Sunday, July 25, 2010

அக்கரையில் இருக்கும் வீடு

பாக்கியம் ஆத்தா பொட்டிக்கடையில் தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடும் பக்கத்து வீட்டு அம்மு சொல்லித்தான் அது தெரியும் சுந்தருக்கு. சுந்தரை அரை மணிக்கு ஒருதரம் "மாமா அது நெஜமா? அப்படியெல்லாம் இருக்குமா?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டு துளைத்துவிட்டது. அம்மு ஐந்தாம் வகுப்பு படிக்கும் சின்னக் குட்டி. அதனிடத்தில் இந்த ஆத்தா ஏன் அப்படியெல்லாம் பேசுகிறது. அம்மு இன்னமும் ஆத்தா சொன்ன மோகினிப் பிசாசை நினைத்து பயந்து கொண்டிருப்பது அதன் கண்களில் தெரிந்தது. பயந்த அம்முவை எதைப் பார்த்தும் மிரளவோ பயப்படுவோ கூடாது என்று தேற்றுவதற்காக தான் படித்த ரஜ்னிஷ் கதை ஒன்றை சொன்னான் சுந்தர். பயத்தினால் கடவுளை அடையமுடியாது என்ற கதையை அம்முவுக்காக வேறுவிதமாக சொல்ல ஆரம்பித்தான்.
ஒரு ஊர்ல சுடுகாட்டை தாண்டி ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம். அவன் ரோட்டில கிடந்த ஒரு அப்பா அம்மா இல்லாத அனாதைப் பையனை எடுத்து வளர்த்தனாம். எப்போதும் அந்தப் பையன் சுடுகாட்டிலேயே விளையாண்டுகிட்டு இருப்பானாம். நாள்பூரா பொனத்தைக் கொண்டு வந்து பொதைக்கறதும் எரிக்கறதுமா அந்த சுடுகாடு ஒரே பிஸியா இருக்குமாம். அந்தப் பையன் எதை பத்தியும் கவலைப்படமா ஜாலியா பொழுதைக் கழிச்சுகிட்டு ஓடியாடிகிட்டு இருப்பானாம். நாளாக நாளாக அவனும் பெரியவனா ஆயிட்டானாம். பெரியவனா ஆனதும் அவனை ஒரு நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும் அப்படின்னு ஆசைப்பட்டு ஊர்ல ஒரு பெரிய மனுஷனைப் பார்த்து சிபாரிசுடன் அந்தப் பையனை ஒரு பள்ளிகூடத்துல சேர்த்துட்டானாம் அந்த பிச்சைகாரன். முதல் நாள் ஸ்கூலுக்கு போகும்போது ஒரு கருப்பு கயிறை எடுத்து வந்து அந்தப் பையன் கையில் கட்டினானம் அந்த பிச்சைக்காரன். அதுக்கு அந்தப் பையன் இதை ஏன் என் கையில் கட்றீங்க அப்படீன்னு கேட்டானாம். அதுக்கு அந்தப் பிச்சைக்காரன் இல்ல நீ போற சுடுகாட்டு வழியில நிறைய பேய் பிசாசெல்லாம் இருக்கும் அதனால இந்தக் கயிறை கட்டிகிட்ட, அதெல்லாம் ஓடியே போய்டும்ன்னானாம். இந்தக் கயிறுல என்ன இருக்கு அப்படீன்னு அந்தப் பையன் கேட்டானாம். இல்லைப்பா இந்தக் கயிறு சாமி மாதிரி, அதனால இதைப் பார்த்தா அந்த பேய் பிசாசெல்லாம் ஓடிப் போய்டும் அப்படின்னு அந்தப் பிச்சைக்காரன் சொன்னான். அப்ப அந்தப் பையன் கேட்டான் இந்தக் கயிறுல இருக்குற சாமியை பார்த்து பேய் பிசாசெல்லாம் பயப்படுதே, அப்பன்னா இந்த சாமி எவ்வளோ பெரிய பேய் பிசாசா இருக்கணும் அப்படின்னானம். பிச்சைக்காரன்னால வாயே பேச முடியலையாம். 

அதனால பேய் பிசாசு அப்படின்னு எதுவும் இல்லை. பேய் பிசாசுக்கும் பயப்பட வேண்டாம், சாமிக்கும் பயப்படவேண்டாம். எல்லோருக்கும் உண்மையா அன்பா இருந்தா போதும் என்று சொல்லி கதையை முடித்தான் சுந்தர். அம்மு கதையினால் கொஞ்சம் புத்தி மாறி சமாதானமடைந்தாள்.
சுந்தர் நேராக ஆத்தா கடைக்கு சென்றான். என்ன விஷயம் என்று விசாரிக்கையில், ஆத்தா தினமும் ராத்திரி பன்னிரண்டு மணியளவில் பாமணிக் கரையோரத்தில் "ஜல் ஜல்" என்று கொஞ்சும் சலங்கை ஒலி கேட்பதாகவும், மல்லிகை கொள்ளையின் நடுவில் உட்கார்ந்து இருப்பது போல மல்லிகைப்பூ மனம் மூக்கைத் துளைத்து ஆளைத் தூக்குவதாகவும் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு பக்கிரி கூட முந்தாநாள் மதிய வேளையில் காவாய் பக்கத்தில் வெளிக்கு இருக்க போய்விட்டு வந்து "அதை"ப் பார்த்து பயந்து ஜுரம் வந்து மாரியாத்தா கோயில் நல்லக்கண்ணு பூசாரியிடம் மந்திரித்து வந்ததாக மேலதிக தகவல் வேறு சொல்லிற்று.
ghost
திலகம் அக்கா தெருவில் கொஞ்சம் தைரியமான ஆள். பத்து பதினொன்று மணிக்கு கூட ரோட்டில் தனியாக இங்குமங்கும் உலாத்திய வண்ணம் இருக்கும். அக்காவிடம் இது பற்றி விசாரித்ததில், நிஜமாகவே ஒரு வெண் புகை போல ஒரு தோற்றம் ஆற்றிற்கு அக்கரையில் இருக்கும் பாழடைந்த பட்டாமணியார் வீட்டிலிருந்து இக்கரைக்கு உலாவுவதாக தன் புருஷன் சொன்னதாக சொல்லியது. தினமும் முழு போதையில் அர்த்தராத்திரியில் வீடு திரும்பும் திலகம் அக்கா புருஷன் லாரி டிரைவர் கண்ணையன் கண்ணுக்கு டாங்கர் லாரி விடும் புகை பிசாசாகத் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டான். 

தமிழரசி அண்ணன் மதி எப்போதும் கயித்துக் கட்டிலை வீட்டிற்கு வெளியே போட்டு அரைக்கு கைலியை கட்டிக்கொண்டு மேலே சட்டையில்லாமல் தூங்கும் இருபத்தைந்து வயது கட்டிளம் காளை. பக்கத்தில் தலைச்சேரியில் போன வாரம் தான் பெண் பார்த்து பரிசம் போட்டு வரும் வாரம் கல்யாணத்திற்கு தேதி குறித்தார்கள். மேலும் மதியிடம் மோகினி துப்பு துலக்குகையில், நேற்று இரவு வெளியே படுத்திருந்ததில் நடு இரவுக்கு மேல் ஏதோ ஒரு உருவம் அவன் மேல் முழுவதுமாக படுத்து அழுத்தியதாகவும், அப்போது கை காலை அசைக்க முடியவில்லை என்றும், தானாக கைலி மேலே தூக்கப் பட்டதாகவும், யாரோ தன் மேலே ஏறி முன்பின் அசைந்து கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் அந்த கெட்டகாரியம் செய்ததாகவும், அதற்க்கப்புறம் கைலி கொஞ்சம் ஈரமானதாகவும் தொடை நடுங்கினான். மதிக்கு மூன்றுமுடிச்சு போடும் தருணம் நெருங்கி வருவதால் அதே ஞாபகமாக இருக்கிறான் என்றும், அவனுக்கு சொப்ன ஸ்கலிதம் இருக்கலாம் என்றும் நினைத்தான் சுந்தர். மோகன் லாட்ஜில் அடுத்த காளிமுத்து விஜயத்தில் கொண்டுபோய் காண்பிக்க சொல்லி மதியை கேலி பேசிவிட்டு வீடு வந்தான் சுந்தர்.

சரியாக பதினொன்று ஐம்பத்தைந்துக்கு அலாரம் வைத்துக் கொண்டான். ஊர் பார்த்த அந்த மோகினியை இன்று தான் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். எழுந்து நேராக பாக்கியம் ஆத்தா கடை தாண்டி ஆற்றுக் கரையோரம் சென்றான். நல்ல கரு மை பூசிய இருட்டில் அக்கரையில் இருக்கும் பாழடைந்த பட்டாமணியார் வீட்டை பாத்துக்கொண்டே நின்றான். ஏதோ புகை போல பரவிய ஒன்று இந்தப் பக்கம் வருவது போல இருந்தது. கண்களை கசக்கி கொண்டு திரும்பவும் பாத்தான். சுத்தமான தும்பைப்பூ நிற வெள்ளை சேலையில், தலையிலிருந்து தரை வரை தொங்கவிட்ட மல்லிகை சரத்தை சூடிக்கொண்டு இந்தப் பக்கம் வருவது தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், அதற்க்கு காலே இல்லாமல் ஒரு இரண்டு இன்ச் தரையில் இருந்து அந்தரத்தில் மிதந்து வருவது புரிந்தது. ஒரே ஓட்டமாக நாலு கால் பாய்ச்சலில் பறந்து வந்து வீட்டினில் புகுந்தான். தயாராக வைத்திருந்தா அருவாள், செருப்பு மற்றும் துடப்பக்கட்டை போன்ற பேய் விரட்டும் பொருட்களை தன்னை சுற்றி கடை பரப்பி கண்களை இறுக மூடிக் கொண்டு தூங்கிப் போனான்.

இப்போதெல்லாம் பகல் வேளையில் கூட அக்கரையை பார்ப்பதை விட்டுவிட்டான் சுந்தர். எப்படியாவது இரவு பத்து மணிக்குள் வீடு திரும்பி, போன பாராவில் விரித்த கடையை தினமும் படுக்கையருகில் பரப்பி, பன்னிரண்டு மணிக்குமேல் வரும் இயற்கை அழைப்புகளை கூட நிராகரித்தான். ரொம்ப நாட்களுக்கப்புறம் தான் அந்தப் பட்டாமணியார் வீட்டை விற்க முயற்சிகள் நடந்த பொழுதில், அதை விலைக்குறைவாக வாங்குவதற்காக கட்டிவிட்ட மோகினிக்கதையில் தானும் ஏதோ எங்கோ எழுந்த புகையை மனோரீதியாக மோகினி நினைவில் இருந்ததால் அது என்று நினைத்து அந்தக் கதையில் தானும் பங்குபெற்றதை அறிந்து மிகவும் வெட்கப்பட்டான்.

பட உதவி: http://www.24x7mediaclips.com/ 
அந்தப் பாலக்கரை பேய் படமும் அதன் தொடர்பான பி.பி.ஸி செய்தியும் இந்தச் சுட்டியில் http://news.bbc.co.uk/local/northeastwales/hi/people_and_places/history/newsid_8176000/8176747.stm

3 comments:

சசிகுமார் said...

super friend

RVS said...

nandri sasi.

anbudan RVS

அப்பாதுரை said...

இந்தப் பேய் பிசாசு மோகினி விவகாரத்துலயெல்லாம் ஜாக்கிரதையா இருங்க.

(நேரமிருந்தா இதைப் படியுங்களேன்? நாகூர் 2012, கசம் சே!
பாதில எழுந்து போனா வாயிலயும் மூக்கிலயும் ரத்தம் வரும்னு இப்பவே சொல்லிடறேன்)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails