"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி.." என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் தெரியவில்லை. "ஈ...." என்று முப்பத்திரெண்டும் தெரிய 'மய்யமாக' இளித்துவைத்தேன். வாயைத் திறந்தால் பொறிக்குள் எலியாகச் சிக்கிக்கொள்வோம் என்று தெரியும். ஒன்றிரண்டு நாள்கள் சென்ற பிறகு காலையில் கல்லூரி முடிந்து வந்து மத்தியான்ன போஜனம் ஆகிக்கொண்டிருக்கும் போது சாதத்துக்குக் கெட்டித் தயிர் இரண்டு கரண்டி ஊற்றிய பாட்டி முகத்தருகே குனிந்து கேட்டாள்.
"தம்பி.. தெக்குத் தெருவில ஒரு வாத்யார் ஹிந்தி கத்துத்தரார்... அவரண்ட வாசியேண்டா... நாளைக்கு வடக்கே போனா பிரயோஜனமா இருக்குமோல்யோ?"
இந்த வேதாளத்தைப் பன்மொழி வித்தகனாக்கும் முயற்சியில் சற்றும் தளராமல் விக்கிரமாதித்த கிழவியாய்க் கேட்டாள். பல்லிடுக்கில் சிரிப்பு தொங்கியது. தலையைத் தூக்காமல் தட்டைப் பார்த்துச் சாப்பிட்டேன். கை அலம்ப எழுந்திருக்கும் போது.....
"பாட்டீ! காலேஜ் போயிட்டு ரெண்டு மணி மூணு மணிக்குதான் வரேன்.. இதுக்கும் மேலே எங்கே போயி படிக்கிறது? நேரமேயில்லையே..."
"வடகரை மணி டீக்கடை வாசல்ல இறங்குடா.. அப்டியே காலாற நடந்து போனின்னா தெக்குத் தெரு ஹிந்தி வாத்யார் ஆத்துக்குப் போயிடலாமே... ஒரு மணி வாசிச்சுட்டு வந்தியாக்க... சூடா தோசை வார்த்துப் போடறேன்... அப்புறமா நீ ஒன் மட்டையைத் தூக்கிண்டு ஆடக் கிளம்பலாம்..."
என்னுடைய நாளின் முழு ப்ரோக்ராமும் பாட்டி தன் உள்ளங்கையில் வைத்திருந்தாள்.
"ப்ராக்டிகல்ஸ் வரும்... செமஸ்டர் வரும்... அப்போல்லாம் படிக்க முடியாதே... அரைகுறையாயிடுமே..."
மனசுக்குள் பச்சைத் தமிழனாய் ஹிந்தி எதிர்ப்பு அலைமோதியது. அது ஹிந்திக்காக அல்ல. எதை அதிகப்படியாக படிக்கச் சொன்னாலும் பருவ வயது களியாட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்பதால் வரும் நொண்டிச் சாக்கு. ஹிந்திக்குள் தலையை விட்டுவிட்டால் ஊர் சுற்ற முடியாது. ஏக் தோ தீன் நினைவுக்குள் வந்து படுத்தி தகிடதகிமி என்று ஆடியது.
"போடா பைத்தாரா... (பயித்தியக்காராவின் பாட்டி பாஷை மரூஉ).. இப்ப மட்டும் எப்பப் பார்த்தாலும் பாட பொஸ்தகம் வாசிச்சிண்டு இருக்கியாக்கும்... எப்போப்பார்த்தாலும் வடக்குத் தெரு மதில்கட்டை... இல்லே மட்டையாடக் கிளம்பிடுவே.. இல்லேன்னா ஸ்நேகிதாளோட ஊர் மேய வேண்டியது... இராப்பகலா பொஸ்தகத்தை கீழே வைக்காம படிக்கிறியாக்கும்... உருப்படியான வேலை பாருடான்னா... சாக்குபோக்கு சொல்லிண்டு திரியறே... வர்ற அமாவாசைலேர்ந்து போ.. நல்ல நாள்.. வெத்தலை பழம் பாக்கு வாங்கிண்டு போய் அவருக்கு வச்சுக்கொடுத்து நமஸ்காரம் பண்ணிட்டு ஹிந்தி வாசிக்கிற வழியைப் பாரு..."
அவ்ளோதான். தீர்ப்பு எழுதிவிட்டாள். வீட்டுக்குள்ளேயே ஹிந்தித் திணிப்பு. பாட்டியைப் பகைத்துக்கொண்டு ஹரித்ராநதியில் காலம் தள்ள முடியாது. அவளது உத்தரவுக்கு கீழ்ப்படியும்வரை தொணதொணவென்று வார்த்தைகளாலேயே சுள்சுள்ளென்று அடிப்பாள். எல்லை தாண்டும் சீனாவே சாரதா பாட்டியின் வாய்க்குப் பயப்படுமளவிற்கு ரேஸர் நாக்கு. கன்னாபின்னாவென்று கண்டிப்பு கறார் பேர்வழி.
தெற்குத் தெரு ரவி வீட்டிற்கு நாலைந்து வீடு தாண்டி ஜைனன் மல்லிகார்ஜுன் இருந்தான். தெற்கு தெருவில் கிரிக்கெட் விளையாடும் நான்கு பேரில் அவனும் ஒருத்தன். "மல்லி... அடுத்த ஓவர் போடு" என்றால், கை வைத்த பனியனோடு வேகப் பந்து வீசுவான். இல்லை. எறிவான். ஏதோ கை கழன்று போவது போல சுழற்றி எறிவான். அவன் வீட்டிலிருந்து ஒரு படித்துறை தாண்டி ஹிந்தி வாத்யார் வீடு.
"ஹிந்தி சார் எத்தனை மணிக்கு இருப்பாரு?" என்று எங்கள் கிழக்குத் தெருவில் படிக்கும் ஏழாம் வகுப்புச் சிறுமியிடம் கேட்டேன்.
"ஹிந்தி சார்னு சொல்லக்கூடாது. அவரை அத்யாபக்னு" கூப்பிடணும் என்று சொல்லிச் சிரித்தது. ஐயகோ! அடிப்படையே தெரியவில்லையே என்று எனக்குப் பக்கென்று இருந்தது. கண்ணாமுழி பிதுங்கி வெளியே விழ ஒரு வழிசல் சிரிப்பை உதிர்த்தேன்.
"காலம்பரலேர்ந்து வீட்லதான் இருப்பாரு... சாயந்திரமா கடைத்தெருவுக்குப் போவாரு" என்று அவரது தினப்படி செயல்திட்டத்தைத் தெரிவித்தது அந்தப் பொடிசு.
வெற்றிலைப் பாக்கு பழம் தட்சிணையுடன் அத்யாபக்கை அவர் வீட்டு திண்ணையில் சந்தித்தேன். நமஸ்காரம் செய்தேன். நறுநெய் தடவி மீசை வளர்த்திருப்பார். ஹிந்தி பாரதியார். ஒரு கோணத்தில் ஐயனார் கோயில் வாசலில் இருக்கும் மதுரை வீரன் சிலை மாதிரியே அச்சு அசல் இருப்பார். அதே உயரம். அவருக்கு கண்கள் இரண்டும் இரண்டு பக்கமும் பார்க்கும் வசதியிருந்தது.
"ம்... அந்த பொஸ்தகத்தை பிரிங்கோ" என்று அவர் சொல்லும்போது வாயிலிருந்து பிரிபிரியாய் வெற்றிலைச் சக்கை சிதறும். திண்ணையில்தான் வகுப்பு. ஏக் காம் மே... ஏக் கிஸான் சொல்லி தலையில் குட்டு வைக்கல்லாம் மாட்டார் என்ற தைரியம் எனக்கிருந்தது. கதரில் V கழுத்து ஜிப்பாவும் அரைக்கு வேஷ்டியும் கட்டியிருப்பார். அவருக்கு திருமணமாகாத ஒரு மகள் இருக்கிறார் என்பது தெருப் பசங்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். நிலைவாசல் மரக்கதவு எப்போதும் உள்ளே தாளிடப்பட்டிருக்கும். வகுப்புக்கு கொஞ்சம் முன்னால் போனால் கூட கதவைத் தட்டி திண்ணையில் காத்திருந்தால் வெற்றிலை மென்றுகொண்டே அவர் உருவம் நுழையுமளவிற்கு மட்டும்... அவ்ளோதான்.. தம்மாத்தூண்டு.... கதவைத் திறந்துகொண்டு வந்து ஒரு ஈ கொசு உள்ளே போவதற்குள் பட்டென்று சார்த்திவிடுவார். அந்தக் கதவுக்குப் பின்னால் ஒரு ஜாகை இருக்கிறதென்ற நினைவே உங்களுக்கு எழாது! :-)
ஒருநாள் கல்லூரியிலிருந்து வரும்பொழுதே தாகமாக இருந்தது. ஹிந்தி வகுப்புக்குச் சென்றுவிட்டேன். பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். விக்கல் வருமளவிற்கு தொண்டை வறட்சி. கமறுகிறது. வார்த்தைகள் பிசிறடிக்கின்றன.
"சார்! குடிக்க தண்ணீ வேணும்... தாகமா இருக்கு" என்றேன் தயக்கத்துடன்.
தலையை உள்பக்கம் திருப்பி "நீலு...." என்று ஏதோ தெலுங்கில் சொன்னார். நிமிஷத்திற்குள் ஒரு எவர்சில்வர் சொம்பு மட்டும் கதவிடுக்கில் தெரிந்தது. அந்தரத்தில் தெரிந்த சொம்பை அலேக்காக வாங்கி என்னிடம் கொடுத்து என் தாகம் தணித்தார் ஆசிரியர்பிரான். "ம்... அடுத்த பக்கம்..." என்று பாடம் நடத்துவதற்குள் நுழைந்துவிட்டார்.
இதற்குள் நான் அங்கே ஹிந்தி பயிலச் செல்வது தெப்பக்குளத்தின் நான்கு கரைக்கும் சில விஷமிகளால் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் மல்லியின் கை இருக்கும் என்று எனக்கொரு சம்சயம். ஏதோ ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வி படிப்பது போல ஸ்நேகிதச் செல்லங்கள் என்னிடம் விஜாரிப்பதற்கு ஆர்வமாக மொய்த்தார்கள்.
"வெங்குட்டு... அங்கே அவர் வீட்ல ஒரு பொண்ணு இருக்குமேடா" என்று சகஜமாய் தோளில் கைப்போடு ஒருவன் ஆரம்பிக்க மூன்று பேர் சூழ்ந்துகொண்டார்கள். திண்ணை என்ற எல்லை தாண்டாமல் இருக்கும் சௌஜன்யமான பயங்கரவாதி நான் என்னும் விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் ஹிந்தி படிக்கச் செல்வதை விட ஏதோ கணக்குப் பண்ண செல்கிறேன் என்று நினைத்துக்கொண்டார்கள். நான் தண்ணீர் கேட்க ஒரு எவர்சில்வர் சொம்பு அந்தரத்தில் பறந்து வந்த கதையை எப்படி நான் விவரிப்பேன்!? அழுகையை அடக்க வாய்க்குள் தோள் துண்டைத் திணித்து அழும் கருப்பு வெள்ளை படம் சிவாஜி போல திக்பிரமையுடன் நின்றிருந்தேன். தினமும் நான் எழுதிக்கொண்டு வரும் எனது ஹிந்தி நோட்டிலிருந்து அப்போதே ஐம்பதை எட்டியிருந்த என் பவானி சித்திப் படியெடுத்துப் படிப்பாள்.
"படிக்கறத்துக்கு வயசெல்லாம் இடைஞ்சல் கிடையாது... பார்த்தியா... பவானி உங்கிட்டேயிருந்து வாங்கி படிக்கிறா" என்று ஒரு நாள் பாட்டி தனது விசேட குறிப்பை என் தலையில் குட்டுவதைப் போன்று வெளிப்படுத்தினாள். அடுத்தது பாட்டியும் ஹிந்தி படிக்கக் கிளம்பிவிடுவாளோ என்று எனக்குள் உதறல் எடுத்தது.
முதலில் வந்த ப்ராத்மிக் பரீக்ஷை மிகவும் சுலபமாக இருந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தால் கேள்வியில் வந்திருக்கும் வார்த்தைகளை இடம் வலமாகவும் வலம் இடமாகவும் மாற்றிப்போட்டு எழுதினால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று யுக்தி சொல்லிக்கொடுத்தார்கள். என்னால் இயன்ற அளவு கந்தர்கோலமாக jumbled sentence ஆக எழுதினேன். இந்தப் பரீக்ஷையில் தோற்று விட்டால் "கடங்காரனுக்கு அவன் படிப்புதான் வரலேன்னு பார்த்தா ஹிந்தியும் வரலையேடி" என்று பாட்டி ஆற்றாமையில் ஒரு டோஸ் விட்டுவிட்டு "இனிமே இந்த பிரஹஸ்பதிக்காகக் காசை வீணடிக்கவேண்டாம்... இது பேசாம ஊர் சுத்தவே போகட்டும்" என்று ஹிந்தியை நிறுத்திவிடுவாள் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் தெய்வம் வேறுவிதமாக முடிவெடுத்தது. பிராத்மிக் பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்று ஹிந்தி வாத்யார் என் தோளில் தட்டாத குறையாக பெருமையாகச் சொன்னார். நான் அப்போதே ஹிந்தி பண்டிட் ஆகிவிட்டது போல பாட்டிக்குப் பரம சந்தோஷம்.
மத்யமா என்ற ஹிந்தியின் ரென்டாம் வகுப்பு தொடங்கியது. அரை மணி ஒரு மணி பாடம் நடக்கும். ப்ராத்மிக்கை விட கொஞ்சம் கஷ்டம். வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஜாலமெல்லாம் காட்டமுடியாது. வாசிக்கும் போதே திணறி... தெருவில் எனக்கு ஹிந்தியில் சீனியர் சிறுமியிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். எல்லாம் பாட்டி கழுத்தைப் பிடித்துத் தெருவில் தள்ளியதால் நடந்த விபரீதங்கள். மத்யமாவில் இரண்டாம் இடமே கிடைத்தது. ஆனால் ஹிந்தியில் என்ன எழுதியிருந்தாலும் எழுத்துக்கூட்டிப் படிக்கும் பேராற்றல் வந்துவிட்டது. அலுவலக விஷயமாக புதுடில்லிக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஒரு முகவரி தேவடுவதற்காக அலைந்த போது நான் எழுத்துக்கூட்டிப் படித்துச் சரியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். நண்பர் அசந்துவிட்டார்.
"உங்களுக்கு ஹிந்தி சுத்தமா தெரியாதா?" என்று முதலில் அவரிடம் கேட்டறிந்துகொண்டேன். கழுத்து சுளுக்கும்வரை தெரியாது என்று ஆட்டினார். எனக்கு மொழிச் சுதந்திரம் கிடைத்தது போல ஆகிவிட்டது. பின்னர் டில்லியில் இருந்த இரண்டு நாள்களும் தைரியமாக எல்லா பில்போர்டுகள், துண்டுச் சீட்டுகள், லோக்சத்தா தலைப்புச் செய்திகள் என்று ஹிந்தியில் வாசித்துக்காட்டி பிரமாதப்படுத்திவிட்டேன். அங்கேயே ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆஃபீஸ் நண்பர்கள் எதிரே "ஆர்விஎஸ்... ஹிந்தி அபாரமாகப் படிப்பான்" என்று என் தோளைத் தட்டி அந்த நண்பர் ஒரு செய்தித்தாளைக் கொடுத்து படிக்கச் சொன்னபோது என் கண்களில் "தெய்வாதீனமாக" தூசி விழுந்து மறைத்துவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டே அமுக்கமாக அறையை விட்டு வெளியேறி விட்டேன். படித்திருந்தால் அந்த அறையில் இருந்தவர்கள் கண்களைக் கசக்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்திருக்கும்.
ரொம்ப வருஷமாக என்னிடம் யாராவது "உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?" என்று கேட்டால் "ஹிந்தி தெரியாது போடா" என்று அதிகப்பிரசங்கித்தனமாக பதில் சொல்லாமல் "மத்யமா செகன்ட் க்ளாஸ்" என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வேன். சங்கீதாவும் என் அக்காள் கீர்த்திகாவும் அத்யாபிகாக்கள் என்பதை இந்தச் சமூகத்திற்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்! :-)
#மன்னார்குடி_டேஸ்
#ஹிந்தி_ட்யூஷன்
#புது_எபிஸோட்