Tuesday, April 20, 2010

விடாதே, பிடி, துரத்து ......



இணைய மேய்தலில் கிடைத்த ஒரு குறும்படம் இது.  நிஜமா அல்லது போலியா என்பது உங்கள் விருப்பத் தேர்வு. இந்த கார் போல் ஓடிய என் கற்பனைக் குதிரை கொடுத்த கதை இது.

ஆண்ட்ரியாவின் டாடிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னுடைய பனை மட்டை முற தொப்பியும், எங்கு பார்த்தாலும் கன்னா பின்னா என்று பட்டன் வைத்த சட்டையும், ஒரு அழுக்கு நீல  ஜீன்ஸ் பேண்டுமான  கௌபாய் ஸ்டைல் வாழ்க்கை எனக்கே சில சமயம் பிடிக்காத போது, தன்னுடைய இரண்டாவது தொடுப்பின் செல்லக் கிளியை  இதுபோன்ற ஒருவன் கொத்திக்கொண்டு போக எந்த அப்பன் சம்மதிப்பான். காதலுக்கு கண்ணும் இல்லை கௌபாயும் இல்லை என்று அந்த மற்றும் எந்த ஆண்ட்ரியாவின் தகப்பனுக்கும் சர்வ நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.


சரியாக பதினொன்று முப்பத்தைந்துக்கு அந்த அரசாங்க பத்திர பதிவாளர் கட்டிடத்துக்கு தன் அப்பனுடன் வந்த என் ஆள் சொத்துப் பத்திரம் கைஎழுத்தானதும் அதோடு பறந்து சென்று "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோய்டலாம்" என்று முன்னமே திட்டம் தீட்டியிருந்தாள். அதை திறமையாக செய்து முடிக்கவேண்டியது என்னுடைய வேலை. "டேடிங்கில் எப்போதும் கோட்டை விடும் நீ இந்த வேலையையாவது  உருப்படியாக செய்" என்ற நக்கலும் நையாண்டியும் கலந்து பேசும்போது அந்த டேடிங்  வார்த்தையில் விழுந்தேவிட்டேன் நான்.  நீங்கள் மேலே பார்க்கும் ஆரம்ப காட்சியில் இருப்பது அந்த சார்பதிவாளர் கட்டிடம் தான். அவள் வெளிவந்தவுடன் நான் வெடித்த அந்த நாட்டு குண்டுதான் நீங்கள் பார்க்கும் அந்த  ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பட்டாசு காட்சி.

தனது இரண்டாவதின் மேல் ஒரு கண்ணும், இரண்டாவது பெற்றதின் மேல் இன்னொரு  கண்ணும் எப்போதும் வைத்திருக்கும் 'ஆண்ட்ரியா அப்பன்' போலீசுக்கும் தன் தனி கூலிப்  படைக்கும் சொல்லிவைத்திருந்தான் போலும். நான் நினைந்த அளவிற்கு அவளை கவர்ந்து வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. அவளை கைப்பிடித்து காரில்   உள்ளுக்கிழுத்தவுடனேயே ஹாலிவுட் பட ரேஞ்சிற்கு ஒரு கார் சேஸ் காட்சிக்கு என்னை இழுத்து வந்து விட்டான். திருடிய காரில் பெட்ரோல், மண்ணு, மட்டை இருக்கிறதா என்று தெரியவில்லை. நெஞ்சத்தை திருடியவளை அருகில் அமர்த்தி, மூன்று செகண்டில் ஐந்து கியர் மாற்றி ஒரே சீராக இழுத்ததில் இடது கைப் பக்கம் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த அந்த அமர்க்களமான அழகுப் பிசாசு என் மடியில் தஞ்சமடைந்தது.

முதல் சர்கிள் திரும்பியதும் சைரன் அலற வந்த போலீசுக்கு திருடன் விளையாட்டு காண்பித்து நூறுக்கு மாறி பார்க் உள்ளே காரின் மூஞ்சியை காண்பித்து அந்த ஒன்வேயில் நூற்று ஐம்பதை தொட்டபோது இன்னும் இரண்டு காவலர் திலகங்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.  மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கு மறுக்காக நான்கு இரவுச் சோதனை கார்களை நிறுத்தினாலும் பிய்த்துக்கொண்டு சென்றுவிட்டேன். இந்தியாவில் எப்போதும் இதுபோல் கார்கள் நின்றுகொண்டிருக்கும் என்று அந்த அவசரகதியில் சென்றுகொண்டிருந்தபோதும் என்னுடைய உலகப் பொது அறிவை மேம்படுத்திக்கொண்டிருந்தாள்  என் உயிரை எடுக்கப்போகும் காதலி.

மேம்பாலம் கடந்து செல்கையில் ஓரமாக காஃபி ஷாப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த இன்னும் ரெண்டு பெரிய சிறிய போலீஸ் ஆபீசர்கள் ஆட்டக் களத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். டீ குடித்துக் கொண்டிருந்த போலிசார்களுக்கு 'தண்ணி' காட்ட நான் ஆரம்பித்த போது இன்னும் நான்குபேர் இந்த காரோட்டத்தில் சேர்ந்து இருந்தார்கள். மேலே பறந்த அந்த  விமானத்தில் தன்னுடைய "பெரியம்மா" பறந்து கொண்டிருக்கிறாள் என்ற மேலதிக தகவலைச் சொல்லி என் பெரிய மாமியாரின் (ஆன்டிரியா அப்பாவின் முதல் தாரம்) பயணத் தகவலை அதிமுக்கியமாக அந்தநேரத்தில் என்னுடன் பகிர்ந்து கொண்டாள். எங்களை விரட்டி விரட்டி கடைசியாக அந்த விமான ஒடுகளத்தை தாண்டி போனபோது சுற்றி வளைத்து சாரை சாரையாக வந்த அத்துணை காரும் மோதி இந்த உலகத்தில் இருந்து எங்களுக்கு மோட்சம் அளித்து நாங்கள் மேலுலகம் சென்றபோது மோதிய இடத்தில் இருந்து காதல் சின்னம் புறப்பட்டது விண்ணில் இருந்து எங்களுக்கு தெரிந்தது.

உங்களுக்கும் தெரிந்ததா?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails