"டா...ய்........ க்காளி.. மவனே எவனாவது கடய தொறந்தீங்க... சொருவிடுவேன் சொருவி..." சோடா கலக்காத சாராயத்தின் முழு தெம்பில் குரல் விட்டு பஸ் ஸ்டாண்ட் பக்க கடைத்தெரு ஏரியாவையே அதகளப் படுத்திக்கொண்டிருந்தான் கட்டை மணி (எ) மணி. சின்ன சின்ன ராக்கெட்டுகளாய் "உய்..உய்.." என்று இங்குமங்கும் சோடா பாட்டில்கள் பறந்தன. அவ்வளவு போதையிலும் விண்ணில் ஒரு பாட்டிலை எறிந்து இன்னொரு பாட்டில் விட்டு மிட் ஏர் க்ளாஷ் செய்து கண்ணாடிச் சில்லுகள் மழை பொழிந்தான். ஒரு வஸ்தாதின் அதிமுக்கியமான வித்தை இது. இந்தப் பட்டபெயர் இவன் மின்னெலென கட்டை சுழற்றி அடிப்பதலா அல்லது பெரிய ஹெர்குலஸ் சைக்கிளில் தாவி ஏறும் உயரம்தான் இருப்பதாலா என்று பார்ப்பவர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய அமர்க்களம் இது. தொடைக்கு மேல் தூக்கி கட்டிய கைலி உள்ளே ரெண்டு மூன்று வெற்று காளி மார்க் சோடா பாட்டில் கலகலத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு உதவியாக ரெண்டு அல்லக்கைகள் அவனோடு அடித்தாடி "அண்ணே.. வேணாம்னே... சாத்திடுவார்னே... விடுங்கண்ணே... அடிக்காதீங்கன்னே..." என்று கோரஸாக சப்போர்ட் ராகம் பாடிக்கொண்டிருந்தார்கள். முதல் மூன்று பட்டன் இல்லாத கட்டம் போட்ட சட்டை பாக்கெட்டிலிருந்து கத்தரி சிகரெட் ஒன்று எடுத்து எடுப்பாயிருந்த முன் பற்களில் கடித்துக்கொண்டான். திரும்பி பார்க்க ஒரு அல்லக்கை கொளுத்தியது. நிதானமான ஆட்டத்துடன் நடந்து சென்று நியூ பிரியா நைட் கடை மேஜையின் மேல் தாவி ஏறி உட்கார்ந்தான். ஒரு மணி நேரமாக ரவுண்டு கட்டியதில் பஸ் ஸ்டாண்ட் சுற்றி இருந்த அனைத்து கடைகளையும் ஷட்டர் போட வைத்திருந்தான் மணி.
"என்னாடா ஆச்சு?"
"ஒன்னும் தெரியலண்ணே..."
"எப்ப சொல்றாங்களாம்?"
"ஆரம்பிச்சு ஒரு மணி நேரத்தில தெரிஞ்சிடுமாம்..."
மணி பதினொன்னரை ஆயிற்று. வெளியூரில் இருந்து வந்த அரசுப் பேருந்து சொற்ப பயணிகளுடன் பஸ்ஸ்டாண்ட் வாசலில் இருந்த ஸ்பீட் பிரேக்கர்களில் மூன்று முறை குதித்து உள்ளே நுழைந்தது. "வீல்...வீல்" என்று விடாமல் அழுத ஒரு கைக்குழந்தைக்கு மில்க் பிக்கீஸ் பாக்கெட் கிடைக்குமா என்று நாலாப்புறமும் கண்களை அலைபாயவிட்டு பார்த்தாள் ஒரு பாலூட்டும் வயது அம்மா. ஒரு ஈ காக்காய் இல்லாமல் பஸ்ஸ்டாண்ட் வெறிச்சோடிக் கிடந்தது. கடைகள் ஷட்டர் போடப்பட்டிருந்தன. சுமையில்லாமல் பஸ்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. பயணிகள் நிழற்குடையில் ஏகாந்தமாக ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். ஒரு கரிய சொறி நாய் வாலை குழைத்துக்கொண்டு சாக்கடை ஓரமாக ஒடிட்று. குமார் நியூஸ் மார்ட் வாசலில் மாட்டியிருந்த தலைவர் படத்துடன் "ஆர்பாட்டம்... கைது" செய்தி போட்ட தினசரிகளின் போஸ்டர்கள் மட்டும் வீதியில் விட்ட அனாதையாக தொங்கிக்கொண்டிருந்தது. "ம்..ம்... ச்சரி...ச்சரி.. ராஜால்ல .. ம்.ம்.ம்.ம்.... அழாத..... அம்மா வாங்கித்தரேன்.ம்.ம்....ச்சரி.. " என்று தோளில் போட்டு முதுகில் தட்டி சமாதானம் சொல்லியவாறு தூக்கிக் கொண்டு போனாள். டீ ஷர்ட் ஜீன்ஸ் போட்ட வாலிபர்களும், வேஷ்டி மற்றும் புடவை கட்டிய வயதானவர்களும், இரண்டு மூன்று ரெகார்ட் நோட்டுகளை மார்புக்கு நேர் அணைத்த தாவணி மாணவிகளும், அசைந்து ஆடி செல்லும் பிள்ளைத்தாச்சிகளுமாய் ஆளுக்கொரு திசையில் நடந்து கலைந்து மறைந்தார்கள். மீண்டும் பஸ்ஸ்டாண்ட் கழுவி விடப்பட்ட இழவு வீடு போல நிசப்தமாய் இருந்தது.
பஸ்ஸ்டாண்ட் காம்ப்ளெக்ஸ்ன் அரதப் பழசான மணிக்கூண்டு கடிகாரத்தில் பெரிய கையும் சின்ன கையும் இணைந்து நின்றது. உர பாக்டரியில் முதல் ஷிப்டு முடிந்து "ஊ..ஊ...ஊ..." என்று சங்கு ஊதினார்கள். ஜன சந்தடியிலாத அந்த பேருந்து நிலையம் அந்த சங்கொலியிலும் எழும்பாமல் தூங்கிக் கொண்டிருந்தது.
"அண்ணே..முடிஞ்சிடுச்சு..." என்று ஒரு பக்க கைலியை தூக்கிப்பிடித்துக் அந்த சங்கிற்கு மேலே கூவிக்கொண்டே ஓடி வந்தான் "மாங்க்" மருது. ஓல்ட் மாங்க் தான் அவனுக்கு பிரியமான பானம்.
"என்னாடா?"
"நம்ம தலவரு சொல்றத மூனு மாசத்ல செய்துரலாம் அப்படின்னு ஒத்துக்கிட்டாங்களாம். அதனால நம்மாளு கேசை வாபஸ் வாங்கிட்டாரு"
காலையில் அடித்த சரக்கின் தீவிரம் இரத்தத்தில் குறைய குறைய நிலத்தில் இருந்து ஓரடி பறந்தவன் இறங்கி மெதுவாக நடந்து தலைவர் வீட்டு பக்கம் வந்தான். வாசலில் நின்ற வெள்ளை நிற அம்பாசிடர் மூக்கில் கட்சி கொடி தொங்கியது. பிரம்மாண்டமான வாசல் திண்ணை பக்கத்தில் இருந்த மரக்கலர் தூண் ஓரமாக சாய்ந்தான் க.மணி. தலைவர் யாரோடோ உரக்க சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு சில நிமிஷங்களுக்கு பின்னர் போதை முற்றிலும் தெளிந்து போகும் அளவிற்கு சில விஷயங்கள் காதில் விழுந்தது.
"சரி ..சரி... நீங்க சொன்னீங்க... நான் சரின்னுட்டேன்... விடுங்க"
"......."
"ஆமா...ஆமா.. எல்லாம் நம்ம பயலுக.. பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை.. சும்மா கடை அடைப்பு தான்"
"......."
"என்ன ஐநூறு ஆயிரம் தூக்கி விசிறினா போதும். எல்லா பயலும் சொம்புதூக்கிங்க..நாய் மாதிரி கவ்விட்டு ஓடிப் போய்டுவானுங்க... ".
"......"
"என்னது கொள்கையா? என்ன்ட கேட்பாங்களா.. அதான் மூனு மாசம் சொல்லியிருக்கேனே... அப்ப பார்த்துக்கலாம்.."
"....."
"நீங்க எதுக்கும் அவசரப்பட வேண்டாம். முடிஞ்சப்ப செய்யுங்க. தண்ணீ தொட்டியும் அவனுங்க தெருவுக்கு ரோடும் வெளக்கும் பிறகு பார்க்கலாம்..."
"......"
"சே. சே.. மன்னிப்பா... நான் தான் உங்களை கேட்டுக்கணும். அப்புறம் அந்த இருவது ரூபா.. பேங்க்ல வேண்டாம்.. கைல கொடுத்துடுங்க... செலவுக்கு சுலபமா இருக்கும்.."
தலைவரின் டீல் கேட்டு லெமன் சோடா சாப்பிட்டது போல தெளிந்தான். தலையை உதறிக்கொண்டு நேரே வீட்டுக்கு புறப்பட்டான். வீட்டின் முன்னால் ஒரே தெரு ஜனங்களின் கூட்டமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் அவசரமாக ஓடினான்.
"மணீ.. நம்பம்மா நம்ம எல்லோரையும் விட்டுட்டு போய்ட்டாடா....ஐயோ..... " என்று அழுத தங்கையிடம் "என்னாச்சு?" என்றான்.
"காலையில அம்மா கம்மாய்க்கு போய்ட்டு வரும்போது ஏதோ கடிச்சிருச்சு. முள் குத்திடிச்சுன்னு நினைச்சுகிட்டு சும்மா இருந்துடிச்சு. கொஞ்ச நேரம் களிச்சு குமுதா எனக்கு பட படன்னு வருதுடீ-ன்னுது. பக்கத்துல வாசுதேவன் டாக்டர்ட்ட தூக்கிகிட்டு ஓடினோம். குத்துனது முள் இல்லை, பாம்போ தேளோ, விசம் ஏறிடிச்சு., அவசரமா ஒரு ஊசி போடணும்னு எளுதி கொடுத்தாரு. நீ பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற எல்லா கடையையும் அடிச்சு மூடிட்ட. சுகம் மெடிக்கல்ஸ்ல தான் அந்த மருந்து இருக்குமாம். கட பூட்னதாலே மருந்து வாங்க அளகு அக்கா தம்பி நல்லூருக்கு ஓடினான். அவன் போய் வாறதுக்குள்ளே உசிர் போச்சண்ணே.. நம்மளை அனாதையா விட்டுட்டு போய்ட்டான்னே..." என்று மீண்டும் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.
எல்லா காரியங்களும் முடிந்து வேதனை தீர இரவு டாஸ்மாக்கில் புண்பட்ட மனதை ஒரு ஃபுல் அடித்து ஆற்றிவிட்டு சுகம் மெடிக்கல்ஸ் பக்கத்தில் இருக்கும் மூடிய கடையின் வாசலில் குப்பைகூளங்களோடு கட்டையாக மல்லாந்திருந்தான் கட்டை மணி. வாயோரத்தில் எச்சில் ஒழுகி ஈ மொய்த்தது. பஸ் ஸ்டாண்ட் கருப்பு சொறி நாய் குனிந்து அவனை மோப்பம் பிடித்து விட்டு ஓடியது.
பட உதவி: http://www.hindu.com/
-
பட உதவி: http://www.hindu.com/
-
21 comments:
கடைநிலை தொண்டர்களின் கதியை, அழகாய் சொல்லி விட்டீர்கள்
என்னாச்சி.. செண்டிமெண்டு பிச்சி பெடலெடுக்குது?
பாவப்பட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை. சிலரை நேரே பார்த்திருக்கிறேன். நன்றி சை.கொ.ப.
மாதவா... விரைவில் ஒரு காதல் கதை.. ;-)
கதை சென்டிமென்ட்டாக,அருமையாக இருக்கிறது. உங்களுடைய ஊரு மன்னார்குடியா?
வாழ்த்துக்கு நன்றி ஜிஜி. அதெப்படி உங்களுக்கு தெரியும்? ;-)
கதை நன்றாக இருந்தது ஆர்.வீ.எஸ். தன் வினை (தன்னை) அன்னையை சுட்டு விட்டது. இப்படியும் தான் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்?
ஆமாம் மோகன்ஜி. நிறைய பேர் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள்.
நம்ம பத்து எங்க காணாமே போய்ட்டார்?!!??
ரவுடித்தனத்தை நேர்முக காட்சியாக கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்....சீரியஸ் கதையும் நன்றாக வருகிறது சிரியஸ் கதையாளர் ஆர்.வி.எஸ்க்கு.....
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....இது உணரும் அளவுக்குண்டான பக்குவத்தை தொலைத்தவர்கள் தான் அந்த கேடுகெட்ட தொழிலுக்கு வருகிறார்கள்.....இதை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலில் தண்டனை கிடைக்கச்செய்யவேண்டும்......
வியர்வைத்துளிகளின் வேதமா இது!! அருமை...
தலைவர் சொல்லைத் தட்டாதே?
இயல்பு நடையோடு வாழ்வியல் சொல்லும் நல்லதொரு கதை.இதன் கரு புனைவாய் இருக்க முடியாது.நீங்கள் பார்த்த அல்லது கேட்ட அனுபவமாய்த்தான் இருக்க முடியும் ஆர்.வி.எஸ்.
சொன்ன விதமும் அற்புதம்.பாராட்டுக்கள்.
சீரியஸ் சிரியஸ் எப்புடி இப்புடி.... பத்து வார்த்தைகளின் வித்தகர் நீங்கள்.
நன்றி ஆதிரா..
நன்றி தலைவரே...
பாராட்டுக்கு நன்றி ஹேமா...
தலைவர்தான் மேல்...(ஆமாம் அம்மா ஃபீ மேல்தானே....!)
ஸ்..ஸ்..ஸ்.... அப்பா... ராமச்சந்திர மூர்த்தி... தாங்கலையே...
அவங்க எப்ப முழிச்சுக்குவாங்க?
தெரியலையே ரிஷபன் சார்!! பிஸ்கட் தூக்கிப் போட்டு வெளியே வாலாட்ட வெச்சுடறாங்க.. என்ன பண்றது? :-((
பின்றீங்க ஸ்ரீராம்.. ஹாட்மெயில் நிறுவுனர் பத்தி இப்படி ஒரு ஜோக் அடிபட்டுக்கிட்டிருந்துச்சு. நான் தான் 'ஹாட்மேல்' கண்டுபிடிச்சேன்னு சொல்லிக்கிட்டிருப்பாராம்.. என்ன பண்றாரு இப்போ?
Post a Comment