்க்கமுடியாத சம்பிரதாயம் என்று எடுத்துக்கொண்டு பலர் பல நல்ல டைரிகளை கோழிக் கிறுக்கல் கிறுக்கி பாழ் பண்ணி விடுவார்கள். முதல் இரண்டு நாட்களுக்கு இஸ்திரி கணக்கு, "இன்று பேருந்தில் சென்ற போது என் காலை ஷு காலால் ஒருவன் மிதித்தான்" என்று நிகழ்வுகளையும் சேர்த்து வாழ்வும், அன்றாட கணக்குவழக்குகளையும் ஒரு வாரம் எழுதிவிட்டு தூக்கி பரண் மேல் போட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் முதல் பக்கத்தில் உள்ள முகவரி, தொலைபேசி எண், எல்.ஐ.ஸி பாலிசி நம்பர், கார் நம்பர், டிரைவிங் லைசென்ஸ் நம்பர், பாஸ்போர்ட் நம்பர் இத்யாதி இத்யாதிகளை மட்டும் நிரப்பி பத்திரமாக பெட்டியில் வைத்திருப்பார்கள். டைரியில் கணக்கு எழுதுவது எவ்ளோ அபாயகரமான செயல் என்று தற்போதைய சி.பி.ஐ ரெய்டுகளின் மூலமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் எதிலும் எழுதி வைக்காத ஒரு சர்வ சுதந்திர வாழ்க்கை வாழுங்கள். மகிழ்ச்சியில் முகிழ்த்திருங்கள்.

இந்தப் புத்தாண்டில் தாத்தா, அம்மா, ஐயா, தளபதிகள், அன்னை, தில்லியில் இருக்கும் ஜீக்கள் (இது அரசியல் ஜீக்கள் நமது பதிவுக் கும்மி ஜீக்கள் இல்லை), தோழர்கள் என்று சகலரும் மக்கள் நலனுக்கு ஒன்றாக சேர்ந்து பாடுபடவேண்டி அந்த இறைவனை வேண்டுவோம். ஓட்டுக்கு பைசாவிற்கு பதிலாக வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வி வழங்கச் சொல்லி கேட்கலாம்.

என்னை நேரடியாக தொடர்பவர்கள், மறைமுகமாக தொடர்பவர்கள், வாழ்த்துபவர்கள், வைபவர்கள் என்று எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வழக்கமா எல்லோரும் சொல்றா மாதிரி மீண்டும் அடுத்த வருஷத்தில் சந்திப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நான் சொன்னதோட நிறுத்தாம எஸ்.பி.பியும் சொல்றார் கீழே பாருங்க...




விஷ் யு ஆல் எ ஹாப்பி நியூ இயர் 

புத்தாண்டிலும் தொந்தரவுகள் தொடரும்....

நன்றி.

-

Thursday, December 30, 2010

கர்நாடிக் காது!

margazhi ragam1


உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சிம்மத்தை பாட்டுப் பாடி எழுப்பியாச்சு. இந்த கர்நாடக சங்கீதம்...சினிமாவில் எப்படி உபயோகிச்சுருக்காங்கன்னு பார்த்தோம்னா.. ஐயோ.. ஒங்கூட ஒரே ரோதனையாப் போச்சுப்பான்னு நீங்கள் சாய் மாதிரி புலம்புவது கேட்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு. இவ்வளவு ரணகளப் பட்டதோடு ப்ளீஸ் கொஞ்சம் இதையும் கேளுங்களேன்.  இதில் நிறைய சேர நன்நாட்டுப் படங்கள் இடம் பெற்றிருக்கும். அங்கேதான் ஒரு மிருதங்கமும், தம்புராவையும் தூக்கிக்கொண்டு மரத்தூண் வைத்த விசாலமான திண்ணையிலோ அல்லது மழை விழும் முற்றத்திலோ உட்கார்ந்துகொண்டு பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். அரக்கு கலர் ரவிக்கைப் போட்டு கேரள முண்டு கட்டிக்கொண்டு முறைபெண்ணோ காதலியோ நெற்றியில் சந்தனக் கீற்றோடு தூணில் மறைந்து சங்கீத லுக் விடுவதற்கு உடனே தயார். சொல்லவா வேண்டும் கச்சேரி களை கட்டி விடும். இது போன்ற பத்துக்கு ஒன்பது படங்களில் மோகன்லாலும் நெடுமுடி வேணுவும் கட்டாயம் அடவு கட்டியிருப்பார்கள். "யாரானு... எந்தானு..." என்று கேட்டுக்கொண்டு தலையை ஆட்டி திண்ணைக் கச்சேரி, முற்றம் கச்சேரி என்று இன்ஸ்டன்ட்டாக தொடங்கிவிடுகிறார்கள்.

முதலில் தமிழில் ஆரம்பிப்போம். தமிழில் கே.பி தான் அதிகமாக கர்நாடக இசையை பிரதானமாக வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள்.... என்று வரிசை நீள்கிறது.


மஹா கணபதிம்...  ஒரு கர்நாடக சங்கீத இசைக் களனில் உருவான படத்தை ஹிட் செய்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு. இசைக்கு போட்டியாக கே.பியின் டைரக்ஷன். இவ்விரு இமயங்கள் போட்டி போட்டுக்கொண்டு உழைத்ததில் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. சரக்கடித்துவிட்டு வந்த மிருதங்கிஸ்ட் டெல்லி கணேஷை அவையை விட்டு வெளியே போகச் சொல்லி ஒத்தை வயலினோடு ரசிகர்களின் கரவொலியையும் சேர்த்து இசைஅமைத்த பெருமை ராஜாவையே சேரும்.


என்னை என்ன செய்தாய் வேங்குழலே... சுதா ரகுநாதன் பாடியது.. இவன் படத்திற்காக. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன அழகுக் கோணல் வாய் சௌந்தர்யா கச்சேரியாக வாயசைத்தது. நடுநடுவில் வரும் பார்த்திபனின் கிறுக்கல்கள் அபாரம்... சபாக்களின் பாட்டுக் கச்சேரிகளின் போது சில கழிசடைகள் என்னென்ன சேட்டைகள் செய்கிறது என்று காண்பித்திருப்பார் ரா.பார்த்திபன். ரொம்ப நாளா ஆளையே காணோமே.. இக்கட ரா ரா பார்த்திபன்.



ஏழு ஸ்வரங்களுக்குள் - வாணி ஜெயராம் பாடிய பாடல். நல்ல தேஜஸோடு இளவயது ஸ்ரீவித்யா ரஜினியின் அறிமுகப் படமான அபூர்வ ராகங்கள் படத்திற்காக பாடியது. எம்.எஸ்.வி அவர்களின் இசை கோலத்தில்... யார் யாரை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை சிக்கு போட்டு பிரித்து எடுத்திர்ப்பார் கே.பி.



ஆந்தோளனம் - ஜேசுதாஸ்... சித்ரா.... பாடிய.. சர்க்கம் படப் பாடல்.. தமிழ்ப் படங்களில் தொடையழகியாக வலம் வந்த ரம்பா... இழுத்து போர்த்திக்கொண்டு கள்ளம்கபடமற்ற பெண்ணாக வீணை மீட்டி மாடு மேய்க்கும் வினீத்தை நினைத்து பாடும் பாடல்.. வாயில் வெற்றிலையுடன் நெடுமுடி வேணுவின் நடிப்பு அற்புதம். கிருஷ்ணனைப் பற்றிய பாடல்... அற்புதம்..  கேதார கௌள ராகம்.. கோக்களை மேச்சும் களிச்சும் சிரிச்சும்..



நகுமோ... மோகன்லால். நிறைய கர்நாடக சங்கீதப் பாடல்களில் வாயசைத்த பெருமையுடைவர் இந்த தம்பிரான். நன்றாக கூர்ந்து கவனித்தால் எவ்வளவு ஸ்பஷ்டமாக மோகன்லால் உதட்டசைத்து உள்ளம் உருகி நடித்திருப்பது தெரியும். நிறைய நடிகர்களுக்கு பெரிய பெரிய வசனங்களுக்கே லாங் ஷாட் போய்விடுவார்கள். ஒரு தியாகராஜர் கீர்த்தனைக்கு ஜேசுதாஸ் பாடியதற்கு க்ளோஸ் அப்பில் நடிகரின் முகம் காண்பிப்பது அங்கிள் பன்ணின் மேல் வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கை. சித்ரம் படப் பாடல்.



நாத ரூபிணி - எம்.ஜி. ஸ்ரீகுமார். ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ஒரு ஹிட் ஃபிலிம். தற்போது கமல் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுதமி மோகன்லால் நடித்த படம். கர்நாடகப் பாடல்கள் நிறைந்த படம் என்றாலே அங்கே நெடுமுடி வேணுவும் ஆஜர். இந்தப் பாட்டிற்க்காக ஸ்ரீகுமாருக்கு தேசிய விருது கிடைத்தது என்று நினைக்கிறேன். ப்ருகாக்களை அள்ளி விட்ருப்பார்.




சாதிஞ்சனே - கே.ஜே ஜேசுதாஸ், டி.என். சேஷகோபாலன், சித்ரா.  உங்கள் காது கர்நாடிக் காதாக இல்லாவிட்டாலும் நிச்சயம் கேளுங்கள். மூன்று பாடகர்களின் தேன் குரல் சங்கமத்தில் நீங்கள் முழுவதுமாக கரைந்து போவீர்கள்.  பாடல் முழுக்க அந்த ஹீரோ உட்கார்ந்து பாடும் இடங்களும், பாவாடை சட்டை போட்டு நெற்றியில் சந்தனக் கீற்றோடு ஹீரோயின் பார்க்கும் காதல் பார்வைகளும்... கேட்பது தியாகராஜர் கீர்த்தனையா அல்லது ரொமாண்டிக் டூயட்டா என்று தெரியாமல் போகிறது. பியூட்டிஃபுல்.  ஆரபி ராகம். (சிந்து பைரவியில் ஜட்ஜுக்கும் டிரைவருக்கும் வரும் சங்கீத சண்டையில் பேசப்படும் அதே ராகம்) படம் சோபனம். 


ராம கதா... சிபி மலையில் இயக்கத்தில் பல விருதுகளைக் குவித்த பரதம் படப் பாடல். வழக்கம் போல் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். வழக்கம் போல் மோகன்லால் நடித்திருக்கிறார். வழக்கம் போல் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல் நீங்களும் கேளுங்கள்.



பாவயாமி... ஜெயா டி.வியில் ஹரியுடன் நானில் ஜேம்ஸ் மற்றும் ஹரியுடன் உட்கார்ந்து எல்லோரையும் கலாய்க்கும் சரத் இசையமைத்து பாடியது... எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் மேடம் பின்னூட்டத்தில் இட்டது... அட்டகாசமான பாடல்....



படக் குறிப்பு: முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை முழு முதலாக் கொண்டு மார்கழி ராகம் என்று டி.எம். கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீயை வைத்து ஒரு படம் எடுத்து திரையரங்குகளில் வெளியிட்டார்கள்.  ஓடியதா அல்லது தியேட்டரை விட்டு வெளியே ஓடியதா என்று தெரியாது. இந்தப்பதிவிற்கு ஒரு படமாக இந்தப் படம் உதவியது.

ரசிக நெஞ்சங்கள் விருப்பப்பட்டால் இன்னும் பகிர்வேன். ;-)

நன்றி.

-

Wednesday, December 29, 2010

கல்யாணியா... காம்போதியா...

saraswathi

இந்த சங்கீத சீசனில் கர்நாடக இசையை அக்கக்காக பிரித்து மேய்வது என்று சபதம் எடுத்துவிட்டேன். அதற்கு இடையூறாக இருப்பது இரண்டுதான். ஒன்று முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெட்ட வெட்ட முளைக்கும் ராட்சஷன் தலைபோல துருத்தி துருத்தி எனை துரத்தும் ஆபீஸ் ஆணிகள். ஒன்றா... இரண்டா ஓராயிரம். இரண்டாவது ட்ராபிக் இல்லாத சென்னை ரோடுகள். ஆமாம்.. வாகன சமுத்திரத்தில் இன்ச் இன்ச்சாக ஊர்ந்து செல்லும்போது நிறைய பலதரப்பட்ட பாடல்கள் கேட்கலாம். இப்போது நிறைய இடங்கள் காலி. நிர்ஜனமான சாலைகள். ஏனென்றால் ஆணி பிடுங்கிவிட்டு வீட்டுக்கு செல்லும் போது அர்த்த ராத்திரி ஆகிவிடுகிறது. அப்படியும் பல காலத்திற்கு முன் என் இதயத்தை கொள்ளை கொண்ட பாடல்கள் என்னால் பிரத்யேகமாகப் எரிக்கப்பட்ட(Burn process) எல்லா குறுந்தகடுகளையும் தூசி தட்டி எடுத்து ஒவ்வொன்றாக தினமும் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

பெண்கள் பெயரில் உள்ள ராகங்களின் பெயர்கள் மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்று பலரும் என் புகழ் பாடியதால்....... கீழே உள்ள ராகங்களின் பெயர்களும் ஞான் அறிங்ஞு... ரிபீட் பெயர்கள் மட்டுமே..

ராகத்தில் சிறந்த ராகமெது... கல்யாணியா... காம்போதியா...
அகத்தை குளிரச் செய்யும் அழகான தோடியா..
ஆட்டத்திற்கே உகந்த நாட்டைக் குறிஞ்சியா..
பாவத்தோடு பாட பைரவியா...
மனம் பாங்காய் உருக வைக்கும் ரஞ்சனியா...
கலகலப்பாய் பாட கரஹரப்ப்ரியாவா...
கருணையே உருவான காமவர்த்தினியா...
பஹுதாரியா.... சுத்தசாவேரியா....

பஞ்சமம் இல்லாத ஹிந்தோளமா...
தேவமநோஹரியா.... தேவகாந்தாரியா..
தேனினும் இனிக்கும் கானடாவா.....
சிந்தை குளிர வைக்கும் சிம்மேந்த்ர மத்யமமா...
சந்தோஷத்தை தரும் சங்கராபரணமா...
காவேரி போல் ஓடும் சாவேரியா....
மனக் களைப்பை நீங்க வல்ல காபியா...
பன்னிசைத்துப் பாட ஷண்முகப்ரியாவா....

படுத்துறங்கச் செய்யும் நீலாம்பரியா...
அதிகாரமாய்ப் பாட அடானாவா...
அகிலமெல்லாம் மயங்கும் ஆனந்தபைரவியா...
தாபம் அகல ஒரு தன்யாசியா...
தரணியைக் காக்க நல் தர்பாரோ...
சரச சல்லாபத்திர்க்கே சாரங்காவா..
ஷ்யாமளனை எழுப்ப பூபாளமா..
பாங்காகப் பாட ஓர் பாகேஸ்வரியா..
சாந்தமாய்ப் பாட ஷாமாவா...
சிருங்காரமான சிந்துபைரவியா..
மங்களம் பாட ஓர் மத்யமாவதியா...


மீண்டும் இதுவும் ஒரு நித்யஷ்ரீ(ஸ்ரீமான் தக்குடுவின் ஸ்பெல்லிங்) அக்காவின் பாடல் தான். எந்த ராகம் சிறந்த ராகம் என்று யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். உங்கள் ஐயம் அறவே அகன்றுவிடும். இதுவா அதுவா என்று எல்லா ராகங்களின் பெயர்களையும் ராகத்தோடு பாடிவிட்டு கடைசியில் ஒரு கைத் தட்டலுக்குப் பின் விடை கூறுகிறார் நித்யஸ்ரீ. கேளுங்கள்.

 

நான் பாடாமலே உங்களைப் படுத்துவது என்று முடிவாகிவிட்டபின் இதையும் எழுதாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்து விட்டேன். ஸ ரி க ம ப த நி என்ற ஸ்வரங்களை சில பறவைகள் விலங்குகளின் குரல்களுக்கு ஒப்புமைப் படுத்துவார்கள். அப்படி வகைதொகை பிரித்தவைகள் காற்றுவாக்கில் கேட்டவைகளை மீண்டும் ஒருமுறை எனக்கு தெரிந்த சங்கீதக் கண்மணிகளிடம்(அம்மா, பாரியாள், அக்கா...) கலந்தாலோசித்தவைகளை கீழே தருகிறேன்.

  1. ஸ - ஷட்ஜமம்- மயில்
  2. ரி  - ரிஷபம் - வானம்பாடி 
  3. க  - காந்தாரம் - ஆடு
  4. ம - மத்யமம் - புறா
  5. ப - பஞ்சமம் - குயில்
  6. த - தைவதம் - குதிரை
  7. நி - நிஷாதம் - யானை

இதேபோல ராகத்திற்கு ஒரு இஷ்ட தெய்வம் என்று நிறைய இருக்கிறது.

பலப்பல ராகங்களை ராகாமிர்தமாக நித்யஸ்ரீ பாடியதை கேட்ட நாம் நிச்சயம் இதையும் கேட்க வேண்டும். பாலையா ஒரு நாட்டின் அரசனுக்கு நிகரான சிம்மாசனத்தில் அமர்ந்து இளையராஜா ரஹ்மான் ஆர்க்கேஸ்ட்ரா போல ஒரு ரெண்டு டஜன் பக்கவாத்திய கலைஞர்களுடன் பாண்டியன் தர்பாரில் ஸ்டைலாக பாடும்.. பி.எம்.கேவின் அற்புதமான பாடல், கே.வி.மகாதேவன் இசையில் ஒரு நாள் போதுமா... இன்றொரு நாள் போதுமா... அபாரமான அசத்தல்...அசத்தல்... கானடா என் பாட்டு தேனடா.. இசை தெய்வம் நானடா..



அசையும் பொருள் நிற்கவும், நின்ற பொருள் அசையவும் செய்யும் மஹாதேவனால்தான் இவரை அடக்க முடிந்தது.

பின் குறிப்பு: இசை பற்றி பின்னூட்டமிட்டு மீண்டும் மீண்டும் என்னை சீண்டிப் பார்த்தால் இந்த சீசன் முழுவதும் நீங்கள் இசையடி பட்டு துன்பப்பட நேரிடும். அப்புறம் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா..."ன்னு தன்னந்தனியாக பாடித் திரியவேண்டியதுதான். நன்றி.

பட உதவி: http://www.globalragas.com/
-


Sunday, December 26, 2010

சிவபெருமான் கேட்ட சங்கீதம்

சென்னையெங்கும் இசைமழை பொழிகிறது. சபாக்கள் நிரம்பி வழிகின்றன. தனுர் மாச குளிருக்கு காஷ்மீர் கம்பளி சால்வையை கழுத்தை சுற்றியும் காதுகளை மறைத்தும் முகத்தில் மூக்குக் கண்ணாடி மட்டும் தெரியும்படி இழுத்து போர்த்திக்கொண்டு தள்ளாத வயதிலும் கடமை தவறாமல் கச்சேரி அட்டென்ட் செய்கிறார்கள். மயிலையை சுற்றியுள்ள இடங்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இசை தெரியாதவர் கால் வைத்தால் சர்.....ரென்று வழுக்குகிறது. ஒபாமா ஆளும் யூஎஸ்ஸில் மைக்ரோசாஃப்டில் பில் கேட்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் என் பள்ளிகால நண்பன் விஜய் "மத்தியான்னம் ஒன்னரைக்குள் வந்து என்னைப்பார் இல்லேன்னா நான் கச்சேரிக்கு போய்விடுவேன்" என்று மிரட்டி நட்புக்கு கண்டிஷன் போடுகிறான். பக்கத்து வீட்டு மாமி கூட காதால் சங்கீதம் கேட்பதோடு நிறுத்திவிட்டாள். எனக்கும் பூனை கரண்டுவது போலிருக்கும் மியூசிக்கிலிருந்து விடுதலை. மாமி இப்போது மருந்துக்கு கூட வாயைத் திறப்பது இல்லை. மகா நிம்மதி. சரி.  ஏதாவது ஒரு சபாவை கொஞ்சம் நெருங்கி டிக்கெட் வாங்கலாம் என்றால் ஐநூறு ஆயிரம் என்று விலை. அப்படி இல்லை என்றால் ஏதாவது தேங்காமூடி கச்சேரிக்கு ஃப்ரீ பாஸ் தருகிறார்கள். ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து பனியில் நனையாமல் காலையில் ஜெயா டிவியில் மார்கழி மஹா உற்சவம் பார்த்து என்னுடைய சங்கீத அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.

இவ்வளவு விஸ்தாரமான முதல் பாராவை படித்துவிட்டு நாளைக்கு ஜிப்பாவோடு மேடையேறி கச்சேரி பண்ணும் லெவெலில் எனக்கு இசை ஞானம் இருப்பதாக யாரும் கிஞ்சித்தும் எண்ணி விடவேண்டாம். எனக்கு தெரிந்த ரஞ்சனி, வசந்தா, கல்யாணி, பைரவின்னு  ராகத்தோட பெயர்களைச் சொன்னால் கூட என் தர்மபத்தினி "எல்லாம் பொம்னாட்டி பேர்ல இருக்கு. அதான் கரெக்டா ஞாபகம் வச்சுருக்கீங்க." என்று நாலு பேர் முன்னால் நாட்டியாக பேசி தாறுமாறாக காலை வாறுகிறாள். கர்நாடக சங்கீதம் கேட்க வேண்டும் என்றால் மனதை ஒருமுகப்படுத்தி, இப்போது சினிமாக்களில் பாடும்/கத்தும் பாடகர்களின் அவலமான உச்சரிப்பையும் அபஸ்வரமான சுரப்ரஸ்தாபங்களையும் நினைவில் நிறுத்திக் கேட்டால் போதும். கர்நாடக சங்கீதம் பேதமில்லாமல் புரிந்துவிடும். ராகம், தாளம் தெரியவேண்டும் என்று தேவையில்லை. சுபபந்துவராளியில ஷட்ஜமத்தில இழுத்து பஞ்சமத்தில இறங்கி காந்தாரத்தில ஏறினா என்ன ராகம் வரும் போன்ற இசையறிஞர்கள், சங்கீத ஜாம்பவான்கள் பதிலளிக்கும் பத்து மார்க் பெரிய கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் ஞானம் வளர்ந்த பிறகுதான் கர்நாடக சங்கீதம் கேட்கவேண்டும் என்பது அத்தியாவசியம் இல்லை. அவசியமும் இல்லை.

கேட்கும் இசை தமிழிசை என்றால் உங்கள் காதுகளுக்கு பாதி சுமை குறைந்தார்ப் போல் இருக்கும். ஏனென்றால் பாடலுக்கு அர்த்தம் புரிதலில் கொஞ்சம் முழித்துக் கொள்வீர்கள். கையை தொடையில் தோசை திருப்பி போல தப்புத்தப்பாக திருப்பிப் போட்டு தூக்கத்தை கலைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள். இயக்குனர் கே.பி சார் சிந்துபைரவியில் இதைத் தான் அழுத்தம் திருத்தமாக சுஹாசினியை வைத்து சொல்லியிருப்பார். உன்னால் முடியும் தம்பியில் கூட மானிட சேவை துரோகமா என்று கர்நாடகத் தமிழ் கச்சேரியில் மேடையில் கமலை பாட வைத்து அசத்தியிருப்பார். இந்த மனோதிடத்துடன் போய் யார் வேண்டுமானாலும் எந்தப் பாடகரின் கச்சேரியை வேண்டுமானாலும் கேட்கலாம். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாமா "இந்த ராகம்னா எனக்கு உசுரு.. என்ன ராகம் சொல்லுங்கோ பாப்போம்..." என்று ரொம்ப சீண்டிப்பார்த்தால் "இது அபூர்வமான ராகமாச்சே..."ன்னு சொல்லிட்டு வலது பக்கம் உட்கார்ந்திருக்கும் வாட்ச் இல்லாத அன்பரிடம் "இப்ப டயம் என்ன?" என்று கேட்டு தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்களை சங்கீத மும்மூர்த்திகளாலும் காப்பாற்ற முடியாது. 

தமிழ்ப்பண்ணை வெளியீடாக 1947-ல் வெளிவந்த சங்கீத யோகம் என்ற புஸ்தகத்தை வானதி பதிப்பகத்தார் முதல் வெளியீடாக 1998-ல் வெளியிட்டார்கள். அதன் ஒரு பதிப்பு என்னிடம் பத்திரமாக இருக்கிறது. இசைக்கடலில் மூழ்கி முத்தெடுத்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் இப்படி படித்ததெல்லாம் பார்த்திருக்கிறேன். அந்த யோகம் எனக்கு வாய்க்கவில்லை. இன்று அதைப் புரட்டிப் பார்த்ததில் கிடைத்த சங்கதிதான் கீழே உள்ளது. கல்கி அவர்களின் கைவண்ணத்தை அப்படியே தட்டச்சு கைங்கர்யம் செய்து இங்கே வழங்கியிருக்கிறேன். படித்து ரசியுங்கள்.

சங்கீத சபைகளில் டிக்கெட் வைத்து சங்கீதக் கச்சேரி நடத்தும் வழக்கத்தைப் பற்றிச் சமீபத்தில் ஒரு வாதம் எழுந்தது.

தமிழ் நாட்டில்  உள்ளவை போன்ற சங்கீத சபைகளும், டிக்கெட் வைத்துக் கச்சேரி நடத்தும் வழக்கமும் வட இந்தியாவிலே கிடையாது.

அதாவது வெகு சமீபகாலம் வரையில் இல்லை; இபோதுதான் தமிழ் நாட்டிலிருந்து இந்த ஏற்பாடு வடக்கே போயிருக்கிறது.

சரியோ, தவறோ, தமிழ் நாட்டுக்கே சிறப்பாக உரிய இந்த ஏற்பாடு எப்போது ஆரம்பமாயிற்று?

ஏதோ அறுபது வருஷம், நூறு வருஷத்துக்கு உட்பட்டதாயிருக்கும் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

தமிழ் நாட்டில் சுமார் ஆயிரத்து நூறு வருஷகாலமாகப் பணங் கொடுத்துப் போட்டுக் கேட்கும் வழக்கம் உண்டு என்று சில நாளைக்கு முன்புதான் தெரிய வந்தது.
இதற்கு ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அத்தாட்சி கூறுகிறார்.

mappillai swami
மாப்பிள்ளை ஸ்வாமி 


முதன் முதலாகத் தமிழ்நாட்டில் பணங்கொடுத்துக் பாட்டுக் கேட்டவர் யார் தெரியுமா?

சாக்ஷாத் பரமசிவனேதான்!

அதிலும் அவர் காசுகொடுத்துக் கேட்டது தமிழிசை தானாம்!
"தெரிந்த நான்மறையோர்க் 
கிடமாய திருமிழலை
இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும் 
இச்சையாற் காசுநித்தம் நல்கினீர்!"
என்று திருவீழிமிழலைப் பதிகம் எட்டாவது பாசுரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அருளியிருக்கிறார்.


அந்தக் காலத்தில் சிவபெருமான் தமிழிசை கேட்டதற்காகக் கொடுத்த காசு, பொற் காசு! இந்த நாளில் நாம் கொடுக்கும் காசு கடிதாசு! அவ்வளவுதான் வித்தியாசம்.

தமிழிசை ஒரு நாள் கேட்டதோடு சிவபெருமான் திருப்தியடைந்து இருந்து விட்டாரா? இல்லை. நித்தம் நித்தம் காசுகொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்க் கேட்டார்! தமிழோடு சேர்ந்த இசை அவ்வளவாக அவரை கவர்ந்திருந்தது!

சிவபெருமான் அவ்விதம் காசு கொடுத்துத் தமிழிசை கேட்ட இடம் எது? நாலுவேதங்களையும் ஓதி உணர்ந்த மறையோருக்கு இருப்பிடமான திருவீழிமிழலை என்னும் ஊர். வேத கோஷங்களுக்கு மத்தியில் தமிழிசையும் பெருமான் கேட்டு அனுபவித்திருக்கிறார்!

இப்படியெல்லாம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சொல்லியிருப்பதிலிருந்து, அந்த நாளில் நமது முன்னோர்கள் தமிழிசையை எவ்வளவாக மதித்தார்கள் என்பது நன்கு தெரிகிறது.

பின் குறிப்பு:
இத்தனை வலுவான மேற்கண்ட பாராக்களுக்கு பிறகு நான் எழுதுவது அவ்வளவு உசிதம் இல்லை. ஆகையால் எனக்கு மிகவும் பிடித்த கீழ்கண்ட தாயுமானவர் பாடல்  சஞ்சய் சுப்ரமண்யத்தின் குரலில்... ராகமாலிகா ராகத்தில்... மனுஷன் அப்படியே ஆளை உருக்கியிருப்பார்... மீண்டும் சொல்கிறேன்... கர்நாடக சங்கீதம் தெரியாவிட்டாலும் என்னை போல் அவர் பாடியிருக்கும் பாவத்தை வைத்து பாடலை முழுமையாக கேளுங்கள்.. உங்கள் மன மகிழ்ச்சிக்கு நான் உத்திரவாதம்.

கர்நாடக சங்கீத தமிழ்ப் பாடல்:
பெற்ற தாய் தனை மகமறந்தாலும்..


சஞ்சய்க்கு மீசை நன்றாக இல்லை...


படக் குறிப்பு:
2008  திருவீழிமிழலை விஜயத்தின் போது அடியேன் எடுத்த மாப்பிள்ளை ஸ்வாமி என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரேஸ்வரர் படம்.

நன்றி ;-)

-

Saturday, December 25, 2010

உண்மை சுடும்

ரெண்டு நாளா கடையை பெரிய நவ்தால் பூட்டு போட்டு மூடியாச்சு. டன் டன்னா வேலையை முதுகுல ஏத்தி பாரம் சுமக்க வச்சுட்டாங்க. வேலைப் பளு. ஏற்கனவே நாம கம்பெனிக்கு பில்லர் மாதிரி. இப்ப TMT பார் வச்சு கட்டின சொக்கப் பில்லர். மேற்கண்ட இரு வாசகங்கள் எனதருமை தங்கமணியின் சமீப கால திருவாசகங்கள். பின்னாடி குண்டலினி பாயும் ஏரியா முழுக்க ஒரே வலி. பதிவுலகத்தில் இருந்து ஆர்.வி.எஸ். ராஜினாமானா அப்படின்னு யாராவது புரளி கிளப்பி விட்டுடப்போறாங்கன்னு அப்பப்ப ப்ளாக் வந்து தலையை காட்டிட்டு போனாலும் முழுமூச்சோட உட்கார்ந்து காவியமோ எழுத்தோவியமோ படைக்க முடியலை. ரசிகப் பெருமக்களுக்கு ஒரு ஸாரி. நேத்து ராத்திரி மேய்தலில்.. நெட் மேய்தலில் கிடைத்த வீடியோ இது. 

புகைப்படம் எடுக்கும் ஒரு பத்திரிகை புகைப்படக்காரியை வைத்து சொல்லப்பட்ட அதி அற்புதமான கருத்துள்ள படம். ஐந்து நிமிடத்தில் சக்கை போடு போட்டிருக்கிறார்கள். முதல் ஒரு நிமிடம் அப்பெண்ணின் முகத்தை மட்டுமே காண்பித்து சூழலை உருவாக்கிவிட்டு பின்பு கதையின் கருவில் புகுந்திருக்கிறார்கள். நடித்த அத்துணை பேருமே அசத்தியிருக்கிறார்கள்.




பார்த்தாச்சா!! நீங்களும் அந்தாம்மாவுடன் சேர்ந்து  கண்ணீர் சிந்தினீர்களா?

******************

எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அக்கா மாலா கம்பெனியினர் இந்த கிறிஸ்துமஸ் திருநாளிற்கு வெளியிட்ட ஒரு விளம்பரம்.. கிறிஸ்துமஸ் வாழ்த்தாக இவுலகிர்க்கு....



நன்றி. ;-)
-

Thursday, December 23, 2010

லஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்

இந்த பூலோகத்தில் நிறைய விஷயங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியாக நடக்கவில்லை. அதற்காக பேசாமால் நம்முடைய வாய்க்கு பூட்டு போட்டுக்கொள்ள முடியுமா. அதுவும் முடியாது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்வது போல இக்காலத்தில் பேச்சு நாம் விடும் மூச்சை விட அதிமுக்கியம். அதுபோல வாய்ச்சொல் வீரர்கள் தான் நிறைய பேர் கோட்டையை பிடித்திருக்கிறார்கள். சரி...ரொம்ப அறுக்காமல் திண்ணைக் கச்சேரிக்குள் போவோமா...

************பெரீரீரீய்ய்ய்ய வெங்காயம்***********
போன வாரம் தமிழகமெங்கும் வெற்றிநடைப் போட்டது ஸ்பெக்ட்ரம் ரெய்டுன்னா இந்த வாரம் நாடெங்கும் விலையில் ஏறு நடை போடுவது வெங்காயம். 'பெரிய' வெங்காய விலை ஏற்றத்தால் "அதை உரிச்சா கண் ஏறியும், பச்சையா சாப்பிட்டா வாய் நாறும்" என்று நமக்கு நாமே திட்டத்தில் சுய தேறுதல் ஆறுதல் சொல்லிக் கொண்டு மக்கள் காலத்தைக் கழிக்கின்றனர். பூசணிக்காய், பரங்கிக்காய் போன்றவற்றை பத்தை போட்டு மூன்றாம் பிறை நிலாத் துண்டாக நறுக்கி வாங்குவது போல வெங்காயம் ஒன்று அரையாக வெட்டி வாங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை போலிருக்கிறது. ஆனியன் அரைக்கிலோ வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி அடித்துச் சென்று விட்டார்கள் என்பது தலைப்பு செய்தி ஆகும் காலமாகிவிட்டது. மக்களுடைய ஷேமலாபங்களை பார்க்காத எந்த அரசும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இத்தகைய கொள்ளையர்கள் மலிந்துபோன இக்கலிகாலத்தில் நமையாண்ட வெள்ளையர்களே மேல்.

************** லஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்**************
இந்திய திருநாட்டில் நடக்கும் அரசியல் கொள்ளைகளைப் பார்க்கும் போது முன்பொரு காலத்தில் நூறு ஆயிரம் என்று கை நீட்ட ஆரம்பித்து அப்புறம் லகரங்களை அடைந்து பின்பு எவ்ளோ 'சி' என்று கணக்குப் பண்ணி வாங்கிக்கொண்டிருந்தவர்கள் இப்போது 'சி'யின் நூறு, ஆயிரம் மடங்கைத் தொட்டிருப்பது லஞ்சத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியை காட்டுகிறது. நீதிபதிகள் நாட்டில் லஞ்சம் இருக்கிறது என்று நீதி தேவதையின் முன்னால் கற்பூரம் ஏற்றி அணைத்து சத்தியமாக கூறுகிறார்கள், எல்லோரும் நாடு லஞ்சத்தில் புரள்கிறது, நாட்டில் லஞ்சலாவண்யம் தலைவிரித்து பிரேக் டான்ஸ் ஆடுகிறது என்றெல்லாம் சொன்னாலும் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. இப்படி கண்ணுக்குத் தெரியாமல் அங்கிங்கெனாதபடி நீக்கமற பஞ்சமில்லாமல் லஞ்சம் எங்கும் வியாபித்திருப்பதால் அது கடவுளுக்கு சமமாகிறது.

லஞ்சத்தினால் இரு பயன்கள்.
1) வேலை சட்டென்று முடிகிறது.
2) கைநீட்டி காசு வாங்கியபின் அதிக சிரத்தையுடனும் பொறுப்பாகவும் அந்த வேலை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது.

மேற்கண்ட காரணங்கள் இரண்டும் இருப்பதால் சம்திங் நிறைய கிடைக்கும் துறைகளில் சம்பளத்தை நிறுத்திவிட்டு வேலையின் தன்மையையும் அளவையும் பொறுத்து கலெக்ஷன் பார்த்து கல்லாக் கட்டிக் கொள்ளச் சொன்னால் அந்த ஏற்பாடு எப்படி இருக்கும். வரும் வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பர்சென்ட் அல்லது வேலைக்கேற்ற ஒரு தொகையை அரசுக்கு கப்பம் கட்டச் சொல்லிவிடலாம். அப்புறம் அதை சீரமைக்கும் பொறுப்பை ஒரு லஞ்ச நல வாரியம் அமைத்து பேணி பாதுகாக்கலாம். (ச்.சீ. தூ.. இது ஒரு யோசனையா என்று காறித் துப்புபவர்கள் கண்டிப்பாக கருத்துரைக்கு வரவேற்க்கப்படுகிறார்கள்)

என்ன ஒன்று கரன்ஸிக்கு காந்தி படம் போட்டு அதன் மாட்சிமையை நாரடிப்பதை கதராடை காந்தியவாதிகள் எப்படி பொருத்துக்கொள்கிரார்களோ? (என்னா.... காந்தியவாதின்னா... சோனியா, ராகுலை பின்பற்றும் பக்தர்களா... ஐ அம் ஸாரி.. தப்பா சொல்லிட்டேன்...எஸ்கேப்....)

*********** சங்கீத சீசன் ஜோக் **************
அவர் ஒரு பெரிய பாகவதர். பெரிய பாகவதர்னா சரீரத்தில் அல்ல சாரீரத்தால் புகழ் பெற்ற பாகவதர். ஊர் ஊராக சென்று கான மழை பொழிபவர். அமிர்தவர்ஷிணி பாடினா மழை பெய்யும். அவருக்கு ஹார்மோனிய பொட்டி போடுவதற்கு, தம்புரா மீட்டுவதற்கு என்று ஒரு பக்கவாத்தியப் படை ஒன்று உண்டு. ஒரு ஊரில் கச்சேரி முடித்து அடுத்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கவாத்தியத்திய அச்சுப்பிச்சுவிற்கு அவசரமாக நம்பர் ஒன் வந்து விட்டது. பின்னால் தன் கூட உட்கார்ந்திருக்கும் சக பக்கவாத்தியங்களிடம் "எங்கயாவது நிறுத்துங்கோ.. அவசரமா வரது..." என்று கெஞ்சியது. "அண்ணா.. இருக்கார்.. நடுப்பர நிறுத்தினா கோச்சுப்பார்... கொஞ்சம் அடக்கிக்கோ..." என்று பாகவதருக்கு பயந்து வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டிருந்தனர்.

மார்கழியில் குளிர் வேறு அதன் பங்கிற்கு இன்னும் அற்ப சங்கையை துரிதப் படுத்தியது. "முட்றது.... எங்கயாவது நிறுத்துங்கோ..." என்று அவசரத்தில் கிடந்து நெளிந்ததது அந்த ப.வா. இப்படி அவர் கேட்பதும் மீதம் இருந்த பேர் அவர் வாயை அடைக்க ஏதோ பேசுவதுமாய் பின் சீட்டில் ஒரே கசமுசா. லேசாக தூக்கம் கலைந்த பாகவதர் அண்ணா பின்னால் திரும்பி பார்த்து "என்னடா அங்கே ஒரு சத்தம்..." என்று கேட்டார். முட்டிய ஆள் உடனே "அண்ணா.. ரொம்ப நாழியா ஒன்னுக்கு வரதுன்னு சொல்லிண்டுருக்கேன்.. யாருமே வாய தொறக்க மாட்டேங்கறா.." என்று ஒரு போடு போட்டதும் அண்ணா வாய் விட்டு சிரித்து வண்டியை நிறுத்தச் சொன்னார்.

*************ஐயப்ப சாமி****************
கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பயபக்தியோடு சபரி மலை செல்லும் பத்தர்கள் இருக்கிறார்கள். சாமிக்காக டீக்கடைகளில் சுத்தமாக பிரத்யேக டம்பளர் போன்றவைகளை கொடுத்து மதிப்பாக இருக்கும் வேளைகளில் மாலையும் கழுத்துமாக நின்றுகொண்டு சிகரெட் பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது. இதானும் பரவாயில்லை தண்ணியடிக்கும் சாமிகளும் இருக்கிறார்களாம். பார்களில் அவர்களுக்கு 'சிறப்பு' கவனிப்பு இருக்குமாம். விரதம் இருப்பது என்பது நம்முடைய மனதை கட்டுப்படுத்தத்தான். இப்படி சிற்றின்பகளை கட்டுப்படுத்த தெரியாத ஜென்மங்கள் எப்படி இறையின் பேரின்பத்தை காண்பார்கள். ஒருக்கால் மதுரை வீரனுக்கு மாலை போட்டுக்கொண்டதாக நினைத்துக் கொண்டார்களோ என்னவோ?

************** ரெசார்ட்? *****************
மனசுக்கு பிடிச்சவங்க கூட ஒரு நாலு நாள் தங்கினா எப்படி இருக்கும். ( டி.வி, செல் ஃபோன் உண்டான்னு கேக்குறீங்களா? )

இந்தப் படத்தை எடுத்த மகானுபாவரின் விலாசம் Not as it seems to be by Thomas Gauck


********** இந்த வார ஸ்பெஷல்... வெங்காயப் பாட்டு ***********
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே.. அந்த வெங்காய விலை போல இறங்காதது..


-

Wednesday, December 22, 2010

ஆடல் வல்லான் எனை ஆள வல்லான்

dance shiva


மார்கழியில் வரும் மற்றுமொரு மஹா உற்சவம் திருவாதிரை. திருவாதிரை சிவபெருமானின் நட்சத்திரம். திருவாதிரை என்ற உடன் சிவபெருமான் மனதுக்கு வருகிறாரோ இல்லையோ நிச்சயம் நாவிற்கு தின்ற களி நினைவுக்கு வந்துவிடும். மீண்டும் ஒரு திருவிளையாடல் எடுத்தால் "பிரிக்க முடியாதது என்னவோ?" என்ற தருமி கேள்விக்கு அந்த ஆலவாயன் "களியும் கூட்டும்" என்று நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் பதில் சொல்வது போல காட்சி அமைக்கலாம். ஐந்து, ஏழு என்று ஒத்தைப்படையில் காய்கறிகள் நறுக்கிப் போட்டு மணமாக செய்வது கூட்டு. தினமும் செய்யும் சாம்பாரை தண்ணீர் கொஞ்சம் குறைத்து கெட்டியாக செய்தால் அதுதான் களிக் கூட்டு. சாம்பாரை நீர்க்க வைத்தால் அது ரசமா என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கக் கூடாது. எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம். களி செய்வது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. அரிசியை கொஞ்சம் வறுத்து பின்பு அதை உடைத்து வெல்லம் இட்டு பொங்கல் போல் செய்து நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் தூவி அடுப்பிலிருந்து இறக்கினால்... நிறுத்துப்பா.. நிறுத்துப்பா... உன் அடாவடி தாங்க முடியலை. "நாக்குக்கு மோட்சத்தில்" சமையர்க்கட்டுக்குச் சென்று ஒரு சுடு தண்ணீர் கூட வைக்கத்  தெரியாதுன்னு சொல்லிட்டு வலையுலக மரகதக் கிச்சன் குவீன் புவனேஸ்வரி மேடம் இருக்கும்போது நீ எங்களுக்குக் களி பண்ண சொல்லித் தரியா என்று மக்கள் ஆர்ப்பாட்டம் ரோட் ரோக்கோ என்று போராட்டம் செய்வதற்கு முன் நான் இந்த மேட்டரில் இருந்து ஜகா வாங்கிக் கொள்கிறேன்.

திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமான பாமணி எங்கள் வீட்டுக்கு பின்னால் பாமணியாற்றைக் கடந்து சென்றால் இருக்கும் ஒரு தேவாரத் திருத்தலம். ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் பல்லக்கில் புறப்பாடு செய்யப்பட்டு வெகு விமரிசையாக திருவாதிரை கொண்டாடப்படும். பல்லக்கில் நடராஜாவை அலங்காரமாக வைத்து திருச்சபை நடனம் ஆடிக்கொண்டே திருச்சுற்று வருவார்கள். காணக் கண்கோடி வேண்டும். திருவாதிரை முதல் நாள் அபிஷேகப்பிரியனை அந்த சபாபதியை வெகுவாக கவனித்து மறுநாள் அர்ச்சனை ஆராதனை என்று தடபுடலாக பிரார்த்தனைகள் நடக்கும். இந்தத் திருவாதிரை நன்னாளில் ராமநாதபுரம் அருகில் உள்ள உத்தரகோசமங்கை மரகதக் கல் நடராஜர் கண் முன் வருகிறார். அதி அற்புதமான மூர்த்தம். திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவ நடராஜரும் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு மூர்த்தி.

சிதம்பரத்தில் பொற்சபையில் அம்பலவாணன் ஆடியது ஆனந்த நடனம். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற முனிவர்களின் கடும் தவத்தின் பயனால் அவர்களுக்கு இந்த நடனம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தத் திருநடனமும் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்தது தான். நித்யஸ்ரீ காதில் ஜிமிக்கி ஆனந்த நடனம் ஆட பாடும் பாட்டு...

தா தை என்றாடுவார்... அவர் தத்தித்தை என்றாடுவார்....



சுதா மாமியும் ஜிமிக்கி ஆடி அதிர பாடிய... போ சம்போ சிவ சம்போ... கங்காதர சங்கரா.. கருணாகரா.... நிர்குண பரப்ரும்ம ஸ்வரூப....

இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.

நமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...

பட உதவி: http://poetrypoem.com/cgi-bin/index.pl?poemnumber=1036522&sitename=viswabrahma&displaypoem=t&item=poetry
-

Tuesday, December 21, 2010

வெளம்பரம்

இருபது முப்பது வினாடிகளில் ஒரு நாட் வைத்து மக்களை அடையவேண்டிய விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்வது என்பது ஒரு செயற்கரிய கலை. பார்த்த பின்பும் மனதிற்குள் திரும்ப திரும்ப ஓடுவதுபோல வெகுஜன ரசனைக்கு விளம்பரப் படம் எடுப்பது நிச்சயமாக பாராட்டப் படவேண்டிய செயல். ஊரில் விளம்பர கம்பனி ஒன்று ஆரம்பிக்கும் ஆர்வத்தில் இருந்த ஆர்வலர் ஒருவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. நான் லொடலொடவென்று வாயால் ஏதாவது சொல்லி வைக்க பிடித்தால் உபயோகப்படுத்தலாம் என்று உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்க்கொட்டையாய் அவர்களோடு சேர்த்து வைத்துக்கொண்டார்கள். ஒரு உணவு விடுதியில் புதிதாக ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்று திறந்தார்கள். அதற்க்கு அவர்கள் ஒரு நோட்டீஸ் விளம்பரம் வடிவமைத்து கேட்டதற்கு "ஐஸ்வர்யா ராய்க்கு பிடித்தது உங்கள் பாட்டிக்கும் பிடிக்கும்" என்று ஐஸ்க்ரீம் படம் போட்டு ஐஸ்வர்யாவையும் போட்டு கீழே அந்த வாசகம் வைத்து விளம்பரம் செய்து கொடுத்தோம். ஹோட்டல்காரர் நன்றாக இருந்தது என்று பாராட்டினார். இதை இங்கே சொன்னதால் எனக்கு ஒரு சீப் பப்ளிசிட்டி ஆகிவிட்டது. எழுதுவதற்கு நேரமும் காலமும் சரியாக அமையாத காரணத்தினால் நான் ரசித்த இரண்டு விளம்பர வீடியோக்களை இங்கே சேர்த்திருக்கிறேன். கண்டு ரசியுங்கள்.

பாஸ்தான் தெய்வம். சொன்ன சொல் வேத வாக்கு. இந்த மூலமந்திரத்தை நன்கு அறிந்த கார்பொரேட் சகாக்கள் குழுமிய மீட்டிங் ஒன்றில் நடப்பது போல எடுத்திருக்கும் இந்த விளம்பரம் டாப் க்ளாஸ். இவர்களின் இச்செயல் கண்டு அயர்ந்து போய் போர்டு அழிக்கும் பாஸ் காட்டும் முகபாவங்கள் எழுத்தில் வடிக்க முடியாதது.




கேடில் விழுச்செல்வம் கல்வி ...
அறிவொளி இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்த போது மன்னையின் விளிம்புகளுக்கு சென்று அரிச்சுவடி பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சமூகத் தொண்டிற்கு நற்சான்றிதழ் கூட கொடுத்தார்கள். மீரா டீச்சர் தான் எங்களுக்கு கோஆர்டினேடர். ஒவ்வொரு சனி ஞாயிறும்  மேலவீதி வெஸ்டர்ன் தொடக்கப் பள்ளியில் கூடுவோம். கீழ்கண்ட விளம்பர வீடியோ பார்க்கும் போது எல்லோரும் கல்வியறிவு பெற இன்னும் எவ்வளவு அறிவொளி இயக்கங்கள் தேவைப்படும் என்ற எண்ணம் எழுந்தது.  சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் களைய உதவுவது கல்வி மட்டுமே.



கடைசியாய் ஒரு வெளம்பரம்...
தலைப்பு வெளம்பரம்ன்னு  போட்டுட்டு இந்தக் காமடி போடலன்னா இந்தப் பதிவு நிறைவு பெறாது. இவுரு ஊதறதும் அந்தப் பொண்ணு ஆடறதையும் பார்க்கறப்போ தில்லானா மோகனாம்பாள்ல..



ரசித்த உள்ளங்களுக்கு நன்றி.

-

Sunday, December 19, 2010

கூடாநட்பு

rain forest
தலைக்கு மேலே தூக்கி சம்மட்டியால் ஒரே போடு. நடு மண்டையில் நச்சென்று இறக்கினான். "பச்ச்ச்" என்று சம்மட்டி இறங்கிய சத்தம் வந்தது. தண்ணீர் வற்றிய வறண்ட நிலம் போல வகிடு எடுத்த இடத்தில் ஒரு எம்.எம். பிளந்து பிசுபிசு என்று குருதி கொப்புளிக்க ஆரம்பித்தது. நெற்றிவழியே ஆறு போல வழிந்தோடும் ரத்தத்தை கண்கொட்டாமல் ரசித்துவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை பலங்கொண்ட மட்டும் இறக்கினான். இந்தமுறை மண்டை இரண்டாக பிளந்து கபால மோட்சம் அடைந்திருந்தான். சாராயம் கலந்த ரத்தம் பொத்துக்கொண்டு கொட்டியது. தூறிக்கொண்டிருந்த மழை இப்போது நன்றாக வலுத்துப் பிடித்திருந்தது. அந்தக் கார்கால மழையில் சவுக்குக்காட்டின் ஊடே சென்று திரும்பிய அலைக்கழிக்கப்பட்ட காற்று "சா.....வூ..... சா.....வூ...." என்று பலமாக ஊதி பகிரங்கமாக அறிவித்தது போல இருந்தது அவனுக்கு. வெகுதூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக விளக்கு மினிக்கி பெரிதும் சிறிதுமாய் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. மழை ரோட்டில் வண்டிச் சக்கரங்கள் "டர்..ர்..ர்...ர்" என்று இருட்டைக் கிழித்து ஓலமிட்டது. மணி இப்போது என்ன இருக்கும். லைட்டரை ஏற்றி வலது மணிக்கட்டில் டைட்டனை பார்த்தான். சரியாக பதினொன்று காட்டியது. 

சவமாகியிருந்த சங்கருக்கு பக்கத்தில் கிடந்த பெரிய பாறங்கல்லில் உட்கார்ந்தான். நிலாவை பூமிக்கு காட்டாமல் மழை மேகம் கடத்தி வைத்திருந்தது. மழைநீரால் நனைந்திருந்த அந்தக் கல் அவன் உள்ளுக்குள் அணிந்திருந்த வி.ஐ.பி 90 செ.மீ வரை ஈரம் பண்ணியது. நிதானமாக சட்டைப் பையில் இருந்து ஒரு கிங்க்ஸ் எடுத்து பற்றவைத்தான். ஆழ உள்ளுக்கு இழுத்து பொறுமையாக புகையை வெளியே விட்டான். புகைவிட்ட அந்த வாய் "ஊ" என்ற நிலையில் இருக்க செல் கினிகினித்தது. சுந்தரியின் கால். எடுக்கலாமா வேண்டாமா என்று செல்லையே பார்த்துக்கொண்டிருந்தவன் கால் கட் ஆகும் தருவாயில் "ஹலோ.." என்றான். 
"எங்க இருக்கீங்க" என்ற மறுமுனை கேள்விக்கு
"பிரண்டோட.. வெளியில.. நீ சாப்ட்டு படுத்துடு.." என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டித்தான்.
இரண்டு கையையும் பிடித்து பிரேதத்தை தரதரவென்று இழுத்து முட்கள் அடர்ந்த ஒரு புதர் மறைவில் கிடத்தினான். சவுக்குக்காட்டின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த சுமோவிடம் சென்றான். பின் கதவு திறந்து வெள்ளைக் கலர் பத்து லிட்டர் பெட்ரோல் கேனையும், ஆண்டாள் கற்பூர பாக்கட்டையும் எடுக்கும் போது அந்த கார் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது கட்டை எறும்பு ஊர்வலம் போவது போல சட்டையின் பாக்கெட்டில் இருந்து இடது புறம் அடி நுனி வரை குறுக்காக சங்கரின் ரத்தம். என்ன செய்வது என்று யோசித்தான். சரி ஒவ்வொன்றாக பார்ப்போம் என்று தலை முதல் கால் வரை மழை நீர் நனைக்க சொட்டசொட்ட சவுக்குக் காட்டினுள் நுழைந்தான். புதருக்கு காவலாக சங்கர் அப்படியே போட்டபடி கிடந்தான். ஐந்தடிக்கு இரண்டு அங்குலம் குறைவாக சவுக்கு குச்சி போல இருந்த உடம்பிற்கு மொத்த பெட்ரோலையும் கவிழ்க்காமல் அரை கேன் எல்லா இடங்களிலும் படும்படி தெளித்து ஊற்றினான். தலை முதல் கால் வரை சூடக் கட்டியை வரிசையாக அடுக்கினான். கால் மாட்டில் குனிந்து பேண்ட் அடியை கையால் இழுத்து லைட்டரால் பற்ற வைத்தான். தலைப் பகுதிக்கு வந்து நீலக் கலர் பீட்டர் இங்கிலாந்த் காலரில் இரண்டு வினாடிகள் லைட்டரை காட்டினான். நீரும் நெருப்பும் விரோதிகள். செந்தழலும் பெட்ரோலும் கல்யாணம் நிச்சயம் ஆன காதலர்கள். பக்கத்தில் வைத்தால் உறுதியாக பற்றிக்கொள்வார்கள். தீயும் அந்த அடையார் சிவன் பெட்ரோல் பங்க் சரக்கும் சேர்ந்து திகு திகு என்று கொழுந்துவிட்டு எரிந்தது. தகனம் முடியும்வரை இருக்கலாமா என்று டைட்டனை பார்த்தான். பனிரெண்டு கடந்து ஐந்து நிமிடம் ஐந்து வினாடிகள் ஆகியிருந்தது. 

மழை சுத்தமாக விட்டிருந்தது. வானத்தில் மேகச் சிறையில் இருந்து நிலா விடுதலையாகிருந்தது. மீதம் இருந்த பெட்ரோலை அரைவேக்காடாக எரிந்துகொண்டிருக்கும் நண்பன் மேல் சாய்த்தான். எரிபவனை தனியாக விட்டுவிட்டு கிளம்பத் தயாரானான். உட்கார்ந்திருந்தக் கல் மேலே காலை ஊன்றி ஷு லேசை இருக்கக் கட்டினான். சம்மட்டியை எடுத்துக் கொண்டு வண்டியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். சாவியின் ஒரே திருகலுக்கு சுமோ உடனே அடிபணிந்து சண்டித்தனம் பண்ணாமல் கிளம்பியது. மழையினால் ஏற்ப்பட்ட சகதியில் சுமோவின் டயர் கஷ்டப்பட்டு இறங்கி ஏறி சுடுகாடாய் மாறிய சவுக்குக் காட்டிலிருந்து மெயின் ரோடுக்கு வந்துவிட்டது. 

சட்டையில் ஏற்ப்பட்ட ரத்தக் கறையை என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். அவ்வப்போது "பா....ங்..." என்று ஹாரன் அடித்துச் செல்லும் ஓரிரு லாரிகளைத் தவிர சாலையில் ஆள் அரவம் இல்லை. கிளத்ச்சில் இருந்து காலை எடுத்து மடக்கியவனுக்கு சீட்டுக்கு அடியில் ஏதோ தட்டுப்பட்டது. ரோட்டில் இருந்து கண்ணை எடுக்காமல் குனிந்து கையை துழாவி எடுத்தது ஒரு கறை களையும் பேனா வடிவ வாஷிங் பொருள். போன வாரம் சங்கரின் ஒன்று விட்ட மாமா பையன் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த வீட்டு உபயோகப் பொருள் இப்போது காட்டு உபயோகப் பொருளாய். படிப்படியாக வேகத்தை குறைத்து சுமோவை ஒரு மர ஓரமாக நிறுத்தினான். அந்தப் பேனாவை திறந்து ஒவ்வொரு கட்டெறும்பு ரத்தக்கறையாக அழிக்க ஆரம்பித்தான். ஒரு பத்து நிமிடத்தில் சட்டைப் பளிச்சிட வண்டியை நூறு அழுத்தி வீடு வந்து சேர்ந்தான்.

வண்டியை வாசலில் விட்டு விட்டு காலிங் மணி அடிக்கையில் மணி ஒன்று அடித்திருந்தது. வீட்டு வாசலில் வாலைக் குழைத்து படித்திருந்த தெருநாய் ஒன்று தலையை அண்ணாந்து "ஊ..ஓ.." என்று கத்திக்கொண்டு ஓடியது. உள்ளே விளக்குகளைப் போட்டு கதவைத் திறந்தாள் சுந்தரி. அர்த்தராத்திரியிலும் அரிதுயில் நேரத்திலும் அழகாகத்தான் இருந்தாள். மெல்லிய துணியினால் நெய்யப்பட்ட நைட்டியில் அந்த அழகு பன்மடங்கு கூடியிருந்தது.
"என்னங்க.. இவ்ளோ நாழி..." என்று வாயில் துவங்கியை கொட்டாவியை கையால் அணைபோட்டு ஊளையிட்டு கேட்டாள்.
"இல்லை.. ஒரு பிசினஸ் விஷயமா மும்பை பார்ட்டி ஒன்னு வந்திருந்தது.. அதான்.."
"எங்க போயிருந்தீங்க.."
"தாஜ்.... கன்னிமேரா.."
"சொட்ட சொட்ட நனிஞ்சிருக்கீங்க.."
"பார்க்கிங் கொஞ்சம் வெளியில.. வேலட் பார்க்கிங் கொடுக்கலை.. பசிக்குது.. சாப்பட்லாமா.." கொஞ்சம் எரிச்சலுடன் கேட்டான்.

டைனிங் டேபிளில் ஹாட் பேக்கில் இருந்ததை எடுத்துப் பரிமாறி கடைசியாக அவன் மோர் ஊற்றி சாப்பிட்டவுடன் பாத்திரங்களை அடுக்களை சிங்க்கில் அள்ளிப் போட்டு விட்டு பள்ளியறை புகுந்தாள் சுந்தரி. கண்ணை மூடி படுத்திருந்தவன் கழுத்தைச் சுற்றி பாம்பு போல் வளைத்துப் பிடித்து "நீங்க நல்ல காரியம் பண்ணிட்டு வந்துருக்கீங்க.. ஒரு ட்ரீட் கிடையாதா.." என்று சிணுங்கினாள் சுந்தரி. அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டு திரும்பி படுத்தான் குணசீலன். இரவு விளக்குக்கு போட்டியாக கண்கள் இரண்டையும் அகல விரித்து "என்ன சொல்ற.." என்று கேட்டவன் அவள் அளித்த பதிலால் அப்படியே உறைந்து போனான். "சங்கர் முதல் நாள் வீட்டுக்கு வந்தப்ப காபி கொடுத்தப்ப என் சுண்டுவிரலை லேசாக நிரடினான். ஏதோ தவறி பட்டுடுச்சுன்னு நினைச்சேன். போகப்போகத்தான் அவன் ஒரு சபலிஸ்ட்ன்னு தெரிஞ்சுது. ஒருநாள் சமையல்கட்டில் என்னைப் பின்னால அணைக்கறாப்ல நின்னு "ஒரு ஸ்ட்ராங் காபி கிடைக்குமா"ன்னு அவன் கேட்டப்ப நீங்க வராண்டாவிலிருந்து பார்த்தது எனக்கு தெரியும். உங்களுக்கு வேற பெண்களோட தொடர்பு இருக்குன்னு சொல்லி என்னை சரிக்கட்டப் பார்த்தான். நீங்க எங்கயோ ஒரு பார்ல இருக்கும் போது எனக்கு போன் பண்ணி "உன் புருஷனோட வண்டவாளத்தைப் இப்ப பாருன்னு சொன்னான். சரி.சரி அதெல்லாம் எதுக்கு இப்போ. நீங்க தூங்குங்க.. காலையில் பேசிக்கலாம்" என்று சொல்லி அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.

காலையில் போலீஸ் வந்து கையில் விலங்கு போட்டு ஜீப்பில் ஏற்றினாலும் இனிக் கவலை இல்லை என்று நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினான் குணசீலன்.
பின் குறிப்பு: குணசீலன் கொன்றது சுந்தரிக்கு எப்படி தெரிந்தது. ஏதாவது ஒரு வழியில நாட் சொல்லுங்க பார்ப்போம். என்னோட வெர்ஷனை கடைசியா சொல்றேன். இதுக்கு ரெண்டு முடிவு வைத்திருக்கிறேன். மேலே குணசீலன் தூங்கிப் போனது ஒரு முடிவு. இன்னொன்று சுந்தரி குணசீலனை லாக்கப்பில் தள்ளிவிட்டு தன்னுடைய கல்லூரிக் காதலன் கூட உல்லாச வாழ்வுக்கு போனது.
படக் குறிப்பு: மழைக் காட்டுக்குள் போன போது .....உதவி.wallpapers.free-review.net

-

Saturday, December 18, 2010

பெருமாளே!!

sorgavasal parthasarathy
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு என்பது ஒரு கோலாகல வைபவம் என்று என்னுடைய மன்னார்குடி டேஸில் எழுதியிருந்தேன். ஒரு முன்னூறு மைல் தாண்டி பஞ்சம் பிழைக்க சென்னை வந்தப்புறம் ஏகாதசி துவாதசி என்று பார்ப்பதற்கு நாளும் இல்லை கிழமையும் இல்லை நேரமும் இல்லை கோயிலும் இல்லை. இல்லை இல்லை எதுவுமே இல்லை. நம்ம பேட்டைப் பக்கம் உஷத் காலத்தில் யானை பிளிறி சொர்க்க வாசல் இருக்கும் திறக்கும் பெருமாள் கோயில் எதுவும் இல்லை. கூரைப் பந்தல் போட்டு தடுப்பு வைத்து சொர்க்கவாசல் திறக்கிறார்கள். பரமபத வாசல் என்று பதாகை வைத்தால் தான் நமக்கு அதுதான் பெருமாள் ஏளப் பண்ணப்போகும் இடம் என்றே தெரிகிறது.  இதில் ஒன்றும் பெரிய மஜா இல்லை. சரி மரீனா ஓரம் அல்லிக்கேணியில் பார்த்தனுக்கு ரதமோட்டிய உயர்திரு உலகமகா டிரைவர் மீசை வைத்த பெருமாள் பக்கம் போகலாம் என்றால் சமீபத்திய மழை எங்களை சென்னையிலிருந்து ஒட்டுமொத்தமாக பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கி ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விட்டது. பெருமழை ஏற்ப்படுத்திய குண்டு குழிகளால் நாங்கள் அமேரிக்கா ஐரோப்பா போன்று ஒரு தனி கண்டத்தில் வாழ்வது போல இருக்கிறது. ஆபீசில் ஒரு சிறப்பு விடுப்பு கொடுத்திருந்தால் வண்டி கட்டிக் கொண்டு பார்த்தசாரதியை தரிசித்திருக்கலாம். அந்த கொடுப்பினை இல்லாததால் "விடு ஜூட்" என்று அனுதினமும் குப்பை கொட்டும் இடத்திற்கு வழக்கத்தை விட அரை மணி முன்னால் ஆஜராகிவிட்டேன்.

சாயந்திரம் நிச்சயம் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலுக்கு சென்று அட்டெண்டன்ஸ் கொடுத்து "உளேன் ஐயா.. சரணம் புகுந்தேன்... அடியேனை காப்பாற்றும் ஸ்வாமி..." என்று உம்மாச்சியிடம் தண்டம் சமர்ப்பித்தது விஞ்ஞாபனம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற மனைவியின் 'உந்து'தலால் பணியிடத்தில் துறைத் தலைவரிடம் அனுமதி பெற்று என்றைக்கும் இல்லாத திருநாளாய் காரில் தலை விளக்கு போடாமல் சூரியன் தன் விளக்கடிக்கும் பணியில் இருக்கும் போதே வீடு வந்து சேர்ந்தேன். பிள்ளை குட்டிகளை அழைத்துக்கொண்டு முதலில் லக்ஷ்மி ஹயக்ரீவர் கோயிலுக்கு விரைந்தேன். ஒரு நீளமான தெரு தாண்டி அடுத்த தெருவில் இருக்கும் டீக்கடை வாசலில் தம் அடித்துக் கொண்டிருக்கும் இளைஞருக்கு அப்புறம் அங்கவஸ்த்திரத்தால் மூக்கை மறைத்து ஒரு வடகலை மாமா நின்றிருந்தார். அவர் பின்னால் அவர் ஆத்துக்காரியும் அதற்க்குப் பின்னால் மத்திம வயது பக்தர் ஒருவர் சடாரென்று வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த லங்கையை எரித்த அனுமன் வால் வரிசையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். நடுவில் யாராவது வந்து புகுந்து தன் இடத்திற்கு பங்கம் வந்துவிடப் போகிறதே என்று ஒருவரோடு ஒருவர் அணைத்துக் கொண்டு நின்றனர். மார்கழிக் குளிர் கூட காரணமாக இருக்கலாம். தெரியவில்லை. அந்த வால் பகுதியில் நின்றால் கியூ நகரும் வேகம், கோவில் இருக்கும் தூரம் போன்றவற்றை தன் கண்ணாலேயே அளந்து "இன்னும் ஒரு மணி நேரம் கழித்து நாம ஸ்வாமி பாப்போம்" என்று கணிதம் இளங்கலை பட்டம் படித்த என் மனையாள் சொன்னதும் "ஐயய்யோ.. என்னால முடியாது.... அப்பா போலாம் வாப்பா.." என்று கோரஸாக என் இரண்டு பென்னரசிகளும் பாடினார்கள்.

ஆர்.டி.ஓ ஆபிஸில் எட்டுப் போடுவது போல சரசரவென்று திருப்பி பக்கத்தில் அடுத்த பெருமாள் கோயில் எங்கிருக்கிறது என்று யோசித்துக்கொண்டே திரும்பினேன். பாய்ஸ் பட செந்தில் கபாலி குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு சிரித்துக்கொண்டே Information is Wealth சொன்னது அநியாயத்திற்கு நியாபகம் வந்தது. உடனே மூளையை திருகியதும் அது பக்கத்தில் ஒரு லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருப்பதை வெளிச்சம் போட்டு காண்பித்தது. கோயிலுக்கு அருகில் வண்டி நிறுத்தமுடியாதலால் ஒரு தெரு தள்ளியே நிறுத்திவிட்டு பொடிநடையாக கோவிலுக்கு சென்றோம். ரொம்ப கூட்டம் இல்லை. ஆனால் கோயில் இருக்கும் தெருவின் இருபுறமும் முழுக்க முழுக்க பாதரட்சைகளின் பாற்கடல். பல இடங்களில் செருப்பை தொலைத்து பொண்டாட்டியிடம் வசவும் அடியும் வாங்கிய புண்ணியவான் ஒருவர் தன் செருப்பு மேல் தூக்கி மற்றவர் தலையில் போடும் அளவிற்கு இருக்கும் ஒரு கருங்கல்லை பாதுகாப்பாக வைத்துவிட்டு போயிருந்தார். செருப்பு ஒன்றும் அவ்வளவு உசத்தி கூட கிடையாது. செருப்பு தொலைந்து போனால் வியாதி பீடிக்காது என்று என்னை பலமுறை என் வீட்டில் தேற்றியிருக்கிரார்கள்.

எங்கள் நாலு ஜோடியையும் இணை பிரியாமல் நிறைய செருப்பு இருக்கும் ஓரிடத்தில் சங்கமித்தோம். கையில் அகல் விளக்கோடு ஒரு குடும்ப தலைவி அங்கே வரிசை இருக்கிறது என்பதைக் கூட சட்டை செய்யாமல் தன் புருஷனிடம் "என் பின்னாடியே வாங்க.. விளக்குக்கு குயூ கடயாது.." என்று சாமர்த்தியமாக "ஹை..ஹை.." சொல்லாமால் அவரை ஓட்டிக்கொண்டு போனார். வரிசையில் முன்னால் நின்ற ஒரு இந்தியன் தாத்தா வரிசையின் விதிகளை சொல்லி இரைந்தார். லட்சியம் செய்தால் தானே. "சினிமாவுக்கு போனால் எவ்ளோ நேரம் வரிசையில் நிப்பாங்க..." என்ற நூறு கோடி இந்தியரின் வசனத்தை அவர் ரிப்பீட் செய்ததற்கு "இப்பெல்லாம் நெட்ல புக் பண்றாங்க.." என்று சொல்லி கட்டிளங்காளை ஒருவன் அவர் வயத்தெரிச்சலை கொட்டிக்கொண்டான். "என்ன எழவோ.." என்று கோயிலுக்குள் சொல்லி பாவத்தை கட்டிக்கொண்டார்.

வைகுண்ட ஏகாதசியில் ஊரில் எல்லாப் பெருமாள் கோயிலும் திருப்பதி ஆகிவிட்டது. ஜருகண்டி சொல்லாமல் "நகருங்க... பார்த்துக்கிட்டே போங்க சார்..." என்று கையை இழுத்து வெளியே தள்ளாத குறையாக பக்தியோடு விரட்டினார்கள். லக்ஷ்மி நரசிம்மரை பார்த்த திருப்தியோடு வெளியே நகரும்போது சொர்க்க வாசல் இல்லாத அந்தக் கோயிலின் வாசற்ப் படியில் "சொர்க்கத்தின் வாசல் படி" என்று ஏகாதசி புண்ணிய காலத்தில் சிரத்தையாக ஃபிகர் வெட்டிக்கொண்டு நின்றான். மனைவியிடம் இந்தக் காட்சியை பார்க்கச்சொல்லி தேவையில்லாமல் நான் ஒரு வெட்டு வாங்கிக்கொண்டேன். வாய் வெட்டுதான். துவஜஸ்தம்பம் அருகில் தெண்டம் சமர்பித்த பின்னர் கண் கட்டுப்பாடின்றி அந்தப் பக்கம் பார்த்தபோது பார்த்த விழி பார்த்தபடி குணா ஸ்டைலில் அங்கேயே நின்றிருந்தான் அந்த அனானி. இதற்க்கு மேல் அநாகரீகமாக பார்க்கூடாது என்று செருப்பு விட்ட இடத்தில் இருக்குமா என்று கோயிலுக்கு வரும் அனேக பக்தர்களுக்கு ஏற்படும் பயத்தில் வேகவேகமாக கோபுரம் தாண்டி வெளியே வந்தேன். ஒரு இரண்டு சக்கரக்காரர் வண்டியேற்றி செருப்பில் மண் தடவி வைத்திருந்தார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் தேமேன்னு போட்டுக்கொண்டு கோபுரத்தை பார்த்து எல்லோரும் செய்வது போல தாவாங்கட்டையில் வலது கையால் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

பசுமாட்டிற்கு ஏகாதசி அன்று அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியமாம். துளசி பூவைவிட நோஞ்சான் அகத்திக்கீரை கட்டுகளை அடுக்கி வைத்து விற்றார்கள். கூடவே கடைபோட்ட விஷயாதி அவர் வீட்டு பசுமாட்டையும் பக்கத்தில் கட்டியிருந்தார். வியாரத்திற்கு வியாபாரம் மாட்டுக்கு தீனியும் ஆயிற்று. எங்கிருந்தோ வந்த காளை மாடு போட்டிபோட்டுக்கொண்டு தலையை முட்டுவது போல ஆட்டி அந்த பசுவிற்கு வரும் தீனியையும் கலைத்துக்கொண்டிருந்தது. நாட்டில் நம் மக்கள் செய்வதைத் தான் அந்தக் காளை மாடும் செய்கிறது என்று நினைத்துக்கொண்டு மனதிற்குள் "பெருமாளே.. எல்லோரையும் காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பின் குறிப்பு: சினிமாப் பாட்டு போட்டால் இந்தப் பதிவு நீர்த்து விடும். ஆனால் போடாமலும் இருக்க முடியவில்லை. அதனால் சொர்க்கத்தின் வாசற்ப் படி யூட்டி சுட்டியை கொடுத்துவிட்டேன். காதலர்கள் அனுபவிப்பீர்களாக! தங்கமணிகளுக்கும் ரங்கமணிகளுக்கும் தான். இன்று ஸ்திர வாரம். சனிக்கிழமை. இந்தப் பெருமாளே பதிவு படிப்பவர்கள் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். நன்றி.

பட உதவி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் படம் கிடைத்த இடம் www.dinamani.com

-

Friday, December 17, 2010

என்னைக் கவர்ந்த பெண் குரல்கள்

கரும்பு தின்ன கூலியா? பிரபல பதிவர் எல்.கே பாடல் பதிவுன்னு சொன்னதும் விடிய விடிய கண் முழித்தாவது நெஞ்சை அள்ளும் பாடல் தொகுப்பு ஒன்று போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பெண்கள் குரலில் வரும் பாடல்கள் மட்டும் என்றதும் மண்டை முழுக்க ஜானகி, சித்ரா, வாணி, ஜென்சி, சுஜாதா, அனுராதா ஸ்ரீராம் என்று வந்து பாடிவிட்டு போனார்கள். மெதுவாக ஒவ்வொருவர் குரலாக என் காதுகளால் அசைபோட்டேன். 

ஏதோதோ எண்ணம் வளர்த்தேன் - சின்னக் குயில் சித்ரா. எண்ணங்களின் அலைகளில் கமலைக் காண்பிக்கும் பாலச்சந்தர். இசையராஜாவின் இளைய இசை. டாப் கிளாஸ்.



தூது செல்வதாரடி.. ஜானகி... புடவை கட்டத் தெரியுமா என்று குஷ்பூ என்ற பூஞ்சோலையை பார்த்து கமல் கேட்க...  விளைந்த ஒரு அற்புதமான பாடல்...



மல்லிகை என் மன்னன் மயங்கும்.. வாணி ஜெயராம்.. அடடா.. என்ன ஒரு வசீகரிக்கும் குரல். படுத்தும் ஒரே விஷயம் முத்துராமன் நடிப்பு... ஒன்று வேண்டும் என்றால் ஒன்றை இழக்க வேண்டும்.. ரைட்..ரைட்.. வழக்கம் போல் புன்னகை அரசி முப்பத்திரண்டு காட்டி அசத்துவார். (கருப்பு வெள்ளை போடவில்லை என்றால் என் வலையுலக வயோதிக நண்பர்கள் வைவார்கள்!!.)




தெய்வீக ராகம்...  ஜென்சி - ராஜா.. இதுவும் கமல்... பாட்டைப் பற்றிய வர்ணனை ஒன்றும் தேவை இல்லை என்று நினைக்கிறேன்... இந்த வேளைகளில் வந்தப் படங்களில் வரும் கமல் ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிடிக்கும்.. (இதில் நடித்த தீபாவையும் பிடிக்கும் என்று சொல்லவில்லை....)




தாலாட்டும் பூங்காற்று... கார்த்திக்கை மீசை எடுக்கச் சொல்லிப் பாடாய்ப் படுத்தும் நண்பர்களுடன் அவரைக் காதல் பாடு படுத்தும் பானுப்ப்ரியா... ஜானகி குயிலென்று கூவிய பாடல்..... 
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்...



இவள் ஒரு இளங்குருவி.. மற்றுமொரு ஜானகியம்மாவின் பாடல்.. ராஜாவின் இசையில் பிரம்மா படப் பாடல்.. குஷ்பூ துள்ளித்திரிந்து ஆடிப் பாடும் பொது மனது ஒரு இளம்பெண்ணின் கவலையற்ற வாழ்வு எத்தகையது என்று தெரிகிறது... 



மன்னன் கூரைச் சேலை. - ப்ரியதர்ஷன் இயக்கத்தில் காலாபானி என்று ஹிந்தியில் எடுத்து சிறைச்சாலை என்று தமிழில் வெளிவந்து வந்த சுவடே தெரியாமல் போட்டிக்குள் போன  படம். மலையாள மோகன்லால் மற்றும் தபு நடித்த இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் இன்னிசைத் தேன் சொட்டுபவை. சோலோ என்று சொன்னதால் சித்ராவின் குரலில்...




கண்ணாமூச்சி ஏனடா... ஐஸின் அட்டகாசம். எனக்கு இதில் வரும் கலர் காம்பிநேஷன்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். இரண்டாவது சரணத்திற்கு அப்புறம் நீல கலர் உடையில் வரும் ஐஸ் ஒரு அழகு மயில்.



இது ஒரு நிலாக்காலம்.. இந்தப் படத்தில் கமல் தேங்காய் சீனிவாசன் அடிக்கும் லூட்டிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். 
அர்ஜுனனுக்கு வில்லு
அரிச்சந்திரனுக்கு சொல்லு
திலீப்புக்கு தில்லு 
இந்த அட்ரஸ்ல போய் நில்லு
நான் சொன்னேன்னு சொல்லு..
என்று தேங்காய் ஒரு நகைச்சுவை சிதறல் விடுவார் பாருங்கள்... அற்புதம்.. ஜானகி இளையராஜாவின் சேர்ந்திசை கோலாகலம்.



சின்ன சின்ன வண்ணக் குயில் - மணிரத்னத்தின் மௌன ராகம் - நான் சொல்லத் தேவை இல்லை.. நீங்க தொட்டா கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு.. என்று சொல்லும் ரேவதி.. மைக் தொடாத மோகன் ...
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் பாயக் கண்டேன்... சித்ரா - ராஜா கூட்டணியின் இசை அற்புதம்.. பாடலின் ஆரம்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.




அன்பென்ற மழையிலே... ஆடியோ மட்டும் கேட்டாலே கண்களில் நீரை வரவழைக்கும் ஒரு அதி அற்புதமான பாடல். அனுராதா ஸ்ரீராம் உருப்படியாக பாடியது. ரஹ்மான் இசையில்.. அந்தப் பெரிய காந்தக் கண்ணழகி கஜோல் அரவிந்த்சாமியுடன் நடித்த மின்சாரக் கனவு படத்தில் இருந்து.... 



கண்ணன் வந்து பாடுகின்றான்..... பாலு மகேந்திரா படத்தில் ரெண்டு பொண்டாட்டி கட்டி அல்லல் படும் மோகன்... ராதிகா பாடும் இளையராஜா இசைப் பாடல்.



காற்றுக் குதிரையிலே.. ரஹ்மானின் அட்டகாசமான மெட்டுக்கு சுஜாதா பாடிய காதலின் வலியும் சோகமும் ததும்பிய பாடல்.. நல்ல உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.



சொல்லாயோ வாய் திறந்து... இசைப் பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டிய மற்றுமொரு ஜானகி இளையாராஜா கூட்டணியில் விளைந்த அற்புதப் பாடல். மேலும் அழகுக்கு அழகு தி.ஜாவின் மோகமுள் படப் பாடல்...


பின் குறிப்பு: பத்துப்பாட்டு போடுங்கள் என்று சொன்னாலும் பாட்டுக் கேட்டு பழகிய காது போதும் என்று மனதிற்கு சொல்லாமல் கை ஒத்துழைத்து ஒன்றிரண்டு மேலேயே போட்டிருப்பேன். இன்னும் குறைந்தது ஐந்து பதிவிற்கு இதுபோல தொகுப்பை போடலாம். இதோடு நிறுத்திக்கொள்கிறேன். நன்றி எல்.கே. எனக்கு பிடித்த வேலை கொடுத்ததற்கு. இவற்றையெல்லாம் விட எனக்கு மிகவும் பிடித்த குரல் என்னுடைய பாகம்பிரியாள், தர்மபத்தினி, அன்பு மனைவியின் சங்கீதக் குரல் என்று சொல்லி முடிக்கிறேன். (இந்தக் கடைசி வரியை எடுத்துக் கொண்டு கமென்ட் போட்டு தாக்குவதை தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். )

-


Wednesday, December 15, 2010

மன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை


என்றைக்கு விடியற்காலை "ஜிங்.ஜிங்.சக். ஜிங்..ஜிங்.சக்" என்ற கோரஸான ஜால்ரா சத்தம் தலையோடு கால் போர்த்திய கம்பளிக்குள் நுழைந்து உங்களை எழுப்பி விட்டால் அன்றிலிருந்து மார்கழி பிறந்து தனுர் மாத பஜனை தொடங்கி விட்டது என்று அர்த்தம். திருமஞ்சன வீதி செந்தூர ஆஞ்சநேயர் திருக்கோவில் தான் இந்த பஜனை கோஷ்டியின் ஆரம்பம். காலை சரியாக ஐந்து மணிக்கே ஸ்நானம் செய்து சட்டை போடாமல் தும்பைப்பூ போல வேஷ்டி மட்டும் உடுத்தி ஒரு பக்க தோளில் ஒரு முழம் கதம்பமோ மல்லியோ சார்த்திக்கொண்டு குறைந்தது பத்து பதினைந்து பேர் மார்கழிப் பனி மழையில் நனைந்து வீதிகளில் பக்தி சொட்டும் பஜனை மழை பொழிவார்கள். இந்த சத்சங்கத்திற்கு கோபால்சாமி சார்தான் தலைமை நடத்துனர். வழுக்கைத் தலை வாமன ரூபம். நல்ல கட்டுமஸ்தான ஆகிருதியான உடல். வெண்கல ஜால்ரா அவர் கையில் ஜதி பாடும். அந்த வெண்கல ஜால்ராவுக்கு இணையான கணீர் குரல். முதல் வரிசையில் நடுநாயகமாக பளீரென்ற ஜால்ராவை கைகளில் கோர்த்துக் கொண்டு கோபால்சாமி சார் அவருக்கு வலது பக்கத்தில் போஸ்ட்மேன் ரங்குடு கஞ்சீரா இடது புறத்தில் கோ. சார் தோளில் இடித்தபடி பஜனையை தூக்கிப் பாட ஏதுவாக ஹார்மோனியம் பொட்டி போட்டபடி மோகன் மற்றும் சிறு சிறு வாண்டுகள் இரு ஓரத்திலும் பெரியவர்களின் விரட்டல் நடைக்கு சமமாக குடுகுடுவென்று ஓடி பஜனை பாடி வருவார்கள். போஸ்ட்மேன் ரங்குடுக்கு கொஞ்சம் மேலுதடு பெரிதாக இருக்கும். கீழுதடோடு சேர்ந்து படியாமல் அடம் பிடிக்கும். வாயால் பஜனை பாடுவதில் வரும் குறையை தலை கழண்டு போகும் வரை ஆட்டி கஞ்சீராவை நையப் புடைத்து ஆற்றிக்கொள்வார். எங்காவது பக்கத்தில் இடித்து தன் மண்டை சிதறு தேங்காய் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவரை விட்டு ஓரடி தள்ளி தான் யாருமே வருவர். எல்லோர் கையிலும் தவறாமல் ஒரு வெண்கல ஜால்ரா ஜிங்.ஜிங்.ஜிங்.ஜிங்கென்று பஜனை பாடிக் கொண்டிருக்கும்.

திருமஞ்சன வீதியில் துவங்கிய பஜனை தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு கரை வழியாக ஒரு ப்ரதக்ஷிணம் வந்து திரும்பவும் செந்தூர ஆஞ்சநேயர் கோயிலுக்குள் சென்றடையும். தென்கரை, மேல்கரை மற்றும் வடகரையிலும் குளத்தின் கரைகளில் இருக்கும் ஆஞ்சநேயர், ராமர், பிள்ளையார் என்று சைவ வைஷ்ணவ மண்டபக் கோயில்கள் இருக்கும். அந்தக் கோயில்களின் திருவாசலில் இரண்டு நிமிடம் நின்று "ஜானகி காந்தஸ்மரனம்..நமப் பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவா.." என்று விதவிதமான நாம கோஷங்கள் எழுப்பி புதிதாக ஒரு பஜன் துவங்கி வழிபட்டு மீண்டும் சுறுசுறுப்பாக அகண்ட நடையில் ஜால்ரா ஜிங்ஜிங்க தொடருவார்கள். ஒரு நாள் வடகரை ராமர் கோவில் வாசலில் "நடுப்பர ஒரு மாமா கஞ்சா அடிச்சுண்டே வராரே.. அவர் தானே ரங்குடு.." என்று எஸ்.வி. சேகர் ஜோக்கை கஞ்சீரா ரங்குடு மாமாவைப் பார்த்து ஸ்ரீராம் கேலி செய்து அவிழ்த்துவிட அவனைத் துரத்தி அடிக்க வந்துவிட்டாள் என் பக்திமயமான பாட்டி. ரங்குடு மாமாவின் தலையாட்டலை ரசித்துக்கொண்டு காலங்கார்த்தால சைக்கிளில் பசும்பால் கொண்டு வரும் வெங்கடேசக் கோனார் ஐநூறு மில்லிக்கு பதிலாக ஒரு லிட்டர் அளந்து ஊற்றிய வரலாறும் உண்டு.

margazhi vayal


ஈசான்ய மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில் கூம்பி ஸ்பீக்கர் கட்டி நக்கீரனார் அதிகாலை நாலரையிலிருந்தே சிவபெருமானிடம் "நீரே முக்கண் முதல்வானாயும் ஆகுக.. " என்று திருவிளையாடல் வசனம் பேச ஆரம்பித்துவிடுவார். வருஷா வருஷம் கணேஷ் சவுண்டு சர்வீஸ் ஆள் தான் அந்த ரெகார்ட் ப்ளேயரில் பாட்டு போடுவார். அழுக்கு கட்டம் போட்ட கைலியும் பழுப்பு நிற வெள்ளை சட்டையும் அணிந்து குளிக்காமல் துர்கந்தத்தோடு ப்ளேயர் போடுவார். மாலை ஐந்திலிருந்து ஆறரை ஏழு வரை மீண்டும் சரஸ்வதி சபதம் மற்றும் "தாயே...கருமாரி ..எங்கள் தாய் கருமாரி..." போன்ற எல்.ஆர். ஈஸ்வரி குரலில் உடுக்கையடித்து சாமியாட வைக்கும் அம்மன் பாடல்களும் ஒலிக்கும். ஆர்.பி.எம் சரியாக செட் பண்ணாவிடில் சங்கத் தமிழ் வளர்த்த நக்கீரனாருக்கு இழுத்துக்கும். அவருக்கு மட்டும் என்ன பக்தர்களுடன் பாண்டி விளையாடும் ஈசனுக்கும் அதே கதிதான். கையில் எண்ணெய் கிண்ணம் எடுத்துக்கொண்டு சிவன் கோவிலுக்கு விளக்கு போட வரும் கன்னிப் பெண்களுக்கு கணேஷ் தான் துணை. டிராயர் பருவத்தில் நானும் அதிகாலை சிவன் கோயிலுக்கு என் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். பாண்ட் போட ஆரம்பித்ததிலிருந்து நான் எழுந்திரிக்க சோம்பேறித்தனம் பட்டதால் அதிகாலை கோயில் செல்வது தடைபட்டது. (என்னை வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை என்பதை தயை கூர்ந்து கவனிக்க.)

ராமர் கோயிலில் ஒரு ஆறரை மணி வாக்கில் சிறுவர்களாக நாங்கள் கூடித் திருப்பாவை சொல்வோம். நன்றாக குளித்துப் பட்டை, திருமண் என்று குழைத்துப் பூசி அரையில் வேஷ்டியும் மேலே சட்டையும் இடுப்பில் ஒரு சிகப்புக் கலர் காசித்துண்டுமாய் ஆஜர் ஆவோம். "மார்கழித் திங்கள்..." என்று ஆரம்பித்து "வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைக்" என்று முப்பது பாட்டும் தப்பாமல் பார்க்காமல் மனப்பாடமாகச் சொல்பவன் கோபாலாழ்வார் ஒருவனே. மீதமிருக்கும் வெண் பொங்கல் வாங்கும் கும்பலாகிய நாங்கள் பசங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு ஆண்டாள் நாச்சியார் அட்டைப் படம் போட்ட திருப்பாவை புஸ்தகத்தை கிழியும் வரை இழுத்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி ராகமாக பாடுபோம். எவ்வளவு எக்கியும் பாசுரம் கண்ணுக்கு தெரியாத பிரகஸ்பதிகள் "எம்பாவாய்..." மட்டும் சொல்லி தங்களது வருகையை உறுதிப் படுத்துவார்கள். பக்கத்தில் இருக்கும் குட்டியோண்டு மடப்பள்ளியில் சுடச்சுட வெண் பொங்கல் தயாராகும். மைதிலி அப்பாதான் பொங்கல் வைப்பார். மடித்து கட்டிய வேஷ்டியை மீறி உள்ளுக்குள் கட்டிய லங்கோடு கயிறு போல ஆடி வெளியே துருத்திக் கொண்டிருக்கும். காலை ஆறு மணிக்கெல்லாம் வெற்றிலை போடும் அடிக்ட் அவர். நிச்சயம் தூங்கும் போதும் வாயை குதப்பக் கூடும். செம்பவள வாயுடன் தான் எப்போதும் திரிவார். அவர் கைப் பக்குவத்தில் வறுத்த முந்திரியும் நெய்யும் சேர்ந்து பொங்கலை தேவாமிர்தமாக ஆக்கியிருக்கும். சோப்போ சீயக்காயோ போட்டு தேய்க்காமல் பொங்கல் வாங்கிய நெய்க் கையில் கொழகொழப்பு நிச்சயம் போகாது. ராமர் கோயிலுக்கு நேரே நதி போன்ற அந்தப் பெரிய குளம். குளத்திலிருந்து அலைஅலையாய் மேல் நோக்கி எழும் மார்கழி மாத வெண்புகை குளிருக்கு குளம் சிகரெட் பிடிப்பது போல இருக்கும். வயிற்றில் மணி அடித்தவுடன்  முப்பதாவது பாட்டை கொஞ்சம் ஜரூராக பாடி முடிப்போம். பொங்கல் பண்ணிய அழகோடு அவரேதான் தன் கையால் விநியோகம் பண்ணுவார். அலாதியான பிரசாத விநியோக முறை ஒன்று அவருக்கு தெரியும். எவருக்குமே கைவராத கலை அது. ஒரு பிடி பொங்கல் கையில் எடுத்து போடும்போது ஒரு மூன்று விரல்களால் முக்கால் வாசி கையிலேயே மடக்கி பிடித்துவிட்டு கால்வாசி நம் கையில் வந்து சேரும் டெக்னிக் மைதிலி அப்பாவிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராம் சொன்னது அவர் காதில் விழுந்த நாள் முதல் பொங்கல் எங்கள் கைக்கு வரும் சதவிகிதம் ஐம்பதிற்கு ஏறியது. ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. தெருவில் யார் மண்டகப்படிதாராரோ அவர் வீட்டு வாசல் படியேறி பொங்கல் வாங்கித் தின்பதற்கு எங்களுக்கும் ஒன்றும் வெட்கமில்லை. பெருமாள் பிரசாதம்.


raja gopalan
கோதண்ட ராமர் சன்னதி முன்பு..
மார்கழியில் வரும் இன்னொரு வைபவம் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கோயிலின் சொர்க்கவாசல் திறப்பு. நாள் நட்சத்திரம் பார்த்து நாலரை ஐந்து என்று அதிகாலையில் ஒரு நேரம் குறிப்பார்கள். மூன்று மணிக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து ஹரித்ராநதியில் குளிரக்குளிர குளித்துவிட்டு வேகவேகமாக பெரியகோயிலுக்கு ஓடுவோம். ஸ்வாமி புறப்பாடு ஆகி சொர்க்கவாசல் மண்டபத்திற்கு எழுந்தருளப் போகும்போது வேதபாராயணம் படிக்கும் வித்துக்களோடு நாங்களும் அவர்கள் பின்னாலேயே செல்வோம். "கோபாலா..கோபாலா" என்ற கோஷம் விண்ணைப் பிளக்க கூட்டம் அலைமோதும். ஸ்வாமியுடன் கூடவே உள்ளே செல்ல முண்டியடித்துக்கொண்டு எல்லோரும் எத்தனிப்பார்கள். சொர்க்க வாசல் கதவு திறந்தவுடன் சொர்க்கம் உள்ளேயிருந்து செங்கமலம் பிளிறி ராஜகோபாலனை வரவேற்கும். அன்று முழுவதும் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜாகோபாலன் அங்கு ஸேவை சாதிப்பார். ஸேவை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆண்டாள் என்று பல வேஷம் போட்டு மக்களின் கருணைத் தொகைக்கு நிறைய பேர் கால் கடுக்கக் காத்திருப்பார்கள். கோபாலனின் கருணையும் அருளையும் பெற்ற நாங்கள் அவர்களுக்கு கொஞ்சம் ஈந்து வீடுத் திரும்புவோம்.

பின் குறிப்பு: தலைக்கு ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு முழு வாசலுக்கும் பசுஞ் சாணம் கரைத்து தண்ணீர் தெளித்து கலர்க் கோலம் போட்டு பூசணிப்பூ பரங்கிப்பூ வைப்பது, கலர்க் கோலம் போட தெரு முழுவதிற்கும் ஒத்தாசை செய்வது போன்ற  இன்னும் நிறைய நிகழ்வுகள் மன்னையில் மார்கழியாக இங்கு மலர இருந்தது. மீதமிருக்கும் விஷயங்களை திண்ணைக் கச்சேரியில் அல்லது வேறு ஒரு பதிவில் தனியாக எழுதுகிறேன். நன்றி.

படக் குறிப்புகள்: community.webshots.com என்ற சைட்டிலிருந்து indiaram என்ற யூசர் எடுத்த ராஜகோபாலன் படம் அது.அந்தப் படம் சொர்க்கவாசல் திறப்பு அன்று எடுத்தது அல்ல. அந்த மார்கழிப் பனியில் நனைந்த வயல் எடுத்த இடம் இது http://www.google.com/profiles/nandakhumar

-

Monday, December 13, 2010

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

கொஞ்சம் இடது முன்னங்காலை தூக்கி நொண்டி அடிக்கும் தெருநாய் அது. யாராவது கல்லெடுத்து அடிக்க துரத்தினால் கூட அதனால் பாய்ந்து தப்பித்து ஓடமுடியாது. ஜாக் செய்வதற்கே சிரமப்படும். அனுதினமும் கற்பகம் ஸ்டோர் வாசலில் தன்னை மொய்க்கும் ஈக்களை வாயால் கடித்து தலையை அவ்வப்போது ஓய்யாரமாக ஆட்டி படுத்திருக்கும். இரவு பத்து மணிக்கு மேல் தெருவில் "தோ... தோ... தோ.." என்று ராகம் பாடி மீந்த சோறுக்கு கூப்பிடும் மகளிர் குரலுக்கு செவி சாய்க்காது. கட்டாயம் வராது. ராத்திரி எட்டு மணிக்கு மேல் எப்போதும் வாலை சுருட்டிக்கொண்டு உடம்பை 'C'யாக்கி புழுதி மணலில் சுகமாக படுத்திருக்கும். அந்த நாய் மேல் இரக்கப்பட்டு தினமும் தவறாமல் வறுக்கியும் ரொட்டித்துண்டும் வாங்கிப் போடுவார் ஒரு வயோதிகர். நாளாக நாளாக அந்த கழுத்துச் சங்கிலி இல்லாத தெருநாயும் குடும்ப சங்கிலியில் பிணைந்து இருக்கும் அந்த கிழவரும் நட்பு சங்கிலியால் இறுக்க இணைக்கப்பட்டனர். கடைசியில் ஒரு வாரம் நோய்வாய்ப்பட்டு அந்தப் பெரியவர் எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் படுத்ததும் இந்த நாயும் அவர்கள் வீட்டு திண்ணையிலேயே போய் அடைக்கலமானது.

அந்த முதியவர் இறந்த அன்றைக்கு சுடுகாடு வரை கொள்ளி தூக்கிய அவர் பையன் பின்னாலேயே நொண்டியபடி சென்றது. எல்லோரும் ஆற்றோரத்தில் ஈமக்கிரியைகள் முடித்து வீடு திரும்பும் வரை அங்கேயே அசையாமல் நின்று பார்த்தது. பிறகு எல்லோரோடும் அமைதியாக வீடு திரும்பியது. மஹாபாரதத்தில் ஸ்வர்காரோஹன பர்வத்தில் தருமருடன் ஒரு நாயும் உயிரோடு மேலோகம் சென்றதாம். துவாபரயுகத்தில் கம்பனியாக மேலே சென்றது கலியுகத்தில் சுடுகாடு வரை வந்து வழி அனுப்பி வைத்திருக்கிறது.

lion brother
நன்பேன்டா!!!

கீழே இருக்கும் வீடியோவை கண்டவுடன் மேலே சொன்ன நெகிழ்ச்சியான சம்பவம் என் நினைவுக்கு வந்தது. 1969-ல் இரு நண்பர்கள் ஓர் இடத்தில் சிங்கத்தை விலைக்கு வாங்கி அதனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து விளையாடி கொண்டாட்டமாக இருந்தனர். இருவரும் அந்த சிங்கத்தின் மேல் சொல்லனா பாசம் வைத்தனர். சில மாதங்கள் கழித்து வீட்டில் வைத்து வளர்க்க முடியாமல் அதை ஆப்பிரிக்க காடுகளில் கொண்டு விடலாம் என்று முடிவு செய்து பத்திரமாக அங்கே இறக்கி விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு திரும்பி விட்டனர். வளர்த்த பாசம் கட்டி இழுக்க ஒரு வருடம் கழித்து காட்டில் இருக்கும் தாங்கள் வளர்த்த காட்டு ராஜா எப்படி இருக்கிறது என்று நலம் அறிய சென்ற இரண்டு பேரையும் கட்டிப் பிடித்து உச்சி மோந்து பாச மழையில் நனைத்துவிட்டது அந்த ஐந்தறிவு அரிமா. அந்த ஆறறிவு இரண்டும் இந்த அளவுகடந்த அன்பினால் திக்குமுக்காடி போய்விட்டனர். கடைசி ஒரு நிமிடத்தில் கிறிஸ்டியன் என்ற அந்த சிங்கம் அவர்களை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சி கண்களில் ஏனோ நீரை வரவழைக்கிறது. 

அந்த பாசக்கார சிங்கம் வீடியோ.



இந்தக் காட்சிக்கு வள்ளுவரின் அன்புடைமை அதிகாரம் முழுவதும் மொத்தமாக எடுத்து இங்கே போட்டுவிடலாம். இருந்தாலும் கீழ் கண்ட இந்த குறள் முற்றிலும் மேற்கண்ட நேசத்திற்கு அப்படியே ஒத்துப்போகிறது. 

புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு புற உறுப்புகள் இருந்து என்ன பயன் என்று அன்பை நமக்குள் இருக்கும் ஒரு உள் உறுப்பாக உருவகப்படுத்துகிறார் தாடி. புறத்துறுப்பு சிங்கமாக இருந்தாலும் அகத்துறுப்பு என்கிற அன்பு தன் நண்பர்களை ஒரு வருடம் கழித்து கண்டதும் ஓடி வந்து இறுகத் தழுவி உச்சி மோந்து நாக்கால் நக்கச் சொல்கிறது. ஐந்தறிவிக்கும் ஆறறிவிர்க்கும் பொதுவான அன்பை பார்த்து பல மணி நேரம் ஆன பின்பும் இன்னமும் உடம்பு சிலிர்க்கிறது.

எனக்கு கண்கள் பனித்தன இதயம் இனித்தது. உங்களுக்கு?

-


Sunday, December 12, 2010

ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு

ஒரு நாள் தெருவில் ஒரே கோலாகலமாக இருந்தது. விழாக்கோலம் பூண்டிருந்தது. வழக்கம் போல் சைக்கிளை கொண்டு போய் குட்டிச் சுவற்றில் சாய்த்துவிட்டு, ஏதோ கெட்டால் குட்டிச் சுவரு போல நானும் போய் உட்கார்ந்துகொண்டேன். அப்பு மிகவும் குதூகலமாக இங்குமங்கும் சர்க்கஸில் வருவது போல சுழன்று வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்வமாக அவனை நெருங்கி "என்னடா? என்ன விசேஷம். தெருவையே ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்ற விசாரிப்புக்கு சொன்ன பதிலில் தான் உறைந்து போய் சிரித்தேன். என்ன பதிலா? "இன்னிக்கி 'படிக்காதவன்' ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறோம்." என்றான். பிளந்த வாயை மூட முடியாமல் சிரிக்க வைத்தான். "நீங்கெல்லாம் படிச்சிகிட்டு தானே இருக்கீங்க?" என்று கேட்டதற்கு முறைத்துக் கொண்டு ஓடிவிட்டான். ரஜினி பஞ்சு என்று ஒரு நண்பன். சென்னைக்கு வந்து ரஜினி இவன் தோளில் கை போட்டு சிரிப்பது மாதிரி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு ஊரில் வந்து இறங்கிவிட்டான். ரஜினி ஆசி பெற்று வந்தவன் அங்கிருந்த ரஜினி ரசிகர்களுக்கு அருளாசி வழங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டான்.

முதலில் ஒரு ரஜினி படம்.


இன்று ரஜினியின் பிறந்தநாள். திரையுலக சூப்பர் ஸ்டாருக்கு ஒரு பதிவெழுதுவது வலையுலக நியதி என்று பதிவுலக பின்னூட்ட சூப்பர் ஸ்டார் "ஆனந்த வாசிப்பு" பத்மநாபன் அன்புக் கட்டளையாக பின்னூட்டியிருந்தார். அதற்காக இதோ பிடியுங்கள் இந்த சிறப்பு பதிவை. சில வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் ரஜினியின் பட வசனங்களில் இருந்து மிகவும் உபயோகமாக மேலாண்மை பாடங்கள் சிலது நாட்டு மக்களுக்கு எடுத்திருந்தார்கள். இங்கே கீழிருப்பது என்னுடைய சிறிய சொந்த முயற்சி.


பீட்டர் ட்ரக்கருக்கு பாடம் எடுத்த ரஜினியின் புகழ்பெற்ற சில வசனங்கள் கீழே.


இது எப்டி இருக்கு?
வாழ்க்கையிலோ ஆபீசிலோ எந்த ஒரு வேலையையும் செய்து முடித்துவிட்டு பெரியோரோ சிறியோரோ "இது எப்டி இருக்கு?" என்று ஒரு ஒபினியன் கேட்பது ரொம்ப அவசியம். அப்படி சக தொழிலாளிகளிடமும் ஊழியர்களிடமும் கேட்கும்போது அவர்களும் உள்ளம் குளிர்ந்து தங்களது வேளைகளில் கர்மசிரத்தையுடன் ஆத்மசுத்தியோடு ஐக்கியமாகி அணி உணர்வு மேலோங்கி கம்பனி லாபத்தில் தழைக்க வழி செய்கிறது.

சொல்றான், செய்யறான்
மேனேஜ்மென்ட் சொல்றதை ஏன் என்னன்னு புரட்சித்தனமா எதிர் கேள்வி கேட்காம கடமை உணர்ச்சியோட வேலை செய்யறவன் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு வருவான்னு சொல்றார். ஆபீசில் நமக்கெல்லாம் தலைவராக இருப்பவர் எது சொன்னாலும் சிரமேற்க்கொண்டு "சொல்றான், செய்யறான்" என்று செய்து முடிப்பவர்கள் அலுவலகத்தில் சுலபத்தில் பல படி முன்னேறி பல ப்ரோமோஷன்கள் பெற்று வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ்வார்கள்.

உன் வாழ்க்கை உன் கையில்
எந்த ஒரு லீகல் மற்றும் ஆபிஸ் காண்ட்ராக்ட் போன்ற முக்கியமான மேட்டரிலும் பார்த்து ஜாக்கிரதையாக நிதானமாக ஒன்றி படித்து கவனமாக கையெழுத்து போடவும். இல்லையேல் ஆபத்தில் மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும்படி கூட ஆகலாம். அதற்குத்தான் உன் வாழ்க்கை உன் கையில் என்ற மிகப்பெரும் தத்துவ உபதேசம் உதவுகிறது.

என் வழி தனி வழி
நமக்கிட்ட எந்த ஒரு பணியையும் வித்தியாசமாக செய்வதற்கு முயற்ச்சிக்க வேண்டும். ஒரு சிந்தனா சிற்பியாக முழுமூச்சோடு ஈடுபட்டு காரியத்தில் வெற்றி கொள்ள வேண்டும். அப்படி செய்யும் வேலைகள் நமக்கு பெருமை தேடித்தருவதோடு அலுவலகத்திலும் நம்முடைய மதிப்பும் உயரும். 

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி 
இது பாஸ்களுக்காக சொல்லப்பட்ட திருவாசகம். அதிகாரிகள் அவர்களுடைய கட்டளையை ஒரே ஒரு முறை தன் கீழ் வேலை பார்க்கும் செல்வங்களுக்குச் சொன்னாலே நூறு முறை சொன்னது போன்று புரியும்படி அருள வேண்டும். எல்லா கார்பொரேட் அலுவலகங்களும் இதுபோன்ற உயரதிகாரியை நியமித்தால் எடுத்த எல்லா காரியத்திலும் வெற்றி நிச்சயம். நிறைய திட்டப்பணிகள் சரியான கம்யூனிகேஷன் இல்லாமல் தான் தோல்வி அடைகிறது.

நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்
ஒரு திட்டப்பணியை எவ்வளவு லேட்டாக வேண்டுமானாலும் செய்து முடிக்கலாம், ஆனால் அதை முடிக்கும் பொழுது மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் அந்த காரியத்தில் ஜெயம் நமக்குதான். (யாருப்பா அது.. ஜெயம்ன்னா யார் சார்ன்னு கேக்கறது...)

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
கம்பனியின் முதலாளி நாம் ஒழுங்காக வேலை செய்கிறோமா என்று பார்ப்பதற்கு முன்னறிப்பு எதுவுமின்றி சிங்கிளாக சடாரென்று தாவி கம்பனி உள்ளே சிங்கமாக நுழைவார். கம்பனி போனில் மணிக்கணக்காக கடலை போடுவோர் கையும் களவுமாக ஃபோனும் வாயுமாக பிடிபடுவர். ரஜினியின் இந்த அறிவுரை இளசுகளுக்கு மிகவும் முக்கியமான மந்திரம் இது.


அசந்தா அடிக்கறது உங்க ஸ்டைல் அசராம அடிக்கறது என் ஸ்டைல்
இது டேட்டாஎன்ட்ரிகாரர்களுக்காக சொன்ன பஞ்ச் டயலாக். பக்கத்தில் இருக்கும் பிகரோடு கடலை போட்டு வாய் அசந்தா அதற்க்கு அப்புறம் டேட்டா என்ட்டர் பண்ணுவதை வழக்கமாக கொண்ட கடலை வறுக்கும் கும்பலுக்கு மத்தியில் யாரோடும் வாயாடாமல் அயராமல் அசங்காமல் டைப் அடித்து வாழ்க்கையில் முன்னேற சொல்கிறார்.

பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் ஒன், டூ, த்ரீ...
எந்த ஒரு வேலையையும் அந்தந்த சமயத்தில் வேளை மாறாமல் முடிக்கவேண்டும். ஒரு கால அவகாசம் நிர்ணயம் செய்து அதை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி அந்த காலக்கிரமத்திர்க்குள் முடிக்கிறார்களா என்று மீட்டிங் மேலே மீட்டிங் போட்டு கைசொடுக்கி எண்ணிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த வேலை உருப்படும். பசங்களை வேலை செய்யவிட்டுக் கவுண்ட்டிங் ஸ்டார்ட் செய்து எண்ணி முடித்து எண்ணியவண்ணம் செயல் முடிக்க சொல்கிறார்.

ஜுஜுபி 
வேலையில் மிகவும் டென்ஷனான நேரங்களில் "ஜுஜுபி" என்ற தாரக மந்திரத்தை பதினெட்டு  முறை உச்சாடனம் செய்ய வேலைப் பரபரப்பு படிப்படியாகக் குறைந்து மக்களுக்கு சாந்தம் உண்டாகும். அமைதியாக உணர்வார்கள். கார்பொரேட் கம்பனிகளில் பொது மேலாளர் நிலையில் இருக்கும் உயர் அதிகாரிகள் காலையிலும் மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் மூக்கை பிடித்து இதை சொல்லும்போது அவர்கள் புத்துணர்வு பெறுகிறார்கள் என்று மத்திய மனித வள மேம்பாடு ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பின் குறிப்பு:
ரஜினி பக்தர்களின் கவனத்திற்கு. இது கிண்டலாக எழுதப்பட்ட பதிவு இல்லை. வித்தியாசமாக எழுதப்பட்டது அவ்வளவே.  சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பட உதவி: www.ndtv.com

-

Saturday, December 11, 2010

பாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை

இன்று (11/12/2010) பாரதியின் பிறந்த நாள். தமிழில் பாட்டெழுதியோ கவிதை எழுதியோ அவனுக்கு வணக்கம் சொல்ல நம்மால் முடியாது. வழக்கம் போல் படங்களிலும் கர்நாடக கச்சேரிகளிலும் கையில் கிடைத்த பாடல்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன்.  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்....

தீராத விளையாட்டு பிள்ளை
இந்த வலைப்பூவிற்காக பாரதியார் எழுதி சித்ரா பாடியது.



மனதில் உறுதி வேண்டும்
செம்படவன் அகமகிழ்ந்து பரிசு வழங்கி சிறப்பிக்கும் பாரதியார்-பாலச்சந்தர்-இளையராஜா கூட்டணியின் கடலோர அமர்க்களம்.





நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி 
சின்ன வயது அமலாவும் மீசை இல்லாத ரகுமானும் (இப்போ ரகு) சேர்ந்து ஆடிக் களித்த பாரதி.



சுட்டும் விழிச் சுடர் தான்
ஹரியின் குரலை முதலாக வைத்து வாத்தியங்கள் அதிகம் இல்லாமல் ரஹ்மான் போட்ட மியூசிக். ராஜீவ் மேனனின் காட்சியமைப்பில் பாரதியின் பாடல்.



நல்லதோர் வீணை செய்தே
மற்றுமொரு பாலச்சந்தர் பிரயோகித்த பாரதி பாடல். இம்முறை எம்.எஸ்.வி.



காற்று வெளியிடை கண்ணம்மா
 நமது வயதான தோழர்களுக்காக இந்தப் கருப்பு வெள்ளை  பாடல். பாரதி தமிழுக்கு என்ன கருப்பு வெள்ளை?


வீணையடி நீ எனக்கு 
மேவும் விரல் நான் உனக்கு. பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு. காதல் சொட்ட சொட்ட பாரதியின் மற்றுமொரு படைப்பு. ஜேசுதாசின் குரலில்.



வில்லினை ஒத்த புருவமும் 

நித்யஸ்ரீ பாடிய காவடி சிந்து. ஒரு கர்நாடக கலக்கல்.


அக்கினி குஞ்சொன்று கண்டேன் 
புரட்சிக் கவிஞராய் பாரதி.


காக்கை சிறகினிலே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் கேட்கும் ஒலிகள் எல்லாம்.. எல்லாம்... நந்தலாலா...  


எனது தேர்வை ரசித்தமைக்கு நன்றி.

-

Friday, December 10, 2010

நாக்குக்கு மோட்சம்

"வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு.. அப்படியே நம்ம சொத்தை எழுதி வச்சிருலாம்... இந்த ரசம் வச்ச கைக்கு தங்கத்ல காப்பு பண்ணி போடலாம்.." என்றெல்லாம் நாக்கை சப்புக்கொட்டி வாயில் எச்சிலொழுக பாராட்டுவார்கள் போஜனப் பிரியர்கள். ஆளுயர தலைவாழை இலை போட்டு மேற்கிலிருந்து கிழக்கு திசை வரை பரிமாறிய ஐட்டங்களில் மூலையில் இருக்கும் பதார்த்தத்தை இலை மேல் படுத்து உருண்டு எடுத்து சாப்பிடும் படி சிரார்த்தத்திற்கு இராமாயண சாஸ்த்திரிகள் வீட்டில் விஷ்ணு இலை போடுவார்கள். பருப்பு, ரசம், மோர் என்று நித்யபடி மூன்று வேளைக்கும் மூக்கைபிடிக்க இதையே வழக்கமாக சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டதால் இப்போது வேட்டையை இடது புறத்தில் இருந்து ஆரம்பிப்பதா அல்லது வலது ஓரத்தில் இருந்து ஆரம்பிப்பதா என்று தெரியாமல் திருவிழாவில் காணாமல் போனது மாதிரி விழித்திருக்கிறேன். எடுத்தவுடன் அதிரசத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு "உங்காத்து பையனுக்கு சாப்பிடக் கூட தெரியலையே! இப்டி அசடா இருக்கானே!"ன்னு சொல்லி கைகொட்டி சிரித்திருக்கிறார்கள். சாப்டக் கூட லாயக்கில்லை. கரெக்ட். பதிவு சாப்பாட்டை பற்றித்தான்.

பால்யத்தில் மிளகு சீரகம் போட்டு வீட்டில் ரசம் வைத்தால் நான் போட்டிருந்த ட்ராயரோடு சட்டை கூட இல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன். ஆனால் அந்த ரசம் ஒரு ஜீவாம்ருதம். அந்த சர்வ ரோக நிவாரிணியை பருகினால் ஜலதோஷம் போன்ற உடல் தோஷங்கள் பனியென விலகி பறந்து ஓடிவிடும். வேகவைக்காத பருப்பை லேசாக வறுத்து கொட் ரசம் என்று புளி தூக்கலாக போட்டு ஒரு ரசம். இது அவசர ரசம். காலையில் பருப்பு வேகவைக்க மறந்து விட்டால் வரும் அதிரடி ரசம். அடுத்து எலும்பிச்சம்பழ ரசம். பெயரே தன்மையை தாங்கி நிற்கிறது. விளக்குவதற்கு ஒன்றும் இல்லை. எலும்பிச்சம் பழச் சாறு கரைத்த ரசம். பூண்டு ரசம் கொஞ்சம் காரமாக கண்களில் ஜலம் வர பண்ணி சாப்பிட்டால் ரொம்ப நல்லது. பூண்டின் மருத்துவ குணங்கள் அலாதியானது. சில பேருக்கு கேஸ் பிரியும். அபானன். பருப்பு ரசம், நாலைந்து பழுத்த நாட்டு/பெங்களூர் தக்காளியை பிச்சுப்போட்டு வைப்பது. நல்ல ரத்த சிவப்பு கலரில் இருந்தால் ரொம்ப விசேஷம். நவரசம் என்றால்
  1. பருப்பு ரசம்
  2. ஜீரா ரசம்
  3. மிளகு ரசம்
  4. தக்காளி ரசம்
  5. கொட் ரசம்
  6. பைனாபிள் ரசம் 
  7. நல்ல ரசம்
  8. கெட்ட ரசம்
  9. ஊசிப்போன ரசம்
என்று நாக்குவன்மை படைத்த சிலர் பட்டியலிட்டு சொல்வதும் வழக்கில் உண்டு.

ஒரு சாப்பாட்டறிவு விஷயம். தென்னகத்தில் இலையில் பரிமாறினால் எந்தெந்த பதார்த்தங்களை எங்கெங்கு பரிமாற வேண்டும் என்பதைப் பற்றிய படமும் விளக்கமும் கீழே. எல்லார் வழக்கத்திலும் இப்படித்தான் இருக்கும் என்று இல்லை. ஒரு ஐடியாவிற்கு பார்த்துக் கொள்ளலாம்.


1. உப்பு
2. ஊறுகாய்

3. சட்டினி
4. கோசுமரி (Green Gram Salad)
5. கோசுமரி (Bengal Gram Salad)
6. தேங்காய் சட்டினி
7. Beans Pallya (Fogath)

8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ரான்னங்கள் (எலும்பிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம்)
10. அப்பளாம்
11. சிப்ஸ்
12. இட்லி
13. சாதம்

14. பருப்பு
15. ரைத்தா
16. ரசம் 
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்திரிக்கா பக்கோடா
19. Menaskai (Sweet And Sour Gravy)

20.
Goli Baje (Maida Fry)
21. அவியல்

22.
வெண்டைக்கா பக்கொடோ
23. கத்திரிக்கா சாம்பார்

24. ஸ்வீட்

25. Gojjambade (Masalwada Curry)

26. Kayi Holige (Sweet Coconut Chapati)

27. Vangi Bath (Vegetable Upma)

28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம்

30. தயிர்

31. மோர் 
பருப்பு உசிலி, வெண்டைக்காய் மோர்குழம்பு, அவியல், பாகற்காய் பிட்ளை, வாழைக்காய் பொடி மாஸ், கருணாக் கிழங்கு மசியல் போன்றவை எங்கள் பக்க சிறப்பு உணவு வகையாறாக்கள். எரிசேரி, புளி இஞ்சி, கப்பை புழுக்கு போன்ற சில திருநெல்வேலி பக்க ஐட்டங்கள். ஐங்கிரிமண்டி என்று எங்கள் ஊரில் மராத்தியும் பேசும் ராவ் குடும்பங்களில் செய்வார்கள். ஐந்து விதமான சுவையும் நிறைந்து இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு கௌளி வீதம் வெற்றிலையும் மணக்க மணக்க பன்னீர் புகையிலை கூட வைத்து வாயில் கொதப்பிக்கொண்டே இருப்போரும் பான் பாராக் போடும் பரம குட்கா அடிமைகளுக்கும் உப்பு உரைப்பு இரண்டுமே ஒரு மடங்கு தூக்கலாக வேண்டும். "சே..ரொம்ப சப்புன்னு இருக்கு...." என்று எல்லாரும் விரும்பும் சமையலை குறை  சொன்னால் நிச்சயம் அது மேற்கண்ட புகையிலை பார்ட்டியாக இருக்கும் அல்லது ஆந்த்ரா பார்ட்டியா இருக்கும். ஆந்திராகாரர்கள் ஆகாரம் காரமாக சாப்பிடுவார்கள். இது போன்றவர்கள் நாக்குக்கு தேய்மானம் அதிகம். கேட்டரிங் சமையல்காரர்கள் பலர் வெற்றிலை, குட்கா மற்றும் ஓட்கா போன்றவற்றில் நாட்டம் உடையவர்கள். ஆனாலும் வாயில் ஊற்றிப் பார்க்காமலேயே மோந்து பார்த்து வலது கையால் ஓம் முத்திரை காட்டி "நல்லாருக்கு..." என்று சொல்லும் திறன் படைத்தவர்கள். நாக்கின் பலவீனத்திற்கு மூக்கு ஒத்துழைக்கிறது. சில பேர் அடுப்பில் கொதிக்கும் போதே "உப்பு பத்தலையே.." என்று சொல்வார்களாம். இவர்கள் போலீசில் வேலைக்கு சேரலாம். பனியன் போட்டுக்கொண்டு கழுத்தில் செயின் கட்டி இவர் பின்னால் ஓடிவரவேண்டிய அவசியம் இல்லை. அட்ராட்ரா நாக்க மூக்க. நாக்க மூக்க.

கையை ஸ்பின் பௌலர் போல ஒரு சுழற்று சுழற்றி இலை கிழியும் அளவிற்கு வழித்து வழித்து "சர்..புர்.." என்று உறிஞ்சி புறங்கையை நக்கி சாப்பிடும் சிலரைக் கண்டால் நாலடி தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையேல் நம்மேல் ரசச் சாரலடிக்கும். இன்னும் சிலர் கொஞ்சம் காரமாக இருந்தால் மூக்கில் ஒழுகும் சளியை கூட சர்வ சுதந்திரமாக இடது கையால் சிந்தி வேஷ்டியில் துடைத்துக் கொள்வர். தற்போது கல்யாண பந்திகளில் இலைக்கு இரண்டு புறமும் ரசம், பாயசம், குலோப்ஜாமொன், தண்ணீர், ஐஸ்க்ரீம் என்று ஏகப்பட்ட சைட் ஐட்டங்கள் அடுக்குகிறார்கள். நான் பார்த்த ஒரு கல்யாணத்தில் "சாப்பாட்டு ஆர்வலர்" ஒருவர் போகிறபோக்கில் இரண்டு பக்கமும் இருந்த கிண்ணங்களில் இருந்த ரசம், பாதாம் கீர் என்று எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டார். கோபாக்கினியில் கொதித்துப் போன பக்கத்து இலை ஆள் முறைத்து பார்த்ததும் "ஹி..ஹி.. ஸாரி.. கவனிக்கலை.. யாருப்பா அங்க... அண்ணா கீர் கேக்கறார் பாரு" என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியை செவ்வனே தொடர்ந்தார். சொன்ன ஆளுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.

ஊரில் புதுத் தெரு ஜனதா ஓட்டலில் ரவா தோசை வாரத்தில் இரண்டு நாள் தான் போடுவார்கள். துண்டு போட்டு சீட் பிடித்து கும்பல் அம்மும். அதுவும் மாலையில் மட்டும் தான். அப்பாவோடு எப்போதாவது அந்தக் கடைக்கு போனால் "சரியா படிக்கலைனா இங்கதான்... டேபிள் துடைக்க வேண்டியதுதான்..." என்று சொல்லி வாங்கிக் கொடுத்த பூரியை நிம்மதியாக வாயில் வைக்க விடமாட்டார். இப்போது அந்தக் கடை க்ளோஸ். ஆபிசுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு அந்தக் கடையில் ஆசையாக தோசை வாங்கி சாப்பிட்ட தோசையப்பர்களை நானறிவேன். இங்கு சென்னை வந்த பின்னர் நான் பார்த்த எல்லோரும் "சூடா இருக்கா?" என்று எல்லா இடத்திலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். முதலில் புரியாமல் இருந்த எனக்கு என் அத்திம்பேர் தான் அந்த சூட்சுமத்தைச் சொன்னார் "சூட்ல டேஸ்டா இருக்கா இல்லையான்னு தெரியாது... நாக்குக்கு சூடு போட்டு ஐட்டத்தை அப்டியே உள்ள தள்ளிடலாம்..". எவ்ளோ பெரிய உண்மை என்று ஒருமுறை ஆறி அவலாக போன ரவா தோசையும் சாம்பாரும் சாப்பிட்டபோது உரைத்தது.

காலகாலத்திற்கும் சாப்பாடு பாடலாக ஒலிக்கும் மாயாபஜார் படத்தில் வரும் "கல்யாண சமையல் சாதம்..". ஹா..ஹ்.ஹ.ஹ் ஹா..ஹா..




சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது என்று சொல்வது ஏன் என்று யாருக்காவது தெரியுமா? முடிந்தால் பின்னூட்டத்தில் கருத்துரைக்கவும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதியவருக்கு அவர் வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறது என்ற திசை கூட தெரியாது. வெந்நீர் இருக்கா என்று யாராவது கேட்டால் கூட பாத்ரூம் ஹீட்டர் போட்டு கொண்டு வந்து தருவார். கேஸ் அடுப்பை மூட்டக் கூட தெரியாது. ஆகையால் ஏதேனும் தவறு இருப்பின் பதிவுலக கிச்சன் கில்லாடிகள் இந்த பூச்சியுடன் சண்டைக்கு வராதீர்கள். மேலும் இப்பதிவில் இனிப்பு வகைகளையும் இன்னபிற கரக் மொருக்கு நொறுக்குகளையும் பதியவில்லை. இந்தப் பதிவு ஜீரணம் ஆனதும் பொறுமையாக பிரிதொருநாளில் பதிகிறேன்.

இலையில் பதார்த்தங்களின் இடம்பெறவேண்டிய இடங்களை படம் வரைந்து பாய்ன்ட் போட்டு விளக்கி காண்பித்த தளம் http://ashwiniskitchen.blogspot.com/

பின் பின் குறிப்பு: கர்னாடக சங்கீத கல்யாணப் பாடல்களில் "போஜனம் செய்ய வாருங்கோ" என்று ஒரு பாடல் உண்டு. யூடுயூபை நோண்டி நொங்கு எடுத்துவிட்டேன். கிடைக்கவில்லை. கேட்காத காதுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.

-


ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails