Wednesday, November 3, 2010

மன்னார்குடி டேஸ் - தீபாவளி திருவிழா

உலக்கை வெடி. அந்தக் காலத்தில் வெடி  உலகின் முடிசூடா மன்னன். பால்ய வயது தீபாவளி கொண்டாட்டங்களில் இடம் பெரும் அதிமுக்கியமான பட்டாசு. அதற்கு என்ன அப்படி தனி மவுசு. அந்த ஒரு வெடி ஒருவர்  வீட்டு வாசலில் வெடித்தால் அப்படியே பேப்பரை வாரி இறைத்து குப்பையாய் தெரு முழுவதும் விரவி கிடக்கும். யார் வீட்டு வாசலில் குப்பை நிறைய இருக்கோ அவர்கள் தான் அந்தத் தெருவின் வெடி ராஜா பட்டம் பெற்ற பெரியவர். கோபி வீட்டில் அவ்வளவாக வெடி வாங்க மாட்டார்கள். இருந்தாலும் தம்பி நம்மை அன்போடு அழைத்து அவர்கள் வீட்டு வாசலில் வெடிக்கச் சொல்லி அன்புத் தொல்லை கொடுப்பான். ஆனால் பக்கத்தில் சீனி வீட்டில் காலையில் முறைவாசல் செய்யும்போது படும் அவதியை நினைத்து "ஏம்ப்பா... அந்த குளத்தோரம் வெடிக்கலாமில்ல.." என்று ஆதரவாக சொல்லி அன்பாக விரட்டுவார்கள். அகில உலகத்திற்கும் இந்த உலக்கை வெடி கலாசாரத்தை ஒரு தீபாவளிக்கு கோபி தான் அறிமுகப்படுத்தினான். நாலே நாலு உலக்கை வெடி வாங்கி வந்து வெடித்துவிட்டு அந்தக் குப்பைகளையே பத்திரமாக பார்த்துக் கொண்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தான். பாட்டி "செக்கொலக்கை மாதிரி நிக்கறான் பாரு" என்று அடிக்கடி திட்டுவது அப்போது ஏனோ நினைவுக்கு வந்தது. பஸ் செல்லும் மெயின் ரோடு ஆகையால் வலது புறம் செல்லும் பேருந்துகள் ரோகினி வீட்டிற்கும், இடது புறம் செல்லும் லாரிகள் எங்கள் வீட்டிற்கும் குப்பையை மாறி மாறி இடம் பெயர்த்து புரட்டிப் போட்ட போதெல்லாம் நொந்த கோபி மனம் பெயர்ந்தான். கட்டை விளக்குமாறு எடுத்து பெருக்காத குறையாக சில சமயங்களில் வெறுங்காலாலேயே ரத்தம் வர பெருக்கி அவன் வீட்டு வாசலுக்கு குப்பையை கொண்டு போய் சேர்த்தான். அறைய காலால பெருக்கினாலே ரத்தம் வரும் இவன் தெருவையே பெருக்கினால்.

தீபாவளி ஆரம்பிப்பதற்கு பத்து நாள் முன்கூட்டியே முக்கு கடை கற்பகம் ஸ்டோரில் சில்லரையாக வாங்கி வெடிக்கும் அனுபமே ஒரு கலர் மத்தாப்பு தான். பத்து குருவி வெடிகளை கலர் பேப்பர் சுற்றி ஒத்தை வெடி கட்டு ஒன்று ரெண்டு ரூபாய் என்று ஞாபகம். அன்றிலிருந்தே எங்களை சுற்றி ஒரே வாசனையாக இருக்கும். ஏதோ செயின் ஸ்மோக்கர் போல வலது கையில் எந்நேரமும் ஊதுபத்தி புகையும். "இப்போலேர்ந்தே சீனு வெடி  வாங்க ஆரமிச்சுட்டன்" என்று பாட்டி வெடி புராணம் பாட ஆரம்பித்து விடுவாள். அதையேன் அந்தக் காலப் பாட்டிகள் சீனு வெடி என்றார்கள் என்ற கேள்விக்கான விடை சொல்வோருக்கு ஆயிரம் பொற்காசுகள். சிலசமயம் பொருளாதார நெருக்கடியால் ஆளுக்கு ஒரு ரூபாய் சம பங்கு போட்டு ஒரு கட்டு வெடி வாங்கி வெடித்த காலம் கூட உண்டு. ஐந்து வெடி என் வீட்டு வாசலில் ஐந்து வெடி அடுத்த பங்குதாரர் வீட்டு வாசலில். வீட்டு வாசலில் வெடி குப்பை ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு வீட்டின் தீபாவளி கொண்டாட்டத்தின் மதிப்பு அந்தக் குப்பையில் உள்ளது. "ஏங்கப்பா. எவ்ளோ குப்ப!!!! " என்று விழி விரிய  மூச்சடைத்து யாராவது ஆச்சர்யப்பட்டால் அது தான் அவர்களின் தலை சிறந்த தீபாவளி. வங்கக்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான ஒரு தீபாவளியில் கோபி இலுப்பச்சட்டியில் நமுத்துப் போன எல்லாப் பட்டாசையும் போட்டு வறுத்ததில் வீட்டுக்குள்ளேயே வானவேடிக்கை விட்டுக் காண்பித்தான். அவன் பாட்டி புடவையில் ராக்கெட் ஏறி நடு உள்ளில் பாட்டிக்கு ஜலக்கிரீடை நடந்தது.


வயது ஏற ஏற வாலிபம் தலைப்பட இந்த கொண்டாட்டங்கள் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது. புது டிரஸ் போட்டுக்கொண்டு எந்தெந்த வீடுகளில் தாவணி போட்ட தீபாவளிகள் இருக்கோ அந்தந்த வீடுகளுக்கு முன்னே நின்று தெருமுனை நோக்கி "டேய்.. ஸ்ரீராம்... கங்கா ஸ்நானம் ஆச்சா...." என்று தொண்டை கமற சத்தமிட்டு கொண்டாடிய தீபாவளிகளும் கணக்கில் இருக்கிறது. கடைக்கண் பார்வை பட்டால் லெக்ஷ்மி வெடி என்ன உலக்கை வெடியையை இடது கையால் பற்ற வைத்து வலது கையால் தூக்கி விட்டெறிந்து சாகசம் புரியக் கூட ரெடியாக இருந்த காலம் அது. வெங்காய வெடி என்று ஒன்று விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு ப்ளாக்கில் கிடைக்கும். முதலில் ஒரு சட்டியில் வைத்திருந்தார்கள் அப்புறம் தடைக்கு பின் ஜட்டியில் வைத்திருந்து விற்றார்கள். கையில் வெங்காய வெடியை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் பருவப் பெண்கள் பக்கத்தில் சென்று ரோடில் அடித்து "டமார்" பண்ணுவார்கள். நெஞ்சதிர திடுக்கிடும் பெண்ணை பார்த்து ரசிப்பார்கள். இப்படி எல்லாம் அதிர்ச்சியில் ஒரு பெண்ணை வசியம் பண்ண முடியாது என்று தெரியாத அறியாத அஞ்ஞான பருவம் அது. ஒரு தடவை இதே சாகச நிகழ்ச்சியை கோபிலி அவன் வீட்டு வாசலில் திறமையாக செய்து காண்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெடி பித்து தலைக்கேறி லெக்ஷ்மி வெடியை கையில் பிடித்து வானத்தில் தூக்கி வீச முயன்று கையில் படாராயி ஆஸ்பத்திருக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். வைத்தியம் பார்ப்பதற்கு முன் வலியில் துடிப்பவனை பார்த்து "அதுக்குதான் சொல்றது... கையிலெல்லாம் வச்சு வெடிக்கப்படாதுன்னு..." என்று சப்ளாக்கட்டை இல்லாமல் கதாகாலேட்ஷபம் செய்தார் அந்த டாக்டர். ரெண்டு பட்டாசை எடுத்து அவர் கோட்டு பையில் போட்டுருக்க வேண்டும். தப்பித்தார். 

மற்றொரு தீபாவளிக்கு தெருவில் நண்பர்கள் எல்லோரும் குரூப்பாக கொசுவலை மாதிரி சட்டைத் துணி எடுத்து தைத்துக் கொண்டோம். தூரத்தில் இருந்து பார்த்தால் எந்த கொசுவலைக்குள் எந்த கொசு என்று தெரியாது. கம்மாளத் தெரு நகோடா டெக்ஸ்டைல் "நன்பேண்டா" புவனேந்திரனிடம் "எப்போ கடை காலியா இருக்கும் மாப்ளே.." என்று விசாரித்து சென்றோம். சேட்டு முதலாளிக்கு தெரிந்தால் "தீபாவளி டயத்ல கடை காலியா இருக்குன்னு சொல்றியா.." என்று கொன்றிருப்பான் புவனாவை. கொலைப் பழியில் இருந்து நாங்களும் தப்பித்தோம். சத்யராஜ் "அண்ணே.. அண்ணே .. அட.. என்ன சொன்னே.." என்ற பூ விழி வாசலிலே படத்தில் டைட்டிலில் பாடும் பாட்டில் போடும் வெள்ளை சட்டை மாதிரியே தைத்து தரச் சொல்லி தையல்காரர்களை படையெடுத்து படுத்தினோம். அந்த சட்டைக்கு தோள் அளவு தவிர வேறுதுவும் வேண்டாம். அப்படியே ரெண்டு கை மூட்டி காஜா எடுத்து தர வேண்டியதுதான். ஸ்டைலோ, சூப்பர் ஃபைன், மாரிஸ் என்று முப்பெரும் தையல் கடைகள்.  சாந்தி தியேட்டர் எதிரில் மாரிஸ் டைலர்ஸ். அண்ணன் தம்பி மூன்று பேர். ஒருத்தர் அளவு, ஒருத்தர் கட்டிங் இன்னொருத்தர் டெலிவரி. காஜா எடுக்க, வெட்டியதை ஒட்ட உள்ளே ரெண்டு பேர். இவ்வளவுதான் கடையின் வெற்றி  ஃபார்முலா. ரெடிமேட் ஆடைகள் அதிகமாக ஊர் உலகத்தில் புழக்கத்தில் இல்லாத காலம். தையல் கடைகளில் கூட்டம் அம்மும். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு டிரஸ் கிடைத்தது. நிர்வாணமாய் நின்ற யாருக்கோ வஸ்த்திர தானம் செய்திருக்க வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்துக்க் கொண்டு ஜட்டியோடு போய் நிற்காத குறையாக பழியாக கடை வாசலில் நின்று மனதில் திட்டி வாய் சிரித்து மகிழ்ச்சியோடு வாங்கிவந்தான் வடக்குதெரு சரவணன். அப்போது நான் கங்கா ஸ்நானம் பண்ணி "தம்பி.. முதெல்ல ஒரு பொத வை..." என்ற பாட்டியின் கட்டளைக்கு புஸ்வானம் வைத்துக் கொண்டிருந்தேன்.

பிறந்ததும் வளர்ந்ததும் மன்னையிலேயே வெவ்வேறு இடம் ஆகையால் வளர்ந்த இடமான மேலப்பாலத்தில் இருந்து பிறந்த இடமான கீழ்ப்பாலம் வரை சைக்கிளில் ஒரு வலம் வருவேன். ஒத்தை தெரு பிள்ளையார் கோயில் குட்டை தாண்டி முதல் தெரு பிரவேசித்ததுமே ஒரு தேவலோகத்தில் நுழைந்த ஒரு உணர்வு ஏற்படும். வெடிப்புகை வெண்புகை மண்டலம். அவ்வளவு பேர் ஏகத்திற்கு கைக்காசை கரியாக்கி இருப்பார்கள். அந்த புகை மத்தியில் ஸ்நானம் செய்து தலையை விரித்து போட்டு நடந்து வரும் அத்தெரு அக்ரஹார கன்னிகள் தேவலோக கந்தர்வக் கன்னிகைகள் போல கண்ணுக்கு தென்படுவார்கள். குறிப்பாக கீழ முதல் தெருவில் ரோடுக்கு நடுவில் கிணறு ஒன்று இருக்கும். அந்தக் கிணற்றுக்கு நேர் எதிர் வீட்டில் ஒரு ஐம்பது பேருக்கு தலைவாழை இலைபோட்டு கல்யாணச் சாப்பாடு போடும் அளவிற்கு திண்ணை இருக்கும். அந்தத் திண்ணை முழுவதும் வெடி பரப்பி மன்னையில் ஒரு சிவகாசி என்று கொண்டாடுவார்கள். எங்களூரில் தல தீபாவளிக்கு தான் நிறைய வெடி வாங்குவார்கள். அவர்களுக்கு எல்லா தீபாவளியும் 'தல' தீபாவளி. அவர்கள் சரம், சங்குசக்கரம் என்று  வைக்க ஆரம்பித்தார்கள் என்றால் சாயந்திரம் வரை கால்கடுக்க நின்று வேடிக்கை பார்க்கவேண்டும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மனோதிடத்துடன் சைக்கிளை சரம் மேலேயே ஓட்டிச் சென்று அக்கரை அடைய வேண்டும்.

தீபாவளி இரவுகளில் மத்தாப்பூவை ராக்கேட்டாக்கி குளத்துக்குள் வீசுதல் போன்ற விஷம காரியங்கள் ஆரம்பமாகிவிடும். புஜபல பராக்கிரமம் படைத்தவர்கள் பெரிய ராக்கெட் விடுவார்கள். எங்கள் வீட்டு பக்கத்தில் எஸ்.என்.ஆர் என்ற ஒரு ஆர்டிஸ்ட் இருந்தார். நல்ல வித்தைக்காரர் மற்றும் சோமபான ப்ரியக்காரர். லாஹிரி உள்ளே ஏறினால் நல்ல நல்ல ஜாங்கிரியான படங்கள் வரைவார். அவருடைய சீமந்த புத்திரன் இளங்கோ நல்ல கட்டுடல் கொண்ட கருங்காளை. இரும்பில் ஒரு பெட்டியும் குச்சியும் இருக்கும். அந்த பெட்டியில் மருந்து நிரப்பி குச்சியை அந்த பெட்டி மேல் சொருகி ஓங்கி தரையில் குத்தினால்/அடித்தால் பொக்ரானில் அணுசோதனை செய்தது போன்று இருக்கும். நாலு கரையும் "டொம்.டொம்.டொம்." என்று அதிர்ந்து எதிரொலிக்கும். காது கேட்காதவர்களுக்கு கேட்கும், கேட்பவர்களுக்கு கேக்காது. தீராத வியாதியில் படுத்த படுக்கையாய் கிடப்பவர்கள் பரலோகம் போய் சேர்வார்கள். அண்ணனை சுற்றி வந்து வெடி வேடிக்கை பார்ப்போம். அவர் மேலுங்கும் மருந்து வாடை வீசும். ஒரு ராகுகால தீபாவளி இரவில், நானும் கோபியும் ஒரு சோதனை முயற்சியாக ராக்கெட்டை தரையில் படுக்க வைத்து கொளுத்தினோம். ஸ்ரீஹரிகோட்டாவில் விட்டது போன்று சீறிட்டு கிளம்பி தெருமுனையில் சைக்கிளில் பீருட்டு சென்றுகொண்டிருந்த தோட்டியின் சைக்கிள் சீட்டுக்கு அடியில் சென்று இறங்கி படார் என்று வெடித்தது. அதிர்ச்சி தந்த பயத்தில் அலறி வேட்டி அவிழ அவன் கீழே விழுந்ததும், நேரே எங்கள் வீட்டிற்கு வந்து வண்டி வண்டியை சண்டையிட்டதும், எங்கள் வீட்டார் மீதமுள்ள வெடிகளை பிடுங்கி பரண் மேல் தூக்கி கடாசியதும், நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு எல்லோரும் வெடிப்பதை நானும் கோபியும் வேடிக்கை பார்த்ததும் என்றென்றும் வாழ்வாங்கு வாழும் சரித்திரம்.

முதல் பட விளக்கம்: குழந்தைகள் வெடித்து மகிழ்வதில் அந்த ஒரு சில நிழலுருவங்களை பார்த்தால் எங்க க்ரூப் மாதிரியே இருந்துச்சு. அவங்களை இந்த சைட்லேர்ந்து தத்தெடுத்தேன். thebetterindia.com.

பின் குறிப்பு: இந்தக் கொண்டாட்டங்கள் ஏன் இவ்வளவு விமரசியாக கொண்டாடப்பட்டது என்றால் அப்போது சூரியகலைஞவிஜயஜெயராஜ டிவிக்கள் எல்லாம் கிடையாது. பாதி நேரம் "டொய்ன்..டொய்ன்.." என்று சிதார் வாசித்துக் கொண்டிருக்கும் தூர்தர்ஷன் தான்.

அனைவருக்கும் இந்த தீராத விளையாட்டுப் பிள்ளையின் 
தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

-

46 comments:

Anonymous said...

//அறைய காலால பெருக்கினாலே ரத்தம் வரும் //
ஆனா அரைய காலால பெருக்கினா "கட்டிங்" வரும் அண்ணா..
இந்த தீபாவளிக்கும் (குவாட்டர் ) "கட்டிங்" வருது :)
சும்மா உல்லுல்லாய் ;)
தீபாவளி சரவெடி மாதிரி தொகுப்பு அருமை..
தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...

RVS said...

@பாலாஜி
தீபாவளி வாழ்த்துக்கள். நன்றி ;-)

Chitra said...

இந்தக் கொண்டாட்டங்கள் ஏன் இவ்வளவு விமரசியாக கொண்டாடப்பட்டது என்றால் அப்போது சூரியகலைஞவிஜயஜெயராஜ டிவிக்கள் எல்லாம் கிடையாது. பாதி நேரம் "டொய்ன்..டொய்ன்.." என்று சிதார் வாசித்துக் கொண்டிருக்கும் தூர்தர்ஷன் தான்.

.....அப்படி போடு அருவாளை! செம கமென்ட்!
HAPPY DEEPAVALI!

RVS said...

தேங்க்ஸ் சித்ரா.. ;-) ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதினஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி கொண்டாடுன தீபாவளியே தனி தான். வெடி புராணம் சூப்பர். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-) ;-)

பொன் மாலை பொழுது said...

திருவாளர் ஆர். வி. எஸ். அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் ,மங்களமும் உண்டாவதாக. :))))))
தாங்கள் வெகு நேர்த்தியாக ,அழகாக வர்ணிக்கும் தீபாவளி நினைவுகள் படிக்கும் பொழுது மெய்மறந்து போகின்றது.

( நான் எப்டி பின்னூட்டம் போட்டாலும் அம்பிக்கு பிடிக்கல! )

RVS said...

மகா கனம் பொருந்திய உயர்திரு கக்கு-மாணிக்கனார் அவர்களுக்கு...
நான் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே. ஒரே மாதிரியாக இருந்தால் அலுக்காதா? அதைத் தான் தெரிவித்தேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-) ;-)

Madhavan Srinivasagopalan said...

soper, kalakitta po.

//காது கேட்காதவர்களுக்கு கேட்கும், கேட்பவர்களுக்கு கேக்காது.//

gr8 comedy

அப்படி காடு கேக்காமல் போனால், அடுத்த வெடி வெச்சிட்டாப் போச்சு.. அடைச்ச காது 'கேட்க ஆரம்பிச்சுடும்' இல்லையா ?

RVS said...

@Madhavan
ஒத்தைப் படை ரெட்டைப் படை நம்பர்ல வெடிச்சு வெடிச்சு விளையாடலாம். ;-) ;-)

ஸ்ரீராம். said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி... உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். ;-);-)

பொன் மாலை பொழுது said...

சரி சரி, அம்பி, தீவாளிக்கு சோம பானம் உண்டா?
மன்னார்குடியில் இல்லை. இப்போ? இங்கே உண்டா??
இல்லையா???? அட போய்யா.............................
"நாய் வால நிமித்தவா முடியும்? " அம்பி என்ன திட்டாண்டாம்.

Unknown said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மன்னார்குடியில் மட்டுமல்ல அகில உலகத்திலும் சோம சுரா பானங்கள் உண்டு. ;-) ;-)

RVS said...

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி... தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

கண் முன்னே தீபாவளி கொண்டாடட்டங்களை கொண்டு வந்துட்டீங்க! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
தங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.. நன்றி ;-)

இளங்கோ said...

ஹய்யா.. என்னோட பேரு உங்க பதிவுல இருக்கே. :)

//சூரியகலைஞவிஜயஜெயராஜ டிவிக்கள்//
இந்த மக்கள்வசந்தமெகா வையெல்லாம் விட்டுட்டிங்க தலை. :)

Happy Diwali..

RVS said...

@இளங்கோ
நன்றி இளங்கோ... விஷ் யு தி சேம். ;-) ;-)

Unknown said...

Romba Nalla Irukku sir...........................wish a happy தீபாவளி

RVS said...

@padma hari nandan
Thank you and wishing you the same!!!! ;-) ;-)

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

RVS said...

@சங்கவி
நன்றி... தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தீபாவளி பற்றிய இனிய நினைவுகள்... பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி... உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

இளம்பிராயத்து தீபாவளிக் கொண்டாட்டத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்..எங்கள் மெகா கூட்டுக்குடும்பத்தில் பட்டாசு பங்கு போட்டு கொண்டு வெடித்த ஞாபகங்கள் தாலாட்டுகின்றன..
அதில் தங்கைமணிகளோடு எக்ஸேஞ்சு ஆஃபரில் மத்தாப்பு புஸ்வானம் கொடுத்து வெடிகளை பண்டமாற்று செய்து வெடித்த இனிய கொண்டாட்ட இந்த நியுகிளியஸ் குடும்ப கலாச்சாரத்தில் காணமல் போயே விட்டது..டீ.வியும் தன் பங்கிற்கு தனிமை படுத்துகிறது....

RVS said...

@பத்மநாபன்
கருத்துக்கு நன்றி பத்துஜி! தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

பத்மநாபன் said...

நன்றிகள்...உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தீபாவளி நினைவுகள் சூப்பர். என்று நம் வீட்டிற்கு டி.வி. வந்து ஜம்மென்று நடு ஹாலில் உட்கார்ந்து கொண்டதோ, அன்றிலிருந்து எல்லாம் போய் விட்டது.
எல்லாமுமே!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

விஷாலி said...

திபாவளி வாழ்த்துக்கள்

நன்றி

RVS said...

நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்! தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

RVS said...

@மனசாட்சியே நண்பன்
நன்றிங்க... உங்களுக்கும் தீபாவளித் திருநாள் வாழத்துக்கள். ;-)

மோகன்ஜி said...

அழகான தீபாவளி நினைவுகள்..
அந்தக்கால கோலாகலம் மீண்டு வமா?
உங்களுக்கும் என் தங்கை மற்றும் குழந்தைகளுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மைத்துனரே!

சிவராம்குமார் said...

தொலைக்காட்சிப் பெட்டிகளில் தொலைகிறது நம் தீபாவளி இப்போதெல்லாம்.... அருமையான நினைவுகள்!!!!

RVS said...

@சிவா
ஆமாம். நன்றி ;-) ;-)

RVS said...

@மோகன்ஜி
நன்றி அண்ணா.. ;-) ;-) ;-)
அண்ணா மன்னிக்கு என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

Aathira mullai said...

//இளம்பிராயத்து தீபாவளிக் கொண்டாட்டத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள்..எங்கள் மெகா கூட்டுக்குடும்பத்தில் பட்டாசு பங்கு போட்டு கொண்டு வெடித்த ஞாபகங்கள் தாலாட்டுகின்றன..//
என்னதான் சொல்லுங்க நாம் அனுபவித்தவைகளை இன்றைய குழந்தைகள் அனுபவிக்கிறார்களா?? சில சமயங்களில் அவர்கள் எல்லாவற்றையும் நிறைய இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது RVS. ஒவ்வொரு பதிவையும் ஒரே மூச்சில் படிக்க வைத்து விடுகிறீர்கள்..

Philosophy Prabhakaran said...

// குழந்தைகள் வெடித்து மகிழ்வதில் அந்த ஒரு சில நிழலுருவங்களை பார்த்தால் எங்க க்ரூப் மாதிரியே இருந்துச்சு. அவங்களை இந்த சைட்லேர்ந்து தத்தெடுத்தேன். thebetterindia.com //

பாராட்டுக்கள்...

RVS said...

நன்றி ஆதிரா ;-) தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

RVS said...

@philosophy prabhakaran
பாராட்டுக்கு நன்றி ;-) தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

சுவையான நினைவுகள்... தீபாவளி வாழ்த்துக்கள்.

(காது கேட்காதவருக்கும் கேட்கும் - அருமை)

அப்பாதுரை said...

அங்கேயும் இதே கதை தானா?

>>>தங்கைமணிகளோடு எக்ஸேஞ்சு ஆஃபரில் மத்தாப்பு புஸ்வானம் கொடுத்து வெடிகளை பண்டமாற்று...

பத்மநாபன் said...

திண்ணை க்கச்சேரி வழியா, அப்பாஜிக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

//அங்கேயும் இதே கதை தானா// சில சமயங்களில் போங்க்காக சுருட்டற ரகளையும் நடக்கும்...இப்ப டிவில இந்த சேனல் அந்த சேனல் போட்டிதான் நடக்கிறது...

மாதேவி said...

பட்டாசு சரித்திரம்.... இனிய நினைவலைகள்.

தீபாவளி நல்வாழ்த்துகள்.

RVS said...

@மாதேவி
நன்றி தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails