Thursday, April 7, 2011

கிராமத்து தேவதை - III

ஒரு கிராமத்து ஆற்றோரக் கோயிலில் இங்கே துவங்கிய கதை சிவா-எழில் காதல் எபிசோடு வரை நகர்ந்துள்ளது.

********************* மூன்றாம் அத்தியாயம் *********************
mini bus

"கொக்கரக்கோ" என்று எதிர் வீட்டுக் கூரை மேலிருந்து கழுத்தை எக்கி எழில் வீட்டு சேவல் கூவியபோது காலை சரியாக ஏழு மணி. தகதகவென்று கிழக்கில் பொன்னிறமாக கதிரவன் புறப்பட்டிருந்தான். மாடுகள் தங்களின் அன்றாட கடமைக்கு தயாராக எழுந்து நின்று மொய்க்கும் ஈக்களை வாலால் ஓட்டிக்கொண்டிருந்தன. குட்டி ஆட்டை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு கீதாரி மேய்க்க கிளம்பிவிட்டார். கறவை மாட்டை ஐயனார் குட்டையில் குளிப்பாட்ட இரண்டு சிறுவர்கள் டிராயருடன் விரட்டிக்கொண்டு போனார்கள். பின்னாலையே பிறந்து ஐந்து நாளான கிடேரி கன்னுக்குட்டி துள்ளிக்குதித்து ஓடிற்று. நிறைய வீட்டு வாசலில் பசுஞ்சாணி தெளித்து இரண்டு இழை அரிசிமாவுக் கோலம் போட்டாயிற்று. பெரிய பண்ணையின் பங்கில் இன்று நடவு என்று ஐந்தாறு ஜனம் கோஷ்டியாக வெற்றிலை போயிலை பொட்டலத்துடன் ரோட்டோரம் வரிசையாக போனார்கள். இரண்டு மூன்று ஃபாக்டம்பாஸ் உர மூட்டையை சைக்கிள் கேரியரில் கோபுரமாகக் கட்டி பாரம் தாங்காமல் ஆட்டி ஆட்டி பாலன்ஸ் செய்துகொண்டு சட்டை போடாத பண்ணையாட்கள் போனார்கள். உழவு இயந்திரத்தை பின்னால் பொருத்திய சிகப்பு டிராக்டர் ஒன்று இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கும் எஞ்சிய கிராம மக்களை "டட்....டட்.....டட்....டட்....." என்று உறுமி எழுப்பிக்கொண்டு களத்திற்கு குதித்தோடியது.

நேற்று இரவு மழையில் நனைந்ததில் எழிலுக்கு ஜல்பு பிடித்துக் கொண்டது. "ஹச்..." என்று தும்மிக்கொண்டே துயிலெழுந்தாள் எழில். இரு கை மேலே தூக்கி சோம்பல் முறிக்கும் போது கை கால்களில் வலி குடைந்தது. யாரோ அடித்து துவைத்து காயப் போட்டாற் போல சோர்வாக இருந்தது. எழில் பக்கத்தில் தமிழ் அழகாக தூங்கிக் கொண்டிருந்தது. தமிழ் மீது கொண்ட தீராக் காதலினால் தன் வாரிசுகளுக்கு "ழ"கரம் கொண்ட சுத்த தமிழ்ப் பெயர்கள் சூட்டினார் முருகேசு. வீட்டில் பாட்டிப் பெயர்கள் பெயர்த்திகளுக்கு வைக்கவில்லை என்று பெரிய ரகளை நடந்தது. கடைசியில் அவரது தமிழ் மொழிப் பற்று வென்றது. ஆனால் அவர் பெண்டாட்டி உள்பட முக்கால்வாசிப் பேர் "எளிலு" "தமிலு" என்று சுந்தரத் தெலுங்கில் அழைத்தார்கள். எழிலரசியும், தமிழரசியும் இணைபிரியா சகோதரிகள். முதல் வருடம் எழில் படித்த புத்தகங்களை அடுத்த வருடம் புது காக்கி அட்டை போட்டு லேபிள் ஒட்டி தமிழ் படிப்பாள். எழிலின் கிழியாத யூனிஃபார்ம், கணுக்காலுக்கு மேலே தூக்கிப் போன பாவாடை, இறுகிப் பிடிக்கும் மேல் சட்டை, உடையாத ஹேர் கிளிப், சாயம் போகாத ரிப்பன் என்ற எல்லாம் இனாமாக இரண்டாவதாக தமிழுக்கு கிடைக்கும். தமிழுக்கு இரண்டாவது மரியாதை. அம்மா சமையல் கட்டில் புகையோடு போராடிக்கொண்டிருந்தாள். கட்டம் போட்ட கைலியும் தோளில் துண்டு, கையில் சோப்பு டப்பாவோடு ஆற்றங்கரைக்கு குளிக்க  சென்றார் முருகேசு வாத்தியார். இப்போது மொத்த கிராமமும் கண் விழித்து பல் தேய்த்திருந்தது ஒருத்தியைத் தவிர.

"தமிழு..ஏ தமிழு.. " தூங்கிக்கொண்டிருந்தவளை உலுக்கினாள் எழில்.
"ம்..ம்.." என்று கண்களைத் திறக்காமல் ஏதோ இன்பக் கனாவில் இருந்த தமிழ் மெல்ல முனகினாள்.
"ஏய்..எழுந்திருடி..தடிமாடு.. "
"என்ன..."
"எழுந்திரு.. ஸ்கூல் போலையா..."
"ச்சே.. ஒரே ரோதனையாப் போச்சு..என்னடி.."
"ஸ்கூலுக்கு லேட் ஆயிருச்சு.."
அதற்கு பதில் சொல்லாமல் "நேத்திக்கி கோயில்லேர்ந்து எப்படீ வந்தே" என்று கேள்வியாய் கேட்டாள் தமிழ்.
"பத்து ஆயிருச்சு"
"எப்டி வந்தே"
"......"
"நடந்து வந்தியா?"
"......"

மேலே இருக்கும் ரெண்டு "......"க்கும் தலை சாய்த்து பதில் பேசாது தங்கையைப் பார்த்து புன்னகைத்தாள் எழில்.

"ஏண்டீ.. ஒருத்தியும் இன்னிக்கி பள்ளிக்கூடம் போவலியா..." என்று அரிசி களைந்த கையோடு அடுக்களையிலிருந்து கேட்டுக்கொண்டே வந்தாள் எழிலம்மா.

சோம்பலாக எழுந்திருந்து சுறுசுறுப்பாக கிளம்பினார்கள். கை கால் வலி எடுத்தாலும் சிவாவைப் பார்க்காமல் இருந்தால் இதயம் வலிக்கும் என்று எழிலும் பள்ளிக்கு கிளம்பினாள். நீலப் பாவாடை வெள்ளை ஹாஃப் சாரி உடுத்திக்கொண்டார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவியாய் ஜடை பின்னிக்கொண்டார்கள். நீல ரிப்பன் சுயமாய்க் கட்டிக்கொண்டார்கள். அடுப்படி வாசலில் நின்றுகொண்டே மல்லிப்பூ இட்லி பிய்த்து தேங்காய்ச் சட்னி தொட்டு வாயில் போட்டுக்கொண்டார்கள். தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயுமாய் மூடி அதுங்கிய வட்ட வடிவ எவர்சில்வர் டிபன் பாக்ஸில் அள்ளி போட்டுக்கொண்டு "வரேம்மா..." என்று உள்ளே பார்க்காமல் சொல்லிக்கொண்டு வாசற்படி கடந்து மறைந்தார்கள்.

தெருமுனை திரும்பும் வரை அக்காளும் தங்கையும் எதுவும் பேசாமல் மௌனமாக நடை பயின்றார்கள். இரண்டு தெரு திரும்பி மினி பஸ் நிற்கும் ஸ்டாண்ட் போகும் வழியில் தங்கராஜ் மாமா வீட்டு திண்ணையின் ஓரத்தில் அடுக்கியிருந்த நெல்லு மூட்டையோடு மூட்டையாய் பாலு மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். மாமாவின் வாரிசு. தவப் புதல்வன். குலக்கொழுந்து. பரட்டை தலையும் முண்டா பனியனும் மடித்துக் கட்டிய கைலியும் அவனை பற்றி தன்னிலை விளக்கம் அளித்தன. கண்கள் இரண்டும் மிளகாய்ப் பழமாக சிவந்திருந்தது. நேற்றைய கள்ளின் உபயம். வீட்டு வாசலில் நடுநாயகமாக புல்லட் இருந்ததில் மாமா உள்ளே இருக்கிறார் என்று தெரிந்தது. புல்லட்டுக்கு காவலாக அதனடியில் ராஜபாளையம் படுத்திருந்தது.

"ஏய். எளிலு..." என்று கூப்பாடு போட்டான் பாலு.
குனிந்த தலை நிமிராமல் நடையின் வேகத்தை கூட்டினாள்.
"ஏய்..உன்னத்தான்.. எளிலு..." அடித்தொண்டையில் இருந்து சத்தம் போட்டு கூப்பிட்டான்.
இந்த முறை நின்றாள். அவர்கள் பாலு வீட்டின் திண்ணையைத் தாண்டியிருந்தார்கள். தமிழ் பேசினாள்.
"என்ன வேணும் உனக்கு..." என்று கறாராய்க் கேட்டாள்.
"நா உன்னிய கூப்ட்டேனா. நீ உன் வேலையைப் பாரு.. ஏ எளிலு.."
"உம்..." என்றாள் எழில்.
"நேத்து உன்னிய நான் பார்த்தேன்."
அதனால் என்ன என்பது போல அனாயாசமான பார்வை ஒன்றை உதிர்த்தாள் எழில்.
"கோயிலுக்கு போயிருந்துது.." என்று பதிலுக்கு பேசினாள் தமிழ்.
"நான் கோயில்ல வச்சு பார்க்கலை..." என்று பீதியை கிளப்பினான் பாலு. எழில் கலவரமானாள். கண்கள் துடி துடிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"எங்க பார்த்தே.." என்று சின்னது வாயாடியது.
"சொல்லட்டா...." என்று குறும்புடன் எழிலைப் பார்த்து சிரித்தான் பாலு.
கண்கள் தவிக்க, நாக்கு வரள, ஒரு தடவை எச்சில் விழுங்கி இவன் நம்மை பார்த்திருப்பானோ என்று நினைக்கும் போது
"நேத்து கொட்ற மழையில இறுக்க கட்டிப் பிடிச்சிகிட்டு வந்து இறங்கினியே... அத நான் பார்த்தேன்."
பாலுவின் இந்த பதிலில் அதிர்ந்து போனாள் தமிழ். எழிலின் மறுப்புரைக்கு அவளை பார்த்தாள்.
"யாரு?" என்று இருவருக்கும் மையமாக ஒரு கேள்வி கேட்டாள்.
"நேத்து படிச்சு முடிச்சு இன்னிக்கி இன்ஜினியரிங் காலேஜ் வாத்தியாரு. மேலத் தெரு சி....வா...." வில்லன் பார்வையில் மற்றும் மொழியில் சொன்னான் பாலு.
தமிழ் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். காலை டவுனுக்கு செல்லும் மினி பஸ் குளத்தோரம் ஹார்ன் அடித்து புறப்படுவதாக சைகை காட்டியது.

பதில் சொல்லாமல் இருவரும் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கைகாட்டி பாவாடை தடுக்க ஓடினார்கள். அவர்கள் ஓடிய திக்கைப் பார்த்துக்கொண்டு பாலு நின்றுகொண்டிருந்தான்.

பின்னால் பாலு வீட்டு திண்ணையில் இறங்கியிருந்த ஒட்டுக்கூரையின் சரிவில் உத்தரத்தில் பத்திரமாக சொருகியிருந்த திருப்பாச்சி அருவாளை சர்...ரென்று உருவிப் புறப்பட்டது ஒரு உருவம்.

தொடரும்...

பட உதவி: http://www.trekearth.com/

-

44 comments:

raji said...

கதையின் முதல் இரண்டு பாகங்களை விட மூன்றாவது பாகமே
முதல் இடம் பெறும் அந்தஸ்தை பிடித்து விட்டது.

முதல் பாரா வர்ணனை முழுக்க பிரமாதம்.

//தமிழுக்கு இரண்டாவது மரியாதை.// இந்த வரியும் 'நச்'

தொடரும் போட்ட இடமும் சூப்பர்

Chitra said...

எழில் - தமிழ் என்ற அழகிய தமிழ் பெயர்களுடன் கதை வாசிப்பது இன்னும் நன்றாக உள்ளது.

Sivakumar said...

//எழிலின் கிழியாத யூனிஃபார்ம், கணுக்காலுக்கு மேலே தூக்கிப் போன பாவாடை, இறுகிப் பிடிக்கும் மேல் சட்டை, உடையாத ஹேர் கிளிப், சாயம் போகாத ரிப்பன்//

உடையாத ஹேர் கிளிப்.? இதை குறிப்பிட காரணம்?

ஸ்ரீராம். said...

கிராமத்து வாசனை நல்லா வருது. வர்ணனைகளில் பிரமாதப் படுத்தறீங்க...

சிவகுமாரன் said...

பிரமித்துப் போகிறேன் RVS . என்ன மொழி நடை. Versatality in narration. பாரதிராஜா படம் பார்ப்பது போல் இருக்கிறது. எழிலுக்கு 16 வயதினிலே ஸ்ரீதேவி கற்பனையில வர்றா. தமிழுக்கு தான் யார் முகமும் ஒத்து வரலை. உங்க கற்பனையில யாரு? திருப்பாச்சி அருவா பயமுறுத்துது.
( அருட்கவி சுவைக்க வாருங்கள் சிவப்பிரியரே.)

எல் கே said...

வெட்டப் போறாரா இல்லை கம்பத்தில் கட்டி வெச்சு அடிக்கப் போறாரா ??

சக்தி கல்வி மையம் said...

என்னஒரு எளிமையான மொழி நடை அசத்தல் தோழரே...

Unknown said...

கதை அழகை கற்பனை கண்முன்னே படிக்கும் போது நிஜமாய் மாறுவது
கதையின் உள்ளே ஒரு பாத்திரமாய் படிக்கும் போது உணர்கிறேன்
மீண்டும் மீதி இரண்டு பாகம் படித்து விட்டு வருகிறேன்

எப்பொதும் போல எங்கயும் ஒரு வில்லன் வந்தாச்சா?..இந்த தாய் மாமனுக தொல்ல தாங்கமுடியலப்பா

அப்பாதுரை said...

ரசித்துப் படிக்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

உங்கள் 'மன்னார்குடி டேஸ்' படித்துவிட்டு 'கோபால்', அதாம்ப்பா, உங்களோட இந்த பதிவுல வர்றாரே, அவருதான், அசந்து போய் விட்டார். நீங்கள் நன்றாக எழுவதாகவும் சொன்னார்.

I am yet to read this story.. will comment later.

Jayakumar Chandrasekaran said...

You always copy sujatha's style. That is OK. But unknowingly you use your brahmin tamil sometimes. Sujatha used them only when he was writing about brahmin characters.Unnecessory descriptions can be avoided and the story telling may be confined to Characters and events. Please forgive me if I am wrong.

Anonymous said...

அழகான கிராமத்துக் கதையிலும் அடி பின்றீங்களே அண்ணே! தூள்! :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரெண்டு கண்ணு ரெண்டு காதை வெச்சே இந்தப் போடு போடரீரே ஆர்விஎஸ்! அபாரம்.

தொடரும் இடம் பாத்து குண்டு போடுவீரோ?

Anonymous said...

வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ் ! கலக்குறீங்க .. வர்ணனைகள் கச்சிதமாய் இருக்கிறது. 'எழில்' பெயர் பேரெழிலாய் இருக்கிறது உங்கள் நடையைப் போல.. உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது ரொம்பவே ரிலாக்ஸ் ஆகிறேன். நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

எளிலு, தமிலு... பெயரெல்லாம் பொருத்தமாதான் வெச்சு இருக்கீங்க மைனரே! கரெக்டான இடத்திலே “தொடரும்..” போட்டு பீதியை கிளப்புறீங்களே! அறுவாள் எடுத்தது சாணை பிடிக்கவா இல்லை வெட்டவா? காத்திருப்பில்...

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் மூன்று பதிவுகளையும் ஒன்றாகப் படிக்க முடிந்தது
அது கூட ஒருவகையில் நன்றாகத்தான் இருந்தது
சினிமாக் கோணத்தில்
ஏரியல் ஷாட் லாங் ஷாட் மிட்ஷாட் என்பதைப்போல
இப்படிப்பட்ட ஊரில்,இப்படிப்பட்டவர்களிடம்,இது
என்கிற வகையில் மிக அழகாக கதைசொல்லிப்போவதை
ரசித்துப் படிக்க முடிந்தது
இன்னும் குளோஷப், ஷாட்டும் டைட் குளோஷப்பும்தான்
பாக்கி என நினைக்கிறேன்
படங்களுடன் கூடிய அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

ஒவ்வொரு பாகமும் முந்தைய பாகங்களை விட பெட்டராக இருக்கிறது.

Excellent narration.

மாதேவி said...

அருவாள் வீசி பயமுறுத்துகிறீர்களே :)

இளங்கோ said...

Super ah poittu irukkuthu kathai :)

RVS said...

@raji
ஊக்கமான பாராட்டுக்கு நன்றி ராஜி! அடுத்த எபிசோட்ல முடிச்சுட்டேன். ;-))

RVS said...

@Chitra
நன்றிங்க சித்ரா. உங்க தொடர் ஊக்கத்திற்கு. ;-)

RVS said...

@! சிவகுமார் !
அடுத்தது இறுதி அத்தியாயம். இந்தப் பாரா அங்க புரியும். நன்றி சிவா. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
அண்ணே! நாங்க இருந்த ஏரியா அப்படி. வாசனை மறக்குமா? பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@சிவகுமாரன்
நன்றி சிவா! அருட்கவி அமர்க்களமாக இருக்கிறது. சிவன் கைலாயத்தில் இருந்து இறங்கி வரப்போகிறார். ;-))

RVS said...

@எல் கே
கடைசி அத்தியாயத்தையும் படிச்சுடுங்களேன். ப்ளீஸ். ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
கருன்! உங்களது தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. கடைசி அத்தியாயம் ரிலீஸ் செய்கிறேன். ;-))

RVS said...

@siva
ரசித்ததற்கு மிக்க நன்றி சிவா! என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம். திருவிழாவிற்கு போனீங்களா? ;-))

RVS said...

@அப்பாதுரை
மிக்க நன்றி சார்! ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
கோபால் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினார். மன்னார்குடி டேஸ் அற்புதமாக இருப்பதாகவும் மீண்டும் அங்கே நிஜமாய் இருப்பது போன்று உணர்ந்ததாகவும் பாராட்டினார்.எல்லாம் ஸ்ரீவித்யா கோபாலன் அநுக்ரஹம். நன்றி மாதவா. ;-)

Madhavan Srinivasagopalan said...

வர்ணனைகள் செமை...
வழக்கம்போல கலக்கல்...
காத்திருக்கிறோம்.

RVS said...

@jk22384
I am totally agreeing with you regarding the style of writing. I read lot of Sujatha. But I think I am describing the scenes which are essential to the story. Even the language also I am carefully choosing to give it naturally. Anyway thank you for your observations and I will retouch everything before I publish. Thanks. ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி thambi. இறுதி அத்தியாயம் ரிலீஸ் பண்ணிட்டேன். ;-))

RVS said...

@சுந்தர்ஜி
அண்ணா! உங்கள் பாராட்டில் அகமகிழ்ந்தேன். மிக்க நன்றி. ;-))

RVS said...

@சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்
இந்தக் கருத்தை என் வலைப்பதிவில் கமெண்ட்டாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. பெருமையாய் உணர்கிறேன். நன்றி. ;-))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! மேலே இருக்கும் ஜீக்கு சொன்னதுதான்.. உங்களுக்கு மிக்க நன்றி. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி த.தல. கடைசி அத்தியாயம் படிச்சுடுங்க. வெளங்கிடும். ;-))

RVS said...

@Ramani
ஒரு சினிமா பார்த்தது போல விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. பெருமையாய் உணர்கிறேன். ;-))

RVS said...

@வித்யா
ரொம்ப நன்றிங்க.. உங்கள் பாராட்டால் மகிழ்ச்சியில் குளித்தேன். மிக்க நன்றி. ;-))

RVS said...

@மாதேவி
கடைசி அத்தியாயம் படிங்க. ஒரு பெரிய ட்விஸ்ட் வச்சுருக்கேன். ;-))

RVS said...

@இளங்கோ
நன்றி. அடுத்த எபிசோட்ல முடிச்சுட்டேன். படித்து இன்புறவும். ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
இறுதி ரிலீஸ் பண்ணிட்டேன். ;-)

இராஜராஜேஸ்வரி said...

அரிவாள் உருவிப் புறப்பட்டவரை பதடத்துடன் தொடர்கிறோம்.

பத்மநாபன் said...

கிராமத்தின் இளங்காலை காட்சியபடுத்தியது அழகு ... மாடு கன்னுக்குட்டி .. அதுவும் கேடேரி ... வாசல் கோலம் ... பாக்டம்பாஸ் ...
சிங்காரத் தமிழ் ழ் ....சுந்தரத் தெலுங்கு லு வுக்கு மாறுவது ..... இப்படி டிடைலாக போகும் கதையில் காதலுக்கு வில்லன் யார் ?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails