ஊர்: திருமழபாடி
இடம்: வைத்தியநாதர் சுவாமி சன்னதி
மனுஷன்: ஈர்க்குச்சி ராஜ்கிரண்
புது சொக்காய் புது பேண்ட்டுடன் திருஷ்டிப்பொட்டு கலரில் கருகருவென்று அழகாய் கொழுக்கு மொழுக்காய் இருந்தது அந்தக் குழந்தை. தலையில் சந்தனம் கரைத்து இருகையாலும் குழைத்து மொட்டையடித்த எரிச்சல் தெரியாமல் இருக்க சதும்ப பூசியிருந்தார்கள். அந்தக் கருப்பனின் அம்மாவும் அம்மாவைப் பெற்ற புண்ணியவதியும் அர்ச்சனைக்கு கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த எண்ணெய் தேய்த்துக் குளிக்க தயாராய் இருந்த தூணில் சாய்ந்து காத்திருந்தவுடன் ஐந்து நிமிடத்தில் ஒல்லியான ஒரு ராஜ்கிரண் மாமா அடியாள் நடையுடன் வந்தார். கீழே குனிந்து குப்பையை பொறுக்கச் சொன்னால் ராமர் ஒடித்த சிவதனசு போல இரண்டாக ஒடிந்து விடுவார். அவ்வளவு Fragile. கட்டம் போட்ட தூக்கி கட்டிய கைலியுடன், கருங் கழுத்து வேர்வைக்கு ஒரு கசங்கிய அழுக்கு கர்ச்சீப். அக்குளில் வேர்த்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மக்களை மூக்கின் மேல் விரல் வைக்கத் தூண்டியது. வைத்தியநாதர் சன்னதிக்கு வந்தவுடன் "சொல்லுடா" என்று கேட்டுவிட்டு கெக்கெக்கே என்று விகாரமாக சத்தம் போட்டு சிரித்தார். காதோடு மொபைலை சேர்த்து வைத்து தைத்தது போல ஒட்டவைத்துக்கொண்டு அளவில்லாமல் அளவளாவினார். இதைப் பார்த்து வெகுண்ட அந்த குட்டி மொட்டை மொபைல் வேண்டும் என்று கைகாட்டி அழுததும் "விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்..." என்று ஒரு பாட்டை அதில் தட்டிவிட்டு சுவாமி சன்னிதியில் அனைவரையும் காதலாகி கசிந்துருக வைத்தார் அந்த மாமனிதர். குருக்கள் ஒரு வார்த்தை கேட்காமல் "சக குடும்ப ஷேம..." என்று சங்கல்பம் செய்து வாழ்த்தி அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்தார். ஈ.ராஜ்கிரணுக்கு அர்ச்சனை செய்தவர் அவருடைய பிரண்டு குருக்களாம்.
*
ஊர்: திருமழபாடி
இடம்: கொள்ளிடக்கரை ஆற்றங்கரை அரசமர நிழல்
மனுஷி: புளியாத்தா
எந்த துணி சோப்பாலும் வெளுக்க முடியாத, பல லட்சம் பறந்து கிடந்த முடியில் ஒன்று கூட கருப்பு இல்லாத பளீர் மின்னலடிக்கும் வெள்ளை கேசம். வெள்ளைத் துணியில் தொள தொளா ரவிக்கை. நீலக்கலர் கண்டாங்கி சேலை. வருடக்கணக்கில் இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்த தோல்கள் அயர்ச்சியடைந்து இறுக்கம் தளர்ந்து தளர்வாக இருந்த ஒரு கிழவி தரையில் படுதா விரித்து கடை பரப்பி புளி விற்றுக்கொண்டிருந்தாள். அருகாமையில் மேலே மூடி போட்டிருந்த தள்ளுவண்டிக் கடைக்கும் அவள் தான் ஓனர். துணைக்கு உட்கார்ந்திருந்த இருபது ஆணி அடித்தது போல அசையாமல் உட்கார்ந்திருக்க இந்த எண்பது சேவாக் போல பம்பரமாய் சுற்றி அடித்து ஆடியது. புளி கிலோ அறுபது ரூபாய்க்கு சல்லிக்காசு குறைக்க முடியாது என்று கறாராக சொன்னாள்.
"எடை சரியா இருக்குமா?"
"சரியா இருக்கும். வேணும்னா வெளிய அளந்து பாத்து காசு கொடுங்க."
"கொஞ்சம் குறைச்சுக்க கூடாதா?"
"குறைச்சுக்கலாம். ஆனா அளவும் குறையும்"
"பாட்டி நீங்க சென்னை வந்துடறீங்களா"
"எதுக்கு. விலையைக் கூட்டி அளவை குறைச்சு விக்கறதுக்கா?"
ரெண்டு கிலோ புளி வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறியபோது தள்ளுவண்டியில் நாலு பேருக்கு நன்னாரி சர்பத் கலக்கிக்கொண்டிருந்து. கிளாசில் "டிக்..டிக்..டிக்.டிக்.." என்ற ஸ்பூன் எழுப்பிய சப்தம் எங்களைத் தொடர்ந்தது.
*
ஊர்: கும்பகோணம்
இடம்: வெங்கட்ரமணா ஹோட்டல்
மனுஷர்: சர்வர் ரசம்
கத்தரிக்காய் சாம்பார் ஊற்றிய கறை படிந்த வெள்ளை வேஷ்டி. கும்பகோணம் வெற்றிலையின் காவி படிந்த பற்கள். நெற்றியில் மெலிதாய் ஒரு விபூதிக் கீற்றல். அர்த்தநாரி போல இரண்டாக பிளந்தால் சரிபாதியாய் பிரியும் ஒரு செ.மீ விட்டம் கொண்ட குங்குமம். முழங்கை முட்டி வரை மடித்துவிடப்பட்ட கசங்கிய வெள்ளை சட்டை. அந்தப் பெரிய சாப்பாட்டு அறையின் இடது வலது கோடியை நிமிஷத்திற்கு நூறு தடவை அளக்கும் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேக நடை. தலையின் நரை காலுக்கு பூட்டு போடவில்லை. எந்நேரமும் ஆளை அசத்தும் புன்னகையை தாங்கிய நீள முகம். கனிவான பரிமாறல்.
"இந்தா பாப்பா அப்பளம்"
"ரெண்டு அப்பளம் வேண்டாம் மாமா"
"பரவாயில்லை. பிடிக்கும்தானே சாப்பிடு"
"சார்! வேண்டாம்" அவசராவசரமாக நான்.
"அட! நீங்க போங்க சார்! குழந்தை சாப்பிடட்டும். யப்பா சாருக்கு பொரியல் போடு." என்று தொலைவில் நாற்கின்னத்துடன் இருக்கும் சோகையான பொரியலுக்கு சொல்லிவிட்டு ரசம் உறிஞ்சிக்கொண்டு கோடியில் உட்கார்ந்திருந்த பவுடர் மாமாவுக்கு பரிமாற விரைந்தார்.
சாப்பிட்டு முடிக்கும் வரை தனியொரு ஆளாய் அங்கே பசியாறிக்கொண்டிருந்த சகலரையும் அவர்கள் இலையறிந்து சாப்பிடுவோர் நிமிர்ந்து கேட்கும் முன் பரிமாறிய வித்தையும் விதமும் அவ்வளவு இலகுவாக யாருக்கும் வராது. எல்லாவற்றிற்கும் மனசு வேண்டும்.
இன்னமும் அவரை எங்கள் வயிறு வாழ்த்துகிறது!
*
ஊர்: நீடாமங்கலம்
இடம்: சூடான வெங்காய மெதுபக்கடோ மணத்துக் கொண்டிருந்த தென்னங்கீற்று வேய்ந்த டீக்கடை
மனுஷர்: ரிடையர் ஆன வாத்தியார்
உள்ளே போட்டிருந்த கோடு போட்ட அண்ட்ராயரை மறைக்க சக்தி இல்லாமல் வெளியே காட்டிக்கொண்டிருந்த ப்ரீமியம் வொயிட் வேஷ்டி. வண்ணான் போட்ட R மார்க் ஓரத்தை தூக்கி வலது கையில் பிடித்திருந்தார். மொட மொடா சட்டையின் இஸ்த்திரி மடிப்பில் தோளுக்கு கீழே புடைத்துக்கொண்டு புஜபலம் மிக்கவராக காண்போருக்கு மாயத் தோற்றம் அளித்தார். தலையில் ஆங்காங்கே சில வெள்ளை முடிகள். கண்ணுக்கெட்டியதூரம் வரை கருப்பு கலரில் முடிகள் இல்லை. வெள்ளை முடிகள் இல்லாத பிரதேசங்கள் அந்த மதிய வெய்யிலில் கண்ணைப் பறித்தது. புறநானூற்று பாட்டுடைத் தலைவன் போல தலையில் நறுநெய் பூசியிருக்கலாம். இடுப்பில் இருந்த அரைக்கிலோ எடையுள்ள பச்சை பெல்ட்டில் சில்லரையாக குறைந்தது ஐம்பது ஒரு ரூபா காயின். ஒரு ஆபத்துசம்பத்திர்க்கு பெல்ட்டே ஆயுதமாக எடுத்து சுழற்றினால் எதிராளி சர்வ நிச்சயமாக அப்பீட். மேலோகத்திர்க்கு டிக்கெட் வாங்கிக்கொள்வான்.
"தம்பி டீ சாப்பிடுங்க...(கடை உள்ளே பார்த்து) அஞ்சு டீ போடுப்பா. டீச்சர், பாப்பால்லாம் சாப்பிடுவாங்க இல்ல.."
"சார்! வெய்யிலா இருக்கு பிள்ளைங்களுக்கு ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி குடுத்துட்டு வரேன்"
"இருங்க தம்பி. நம்ம ஊருக்கு வந்துட்டு. போன் பண்ணிட்டு வந்திருந்தீங்கன்ன இளநி வெட்டச் சொல்லியிருப்பேன். இப்டி திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க."
"பரவாயில்ல சார்!" எதிர் கடைக்கு விரைந்தேன்.
எனக்கு முன் புயலாய் விரைந்து சென்று
"சேகரு... ப்ரிட்ஜில என்ன சில்லுன்னு இருக்கு.."
"பவண்டோ.. மிரண்டா..." என்று வெய்யில் கசகசப்பிர்க்கு சட்டை உரித்து அரையாடையில் இருந்த சேகரு.
"மிரண்டா குடு... பெரிய பாட்டில் இருக்கா?" அதட்டிக் கேட்டார் சார்.
"பவண்டோல கெமிக்கல் கிடையாது.. அதுதான் நல்லது இந்தாங்க..." என்று திடீர் விஞ்ஞானி ஆன சேகரு பாட்டிலை கையில் திணித்தார்.
அரை மணிநேரம் போனதே தெரியாமல் பேசிவிட்டு கைகுலுக்கி கிளம்பினோம்.
ஆனியன் மெதுபக்கோடாவும், ஏ கிளாஸ் டீயும், பவண்டோவும் அவரிடமிருந்து விடைபெற்று வந்த நெடுநேரம் வரை அவர் காட்டிய அன்பால் கற்கண்டாக இனித்தது.
*
ஊர்: மன்னார்குடி
இடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில்
மனுஷி: பட்டக்கா
பெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை! இரண்டாம் முறை "ஆ" என்று வாய்க்கு வேலை வைக்காத காது.
"என்னக்கா? எப்படி இருக்கே" இந்தக் குசலம் விசாரித்தது என் அம்மா.
"ஒரு கொறவும் இல்லம்மா" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.
"மவன் ஒழுங்கா பார்த்துக்கரானா?" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.
"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க..." என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.
இதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது.
"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே.." என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.
பின் குறிப்பு: இந்த முறை மன்னை சென்றபோது சந்தித்த சில மனிதர்கள்.
பட குறிப்பு: கொள்ளிடக்கரையில் இருந்து திருமழபாடி கோயிலின் கம்பீரத் தோற்றம்
-
40 comments:
hmm interesting
ஜாதி, பேதமின்றி சக மனிதர்களையும் நேசிக்கும் அந்த மாண்பு என்னை நிறைய கவர்ந்தது RVS. உண்மையில் கிராமத்து வாழ்கையில் வேற்றுமை அல்பத்தனங்கள் ,கீழ்மைகுணங்கள் எதுவுமின்றி இயல்பாய் இருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் எல்லா ஊர்களிலும் இடத்திலும் இருக்கிறார்கள்.
மனதை லேசாக ஆக்கிய சொற்சுவை. நன்றி மைனரே!
எந்த துணி சோப்பாலும் வெளுக்க முடியாத, பல லட்சம் பறந்து கிடந்த முடியில் ஒன்று கூட கருப்பு இல்லாத பளீர் மின்னலடிக்கும் வெள்ளை கேசம்.//
அருமையான வர்ணனை.
விருந்தோம்பல் திறம் மனம் கவர்ந்தது.
ஊருக்குச் செல்வதும் பழைய மனிதர்களைப் பார்ப்பதும் எத்தனை சுகம். அதிலும் நாம் நாம் நல்ல நிலையில் பிறருக்கு உதவும் இடத்தில் இருந்து விட்டால் ஊர்ப்பயணம் சுகமானது.
சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்
ரகளையான ராஜ்கிரண்...
கறார் புளி வியாபார பாட்டி...
அன்புரசம் ததும்பும் விருந்தோம்பல் சர்வர் ரசம்
பெல்ட்டோடு வித்தியாச வாத்தியார்...
தூரம் தாண்டினாலும் நேசம் தாங்கி கொண்டிருக்கும் பட்டக்கா ..
மன்னையை சுற்றி கோவில்களுக்கு சென்று மனிதர்களையும் தரிசித்து வந்துள்ளீர்கள்...
மனிதர்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பதிவிற்கு வந்தேன். நிறைந்த அனுபவம் இது. என்னுடைய உறவுகளைப் பற்றி எழுத நினைத்திருந்தேன். அதற்கு வழிகாட்டிவிட்டது உங்கள் பதிவு. ஒரு சிறுகதையைவிட வெகு சுவையாகவும் நிரம்ப நேர்த்தியாகவும் இருந்தது இந்தப் பதிவு. நடையும் எழுத்தும் வெகு எளிமையானது. மனிதர்களைப் படிப்பவன்தான் படைப்பாளி என்றாலும் அதிலும் மனிதர்களை மனிதனாகவே படிப்பவன் தேர்ந்த படைப்பாளி. உங்கள் பதிவில் அதை காண்கிறேன். நேரில் கண்டு பார்த்ததுபோல உணர்வைத் தருகிறது உங்கள் பதிவு.சொல்லியவிதமும் சொன்ன முறையும் அழகானது. வாழ்த்துக்கள். வாய்ப்பமைவில் வருவேன். வாழ்த்துக்கள்.
//அண்ட்ராயரை மறைக்க சக்தி இல்லாமல் வெளியே காட்டிக்கொண்டிருந்த ப்ரீமியம் வொயிட் வேஷ்டி//
அண்ட்ராயரை மறைக்க சக்தி இல்லை..பேரு மட்டும் ப்ரீமியம்..
// வெள்ளை முடிகள் இல்லாத பிரதேசங்கள் அந்த மதிய வெய்யிலில் கண்ணைப் பறித்தது//
சந்தடி சாக்கில் 'தலைவரை' கிண்டல் செய்வது மட்டும் அரசியல் இல்லையா??
பாரதிராஜா படத்தை பார்த்த உணர்வு...'சிம்ப்லி' சூப்பர்ப்.
சிறந்த படைப்புக்கள் எல்லாமே நம்மைச் சுற்றிஇருக்கும் மனிதர்களிடத்தே தொடங்குகிறது என்பதை உங்கள் நுண்ணறிவின் வழியாக வெளிப்படுத்தியிருக்கீங்க அண்ணா! :)
பகிர்ந்து இருக்கும் விதம்..... அருமை. அப்படியே மனதில், ஊர் மணத்தை நிரப்பி விட்டது.
அற்புதமான வர்ணனைகள் - சொல்லிய ஒவ்வொரு மனிதரையும் கண்ணுக்கெதிரே பார்ப்பது போன்ற எழுத்து - ஹாட்ஸ் ஆஃப் மன்னை மைனரே.... நாங்களும் தான் பல மனிதர்களைப் பார்க்கிறோம்... ம்...
நால்வரோடு ஐவரானோம் என்கிற கம்பராமாயண வரிகள் தலைப்பைக் கண்டவுடன் நினைவில் அசைந்தன.
ஈர்க்குச்சி ராஜ்கிரணில் சக குடும்ப ஷேம் என்று தப்பாக வாசித்துவிட்டேனே ஆர்விஎஸ் அது சரியா?
கிராமங்களிலும் மக்களின் குணாதிசயங்கள் மாறி இயல்பு தொலைய ஆரம்பித்து விட்டாலும் அவர்களிலும் இனிய மனிதர்களை அடையாளம் காட்டி உங்களையும் அடையாளம் காட்டுகிறீர்கள் ஆர்விஎஸ்.
பவண்டோ போல இனிமையான பதிவு.
வெங்காய பக்கோடா போல மணமான நினைவுகள்.
உங்கள் கதாநாயகர்களின் நரைத்த சிகை போல உங்கள் மனது.
எளிமையான தமிழில் இவ்வளவு அருமையாக சொல்லுவது பாராட்டுக்குரியது... பாராட்டுக்கள்..
மண் மனம் மாறாத சுவையான எழுத்துக்கள். அடிக்கடி ஊருக்கு எங்கையாவது போயிட்டு வாங்கோ மைனரே!!..:)
ஐவரைப் பற்றி நல்லா சொல்லி இருக்கீங்க.
அடுத்த தடவ நானும் வெளியே சென்றால், அறுவர், எழுவர் எழுத முடியுமான்னு உத்து பார்க்கப் போறேனே :)
Enjoyed the beautiful description of the people at our roots who touch our everyday life
@சமுத்ரா
Thank you! ;-)
@கக்கு - மாணிக்கம்
அது ஒரு அற்புதமான காலம் மாணிக்கம். ஆட்டோடும் மாட்டோடும் ஓடும் மனிதர்கள் பின்னால் ஓடிய காலம். பாசத்தை பொழிபவர்கள். இப்போது இதுபோல காண்பது அரிது. கருத்துக்கு நன்றி. ;-))
@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். சொந்த மண் சொந்தபந்தங்கள். ;-))
@சிவகுமாரன்
அருட்கவியே! பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-))
@பத்மநாபன்
மன்னையையும் மண்ணின் மைந்தர்களையும் பார்த்து வந்தேன் பத்துஜி! தங்களது கருத்துக்கு நன்றி. ;-))
@ஸ்ரீராம்.
ஆமாம். மாமனிதர்கள். ;-))
@Harani
தங்களது முதல் வருகைக்கு ஒரு வணக்கம் ஐயா.
உங்களது வாழ்த்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அடிக்கடி வந்து உங்கள் பின்னூட்ட தடம் பதியுங்கள். நன்றி. ;-))
@! சிவகுமார் !
பாரதிராஜா படம்... நா எழுதறது... அரசியல் கிண்டல் போயி... இப்ப அடிமடியிலேயே கை... ஓ.கே ஓ.கே ;-)))
@Balaji saravana
அடேங்கப்பா! கவிதை மாதிரியே ஒரு பின்னூட்டம்... மிக்க நன்றி பாலாஜி. ;-))
@Chitra
மிக்க நன்றிங்க. உங்கள் வாழ்த்திலும் என் மண்ணின் மணம் நிறைகிறது. ;-))
@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! உங்கள் வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன். ;-))
@சுந்தர்ஜி
தலைப்பை சரியாக காட்ச் பிடித்த சுந்தர்ஜிக்கு ஒரு ஜே!
குடும்ப ஷேம்... வார்த்தை ஜாலங்கள் காண்பிக்கிறீர்கள் ஜி! வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ;-))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி கருன்! ;-))
@தக்குடு
மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி தக்குடு. எனக்கும் ஆசைதான் ஆனா அடிக்கடி போறதுக்கு யார் லீவு கொடுப்பா? ;-)))
@Saba
முதல் வருகைக்கு நன்றிங்க சபா!
ஐந்து பேரும் ஏதோ ஒருவிதத்தில் உள்ளத்தை தொட்டார்கள். அதனால் எழுதினேன். உங்கள் பாராட்டுக்கு ஒரு நன்றி. அடிக்கடி வாங்க சார்! ;-))
@இளங்கோ
ஏன் அறுபத்து மூவர் பற்றி கூட எழுதுப்பா! படிக்கறோம். ஒரு தொடர் பதிவுக்கு அழைத்தேனே எழுதலையா? ;-)))
@RS
Thanks for your first visit and comments.
roots are the one which brings water to entire to Tree. That water helps the tree to survive. What you said is perfectly right. Thank you once again and do visit again. ;-)))
நான் ஏற்கெனவே வந்துள்ளேன். இது முதல் வருகையல்ல. வந்து நீண்டநாள் ஆகிவிட்டதால் கோபமா?
@Harani
மன்னிக்கவும்... மறந்துவிட்டேன்.... ஸாரி! ;-))
மனத்தைதொட்டு நிற்கிறார்கள்.
@மாதேவி
மனதைத் தொட்ட கமேன்டிற்கு நன்றி! ;-))
rombave azhagaana 'collage'! oru trip memory-la ennikkum nilaikkarathukku ivarkalai pondra sila makkal thaan kaaranam... :)
Excellent!
ஐவரும் கண்ணெதிரே வந்தது போன்ற உணர்வு உங்கள் எழுத்தில். வாழ்த்துகள்.
மனசைத்தொட்ட இயல்பான மனிதர்கள்..
Post a Comment