Sunday, August 15, 2010

காந்தி மகானின் சுதந்திர தின அதிரடி விஸிட்

Gandhiநாதுராம் கோட்ஸே காந்தியை போட்டுத்தள்ளிய பிறகு அந்த ராட்டையும் கையுமாக மேலுலகம் சென்றார். எவ்வளவுதான் எமதர்மராஜாவின் கிங்கரர்கள் எடுத்துவரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியும் அப்போதும் சத்யாக்ரஹமாக போராடி அங்கும் எடுத்துக் கொண்டு போய் அதை ஓட்டி நூல் நூற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் அங்குள்ள ரூல்ஸ் படி அவருக்கு தனியாக பிரத்யேக ஆடைகள் கொடுத்து டாக்ஸ் கட்டுபவருக்கு ஜெயிலில் டி.வி, பெட் போன்ற சலுகைகள் சில கிடைப்பது போல Late.எம்.கே.காந்தியை விசேஷ பிரிவில் சகல மரியாதையோடு வசதி வாய்ப்பாக வைத்திருந்தனர். அவருடைய நற்பண்புகளினாலும் சிரித்தால் பொக்கை வாயில் தெரிந்த இரண்டு பற்களினாலும் மகிழ்ந்த எமலோக செக்யூரிட்டி அதிகாரி அவர் அரையாடையுடன் பாடுபட்டு வாங்கிக்கொடுத்த சுதந்திர இந்தியாவை பூத உடலோடு அவர் பார்க்க ஏற்பாடு செய்து அவருக்கு கம்பனியாக அல்பாயுசில் உயிர்நீத்த இரண்டு இளசுகளையும் சேர்த்து ஒரு Incredible இந்தியா டூர் அனுப்பி வைத்தார். எல்லா கதைகளிலும் வருவது போல, இவர்கள் பூலோகத்தில் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்கள், ஆனால் இவர்களுக்கு எல்லோரையும் பார்க்கலாம். 
மகாத்மாவின் சுதந்திர இந்தியா சுற்றிப்பார்க்கும் விஸிட் இதோ....

ஒரு விசேஷ தனி புஷ்பக விமானத்தில் நேரடியாக புதுடில்லியில் வந்து இறங்கியபோது, மன்மோகன் சிங் புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி பின் நின்று நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றிக்கொண்டிருந்தார். காந்தி தன்னுடன் வந்த அந்த இரு இளைஞர்களை ஏன் என்பது போல ஒரு கேள்விப் பார்வை பார்த்தார். புரிந்துகொண்ட இருவரில் ஒருவன் கனைத்துக்கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தான் 

"நேஷனல் ஃபாதர், கோட்ஸே உங்களை சுட்டுத் தள்ளியவுடன், எல்லா அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் ஒரு கோட்ஸே வந்துடுவானோ அப்படின்னு ஒரு பயம் வந்துவிட்டது."
"அதனால..." என்று வினவினார் காந்தி.
"அதனால..உங்க காலத்துல ரிவால்வர், இப்ப இதுல நிறைய அட்வான்ஸ்சுடு டெக்னாலஜியெல்லாம் வந்துடிச்சு. ரொம்ப தூரத்திலேர்ந்து லென்ஸ் வச்சு குறிபார்த்து காக்கா சுடர மாதிரி சுடலாம், இல்லைனா தற்கொலை படை செட் பண்ணி வாழ்த்தி மாலை போடறமாதிரி பக்கத்தில வந்து பாம் வெடித்து மேலோகத்து போகிறவரைக்கும் பத்திரமா பாடிகாடா கொண்டுபோறாங்க. இதுலேர்ந்தேல்லாம் தப்பிக்க தான் இதுமாதிரி."

விஷயத்தின் தீவிரம் உணர்ந்த காந்தி பயந்து போய்,  "வாங்கப்பா.. நாம இந்த இடத்தை காலி பண்ணிடலாம். அப்படியே ஒரு ரவுண்டு போலாம் வாங்க..." என்று அந்த இரு இளைஞர்களோடும் நடையை கட்டினார்.
ஒரு குவிக் விசிட்டாக மும்பை போனவர் அங்கே டாடாவின் தாஜ் மஹால் ஹோட்டல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் இன்று மறுதிறப்பு விழா காண்பதை பார்த்தார். அப்படியே வெஸ்ட் பெங்கால் பக்கம் செல்லலாம் என்றால் வழியில் இரண்டு பேர் மாவேயிஸ்ட் தாக்குதல்களில் உயிரிழந்த தனது சொந்தபந்தங்களைப் பற்றி பேசியதும் மிரண்டு போய் அலறிப்புடைத்து கடைசியாக தெனிந்தியா நோக்கி நடையை கட்டினார். 

ஹைதராபாத் சென்றால் அங்கே ரீசெண்டாக ஹெலிகாப்டரோடு கீழே விழுந்து மேலே வந்து தன்னுடன் சேர்ந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பையன் ஜெகன் ஊரெங்கும் பாதயாத்திரை செல்வதாக பேசிக்கொண்டார்கள்.  அவருக்கு உடனே தான் சு.போராட்டத்தின் போது தண்டி யாத்திரை சென்றது ஞாபகம் வந்தது. கூட வந்த பாடிகாட் இளைஞர்களிடம் என்ன யாத்திரை இது என்று கேட்டார். அதில் வயதில் மூத்தவன் சொன்னான்
"இதுக்கு பேரு அரசியல் ஸ்டண்ட் யாத்திரை. இந்த ஆந்த்ராவுல அடிக்கடி அரசியல்வாதிங்க இதுபோல நடைப்பயணம் கிளம்பிடுவாங்க. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான்  நடிகர் சிரஞ்சீவி ஒரு பெரும் யாத்திரை போய் மக்களை சந்திச்சாரு. குறைகளை நேரடியாக கேட்டறிஞ்சாரு."
எங்கேயாவது நாம அதிசயமா அவங்க கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுபோய் கூட ஜோடியா நடக்கரத்துக்கு கூட்டிக்கொண்டு போய்விடப்போகிறார்கள் என்று அவசர அவசரமாக "யப்பா... வாங்கப்பா பாரதி வாழ்ந்த தமிழ்நாட்டுக்கு போகலாம்.." என்று கூப்பிட்டவரை கைத் தாங்கலாக கூட்டிப் போனார்கள் அந்த இளைஞர்கள். உயிரோடு இருந்தபோது இருபுறத்திலும் பெண்கள் புடைசூழ தன்னை இதேபோல அழைத்துப்போனதை நினைவு கூர்ந்தார் காந்தி.

சென்னையில் சென்ட்ரல் அருகில் வந்திறங்கியவுடன் "நல்ல கதையா கீதே. மொந்தா நாள் ஊட்டாண்ட வந்து குந்திகுனு அவ்சரம்ன்னு கை நீட்ன, 500 ரூவா குட்தேன்ன்ல, அது என்ன காந்தி கணக்கா?" என்ற ஏற்ற இறக்கங்களுடன் பாடி கேட்ட உள்ளூர் பாஷை உரையாடலில், கடைசி வரியை கேட்டு அதிர்ந்துவிட்டார்.  "என்னப்பா. என் பேர் சொல்லி ஏதோ கணக்கு அப்படின்னு சொல்றாங்களே.. என்ன இதெல்லாம்". கழுத்து வரைக்கும் பங்க் வைத்த இளைஞன் கலகலவென சிரித்தேவிட்டான்.
"அதாவது சார்... இங்கெல்லாம் கடன் கொடுத்து வரலைனா அதுக்கு பேர் காந்தி கணக்கு.." என்றான்.
அதிர்ந்தேவிட்டார் காந்தி. My Experiments With Truth புஸ்தகத்தில் கூட கடன் வாங்கி திருப்பி கொடுக்காததாக தாம் எழுதவே இல்லையே. எப்படி இவர்கள் வராக்கடனுக்கு தன் பெயர் வைக்கலாம் என்று நொந்துபோனார்.

அப்படியே நேராக காந்தி மண்டபம் அழைத்துப் போனார்கள். ஜீன்ஸ், டீ ஷர்ட், பான்ட், புடவை, சுடிதார், வேஷ்டி என்று பலவகையான மோஸ்த்தர்களில் இணை இணையாக நெருக்கமாக உட்கார்ந்து பரிபாஷித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஈ எறும்பு கூட இருவருக்கும் இடையில் செல்லமுடியாத அன்யோன்னத்தில் இருந்தனர். காந்தி அந்த இளைஞர்களிடம் இது என்ன இடம் என்று கேட்டார். 

"இதற்க்கு பெயர் காந்தி மண்டபம். உங்க பேர்ல, நீங்க சுதந்திரம் பெற்றுத் தந்ததை மக்கள் மறக்காமல் இருப்பதற்காக, உங்க பேர்ல ஒரு மண்டபம் கட்டி, உள்ளே நிறைய புகைப்படங்கள் அறிய பல தகவல்களை சேகரித்து வைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருக்காங்க."
"அப்ப உள்ளே போய் பார்க்காம ஏன் எல்லோரும் வெளியே உட்கார்ந்திருக்காங்க.."
"நீங்க ரொம்ப வெகுளி சார். அவங்க வீட்லேர்ந்து சுதந்திரமா இருக்கனும்ன்னு தான் இங்க வந்து உட்கார்ந்திருக்காங்க.. நீங்க போய்...ஹி ஹி...."
ஒரு ஜோடியை பக்கத்தில் சென்று பார்த்த காந்தி அவர்கள் கோலம் கண்டு அதிர்ச்சி அடைந்து மூர்ச்சை அடையும் நிலைக்கு வந்துவிட்டார்.  இருவரும் சேர்ந்து அவரை அங்கிருந்து மெரீனா பீச் அழைத்துச்சென்றனர்.

காந்தி சிலை அருகே வந்தார்கள். தன் சிலையின் இரு ஓரத்திலும் இரண்டு பேர் முழு போதையுடன் ஆடை கலைந்த நிலையில் வாயில் எச்சில் ஒழுக படுத்திருந்தார்கள். 
"யாரப்பா இவர்கள்.." என்றார் காந்தி.
"இவங்களா.. ஃபுல்லா சரக்கு அடிச்சிட்டு மட்டையாயி கிடக்கானுங்க.."
"கள்ளுண்ணாமை பற்றி நான் நிறைய பேசியிருக்கேனே..."
"இப்ப நிலைமை உங்களுக்கு தெரியாதா. கவர்மேன்ட்லேயே சாராயக் கடை திறந்து எல்லோருக்கும் நல்ல சரக்கா பார்த்து பார்த்து ஊத்தறாங்க."
"அடப் பாவமே.."
"ஆனா.. உங்களோட பொறந்தநாளைக்கு, நீங்க வாங்கி கொடுத்த சுதந்திர தினம் இந்த நாள்லேல்லாம் கடையை பூட்டிடுவாங்க."
"அப்பா.. அப்ப அந்த இரண்டு நாளைக்கு யாரும் குடிக்க மாட்டாங்களா.?"
"நீங்க வேற.. அன்னிக்கு தான் சரக்கு பிச்சிகிட்டு போகும். கடையை மூடிட்டு பக்கத்துல ஒளிஞ்சு நின்னு 100 ரூபா சரக்கை 150 ரூபாய்க்கு விப்பாங்க. மக்களும் வாங்கி வாங்கி குடிப்பாங்க. நல்ல லாபம் உங்களால."

ஒரு ஃபுல் அடித்தது போன்ற உணர்வோடு கடற்கரையில் தள்ளாடியபடி ஒரு ரவுண்ட் போனார் காந்தி. இரண்டு பேர் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். 
"காந்தி தாத்தா கம்பு ஊனி நிறைய பேரோட நடந்து போவாரே அந்த படம் போட்ட நோட்டுடா. அசல் அப்படியே காந்தி உயிரோட வந்தா மாதிரி இருக்கு. கவலையேபடாதே. இந்த முறை மாட்டிக்கவே மாட்டோம்."
அப்பாவி காந்தி, இந்தமுறையும் இளைஞர்களை உதவிக்கு அழைத்தார். 
"நான் கம்பு ஊனி நடக்கற படத்தை வச்சி இவங்க என்ன பண்றாங்க.." என்றார்.
"உங்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமா, உங்கள் படம் போட்ட 500 ரூபா கரன்ஸி இந்திய அரசாங்கம் வெளியிட்டு இருக்காங்க. அதை அப்படியே அச்சு அசலா இருக்குற மாதிரி நகல் நோட்டு தயாரிக்கரவங்க அந்த ரெண்டு பேரும். அதாவது எல்லோருக்கும் புரியற மாதிரி சொல்லனும்ன்ன கள்ள நோட்டு அடிக்கறவங்க."

துப்பாக்கியால் சுடப்பட்டு மரித்தபோது "ராம் ராம்.." என்று சொன்ன காந்தி, இதையெல்லாம் கண்டு தலைசுற்றிப் போய் மறுபடியும் ஒருமுறை "ராம் ராம்.." என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு சொல்ல, நேரம் முடிந்தது என்று மேலேர்ந்து வந்து அழைத்துக்கொண்டு போனார்கள்.

பின் குறிப்பு: காந்தி மேலோகம் திருப்பி செல்லும்போது இந்தியா பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் ராமச்சந்திர குஹாவின் "INDIA AFTER GANDHI" புஸ்தகம் வாங்கி சென்றதாக தகவல்.

பட உதவி: www.21stcenturysocialism.com

7 comments:

பெசொவி said...

வரிக்கு வரி அசத்தல்! வாழ்த்துகள், RVS!

Madhavan Srinivasagopalan said...

Very nice article.. I enjoyed reading.
இன்றைய இந்தியாவின் நிலையை அப்பட்டமாக வெளிச்சமிட்டு காண்பித்துவிட்டீர்கள்..
எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. அனால் வித்தியாசமான முறையில் சொல்லியுள்ளீர்கள்.
உங்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். .. (சம்பிரதாயத்தை விடமுடியவில்லை )

RVS said...

ஏதோ பெரியவங்க ஆசீர்வாதம். நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

சும்மா சுதந்திரமா சுதந்திர தின நல்வாழ்த்து சொன்னதற்கு நன்றி மாதவா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Senthil Kumar said...

இன்று (16th August) பிறந்தநாள் கொண்டாடும் மன்னார்குடி மைந்தன் திரு.R.V.S அவர்களை வாழ்த்த
வயது இல்லாதலால் வணங்குகிறேன்.

RVS said...

Thanks Senthil.

anbudan RVS

வெங்கடேசன்.செ. said...

வருசா வருசம் வெளியிடனும். ஒரு எழுத்துக்கூட மாத்தவேண்டியதில்லை. ஆனா காந்தி மறுபடியும் வரமாட்டார். வரவே மாட்டார்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails