காலை ஆறு மணி உத்தராயணக் கதிரவனின் முன் சேர்ந்தார்ப்போல் இரண்டு நிமிடம் நின்றால் ஆங்காங்கே இழையோடும் பச்சை நரம்புகளுக்கிடையில் செங்குருதி தெரியும் நல்ல சிகப்பு நிறம், பருவக்காற்று தொட்டு இழுத்து போகும் நல்ல மலர்க்கொடி போன்ற தேசலான சரீரம், அடுத்தவரை வம்புக்கிழுக்கும்/துளைக்கும் துரு துரு கண்கள், அந்த துரு துருக்கள் எடுப்பாக தெரிய காலை மாலை இருவேளையும் ஒரு கையில் கண்ணாடி பிடித்து கண்ணோரங்களில் இட்டுக்கொள்ளும் ஐடெக்ஸ் கண் மை மீன்கள், அனவரதமும் வெட்டிவேர் கலந்த தேங்காய் எண்ணெய் தடவி திருவிளையாடல் நக்கீரன் கூற்றை தவிடுபொடியாக்கும் படிய வாரி பின்னிய கூந்தல், எப்போதும் முகத்தாமரை அணிந்திருக்கும் பல் தெரியாப் புன்னகை, கேள்விக்குறி காதுகளில் குடை ராட்டினம் ஆடும் ஜிமிக்கிகள், அரக்கு சட்டை, மஞ்சள் பாவாடை, சட்டைக்கு மேல் ஆடும் அன்னப்பறவை போட்ட தங்கச்செயின், கழுத்து மற்றும் முக பிரதேசங்களில் வாசனைக்கு நறுமணமாய் க்யூட்டிகூரா, பிறந்த குழந்தைகள் போடும் வெள்ளி அரணாக்கயிற்றை உருவி இரண்டு முத்து வைத்தார்ப்போல் இருக்கும் கொலுசுகள், சராசரி இந்திய பெண்டிர் சமயலறையில் எக்கி எடுக்கும் பொருட்களை நின்று கொண்டே எட்டும் உயரம் கொண்டவளின் பெயர் சுபா. கார்த்திக்கை கொள்ளை கொண்டவள்.
மேற்கண்ட பாரா வர்ணித்த நாலாம் வீட்டு பாரதி மீசை வாத்தியார் மகள் சுபாவின் அத்தனை பௌதீக விஷயங்களும் தனக்குள் ஏற்ப்படுத்திய ரசாயன மாற்றங்களினாலும், இங்கொன்றும் அங்கொன்றுமாக மூக்குக்கு கீழே எட்டிப்பார்த்த அந்த அரும்பு மீசையும் கார்த்திக்கை எப்போது வீட்டு வாசலில் வந்து நின்றாலும், படிக்கட்டுகளில் உட்கார்ந்தாலும், சைக்கிள் மிதித்து வெளியில் சென்றாலும், சக நண்பர்களுடன் வீதியில் நின்று பேசும்பொழுதும் வாயோடுவாய் இங்க்லீஷ் முத்தம் கொடுக்கும் காதலர்கள் போல தலையை அவள் வீட்டு பக்கமே சாய வைத்து, குறும்பு பார்வை பார்க்க வைத்தது. தலை திருப்பமுடியாத தருணங்களில் மனதோடு கண்கள் இரண்டும் அவள் இருப்பிடம் தேடி ஒருமுறை அவள் வீட்டு ஆளில்லா புழதி படிந்த திண்ணை வரை அலைபாய்ந்துவிட்டு மீண்டு வரும். யூனிபார்ம் அணியாத கூர்க்கா போல கார்த்திக் தன் தெருவை குறுக்கும் நெடுக்குமாக பலமுறை பலபேரோடு பலதருணங்களில் சைக்கிளில், தோளோடு தோள் கை போட்டுக்கொண்டு, கிரிக்கெட் மட்டையை ஆஞ்சநேயர் கதை போல தூக்கிக்கொண்டு சப்தமாக "டேய்... பாபு... நில்றா... நானும் வரேன்..." என்று கூவிக்கொண்டு இப்படியாக குட்டி போட்ட புஸ்ஸி போல அவள் கண்பட பலமுறை உலாத்தினான்.
போன புதன் கிழமை காலையில் நடந்து முடிந்த உலாத்தலில் நீலக் கலர் மரச்சட்டம் அடித்த அவள்வீட்டு வெளிக் கதவில் தொங்கிய வெண்கல நவ்தால் பூட்டால் கார்த்திக்குக்கு மதிய உணவு உள்ளே செல்ல மறுத்தது. "நேற்று கூட அவள் வீட்டில் பழியாக கிடந்தோமே. வாத்தியார் கூட ரெண்டு தடவை செட்டி கடைக்கு போகச் சொன்னாரே. யாருமே ஒன்னும் சொல்லலியே" என்று நவ்தால் பூட்டை பார்த்து கேட்டு விட்டு பாபுவிடம் விசாரிக்கலாம் என்று அவன் வீட்டில் கேட்டால் அவனும் இல்லை. பாபு பாட்டி குளிர் கால நடுநடுங்கும் குரலில் தட்டு தடுமாறி பேசியதில் கார்த்திக்கின் காதுகளில் விழுந்ததில் காலாண்டு விடுமுறைக்காக நான்கு நாட்கள் அவர்களுடைய கிராமத்துக்கு சென்றிருப்பதாகவும், கூடவே பாபுவும் கம்பெனியாக போயிருப்பதும் தெரியவந்தது. "அயோக்யப் பயல். இவன் என்ன தொடுப்பு கூடவே, இவ்ளோ படிச்சு படிப்பு சொல்லிக்கொடுக்குற வாத்தியாருக்கு தெரிய வேண்டாம் இவன் கூட வயசுப் பொண்ணை அனுப்பலாமா கூடாதான்னு" என்று சில்லி 65 சாப்பிட்ட எஃபக்ட்டுடன் வயரெரிந்து, வந்தவுடன் இவனை கொஞ்சம் கவனிக்கவேண்டும் என்று முடிவெடுத்தான் கார்த்திக்.
ஐந்தாம் நாள் காலை ஆயுத பூஜை. சுபாவின் சுபவரவு சுபமுகூர்த்த நாள். சைக்கிளை நன்கு குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து ஈர்க்குச்சியை தூரிகையாய் கொண்டு சந்தனத்தால் முன் பின் மட்கார்டுகளில் ம.செ வின் திறமை காண்பித்து அதை துளைத்து அம்பு விட்டு, தென்படும் இடங்களிலெல்லாம் குங்குமம் இட்டு ஒரு இரண்டு முழம் மல்லிப்பூவை மாலை போல் ஹான்ட்டில் பாரில் சுற்றி, அம்மன் கோயில் திருவிழாக்களில் இரவு முழுவதும் சைக்கிள் சுற்றும் வித்தைக்காரன் போல தெருவை சுற்றி சுற்றி வந்தான். பத்தாம் நம்பர் பஸ்ஸில் தெருமுக்கில் பகட்டான பட்டுப் பாவாடையில் அவள் வந்திறங்கியபோது மனசு அவனை விட்டு அந்த ப.பாவாடை பாப்பா பின் போனது. கூடவே அந்தக் கருங்காலியும் வந்தான். அரசல்புரசலாக ஒருநாள் அவனிடம் கூட தன் எண்ணத்தை பகிர்ந்திருந்தான் கார்த்திக். அது தெரிந்தும் கள்ளப் புன்னகை இதழ்களில் தெறிக்க "என்ன கார்த்திக் நாலு நாள் நல்லா பொழுது போச்சா..." என்று குசலம் விசாரித்தான் பாபு.
இதற்குமேல் பொறுமையாக இருந்தால் காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் தள்ளிட்டு போன கதியாகிவிடுமாகையால் எப்படியாது தனது லப்டப் அதிகரித்த காரணத்தை சுபாவிடம் சொல்லி அனுப்ப வேண்டும் என்று எண்ணி புறா,அன்னம் இல்லாத ஊரில் காக்கை காதல் தூது போகும் என்ற லாஜிக்கில் ஒரு நாள் அந்தரங்கமாக பாபுவிடம் நேரடியாக தன்னுடைய சுபாவை "சுபா கார்த்திக்" ஆக்கும் எண்ணத்தை பளிச் என்று தெரிவித்தான். அதற்க்கு தன்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன் என்று அறிக்கை வெளியிட்டு பேசும் மத்திய மந்திரி போல பேசி நேசக்கரம் நீட்டிய பாபுவிடம் சுபாவின் காதலிக்கும் எண்ணத்தை அறிந்துகொள்வதர்க்காக, சுபா தன்னை (அதாவது கார்த்திக்கை) காதலிப்பதாக இருந்தால் மாலை சரியாக ஆறு மணி அளவில் வீட்டு வாசலில் வந்து நின்றால் தன்னை காதலிப்பதாக எடுத்துக்கொள்வேன் என்று கார்த்திக் பாபு தூது அனுப்பினான்.
ஆதி காலத்து வெள்ளை வண்ண உட்புறம் கொண்ட வட்ட வடிவ சுவர்க்கடிகாரம் ஆறு முறை அடித்து கார்த்திக்கை வீட்டுக்கு வெளியே கொண்டு தள்ளியது. மிகவும் ஆர்வத்துடன், ஆசையுடனும் தலையை ஒரு கையால் ரஜினி ஸ்டைலில் கோதிக்கொண்டு அதே இரண்டாவது பாரா இ.முத்தம் பாணியில் ஸ்லோமோஷனில் தலையை திரும்பி பார்த்ததும் சங்கடத்தில் அதிர்ந்துபோனான் கார்த்திக். அந்த இடத்தில் சுபாவின் அம்மா ஆஜானுபாகுவாக கையை கட்டிக்கொண்டு கடைக்கண் பார்வை வீசி நின்றுகொண்டிருந்தார். நல்ல வேலை மீசை வாத்தியார் இல்லை. இவ்வளவும் செய்த கபடவேடதாரி பாபு கார்த்திக்கை பார்த்து "ஒருக்கால் அவுங்க அம்மா உன்னை லவ் பண்றாங்களோ" என்று கிண்டலடிக்க, சைக்கிளை கால்களால் தள்ளி ஓடிப் போய் அமர்ந்து பறந்தான் கார்த்திக். இரவு எட்டு மணி வாக்கில் கார்த்திக் வீடு திரும்பியபோது மீசை, மீ.சம்சாரம் போன்றோர் பஞ்சாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இனிமேல் அந்தப் பக்கம் கார்த்திக் தலைவைத்து படுக்கக் கூடாது என்று நாட்டாமையாகிய மீசை தீர்ப்பளித்து பஞ்சாயத்தை முடித்துக்கொண்டார். நீண்ட நாட்களுக்கு தினம் தினம் அந்த ஆறு மணிக் காட்சி கார்த்திக்கின் கனவுகளில் வந்து முதலில் தொந்தரவு செய்தது பின்பு சிரிப்பை தந்தது ஒரு ஜோக் போல.
(Q வில் நின்ற கார்த்திக்கின் காதலிகள் பாதியாக குறைந்தனர்)
பட உதவி: http://www.latestngreatest.net/
0 comments:
Post a Comment