ஜுரம்...
காய்ச்சல்...
ஹை ஃபீவர்....
கன கனன்னு இருக்கு.....
கண்ணெல்லாம் ஜிவ்வுன்னு எரியுது....
உடம்பு மேலேர்ந்து தீப்பொறி பறக்குது....
அன்னம் தண்ணி உள்ளே செல்லமாட்டேங்குது.. (காதல் ஜுரத்திலும் இது இருக்குமாம்)படுத்தா உட்காரச் சொல்லுது உட்கார்ந்தா படுக்கச் சொல்லுது...
கால்ல தண்ணி பட்டா உடம்பு குளிர நடுங்குது...
கீழ் லோகத்தில் இருந்து மேலோகம் தெளிவா தெரியுது. ஏதோ ஆயிரம் கிலோ மீட்டர் ஓடினா மாதிரி ரெண்டு காலும் "ப்ளீஸ்.. கழற்றி கீழே வச்சுடேன்" என்று கெஞ்சுகிறது. கண் இமைகள் மேல அரிசிமூட்டையை வச்சா மாதிரி கனக்கிறது. முட்டிக்கு முட்டி போலீஸ் லத்தியால் தட்டின மாதிரி ஒரு வலி. நாக்குக்கு எச்சில் கூட எதிரியாகிப் போனது. உள்நாக்கு முதற்கொண்டு கசந்தது. க்ரோசின், கால்பால் போன்ற பாராசிடமால் போட்டு அடக்கப் பார்த்தால் அடங்க மறுத்து இன்னும் பூதாகாரமாய் வளர்ந்துவிட்டது.
மிகவும் கஷ்டப்பட்டு தத்தி தடுமாறி டாக்டர் ஐயாவிடம் ( நான் வைத்தியம் பார்க்கும் மருத்துவரை மரியாதையாக அழைத்தேன்) சென்று காண்பித்து நான்கு மாத்திரைகள் வாங்கி உள்ளே விழுங்கினேன். நாலு வேளை விழுங்கிய பிறகு இன்று சற்று தேவலாம். உடம்பு சரியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்.. ப்ளாக் எழுதவேண்டும். அதுதான் நம்முடைய தலையாய கடமையல்லவா? அதான் இது.
பதிவு எழுதறதை தாய் தடுத்தாலும் விடேன்.. என்ற வைராக்கியத்தில் இப்பதிவு..
நூற்றி நான்கு பேர் பாலோவேர் இருப்பதால் நூற்றி நான்கு இருந்தது போலிருக்கிறது..
திரட்டிகளில் என்னை இணைத்துக்கொள்ளாமல் தனியாவர்த்தனமாய் நான் எழுதிய ஒரு பதிவை இங்கே மீள் பிரசூரம் செய்கிறேன். படித்து இன்புறுக.. முற்றிலும் தேறினதும் வந்து முழு கதைய வச்சுக்கறேன்.
ஆட்டோ ராஜாக்கள்
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் வாசலில் எப்போதும் 'ஜே ஜே' என்று தேர் கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும். ரேஸ் கோர்ஸ் எதிரில் கிண்டி தொடர்வண்டி நிலையம் உள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். இந்த ஜென்மமே ரேஸ் விளையாட எடுத்தது போல கர்ம சிரத்தையாக ஒரு கூட்டம் எப்போதும் அங்கே சுற்றி அலைவதுண்டு. ரேஸில் தோற்ற பாபப்பட்ட ஆத்மாக்கள் நாளை எப்படி ஜெயிப்பது என்ற நினைப்பிலும், ஜெயித்த கோஷ்டியினர் நாளை எப்படி இன்னும் அதிகம் கெலிப்பது என்று அந்தரத்தில் பறந்தும் சாலையை கடந்த வண்ணம் இருப்பர். இருசாராரிலும் ஒரு சிலர் கார், பஸ் மற்றும் சைக்கிளைக்கூட இருபக்கமும் போக விடாமல் ரோடில் நின்று லாப நஷ்ட கணக்குளையும் அன்றைய செலவாணியையும் பற்றி தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இதற்கிடையில் ஒரு காரின் இடது பக்க கண்ணாடியில் தனது முகம் பார்க்க வருவதுபோல் வந்த ஒரு ஆட்டோ அப்படியே அதன் முன் சென்று பிள்ளையாரை வலம் வரும் பக்தன் போல் இடமிருந்து வலம் திரும்பி, வலது பக்கத்தில் பல இடையூறுகளை கடந்து வந்து கொண்டிருந்த எம்.டி.சி பேருந்தை நிற்க வைத்து வலது கோடி ரேஸ் கோர்ஸ் சுவர் பக்க ஓரத்தில் இருந்த தனது "xxxx xxxx சங்க ஸ்டாண்டு" வில் நின்றது. அதன் ஓட்டுனர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். கணேஷ் பீடி பிடிப்பது ஒன்றுதான் இப்புவியில் இந்த தருணத்தின் அதிமுக்கியமான வேலை என்று ஒரு பஸ், கார் போன்றவற்றை நிறுத்திய வெற்றியின் களிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. இவ்வளவு நடந்தது ஒன்றுமே தெரியாததுபோல தன்னுடைய சக நண்பருடன் தினத்தந்தியில் வந்த அன்றைய முக்கிய கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய விவாதத்தை தொடர்ந்தார்.
இது போல் நிகழ்ச்சிகளை சென்னையில் பலரும் எதிர்கொண்டிருக்கலாம். சில பல நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கீழ்வரும் ஆட்டோ வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
1. அச்சம் தரும் (அச்சமற்ற)ஆட்டோ
ஏதோ ஒரு எப்.எம் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். முன் சீட்டில் காக்கி சட்டைக்கு பதில் கலர் சட்டை உட்கார்ந்திருக்கும். ஒட்டுபவருக்கு முன் பகுதி முடியில் சிகப்பு வண்ண சாயம் பூசியிருக்கும். சீட்டில் இடம் இருந்தால் கூட எப்போதும் ஓவர்லோடு அடிக்கும் போது ஒருவரை பக்கத்தில் உட்கார்த்தி சவாரி அடித்த பழக்கத்தால் இடம் விட்டு ஒரு 45 டிகிரி சாய்வாக ரோடை பார்க்க உட்கார்ந்திருப்பார். ஆட்டோவின் பின் புறம் சிவப்பு/மஞ்சள் வண்ணத்தில் ஆங்கில எக்ஸ் குறி அல்லது ஒன்னாம் நம்பர் மிக பெரியதாக இரண்டு அல்லது மூன்று முறை போட்டிருக்கும் . இதுதான் அச்சமற்ற ஆட்டோவின் அடையாளங்கள். இவர்கள் லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள்.
2. தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ
கைலி அல்லது லுங்கி உடுத்தியிருப்பார். எப்போதும் கண்கள் வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு காலை மடக்கி சிவன் கோவிலில் கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பார். பின்புறம் ஒபாமாவே வருவதாக ஓசை வந்தாலும் தன்னை வருத்திக் கொள்ளமாட்டார். ஆட்டோ இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அது அதிசயம். அவர் மட்டும் சாலை வரி செலுத்துபவர் போல நடு சாலையில் செல்வார்.
3. சவாரி ஆட்டோ
ரோடில் மையமாக இருபது கி.மீயில் இம்மியளவும் வலது இடது திரும்பாமல் ரசமட்டம் பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் சென்றால் அது சவாரி ஆட்டோ.
4. சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ
சாலையின் இடது ஓரத்தில் இருந்து பத்து அடி உள்ளே மித வேகத்துடன் சென்று கொண்டிரு, மனைவி பிள்ளைகளுடன் அவதியுடன் நிற்கும் கணவர்களை பார்த்தோ, யாரையோ எதிர் நோக்கும் உதட்டு சாய புஷ்டியான இளம் பெண்ணிடமோ, தேமேன்னு ஓரமாக நிற்கும் தேசல் பாட்டியையோ சாலையின் இருமருங்கிலும் பார்த்தால் சடாரென்று எந்த பக்கமாக இருந்தாலும் திருப்பி தலையை வெளியே நீட்டி "எங்க போணும்?" என்றால் அது சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ.
5. "டர்" ஆட்டோ
ஒரு தகர டப்பாவில் கயிறு கட்டி, தார் சாலையில் கட்டி வேகமாக இழுத்தால் வரும் சப்தம் கேட்டால் அது ஒரு நவீன யுக சப்த ஆட்டோ. ஊர் திருவிழாக்களில் மரணக்கிணறு என்று ஒரு ஐட்டம் உண்டு. கிணறு போன்ற ஒரு பள்ளத்தில் ஒரு மோட்டார்பைக்கில் காது குடையும் சப்தத்துடன் வேகமாக மேலும் கீழும் ஒட்டுவர். அதுபோன்று "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................." என்ற ஒலியுடன் ஒளி என சென்று கேட்டவர்களின் காதை கே. காதாக மாற்றும் ஒலி மாசு ஆட்டோ.
6. "ஷேர்" ஆட்டோ
ஆண் பெண், மணமானவர் ஆகாதவர், கிழவன் கிழவி, குளித்தவர் குளிக்காதவர், உடலுக்கு/சட்டைக்கு நாற்ற மருந்து அடித்தவர் அடிக்காதவர், ஒல்லி பெண் குண்டு பையன், ஒல்லி பையன் குண்டு பெண்மணி, மொபைலில் சதா சிரித்து பேசிக்கொண்டே பயணம் செய்பவர், வெளியே வேடிக்கை பார்த்து உள்ளே பக்கத்து பெண்ணின் பேச்சை கேட்பவர்கள், நடுத்தர வயது, முடி உள்ளவர் அல்லாதவர், மஞ்சள் துணிப்பை வைத்திருப்பவர் ஆபீஸ் பேக் சுமப்பவர், இளவயது ஜோடி, சில்லரை வைத்திருப்பவர் இல்லாதவர், அரசுப் பணி தனியார் பணி சொந்த 'தொழில்' செய்பவர், சேலை அணிந்திருப்பவர் சுடிதார் போட்டவர், கண்ணாடி அணிந்தவர் அணியாதவர், ஹிந்தி பேசுபவர் 'தமிலில்' பேசுபவர்கள் என பால், மொழி, இன, மத வேறுபாடுகளின்றி ஒரே சவாரியில் அரை பஸ் கூட்டத்தை ஏற்றி பயணத்திற்கு பத்து ரூபாய்க்கு வருவது இந்த பங்குச்சந்தை(ஷேர்) ஆட்டோ.
இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்கள் இப்பட்டியலுக்காக என்னை மன்னிப்பார்களாக!
பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்" என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.
-
52 comments:
இன்னும் ஒண்ணு இருக்கு , ஸ்டேண்டில் நிறுத்தி விட்டு, எங்கு கூப்பிட்டாலும் வர மாட்டோம் என்று சொல்லும் ஆட்டோ.
@LK
கரெக்ட்டு.... லிஸ்ட்ல விடுபட்டுப் போச்சு!!!
:-) நல்ல வகைப்பாடு! நல்லா சுவாரசியமா இருந்திச்சு! ரசிச்சு படிச்சேன்!
ஐயோ அம்பி.........ஆட்டோ கதைய விட்டுட்டு ஒடம்ப பாத்துக்கணும்.
பன்னி காச்சலா இருந்தாலும் இருக்கும். எதுக்கும் வாயில ஈர டவல கட்டி வைக்கணும் .
ஐஸ் வாட்டர் தான் குடிக்கணும். மூணு வேலை மழை தண்ணீல குளிக்கணும்.
புரியுதா!?
@எஸ்.கே
ரசித்ததற்கு நன்றி.. ;-)
@கக்கு - மாணிக்கம்
உனக்கு ஏனப்பா கக்கு அவ்வளவு ஆனந்தம். ஒருத்தருக்கு உடம்புக்கு வருவது இவ்வளவு ஆனந்தம் தரும் விஷயமா உனக்கு? நல்லது..
”ஏனுங்க உடம்பு சரியில்லைன்னா, சும்மா போத்தி படுக்காம, அது என்ன பதிவெல்லாம் எழுதிக்கிட்டு! சும்மா கிடந்து தூங்குவிங்களான், சரியா. அப்புறமா ஆட்டோ, பஸ், கார் பதிவெல்லாம் எழுதிக்கலாம்.”
சீக்கிரமே நலமாக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
@வெங்கட் நாகராஜ்
எழுந்து உட்காரும் அளவிற்கு தேறிவிட்டேன். அதனால் தான். தங்கள் அக்கறையான விசாரிப்பிற்கு மிகவும் நன்றி நண்பரே!!! ;-)
சென்னையின் ஆடோக்களைப் பற்றி ஆயிரம் பக்க கட்டுரையே எழுதலாம்...
@கே.ஆர்.பி.செந்தில்
வாத்ஸவம் தான்!!
//பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்" என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.//
அதான.. அவரப் பத்தி எழுதலியே.. அதனால ஞாபகப் படுத்தினாரு.
ஆட்டோக்காரர்கள் நாம் சொல்லும் இடத்திற்கு வரமாட்டார்கள். அவர்கள் செல்லும் இடத்திற்கு தான் நாம் செல்ல வேண்டும். இங்கே அப்படித்தான்.
என்னடா தினமும் ஒரு பதிவா ஒருத்தர் எழுதுவாரே காணோமே என்று நினைத்தேன். காய்ச்சலா!! சீக்கிரம் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் சகோ.
@கோவை2தில்லி
நன்றி சகோ. உட்கார்ந்துட்டேன்.. எழுதறேன்... தங்கள் அனுகூலத்திற்கு நன்றி..
இன்னும் ஒருவகை ஆட்டோ உண்டு. கட்சி கொடியை கட்டிட்டு தலையில் இரண்டு ஹார்னோட போற ஆட்டோ.
@நாகராஜசோழன் MA
அரசியல்வாதிக்கு அவரோட ஆட்டோ... என்ன சொல்றது சரிதானே... ;-) ;-)
அட அம்பி, நா சும்மானாசிக்கும் கிண்டல் பண்ணினேன். எல்லோருக்கும் வருவதுதானே.
ஏன் இந்த சுய பச்சாதாபம்?
உடம்பு சரி இல்லாதவரை உற்சாகபடுத்தவேண்டும். அதை விட்டு நாமும் ஐயோ..... அம்மா.... பாவம் ......என்றா புலம்ப வேணும்?
எனக்கு இப்படி இருந்து, யாரும் கிண்டல் பண்ணினால் ரசிப்பேன்.
Take it easy Dude! :)))))
@கக்கு - மாணிக்கம்
ஆறுதல் சொன்னால் கொஞ்சம் தெம்பாக உணர்வார்கள். நேரில் நின்று கிண்டல் செய்வது வேறு... முகபாவத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம். நான் சொல்வது சரியா தவறா.. ;-) ;-)
I am so sorry RVS.
உங்கள் உடம்பு சீக்கிரம் குணமாக விரும்புகிறேன்.
நக்கல் அடிக்க ஒரு ஆல் குறைகிறதே அதற்காக.
@கக்கு - மாணிக்கம்
Easy...Easy....
Thank You!!!
;-) ;-)
சீக்கிரம் குணமாகுங்கள் (குணா ஆகுங்கள் என்று படிக்க வேண்டாம்!) உடம்பு ஜுரத்தில் இருப்பதால் மீள் பிர'சுரம்' என்று அதிலும் சுரம் வந்து விட்டதே... சுரம் குறைந்த பதிவோ என்று பார்த்தேன். சூடு வைத்த பதிவாக இருக்கிறது!
நா வேனும்ன நல்ல டாக்டர் அட்றஸ் கொடுக்கட்டுமா ?:)
உடம்ப கவனிங்க :)
பக்கத்துக்கு தெருக்கு ஊற சுத்தி காட்டும் ஆட்டோ ,சிக்னலுக்கு பயந்து சந்து சந்தாக பூரும் ஆட்டோ ,இதையும் லிஸ்ட் ல சேக்கலாம்
@ஸ்ரீராம்.
பாதி குணாவாகி.. சி.ச்சே.. குணமாகிவிட்டேன். மன்னார்குடி டேசில் நான் கண்ட குணாக்களைப் பற்றித் தான் எழுதிவிட்டேனே.. ;-)
@dr suneel krishnan
நன்றி டாக்டர். பதிவும் கமெண்ட்டும் போடற அளவிற்கு உடம்பு தேறிடுச்சு... நீங்க சொல்ற ஆட்டோக்களும் பட்டியலில் உண்டு ;-) ;-)
RVS
Take Care.
Get well soon.
you have to break the record of him
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130252
Sesha
முதல் பத்தி படிச்சு முடிக்கும் போது எனக்கு கணகணனு இருக்கு.
இருங்க போய் டாக்டரை பார்த்திட்டு வந்திர்றேன்.
உங்க வீட்டில காய்ச்சலோட கணினி பக்கம் போன ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?
பரிசல் நடத்திய போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்
@Sesha
விசாரிப்புக்கு நன்றி ;-) அந்தாளு மாதிரியெல்லாம் நம்மால முடியாதுப்பா ;-) ;-)
@நாய்க்குட்டி மனசு
கள்ளத்தனமா உட்கார்ந்து அடிக்க வேண்டியதுதான்.. ஆர்வம் இழுக்குது.. நல்ல கேள்வி. ;-) ;-)
@நாய்க்குட்டி மனசு
வாழ்த்துக்கு நன்றி நா. மனசு.. ;-)
dear rvs
get well soon
adhan nan onnum phone pannale
balu vellore
ஆணி கூடவோ ன்னு..கேட்க எண்ணினேன் அப்படியெல்லாம் இருக்காது ஆணி எவ்வளவு இருந்தாலும் பத்து விரல்லயும் பிடிங்கி விசீட்டு பதிவ போட்டுருவாரேன்னு அந்த கேள்வியை கேட்க வில்லை...
இப்ப காய்ச்சல் பரவாயில்லையா ..மழையா வேற இருந்துச்சு..பதனமா பார்த்துக்கோங்க ..அவசரத்துக்கு அலோபதி ஒகே.. தூதுவளைப்பொடி கஷாயம் அப்பப்ப அடிங்க...அப்புறம் மிளகுரசம் கரைச்சு அடிங்க ..காய்ச்சல் சளியையும் கூட்டிட்டு சொல்லாமலே ஓடீரும்.
வாழ்த்துக்கள்...
சீக்கிரமே நலம் பெற வாழ்த்துக்கள்.நன்கு ஓய்வெடுக்கவும்
பத்மநாபன்ஜியை சந்தித்தீர்களா?
ஸ்ரீராமின் கமெண்டை மிக ரசித்தேன்.
.
//இவர்கள் லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள்.//
நகரத்தில் ஆட்டோ போக்குவரத்தை ப்பற்றி வாத்தியார் எழுதிய வரி ஞாபகம் வந்தது..`` ஆட்டோகாரர்கள் திருப்பத்தில் பெரும்பாலும் மனதிற்குள்ளேயே சிக்னல் கொடுப்பார்கள் அதிக பட்சம் வேண்டா வெறுப்பாக ஒரு விரல் மட்டும் நீட்டுவார்கள்``
நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்களுக்கு மாணிக்பாட்ஷாவை துணைக்கு இழுத்தது அருமை....
//அந்தாளு மாதிரியெல்லாம் நம்மால முடியாதுப்பா ;-)//
அப்படி இப்படி ஆரம்பிச்சுட்டா இந்தியா தாங்காது....
இப்படி ஓயாம ப்ளாக் எழுதினா காய்ச்சல வராம என்ன செய்யும்? (அப்டி வூட்ல சொல்றாங்களா நைனா?)
சிலேடை ஸ்ரீராம் என்ற பட்டத்தைப் பணிவுடன் வழங்குகிறேன்.
அதானே பாத்தேன் 3 நாளா மன்னார்குடி அண்ணாவோட சத்தத்தை காணுமேனு பாத்தேன்!...:) how are you now?...:(
உடம்பு நல்லா இருந்தாத்தானே இப்படி மீட்டர்மேல காசு வாங்கர ஆட்ட்டோவெல்லாம் ஓட்டலாம். பதிவு நன்று. உடல் நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள் RVS
@balutanjore
Thank You!
@பத்மநாபன்
மிக மிக மிக மிக நன்றி பத்துஜி. என்ன ஒரு கரிசனம். I am floored. Thank You!!!!
ஆட்டோகாரர்கள் பற்றி வாத்தியாரின் விவரிப்புகளே தனிதான்..
@அப்பாதுரை
உங்களுக்கு ஞானத்ருஷ்டி உண்டா? வீட்ல சொல்றத அப்படியே அட்சரம் பிசகாம சொல்றீங்க. ;-)
@மோகன்ஜி
அண்ணா! பத்துஜி மிகவும் பிசி. இந்த முறை காணக் கொடுத்துவைக்கவில்லை. அடுத்தமுறை என்னை பார்ப்பதற்கு அப்பாயன்மென்ட் கொடுத்துள்ளார். பார்க்கலாம் எனக்கு ப்ராப்தம் இருக்கா என்று. உடம்பை பார்த்துக் கொள்கிறேன். நன்றி ;-)
@அப்பாதுரை
//சிலேடை ஸ்ரீராம் என்ற பட்டத்தைப் பணிவுடன் வழங்குகிறேன்.//
இதை நான் வழிமொழிகிறேன். ;-)
@தக்குடுபாண்டி
அன்பு தம்பிக்கு.. யாரோ கண் போட்டுட்டா.. தெனமும் இவன் எழுதறானேன்னு.. அதான்.. உடம்பு முழுசா தேரட்டும். அப்புறம் வச்சுக்கறேன் கச்சேரியை.. ;-)
@ஆதிரா
கனிவான விசாரிப்புக்கு நன்றி ஆதிரா. சீக்கிரம் தேறிவிடுவேன். அப்புறம் பட்டைய கிளப்பும் பதிவுகள் தான்.. நன்றி.. ;-)
அண்ணே, இப்போ உடம்பு எப்படி இருக்குது ?
சீக்கிரம் குணம் ஆகிடும்...
@இளங்கோ
இப்போ பரவாயில்லை.. எழுத ஆரம்பித்தால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.. ;-) ;-)
அன்பு நண்பர் ஆர்.வி.எஸ்..
Hope u get well soon.
we miss u & ur post.
@Madhavan Srinivasagopalan
Thank You! I hope to start ASAP.
தூதுவளைப்பொடியா?
@அப்பாதுரை
ZEDOCEF, ASCLIN-P and MALARID. ;-)
தூதுவளை இனிமேத்தான் ஸ்டார்ட் செய்யணும். ;-)
//தூதுவளைப்பொடியா// அப்பாஜி தாது இல்லை.. தூதே தான் .
சளியோடு வந்தாலும் சரி ,தனியாக வந்தாலும் சரி காய்ச்சலின் காரணத்தை கவனித்து அனுப்பிவிடும் தூதுவளை இலையின் பொடி.கொஞ்சம் தேனோடு கலந்து சாப்பிடலாம்.இது எனது அனுபவம்...
Post a Comment