Saturday, February 27, 2010

ராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்

ஒன்று
-------
அந்தப் பெண் ஆறாவது மாடிவரை வாசனையுடன் வந்தாள்.
காதோரத்தில் பாட்டரி இணைத்தாற்போல் மின் அதிர்வு ஏற்ப்பட்டது.
                    -ஆதலினால் காதல் செய்வீர்
இரண்டு
--------
"தடக் தடக்" என்று பாசஞ்சர் ரயில் வரும் சப்தம் தண்டவாளங்களில் கேட்க... நான் ஒரு நிமிஷ தயக்கத்தில் அங்கேயே இருப்பதா அல்லது பாலக்கரைக்கு போய்விடுவதா என்று தீர்மானிக்க இயலாமல் தண்டவாளங்களின் இடையில் நடக்க ஆரம்பித்தேன்...

இருப்பதா - நடப்பதா
இருப்பதா - நடப்பதா

மழை மேகம் போல் புகை கக்கிக் கொண்டு வந்த ரயில் என்மேல் செல்லும் போது எனக்கு பதிலாக அது அலறியது

'ஆ...!"
                    -ஆ
மூன்று
------
அந்தப் பெண் உடம்பில் சில்க் வழிந்தது. எடுப்பான மார்பு சற்று ஓவர் சைஸ் ஆக இருந்தது. உண்மையா உபயமா என்று வசந்த் யோசித்து பார்த்தான்.  தொட்டுப் பார்த்தால்தான் தெரியும் என்று தீர்மானித்தான்.

அவள் மிகவும் இளமையான பெண். பத்தொன்பதுக்கு அப்பால் இருக்காது என்று சொல்லலாம். பதினாறு என்று சொன்னாலும் நம்பலாம். மெல்லிய உதடுகள். மெலிதாக்கப்பட்ட புருவங்கள். மிகையில்லாமல் மேக்கப் செய்துகொள்வது எப்படி என்று புத்தகமே எழுதக்கூடியவள் போல் இருந்தாள்.

வாழ்க்கையில் என் முன்னேற்றத்தில் ஒரே ஒரு படிப்பினை, நீதி: "பணக்காரியை கல்யாணம் செய்".
                    -நில்லுங்கள் ராஜாவே
நான்கு
------
உடல் எத்தகைய கலைப்  பொருள்.  அதன் இயக்கத்தில், மென்மையில் , வளைவுகளில், உயிரில் எத்தனை அழகு  இருக்கிறது.  செதுக்கப்படாத பளிங்குபோல அந்த உடலை ஒரு மைக்கேல் அஞ்சலோவின் ஆர்வத்துடந்தான் பார்த்தான். எந்த நூற்றாண்டிர்க்கும் செல்லுபடியாகும் காட்சி அது. ஒரு மரம், ஒரு நிழல், ஒரு பொய்கை, ஒரு பெண்ணின் உடல்.
                    -கொலையுதிர் காலம்
ஐந்து
-----
பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு செல்பவர்களுக்கு சில குறிப்புகள்.

1. அதிகாலையில் செல்லுங்கள்.

2. தடிமனான புத்தகத்தை எடுத்து சென்றால் படித்து முடித்து விடலாம்

3. நடுவில், "நீங்கள் ரெங்கநாதனா?" என்று ஒரு தலை களைந்த இளைஞர் வந்து கேட்பார். "இல்லைப்பா நான் அப்துல் காதர்" என்றால் "உங்களைதான் இட்டாரச் சொன்னார் ஏபிஒ" என்று அழைத்தால் அவர் நிச்சயம் பிற்பாடு நூறு ரூ கேட்பார் என்று அர்த்தம்.
            -அறுபது அமெரிக்க நாட்கள்

மேலே இருக்கும் ஐந்தும் 'வாத்தியாரின்' சில இலக்கியங்கள். இன்னும் எவ்வளவோ. இன்று அவருடைய நினைவுதினம். மிகவும் தாமதமாகத்தான் சுஜாதாவின் படைப்புக்களை படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் அது ஒரு கோகைன் போன்றது. தாளில் எழுதியது எப்படி இவ்வளவு போதையாக இருக்கிறது என்பது சொல்லவொண்ணா அதிசயம்.

எல்லோரும் கதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் மட்டும் தான் பேப்பரில் கதை சொல்லாது 'காட்சியை' பார்க்க வைத்தவர். எண்ணற்ற புதிய முறைகளையும் வார்த்தைகளையும் எழுத்தில் வடித்தார். கிரிக்கெட் சூதாட்டம் சூடு பிடிக்காததர்க்கு முன்னமே அவர் எழுதிய 'கருப்பு குதிரை' என்ற சிறுகதை கிரிக்கெட் பெட்டிங்கை மையமாக கொண்டது. "ஆ" நாவலில் Auditory Hallucination ஐ கருவாக் கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்தையும் "ஆ" என்று முடித்தார். அவ்வாறு முடித்த ஒரு அத்தியாயம் தான் மேலே நீங்கள் படித்தது.

லிப்டில் ஒரு பெண் அந்த கதையின் ஹீரோவுடன் சென்றதை விளக்குவது அந்த 'ஒன்று' என்ற ஐட்டம். நில்லுங்கள் ராஜாவேயில் ஒரு மர்மமான பெண்ணை வர்ணிக்கும்போது எழுதியது  லிஸ்டில் உள்ள "மூன்று". ஒரு ஓவியன் பார்ப்பது போன்ற பார்வை என்று சொல்லி வார்த்தைகளை வடிவமாக்கி எழுதியது "கொலையுதிர் காலம்" என்ற நாவலில். அமெரிக்கா செல்வது பற்றி முதலில் தமிழன் எக்ஸ்பிரஸ்ஸில் தொடராக எழுதியது பட்டியலில் உள்ள "ஐந்து". விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பில் உள்ள தர்மு மாமா என்ற கதையில் எமதர்மராஜனை செல்லமாக தர்மு மாமாவாக்கினார் . பதிமூன்றாம் நம்பர் கதையில், பதிமூனாவது கதை சொன்னால் யார் தலை வெடிக்கும், சொல்பவனுக்கா, கேட்பவனுக்கா என்று கடைசி வரை சுவாரஸ்யமாக சுஜாத்தாதனமாக சொன்னார்.

சுஜாதாவைப் பற்றி எழுதும் போது நாம் என்ன எழுதுவது என்று யோசித்து அந்த எழுத்தாளனுக்கு மரியாதை செய்ய வேண்டுமானால் நாம் எழுதாமல் அவர் எழுதியதை எழுதிப் பார்க்கலாம் என்றதால்தான் இப்படி ஒரு பதிவு.

Friday, February 26, 2010

இழுக்க இழுக்க இன்பம்.....

2010-11 வரவு செலவு திட்டறிக்கை சமர்ப்பித்த பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் விளக்க உரையின் 144 வது பாராவிலிருந்து......

144. Since I quit smoking many years ago, I would urge others to also follow suit, as smoking is injurious to health. To this end, I am making some structural changes in the excise duty on cigarettes, cigars and cigarillos coupled with some increase in rates. I also propose to enhance excise duty on all non-smoking tobacco such as scented tobacco, snuff, chewing tobacco etc. In addition, I propose to introduce a compounded levy scheme for chewing tobacco and branded unmanufactured tobacco based on the capacity of pouch packing machines.



பிரணாப் முகர்ஜி சிகரெட்டை விட்டதால் இந்த வருடம் விலை ஏற்றிவிட்டார். எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை. பிரணாப் ஏன் இன்னும் சிகரெட் பிடித்துக்கொண்டு இருக்க கூடாது என்று சிகரெட் பிரியர்கள் ஏக்கத்துடன் எல்லோரையும் வினவுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் போதும் விலையேற்றத்தை காணுபவை இந்த மாதிரி லாகிரி வஸ்துக்கள்தான். இந்த ஆண்டும் இதே கதை தான். எவ்வளவு விலை ஏற்றினாலும் 'பீடி'க்கிறவர்கள் பிடிக்காமல் இருக்கபோவதில்லை. "Cigarette Smoking is Injurious to Health" என்ற வாசகம் ஒரு நாம்கேவாஸ் தான். சமீப காலமாக பெட்டியின் மேல் இரண்டு எலும்புகளுக்கு நடுவில் மண்டையோடு போட்டபின்னர் விற்பனையில் ஒரு 'ட்ராப்' இருப்பதாக பிடிக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிகரெட்டின் குணாதிசயங்களை மேற்கண்ட படவிளக்கம் மூலம் நாம் அறியலாம். இந்த புகையிலை வஸ்துக்களை பற்றி ஒரு சில....

அது ஒரு பெட்டி கடைதான். கலர் கலராக பாக்கு, ஷாம்பூ, ஊறுகாய், பான்பராக், கவுனி போன்ற பல ஐட்டங்களை திருவிழாவிற்கு தோரணம் கட்டுவது போல் கடையின் முகப்பில் குறுக்கும் நெடுக்குமாக கட்டி இருக்கும். கடையின் உள் ஆள் இருப்பதே தெரியாது. நாலா பக்கமும் கண்ணை அலையவிட்டு விட்டு , கடையையும், கடைக்காரரையும் கூட பார்க்காமல் கையை மட்டும் கடை உள்ளே நீட்டி நம்மை யாராவது பார்ப்பார்களோ என்றஞ்சி வெளியே பார்த்துக்கொண்டே "ஒரு கோல்ட் ப்ளேக் கிங்ஸ்" என்றால் அண்ணன் சரக்குக்கு புதுசு என்று அர்த்தம்.

பட்சணம் பலகாரம் சாப்பிடும்போது வெளியே இரண்டு பேருக்கு தெரியாமல் மறைத்து வைத்து சாப்பிடும் அளவிற்கு நாகரீகம் தெரிந்த நம் மக்கள், குடி, சிகரெட் போன்ற தேச நலனில் அக்கறையுள்ள காரியங்களில் ஈடுபடும்போது தனக்கு பக்கத்தில் இருப்பவர் ஐந்து நிமிடத்திற்கு முன்பு அறிமுகம் ஆனவராக இருந்தாலும் "நீங்க பத்த வைப்பீங்களா?" என்று அக்கறையுடன் கேட்டு பாசத்துடன் பத்த வைத்துவிடுவார்கள். அவ்வளவு ஒரு பாசமான சிகரெட் உபசரிப்பு. 'தேசநலன்... அக்கறை... " என்ற வார்த்தைகளை படிக்கும் போது புருவத்தை உயர்த்தியவர்களுக்கு இதோ விளக்கம். புகையிலை மடிப்பது குடிசைத் தொழிலாம். ஆகையால் பல ஏழை குடும்பங்கள் பயன் பெறுகிறதாம்.

பில்டர் சிகரெட் குடித்தால் உடம்பு அவ்வளவாக கெடாது என்பதால் காசு அதிகம் குடுத்து அதைக் குடிடா என்று 'அறிவுறுத்தும்' நண்பர்களும் உண்டு. "மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலே. அதனால பாதி வந்ததும் தூக்கி போட்ருவேன். முளுசா குடிச்சா தானே உடம்பு சீக்கிரம் கெட்டுபோகும்" என்று தேகம் கெட்டு போவதை தள்ளி போடுபவர்களும் உண்டு. அப்படி அரை சிகரெட் பிடிப்பவர்கள் அரை பாக்கெட்டிலிருந்து முழு பாக்கெட் வாங்க ஆரம்பித்து தனது சட்டை பாக்கெட்டை பதம் பார்த்துக்கொள்வார்கள்.

அஜித், ரம்பாவுடன் நடித்த (நேசம்?) படம் ஒன்றில் ஒரு பில்டர் சிகரெட்டை அவர் கையில் கொடுத்து நன்கு புகையை உள்ளே இழுத்து அவர் மேல் அதை விடச்சொல்லி கட்டளையிடுவார் ரம்பா. "இந்த வாசன என்கு ரொம்ப பிட்கும்" என்று இரு கண்களை மூடி, மோவாயை மேலே தூக்கி சிரித்தபடி சொல்வார். அந்த படம் வெளிவந்த புதிதில் நமக்கும் ஒரு ரம்பா கிடைப்பாளா என்று சிகரெட்டும் கையுமாக பல பேர் அலைந்ததாக தகவல். மேலே தூக்கி போட்டு துப்பாகியால் சுட்டு, குச்சியை கையில் வைத்துக்கொண்டு தீப்பெட்டி கொண்டு உரசி பற்ற வைத்தும், உதடுகளினால் கவ்விப்பிடித்து நாக்கு மூலமாக வாய்க்குள் கொண்டுபோய் ஒரு சர்க்கஸ் காட்டி வெளியே எடுத்து, பைப் வைத்து பிடித்து, பீடி அனைவதர்க்குள் ஒரு மொட்டையை அடித்து துவம்சம் செய்தும் பல 'சிகரெட் சாகசங்கள்' செய்த பெருமை சூப்பர் ஸ்டாருக்கு சேரும். அண்மை கால படங்களில் அறவே சிகரெட்டை ஒதுக்கிய பெருமையும் அவரையே சாரும். இப்படி இளைஞர்கள் மத்தியில் 'சிகரெட் புரட்சி' ஏற்படுத்திய படங்களும் உண்டு.

பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்தால், எது பொது இடம் எது தனி இடம் என்பதில் பிரச்சனை. கடை வாசலில் பிடித்தால் அது அந்த கடை இடம் அதனால் தனியார் இடம் என்கிறார்கள். இதனால் போலீஸ் கல்லா நிரம்பிற்றே தவிர பிரயோஜனமாக ஏதும் நிகழ்ந்ததா தெரியவில்லை. பிடிக்கிறவராய் பார்த்து பிடிக்காமல் விட்டால் ஒழிய சிகரெட்டை ஒழிக்க முடியாது.

அப்பா அம்மா பொண்டாட்டி சொல்லி கேட்காதவர்களா பிரணாப் சொல்லி கேட்கப்போகிறார்கள்.

Thursday, February 25, 2010

உலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன்

உலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன் - சச்சின் டெண்டுல்கர்

ஒரு பத்துக்கு பத்து இடம் இருந்தால் கூட நாலு பேர் மூனு குச்சி ஒரு பந்து ஒரு மட்டை (தென்னை மட்டையாய் இருந்தால் கூட) வைத்து நாடெங்கும் விளையாடும் அனைவரும் நேற்றைய தினம் பரவசத்தில் ஆழ்ந்து மகிழ்ந்தார்கள். ஜிம்பாப்வேயின் சார்லஸ் கோவேன்டிரி 2009ல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடித்த 194 நாட் அவுட் உலக சாதனையாக இருந்தது சாதனைக்கே சந்தோஷமாக இல்லை போலும். நேற்றைய தென்னாப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் சாதனை சச்சினுக்கு தன்னை வழங்கிக்கொண்டது. அப்பாடா! இப்போதுதான் சாதனைக்கே பெருமை.

கீழ்கண்ட சமன்பாடு நேற்றைய போட்டியில் எல்லோராலும் சரிதான் என்று சரிபார்க்கப்பட்டது.
    6 + 4 = 10+DULKAR = TENDULKAR

வரலாறு படைத்த ஆட்டத்தின்  காட்சிகள் கீழே


டில்லி செல்வோர், டில்லியிலிருந்து வருவோர், லண்டனில் படிப்பு முடித்து வருவோர், திருமண நிகழ்ச்சிக்கு தாலி எடுத்து கொடுக்க வருவோர், தையல் மிஷின் குடுக்க வருவோர், மகளிரணி இளைஞரணி முதியோரணி மாநாடுகளில் மரியாதை ஏற்க வருவோர், மாநகராட்சி கழிப்பறை திறக்க வருவோர், பல அரசுத் திட்டங்களை நாட்டுக்கு அர்பணிக்க வருவோர், பிறந்த நாள் கொண்டாடுவோர், பதவி கிடைத்தவர், இன்னும் பலப்பல 'நற்காரியங்கள்' செய்வோரை பாராட்ட சாலையின்  இருமருங்கிலும், நடுவிலும், மரத்தின் மேலேயும்  மற்றும் தொங்க, நிற்க, கட்ட வசதியாக உள்ள பல இடங்களில் பதாகை வைப்பார்கள். 
கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினுக்கு பதாகையை  உள்ளத்தில் வைப்பார்கள்.

Wednesday, February 24, 2010

இஷ்டமித்திர பந்துக்கள்

 
முந்தாநாள் அந்தி நேரம் பழமுதிர்சோலையில் முருங்கைக்காய் வாங்க வந்த முரளியுடன்  குடும்பம், குழந்தை குட்டிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்திற்கு ரொம்பவே அங்கலாய்த்துக்கொண்டான். ஒன்றும் பெரியதாக இல்லை, அவனுடைய சித்தப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மருமகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சாப்ட்வேர் துறை தரையில் தலைகுப்புற படுத்திருந்தபோது சொன்னான். "அவளுக்கு வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டதற்கு "எந்த சித்தப்பாவின் மருமகள்?" என்று இருபுருவம் சுருக்கி கேட்டான். அதற்க்கு நான் "உங்க சித்தப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மருமகளைக் கூட மறந்து விட்டியா?" என்றதற்கு தான் அவ்வளவு அங்கலாய்ப்பு. அவனுக்கு ஒன்றும் அம்னீஷியாவோ அல்லது அல்சிமேர்(Alzheimer) நோயோ கிடையாது.  பின்ன என்னவென்றால் அவனுடைய சீட்டு கிழியும் வேலைப் பளுவினால் சொந்த பந்தங்களை கூட மறக்கக்கூடிய நிலை வந்ததை எண்ணி நொந்ததுதான்.

இன்னதுதான் வலை மென்பொருளாக தயாரிப்பது என்றில்லாமல் போய்விட்டது. சகலமும் "சமூக கட்டமைப்பு வலை"க்குள் (Social Networking WebSite) வந்துவிட்டது. நண்பர்கள் நாலு பேர் பிரிந்து போனால் கடிதம் எழுதி இந்த இடத்தில் இந்த தேதியில் சந்திக்கலாம் என்று ஒரு மாதமாய் திட்டமிட்டு கூடி பேசி மகிழ்ந்தது போய் "ஓர்குட்"(orkut) வந்தது. சரிப்பா இனிமேல் அம்மாபேட்டை அரசுவும் அமெரிக்கா கிருஷ்ணனும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பில் இருக்கலாம் என்றால் அதுவும் முடிந்த பாடில்லை இந்த ஒர்குட்டிற்கு போட்டியாக பந்தயத்திற்கு "முகப்புத்தகம்" (facebook) வந்தது. பதின்ம வயதுக்கு வந்தவர்களில் பதின்மூன்று வயதிலிருந்து ஒரு கணக்குத் துவங்கி தன்னுடைய சக ஆண் மற்றும் பெண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னோடு இணையத்தில் இணைத்துக் கொள்ளலாம்/கொல்லலாம். இனிமேல் நேருக்கு நேர் சந்தித்தால் தான் நண்பியின் நண்பியை நண்பியாக்கிக்கலாம் என்றில்லாமல், ரேகாவின் உயிர்த்தோழி காஞ்சனாவிற்கு கால் மணி நேரத்தில் கலாவும் தோழியாகலாம். அரட்டை மட்டும் அல்லாமல், மொட்டை மாடியில் துணி மற்றும் வடாம் காய போடும் போதும், இரண்டு நண்பிகளுடன் நடுவில் தலை நுழைத்து பெவிகுவிக் போட்டு கன்னங்கள் ஒட்டி இருந்தபோதும், போகும்போதும், வரும்போதும், மார்கெட்டிலும் இப்படி பல (அப)சந்தர்ப்பங்களில் எடுத்த புகைப்படங்களை நெட்டில் விட்டு எல்லோரையும் பயமுறத்தலாம்.
இதன் அடுத்த பரிமாண வளர்ச்சியாக வந்தது தான் "டுவீட்டு" (Tweets). அவசரகதியில் இயங்கும் உலகத்தில் பக்கம் பக்கமாக மெயில் அனுப்பியோ, ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓர்குட், முகப்புத்தகம் பார்த்தோ அளவலாவுவதை விடுத்து, அற்பசங்கையின் போது கூட இரு வாக்கியங்களில் 'நறுக்'கென்று 'அகர முதல எழுத்தெல்லாம்' எழுதியவன் போல் நம்மை பற்றி நாம் குறுஞ்செய்திகளை அனுப்ப, நம்மை தொடருபவர்கள் எவ்வித முயற்சியும் இன்றி நம்மை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் வரை பதியலாம். இந்த வலைமனையை www.twitter.com என்று உலாவியில் அமுக்கி தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோல் பல மென்பொருட்கள் வலையில் உலவுகின்றன. சரி, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். முரளியின் சொந்தபந்தங்களை தொடர்பிலும், நினைவிலும் வைப்பதற்கு தோதாக அதற்கும் ஒரு வலைமனை தொடங்கிவிட்டார்கள். அதன் பெயர் ஜீனி.காம் (www.geni.com). ஜீனீயாலாஜி என்ற கலைச்சொல்லின் வாமன வடிவம் தான் ஜீனி. அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மம்மாவின் அப்பா அம்மா, அப்பப்பா, அப்பப்பாவின் கொள்ளுத் தாத்தா, மாமியாரின் ஒர்ப்படியின் பெண் மற்றும் பையன் போன்று குடும்ப பந்துக்கள் அனைவரையும் ஒரே மரத்தின் கீழ் கொண்டுவரலாம். 'குடும்ப மரத்தை'  (Family Tree) பேணிப் பாதுகாப்பது மிகவும் சுலபம் கூட. இப்போது எல்லோருக்கும் ஈமெயில் உள்ளது. ஒவ்வொருவருடைய ஈமெயில் முகவரியை அவர்கள் பெயருக்கு நேர் பதிந்து வைத்துவிட்டோமேயானால் வாழ்த்து அட்டையோ, அழைப்பிதழோ அரிதாகிக்கொண்டே வரும் இக்காலத்தில், ஜீனி.காமில் சென்று "யப்பா எம்பெண்ணுக்குக்கு வர்ற பத்தாம் தேதி காலையில ஏழரை ஒம்போது ராகுகாலம் கழிஞ்சு ஆயுட்ஷேமம் வச்சிருக்கேன். அவசியம் எல்லோரும் தம்பதி குழந்தை குட்டி சகிதமா தி.நகர் அயோத்யா மண்டபத்துக்கு வந்துடுங்க" என்று ஒரு ஈமெயில் ஜீனி மூலமாக தட்டி விட்டால் ஒரே சமயத்தில் அனைவரையும் தண்டம் சமர்ப்பித்து அழைத்து விடலாம்.

எல்லாவற்றிக்கும் கணினியை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கிறோம். என் நண்பர் ரவியின் ஆரூடம் அடுத்த உலகப்போர் கணினி மூலமாகத்தான் நிகழும் என்று. நாஸாவின் டாட்டாபேஸ் இணையம் மூலமாக ஹாக் செய்யப்பட்டு அவர்களுடைய பல அறிய பெரிய முயற்ச்சிகளை  முறியடிக்கலாம். ரயில்வே மற்றும் பல பொதுத்துறை போக்குவரத்து சர்வர்களிடமிருந்து முன்பதிவு விவரங்களை அழித்து குழப்பம் விளைவிக்கலாம். இதுபோன்று பல நாச வேலைகள் நடக்கலாம். அதெல்லாம் அப்புறம், எண்ணற்ற பல வசதிகளால் கணினியிடம் ரொம்பவே அது சொல்வதற்கெல்லாம் வாலாட்டிகொன்டே இருந்துவிட்டு நாளைக்கு யாரேனும் "உங்க அம்மா பேரு கோமளா தானே ..." என்று கடைவீதியில் பார்த்து கேட்டால், "ஒரு  ரெண்டு நிமிஷம்  ஜீனி பார்த்து  சொல்றேன்...   " என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.

Tuesday, February 23, 2010

நிக்க வேண்டிய இடத்தில நிக்கும்...

என் நண்பரின் மனைவி பரமசாது. இதுவரை ஒருமுறை கூட அவர் தூக்கி வீசிய கரண்டியாலோ, சப்பாத்தி கல்லாலோ என் நண்பருக்கு சிறு துளி ரத்தம் வரவில்லை என்றால் பாருங்களேன், அவ்வளவு சாது. ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிகிறார். எப்போதும் நண்பர் தான் மனைவிக்கு சாரதி. வீட்டில் இருந்து  கால் தரையில் படாமல் காரை வீட்டு வாசலில் வசதியாக நிறுத்தி ஏற்றிக்கொண்டு, வங்கியிலும் அதே போல் தரையிறக்கி விட்டுதான் அவருடைய அலுவலகம் செல்வார். வழக்கம் போல் நேற்றும் காலையில் ஏற்றி இறக்கி விட்டுத்தான் சென்றார். மதியம் இன்னொரு இடத்தில் நண்பரின் மனைவிக்கு ஒரு மீட்டிங் இருந்ததால் வழக்கமான மாலை பிக்அப் அவரது வங்கியில் இருந்து இல்லை. ஆகையால் பஸ் பிடித்து இருவருக்கும் ஒரு பொதுவான இடத்திற்கு வரச்சொன்னார் நண்பர். அங்கேதான் வந்தது வினை. "சைதாப்பேட்டை ஒன்னு" என்று கேட்டு பயணச்சீட்டு பெற்றிருக்கிறார். சீட்டு வாங்கிய பின் நடத்துனரிடம் "சைதாப்பேட்டையில எங்க நிக்கும்?" என்று ஒன்றும் அறியாமல் கேட்டவரை, "500 ரூபாய்க்கு பத்து பைசாவா சில்லரை இருக்கா?" என்று, ஒருவர் கால் மேல் இருவர் நிற்கும் பஸ்ஸில் கேட்டது போன்று வெகுண்டு நடத்துனர், "நிக்க வேண்டிய இடத்ல நிக்கும்" என்று கூறிவிட்டார்.

அதுமுதல் அம்மணி  பயணித்த மாநகர பேருந்து, மா'நரக' பேருந்தாயிற்று. ஒரே கோபம். பஸ்சை விட்டு இறங்கி அங்கே அரைமணியாய் தேவடு காத்திருந்த நண்பரின் காரில் ஏறின கையோடு சொன்னது "நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தினத்துக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டேன்". நண்பருக்கு ஆச்சர்யம் கலந்த சந்தேகம். பஸ் நிறுத்தியதற்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஏன் கோபமாக இருக்க வேண்டும் என்று. சிறிது நேரம் கழித்து தர்மபத்தினியின் சூடு ஆறியதும் கேட்டபோது கூறியவுடன் தான் இந்த தலைப்பு வார்த்தை சொன்ன நடத்துனரை 'கிண்டலாக' அவர் கேட்டது என்று புரிந்திருக்கிறது.

1. பீரோவிலிருந்த செல்லாத அரையணா பைசாவிலிருந்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நகை முதல் நட்டு வரை ஒரு வீட்டில் திருட்டு போனபின், போலீசிடம்  தங்களுடைய  களவு போன பொருட்கள் எப்போது கிடைக்கும் என்று கேட்டால் , "கபாலியை பிடிக்கிறப்ப கிடைக்கும்" என்று ஏட்டு  பதில் சொன்னால்......

2. தன் வீட்டு வாசலில் யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு சுந்தரம் எறிந்த குப்பையையும் சேர்த்து பக்கெட்டில் எடுத்து போட்டுக்கொண்டு  நிற்கும் பாலு சாரிடம் 'நீல் மெட்டல் பனால்கா' ஆள்  "அப்டியே ஓரமா போடு சார் . எடுக்கும் போது எடுக்கலாம்"  என்றால்.....

3. மூன்று நாளாக குளிக்காமல், குடிக்காமல், கழுவாமல் இருக்கும் டி.வி.எஸ்ஸில் சதா நைட் ஷிப்டு வேலை பார்க்கும் ரத்தினத்திடம் கார்பொரேஷேன் ஊழியர் "மழை பெஞ்சா தண்ணி வருங்க" என்று பொன்மொழி உதிர்த்தால்....

4. பத்து இருபது கார்களில் தொண்டர்/குண்டர் படை புடை சூழ அவசர ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாமல்,  "அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனே", "தமிழுக்கு 'ழ' வே", "வாந்திக்கு உவ்வே வே", "பெண்களின் டி.வி சீரியலே" உங்களை வாழ்த்த வயதில்லை, வைவதர்க்கும்  முடியவில்லை என்று தலை(வர்)விகளுக்கு கோஷமிடும் கும்பலுக்காக எல்லோரையும் நிறுத்தி வைத்திருக்கும் போக்குவரத்திடம் "ஆபிஸ் போகணும், இன்னிக்கி ஆடிட். எப்ப விடுவீங்க..." என்று கேட்கும்போது  அவர் போகட்டும் விடுவேன் என்று அசால்ட்டாக சொன்னால்...

5. டெங்கு கொசுவின் கடியிலும், நல்ல குணவதியான பெண்சாதியின் கடியிலும், "ஆ...ஊ ..." என்று ராவேளையில் ஊளையிட்டு அழும் பிள்ளையின் ஆர்பாட்ட கடியிலும்  நொந்து நூலாகி, தொப்பலாய் நனைந்து, கசிந்து கண்ணீர் மல்கி, இரண்டு மூன்று மணி நேரமாய் போன மின்சாரம் எப்போது வரும் என்று விசாரிப்பதற்காக வாரியத்திற்கு போன் போட்டால், ஐந்து முறை அழைத்ததற்கு பிறகு பதமாய் எடுத்து, "பார்த்துகிட்டு இருக்கோம்... வரும் ...." என்று பாந்தமாய் பகர்ந்தால்...
 
6. காலை ஒன்பதரைக்கே சப் ரெஜிஸ்ட்ரார்  ஆபிஸ் அடைந்து, டாகுமென்ட் பெற்றுக் கொண்டு  ஆபிசுக்கு விடுப்பு எடுக்காமல், லேட் ஆக செல்லாமல்  'குட் மார்னிங்'  ஆபிசரிடம் திட்டு வாங்காமல் சென்று விடலாம் என்ற எண்ணத்தில்  அங்கே உடைந்த பெஞ்சில் ஒரு மணி நேரம் செலவிட்டபின், வெள்ளிக் கிழமை தலை குளித்து  வேனில் வருகிறவர்களின் ஒட்டு மொத்த குடும்ப விவகாரங்களை பேசி முடித்து வருபவரிடம் "அந்த ஒட்டியம்பாக்கம் டாகுமென்ட்..." என்று இழுத்து கேட்டால் "இப்ப தானே வந்திருக்கோம்.... தர்ர்ரோம்....." என்று வெடுக்கென்றால்......

ஒன்று, இரண்டு என்று மேற்கண்ட பட்டியலில் உள்ளது  போல  பல "ஆல்...." களை இந்த பரமசாது சந்திக்க நேரிட்டால் எவ்வளவு பேருக்கு அதற்கேற்றார்போல் "தாங்க்ஸ்" சொல்வார் என்று எண்ணிப்பார்த்துக் கொண்டேன்.

Monday, February 22, 2010

இதிகாச காதலர்கள் - I

1. யயாதி - தேவயானிசர்மிஷ்டை

இது ஒரு முக்கோண காதல் கதை அல்ல. முற்றும் கோணாத இரு காதல் ஒரு கதையில் .

மிக அடர்ந்த வனம் அது. நெடிதுயர்ந்த மரங்களும், காட்டுப் புதர்களும், குட்டையும் நெட்டையுமாகவும் உள்ள மரங்களில் சிறியதும் பெரியதுமாக கொடிகள் படர்ந்தும் காட்டுப்  பாதையை அடைத்து வளர்ந்து இருந்தது. சிகப்பும் மஞ்சளும் ஊதாவுமாக பூக்கள் பூத்த மரங்களும் அக்காட்டில் உண்டு.  நன்பகலுக்கு இன்னும் ஒரு நாழிகை  நேரமே இருந்தாலும், சூரியனின் கிரணங்களை நுழைய விடாமல் தடுத்தன அத்தாவரங்கள். பகல் இரவாக காட்சியளித்தது அந்த ஒளி புகா வனம். "விஷ்... விஷ்..." என்ற காற்றை கிழிக்கும் வாளோசையும் "டக்... டக்... டக்...டக்..." என்ற குளம்பொலி  ஓசையும் வந்த திசையில் அந்த ஆரண்ய இருட்டை கிழித்துக்கொண்டு செடிகொடிகளையும் புதர்களையும் தன் வாளால் வெட்டிவீழ்த்திக் கொண்டு  தன் வெண் நிற புரவியில் ஒரு அழகிய வீரன் விரைந்து சென்று கொண்டு இருந்தான். அந்த பகல் வேளை இருட்டில் அப்புரவியும் அதன் மேல் அவனும் பாய்ந்து சென்று கொண்டிருந்தது கார் கால இரவில் அவ்வப்போது வானில் வெட்டும் மின்னல் போல் இருந்தது. அவ்வளவு களைப்பிலும் அவனுடைய முகம் முழு சூரியனை போல் பிரகாஸமாக இருந்தது. அவன் அன்றைய வேட்டையில் ஒரு பெண் மானை தேடிப் புறப்பட்டு காட்டில் வெகு தூரம் உள்ளே வந்துவிட்டான்.

அப்போது ஆளரவமற்ற அந்த வனத்தில் "ஆ... காப்பாற்றுங்கள்.....யாரேனும் எனக்கு உதவுங்கள்..." என்று ஒரு அபயக்குரல் கேட்டது. பெண்மானை தேடி வந்தவன் ஒரு பெண்ணின் அச்சக்குரல் கேட்டு திடுக்கிட்டான். குரல் வந்த திக்கில் குதிரையை வேகமாக செலுத்தினான்.
"ஐயோ... உதவி... உதவி... யாராவது என்னை காப்பாற்றுங்கள்...." என்று மீண்டும் அழுகையுடன் அக்குரல் ஒலித்தது.
தனது அனைத்து அவயங்களையும் கூர்மையாக்கிக் கேட்ட போது, எங்கோ அருகில், அதல பாதாளத்தில் இருந்து சப்தம் வருவது போல் இருந்தது. குதிரையை விட்டிறங்கி தலையை குனிந்து நாற்புறமும் தரையில் தேடிக் கொண்டு சென்றான். ஒரு பத்து இருபது அடிகளில் ஓர் பாழும் கிணற்றைக் கண்டான். செடி கொடிகளும், முட்புதர்களும் படர்ந்திருந்த அக்கிணற்றில் இருந்துதான் அந்த உதவிக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அக்கிணற்றின் மேலே ஊர்ந்த சில சிறிதும் பெரிதுமான அரவங்கள் ஆளை கண்டவுடன் விரைந்து கிணற்றிற்கு வெளியே ஊர்ந்து சென்றன. செடிகொடிகளை தன் வாளினால் நீக்கி கிணற்றில் தலையை தாழ்த்தி சத்தமாக
"யாரது?......" என்று கத்தினான்
"தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்... " என்றது கிணற்றுக்குரல்.
"ஏ பெண்ணே... யார் நீ... எப்படி இந்த கிணற்றுக்குள் வந்தாய்" என்றான்.
பதிலுக்கு, " நீங்கள் யார்.. உங்களால் என்னை காப்பாற்ற முடியுமா" என்று கிணறு ஈனஸ்வரத்தில் வினவியது. குரலில் மிகுந்த சோர்வு தெரிந்தது. சர்வ நிச்சயமாக ஓரிரு நாட்கள் அன்னம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவனுக்குப்பட்டது.
"நான் யயாதி..நகுஷனின் புத்திரன்"
"யார்.... யயாதி மகாராஜாவா?..."
"ஆம்.. ஹஸ்தினாபுர மன்னன்... யயாதி"
"ஆகா! மன்னனே என் உதவிக்கு வந்ததற்கு அந்த கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி.... தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்."
"ம்.. நீ எப்படி இதற்குள் வந்தாய்?"
"எனக்கு பயமாக உள்ளது. நான் வெளியே வந்தபின் உங்களுக்கு என்ன நடந்தது என்று விவரிக்கிறேன். இது மிகவும் ஆழமான கிணறு. தயவு செய்து கேள்வி கேட்காது என்னை இதிலிருந்து விடிவியுங்கள்." என்று மன்றாடினாள்.
"ம். ஆகட்டும். இப்போதே உன்னை வெளிக்கொண்டு வருகிறேன்"
"என்னை எப்படி இப்போது வெளியே கொண்டு வருவீர்கள்"
"உனக்கு என் பெயர் மட்டும் தான் தெரிந்திருக்கிறது. நான் கற்ற 'தனுர் வேதம்' நீ அறிய வாய்ப்பில்லைதான்" என்றவன் வில்லில் நாணேற்றி சரமாரியாக தொடுத்து அம்பினால் ஒரு தாமரை போன்ற கூடை செய்து, அதை கொடிகளில் கட்டி கீழே இறக்கினான். ஒரு சிறிய பஞ்சு மெத்தையை தூக்குவதுபோல் மேலே தூக்கி ஒரு மலர்ந்த தாமரை கிணற்றிலிருந்து வெளியே வரக் கண்டான்.
வனத்தில் அத்தகைய வனப்பு மிக்க மலரைக் கண்டதும் பேச மறந்து நின்றான் யயாதி. தன் வசம் இழந்து நின்ற அவன், அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தபின்
"நீ... நீ... நீங்கள் யார்?" என்று தடுமாற்றத்துடன் கேட்டான்.
"நான் தேவயானி....சுக்ராச்சாரியாரின் மகள்" என்று அந்த அன்றலர்ந்த மலர் பேசியது.
அவள் எழிலில் முற்றும் மயங்கிய யயாதி,
"யார்.... அசுர குரு சுக்ராச்சாரியாரியன் மகளா நீங்கள்...."
"ஆம்...நீங்கள் என்ன நீங்கள் ... என்னை தேவயானி என்றே அழையுங்கள்...."
கிணற்றுத் தண்ணீரில் நனைந்து இருந்த தேவயானிக்கு அவள் அணிந்திருந்த ஈர ஆடை மேனி அழகிற்கு மேலும் அழகு ஊட்டிற்று.
அந்த ஆடை படம் பிடித்து காண்பித்த அவளழகில் தன்னை மறந்த யயாதி, ஒன்றும் செய்வதறியாது மகிழ்ச்சியில் திண்டாடினான். சிறு கணநேரம் கழித்து அவளிடம் பேச முற்பட்டபோது,
"நான் எவ்வளவு நேரம் இப்படி கிணற்றின் மேலேயே நிற்பது. நான் தரைக்கு வரலாமா" என்றது அந்த தாரகை.
அப்போதுதான் தான் அவ்வளவு நேரமாய் அவளை கிணற்றிலிருந்து தூக்கிய அம்புக் கூடையிலேயே வைத்திருக்கிறோம் என்று உரைத்தது யயாதியின் மூளைக்கு.
கை நீட்டி, இவன் கரத்தில் அவள் கரத்தை பொதிக்க, மென்மையாக கிணற்றுக்கு வெளியே கொணர்ந்தான்.
"ம்...இப்போது சொல்... நீ எப்படி இங்கே...."
அப்போது தேவயானி, தன் தகப்பனாரை குருவாக கொண்ட அசுர ராஜன் விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டையுடன் ஏற்ப்பட்ட பிரச்சனையினால் இருவரும் காட்டில் வெகு தூரம் துரத்தி சண்டையிட்டதையும், சர்மிஷ்டை இவளை இந்த கிணற்றில் தள்ளிவிட்டு ஓடியதையும் விவரித்தாள்.
"அவள் செய்தது நற் காரியம் தான்..." என்றாள் தேவயானி வெட்கத்துடன்.
"எப்படி அவள் செய்தது நற்காரியாமாகும்?. உனக்கு தீங்கு இழைத்தவளை கூட நல்லவள் என்கிறாயே"
"இல்லையென்றால் நான் உங்களை தரிசித்திருக்க முடியாது"
"தரிசித்து..."
"தரிசித்து...." என்று இழுத்தாள் தேவயானியும். அவள்  தலையை குனிந்து தன் வலது கால் தரையில் கட்டை விரலால் போடும் கோலத்தில் லயித்திருந்தாள். இப்போது மண்ணே அவளை காதலிக்க தொடங்கிவிட்டது. மன்னர் மட்டும் விதிவிலக்கா என்ன? அவள் எழில் கோல அழகிலும் கால் போட்ட கோலங்களையும்  கண்டு ரசித்த யயாதி
"நான் வேண்டுமானால் மறுபடியும் உன்னை இக்கிணற்றில் தள்ளட்டா...."
"மீண்டும் கிணற்றில் இருந்து தூக்குவது நீங்களானால் எத்தனை முறை வேண்டுமானாலும் தள்ளுங்கள். அல்லது நானே கூட விழுவேன்" என்றாள் வெட்கம் ததும்ப.
இருவரும் மீண்டும் மீண்டும் சிரிக்க, தேவயானி்யின் இளமையை கண்களால் பருகியபடி யயாதி கேட்டான்
"பெண்ணே .. உன் மன ஓட்டம் எனக்கு புரிகிறது...ஆனால் உன்னை நான் மணம்  முடிக்க இயலாது"
"ஏன்.. முடியாது.. நான் அழகாயில்லையா?"
"மூவுலகத்திலும் உன்னைப் போன்ற அழகு காணக் கிடைக்காது. இந்திர சபையில் கூட உன்னை விஞ்ச ஆள் கிடையாது. அது இல்லை காரணம்"
"பின்னர் என்ன?"
"உன் தகப்பனார் கோபக்காரர். மேலும் அவர் இதை விரும்பமாட்டார்."
"இல்லை இல்லை நான் என் தகப்பனாரிடம் இதை விண்ணப்பித்து உங்களையே மணம் முடிப்பேன்" என்றாள்.
அதற்க்கு யயாதி, "நீ பிராமண குலப் பெண்.. நான் க்ஷத்ரியன். இது ஒவ்வாது" என்றான்.
"பின், லோபாமுத்திரை மனம் புரிந்தது எப்படி?" 
யயாதி இந்த கேள்வியின் காதல்  அலையில் அடித்து செல்லப்பட்டான். 
சர்மிஷ்டையுடன் ஏற்பட்ட சண்டையில் "நீ ஒரு பிச்சைக்காரன் மகள், உன் தகப்பனார் என் அப்பாவிடம் யாசகம் பெற்று தான் உன்னை வளர்க்கிறார்" என்று இழித்து பேசியதற்கு தான் நிச்சயம் யயாதியை மணந்து மஹாராணி ஆகி சர்மிஷ்டையை பழிவாங்கும் நோக்கத்தில்
"நீங்கள் என்னை என் தகப்பனாரிடம் கொண்டு சேருங்கள். நான் அவரிடம் பேசி நம் திருமணத்திற்கு அனுமதி பெறுகிறேன்" என்றாள்.
தேவயானியுடன் சுக்ராச்சாரியாரை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றான் யயாதி. தேவயானி காட்டில் நடந்தவற்றை கூறினாள். மேலும் சர்மிஷ்டை சுக்ராச்சாரியாரை இகழ்ந்ததையும் எடுத்து கூறி, காட்டில் காப்பாற்றி தன் கரம் தொட்டதாலும் அதனால் தன் நெஞ்சில் யயாதி இடம் பிடித்துவிட்டதாலும், தான் அவரை மனதால் வரித்துவிட்டதையும் கூறி மணம் முடித்து வைக்குமாறு தன் தந்தையை பணித்தாள்.
மகள் மேல் கொண்ட பாசத்தால், விருஷபர்வாவை அழைத்து தன் மகளுக்கான திருமண ஏற்பாட்டை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஊரே திருமணக்கோலம் பூண்டது. யயாதி - தேவயானி திருமணம் தேவரும் அசுரரும் பங்கு பெற்று இனிதே நடந்தேறியது.

பின்குறிப்பு: இந்த திருமணம் நடந்ததும், தன் தந்தையை பழித்த சர்மிஷ்டையை பழிவாங்கி தன் பணிப்பெண்ணாக ஹஸ்தினாபுரம் அழைத்துச் சென்றாள் தேவயானி. சர்மிஷ்டை பணிப்பெண்ணாக செல்லவில்லை என்றால் தான் இமயமலை சென்று தவம இயற்ற போவதாக சுக்ராச்சாரியார் கோபித்ததும் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கோரி சர்மிஷ்டையை தேவயானியுடன் அனுப்பினான் விருஷபர்வா. கடைசியில் தேவயானியின் பழிவாங்கும் குணத்தை அறிந்து பணிப்பெண்ணாக தன் அரண்மனை வந்த சர்மிஷடையை யயாதி காதலித்தது மீண்டும் ஒரு காதல் கதை. யயாதி-சர்மிஷ்டையின் மூலமாக பிறந்த புருவின் வம்சத்தில் வந்தவர்கள்தான் பாண்டுவும், திருதிராஷ்டரனும். இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டு போனால் இந்த பின் குறிப்பு 'மெகா' குறிப்பாகி அது மஹாபாரதத்தில் போய் முடியுமாதலால், இந்த காதல் கதையை இத்தோடு நிறைவு செய்கிறேன். இந்த காதல் கதை  எழுதுவதற்கு மிகவும் உபயோகமாக இருந்த வி.ச. காண்டேகரின் யயாதி (தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ) புத்தகமானது ஒரு அல்லையன்ஸ் வெளியீடு.

பின் பின்குறிப்பு: என்னமோ தெரியலை எடுத்தவுடனே இரண்டு பொண்டாட்டி கதையா அமைஞ்சிட்டுது :) :) :)
 --இதிகாச  காதலர்கள் இன்னும் வருவார்கள் 
Picture Courtesy: http://www.vskhandekar.com
 

Sunday, February 21, 2010

சிரித்தாலே இனிக்கும்

போலீஸ்: பின் லேடன் - ஐ  பிடித்தால் ஐந்து லட்சம் பரிசு
சர்தார்: அப்ப அந்த ஐந்து லட்சத்தை எனக்கு தாங்க
போலீஸ்: பின் லேடன் ?!!
சர்தார்: எனக்கு பின் லேடன்-ஐ ரொம்ப பிடிக்கும்.

Friday, February 19, 2010

மஹாதிவ்யா

திக்கு திசையே தெரியாமல் அணைத்து இடங்களிலும் ஒரே கா.......ரிருள்.எங்கும் "ஹோ....." என்று வெறுமையின் பேரிரைச்சல். வெளிச்சம் என்ற ஒன்றையே அறியாத,  வரையறைகளற்ற  ஓர் பெருவெளி. காற்று, நிலம், நீர், தாவரம், புழு, பூச்சி என்று எதுவுமே இல்லாத வெற்றிடம். இந்த காலத்தில்தான் அகில உலகத்தின் ஸ்ருஷ்டி ஆரம்பமாக, அனைத்து ஜீவராசிகளையும் உள்ளடக்கிய,  வற்றாத, அந்தப் பெரிய அண்ட முட்டை இருந்தது. அதன் பெயர் மஹாதிவ்யா. ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பத்திலும் உருவாவது. எவருடைய கற்பனைக்கும் எட்டாத, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்களின் தோற்றக் கலசமாக, மட்டற்ற ஒளியுடன், கோடி சூரிய பிரகாஸமாக ஒளிரும் 'பிரம்மம்' அதனுள் இருந்தது.

முதன் முதலில் இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி பிரஜாபதியான பிரம்மா, ஸுரகுரு மற்றும் ஸ்தாணுவுடன் மஹாதிவ்யாவிலிருந்து வெளிப்பட்டார். அதன் பின்னர் இருபத்து ஒன்று பிரஜாபதிகள் தோன்றினார்கள். அவர்கள் மனு, வஷிஷ்டர் மற்றும் பரமேஷ்டி, பத்து ப்ரசீத்கள், தக்ஷன் மற்றும் அவர் பிள்ளைகள் எழுவர் ஆகியோர் ஆவர். பின்னர் ரிஷிகளின் முதல்வனாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லா வேத வியாசர் தோன்றினார். பின்னர் ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வினி சகோதரர்கள், யக்ஷர்கள் மற்றும் பலர் தோன்றினர். இதன் பின்னர் புனிதமான பிரம்மரிஷிக்களும், உன்னதமான ராஜரிஷிக்களும் தோன்றினர்.




இதற்கு பின்னர்தான், தண்ணீர், ஸ்வர்க்கம், காற்று, ஆகாயம், வருடங்கள், மாதங்கள், பதினைந்து நாள் கணக்கான பக்ஷங்கள், இரவு, பகல் போன்றவை அதனதன் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாய் உருவாயின. இந்த தோற்றங்கள், யுகம் யுகமாக தொடர்ந்து நடக்கும் ஒரு நிகழ்வு. ஊழிக்காலத்தின் பொழுது எல்லாம் அழிந்து, மீண்டும் மஹாதிவ்யாவிலிருந்து அடுத்த யுகம் தோன்றும்.

மேற்கண்ட  காட்சியானது , இந்த அண்ட பேரண்டத்தின் தோற்றம் பற்றி நமது புராணங்களில்   கூறியது. இவ்விளக்கத்தை மெய்யாக்கும் கூற்றை மேலை நாடுகளின் ஆராய்ச்சியும் கூறுகிறது. அதையும் சற்று இப்போது நாம் பார்ப்போம்.

It is natural but wrong to visualize the singularity as a kind of pregnant dot hanging in a dark, boundless void. But there is no space, no darkness. The singularity has no “around” around it.




There is no space for it to occupy, no place for it to be. We can’t even ask how long it has been there—whether it has just lately popped into being, like a good idea, or whether it has been there forever, quietly awaiting the right moment. Time doesn’t exist. There is no past for it to emerge from.





   
And so, from nothing, our universe begins



In a single blinding pulse, a moment of glory much too swift and expansive for any form of words, the singularity assumes heavenly dimensions, space beyond conception. In the first lively second (a second that many cosmologists will devote careers to shaving into ever-finer wafers) is produced gravity and the other forces that govern physics. In less than a minute the universe is a million billion miles across and growing fast. There is a lot of heat now, ten billion degrees of it, enough to begin the nuclear reactions that create the lighter elements—principally hydrogen and helium, with a dash (about one atom in a hundred million) of lithium. In three minutes, 98 percent of all the matter there is or will ever be has been produced. We have a universe. It is a place of the most wondrous and gratifying possibility, and beautiful, too. And it was all done in about the time it takes to make a sandwich.
- A Short History of Nearly Everything By Bill Bryson என்ற புத்தகத்திலிருந்து.......


'பிக் பாங்' (Big Bang) கோட்பாடு என்பதைப் பற்றிய பத்திகள் தான் மேலே குறிப்பிட்டவை. இது நமது  புராணங்களில் விவரிக்கப்பட்டவையை ஒத்து இருப்பதை காணலாம்.

நமக்கு தெரிந்த இந்த விஷயம் "உலகம் பிறந்தது எனக்காக..... ஓடும் நதிகளும் எனக்காக....." என்று பாடிய எம்.ஜி.ஆருக்கு தெரியுமா? :)

Photo Courtesy: http://www.crystalinks.com

Thursday, February 18, 2010

பார்வை ஒன்றே போதுமே - 1.டி.ஆர்.ராஜகுமாரி

டி.ஆர்.ராஜகுமாரி - இயற் பெயர் தஞ்சாவூர் ரெங்கநாயகி ரஜாயி


1943-ல் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடித்த 'சிவகவி' படத்தில் இருந்து.... 
photo courtesy:http://www.appusami.com

பெயர்க்காரணம்

இந்த ப்ளாக் தொடங்கிய சுபயோக சுபதினத்திலிருந்தே தொலைபேசியிலும், அலைபேசியிலும், அரட்டை பெட்டியிலும், ஈமெயில்கள் வாயிலாகவும், கடிதப்போக்குவரத்து மூலமாகவும், காலை வேளை  நடைபயிற்சியின் போதும், காரை நிறுத்தியும், உத்தியோகத்திலும், கடைத்தெருவிலும், முதுகுக்கு பின்னும், முகத்திற்கு முன்னும், விளையாட்டுப்பள்ளி செல்லும் கௌதம் முதல், முப்பது வருடத்திற்கு முன் ரயில்வேயில் ரிடையர்ட் ஆன அனைத்து பல் போன தாத்தா பஞ்சாபகேசன் வரை லட்சோபலட்சம் பேர் கேட்டாயிற்று.

நீ என்ன "தீராத விளையாட்டு பிள்ளை" யா?

மூன்று பெண்களை காதலிக்கும் போது, இரண்டாவது பெண்ணிடம் முதல் பெண் பெயரையும், மூன்றாவது பெண்ணிடம் இரண்டாவதின் நாமகரணத்தை சொல்லி விளையாடும் விஷாலின் சமீபத்திய படத்தால் ஈர்க்கப்பட்ட தலைப்பு அல்ல இது.

வாலிப வயது பிள்ளை ரஜினி சமர்த்தாக இருக்கும்போது, கேசம் நரைத்தாலும் ஆசை நரைக்காத அரச கோலத்து 'நெற்றிக்கண்' அப்பா ரஜினியை அரண்மனை அந்தப்புர பெண்டிர் கோலத்தில் "நாதா நாதா... நாதா நாதா..." என்றழைத்து அவர் புகழ் பாடும் "தீராத விளையாட்டு பிள்ளை ... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..." என்ற திரைப்பட பாடலுக்கும் இந்த தலைப்பிற்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை.



ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டு அலைவரிசைகளில், அரைக் கால்சட்டை போட்டுக் கொண்டு அழகு தேவதைகள் இரு அணியாக பிரிந்து, சமுத்திரராஜனை கரைக்கு அழைத்து வம்பு செய்யும் "பீச் வாலிபால்" விளையாடுவதைப் பார்க்கும் "விளையாட்டு பிள்ளை" இல்லை.

ஸ்கூட்டியில் போகும் பியூட்டியை பார்க்கும் காதல் விளையாட்டு பிள்ளை இல்லை.

மேலிருந்து கீழ் வரை துணியை சுற்றிக்கொண்டு, மறைக்க வேண்டிய பாகங்களை சற்றே மறைக்காமலும், காலில் முக்காலி போல் பாதரட்சைகள் அணிந்து, காதில் மதுரை பக்க கிழவிகளின் தொங்கட்டான் அணிந்து, இடது முன் சக்கரம் பஞ்சர் ஆன அம்பாசிடர் கார் போல நடந்து வரும் பேஷன் டி.வி. பெண்களை(?) நோக்கும் விளையாட்டு பிள்ளை இல்லை.

எம்.டி.சி. பேருந்தில் உள்ளே எவ்வளவு இடம் காலி இருந்தாலும் ஒரு கை கம்பியையும்  ஒரு கால் கடைசிப் படியிலும் இருக்க, மறு கையும் காலும் வெளியே காற்றில் பறக்க "வளையோசை கல கல கலவென" நினைப்பில் கடைசி சீட்டு மாதுவிடம் புத்தகம், மனது இரண்டையும் கொடுத்துவிட்டு ஹீரோ வேலைகள் நிகழ்த்தும் விளையாட்டு பிள்ளை இல்லை.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், பக்கத்து தெரு ரேஷன்கடை, எம்.டி.சி. பஸ், மின்சார ரயில், மாதாந்திர சாமான்கள் வாங்கும் "நீல்கிரிஸ்", தி.நகர் ரெங்கநாதன் தெரு, 'பிரம்மாண்டமாய்' சரவணா ஸ்டோர்ஸ், சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், மற்றும் பிற ஜனசந்தடி மிகுந்த பிரதேசங்களில் கூட, பெண்கள் பின்னால்/அருகில் போகாத, போகத் தெரியாதலால், 'அந்த' விளையாட்டு பிள்ளை இல்லை.

நான் "தீர்ந்த விளையாட்டு", "தீராத விளையாட்டு" வேறுபாடு அறிகிலேன். 'காதல்' சந்தியா படத்தை காண்பித்தால், வெள்ளித்திரையில் ஓய்வு பெற்ற "சங்கமம்" விந்தியா என்று சொல்வேன். அமைப்பு ரீதியாக மட்டுமே ஆண் பெண் வித்தியாசம் அறிய கற்றுக்கொண்டு உள்ளது என் வெள்ளை உள்ளம் படைத்த 'குழந்தை' மனது.

"அறுக்காதே...... காரணத்தைச் சொல்....." என்று கழுத்தில் கத்தி வைப்பவர்கள் சற்று பொருத்தருள்வீர்கலாக! பின் வரும் பத்திகள் பெயர்க்காரணம் சொல்பவை.

சிருங்கார ரசம் ததும்பும், இந்த நூற்றாண்டின் ஈடு இணையில்லா கவிஞன், முண்டாசு கட்டிய இன்பத்தமிழ், கண்ணனை தீராத விளையாட்டு பிள்ளையாக கொண்டாடிய கீழ் கண்ட பாடல் தந்த தலைப்புதான் இது. முழுப் பாடலையும் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் கவனஈர்ப்புக்கு எனக்கு பிடித்த இடங்களை கலரிட்டு காண்பித்துள்ளேன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1.    தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
          தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
     என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
          எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2.    தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
          செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
     மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
          மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3.    அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
          அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
     குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
          குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

4.    பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
          பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
     வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
          வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5.    புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
          பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
     கள்ளால் மயங்குவது போலே - அதைக்
          கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)


6.    அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
          ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
     எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
          எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7.    விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
          வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
     இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
          இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8.    அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
          அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
     எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
          யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9.    கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
          சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
     ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
          அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

அலகிலா விளையாட்டு விளையாடும் அந்த மாயக்கண்ணன், யசோதைக்கு வாயில் அகில உலகம் காண்பித்த, ஆண்டாள், மீராவின் காதல் நாயகன், ராச லீலை புரிந்தவன்,  அன்று ஞாலம் அளந்த பிரான், மேல் கொண்ட பக்தியினால், அவனை இப்ப்ளாக்-ன் நாயகனாக பாவித்து கொடுத்த தலைப்பு இது.

அப்பாடி! எல்லாத்தையும் 'அவன்' மேல போட்டாச்சு. (ரகசியமாய் சொன்ன இந்த கடைசி வரி உங்க காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.)

Tuesday, February 16, 2010

குப்புசாமி C/O சந்திரன்

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயம். நாம் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்று தெரியவில்லை. கண்ணுக்கு குளிர் கண்ணாடி போன்று மூக்கிற்கும் ஓரு வடிகட்டி வரும் காலங்களில் தேவைப்படும். மூக்கில் அடைத்திருப்பது பஞ்சா அல்லது வடிகட்டியா என்று தெரிந்த பின்புதான் கீழே கிடப்பது சவமா அல்லது சதீஷா என்று அறிய வேண்டிய காலம் ஒன்று வரலாம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் உபயோகப்பட்டது நிரந்தரமாக தேவைப்படும். அந்த அளவிற்கு காற்று மண்டலம் மாசடைந்து விட்டது. "Water is the Elixir of Life" என்பார்கள். வானோர்களின் கொடையாகவும் சர்வ ரோகங்களையும் கூட  சொஸ்தப்படுத்தும்  அமிர்தத்திற்கு ஒத்து இருந்த தண்ணீர் இப்போது இந்த தரணியில் எங்குமே வாயில் வைக்க முடியாதபடி உள்ளது. சற்று ஆழமாக தோண்டி சாலை போடுவதற்கு முயன்றால் அங்கு கழிவுநீர் காட்டாறாக பெருக்கெடுத்து ஓடுவதை நாம் சென்னையில் எங்கும் காணலாம். இதனால் 'சுத்தகரிக்கப்பட்ட'  நன்னீர், சிங்கம்பட்டி  மற்றும் சிங்கப்பூர்  நிறுவனங்களால் ரயில்நிலையம், பேருந்து நிறுத்தங்கள், பொட்டி கடை, வணிக வளாகம், நிற்கும் பேருந்து, ஓடும் பேருந்து என்று மனிதன் நடமாடும் இடம் எங்கு  பார்த்தாலும் பாலிதீன் பாக்கெட்டிலும் போத்தல்களிலும் நயமான விலையில் விற்கப்படுகிறது.  ஆட்டோக்களும், மாநகர பேருந்துகளும், இன்ன பிற ஹோர்ணில் வைத்த கை எடுக்காமல் ஓசை எழுப்புபவர்களாலும், மிக விரைவில், ஒலி மாசுபடுவதால் எரிச்சல், படபடப்பு, இருதய கோளாறுகள் போன்ற நோய்களால் அவதியுறும் நிலையும்  உளவியல்ரீதியாகவும்  மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி இந்த பூலோகம் உபயோகப்படாமல் போனால் நாம் இனி சந்தடி மிகுந்த சைதாபேட்டையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரே சந்திரனில் குடியேறலாம்.

சமீபத்தில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன் - I என்ற விண்கலம் பல அறிய தகவல்களை சேமித்து நமக்கு அனுப்புகிறது. குழாயடியும் சண்டையும் உள்ளதா என்று தெரியாது ஆனால் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது தெரிகிறது.



உயிர் வாழ குறைந்தபட்சம் வயிற்றிக்கு தயிர் சாதம், மானத்தை மறைக்க துணி, வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் இம்மூன்றும் அவசியமாகிறது. இதில் தண்ணீர் இருப்பதாக தென்பட்டதால் வயிற்றிற்கு வகை செய்தாயிற்று. இப்போது அங்கே இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 380 மீட்டர் அகலமும் கொண்ட குகை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதலால் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தாயிற்று. இனிமேல் நிலா காட்டி குழந்தைகளுக்கு சோருட்டிய காலம் போய், நிலவில் சோருட்டகூடிய காலம் தலைப்பட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களை நிழற்படமாக அனுப்புவது டி.எம்.சி எனப்படும் டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera). இது இருபது கி.மீ எல்லை வரை படங்கள் எடுக்கவல்லது.

அப்துல் கலாமுக்கு சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என பரவலாக ஒரு வதந்தி ஊரில் உள்ளது. பூமியில் எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்தவர்கள் இனி சந்திரனுக்கு ஒரு உல்லாச சுற்றுலா செல்லலாம். தங்களது திருமண வைபவத்தை சந்திரன் மஹாலில் நடத்தலாம். ஒத்து வராத மாமியாரை சந்திரனிலும், மருமகளை பூமியிலும் குடியமர்த்தலாம். அரசியல்வாதிகள் பினாமிகளை வைத்து ஒரு வணிக வளாகம் கட்டலாம். நாயர் சாயா கடை போடலாம். இளம் ஜோடிகள் நிலவில் 'தேனிலவு' கொண்டாடலாம்.   மிக குறைந்த கட்டணமாக  மூன்று ரூபாயை 'மை ட்ரிப் டாட் காம்'  அறிவித்து 'மூன்பஸ் 320A' வில் ஒரு கும்பலை அனுப்பலாம்.  அந்த சந்திரன் ஒத்து வரவில்லை என்றால், சந்திரனுக்கு சந்திரனில் குடியேறலாம். சந்திரனில் பூர்வ குடியாக ஆசையா? உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
சோமன்,
நிலா ரியல் எஸ்டேட்ஸ்,
1, ஆர்ம்ஸ்டிராங் தெரு,
அப்போல்லோ விண்வெளி பள்ளம் அருகில்,
சந்திரன்.
000 001.
நிலா பேசி: ED.1A.88.79 (பதினாரிலக்க எண்)
செயற்கைக்கோள் பேசி: 5-001-000-00001 (ஐந்து என்பது, இந்த புவிக்கு சந்திரன் ஐந்தாவது பெரிய இயற்கையான செயற்கைக்கோள். (Natural Satellite).
Photo Courtesy: http://www.chandrayaan-i.com

Monday, February 15, 2010

ஆட்டோ ராஜாக்கள்


கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் வாசலில் எப்போதும் 'ஜே ஜே' என்று தேர் கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும். ரேஸ் கோர்ஸ் எதிரில் கிண்டி தொடர்வண்டி நிலையம் உள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். இந்த ஜென்மமே ரேஸ் விளையாட எடுத்தது போல கர்ம சிரத்தையாக ஒரு கூட்டம் எப்போதும் அங்கே சுற்றி அலைவதுண்டு. ரேஸில் தோற்ற பாபப்பட்ட ஆத்மாக்கள் நாளை எப்படி ஜெயிப்பது என்ற நினைப்பிலும், ஜெயித்த கோஷ்டியினர் நாளை எப்படி இன்னும் அதிகம் கெலிப்பது என்று அந்தரத்தில் பறந்தும் சாலையை கடந்த வண்ணம் இருப்பர். இருசாராரிலும் ஒரு சிலர் கார், பஸ் மற்றும் சைக்கிளைக்கூட இருபக்கமும் போக விடாமல் ரோடில் நின்று லாப நஷ்ட கணக்குளையும் அன்றைய செலவாணியையும் பற்றி தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இதற்கிடையில் ஒரு காரின் இடது பக்க கண்ணாடியில் தனது முகம் பார்க்க வருவதுபோல் வந்த ஒரு ஆட்டோ அப்படியே அதன் முன் சென்று பிள்ளையாரை வலம் வரும் பக்தன் போல் இடமிருந்து வலம் திரும்பி, வலது பக்கத்தில் பல இடையூறுகளை கடந்து வந்து கொண்டிருந்த எம்.டி.சி பேருந்தை நிற்க வைத்து வலது கோடி ரேஸ் கோர்ஸ் சுவர் பக்க ஓரத்தில் இருந்த தனது "xxxx xxxx சங்க ஸ்டாண்டு" வில் நின்றது. அதன் ஓட்டுனர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். கணேஷ் பீடி பிடிப்பது ஒன்றுதான் இப்புவியில் இந்த தருணத்தின் அதிமுக்கியமான வேலை என்று ஒரு பஸ், கார் போன்றவற்றை நிறுத்திய வெற்றியின் களிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. இவ்வளவு நடந்தது ஒன்றுமே தெரியாததுபோல தன்னுடைய சக நண்பருடன் தினத்தந்தியில் வந்த அன்றைய முக்கிய கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய விவாதத்தை தொடர்ந்தார்.

இது போல் நிகழ்ச்சிகளை சென்னையில் பலரும் எதிர்கொண்டிருக்கலாம். சில பல நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கீழ்வரும் ஆட்டோ வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. அச்சம் தரும் (அச்சமற்ற)ஆட்டோ
ஏதோ ஒரு எப்.எம் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். முன் சீட்டில் காக்கி சட்டைக்கு பதில் கலர் சட்டை உட்கார்ந்திருக்கும். ஒட்டுபவருக்கு முன் பகுதி முடியில் சிகப்பு வண்ண சாயம் பூசியிருக்கும். சீட்டில் இடம் இருந்தால் கூட எப்போதும் ஓவர்லோடு அடிக்கும் போது ஒருவரை பக்கத்தில் உட்கார்த்தி சவாரி அடித்த பழக்கத்தால் இடம் விட்டு ஒரு 45 டிகிரி சாய்வாக ரோடை பார்க்க உட்கார்ந்திருப்பார். ஆட்டோவின் பின் புறம் சிவப்பு/மஞ்சள் வண்ணத்தில் ஆங்கில எக்ஸ் குறி அல்லது ஒன்னாம் நம்பர் மிக பெரியதாக இரண்டு அல்லது மூன்று முறை போட்டிருக்கும் . இதுதான் அச்சமற்ற ஆட்டோவின் அடையாளங்கள். இவர்கள் லெப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள்.

2. தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ
கைலி அல்லது லுங்கி உடுத்தியிருப்பார். எப்போதும் கண்கள் வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு காலை மடக்கி சிவன் கோவிலில் கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் இருப்பார். பின்புறம் ஒபாமாவே வருவதாக ஓசை வந்தாலும் தன்னை வருத்திக் கொள்ளமாட்டார். ஆட்டோ இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அது அதிசயம். அவர் மட்டும் சாலை  வரி செலுத்துபவர் போல நடு சாலையில் செல்வார்.

3. சவாரி ஆட்டோ
ரோடில் மையமாக இருபது கி.மீயில் இம்மியளவும் வலது இடது திரும்பாமல் ரசமட்டம் பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் சென்றால் அது சவாரி ஆட்டோ.

4. சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ
சாலையின் இடது ஓரத்தில் இருந்து பத்து அடி உள்ளே மித வேகத்துடன் சென்று கொண்டிரு, மனைவி பிள்ளைகளுடன் அவதியுடன் நிற்கும் கணவர்களை பார்த்தோ, யாரையோ எதிர் நோக்கும் உதட்டு சாய புஷ்டியான இளம் பெண்ணிடமோ, தேமேன்னு ஓரமாக நிற்கும் தேசல் பாட்டியையோ சாலையின் இருமருங்கிலும் பார்த்தால் சடாரென்று எந்த பக்கமாக இருந்தாலும் திருப்பி தலையை வெளியே நீட்டி "எங்க போணும்?" என்றால் அது சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ.

5. "டர்" ஆட்டோ
ஒரு தகர டப்பாவில் கயிறு கட்டி, தார் சாலையில் கட்டி வேகமாக இழுத்தால் வரும் சப்தம் கேட்டால் அது ஒரு நவீன யுக சப்த ஆட்டோ. ஊர் திருவிழாக்களில் மரணக்கிணறு என்று ஒரு ஐட்டம் உண்டு. கிணறு போன்ற ஒரு பள்ளத்தில் ஒரு மோட்டார்பைக்கில் காது குடையும் சப்தத்துடன் வேகமாக மேலும் கீழும் ஒட்டுவர். அதுபோன்று "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................." என்ற ஒலியுடன் ஒளி என சென்று கேட்டவர்களின் காதை கே. காதாக மாற்றும் ஒலி மாசு ஆட்டோ.

6. "ஷேர்" ஆட்டோ
ஆண் பெண், மணமானவர் ஆகாதவர், கிழவன் கிழவி, குளித்தவர் குளிக்காதவர், உடலுக்கு/சட்டைக்கு நாற்ற மருந்து அடித்தவர் அடிக்காதவர், ஒல்லி பெண் குண்டு பையன், ஒல்லி பையன் குண்டு பெண்மணி, மொபைலில் சதா சிரித்து பேசிக்கொண்டே பயணம் செய்பவர், வெளியே வேடிக்கை பார்த்து உள்ளே பக்கத்து பெண்ணின் பேச்சை கேட்பவர்கள், நடுத்தர வயது, முடி உள்ளவர் அல்லாதவர், மஞ்சள் துணிப்பை வைத்திருப்பவர் ஆபீஸ் பேக் சுமப்பவர், இளவயது ஜோடி, சில்லரை வைத்திருப்பவர் இல்லாதவர், அரசுப் பணி தனியார் பணி சொந்த 'தொழில்' செய்பவர், சேலை அணிந்திருப்பவர் சுடிதார் போட்டவர், கண்ணாடி அணிந்தவர் அணியாதவர், ஹிந்தி பேசுபவர் 'தமிலில்' பேசுபவர்கள் என பால், மொழி, இன, மத வேறுபாடுகளின்றி ஒரே சவாரியில் அரை பஸ் கூட்டத்தை ஏற்றி பயணத்திற்கு பத்து ரூபாய்க்கு வருவது இந்த பங்குச்சந்தை(ஷேர்) ஆட்டோ.

இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்கள் இப்பட்டியலுக்காக என்னை மன்னிப்பார்களாக!

பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்"  என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.

Image Courtesy: http://autorickshaw.com

Thursday, February 11, 2010

சினிமாவில் மழை


காலையிலிருந்து ஊருக்கே குடை பிடித்தாற்போல் இருந்தது வானம். நான் பிறந்த ஊரில் மழை பெய்தால் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். தண்ணீர் தேங்காத சாலைகள். ஊரையே அலம்பி சுத்தம் செய்த பிறகு, கருப்பாக இருக்கும் தார் ரோடு, மூக்கை துளைத்து மூளையில் இறங்கும் மண்னின்  வாசம். வேப்ப மரத்தில் இருந்து முத்து முத்தாக சொட்டும் துளிகள். அந்த நீர் சொட்டும் மரத்தடியில் இரண்டு குட்டிகளுடன் ஒதுங்கி "மே... மே...." என்று இறைஞ்சி மழையை விடச்சொல்லும் கரிய நிற ஆடு. மழை விட்டவுடன் 'அக் அக்', 'க்ரீச் க்ரீச்" சொல்லி பறக்கும் பறவைகள். சாலையில் வேகமாக செல்லும் பேருந்தின் ஈரம் கலந்த டயர் சத்தம். எங்கிருந்தோ பச்சை வாசனையுடன் காற்றினில் வரும் இதமான குளிர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குளித்து தலை துவட்டி புத்துணர்வுடன் நிற்கும் வாலிபனை போன்ற பசேல் என மரங்கள். நீல வானுக்கு கருப்பு திரை போட்ட மேகங்கள், ஒன்றை ஒன்று துரத்தி விளையாடும் காட்சிகள். யாரோ ஈர மண்ணில் நடக்கும் போது எழும் ஹவாய் செருப்பின்  "டப் டப்" சப்தம். மனதை மகிழ்விக்கும் மழை அது. சென்னையில் மழை பெய்தவுடன் முதலில் வருவது சாக்கடை நாற்றம். சரி சரி அது இல்லை இன்றைய தலைப்பு. சினிமாவில் வரும் மழை பாடல்கள் அப்படியே வந்து நெஞ்சில் நின்றது. என் நினைவில், நெஞ்சில் நின்ற சில பாடல்கள் உங்களுக்கும்...
(கிழே வரும் இப்பட்டியலும் வரிசையும் ஒருவருக்கொருவர் மாறலாம்)

இசை ஞானி இசையில், எஸ். ஜானகியின் குரலில், இன்று நீ நாளை நான் படத்தில், சிவகுமார் முன் மகிழ்ச்சியாக தட்டாமாலை சுற்றி ஆடும் லக்ஷ்மி பாடும்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.....
அட எண்ணம் ஊறுது, வண்ணம் மாறுது கண்ணோரம்......


==============================================================
சங்கர் கணேஷ் இசையில், எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடிய, அம்மா படத்தில், சரிதா, பிரதாப் போத்தன் 'இணைந்து' நடித்த

மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா .....
சாரல் விழும் நேரம் .... தேவ மயக்கம்.....  கூந்தல் மலரில் தேனை எடுக்க காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க.....


===================================================================

இளையராஜா இசையில், டி.எல்.மகாராஜன், சுசீலா அம்மா பின்னணியில், மணியின்  நாயகனில், கமலஹாசன் வேலு நாயக்கர் ஆன

அந்தி மழை மேகம்
தங்க மழை தூவும்
திருநாளாம்....


=========================================================
இளையராஜா இசையில், எஸ்.ஜானகியின் நெஞ்சு நனைக்கும் குரலில், புன்னகை மன்னனில் ரேவதி குடை விட்டெறிந்து ஆடும்

வான் மேகம்...
பூப்பூவாய் தூவும்
தேகம் என்னவாகும்...
இன்பமாக நோகும்....

=========================================================================
ஜி.கே.வெங்கடேஷ் இசையில், எஸ்.பி.பி யின் தேன் குரலில், நான் பிறந்த அடுத்த வருஷம் வெளிவந்த பொண்ணுக்கு தங்க மனசு படத்தில், சிவகுமார் மற்றும் நனைந்த ஆடையில் காதல் தூக்கலாக ஜெயசித்ரா காதலிக்கும்

தேன் சிந்துதே வானம்...
உனை எனை தாலாட்டுதே....
மேகங்களே தரும் ராகங்களே ...
எந்நாளும் வாழ்க...


====================================================================
எம்.எஸ்.வி & இளையராஜா இன்னிசையில், எஸ்.பி.பி.யின் குரல் சாரலில், செந்தமிழ் பாட்டு படத்தில் பிரபு கையில் கொலுசு தட்டி கஸ்தூரிக்கு பாடும்

சின்ன சின்ன....
தூறல் என்ன....
என்னை கொஞ்சும்....
சாரல் என்ன....

========================================================================
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியில், ஸ்ரீனிவாஸ் பாடிய, தாஜ் மஹால் படத்தில், பாரதிராஜாவின் புத்திரன் மனோஜ் கையில் தாஜ் மஹால் நனைத்து ஆடும்

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு ...
குடை ஒன்னு குடை ஒன்னு தா கிளியே....
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு ..
வெட்கம் விட்டு வெட்கம் விட்டு வா வெளியே....


================================================================
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், உன்னி மேனன் பாடிய, ரிதம் படத்தில், அர்ஜுன் செல்லும் நீர் நிறைந்த இடங்களில் வரும் பாடல்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே...
அடி நீயும் பெண்தானே...
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே...
நான் கேட்டால் சொல்வேனே....


===================================================================
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மலையாள எம்.ஜி.ஸ்ரீகுமார் பாடிய, என் சுவாச காற்றேவில், அரவிந்த்சாமி இஷா கோபிகரை பார்க்காமல் நனையும்

சின்ன சின்ன மழைத் துளிகள் சேர்த்துவைப்பேனோ......
மின்னல் ஒளியில் நூல் எடுத்து கோர்த்து வைப்போனோ...
சக்கரவாகமோ....


===============================================================
ஏ.ஆர்.ரஹ்மானின் கலக்கும் இசையில், ஸ்ரேயா கோஷல் பாடிய, மணிரத்னத்தின் குரு படத்தில், ஐஷ் குதியாட்டம் போட்டு நம்மையும் போட வைக்கும்

வெண்மேகம் முட்ட முட்ட
பொன்மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக்கொண்டதோ..


===================================================================

Wednesday, February 10, 2010

கேமரா 'மேன்'

 வைட்டமின் டி (vitamin D) என்ற நிறுவனம் இந்த மாதம் ஒரு புதிய வலைக்காமரா மென்பொருள் ஒன்றை தயாரித்துள்ளது. இனிமேல் உள்ளே சென்றது ஆடா, மாடா, புலியா, பூனையா அல்லது டி.கல்லுப்பட்டி கணேசனா என்று இவர்கள் தயாரித்துள்ள கேமரா மூலம் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். பல மாடி கட்டிட கடைகளில் மூலைக்கு மூலை சுவற்றில் பல்லி போல ஓட்ட வைத்து தொந்தி பெருத்த முதலாளி கல்லாவில் உட்கார்ந்து பார்த்த வண்ணம் இருப்பார், ஏதோ இந்தியா பாகிஸ்தான் மாட்ச் போல.இந்த புதுவரவின் பயன்பாடு இது போன்ற காரணங்களுக்கு அவசியம் இல்லை என்றாலும், சில முக்கியமான, விசேஷ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை திருப்திபடுத்தும்.

இந்த வலைகேமரா முதலில் இணையத்தில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்டது. ஒரு காலத்தில் காமெரா என்பதே கல்யாணம், சீமந்தம், ஆயுட்ஷேமேம், காது குத்து, குச்சி கட்டும் ருது சாந்தி போன்றவற்றிக்கு அசோக் போட்டோ ஸ்டுடியோ குமார் வந்து, கும்பலாக எல்லோரையும் நிறுத்தி, பல் எடுப்பாக இருப்பவர்கள் குறைவாக மோனலிசா புன்னகை புரிவதை புரிந்து கொள்ளாமல், "நல்லா சிரிங்க" என்று படுத்தி, "ரெடி .. ஸ்மைல் ப்ளீஸ்" சொல்லி, கோயில் சிலை போல கொஞ்ச நேரம் நிறுத்தி, "ஓகே" என்று எடுத்து கொடுப்பதற்காக இருந்தது. ஒரு பொறியில் படிப்பு காலவரம்பிற்கு உட்பட்ட நேரத்தில் இந்த கேமரா தொழில்நுட்பம், கைபேசி, மடிக்கணினி, டிஜிட்டல் கேமரா, ஹாண்டி கேமரா என்று சகலரும் சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம் கணக்காக 'கிளிக்' பண்ணுவதற்கு எதுவாக முதிர்ச்சி அடைந்தது.

நாளடைவில் இந்த தொழில்நுட்பம்,  நாம் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது வீட்டின் மீது ஒரு கண் வைப்பதற்கும், ஓட்டலில் சமையல்காரர் சங்கர ஐயர் முந்திரி, பாதாம் எடுத்து வாயில் போடுகிறாரா என்பதற்கும், நம்ம வீட்டு ப்ருனோ சுற்றி சுற்றி காவல் காக்கிறதா என்பதை நாம் கண்காணிப்பதற்கும், என்பது வயது என்.டி.திவாரியின் 'சரஸ லீலா'வை படம் பிடிக்கவும், பங்காரு லக்ஷ்மன் 'அன்பளிப்பு' வாங்குவதை தெஹெல்கா சுருட்டவும், கல்லூரி மாணவிகளை வைத்து சக மாணவர்கள் கொக்கோகம் சினிமா உருவாக்கவும், தேவனாதன்கள் கோயிலில் குவளையர்களை குலாவுவதை தனக்கு தானே எடுத்துக்கொள்ளவும் உபயோகப்படுவதாகிவிட்டது. நண்பரின் ஐந்து வயது மகள் அவருடைய நோக்கியா மூலம் தனக்கு தானே படமெடுத்து மகிழ்கிறது. பாம்பைத் தவிர எல்லோரும் இப்போது டிஜிட்டலில் படம் எடுக்கிறோம். கூகிள் சாட்டிலைட் மூலமாக நாசாவிலுருந்து நரசிங்கம்பேட்டை வரை உலகத்தையே படம் எடுத்து வைத்திருக்கிறது.

தற்சமயம் எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வாசலில் இருந்து கொல்லை வரை, கழிப்பறைகள் நீங்கலாக இந்த காமேராக்கள் மூலமாக தங்கள் ஊழியர்கள் மேல் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். அறையில் உட்கார்ந்தபடியே மேலாளர் சீனிவாசன் தமிழ்ச்செல்வி யாரை பார்த்து சிரிக்கிறாள், ரேகா எவ்வளவு நேரம் அலைபேசியில் கதைக்கிறாள், கோபாலன் சீட் எவ்வளவு நேரம் அவன் இல்லாமல் வெறுமையாக இருக்கிறது போன்ற இன்றியமையாத சமாச்சாரங்களை மிக எளிதாக அவர் வேறு வேலையே செய்யாமல் அறியமுடிகிறது. என்றாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அன்று இந்த வலைகாமேராக்கள் மூலம் கணினியில் பதிவு செய்ததை புலனாய்வு அதிகாரிகளுடன் அமர்ந்து ப்ரிவ்யூ தியேட்டரில் படம் பார்ப்பது போல எல்லா அசைவுகளையும் பார்த்து கள்வனை கண்டு பிடிப்பார்கள். அதற்க்கு வசதியாக இப்போது இவர்கள் தயாரித்துள்ள வலைகாமேரா மனிதர்களை மட்டும் தனியாக அடையாளம் கண்டு கொள்ளும் நுட்பத்தை பொதிந்திருக்கிரார்கள். இதனால் கணினியில் கள்வனை தேடும் பணி இலகுவாகிறது. 2007 ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 'செயற்கை நுண்ணறிவு' திறன் கொண்ட மென்பொருள் ஒன்றை தயாரித்து வெளியிட்டுயிருக்கிறது.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறைகள் தவிர, இந்த மென்பொருள் மூலம் பயனடையும் மற்றுமொரு பெரிய துறை கேளிக்கை. தற்போதைய யூட்யூப் போன்ற காட்சி தேடல் இணையங்களில் உதவி வார்த்தைகள் மூலமாக குறுப்பிட்ட நிகழ்படம் கிடைக்கிறது. இந்த புதிய மென்பொருள் மூலம் கமலஹாசனின் எந்த நிகழ்படத்தையும் வார்த்தைகள் இன்றி தேடி கண்டு மகிழலாம். மாரி, கபாலி, கண்ணாயிரம் போன்றோரின் மாதிரிகளை கணினியில் உள்ளிட்டு அவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்தலாம் அல்லது அலாரம் அடிக்கவைத்து காவலர்களை அழைக்கலாம். இது போன்று பல பயன்பாடுகளின் துவக்கம் இந்த அறிய முயற்சி.

Monday, February 8, 2010

பெங்களூரு பாட்டுக்காரன்

சமீபத்தில் அலுவல் காரணமாக பெங்களூரு சென்றிருந்தேன். மிக அற்புதமான சீதோஷ்ணம். நான்கு நாட்கள் சேர்ந்தார்ப்போல் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் களைப்படையாமல் வேலை செய்யலாம். என்ன இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பிறழாமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தோம். நல்ல போக்குவரத்து நெரிசல். உங்கள் இஷ்ட தெய்வமே எதிர் பக்கம் நின்றாலும் இரண்டு தெரு கிழக்கிலும் மேற்கிலும் சென்று வடக்கிருந்து எதிர்சாரிக்கு செல்லலாம். அவ்வளவு ஒரு வழிப்பாதைகள். 'வாழ்கையே ஒரு ஒருவழிப்பாதை' என்று எங்கோ எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது.

இன்பான்ட்ரி ரோடு சிக்னலில் காத்திருந்தோம். திடீரென்று நில அதிர்ச்சி வந்தது போல் எங்கள் வண்டி குலுங்க ஆரம்பித்தது. வெளியே 'டம் டம்' என்று ஒரு சப்தம். ஜீப்பின் கதவில் கை வைத்தால் நமது உடம்பு லேசாக நடுங்கியது. வெளியே எட்டி பார்த்தேன். ஒரு வெளிநாட்டு உயர்ரக காரின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து விட்டு, மார்கழி மாதம் மாரியம்மன் கோயிலில் கூம்பு
ஸ்பீக்கர் கட்டிய மாதிரி சப்தத்துடன் இசை பொழிந்து கொண்டிருந்தது. பாட்டு தனக்கு இல்லை என்பது போலவும், ஓமன் போன்ற படங்களில் பேய் படங்களில் சைத்தான் ஏறியவன் வெறித்து பார்ப்பது போல் ரோட்டை பார்த்த விழி பார்த்தபடி ஒரு யுவன் இருந்தான். கைகள் மட்டும் ஸ்டியரிங்-ல் தாளமிட்டபடி இருந்தது. அவன் ஒரு தேகப்பயிற்சியாளன் என்பதற்கான அடையாளங்களை கால் பாகம் கை வைத்த நீல கலர் டிஷர்ட் காட்டியது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல சிக்னல் விட்டவுடன் பறந்து போனான். நீண்ட நேரம் என் காதிற்குள் "டம் டம்" கேட்ட வண்ணம் இருந்தது.

ரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....


2007-ல் இந்த ப்ளாக்-ஐ தொடக்கி, மிக சீக்கிரமாக 2010-ல் எழுத ஆரம்பித்திருக்கும் நான், என்னவோ, என்னல்லாமோ, இப்படியோ, அப்படியோ, பார்கரதையோ, கேட்கரதையோ, படிக்கரதையோ, எதையோ எப்படியோ எழுதலாம்னு ஆசை. ஆசையே துன்பத்திற்குக்கெல்லாம் காரணம் என்றார் புத்தர். எழுத்துப் பித்து அதிகமாகி என்னுடைய இந்த ஆசையே மற்றவர்களின் துன்பத்திர்க்கெல்லாம் காரணமாக இல்லாமல் இருக்குமாறு எங்கும் நிறைந்த பரம்பொருளை வேண்டி ஆரம்பிக்கிறேன்.

பின் குறிப்பு: டைட்டிலை கண்டு மிரள வேண்டாம். மூளை பலகீனம், இருதய பலகீனம் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை படிக்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் முடிந்தால் படிக்க முயன்று பார்க்கவும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails