Wednesday, April 7, 2010

ரயில் பயணங்களில்..... (ஜட்டியுடன்!)

முன்குறிப்பு:  இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல. தலைப்பை கண்டு ஏமாந்து இதை படிக்காமல் தவிர்த்தால் நீங்கள் எடுத்த இந்த மனித ஜென்மத்தின் பலன் கிடைக்காமல் போகலாம். ஆண்/பெண் இருபாலாரும் சகஜமாக இதைப் படிக்கலாம். பார்க்கலாம் ( இணைத்திருக்கும் வீடியோவை).

நீங்கள் படித்து ரசிக்கப்(?) போகும் இந்த ப்ளாக் யூத்புல் விகடனில்  குட்ப்ளாக்ஸ் பகுதியில்  இடம் பெற்றுள்ளது. இதைக்கண்டு சொன்ன எங்கள் ப்ளாக் (http://engalblog.blogspot.com) ஸ்ரீராமுக்கு நன்றி. கீழே அந்த சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp


இந்த செய்தியை மூன்று நாளைக்கு முன் இன்டெர்நெட்டில் படித்தவுடன் இதை பற்றி எழுதலாமா வேண்டாமா என்று மனதிற்குள் சாலமன் பாப்பையாவை பெரிய சிகப்பு ராஜா சேரில் நடுவராக உட்கார வைத்து "கால் சட்டை இல்லாப் பயணங்கள் பற்றி எழுதுவது இவ்வுலகிற்கு நன்மை பயக்குமா  அல்லது தீமை பயக்குமா அல்லது  பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையா" என்ற தலைப்பு கொடுத்து  பட்டிமன்றத்தில் வாதிட்டு பார்த்ததில், "சும்மா எழுதுய்யா... உலகத்தில நடக்காததையா சொல்ற... இது ஆண்களுக்கு நன்மை பயக்கும்(எப்படி என்று கேட்காதீர்கள்), பெண்களுக்கு தீமையில் முடியும்(இதற்கும் எப்படி என்று கேட்காதீர்கள்), மொத்ததில இதை செய்வது  ஒன்றும் பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை(இது எல்லோருக்கும் தெரிந்ததே). அதனால  நீ இத எழுதறதில ஒன்னும் தப்பு இல்லையா... உம்ம்ம். ஆரம்பிங்க.." என்று தீர்ப்பளித்தார். நடுவர் பாப்பையாவின் நேர்மையான தீர்ப்புக்கு தலை வணங்கி அந்த (அ)சம்பவத்தை எழுதுகிறேன்.

நியூயார்க் நகரத்தில் ஒவ்வொரு ஜனவரி மாதமும் நம் தாய்த்திருநாட்டில் நடக்கும் தனுர் மாத பஜனை போல் நடக்கும் ஒரு விழா கால்சட்டை அணியா சுரங்க ரயில் பயணம். "ஐயே! என்ன இதெல்லாம். இதைப் போய் யாராவது ப்ளாக்ல எழுதுவாங்களா?" என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. என்ன செய்வது படித்ததில்/பார்த்ததில் இருந்தே இரவுத்தூக்கம் இல்லாமால் நான் பட்ட அவஸ்தையால்தான் இந்த பதிவு. ஒரு பித்து பிடித்தது போன்ற ஒரு மனநிலை. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

இரண்டாயிரத்து இரண்டில் ஒரு ஏழு பேர் துவக்கி வைத்த இந்த இயக்கம் இப்போது ஐயாயிரம் பேர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அளவிற்கு மாபெரும் ஒரு இலட்சிய கொள்கை இயக்கமாக விரிவடைந்திருக்கிறது. இலட்சியம் என்னவென்றால் நம்முடைய இடுப்புக் கீழ் உள்ள பாகங்களை சுதந்திரமாக எல்லோருக்கும் தரிசனம் செய்ய ஏதுவாக ஜட்டியுடன் பயணம் செய்வது. வேனிற்காலங்களில் ஒரு நாள் முழுவதும் முழு  பேன்ட் அணிந்து சூட்டால் ஏற்படும் "கச கச" அசௌகரியங்களால் இரவு கைலி அல்லது அரைக்கால்சட்டை அணிந்து இளைப்பாறுபவர்களை இவ்வுலகில் நாம் கண்டதுண்டு.  ஆனால் பட்டப் பகலில் வெட்ட வெளியில் ஒரு சுரங்கபாதை ரயில் போக்குவரத்தை இவ்விதம் புனிதப்படுத்தும் ஆட்களை இப்போதுதான் பார்க்கிறோம். 

 

இந்த கண்கொள்ளா(?) காட்சியை கண்டு மிரளும் சில நிகழ்படங்களை  நாம் மேற்கண்ட வீடியோவில் காண்கிறோம். நீங்கள் மேலே கண்டு களித்த இந்த யூட்யூப் காட்சியை நூறு மில்லியன் மக்கள்  பார்த்து பயனடைந்திருப்பதாக இம்ப்ரூவ் எவரிவேர் (இந்தப்  புனிதப் பயணத்தை ஒருங்கிணைப்பவர்கள்) தங்களது வலைத்தளத்தில் தெரிவிக்கிறார்கள். ரீலில் கண்டே நாம் அதிரும் காட்சிகளை ரியலில் கண்ட போது மக்களுக்கு என்ன ஒரு மன நிலை இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஏழு குறும்புத்தனமான ஆசாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூத்து இப்போது அற்பத்தனங்களின் கொண்டாட்டமாக ஒரு மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை  சில சிறப்பு முகவர்களும் (Special Agents), ஒருங்கினைப்பாளர்களும் மற்றும்  தன்னார்வ தொண்டர்களும்  மனமுவந்து இச் சேவையை ஒவ்வொரு வருடமும் பிரதி ஜனவரி மாதம் செய்கிறார்கள். சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஒரு ரயிலின் சில பெட்டிகளை தெரிவு செய்து பெட்டியில் ஏறியவுடன் கீழே அணிந்திருக்கும் ஆடையை அகற்றி எல்லோருக்கும் பொது தரிசனம் அளித்த வண்ணம்,  தங்களுடைய  ஆடையை அகற்றியது பற்றிய பிரஞ்கையே   இல்லாமல் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு வீட்டில் காலையில் நம்பர் இரண்டு போகும் போது படிப்பது போல படிக்கிறார்கள்.  

படித்த ரெண்டு பேர் ( நிறைய பேர் கூட இருக்கலாம்) "இப்போ இதனால என்ன? யார் பேன்ட் போட்டா என்ன? போடலன்னா என்ன?" என்று கேட்கலாம். "போடலன்னா என்ன?" என்பதைதான் இந்தப் பதிவில் நீங்கள் கண்டு/படித்து ரசித்தீர்கள். 

யார் என்ன சொன்னால் என்ன, இது போல சில அபூர்வ சிந்தனைகள் கொண்டவர்கள் , எதையும் செய்யும் ஆற்றல் உடையவர்கள் அவர்களுடைய செயலில் "கருமமே" கண்ணாயினர்.

4 comments:

Madhavan Srinivasagopalan said...

//.. உலகத்தில நடக்காததையா சொல்ற... இது ஆண்களுக்கு நன்மை பயக்கும்(எப்படி என்று கேட்காதீர்கள்), பெண்களுக்கு தீமையில் முடியும்(இதற்கும் எப்படி என்று கேட்காதீர்கள்), மொத்ததில இதை செய்வது ஒன்றும் பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை(இது எல்லோருக்கும் தெரிந்ததே)//

HA.. HAA. HAAAA....

உங்களுக்கு அடுத்த இடுகைக்கு(பதிவிற்கு) ஒரு யோசனை..-- தலைப்பு - "ஒரு கற்பனை பட்டிமன்றம் "

தம்பி.... said...

Mr.RVSM பான்பராக் போடுற பழக்கத்த விட்டாச்சா ?
அத்லெட் பாண்டி, நீங்க எல்லாம் சேர்ந்து உங்க வீட்டுக்கு நேர் பின்னாடி செல்வானந்தா நகர்ல கிரிக்கெட் விளையாடும் போது உங்கள பார்த்திருக்கேன், திடீர்னு கானா போய்டிங்க.....என்ன உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல....but பார்த்திருக்கலாம்....Any Way இந்த ப்ளாக் மூலமா உங்கள பத்தி தெரிஞ்சிகிட்டதுல மகிழ்ச்சி......

தம்பி.....from சூரத்...........

ஸ்ரீராம். said...

யூத்ஃபுல் விகடனின் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் உங்கள் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள் RVS.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails