என்னுடைய பதின்ம வயதுகளில் பதினொரு மணிக்காட்சி என்று எங்களூருகளில் பல விசேஷ படங்கள் சில பிரத்தியேக கொட்டகையில் மட்டும் போட்டு காட்டுவார்கள். மொத்தமே ஒரு மணி நேரம் அல்லது ஒரு அரை மணி சேர்த்து (கொஞ்சம் ஹிட் படம் என்றால்) மட்டுமே ஓடும். சேர்ந்தார்ப்போல் இருநூறு முன்னூறு பேர் உட்கார்ந்து பார்த்தால் அதிகம். முக்கால் வாசிப் பேர் கட்டம் மற்றும் பூப் போட்ட கைலி அணிந்து காலக்காட்சி யூனிபாஃர்மில் இருப்பார்கள். அதில் என்பது சதம் சிகரட், பீடி, சுருட்டு என்று ஏதாவது ஒரு லாஹிரி வஸ்த்து கொண்டு வெண்புகை பரப்பி தியேட்டரை தேவலோகமாக்குவர். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டாலோ அல்லது முகம் பார்த்து சிரித்துக் கொண்டாலோ, பழகியவராக இருப்பினும், படத்தில் கவனம் சிதறிவிடும் என்றெண்ணி முகத்தை "உம்" என்று வைத்துக்கொண்டு இழவு வீட்டுக்கு வந்ததுபோல் அமைதி காப்பர். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறைக்கால காலைகாட்சிகள் பண்டிகைகள் போலவே கோலாகலமாக இருக்கும். கொட்டகைகள் நிரம்பி வழியும். இண்டர்வல் அதிக பட்சம் பத்து நிமிஷம். இந்த மாதிரி படக் காட்சிகளில் எல்லோரும் ஓரினம். அதாவது முதல் இரண்டு என்று தரம் பிரித்து உட்காரவைக்கும் வகுப்பெல்லாம் கிடையாது. ஒரே கட்டணம் ஒரே வகுப்பு. சர்வமும் ஒன்றே.
இந்தக் காலைக் காட்சியில் தாரளமாக இடம் பெறுபவை யானை, என்ட ஸ்னேக ரோஸி, லயனம், ஆதி தாளம் போன்ற மலையாள மற்றும் கொஞ்சம் ஆங்கில திரைப்படங்கள் மட்டுமே. ஜெயதேவன், ஐ.வி.சசி போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த படங்கள் ஏராளம். இந்தப் படங்களில் நடித்து புகழ்பெற்ற டி.ஜி.ரவி போன்ற நாயகர்கள் நடித்த படங்கள் மினிமம் கியாரண்டி. அவர்களுக்கு ரசிகர் மன்றம் கூட ஓரிரு இடங்களில் வைத்திருக்கலாம். காலை பதினொரு மணி ஒன்றும் கட்டாயம் இல்லை. வரிசையில் நின்றால் யாராவது பார்த்தால் கெளரவம் கெட்டுவிடும் என்றெண்ணி படம் போட்டு விளக்கணைத்து தியேட்டர் இருட்டானதும் மொத்த கூட்டமான இருநூறில் நூறு பேர் ஒரு ஓரமான சீட்டைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் மறைந்து உட்கார்ந்துகொள்வார்கள். தனக்கு இருட்டில் நடக்கப்போவதை அல்லது நடப்பதை இருட்டிலேயே உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் மனோரீதியாக இவர்களுக்கு பிடித்திருக்கலாம். இடைவேளையின் போது யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக அவசரமாக நம்பர் ஒன் வந்தால் கூட வெளியே செல்ல மாட்டார்கள். அடக்கிக்கொண்டு முற்றிலுமாக ஓரத்திலேயே முடங்கி அடங்கிவிடுவார்கள். இடைவேளைக்கு முன் இரண்டு பிட் இ.பின் இரண்டு பிட் வெளியே வந்து விடுவார்கள். நல்ல அறிய பல தகவல்கள் அடங்கிய பிட் காட்சிகள் இருப்பின் மொத்த படமுமே நிச்சயம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். படக் கொட்டகை உரிமையாளருக்கு கரண்ட் செலவு மிச்சம். பார்வையாளருக்கு நேரச்செலவு மிச்சம். இருவருக்கும் WIN-WIN நிலைமை.
ஒரு காலத்தில் இப்படியாக சினிமா கொட்டகைகளில் வளர்ந்து வந்த காமக்கலை, தற்போது மொபைல், ஐபாட், லேப்டாப், கம்ப்யூட்டர் என்று பதின்ம வயது பையன்கள் முதல் இளைஞர்கள், பெருசுகள் வரை எல்லோரிடமும் சகஜமாக புழங்கும் அனைத்து எலக்ட்ரானிக் உபகரணத்திலும் சீரழிகிறது. மூன்று ஷா நடிகை குளிப்பது அவர் துவட்டிகொள்ளும் முன் அனைவரையும் வந்தடைந்தது. கடந்து சில மாதங்களுக்கு முன் யூட்யூப் தேடல்களில் முன்னணி வகித்து ஸ்டார் நட்சத்திரமானவர்கள் நம்ம(?) நித்யா ரஞ்சிதா ஜோடிதான். கூகிள் தமிழ்த் தேடல்களில் நம்முடைய அரிச்சுவடி படிக்கும் காலத்தில் முதன்முதலில் எழுதிப்பழகிய உயிர் எழுத்து "அ" அடிப்பதற்காக a அடித்தவுடன் வருவதை கீழே உள்ள படத்தில் காணலாம்.....
இணையத்தில் எவ்வளவோ நற்காரியங்களும், நல்ல பல விஷயங்களும் பகிரப்படும் இவ்வேளையில், இன்டர்நெட்டில் வாத்ஸ்யாயனரின் பாடத்தின் நிலை என்ன, அதைப்படிக்கும் ஆண் பென் விகிதாசாரம் என்ன, எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள், எங்கே பார்க்கிறார்கள் என்பது பற்றிய முழுத் தகவல்கள் அடங்கிய ஒரு விவரப்படம் கீழே.. அதெல்லாம் சரி இதனால் ஊருக்கு என்ன பயன் என்று நாலு பேர் கேட்பது என் காதில் விழுகிறது. நாட்டு நடப்பு நமக்கு தெரியவேண்டாமா? சொல்லுங்க....
Via: Online MBA
2 comments:
காலத்திற்கேற்ற அவசியமான கட்டுரை நண்பரே..!
அதில் என்பது சதம் சிகரட், பீடி, சுருட்டு என்று ஏதாவது ஒரு லாஹிரி வஸ்த்து கொண்டு வெண்புகை பரப்பி தியேட்டரை தேவலோகமாக்குவர்.
இப்போதெல்லாம் இணையமே போதும் என்று முடங்கிவிட்டனர்.
- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com
Post a Comment