Sunday, November 7, 2010

சகலகலாவல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

kamal5கைலியும் முண்டா பனியனுமாய் வாப்பா கடலுக்கு போவதை தடுத்து மால் கடத்தி வரும் கமல். மிகப் பெரிய சினிமா நுணுக்கங்கள் தெரியாத வயது அது. மணி-பி.சி.ஸ்ரீராம்-கமல்ஹாசன்-இளையராஜா-பாலகுமாரன் என்று ஜாம்பவான்கள் ஜோடி சேர்ந்த வெற்றிக் கூட்டணி. அப்புறம் அதே படத்தில் பிற்பகுதியில் மேலே வழித்து வாரி குங்கும பொட்டிட்டு வேலு நாயக்கராய். "டன் ட டன் ட டன் ட டின்.." என்ற அந்த இளையராஜாவின் பின்னணி இசையில் "ஐயிரே" என்று வெகுநாளாய் எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தார்.
kamal4என் போன்று உள்ளூர் சினிமா பார்ப்பவர்களுக்கு மிசஸ் டவுட்ஃபயரை தழுவி எடுக்கப்பட்ட அவ்வை ஷண்முகி கூட ஒரு வித்தியாசமான படம். ஒலக சினிமா பார்த்து ஜல்லியடிக்கும் மக்களுக்கு அது ஒரு ஈயடிச்சான் கொசு அடிச்சான் காப்பி. அது காப்பியோ டீயோ நம்மூருக்கு ஏற்றாற்போல் தருகிறார்களா.. ரசிப்போமே. ஷண்முகி வேஷத்தில் நாகேஷ் விசிலடிக்க அந்த மகளிர் மட்டும் பேருந்தில் மேனியாட்டி சிங்காரமாக ஏறும் அழகு ஒன்றிற்கே ஆனந்தவிகடன் விமர்சனம் ஆயிரம் மார்க் போடலாம்.
அதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம் என்ற பயந்தாங்கொள்ளி தெனாலியாக "குசினி அறையில.." என்றும் "நான் வாயைக் குவிக்கையில யாரோ சத்தம் போடுறாங்க.." என்று சொல்லும் கமலின் முகபாவங்கள் சொல்லில் வாராதது. வெகுளியாக வெள்ளந்தியான நடிப்பு அபாரம்.
kamal3
தோளில் மளிகை லிஸ்டை அங்கவஸ்திரமாக எடுத்துப் போட்டுக்கொண்டு கிரேசியிடம் என்ன எல்லாமே ப்ளஸ் டூ வா இருக்கு என்றும் குதுராட்டம் வளர்ந்திருக்காய், தூண்ல பாதி இருக்காய் என்று ஊர்வசியிடம் சண்டையிடும் காமேஸ்வரனும், "கேட்ச் மை பாய்ன்ட்" என்று நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மதனும், "இன்னா இது..." என்று சென்னைத்தமிழ் பேசும் ராஜும், "அப்பனா நீ..." என்று சாராய புட்டி ஒரு கையிலும் சொத்தைப் பல் காட்டி இளிக்கும் மைக்கேலும் அவ்வளவு எளிதில் மறந்து போகக் கூடியவர்கள் அல்ல.

கால் மடக்கி கால் மனிதனாக "கொட்டும் மழைக் காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்" என்று சோக ராகம் பாடும் அப்புவும், புலி வேஷம் போட்டு "அண்ணாத்தே ஆடுறார்..." கமலும் படம் முழுக்க அசரவிடாமல் வந்து அசத்துவார்கள். கௌதமியுடன் வாழ வைக்கும் காதலுக்கு ஜே போட்டார். ரூபினியுடன் புது மாப்பிளைக்கு என்றார்.

kamal2ஐநூறு ரூபாய் நோட்டை மகள் கஸ்தூரியுடன் கப்பல் செய்து விளையாடும், லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து மகனுடன் போராட்டம் நடத்தும் வர்மக் கலை வல்லுநர் "தாத்தா" கமலும், கவுண்டருடன் சேர்ந்து லொள்ளு லூட்டி அடிக்கும் சந்துருவுமாக இந்தியனில் காட்டாத நடிப்பா?

சிவாஜியுடன் இணைந்து கலக்கிய தேவர்மகன். முரட்டு மீசையும், மடித்து டப்பா கட்டு கட்டும் வேட்டியும், மரத்தடி பஞ்சாயத்தும், ஒரு பாதி பட்டணக் கமல், மறு பாதி பட்டிக்காட்டு கமல் என்று கலக்கிய படம். சாந்து பொட்டு சந்தன பொட்டும், இஞ்சி இடுப்பழகாவும் இருவேறு பரிணாமங்களில் தோற்றமளித்த கமல்ஹாசன். இதே பட்டண பட்டிக்காடு கமல் சகலகலா வல்லவனிலும். ரொம்ப நாளைக்கு "விஷ் யூ ஹாப்பி நியூ இயர்" என்று புதுவருஷ வாழ்த்து புல்லட்டில் வரும் ச.க.வ. கமலோடுதான்.

kamal1kamal8துருதுருவென்ற கம்யூனிசம் பேசும் இளைஞனாய், மிருதங்கம் வாசிக்கும் வித்வானாய், "அவள் ஒரு பைரவி.." என்று முதிர் அழகி ஸ்ரீவித்யாவிற்கு காதல் தூதுவிடும் வாலிபனாய் வந்த அபூர்வ ராகங்கள் கமல். ராங் நம்பருடன் "ஹலோ" பாடும் மன்மத லீலை கமல், ஸ்ட்ரேக்சரோடு குஷ்புவை தள்ளிக்கொண்டு போய் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் கேட்கும் கமல், பூங்காற்று உன் பேர்சொல்ல என்று அமலாவை கேட்ட வெற்றிவிழா கமல், மானிட சேவை துரோகமா என்று பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையை எகிறிய கமலாகவும் சீதாவின் இதழில் கதை படித்த உன்னால் முடியும் தம்பி கமல், அநியாயத்தை தட்டிக் கேட்கும் துடிப்பான மற்றும் அமலாவின் வளையோசையில் கட்டுண்ட சத்யா கமல், அரைகுறை ஆளாக ராதிகாவுடன் நடித்த சிப்பிக்குள் முத்து கமல், புத்தி சுவாதீனம் இல்லாத ஸ்ரீதேவியை காப்பாற்றி கண்ணே கலைமானே பாடி பாதுகாக்கும் மூன்றாம் பிறை கமல், நடனத்திற்காக வாழ்வை அர்பணித்து கிணற்றின் மேலே "தகிட தகிமி " என்றாடும் சலங்கை ஒலி கமல், தவக்களையுடன் காமடியும், ஒய்.விஜயாவுடன் "சிங்காரி சரக்கு நல்ல சரக்கும்", அம்பிகாவுடன் "கண்மணியே பேசு"வும் பாடி, முட்டை குடித்து, பைப்பில் ஏறி, இன்ன பிற மசாலா படங்களின் அணைத்து சாகசங்களும் செய்து நடித்த காக்கிச் சட்டை கமல். போலீஸ் ஆபீசராக "இந்த.. கண்ண நோண்டி எடு பாப்போம்." என்று ரௌடியிடம் சவால் விட்டு வேட்டையாடி விளையாடிய கமல், மாதவனுடன் இணைந்து நடித்த அன்பே சிவம் கமல், அபிராமி தன்னை மனம் புரிந்து கொள்வாள் என்ற உறுதியில் பார்த்த விழி பார்த்தபடி அவளை கவர்ந்து சென்று, குருவி இறந்ததற்கு மனமுருகி அழுது நடித்து வாழ்ந்த குணா கமல், செல்லமாக பிருஷ்டம் கடிக்கும் ஹேராம் கமல், கடவுள் பாதி மிருகம் பாதி ஆளவந்தான் கமல், ஆத்தா வையும் சந்தைக்கு போனும் காசு கொடு கேட்கும் சப்பாணி கமல், குடும்ப பாசத்தில் திளைக்கும் அப்பாவியாகவும் "ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே..."என்று அங்கலாய்க்கும் மகாநதி கமலும்....
சிகப்பு ரோஜாக்களில் கர்சீப் வாங்கப் போய் ஸ்ரீதேவியை மடக்கிய கமல். ஸ்டேப் கட்டிங்கும் பெல் பாட்டம் பேண்டுமாக அன்றைய அழகுக் குறிப்புகள் அனைத்தும் அடங்கப்பெற்ற கமல். நினைவோ ஒரு பறவை என்று பாடிய பாடகர் கமல்.

kamal9இன்னும் எத்தனை எத்தனை கமல்...அத்தனையும் அலுக்காத கமல்.

நான் எந்த பதிவு பெற்ற XXX அகில இந்திய ரசிகர் நற்பணி மன்றத்திலும் மெம்பர் கார்டு வைத்திருப்பவன் கிடையாது. படம் ரிலீஸ் ஆனதும் பாலாபிஷேகம் பண்ணி பால் காவடி எடுப்பவனும் அல்ல. என் ரசனைக்கு ஒத்துப் போகும் படங்கள் ஏதுவாக இருந்தாலும் பார்க்கும் ஒரு சாதாரண விசிலடிக்கத் தெரியாத தமிழ் ரசிகன். லத்தீன் அமெரிக்க, கிம்-கி-டுக், கொரிய, எதியோபியா, கியூபா திரைப்படங்களின் தொழில்,கதை,பின்னணி இசை நேர்த்திகள் பற்றி ஜல்லியடிக்க தெரியாதவன். நடிப்பால் ஸ்டைலால் கவர்ந்திழுக்கும் வெள்ளித்திரை நாயகர்கள் எல்லோரையும் எனக்கு பிடிக்கும்.

கமல் ஒரு நாத்திகர். இருந்தாலும் அவருக்கு தொழில் பக்தி அதிகம். எந்த பாத்திரம் ஆனாலும் அதிக சிரத்தையுடன் நடிப்பவர். பாடல், ஆட்டம் என்று எந்தத் துறை ஆனாலும் தன்னுடைய முழு ஈடுபாட்டால் திறைமையை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்தவர். காதல் இளவரசன் என்று பாராட்டுப் பெற்றவர். அவருடைய இந்தப் பிறந்தநாளில் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கமல்ஹாசன் படம் கொடுத்து உதவிய உயர்ந்த உள்ளங்கள்.
telugumasti.sulekha.com
southdreamz.com
forumkeralam.com
theviewspaper.net
amazingpics1.blogspot.com
pradeepkommu.blogspot.com
hubpages.com
-

41 comments:

சிவராம்குமார் said...

ஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அவர்தானய்யா என்றும் சகலகலா வல்லவன்!!! அவரை வெளியில் விமர்சிப்பவன் கூட உள்ளூர ரசிப்பான் என்று அனைவருக்குமே தெரியும்....

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க. குட்டுகள் நிறைய இருக்கு?!

கமலோட பெஸ்ட் மகாநதி தான்.

ஹேமா said...

அருமை அருமை.வயதே போகாத ஒரு மனுசன் கமல்.ஈழம் பற்றிய பார்வையில் அவரில் தமிழன் எனிகிற நோக்கில் வருத்தம் இருந்தாலும் நடிகர் என்கிற பார்வையில் உச்சம்தான்.வாழ்த்துகள் அவருக்கும்....RVS உங்களுக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.

Madhavan Srinivasagopalan said...

சின்ன வயசுலேருந்து காலேஜு படிச்ச காலம் வரைக்கும் கமல் படம் புடிச்சுது. இள ரத்தம்.. நல்லது கேட்டது தெரியாத அறியாப் பருவம், இப்பலாம் அப்படி இல்லை.
அவர் ஒரு தனிப்பட்ட திறமைசாலியா இருக்கலாம். அனால் நிஜ வாழ்கையில அவரு சாதிச்சது என்ன ?

பத்மநாபன் said...

கமல் பெருமை சொல்லி மாளாது ... இப்பவும் தியேட்டர் போய் படம் பார்ப்பது கமல் படம் மட்டுமே..
ரசிகன் எனும் நிலை தாண்டி நம்முள் ஒருவனாகவே கமல்.. நாத்திகன் என்று யாரும் நம்பமாட்டார்கள் தசாவதாராத்தில் ’’சாந்தகாரம் புஜகசயனம்’’ கேட்டவர்கள் ( உண்மையில் சிக்கி மீள முடியாத நாத்திகத்தில் சிக்கி கொண்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் )

இவையனைத்தும் தாண்டி,,கமல் ஒரு அருமையான கவிஞன் என்பது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி விஜய்யில் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்..

வழக்கமாய் இப்பதிவிலும் சிக்ஸர் அடித்துவிட்டீர்கள் ஆர்.வீ.ஸ்...

பிறந்த நாள் நல்வாழ்த்தில் சேர்ந்து கொள்கிறேன்..கமல் வாழ்க பல்லாயிரத்தாண்டு....

Gayathri said...

happy birthday to my fav kamal..

post potta ungalu rombhaaaaaaaaaaaaaaaa nandri

RVS said...

சிவா... கமல் என்ற காவிய கலைஞன் தமிழில் சாதித்தது ஏராளம்... ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
மகாநதி சேர்த்துட்டேன். கலைஞன் கூட சேர்க்கணும்... இன்னும் நிறைய இருக்கு... ரெண்டு நாள் ஆகுங்கறதுனால போட்டுட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி....

RVS said...

@ஹேமா
இணைய விடுப்பு முடிஞ்சு வந்துட்டீங்களா... வாங்க...வாங்க... தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

RVS said...

@Madhavan
ஒரு நடிகனா கலையுலகுக்கு தன்னை அர்ப்பணிச்ச பின்னாடி நிஜ வாழ்வுன்னு ஒன்னு இருக்கா அவருக்கு? மாதவன் உங்க கவலை எனக்கு புரியுது... ;-)

RVS said...

@பத்மநாபன்
//கமல் வாழ்க பல்லாயிரத்தாண்டு.... //
திருப்பல்லாண்டு சொல்லி கமலை வாழ்த்திய பத்துஜிக்கு ஒரு நன்றி. கமல் காலம் கடந்தும் நிற்கப்போகும் ஒரு நிகரில்லா கலைஞன். ஒரு கவிஞன்.ஒரு பாடகன். ஒரு நடன இயக்குனர், ஒரு இயக்குனர் என்று பன்முகம் கொண்ட ஒரு மனிதன். பரந்த சினிமா ஞானம் கொண்டவர்.

RVS said...

@Gayathri
Thanks ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
மகாநதி எப்ப போட்டாலும் கண்ணில் நீர் வரவழைக்கும் ஒரு படம். எப்போது பார்த்தாலும் மனதை பிசையும். எப்பவுமே நான் மறக்க நினைக்கும் படம். இருந்தாலும் சிறப்பான படம். அதனாலேயே விடுபட்டது. என்ன ஒரு கனமான நடிப்பு.

பொன் மாலை பொழுது said...

கமலை, கமலின் நடிப்பின் பரிணாமத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா?
கமலை பிடிக்காதவரும் அவரின் நடிப்பு திறமையை மனதுக்குள் வைத்து ரசிப்பார்கள்.
உலகத்தரத்தில் வைத்து போற்றக்கூடிய கலைஞர்களும் தமிழில் இருகின்றனர்.
இளையராஜா, கமல் போல. நல்ல ஒரு ரசனையோடு வாழும் ஒருவர் R V S .

( அண்ணாத்தே ....இன்னா ...ஜல் புட்சிகினுதா...ரொம்ப ஐஸ் போட்டுகினே . அதான் . அக்காங்!)

RVS said...

ஆமாம் கக்கு... ஒரே ஊதக் காத்தா இருக்கு... ;-)

வெங்கட் நாகராஜ் said...

உங்களோடு சேர்ந்து நானும் கமலுக்கு வாழ்த்தினை சொல்லிக் கொள்கிறேன். இன்று கூட தெனாலி பார்த்துக் கொண்டு இருந்தபோது, அவரின் நடிப்பாற்றலைப் பற்றிய ஒரு பிரமிப்பு என்னுள் தோன்றியது.

மோகன்ஜி said...

கண்டிப்பாக தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில் கமல் முக்கியமானவர்.இன்னமும் கூட அவரின் 'மருத நாயகம்' வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளவர்களில் அடியேனும் ஒருவன் . உங்கள் பதிவு ஆர்.வீ.எஸ் ஸ்பெஷல் அல்லவா?

RVS said...

@வெங்கட் நாகராஜ்
அவரின் அணைத்து நகைச்சுவை படங்களும் எனக்கு கொள்ளை பிரியம். ;-)

RVS said...

@மோகன்ஜி
தலைவரே.. மன்மத அம்பு நம்ம மேல பானம் போட வருது.. ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அதே தான், எவ்வளவு முறை மகாநதி படம் போட்டாலும் பார்க்க ஆசையா இருக்கும், ஆனால் பார்த்ததுக்கு அப்புறம் ஏன் பார்த்தோம்னு இருக்கும்.

அப்பாதுரை said...

ம்ம்ம்.. என்னவோ சொல்றீங்க.. சரிதான்.
கமலுக்கு இருக்குற டேலன்டுல அடுத்தவங்க கதையைத் தன் கதையா சுட்டு பெருமை பேசுறதையும் சேத்துக்குங்க.
ஒண்ணு ரெண்டு எடுத்து விடுறது?
>>>காவிய கலைஞன் தமிழில் சாதித்தது ஏராளம்

அப்பாதுரை said...

அப்படியா? நாமம் புரியுது, பரிணாமம் என்னங்க?
>>>மலின் நடிப்பின் பரிணாமத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா?

(எல்லாம் எங்கியோ கண் காணாம ஒக்கந்திருக்குற தைரியத்துல கேட்டுற வேண்டியது தான்)

அப்பாதுரை said...

தப்பா நெனக்காதீங்க... ஒரு தபா 'What about Bob?' பாத்துட்டு தெனாலி பாருங்க.. அஞ்சு நிமிசத்துக்கு மேலே ஒக்கார முடியுதானு சொல்லுங்க.

>>>இன்று கூட தெனாலி பார்த்துக் கொண்டு இருந்தபோது, அவரின் நடிப்பாற்றலைப் பற்றிய ஒரு பிரமிப்பு

அப்பாதுரை said...

கமல் இடத்தை விஜய் பிடிப்பாரா?

அப்பாதுரை said...

எந்த சிகரம் சார்?குன்றத்தூர் சிகரமா? :)

>>>தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில் கமல் முக்கியமானவர்

அப்பாதுரை said...

சுனில் காவ்ஸ்கர் பேடிங் :: கமலகாசன் நடிப்பு
டெக்னிக்க்குக்கும் திறமைக்கும் வித்தியாசம் இருக்கு இல்லீங்களா RVS?
>>>கமலின் முகபாவங்கள் சொல்லில் வாராதது

சாய்ராம் கோபாலன் said...

அவரின் அணைத்து நகைச்சுவை படங்களும் Super. Thenali ("What about Bob" in English is class), Pancha Thanthiram, Vasool Raja MBBS, Kadhala Kadhala, Anbae Sivam ("Planes, Train, Automobiles" in English which had John Candy is class in fact)

But, I also hated lot of his movies in 80's, he could have avoided them

RVS said...

அப்பாஜி! எனக்கு ஒலக சினிமா தெரியாது. ஏதாவது கையை காலை தூக்கி நாலஞ்சு பைட் போடும் சாக்கி சான் படங்கள் பார்த்திருக்கேன், அப்புறம் கத்தியால குத்தி புஜத்தில் புல்லெட் எடுக்கும் ஸ்டாலோன் படம் ஃபர்ஸ்ட் ப்ளட் பார்த்திருக்கேன், அப்புறம் "சில்லறையா" சில படம் பார்த்திருக்கேன். நீங்க சொன்ன லிஸ்ட் பார்த்துட்டு அப்புறம் கமெண்டறேன்!!

Anonymous said...

நல்ல தொகுப்பு கமல் பற்றி, உங்க டச்சோட..

அப்பாதுரை said...

கமலகாசன் நடித்த நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும் RVS.. (எனக்கு மட்டும் உலக சினிமா தெரியும்னு நெனக்கறீங்களா?:-)

பொதுவாவே கமல் படம்னா என்னால முழுப்படமும் உக்காந்து பாக்க முடிஞ்சதில்லை - உண்மையைச் சொல்லிடறேன். ஆனா அவர் திறமைசாலி என்பதில் எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. சமீபப் படங்கள்ல மைகேல் மதன காமராஜன் (இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை - ஆனா யுட்யூப்ல பாத்த காட்சித் துண்டுகளை மிகவும் ரசித்தேன்). ஹே ராம் - ஒரு இலக்கியவாதியின் வீச்சு அங்கங்கே தெரிஞ்சுது. அவரோட வளர்ச்சிக்கு உதவியதும் கெடுதலா இருந்ததும் பாலசந்தர்ங்கறது என் அபிப்பிராயம். அதைக் கமலும் புரிஞ்சுக்கிட்டாருனு நினைக்கறேன். சமீப இருபது படங்களையும் வ,நி.சிக்கு முந்தைய படங்களையும் ஒப்பிட்டா நான் சொல்றது விளங்கும். 'சோப்ளாங்கி' இமெஜைக் கழட்டி எறியப் ரொம்ப முயற்சி பண்ணியிருக்கார் கமல்.

ஆமா, கமலுக்கு இப்ப என்ன வயசு? பிறந்த நாள் விழா எதுவும் எடுக்கலையா மக்கள்? உங்களோட சேந்து நானும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.

RVS said...

அப்பாஜி! நம்ம நண்பர் ஒருத்தர் மாவட்ட கமல் ரசிகர் மன்றத் தலைவர்... குணா ரிலீஸ் ஆன டயம். வாடா வாடான்னு பிடிச்சு இழுத்தார். நான் வரைலைன்னு சொல்லிட்டேன். கமல் படம் எப்பவும் நிதானமா பார்க்கணும் எனக்கு. பிறமொழி, பிறநாட்டு திருட்டு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் சமீபத்திய தமிழ் சினிமா சூழல்ல ஏதோ கலை அப்படின்னு கொஞ்சம் கோடிட்டு காண்பிச்சது கமல் மட்டும்தான் அப்படிங்கறது என்னோட அபிப்பிராயம்.
நீங்க சொல்றா மாதிரி பல உலக சினிமாக்களை காப்பியோ அல்லது திருடியோ படம் எடுத்தாலும், வித்தியாசமா ஏதாவது பண்ணனும்ன்னு அட்லீஸ்ட் முயற்சி பண்ணினவர் கமல். அந்தவிதத்தில அவரை பாராட்டலாம்.
சுஜாதா கூட்டணியில் விக்ரம் அப்பவே மிக மிக மாறுபட்ட ஒரு முயற்சி.
நிறைய இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா பகிர்வோம்...

Lenard said...

அவரது நடிப்புக்கு நிகர் யாரும் இல்லையே நம் தமிழ் பெருமையே சொல்லும் வள்ளல் நடிகர்
வாழ்க பல்லாண்டு

RVS said...

@Lenard
ஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ;-)

ஸ்ரீராம். said...

கமல் காபிக் கலைஞனோ என்னவோ..ரசிக்க வைக்கும் நடிகர். சொந்த வாழ்க்கையில் தீ.வி.பி.

RVS said...

@ஸ்ரீராம்.
கமல் பற்றி சொல்லும்போது போகிற போக்கில் தீ.வி.பி என்று சொல்ல வேண்டுமா? ரொம்பதான் குறும்பு உங்களுக்கு... ;-) ;-)

bogan said...

எனக்கும் கமலே பிடித்தமான நடிகர்.ஆனால் அவரை மெய்யான நாத்திகர் என்று சொல்லமாட்டேன்.அறிவுஜீவி என்று சொல்லலாம்.அறிவுஜீவியாய் இருப்பதும் நாத்திகனாக இருப்பதும் ஒன்றுதான் என்று அவருக்கு எவரோ தப்பாய் ஓதி விட்டார்கள்.நிறைய படங்களில் கடவுளை அவரால் விடவும் முடியாமல் தொடவும் முடியாமல் தவிப்பதைப் பார்க்கலாம்

RVS said...

@bogan
நூறு சதவிகிதம் உண்மை.. புலிவாலைப் பிடித்த கதையாக ஆகிவிட்டது கமலுக்கு.. அவரின் எல்லா படங்களிலும் ஏதோ ஒரு கதைமாந்தர் தீவிர பக்தராக இருப்பார். ;-)

அமைதி அப்பா said...

நல்ல பகிர்வு. கமலுக்கு எனது வாழ்த்துக்கள்.

R.Gopi said...

The BEST movie of Kamal is SALANGAI OLI....

He cannot act in a movie like that anymore in his career....

RVS said...

@அமைதி அப்பா
நன்றி.. ;-)

RVS said...

@R.Gopi
சரிதான்.. கிணத்துமேல போட்ட ஆட்டம் இருக்கே... அடாடா....அற்புதம்..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails