Monday, April 4, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

எல்லோரும் எழுதி அலுத்த பிறகு இப்போது இதை எழுதினால் பழைய கஞ்சி தான், இருந்தாலும் கை எழுது எழுது என்று அரித்ததாலும், இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றதாலும் இதை எழுதுகிறேன். போரடிக்காமல் எழுதலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.



இந்தியாவை ஜெயிக்க வைக்க படாத பாடு  பட வேண்டியிருக்கிறது. ஒரு முக்காலியில் குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் போது பந்து பவுண்டரியை தாண்டி போயிருந்தால் அடுத்ததாக ஒரு அசம்பாவிதம் நடக்கும் வரை வி.ஜி.பி கடற்கரை மனிதச் சிலை போல அப்படியே உட்கார்ந்திருக்கவேண்டும். என் துர்பாக்கியம் இந்த முறை பாகிஸ்தானுடன் இந்தியா செமியில் விளையாடிய போது இது நடந்தது. கொஞ்சம் காலை நகர்த்தினால் "மாமா! கொஞ்சம் அசையாமல் அப்படியே உட்காரு. இப்பதான் ஒரு ஃபோர்  போயிருக்கு. அபசகுனமா அசைஞ்சு உட்கார்ந்து யாரையும் அவுட் ஆக்கிடாதே" என்று வைதான் என் மருமான். எனக்கு இப்போது கிலி பிடித்துக் கொண்டது. இன்னும் எவ்வளவு நேரம் இப்படி உட்காருவது என்று. "காலெல்லாம் மரத்துப் போச்சுடா. கொஞ்சம் இறக்கி வச்சுக்கறேன்" என்றேன். "கால் மரத்துப் போச்சுன்னு கவலைப்படறியே இந்தியாவுக்காக இது கூட பண்ண மாட்டியா? உனக்கு பேட்ரியாட்டிஸமே இல்லையா?" என்று ஆரம்பித்து ஒரு அரை மணி அசராமல் லெக்சர் கொடுத்தான். நல்லவேளை தேசப்பற்று இந்தியாவில் அட்லீஸ்ட் கிரிக்கெட்டில் வாழ்கிறது. கார்கில் போரில் LOCயில் உட்கார்ந்து மணிக்கணக்கில் காவல் காத்த இராணுவ வீரர்கள் போல கால் கடுக்க மரமரக்க குத்துக்க உட்கார்ந்து நமது தேசத்தை ஜெயிக்க வைத்த புண்ணியம் என்னை வந்து சேரக் கடவது. ஒரு நண்பனின் இரண்டாவது குட்டிப் பயல் சுச்சா போவதற்கு ஜட்டியை கழட்டியிருக்கிறார்கள். அப்போது பாக்.கிற்கு ஒரு விக்கெட் விழுந்திருக்கிறது. பாக். இன்னிங்க்ஸ் முடியும் வரை அவனுக்கு ஜட்டியே போடவில்லை என்ற தகவல் வந்து என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. நல்லவேளை அந்த நேரத்தில் நண்பன் டாய்லெட் பக்கம் போய் மாட்டிக்கொள்ளாமல் இருந்தானே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

தோனி தண்ணியில் ஆடாத ஒரு சிறந்த கேப்டன். முன்பெல்லாம் நமது ஆசாமிகள் பந்து வீச வந்தால் ஒரு ஸ்பெல் முழுக்க போட்டுவிட்டு தான் போய் பவுண்டரி லைனில் நின்று தாகசாந்தி செய்துகொள்வார்கள். போட்டு உரி உரி என்று உரித்தாலும் அசராமல் ரவி சாஸ்த்ரி பாரி, பேகன் ரேஞ்சுக்கு போட்டுக்கொடுத்து நமது இந்திய டீமிற்கே சவால் விடுவார். பத்து பந்துகளில் ஒரு பௌலர் சோபிக்கவில்லை என்றால் கழற்றி விட்டு விட்டு அடுத்தாளை வீச அழைத்துவிடுகிறார் தோனி. முனாஃப் படேல் அப்துர் ரசாக்கை ஆஃப் ஸ்டம்பை அசக்கி அவுட்டாக்கிய பந்து ஒரு அசாதாரணமான டெலிவரி. கோப்பை ஜெயித்த பின்னர் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் படேலை தழுவி உச்சி மோந்து தனது பாராட்டுதல்களை தெரிவித்தது அந்த ஒரு பந்திர்க்காக கூட இருக்கலாம். அதே போட்டியில் ஓவர் தி விக்கெட் போட்டுக்கொண்டிருந்த ஹர்பஜனை கோணம் மாற்றி ரவுண்ட் தி விக்கெட் போடச் சொன்னார். இரண்டு சிக்ஸர்களுடன் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்திருந்த உமர் அக்மல் கோணம் மாறி புறப்பட்டு வந்த ஹர்பஜனின் தூஸ்ராவில் கிளீன் போல்ட். கேப்டன் விக்கெட் கீப்பராக இருப்பதின் சௌகரியம் இது. ஒவ்வொரு பந்தையும் பேட்ஸ்மன் எப்படி விளையாடுகிறார்கள் என்ற நுட்பம் அறிந்து பந்து வீச டிப்ஸ் கொடுக்கிறார்.

முன்னதாக விளையாடிய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தது நம்ம சேவாக். ராமர், அர்ஜுனன் போன்றவர்கள் வில்லிலே நானேற்றினால் தொடுக்காமல் விட மாட்டார்களாம். அதுபோல சேவாக் மட்டை சுழற்ற ஆரம்பித்தால் அடிக்காமல் இறக்க மாட்டார். அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம். உமர் குல்லை சாத்து சாத்தென்று சாத்தி ரணகளப் படுத்தியவர் இன்னும் கொஞ்சம் நேரம் ஊன்றி ஆடியிருந்தால் முன்னூறு சுலபமாக கடந்திருப்போம். சச்சின் ஒரு gifted ஆட்டக்காரர். இந்த முறை ஜெயித்ததற்கு டெக்னாலஜிக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். ரிவ்யுவில் எல்.பி.டபிள்யு மற்றும் ஸ்டெம்ப்டு இல்லை என்று தெரியவைத்த அந்த தொழில்நுட்பம் வாழ்க. நான்கு கேச்ட்சுகள் பாக் வழிந்த போதே நமது வெற்றி நிச்சயமாகியது. அன்றைக்கு ஒருவர் அறுவராகி விளையாடினார் சச்சின். அன்றைய தினம் பாராட்டப்பட வேண்டிய மற்றுமொரு மட்டையாளர் சுரேஷ் ரெய்னா. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விளையாடாமல் நிதானமாக விளையாண்டு இந்தியா நல்ல ஒரு நிலை செல்வதற்கு பேருதவி புரிந்த வீரர் அவர்.

எதேச்சையாக எட்டு மணி அளவில் தி.நகர் சென்றபோது ஏதோ 144 பிறப்பித்து ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பது போன்று தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தது. சரவணா ஸ்டோர்ஸ் சிப்பந்திகளுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை. வாசலில் நின்று மனதார சிரித்துக்கொண்டிருந்ததை அன்று பார்த்தேன். வாழ்க பாகிஸ்தான். தி.நகர் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆட்டோ கூட வீதிகளில் திரியாதது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அடுத்த முறை இந்தியா-பாக் போட்டியின் போது நிச்சயம் தி.நகர் சென்று ஷாப்பிங் புரிய சங்கல்பம் செய்து கொண்டேன். ரிலைன்ஸ் குழுமம் பொது விடுமுறை அளித்ததும், கோடி கோடியான தமிழர்கள் வேலைகளை போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஓடிப் போய் மேட்ச் பார்த்தது பலன் அளித்தது. இந்தியா வென்று இறுதியை அடைந்தது.

டெண்டுல்கரின் கேட்ச்களை நழுவவிட்டதற்கு அஃப்ரிடி பணம் வாங்கிவிட்டார் என்று அவதூறு பேசினாலும் இறுதி பார்க்க இந்தியா தயாரானது. சனிக்கிழமையில் மேட்ச் அமைந்தது பற்றி ஒரு சில ஜோசியக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தில் இந்தியா ஜெயிக்குமா என்று சந்தேக ஆருடம் சொன்னார்கள். 

ஸ்ரீலங்கா இந்தத் தொடரில் ஒரு குழுவாக தோளோடு தோள் சேர்ந்து நின்று நன்றாக விளையாடினார்கள். பௌலிங், பீல்டிங், பாட்டிங் போன்ற மூன்று துறைகளிலும் சிறந்து கொடிகட்டி பறந்தார்கள். இந்தியா கோப்பையை ஜெயிக்கும் என்று முகரக்கட்டை புத்தகத்தில் முன்னரே தீ.வி.பி போன்ற தெருக் கிரிக்கெட் வீரர்கள் "ஜெயிச்சிட்டோம்" என்று நாக்கமுக்க பாட்டு போட்டதாலும் இந்தியா கெலித்தது. அரையிறுதியில் பாக். பிரதமர் வந்தபோது பாக். தோற்றது அது போல ராஜபக்ஷே இறுதிப் போட்டிக்கு வருவதால் ஸ்ரீலங்காவும் அப்பீட் ஆகி மண்ணைக் கவ்வும் என்று எனது சக கிரிக்கெட் தோழர்கள் அறுதியிட்டு கூறினார்கள். அபசகுனமாக ரெண்டு முறை காசை சுண்டியதும் பக்கென்று இருந்தது. சங்கக்கார சதி செய்கிறார் என்று மக்கள் கூறினாலும் எதையும் நாம் ஸ்போர்டிவ்-ஆக  எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கில் போட்டியை பார்க்க உட்கார்ந்தோம்.

வழக்கம் போல் ஒருபக்கம் நிலையில்லாமல் ஸ்ரீசாந்த் ரன்களை வாரி வழங்கினாலும் பொறுமையாகவும் தனது அனுபவத்தாலும் ஜாகீர் அற்புதமாக பந்து வீசினார். ஒவ்வொரு பந்தும் பிட்ச்சில் குத்தி பேட்ஸ்மேனுக்கு முன் ஆட்டம் காண்பித்தது. ஒப்பனர்கள் இருவரும் ஜாகீர் பந்து மூலம் வெடிகுண்டை சந்தித்தார்கள். என்னதான் அடக்கி போட்டாலும், மஹேலா ஜெயவர்தனே நின்று நிதானமாகவும் சில மோசமான பந்துகளை அடித்தும் ஆனந்த நர்த்தனமாக ஆடி விளையாடினார். காலரியில் அவருடைய சம்சாரம் முகத்தை மறைத்துக்கொண்டு புருஷன் விளையாடுவதை அவ்வப்போது பார்த்து சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தார். ஐம்பது அடித்ததும் "ஸ்டே தேர்.. ஸ்டே தேர்." என்று சமிக்கை காண்பித்தார். பொஞ்சாதி பேச்சை கேட்டு நடக்கும் உத்தமான கணவனாக நின்று நிதானமாக நூறு அடித்தார். கடைசி ஸ்பெல்லில் தொடர் முழுக்க நன்கு வீசிய ஜாகீர் 18 ரன்களை வாரி வழங்கி 274 அடைந்தனர்.

முதல் ஓவரில் அதிரடி நாயகன் சேவாக் அவுட். அடுத்த சில ஓவர்களில் சச்சின் காலி. இப்படி இந்திய தொடக்க ஆட்டக்காரர்களை துவம்சம் செய்து மும்பையில் குழுமியிருந்த ரஜினி, ஆமிர், முகேஷ் அம்பானி மற்றும் நிறைய பாலிவுட் நடிகைகள் மற்றும் நட்சத்திரங்களின் இதயத்தை நொறுக்கிய லசித் மலிங்காவை சபித்தேன். சிரிக்கும் நடிகைகளையும் அழகு தேவதைகளையும் ஆனந்தமாக பார்க்கும் வாய்ப்பை கொடுக்காமல் "அச்சச்சோ..." போஸில் பார்க்க வைத்த மலிங்கா ஒழிக என்று வாயார திட்டினேன். மேற்கண்ட இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும் மொபைலில் எனக்கு என் மருமானிடம் இருந்து அழைப்பு. "ஏய் மாமா! உனக்காக வீட்டில் முக்காலி ரெடி. எப்படியாவது எங்க வீட்டில் வந்து மேட்ச் பார்த்து இன்னிக்கி இந்தியாவை ஜெயிக்க வை. சமத்து இல்ல.." என்று அன்புக் கட்டளை பிறப்பித்தான். என் கால் ரெண்டும் கெஞ்சியது.

இனி வேறு வழி இல்லை. என்னை கருங்காலி என்று திட்டுவதற்கு முன் என் அக்கா வீட்டை அடைத்தேன். விராட் கோலியையும் கம்பீரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் ஒன்று இரண்டாக பொறுக்கியும் அவ்வப்போது நான்கு அடித்தும் மிக நிதானமாக விளையாண்டு அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். அப்புறம் தோணி வந்ததும், அவரும் கம்பீரும் விளாசியதையும் நாடு கண்ணுற்று இன்பம் அடைந்தது எல்லோருக்கும் தெரிந்தது. கடைசியில் ஒன்று சொல்ல வேண்டும். ஐந்து ரன்களில் வெற்றி என்ற கடைசி நேரத்தில் ஒரு ரன் அடித்து மறுமுனைக்கு சென்று, தோனி வெற்றி ரன்கள் அடிக்க தோது பண்ணிக் கொடுத்த யுவராஜ் என் நெஞ்சில் சிம்மாசனம் ஏறி உட்கார்ந்துவிட்டார். போட்டியின் முடிவில் இது டெண்டுல்கருக்கு சமர்ப்பணம் என்று சொல்லி இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தார். இந்த தொடர் முழுவதும் பட்டையை கிளப்பிய ஆள் என்றால் அது யுவராஜ் தான்.

ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இதற்கு மேல் அடுத்த உலகக் கோப்பை ஆட முடியாது என்கிற பட்சத்தில் டெண்டுல்கர் விளையாடும் இந்த முறை இந்தியா வென்றது நிச்சயமாக அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அணி வீரர்களின் கண்ணில் அந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்ட போது நம் கண்களிலும் ரெண்டு சொட்டு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு 20-20 மற்றும் 50-50 இரண்டிலும் உலகக் கோப்பை வென்று வெற்றிக்கனியை சுவைக்க வைத்த தோனி நமது இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு தலைசிறந்த கேப்டன். நமது தேசத்தில் கிரிக்கெட் ஒரு கலாசாரம். கிரிக்கெட் ஒரு மதம். சில பேர் பழித்தாலும்,  மத மாச்சர்யங்களை தவிர்த்து "நாம் இந்தியர்" என்று அனைவரும் கிரிக்கெட்டால் ஒன்றுபடுவோம். நன்றி.

பட உதவி: www.espncricinfo.com

-


64 comments:

பத்மநாபன் said...

முதல் பவுண்டரி அடிச்சிட்டேன் ...

பத்மநாபன் said...

//கொஞ்சம் அசையாமல் அப்படியே உட்காரு. இப்பதான் ஒரு ஃபோர் போயிருக்கு.// காம்பிரும் விராத்தும் அடிக்க அடிக்க ட்ரேட் மில்லை விட்டு இறங்காமல் நடந்துகொண்டே ( பார்த்துக்கொண்டே ) இருந்தேன் ...இறங்குன நேரம் விராத் ஆவுட் ..திரும்பி தோனி அந்த சிக்ஸர் அடிக்கும் வரை ஓயா நடை பயணம் .... நம்ம ஜெய்ப்பதற்க்காக சில செண்டிமென்ட்ஸ் தப்பில்லை

எல் கே said...

உங்க மருமான் சரியாதான் சொல்லி இருக்கான். இந்தியா ஒரு மேட்ச்ல தோத்ததுக்கும் நீர்தான் காரணமா

பத்மநாபன் said...

1983 வெள்ளை சட்டை வீரர்களை விட 2011 நீலச் சட்டை வீரர்களிடம் அணி உத்வேகம் கூடுதலாக இருந்தது ...அன்று கபில் இன்று தோனி ...இரண்டையும் அனுபவித்து பார்க்கும் ( முதலாவது டிரான்சிஸ்டர் பொட்டியில் கேட்டு ) வாய்ப்புக் கிடைத்தது அதிர்ஷ்டமே ..

VELU.G said...

//எல் கே said...

உங்க மருமான் சரியாதான் சொல்லி இருக்கான். இந்தியா ஒரு மேட்ச்ல தோத்ததுக்கும் நீர்தான் காரணமா
//

அப்போ இந்தியா தோக்கற மேட்சுக்கெல்லாம் நீங்க தான் காரணமா

யுவர் ஆனர் இவரை நாடு கடத்த உத்தரவிடுங்கள்

Unknown said...

மிக அற்புதம் வெங்கட் ...., சுயமான வார்த்தை நயம் ,அனாயஸ்யமான வாக்கிய பிரயோகம் ,

A.R.ராஜகோபாலன் said...

மிக அற்புதம் வெங்கட் ...., சுயமான வார்த்தை நயம் ,அனாயஸ்யமான வாக்கிய பிரயோகம் ,

பொன் மாலை பொழுது said...

/// தோனி வெற்றி ரன்கள் அடிக்க தோது பண்ணிக் கொடுத்த யுவராஜ் என் நெஞ்சில் சிம்மாசனம் ஏறி உட்கார்ந்துவிட்டார். போட்டியின் முடிவில் இது டெண்டுல்கருக்கு சமர்ப்பணம் என்று சொல்லி இன்னும் ஒரு படி மேலே உயர்ந்தார். இந்த தொடர் முழுவதும் பட்டையை கிளப்பிய ஆள் என்றால் அது யுவராஜ் தான்.///


சரி சரி, உங்க மருமகனை கூபிடுங்க. நல்ல பையன் மாமாவை பெண்டு கழடுகிறான்.வரும் IPL போதும் அவனை அருகில் வைத்துகொண்டு ஆட்டம் போடுங்கள். பிள்ளை முட்டியை பெயர்த்து வைப்பான்.மாமா முட்டியைதான்.

ஸ்ரீராம். said...

எல்லாவற்றையும் மீறி கோப்பை தந்த சந்தோஷம்...ஆமாம்...."சக் தே..." என்றால் என்ன?

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு...

ஸ்ரீராம். said...

மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் தம்பி ஜெய சங்கர் தெரியுமோ...?

Chitra said...

ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இதற்கு மேல் அடுத்த உலகக் கோப்பை ஆட முடியாது என்கிற பட்சத்தில் டெண்டுல்கர் விளையாடும் இந்த முறை இந்தியா வென்றது நிச்சயமாக அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. அணி வீரர்களின் கண்ணில் அந்த ஆனந்தக் கண்ணீரைக் கண்ட போது நம் கண்களிலும் ரெண்டு சொட்டு வருவதை தவிர்க்க முடியவில்லை.


....great moments.... !

இராஜராஜேஸ்வரி said...

நமது தேசத்தை ஜெயிக்க வைத்த புண்ணியம் என்னை வந்து சேரக் கடவது. //வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. தில்லியில் செமி-ஃபைனல் அன்றும், ஃபைனல் அன்றும் எதோ கர்ஃப்யூ போல இருந்தது! பரபரப்பாக இருக்கும் எல்லா சாலைகளிலும் ஓரிரு வாகனங்கள்!! :)

Madhavan Srinivasagopalan said...

நல்ல அலசல்..
கால், அரை, முழு - இறுதிப் போட்டிகளில் இந்தியா விளையாடிய விதம் --- கிளாசிக்.. -- சாம்பியன் எனச் சொல்ல தகுதி பெற்றவர்கள்தான்.

அமைதி அப்பா said...

//தோனி தண்ணியில் ஆடாத ஒரு சிறந்த கேப்டன்.//

:-)))))))))?!

***********

//போரடிக்காமல் எழுதலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.//

போரடிக்கவில்லை. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

************

//சில பேர் பழித்தாலும், மத மாச்சர்யங்களை தவிர்த்து "நாம் இந்தியர்" என்று அனைவரும் கிரிக்கெட்டால் ஒன்றுபடுவோம்//

கிரிகெட் நடைபெறும் அன்று மட்டுமாவது ஜாதி, மதம், மொழி என வேறுபாடு மறந்து எல்லோரும் இந்தியாவின் வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்டு, டிவியின் முன் அமர்ந்திருந்ததை நினைத்தாலே மகிழ்ச்சியாக உள்ளது உண்மைதான்.

மதுரை சொக்கன் said...

ஆட்டம் பார்க்கும்போது எல்லோருக்கும் இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் உண்டு(என்னையும் சேர்த்து)

ரிஷபன் said...

ரெண்டு கோவிலுக்குப் போயிட்டு பாதி ஆட்டம் முடிஞ்சப்புறம் சிவப்பழமா நண்பன் வந்தான்.. கேட்டா இந்தியா ஜெயிக்க அவன் அப்படித்தான் பார்க்கணுமாம் .
எல்லா வீட்டுலயும் இந்த கூத்து.. எழுந்திருக்காத.. கத்தல்!
அன்னலும் கடைசீல ஜெயிச்சுட்டோம்னு தெரிஞ்சதும் அந்த அர்த்த ராத்திரில இன்னொரு தீபாவளி கொண்டாடினோமே.. ஜெய் ஹிந்த்!

RVS said...

@பத்மநாபன்
ட்ரேட் மில்லில் நடந்து உடம்பை ஃபிட் ஆக்கிகிட்டீங்க. கடைசியா ஜெயிச்சிட்டோம்! கப்பை கப்புன்னு புடிச்சிட்டோம். ;-))

RVS said...

@எல் கே
உடனே வம்புல மாட்டி விடறீங்க பாருங்க எல்.கே. ;-))

RVS said...

@பத்மநாபன்
என்ன ஒரு அழகான ஒப்புமை பத்துஜி! ;-))

RVS said...

@VELU.G
பாருங்க எல்.கே. நீங்க மூட்டி விட்டது.. என்னை நாடு கடத்த உத்தரவிடுகிறார் வேலு. ஃபைனல்ஸ் செயிச்சப்புறம் வேற என்னா வேணும்.. நானே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனோ? ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
நன்றி கோப்லி! அதென்ன வேலூர்-ங்கற ப்ரோபைலேர்ந்து வேற கமெண்ட்டர! ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
மாணிக்கம் பய ரொம்ப படுத்தி எடுத்துட்டான். நான் ஆடாது அசங்காது உட்கார்ந்திருந்தேன். இந்தியாவுக்காக பாடுபட்டேன் தல. ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
பரம சந்தோஷம். சக் தே என்றால் Go for it. ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
என் வலைப்பூ மூலமாக வாழ்த்து சொன்னதற்கு நன்றி கருன்!! ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
எனக்கு தெரியலை! அம்மாவை கேட்டு சொல்றேன்! ;-))

RVS said...

@Chitra
Yes. Very Great Moments!! ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி! ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஒரு நாடு. ஒரு விளையாட்டு என்று யாராவது விளம்பரம் தரலாம். பொருத்தமாக இருக்கும் தல. நன்றி. ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
ஆமாம். முதலில் சோகையாக இருந்த ஃபீல்டிங் கூட போகப்போக பிக்கப் ஆகிவிட்டது மாதவா. ;-))

RVS said...

@அமைதி அப்பா
நன்றி அ.அ!!
நாம் கிரிக்கெட் என்ற மதத்தால் ஒன்றுபடுவோம். அட்லீஸ்ட் இதுவாவது நம் வேற்றுமைகளை களையட்டும். ;-))

RVS said...

@மதுரை சொக்கன்
சார்! மூட நம்பிக்கைன்னு சொல்லாதீங்க... மேட்ச் சென்டிமென்ட்... கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி சார்! ;-))

RVS said...

@ரிஷபன்
என் பிரென்ட் ஒருத்தன் ஷீரடி சாய் பாபாவை வேண்டிகிட்டே மேட்ச் பார்க்க உட்காருவான். ஏதோ, நம்மால இந்தியா ஜெயிச்சா மாதிரி ஒரு ஃபீலிங். வேறென்ன? கருத்துக்கு நன்றி சார்! ;-))

Matangi Mawley said...

Happy tears, sir-- match mudinja odane.... veetla ullavanga praarthana panninathellaam innikku niraiveththiyaachchu... :) can't beleive we actually saw a part of history being written!

ini yuvraj yaara venumnaalum girl friend aakkikkattum... dhoni eththana ad ku venumnaalum vanthu thala kaattattum... sreesanth-a eththana thadava venumnaalum bajji adichchukkattum... i have no comments!

brilliant match! can never forget the moment of victory! :)

Sivakumar said...

//தோனி தண்ணியில் ஆடாத ஒரு சிறந்த கேப்டன்.//

ஆகவே தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக அண்ணன் ஆர்.வி.எஸ் அவர்கள் இன்று முதல் சென்னையில் ஒவ்வொரு சந்திலும் கேப்டனை எதிர்த்து பிரச்சாரம் செய்வார் என்பதை....

Sivakumar said...

இவ்ளோ கஷ்டப்பட்டும் கடைசில கல்யாணி கவரிங் கோப்பையை தந்துட்டாங்களே....

அப்பாதுரை said...

நீங்களும் க்ரிகெட் பத்தியே எழுதிட்டீங்க.. போவுது.

Anonymous said...

என் நிலைமைதான் கொஞ்சம் ரிவர்ஸ் ஆயிடிச்சு. 1983 போட்டியை டிவியிலும் 2011 போட்டியை cricinfo textலும் பார்த்தேன்.

நானும் கொஞ்சம் கூட அசராம ஒரே மூலையில் உட்கார்ந்து கால் மரத்து போக பார்த்தேன். இதுக்காக கலையில் நாலு மணிக்கு எழுந்து எட்டு மணிக்கு பல் தேச்சு, ஒரு மணிக்கு சமைச்சு சாப்பிட்டேன். எல்லாம் வெளியூரிலே பிழைக்க வந்த வினை.

ரெண்டு நாள் கழிச்சு highlights பார்த்தேன். ரொம்ப சுகமா இருந்தது.

ரகு.

Yaathoramani.blogspot.com said...

ஹாட் பேக்கில் இருந்து எடுத்து
பறிமாறியதைப்போல
பதிவும் சூடாகத்தான் இருந்தது
தீராத விளையாட்டுப்பிள்ளையின்
பதிவல்லவா..����

Madhavan Srinivasagopalan said...

//ஸ்ரீராம். said...

மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் தம்பி ஜெய சங்கர் தெரியுமோ...?
//

// RVS said...

@ஸ்ரீராம்.
எனக்கு தெரியலை! அம்மாவை கேட்டு சொல்றேன்! ;-)) //

@ ஸ்ரீராம்.
அந்த குமாஸ்தாவைத் தெரியும் எனக்கு. (குமாஸ்தாவின் தம்பி ஜெயசங்கர் எனது அண்ணனின் வயதுடையவர் -- எந்தளவுக்கு நண்பர் எனத் தெரியாது)
அந்த குமாஸ்தாவின் புதல்வன் தற்போது ஒரு வக்கீலாவார்.
அந்த குமாஸ்தாவின் மைத்துனர்களில் ஒருவர் எனது நண்பர்.. அவர் பெயரும் VSM தான் .. ஆனால், அவர் LVSM (not RVSM )

தக்குடு said...

ப்ரீத்தி ஜிந்தா குதிச்சு குதிச்சு கொடி காட்டினதுனாலதான் இந்தியா ஜெயிச்சதுன்னு நினைச்சேன், இப்பதானே இந்த முக்காலி மேட்டர் தெரியர்து!!!..:))

தக்குடு said...

@ sriram anna - //மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் தம்பி ஜெய சங்கர் தெரியுமோ...?//

அவாத்துக்கு பக்கத்துல/எதிர்தாத்துல இருந்த ஒரு லலிதாவையோ காயத்ரியையோ சேர்த்து அடையாளமா(cross reference) கேட்டு இருந்தா "ஓஓ! பேஷா தெரியுமே!"னு மைனர் சொல்லி இருப்பார், அதை விட்டுட்டு சீனிவாசனை தெரியுமா? வாசுதேவனை தெரியுமா?னு கேட்டாக்கா பாவம் நம்ப RVS அண்ணா என்ன பண்ணுவார்!!...:)))

Anonymous said...

செமத்தியா விவரணைகள் எப்போதும் போல அண்ணே! :)
Great moments :)

kashyapan said...

ஜெயவர்த்தனே போண்டாட்டியா! என்னடா இந்தப்பொம்பளை கையை கையை ஆட்டுதேன்னு பாத்தேன்! நன்றி ஆர்.வி.எஸ். சொன்னதுக்கு. ஒத்தக்கட்டைல மாட்சு பாத்தா இப்படிதான் தலைகால் புரியாது. ஏ.சில படுத்திருந்தவள எழுப்பி( பாட்டிதான்யா) சந்தோஷமா இந்தியா ஜெயிச்சுடுத்துனு சொன்னேன்."அதுக்கீன்ன! தூக்கத்தை கெடுத்து!போதும்படுங்க" என்ரு ஒரு அதட்டல் தான் கெடச்சது தேசபக்தியாவது ஒண்ணாவது. குடும்ப அமைதி முக்கியம்யா! பெசாம படுத்தேன்---காஸ்யபன்..

அப்பாதுரை said...

தக்குடு சொன்னா சரியாத் தான் இருக்கும்னேன். கேட்டாலும் சரியா கேக்க வேண்டாமோ ஸ்ரீராம்?

அப்பாதுரை said...

அதே அதே காஸ்யபன்!

ஸ்ரீராம். said...

மாதவன், உண்மைதான். அவர் மகன் வக்கீல் என்றுதான் சொன்னார். இங்கு எங்களுக்கு அவர் நண்பர்.ஜெய சங்கர் சென்னையில் இருக்கிறார்.நன்றி தகவல்களுக்கு.

தக்குடு...ரசித்தேன்.

அப்பாதுரை, மாதவனுக்கு இந்த விவரம் எல்லாம் தேவை இல்லாமேலேயே சொல்லிட்டார் பாருங்க...!!

RVS said...

@Matangi Mawley
ஆமாம் மாதங்கி. இனி மேல் யார் வேணா ஊர் மேல போகட்டும்.. நமக்கு கவலை இல்லை... இப்போதுள்ள டீம் Young and Energetic. தொண்ணூறு சதம் ஜெயிக்கும் என்று நினைத்தேன். நூறு சதம் பூர்த்தி செய்து விட்டார்கள். ;-)-))

RVS said...

@! சிவகுமார் !
ஆளைப் பிடிச்சு உள்ள இழுக்கரதில பெரிய ஆள் நீங்க.. ஒவ்வொவொரு தடவையும் உங்களுக்கு ஒரு scope கொடுக்கணும்ன்னு எழுதறதை கரெக்கட்டா கேட்ச் பண்றீங்க.. நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
கோல்டோ, கவரிங்கோ அன்னிக்கி மேடையில வாங்கியாச்சு.. கப்பை விட ஜெயித்ததுதான் பிரதானம் சிவா.. நீங்க என்ன சொல்றீங்க? ;-))

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி! ரொம்ப வருஷ பழக்கம். விட முடியலை.. ஹி..ஹி..

RVS said...

@ரகு.
//இதுக்காக கலையில் நாலு மணிக்கு எழுந்து எட்டு மணிக்கு பல் தேச்சு, ஒரு மணிக்கு சமைச்சு சாப்பிட்டேன். எல்லாம் வெளியூரிலே பிழைக்க வந்த வினை. //
நான் ஒரு பதிவுல எழுதினதை ரெண்டு வரியில அசத்தலா சொல்லிட்டீங்க. நன்றி சார்! ;-))

RVS said...

@Ramani
பழைய கஞ்சி இல்லைன்றீங்க.. நன்றி ரமணி சார்! ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
இப்போது புரிந்தது.... ஆனால் அவர்கள் மேலத்தெருவில் இல்லை.. மேல வீதி சந்திக்கும் முனையில் இருக்கும் வடக்கு வீதி தெருவில் நுழைந்தால் ஐந்தாவது வீடு அவர்களது.. எல். வெங்கடசுப்ரமணியன் எனது நண்பன். பூண்டியில் படித்தான். சென்னையில் கூட தொடர்பு இருக்கிறது. மேல வீதி என்று சொன்னதும் குழம்பினேன். மேலும் ஜெயசங்கர் எனக்கு பழக்கம் இல்லை. ;-))

RVS said...

@தக்குடு
நாங்க சென்னையில பார்த்தா அவா மும்பைல ஜெயிப்பா... அவ்ளோ பவர் எங்களுக்கு... புர்தா.. ;-))

RVS said...

@தக்குடு
ஸ்..அப்பா.... தாங்க முடியலை.. தன்னைப் போல் பிறரை நினைன்னு இதுக்கெல்லாம் சொல்லலை தக்ஸ். நா ரொம்ப நல்லவன்... எங்க ஏரியாவுல வேணா கேட்டுப் பாரேன்.. இந்த சம்மர்ல தின்னவேலி வரேன்... ;-))

RVS said...

@Balaji saravana
நன்றி தம்பி. மேட்ச் முடிஞ்சு ஒரு மணி நேரம் அதைப் பத்தி பேசிட்டுதான் தூங்கினேன். இறுதிக்கு ஏற்ற மேட்ச். ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
எனக்கும் நன்றாக தெரியும். வக்கீல் சிவசுப்ரமணியன் இருக்கிறாரா என்று கேட்கவும். ;-))

RVS said...

@kashyapan
சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும் முதற்கண் நன்றி.

வெஸ்ட் இண்டீஸ்ல மேட்ச் நடக்கும் பொது மூணு மணிக்கு எழுந்து மேட்ச் பார்ப்பேன். அது ஒரு கிரிக்கெட் வெறி பிடித்து திரிந்த காலம். இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறேன். சாதாரண நாட்களில் என்னுடைய பெண்கள் என்னை மேட்ச் பார்க்க விடுவதில்லை. உலகக் கோப்பை இறுதி என்பதால் எனக்கு சலுகை கிடைத்தது. அதுவும் கொஞ்சம் நேரம் தான் வீட்டில் பார்த்தேன். மற்ற நேரம் என் அக்கா வீட்டில் பார்த்தேன்.
அடிக்கடி வாங்க சார்! அப்பாஜி மாதிரியோ, மோகன்ஜி மாதிரியோ இலக்கியத் தரம் எதிர் பார்க்க முடியாது. ஆனால் ரொம்ப மொக்கையாக இருக்காது என்பது என்னுடைய துணிபு. நன்றி. ;-))

Kri said...

Are you receiving my comments? Shekar.

RVS said...

@Krish Jayaraman
Yes! I am getting...

kashyapan said...
This comment has been removed by a blog administrator.
kashyapan said...

R.V.S. அவர்களே! உங்கல் மன்னார்குடி டேஸ் கலத்திலேயே வ்ந்திருக்கேன்யா! ---காஸ்யபன்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails