Friday, March 26, 2010

வெள்ளை மாளிகை பேனாக்கள்

இணையத்தில் உலா வந்தபோது கீழே கண்ட வீடியோவை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதிகள் எந்த ஒரு முக்கியமான ஒப்பந்ததிலோ, திட்டத்திலோ, அறிக்கைகளிலோ கையெழுத்திட குறைந்தது சுமார் இருபது பேனாக்களை மேஜையில் அடுக்கி அதில் ஒவ்வொன்றாக எடுத்து ஒப்பம் இடுகிறார்கள். இதைப் பற்றி வெள்ளை மாளிகை காரியதரிசி லிஸா பிரௌன் நம்மிடம்(?) தெரிவிக்கையில்...



All the President's Pens from White House on Vimeo.

**
இதையொட்டியெழுந்த  சில பேனா சிந்தனைகள்.....

ஐந்தாம் வேதமாக போற்றப்படும் மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க கஜமுகனை பணித்தார் வேத வியாஸர். தான் எழுதும் வேகத்திற்கு சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு ஒரு பக்க தந்தத்தை உடைத்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டு ஒரு உன்னதமான இதிகாசத்தை உலகிற்கு அளித்தார்கள்.

**

நமது தமிழ்நாடு அரசாங்கத்தில் மேலதிகாரிகள் பச்சை வண்ண மசியில் கையெழுத்திட்டு தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். கசட்டேட் ஆபீசர்கள் (Gazetted Officers) இந்த பச்சை வண்ண எழுதுகோலால் கையொப்பம் இடுவார்கள். ஐம்பது ரூபாய் முதல் ஐம்பது 'எவ்வளவோ' வரை அந்தப் பேனா தனது வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

**

ஐந்தாம் வகுப்பில்தான் பேனா உபயோகிக்க நான் அரிச்சுவடி முதல் படித்த பள்ளியில் அனுமதித்தார்கள். மசிப் பேனாவில் எழுதினால் தான் கையெழுத்து அழகாக வரும் என்று அவர்கள் கருதியதால் அனைவரையும் மசிப் பேனாவினால் எழுதச்சொன்னார்கள். தலையெழுத்து நன்றாக இருக்க எந்த பேனா என்று இப்போதும் எவருக்கும் தெரியவில்லை. வெள்ளை சட்டையில் பாக்கெட்டின் கீழிருந்து மேல் வரை நீலநிற மசிக்குட்டைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். மதியம் தயிர் சாதம் சாப்பிடும்போது விரலிடுக்குகளில் இருக்கும் நீலம் சாததிலும் கலந்து நீல தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறோம். ஆங்கில பாடம் போதித்த ஆரோக்கியசாமி சாரின் இருதயத்திலிருந்து குருதி வழிந்தது போல அவருடைய சிகப்பு மசிப் பேனாவிலிருந்து ஒழுகிய திட்டுக்கள் சட்டை மேல் இருக்கும். என்னைப்போன்றவர்களுக்கு ஆங்கிலம் கற்ப்பித்த பலன் அவருக்கு நெஞ்சின் மேல் கிடைத்தது என்று எனக்கு இப்போது புரிகிறது. ஆண்டுப் பரீட்சை முடிந்தப்பின் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு பேனாவில் மீதம் இருக்கும் மசி முழுவதையும் அடுத்தவரின் வெள்ளை சட்டையில் உதறி அடித்து இன்புறுவர். சிலர் பள்ளி முக்கில் இருக்கும் தாத்தா கடையில் காசு கொடுத்து புது பிரில் இங்க் பாட்டில் வாங்கி வந்து பேனாவில் ஊற்றி ஊற்றி அடிப்பார்கள். அன்று அவருக்கு இங்க் விற்பனையால் அவருடைய கடை அந்த வருடத்தின் அதிக பட்ச வருமானத்தை ஈட்டி  அந்த கணக்காண்டின் லாபத்தை  சம்பாதிக்கும். அந்த வருடம் பஞ்சு புத்தம் புதிய மசிப் புட்டியை வாங்கி வந்து அப்படியே சட்டென்று திறந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது போல எனக்கு செய்தான்.

**

ஷங்கர் தனது முதல்வனில் 'கொஞ்ச நேரம் ஒதுக்கி... கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்...' என்று கெஞ்சி கொஞ்சிய மனிஷா கொய்ராலாவின் முதுகில் அர்ஜுனை எழுதவைத்து அரச காலத்து பேனாவைக் காட்டினார். இறகு கொண்டு எழுதும் பேனா அது.

**

வங்கிகளும் இன்னபிற பொது மக்கள் கூடும் , பேனா தேடும் இடங்களிலும் ஒரு ரூபாய் பந்து முனை ரீபில் பேனாவைக் கிரில் ஜன்னலில்  கயிறு கொண்டு அதைக் கட்டிப் போட்டு  பத்திரப்படுத்தும் இடங்களும் என் நினைவுகளில் வந்து கிறுக்கிச் சென்றது.

4 comments:

ஸ்ரீராம். said...

Interesting

பெசொவி said...

nice blog, RVSM!

I gave your phone No. to my brother, who may also contact you.

How is your nephew now, hope he has recovered.

You look the same as I saw you in my school days.

May God bless you!

Madhavan Srinivasagopalan said...

hey.. I know abt. ur blog today only(from the comment u left on my blog page).. I will read leisurely ur posts..

//You look the same as I saw you in my school days.//

May be the photo was from school days.. HA.. HA... HA...

RVS said...

Thank you Sriram, thanks to peyar solla viruppamillai and mela veedhi madhavan too.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails