Monday, November 8, 2010

ஆசை முகம் மறந்து போச்சே!

different faces

நாலைந்து முறை குழாயிலிருந்து தண்ணீரை இருகைகளால் ஏந்தி வாஷ்பேசினிர்க்குள் தலையை குனிந்து "சுளீர்.. சுளீர்.." என்று முகத்தில் அடித்துக்கொண்டேன். இருந்தாலும் ஒன்றும் தெளிந்தார்ப் போல் இல்லை. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலில் கருங்கல் படிக்கட்டை அலம்பும் போது பக்கெட்டில் நீர் எடுத்து கொப்பளையால் மொண்டு இதுபோல் சுளீரென்று தரையில் ஓங்கி அறைவார்கள். நேற்றிரவு குடியை குலத்தொழிலாக கொண்ட எவனோ ஒரு குப்பனோ சுப்பனோ முட்ட முட்ட குடித்துவிட்டு முழு போதையில் ரோடோரத்தில் கிடந்தான். அவனுக்கு கூட பாக்கெட் நீரை வாங்கி வாயால் கடித்து முகத்தில் பீய்ச்சி அடித்தார்கள். தெளிந்தானா என்று தெரியாது. பதினைந்து வருடங்களாக இந்த அலுவலகத்தில் பலிகடாவாக மாட்டிக்கொண்டு அசராமல் உழைத்தாலும் சமீப காலமாக இன்னாரின்னார் இன்னென்ன டிபார்ட்மென்ட்டில் மாடாய் உழைக்கிறார்கள் என்று என் புத்திக்கு உடனே உரைக்க மாட்டேன் என்கிறது. பழைய ஆட்களாக இருந்தாலும் கூட கண்டுபிடிக்க திண்டாடுகிறேன். தடுமாறுகிறேன். நேற்று சேர்ந்தவர்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். சுத்தம்.

"என்ன ராகவன் சார். எப்டி இருக்கீங்க?"
"ம். நல்லா இருக்கேன்.."
"அப்புறம் தீபாவளி எல்லாம் நல்லா போச்சா.."
"ம். அதெற்கென்ன போச்சு..."

முகத்தை பார்த்தால் சட்டென்று யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பாச்சுவா பாஸ்கரா? ஏதோ ஆளும்கட்சி பந்த் போல துருப்புச் சீட்டெடுத்துக் கொடுக்காமல் மூளை முழு கடையடைப்பு நடத்துகிறது. குரலைக் உன்னிப்பாக கேட்டால் ஈ.டி.பி பாச்சு மாதிரி தெரிகிறது. அவன் தான் ஒவ்வொரு வாசகத்திர்க்கும் குதிரை போல "க்கும்..க்கும்.." என்று கணைத்து கணைத்து பேசுவான்.
"ஆமாம் பாச்சு.. உனக்கெப்படி.."
"திவ்யமா ஆச்சு சார். பையன் கூடை கூடையா வெடி வெடிச்சான். காசை கரியாக்காதேடான்னேன். கேட்டாதானே. காசு இல்லப்பா பணம்னு ஜோக் அடிக்கறான்" என்று மறுபடியும் கணைத்தான். அப்பாடி. நினைத்தது சரிதான். கொஞ்ச நாட்களாக யாரைப் பார்த்தாலும் இது அவர்தானா இல்லை வேறோர் ஆளா என்று தீர்க்க முடியாத சந்தேகம் வந்து படுத்துகிறது. நீர் வார்த்த கண்ணாடி மேல் முகம் பார்ப்பது போல கொசகொசவென்று தெரிகிறது. சில சமயம் ஒருத்தர் மூஞ்சி மேல் இன்னொருத்தர் மூஞ்சியை ஒட்ட வைத்தது மாதிரி கலந்துகட்டி இருக்கிறது. சில சமயம் ஏதோ புள்ளிபுள்ளியாய் முகமூடி போட்டாற்போல் என்று பலபல யோசனைகள், தோற்றங்கள். வாஞ்சையுடன் ஒருவரையும் பேர் சொல்லி அழைக்க முடியவில்லை. பேர் தப்பி கூப்பிட்டுவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. கண் பார்வை கோளாறா என்றால் அதுவும் இல்லை. வாசலுக்கு வந்தால் வாலைக் குழைத்துக் கொண்டு பின்னால் ஓடி வரும் தெரு நாய் நன்றாகத் தெரிகிறது, வாகனப் புகைகளால் ஆன தேவலோக மண்டலம் போல் காட்சியளிக்கும் சாலையில் தூரத்தில் ஊர்ந்து வரும் மாநகர பஸ்சின் தடம் எண் மிகத் தெளிவாக புரிகிறது.

சரி...சரி... ரெஸ்ட் ரூம் வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகிறது. சீட்டில் யாராவது தேடப் போகிறார்கள். யார் தேடினால் என்ன? எப்படியும் அடையாளம் தெரிந்து பேசுவதற்கு ஐந்து நிமிடம் பிடிக்கிறது. காரிடார் கடக்கையில் ஒரு இள வயது சுடிதாரும் மத்திம வயது சேலையும் சேர்ந்தார்ப்போல் கைகோர்த்து கடந்தது. இரண்டுமே என்னைப் பார்த்து சிரித்தது. இருவரில் யார் சுஜி? யார் சுலோச்சனா? கொஞ்சம் உத்துப் பார்த்தால் பிரச்சனை. லோபி, ஸ்திரீலோலன் என்று நினைத்துக் கொள்வார்கள். மிகவும் சிக்கலான உலகம். எதிராளி சீக்கு தெரிவதேயில்லை. மையமாக சிரித்து வைத்தேன். இந்த சுடிதாரை அடிக்கடி எங்கேயோ பார்த்தாற்போல் இருக்கிறது. எங்கே? மானசீக சுத்தியல் கொண்டு மண்டைக்குள் முரட்டுத்தனமாக "டமார்..டமார்" என்று அடித்துக் கொண்டு தேடுகிறேன். யார்? யார்? உஹும். விடை இல்லை. இப்போது பக்கத்தில் நின்ற ம.வ. சேலை மளமளவென்று பேசிற்று
"என்ன சார்! பொண்ணு என்ன சொல்றா?"
குரல் புரியவில்லை...இப்போது என்ன செய்வது. சமாளி.
"அவளுக்கென்ன... ராணி மாதிரி இருக்கா..."
"இப்போ பி.ஈ எந்த வருஷம்...?" ரொம்ப ஈசியான கேள்வி
"தேர்ட் இயர்."
"பையன்?" இதுவும் சுலபம் தான்.
"ஃபைனல் படிக்கறான்..."
வாயில் சேலை வண்ணான் கஞ்சி போட்டு ஆடிக் காற்றில் காயவைத்த காட்டன் புடவை காய்ந்து மொடமொடத்து சட.. சட..ப்பது  போல பேசிக்கொண்டே போகிறது. சேலை பேச பேச சுடிதார் சொல்லனா சோகத்தில் இருப்பது போன்று பேசாமல் மௌனம் காக்கிறது.

சம்பாஷணையை முடிக்கும் பொருட்டு "ம். சரிம்மா பார்க்கலாம்..." என்று சொல்லிவிட்டு டிபார்ட்மென்ட் நோக்கி நடையை கட்டும் போது "யாரவள்?" என்ற ஆவலில் திரும்பி பார்த்தேன். ம். யார் அந்த சுடிதார் என்று இப்போது ஞாபகம் வந்துவிட்டது. சுலோச்சனா. அந்த நடை காட்டிக் கொடுத்துவிட்டது. அவள் தான் டி. ராஜேந்தரின் "சலங்கையிட்டாள் ஒரு மாது". நடக்கும் போது இடையின் பின்னழகில் இரண்டு குடத்தை கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் செல்வாள். இன்னமும் அவ்வளவு நேரம் அறுத்தது சுஜிதானா என்று தெரியவில்லை. போகட்டும். இது தெரியவில்லை என்றால் பிரமோஷனை ஒன்றும் நிறுத்திவிட மாட்டார்கள். வேலை போய் விடாது. விசாரிப்பு கேள்விகள் தானே.

மணி ஐந்தரை நெருங்கியது. தினம் தினம் தவறாமல் வரும் பொன்னான நேரம். டிராயரை பூட்டினேன். முறுக்கியிருந்த பிடிகளை சீராக்கி டப்பர்வேரை மறக்காமல் எடுத்துக்கொண்டேன். வீட்டுக்கு கிளம்புவதில் மட்டும் வெள்ளைக்காரன் நம்மிடத்தில் பிச்சை வாங்க வேண்டும். பையை தோளில் போட்டுக்கொண்டு கிளம்பியாயிற்று. பஸ் ஸ்டாப்பில் டி.நகர் கூட்டம் அரசியல் மாநாடு கூட்டம் அலைமோதியது. எல்லோருக்கும் உட்கார சீட் வேண்டும் எல்லோரும் ஆறரைக்குள் வீட்டுக்கு போய் காபி குடிக்கவேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் எல்லோரும் ஓரினம் ஓர் குலம் இந்த பஸ்சின் மன்னர்கள். "பின்னால ஏறு பின்னால ஏறு" என்று நகரத்தின் உச்சபட்ச மரியாதை கொடுத்து எல்லோரையும் பஸ்சிற்கு பின்னால் ஏற்றினார் நடத்துனர். "ஒரு ஆறு ரூபா சீட்டு கொடுங்க" என்று ஆணி அடித்தாற்போல் அசையாமல் சிலை போல அவர் இருக்கையில் உட்கார்ந்திருந்த கண்டக்டரிடம் கேட்டு வாங்கி பெற்றுக்கொண்டேன். சில்லரையாக எடுத்து கொடுத்தால் பாக்கி சில்லரை வாங்க முடியாமல் ஏமாந்த சோணகிரி ஆகாமல் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் கையில் உள்ள தோல்பை அளவு காசு என் கால்சட்டை பையில் இருந்த பர்ஸை நிரப்பியிருந்தது. எவனாவது ஜேப்படி திருடன் பாக்கெட் அடிக்க வந்தால் இருக்கும் சில்லரைகளை கர்சீப்பில் சுற்றி ஓங்கி குணா அடி அடித்தால் ஆள் அம்பேல். புட்டுப்பான்.

டிக்கெட் வாங்கி சட்டைப் பையில் சொருகிக்கொண்டு முன்னால் பார்த்தேன். ஏதேதோ வேற்று முகங்கள். அறிமுகமில்லாதவர்கள். பலதரப்பட்ட யோசனைகளில். திரும்பினேன். மீண்டும் தலை திருப்பி முன்னால் பார்த்தேன். இரண்டு கண்கள் என்னையே பார்ப்பது போல இருந்தது. யாரது? குளிருக்கு போர்த்திக் கொள்ளும் பெட்ஷீட் போல என்னை தோழமையுடன் பின்பக்கம் அணைத்து நின்ற இடிமன்னரை ஒரு முறை முறைத்துவிட்டு இன்னொருமுறை முன்னால் பார்த்தேன். இப்போதும் என்னையே பார்த்தாள். இந்த முறை உதட்டு தசைகளுக்கு வலிக்குமோ வலிக்காதோ என்று கொஞ்சமாக சிரித்தாள். கெளரியா? தெரியலையே. பின்னால் என் மேல் முட்டுக்கொடுத்து ஒய்யாரமாக நிற்கும் இடிராஜா மேல் சந்தேகப்பட்டு ஒருமுறை பர்ஸை பான்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு சரி பார்த்துக்கொண்டு பாதி தலை தூக்கி முன்னால் பார்த்தேன். இப்போதும் வைத்த கண் வாங்காமல் என்னை பார்க்கிறாள். பஸ்ஸில் உள்ளோர் அனைவரும் தேமேன்னு நவக்கிரகம் போல் ஒவ்வோர் திசையில் பார்த்து பயணம் புரிய இவள் மட்டும் ஏன் என்னைப் பார்க்கிறாள். அறிமுகம் இல்லாத ஐம்பது வயதுக்காரனிடம் என்ன எதிர்பார்க்கிறாள். "பீ...பீ.." என்று காதையும் காற்றையும் ஒரு சேர கிழித்த நடத்துனரின் விசிலுக்கு கட்டுப்பட்டு ஸ்டாப்பிங்கில் இருந்து ஐம்பது அடி தள்ளி பஸ் நின்றது. ஏறுவதற்கு நிற்கும் மக்களுக்கு ஒரு சிறு ஓட்டப்பயிற்சி கொடுத்தார் அந்த வண்டியோட்டி. மண்டியிட்டு நடிகையின் இடை மோப்பம் பிடிக்கும் சினிமா கதாநாயகன் பாணியில் முன்னால் நின்ற பெண்ணின் இடை வழியே ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். அவள் விநோதமாக என்னைப் பார்த்து முறைத்தாள். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் தான்.

சக்கையாய் பிழிந்த அந்த நெரிசலில் இருந்து என்னை பிய்த்து விடுவித்துக் கொண்டு இறங்கி விடுவிடு என்று சுறுசுறுப்பாக நடக்க ஆரம்பித்தேன். அவளும் பின்தொடர்ந்து என்னோடு வருகிறாள். இன்னும் வேகமாக நடக்க என்னை பார்த்து ஒரு கையை வேறு அசைக்கிறாள். கால்கள் ஜோராக ஒத்துழைக்க இன்னும் வேகமாக நடையை கட்டினேன். வெளியே குப்பையும் உள்ளே காலியாகவும் இருக்கும் குப்பைதொட்டி தாண்டி தெருவிற்குள் நுழைந்துவிட்டேன். அவளுக்கும் இதே தெரு போல இங்கேயும் வருகிறாள். அவசரவசரமாக செருப்பை கழற்றி எறிந்துவிட்டு வீட்டிற்குள் புகுந்து படுக்கை அறையில் நுழைந்து ஆடை மாற்றிக் கொள்ள விரைந்தேன். சில நொடிகளில் வாசலில் கொலுஸின் ஓசையும் செருப்பு அவிழ்க்கும் சத்தமும் கேட்கிறது. இங்கேயே வந்துவிட்டாளா? யோசித்துக்கொண்டே வேஷ்டியை இடுப்பில் சுற்றி காலைத் தூக்கி பேண்டை உருவுகிறேன்... படுக்கையறையில் உள்ளே நுழைகிறாள். அதிர்ந்து விட்டேன். இன்னும் நெருங்கி விட்டாள். யாரோ மிகவும் தெரிந்தவர்கள். யார்ட்லி லாவெண்டர் நெடி மூக்கை துளைக்கிறது. ம். ம். இம்முறை மூக்கு உதவியது. அட.....ச்.....சே. இது கௌரி தான். என் தர்மபத்தினி.

"ஏங்க... பஸ்ல பார்த்துகிட்டே இருக்கேன்.. என்னைத் தவிர வேற யாரெல்லாமோ பார்க்குறீங்க.."
"இல்ல கௌரி... கூட்டத்தில சரியா கவனிக்கலை..."
"ஓராயிரம் பார்வையிலே... உன் பார்வையை நானறிவேன்...ன்னு பாடினவர் தானே நீங்க..."
"ஹி..ஹி... அது ஒரு காலம்...வசந்த காலம்" ஜோக்கடித்து விஷயத்தை திசை திருப்ப முற்பட்டேன்.
"அது சரி.. இறங்கி நடந்து வரும்போது கூப்பிட்டா எவளோ ரோட்ல போறவ கூப்பிட்டா மாதிரி அவ்ளோ வேகமா ஓடறீங்க..."
"இல்ல நா உன்னை பார்க்கலை..."
மனதுக்குள் "ஆசை முகம் மறந்து போச்சே... இதை யாரிடம் சொல்வேனடி கண்ணே.." என்று பாரதியின் பாடலை ஓ.எஸ்.அருண் பக்கவாத்தியத்துடன் பாடிக்கொண்டிருந்தார்.

இரவு சாப்பாட்டுக்கடையின் போது விவாதம் நடைபெற்றது. எனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்தார்கள். போன மாதம் பாத் ரூம் டயில்கள் வழுக்குப் பாறைகளாகி என்னை தாயமுருட்டி வேடிக்கைப் பார்த்தது. தலையில் லேசான அடி. ரத்தக் காயம் ஒன்றும் இல்லை. மூளை குழம்பிவிட்டதோ என்று பயப்பட்டார்கள். கண்டபடி உளறவில்லை. சட்டை பேண்டை கிழிக்கவில்லை. கெக்கெக்கே என்று தானாக சிரிக்கவில்லை. நன்றாக உண்கிறேன். உடுக்கிறேன். எங்க வீட்டுக்காரரும் என்ற பழமொழிக்கேற்ப தினமும் கச்சேரிக்கு போகிறேன். சரியான பஸ்ஸில், மிகச் சரியான சில்லரை கொடுத்து அதே பாண்டியன் ஸ்டோர் நிறுத்தத்தில் அனுதினமும் ஏறுகிறேன் இறங்குகிறேன். எல்லோரும் ஏகமனதாக ஒத்துக் கொண்டார்கள். எனக்கு மூளைக் கிறுக்கு ஒன்றும் இல்லையாம்.

சாயந்திரம் குடும்பசகிதமாக குடும்ப டாக்டர் சந்துருவிடம் அழைத்துப் போனார்கள். மூச்சை இழுத்து பிடிக்க சொன்னார். அப்படியே விட சொன்னார். பாபா ராம்தேவ் யோகாவின் மூச்சுப் பயிற்ச்சிகள் போல கொஞ்சம் நேரம் மூச்சை விட்டு விட்டு பிடிக்கச் சொன்னார். "ஆ" காட்டச் சொன்னார். பக்கத்து வீட்டு அடங்காப்பிடாரி அல்சேஷன் போல நாக்கை வெளியே நீட்டச் சொன்னார். பென்டார்ச் அடித்து வாய்க்குள் எதையோ தேடித் பார்த்தார். கண்ணை பிதுக்கி லைட் அடித்துப் பார்த்தார். "எல்லாம் நார்மல். ராகவன். என்ன பண்றது உங்களுக்கு?' என்று முடிவாக என்னிடமே கேட்டார். சிரித்துவிட்டு என்னுள் எழும் முக சந்தேகங்களை விளக்கினேன். பழைய கல்யாண ஆல்பம் கொண்டுவரச் சொன்னார். ரெண்டு தெரு தள்ளியிருந்த என் வீட்டிலிருந்து மகன் விரைவாக பல்சரோட்டி ஆல்பத்துடன் வந்தான். படம் காண்பித்து ஒவ்வொருவராக யார் என்று விசாரித்து படங்களிலேயே ஒரு ஐடென்டிடி பேரேட் நடத்தினார். யாரோ ஒரு வழுக்கையான முன்னால் கடம் கவிழ்த்த ஆசாமியை மூன்று விதவிதமான பேர் சொல்லி அவரா இவரா அவரா என்று அவர்கள் புருவம் நெரித்து வியக்கும் வண்ணம் கேட்டேன். கணபதி மாமாவாம். என் அம்மாவின் கூடப் பிறந்த தம்பியாம். பல பேரை காண்பித்தார்கள் அவர்களுக்கு பல பெயர்கள் இட்டு நான் பல பதில் சொன்னேன். கடைசியில் சந்துரு வெற்றி பெற்றுவிட்டார். நல்ல அனுபவஸ்தர். எனக்கு முகக் குருடாம். அதாவது நிறக் குருடு மாதிரி. முகங்கள் மட்டும் நினைவுப் பெட்டகத்தில் இருந்து ரப்பர் வைத்து அழித்தாற்போல் அழிந்து விட்டதாம். சில சமயம் என்னுடைய திருமண ஆல்பத்தில் தனியாளாக சட்டை போடாமல் நின்ற என்னைக் கூட நான் சரியாக அடையாளம் காட்டவில்லை என்றால் பாருங்களேன்.


என்ன ஒரு நிம்மதியான வாழ்க்கை. பிறத்தியார் முகத்திற்காக பார்த்து ஒன்றும் செய்யவேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில். இவருக்காக ஒன்று அவருக்காக ஒன்று என்று பரிந்து பேசவேண்டாம். யாருக்காகவும் பாசாங்கு பண்ண வேண்டாம். இவருக்கு அவருக்கு என்று இல்லாமல் பாரபட்சமின்றி முக தாட்சண்யம் இன்றி யாவர்க்கும் ஒரு இளிப்பு இளிக்கலாம். இவளா, அவளா என்று குழம்பாமல் எல்லோரும் மகளிர் என்ற ஒரே குழுவை சேர்ந்தவர்கள். பேண்ட், சேலை, சுடிதார், மிடி, ஸ்கர்ட் என்று ஆடை தான் வேறு வேறு ஆள் ஒருவர்தான். அப்பப்பா. என்ன சுகம். இது நோய் அல்ல வரம். எஞ்சிய காலம் நிம்மதியாக கழியும்.

சனிக்கிழமை மாலை ஆறு மணி. ஒருவரை ஒருவர் ஜாதி மத பேதமின்றி ஒட்டி உரசி உறவாடும் ஜனசந்தடிமிக்க பஜார். யாரோ ஒரு பெண்... துர்க்காவா, பூஜாவா, விமலாவா..

"என்ன ராகவன் மாமா...எப்படியிருக்கேள்..."
"சௌக்கியம் கொழந்தே.... அப்பா சௌக்கியமா?"
யார்ன்னு தெரியலை. இருந்தாலும் கேட்டுவைக்கிறேன். முக தாட்சண்யம் இல்லாமல் எல்லோரிடமும் இப்படி அன்பாய் சிரித்து வாத்சல்யத்துடன் குசலம் விசாரித்துக் கொண்டு இருப்பது கூட நன்றாகத்தான் இருக்கிறது.

பின்கதை சுருக்கம்: நாலு நாள் முன்பு  Prosopagnosia என்று ஒரு வியாதி இருப்பதாக படித்தேன். மிகவும் வித்தியாசமான நோய் அது. prosopon, face, and agnosia, doubting என்று பதம் பிரித்துப் போட்டு விளக்கியிருந்தார்கள். அதாவது முகம் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதாம். Face-Blindness. தன் இல்லாளா பிறன் மனையா என்று ஒரு சந்தேகமாகவே இருக்குமாம். ஐயம் தெளிவுற யாரையும் காண முடியாதாம். அப்படி ஒரு வினோத நோய். சிக்கியது. சின்னாபின்னமாக ஒரு கதையாக இங்கே. இதையே ஒரு த்ரில்லர் கதையாக முதலில் முயற்ச்சித்தேன். கடைசியில் நல்ல பிள்ளையாக ராகவனை வைத்து "குடும்ப" கதை ஒன்று எழுதிவிட்டேன். முடிந்தால் அப்புறம் திரில்லர். தலைப்பை பார்த்து காதல் கதை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஒரு .... ஸாரி...

பட உதவி: மேலே கண்ட  அடையாளம் தெரிந்த மற்றும் தெரியாத சகல விதமான சினிமா பெண்களின் முகங்களையும் ஒரு ஃபிரேமுக்குள் அடக்கி கொடுத்த இடம் 8ate.blogspot.com.

-

46 comments:

வெங்கட் நாகராஜ் said...

புதியதாய் ஒரு விஷயத்தைப் படித்த உடன் அதை வைத்து ஒரு கதை புனைய திறமை வேண்டும். அத்திறமை உங்களிடம் இருக்கிறது தெரிகிறது. நல்ல பகிர்வு. தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ராகவன் கண்ணாடிய வீட்டுல வச்சிட்டு போயிட்டாருன்னு முடிச்சிருவீங்கனு நெனச்சேன். இது வேற மாதிரி வித்தியாசமா நல்லா இருக்கு.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி. இதோட திர்ல்லர் வெர்ஷன் ட்ரை பண்றேன். ;-)

'பரிவை' சே.குமார் said...

kathai romba nalla irukku...

busil parththathu magal endru ukiththu vanthean manaivi endru matrividdirgal. arumai.
nalla irukku,

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
எல்லோரும் கண்ணாடி தான் முதல்ல நினைப்பாங்க... அதான் பிளாட் இதுல.... ரசித்ததற்கு நன்றி...
;-) ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

இதை வைத்து த்ரில்லரை சீக்கிரம் எழுதுங்களேன்.

பொன் மாலை பொழுது said...

ஐயோ ஐயோ....எல்லாம் அந்தகால இந்தி நடிகைகள் ! இதில் பாதி இப்போ உயிரோடு இல்லை. மீதி இருபதெல்லாம் பாட்டிகள் .
அம்பி , நோக்கு ஏன் இந்த விபரீத யோசனை. தீவாளி எண்ண பலகாரம் ரொம்ப தின்னுட்டியோ ?
ஆத்ல லேகியம் பண்ணியிருப்பாலேன்னோ ?! எடுத்து ஒருவா போடுண்டுடு. ஒரு குவல ஹாட் வாட்டர் குடிசிண்டு நன்னா படுத்து சித்தே தூங்கு.

RVS said...

@சே.குமார்
அதுவும் ஒரு ட்விஸ்ட். ரசித்ததற்கு நன்றி நண்பரே.... ;-)

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
நிச்சயம்... ஊக்கத்திற்கு நன்றி...;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
கதை எப்படி இருந்தது... அதான் முதல்ல... அப்புறம் தான் லேகியம்லாம்... ;-)

Anonymous said...

//பஸ் ஸ்டாப்பில் டி.நகர் கூட்டம் அரசியல் மாநாடு கூட்டம் அலைமோதியது.//
// "பின்னால ஏறு பின்னால ஏறு" என்று நகரத்தின் உச்சபட்ச மரியாதை கொடுத்து//
//ஏறுவதற்கு நிற்கும் மக்களுக்கு ஒரு சிறு ஓட்டப்பயிற்சி கொடுத்தார் அந்த வண்டியோட்டி//
ஹா ஹா.. போகிற போக்குல யதார்த்தத்தோட நகைச்சுவையையும் அள்ளி தெளிச்சுட்டு போறீங்களே அண்ணே! :) சூப்பர்

//அட.....ச்.....சே. இது கௌரி தான். என் தர்மபத்தினி.//
ஹா ஹா.. செம!

//Prosopagnosia//
நல்ல தகவல்!

எஸ்.கே said...

வியாதி இருந்தா மட்டுமா நடக்குது! அது இல்லாமலேயே பல சமயம் இப்படி போனிலும், நேரிலும் சிலரிடம் யாரிவர் என தெரியாமலேயே/புரியாமலேயே தெரிந்தவர் மாதிரி பேசுகிறோம்.
கதை மிக மிக நன்றாக உள்ளது!

RVS said...

@Balaji saravana
கதையை ரசித்தமைக்கு நன்றி தம்பி... ;-)

RVS said...

@எஸ்.கே
ஆமாம் எஸ்.கே. பாராட்டுக்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

ஒரு கதையின் கருவை வைத்து (காதல், த்ரில்லர்) என்று யோசிக்கிறீர்களே weldon.எங்களையும் யோசிக்க வைத்து விட்டீர்கள்!! கதையின் நடை தெளிந்த நீரோடை!!

RVS said...

@எம் அப்துல் காதர்
நன்றி காதர் பாய். எங்களூரில் உரிமையோடு நட்பாக பாய் என்று அழைப்போம். தப்பில்லையே... ;-)

ஸ்ரீராம். said...

கமெண்ட்ஸ் க்ளிக் செய்தால் அப்பாஜி ப்ளாக்ல எல்லாம் வருவது போல மாத்துங்களேன் ஆர் வி எஸ்...இந்த வகையில் சற்று நேரம் பிடிக்கிறது..(எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை)

RVS said...

@ஸ்ரீராம்.
மாற்றிவிட்டேன்....

ADHI VENKAT said...

படித்த செய்தியினை வைத்து கதை உருவாக்கியதற்கு வாழ்த்துகள்.வித்தியாசமாக இருந்தது.

RVS said...

பாராட்டுக்கு நன்றி. ;-)

nis said...

interesting

//சில்லரையாக எடுத்து கொடுத்தால் பாக்கி சில்லரை வாங்க முடியாமல் ஏமாந்த சோணகிரி ஆகாமல் தப்பிக்க வேண்டும் //

எனக்கு மிகவும் பிடித்த வரி. :)))

அப்பாதுரை said...

நல்லா இருக்குங்க.. இந்தக் கதையை எங்கியோ படிச்ச மாதிரி இருக்கு, சட்னு தெரியமாட்டேங்குதே?

(எனக்கு பிரசவபகோடோ நோயா?)

இளங்கோ said...

கதை நல்லா இருந்துதுங்க. அப்புறம் அந்த "அந்த பொன்மானை நான் பாட. .சலங்கையிட்டாள் ஒரு மாது.. " பாடலைக் கேட்க வேண்டும் போல இருக்கிறது. நன்றிங்க.

மோகன்ஜி said...

நல்லா இருக்குங்க..இது திரில்லர் நாட் ...அதையும் எழுதி முடித்து விடுங்கள்..

Anonymous said...

நன்றாக இருந்தது அம்பி ...உனக்கு இதோ என் பரிசு http://www.muzigle.com/#!album/amogha (நான் கேட்டு ரசித்தது )

bogan said...

என்னங்க இது திடீர்னு தீவிர இலக்கியமாயிட்டீங்க...ஆனா நல்லா இருக்கு.இன்னும் கொஞ்சம் தீவிர[இலக்கிய]வாதி ஆவதற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

RVS said...
@ஸ்ரீராம்.
மாற்றிவிட்டேன்...

அடேடே...ரொம்ப ஸ்பீட்...ரொம்ப நன்றி ஆர் வி எஸ்...

Chitra said...

ஆஹா... கஜினி மாதிரி ஒரு கதை ரெடி ஆகுதே.... சூப்பர்! பாராட்டுக்கள்!

balutanjore said...

dear rvs

story with some charecteritic touch.

well written

continue

(amam deepavali ellam aacha)


balu vellore

சிவராம்குமார் said...

நல்ல கதை! என்ன நோய் இது.... கொடுமையப்பா!!

RVS said...

@bogan
இதுக்கு முன்னாடி ஒன்னு எழுதியிருக்கேன்... டயம் கிடைச்சா படிச்சு பாருங்க... தீவிரவாதத்துக்கு துணை புரிவதற்கு நன்றி..
http://mannairvs.blogspot.com/2010/10/blog-post_4395.html

RVS said...

@nis

Thanks ;-)

RVS said...

@அப்பாதுரை
உலக நாவல் எழுதறவங்க மாதிரி நான் ஏதும் சிந்திச்சுட்டேனா? பயமுறுத்தாதீங்க அப்பாஜி.. ராத்திரி போது போகாம அடிக்கறது... இதுபோல கதைகள்லாம்...

RVS said...

@அப்பாதுரை
//(எனக்கு பிரசவபகோடோ நோயா?)//
அப்டீன்னா என்னா?

RVS said...

@இளங்கோ
நன்றி இளங்கோ.. ;-) பொன்மானை பற்றி திண்ணையிலோ இல்லைனா தனி பதிவாவோ கவனிச்சுடலாம்... ;-)

RVS said...

@மோகன்ஜி
செய்கிறேன் அண்ணா.... பெரியவா ஆசீர்வாதம்..

RVS said...

@Chitra
பாராட்டுக்கு நன்றி.. அடுத்து கஜினி மாதிரிதான்..

RVS said...

@balutanjore
பாராட்டுக்கு நன்றி...
தீபாவளி நன்றாக ஆச்சு.. தங்களுக்கு?

RVS said...

@சிவா
நன்றி சிவா.. நவீன யுகத்தில் விதவிதமான நோய்கள்... ஒவ்வொன்றும் புதுவிதம்..

தக்குடு said...

ஒரு விஷயத்தை சாதாரணமானவன் உள் வாங்கர்துக்கும் ஒரு படைப்பாளி கிரகித்துக் கொள்வதிலும் உள்ள வித்தியாசம் உங்க கதைல தெரியர்து. நன்னா இருந்தது அண்ணா!

இவ்ளோ பொம்ணாட்டிகள் படத்தை பாத்துக்கு அப்புறமும் அண்ணா தீராத விளையாட்டு பிள்ளை இல்லைனு யாரும் சொல்லமாட்டா...;)இந்த லக்ஷணத்துல இவரு ஒன்னும் தெரியாத பிள்ளைபூச்சினு தக்குடு ப்ளாக்ல நடிப்பு வேற!!..:)

ஹேமா said...

நல்லதொரு கதை.வித்தியாசயமாய் இருக்கு ஆர்.வி.எஸ்.
காதல்,கத்தின்னு கலக்கிட்டீங்க.
இன்னும் எழுதுங்க.

RVS said...

@தக்குடுபாண்டி
பாராட்டுக்கு நன்னி. அவாள்லாம் யாருன்னே தெரியாது நேக்கு. நிறைய மூஞ்சி இருந்துது. கதைக்கு தோதா இருந்தா மாதிரி இருந்துது. சின்னூண்டு குழைந்தையா இருந்தப்பவே வாயில யாராவது விரலை வச்சா கடிக்காம கள்ளம் கபடம் இல்லாம சிரிப்பேனாம். இப்பவும் அப்படியே சிரிக்கறேன்னு எங்கம்மா சொல்றா கொழந்தே.. பார்த்தியோன்னோ... உன்னையும் எங்கூட கோந்தையா சேர்த்துன்ட்டேன்...

RVS said...

@ஹேமா
பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி... ;-)

RVS said...

@Gopi Ramamoorthy

Thanks. ;-)

Madhavan Srinivasagopalan said...

என்ன ஒரு நிம்மதியான வாழ்க்கை. பிறத்தியார் //முகத்திற்காக பார்த்து ஒன்றும் செய்யவேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில். இவருக்காக ஒன்று அவருக்காக ஒன்று என்று பரிந்து பேசவேண்டாம். யாருக்காகவும் பாசாங்கு பண்ண வேண்டாம். இவருக்கு அவருக்கு என்று இல்லாமல் பாரபட்சமின்றி முக தாட்சண்யம் இன்றி யாவர்க்கும் ஒரு இளிப்பு இளிக்கலாம்.//

classic.. Well done RVS. I second the very first comment by வெங்கட் நாகராஜ்

RVS said...

Thank You Madhavaa ;-) ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails