Wednesday, December 1, 2010

மன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு

local cricket

"கிரிக்கெட் விளையாடும் போதாவது இங்க்லீஷ்காரன் மாதிரி இருங்கடா" என்று கோபால் அடிக்கடி கூவுவான். இடுப்பளவுக்கு இருக்கிற மட்டையை தூக்கி தோளில் சார்த்திக்கொண்டு நாலரை மணி வாக்கில் தெருமுனையில் கிரிக்கெட் விளையாடியது வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாத டோனி கிரேக் கமென்ட்டரியாக என்னோடு கூட வரும். "இது ஒரு ஜென்டில்மேன் கேம்" என்று அடிக்கடி கரதலையாக அடித்துக்கொள்வான் கோபால். வாச்சான்குளி அடிக்காமல் பந்து காலில் பட்டதையும், அதன் உயரத்தையும், பின்னால் திரும்பி ஸ்டம்ப்சையும் ஒரு முறை பார்ப்பான். நேராக பந்து குச்சிக்கு சென்றிருக்கும் என்று அவன் பரிபூரணமாக நம்பினால் ஆட்டத்தின் முடிவைப் பற்றி கவலையே இல்லாமல் வலது கை ஆள்காட்டி விரலை தூக்கி காண்பித்து பாகவதர் போல தலையை இரண்டு முறை வலம் இடமாக ஆட்டிவிட்டு "அவுட்.அவுட்.." என்று அம்பயருக்கு பதில் அவனே சொல்லிக்கொண்டு பெவிலியனுக்கு நடையை கட்டிவிடுவான். பெவிலியனில் வந்து உட்கார்ந்து கொண்டு "லவ்லி பால்டா" என்று வீசியவனுக்கு பாராட்டு பத்திரம் வேறு படிப்பான். கிரிக்கெட் உலக அரிச்சந்திரன் அவன். இவ்வளவு ஒரு உத்தம கிரிக்கெட் ஆட்டக்காரனை நான் கடைசி வரை மன்னையில் பார்க்கவேயில்லை. மன்னையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் ஒரு இங்க்லீஷ் கவுண்டி டீமை போல நன்கு போஷாக்காய் வளர்ந்து செழித்து நின்றபின் நாங்கள் விளையாடிய டோர்னமென்ட் ஏராளம். அதில் நாங்கள் கெலித்தது தாராள எண்ணிக்கையிலான மேட்சுகள். டீமிற்கு பயிர்ச்சியாளர் அந்தஸ்த்தில் இருந்த மோகன் ஒரு ஸ்டேஜ் வந்ததும் தானாக கழண்டு கொண்டு விட்டார். ஆட்டம் கற்றுக்கொண்ட பின்  "நீ க்ளான்ஸ் ஆடாதே... டிரைவ் ஆடு" என்றெல்லாம் அறிவுரை சொன்னால் யார் கேட்பார். தன் மரியாதையை காபந்து செய்துகொள்ளும் பொருட்டு "அலுவல் அதிகம்", "அலுவலகத்தில் ஒரே வேலைப் பளு" என்ற உலகத்தின் தலை சிறந்த ஒரு சில பொதுக் காரணங்கள் சொல்லி ஒதுங்கிக் கொண்டார். ராஜகோபாலஸ்வாமி கோயிலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள நான்கு மாட வீதிகள் உண்டு. அதற்கு பெயர் கோபாலசமுத்திரம் கீழ, தென், மேல, வடக்கு வீதிகள். அதில் தென்கரையில் ஒரு பெயர்போன கிரிக்கெட் டீம் உண்டு. அவர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கிரிக்கெட் மேட்ச் அடிக்கடி விளையாடுவோம். 

கோயிலின் மேலகோபுர வாசலில் தோதாக ஒரு இடம் உண்டு. அதுதான் எங்களுக்குள் நடக்கும் போட்டிகளுக்கு ஆட்டப் பந்தய மெல்போர்ன் மைதானம். மேல கோபுர வாசலில் என்னைப் போல் ஒரு ஆள் புகும் அளவிற்கு வளைந்த வானளாவிய இரும்பு கேட் வழியாக கோயிலினுள் சென்றால் அதுதான் வெளிப் பிரகாரம். மணலும் புல்லும் கொசகொசவென சேர்ந்து இருக்கும். அதற்க்கும் அதற்க்கு உள் பிரகாரத்தில் இருக்கும் மேல கோபுர வாசலுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் பிட்ச் அமைத்து மூன்று குச்சி ஊன்றி கிரிக்கெட் விளையாடுவோம். இந்த மைதானத்தின் விதிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. மட்டைப் பிடித்து ஆடும் பக்கம் அதாவது ஆஃப் சைட் மிக அருகில் கோபுரம் இருப்பதால் ரன் ஏதும் எடுக்க முடியாது. ஓங்கி அந்த கல்கோபுரத்தில் அடித்தால் ரப்பர் பந்து தான் கிழிந்து போகும். நியூடனின் மூன்றாவது விதியை நினைவுறுத்தும். மடக்கி கால்புறம் தூக்கி அந்த வெளி கோபுர வாசல் கோபுரம் மேல் பந்து பட்டால் இரண்டு ரன் கிராண்டட். ஓட வேண்டாம். ஆங்க்கர் அடித்தார் போல் அங்கேயே நின்றுகொண்டு ஆட்டத்தை ஜெயிக்கலாம். ஆஃப் திசையில் பந்தை வீசினாலும் ஒரு முறை பேட்டைக் கொண்டு வலைவீசி வாரி எடுத்து கால் திசையில் போட்டு அடித்து ரன் சேகரிப்போம்.

இந்த இரண்டு எடுப்பதில் நான் கில்லாடி. ஏதோ கோபாலன் அனுக்கிரகம். மட்டை கொண்டு வலை வீச அருள் புரிந்திருந்தான். எவ்வளவு வேகமாக ஆஃப் சைட் போட்டாலும் தூண்டில் போட்டு கால்பக்கம் தூக்கி அடித்து இரண்டு பெற்றுவிடுவேன். அப்படி ஒரு மேட்சில் எதிர்திசையில் நான், பந்தை எதிர்கொள்ளும் திசையில் கோபால். எங்கள் இருவரையும் விட்டால் நிச்சயம் மேட்ச் ஊத்திக்கும். அண்ணனின் "சத்யமேவ ஜெயதே" எங்களுக்கு நன்றாக தெரியும். தெற்குவீதி அணியில் நன்றாக வீசக்கூடிய பந்து வீச்சாளர் வீசினார். காலில் வாங்கினான். தலையை திருப்பி திருப்பி பார்த்தான். ஒற்றை விரலை கோபாலன் கோவர்த்தன கிரியை தூக்கும் போது உயர்த்தினானே அது போலவும், கல்யாண வீடுகளில் கெட்டி மேளம் கொட்டச் சொல்லும் போது வாத்தியக்காரர்களுக்கு பெருசுகள் காண்பிப்பார்களே அதுபோலவும் ஆட்டிக்கொண்டே உள்ளே போய்விட்டான். அப்புறம் வந்திறங்கிய சில்லரைகளை ஒரு முனையில் வைத்துக்கொண்டு வாரி வாரி கோபுரத்தில் பந்தைப் போட்டு டி.என்.எஸ்.சி பேங்க் சிட்டுக்குருவி போல ரன் சேர்த்து ஜெயித்தோம் என்று ஞாபகம்.

அப்புறம் பல டோர்னமென்ட்டுகள் உள்ளூரில் நடத்த ஆரம்பித்தார்கள். ஹவுசிங் யூனிட்டில் ஒரு டீம் இருந்தது. ஸ்டீஃபன்  ராஜா என்று இரண்டு பெரிய ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். ராஜா ஆஜானுபாகு என்று ஸ்டீஃபன் வாமனன். புறாக்கூண்டு போல ஒரே இடத்தில் மக்கள் வசிப்பதற்கு அதுதான் முதன் முறையாக மன்னார்குடி பழகிக்கொண்டிருந்தது. பிளாட் வீடுகள் நான் பார்த்ததும் அப்போதுதான். விளையாட வீடு வீடாக சென்று வெற்றிலைப்பாக்கு வைத்து அழைக்கவேண்டாம். "ராஜா. சுரேஷ்... ஸ்டீஃபன்...." என்று கொஞ்சம் இரைந்து கூப்பிட்டால் அவ்வளவு பெரும் அந்தக் குறு மைதானத்தில் ஆஜர். அங்கு கொஞ்சம் விளையாடினோம். அப்புறம் 3333, 2222, 1111  என்று கபடி மேட்ச் பரிசுத் தொகை மாதிரி ஊரெங்கும் போஸ்டர் அடித்து விளையாட கூப்பிட்டார்கள். இம்முறை பின்லே ஸ்கூல் கிரவுண்ட். அங்கு இரண்டு பிட்ச் இருக்கும். ஒரு பிட்ச் முழுக்க சபரிமலை யாத்திரை போகும் போது வழியில் இருப்பது போல ஒரே கூழாங்க் கல். லேசாக சரிக்கியது என்றால் தொடையிலிருந்து ஒரு அரைக்கிலோ சதையை பூமாதேவி வழித்துக்கொண்டு போய்விடுவாள். சர்வ ஜாக்கிரதையாக விளையாட வேண்டும். "சர்..ர்....ர்.." என்று சரளைக் கற்களில் சருக்கிக்கொண்டே போய் உருண்டு பிரண்டு ரன் அவுட்டிலிருந்து தப்பித்த பிரகஸ்பதிகளும் உண்டு.

இது முடிந்து அடுத்து பக்கத்து கிராமங்களில் வயற்காடுகளில் நடந்த மேட்சுகள். மன்னையில் நட்ச்சத்திர அந்தஸ்த்து பெற்ற விளையாட்டு வீரர்கள் வந்து விளையாண்டால் கூடுதலாக இன்னும் நாலு பேர் கைலியை தூக்கி கட்டிக்கொண்டு ரோடோரத்தில் வந்து நின்று வேடிக்கை பார்ப்பார்கள். வரப்பில் பந்து பட்டு ஒரு முறை ஸ்ரீராம் கன்னத்தை பதம் பார்த்ததில் "வேவ்விட்டு...வேவ்விட்டு..." என்று வெங்கிட்டு சொல்ல முயன்று வாய் திறந்து பேசமுடியாமல் தோற்றுப்போனான். எவ்வளவோ முயன்றும் தெருவில் அவன் வாயை கட்டமுடியாமல் அவதியுற்ற நாங்கள் இப்படி ஒரு உபாயம் இருந்ததை அன்றுதான் கண்டுகொண்டோம்.  பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, நெடுவாக்கோட்டை என்று பல கோட்டைகளில் நடந்த பந்தயங்களில் கிரிக்கெட் கோட்டையை பிடித்து எங்கள் கொடியை நாட்டினோம்.

இப்படி நாங்கள் ஊரெல்லாம் போய் மேட்ச் விளையாடும் வயதும் வித்தையும் அடைவதற்கு முன்னால் வடகரையில் வரது மாமா மேட்ச் விளையாடுவதற்கு மெட்ராசில் இருந்து ஆளெல்லாம் வரவழைப்பார். மாவட்ட அளவில் சில மேட்ச்கள் நடக்கும். எல்லாம் கட்டை பால் மேட்ச். அதாவது கிரிக்கெட் பால் மேட்ச். அந்த வீரர்கள் வந்தால் அவர் வீட்டில் தான் குளிப்பார்கள், சாப்பிடுவார்கள், தங்குவார்கள். சாயந்திரம் சோம சுரா பானங்கள் சாப்பிட்டு நன்றாக தீர்த்தவாரி செய்வார்கள். நாங்கள் "ஆ" என்று வாய் பிளந்து அண்ணாக்களின் Off the Field செய்கைகளில் எங்களை மறப்போம். வான் நீல நிற போட் போல ஒரு கார் வரது மாமா வைத்திருந்தார். அந்தக் காரை கீயோடு எங்கு வேண்டுமானாலும் தைரியமாக நிறுத்தி விட்டு போகலாம். லோகத்தில் யாரும் கீ கொடுத்து அந்தக் காரை கிளப்ப முடியாது. எதற்கும் நாலு பேர் வேண்டும் என்பார்களே அது போல ஒரு நான்கு பேர் கை கொடுத்து உதவினால் தான் "போனால் போகட்டுமே இந்த மனித ஜந்துக்கள்" என்று மனது வைத்து கிளம்பும். வந்த வெளியூர் அண்ணாக்களை எல்லாம் அதில் வைத்து "எலேலோ. ஐலசா.." சொல்லி நாங்கள் தான் தினமும் தள்ளி கிளப்பி விட வேண்டும். இது தான் போட் போல படகு கார் என்பதை அறிக.

இப்படியெல்லாம் செய்தாலும் காலிறுதிக்கு முன்னால் அப்பீட் ஆகி மூட்டை கட்டிக் கொண்டு அவர்கள் ஊருக்கு கிளம்பி விடுவார்கள். நல்லவேளை முழு டோர்னமென்ட் விளையாடினால் யார் அந்தக் காரை கை கால் ஒடிய தள்ளுவது. பெருமாள் அணுக்ரகம் ப்ரீ குவாட்டரிலேயே இவர்களை மன்னையில் மண்ணை கவ்வ வைத்துவிடுவார்.

ராஜகோபாலனுக்கு ஜே!!

பின் குறிப்பு: ஏன் கெட்ட கிரிக்கெட்டு என்ற தலைப்பு என்றால், எங்களை படிக்க விடாமல் எங்கள் வாழ்க்கையில் அது நன்றாக சுவர் போல நின்று விளையாடியதால் "கெட்ட" கிரிக்கெட் அது. இதெல்லாம் மன்னையில் விளையாடிய ஆட்டம். நான் மாவட்ட அளவில் விளையாடியதை எழுதி இங்கே யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் இத்தோடு இதை நிறைவு செய்கிறேன். வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் கவனிக்கிறேன். நன்றி.

பட உதவி:tripwow.tripadvisor.com

-

30 comments:

சிவகுமாரன் said...

பதிவு டெஸ்ட் மாட்ச் மாதிரி இருக்கு. ஒன்டே மாதிரி இருந்தா நல்லா இருந்திருக்கும். முந்தைய பதிவில் எல்லா பாட்டுக்களும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

RVS said...

@சிவகுமாரன்
நீளத்தை சொல்றீங்களா.. நிறைவைச் சொல்றீங்களா.. ;-) முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ;-)

வெங்கட் நாகராஜ் said...

கெட்ட கிரிக்கெட்.. நன்று. கிரிக்கெட் பாட் பிடிக்க வேண்டிய கை, கணினியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறதோ? : )))

RVS said...

வெங்கட் நாகராஜ்
கிரிக்கெட்டா... அதுவும் தென்னகத்திலிருந்தா... அதுவும் தென் தமிழ்நாட்டிலிருந்தா... ஐயா நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். இங்கே எதற்கும் ஒரு "தள்ளு" வேண்டும். அது ஒரு நொந்த கதை... விட்டுத் தள்ளுங்கள்.. பதிவிர்க்காணும் உதவுகிறது.... ரொம்ப புலம்பிட்டேனோ.. ஸாரி... நன்றி ;-)

அப்பாதுரை said...

க்ரிகெட் நினைவுகள் படிக்க சுவையா இருக்கு.
>>>வேவ்விட்டு...வேவ்விட்டு...


(எங்கள் பிளாகுல விசுவனாத் பத்தி எழுதறதா ஆதிகாலத்துல சொன்னாங்க - உங்களுக்கு விசுவனாத் பிடிக்குமா? அவரோட க்ரிகெட் விடியோ ஏதாவது இருக்கா?)

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான வர்ணனை...கார் வர்ணனையும் சூப்பர்.

balutanjore said...

dear rvs

indha VACHANGULI varthai kettu 30 varusham achu.

neengal en professional cricketer
agavillai endru enakku therium.

ana solla matten.(aprama phonela solren)

balu vellore

இளங்கோ said...

//நான் மாவட்ட அளவில் விளையாடியதை எழுதி இங்கே யாரையும் புண்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில் இத்தோடு இதை நிறைவு செய்கிறேன்.//
அப்பாடி :)

பத்மநாபன் said...

கெட்ட கிரிக்கெட் வாஸ்த்துவமான பெயர் வச்சிருக்கிங்க.... பத்தாங்கிளாஸ் பப்ளிக் எக்ஸாம் காலங்களிலும் பைத்தியமா இருந்து மார்க்க தொலைச்சிருக்கேன்.... என் பையன்களும் அதே வேலை பண்ணும் பொழுது எரிச்சலாத்தான் வருது... சரி..சரி... இப்ப இந்தியா 126 / 1 ..கோலியும் கம்பிரும் விளையாடிட்டு இருக்காங்க பார்த்துட்டு வர்றேன்.. பனி பொழிவுனால ஆட்டம் என்ன ஆகும் தெரியல...

suneel krishnan said...

இதே போல் எனக்கு ஏகப்பட்ட நினைவுகள் ..இத படிச்ச உடனே வருது :)
மாவட்ட அளவுல 14,16, வயதுக்குள்ள இருக்குரவங்களுக்கான அணி தேர்வுக்கு ஆறாம் கிளாச்லேந்து போயி ஒரே ஒரு தடவ தான் தேர்வானேன் ,அதுவும் substitute :)எங்களுக்கு ஒரு ரப்பர் பந்து அணி இருந்துச்சு ,பேரு சுப்ரீம் லேவேன் :) பேருல தான் சுப்ரீம் :) நெறைய நினைவுகள் வருது ,நேரம் கிடைக்கும் போது இதப்பத்தி எழுதணும்

R. Gopi said...

ரொம்பவே ஆடிருக்கீங்க. அதான் ஒரு விவரம் விடாமப் பதிவுல வருது

RVS said...

@அப்பாதுரை
விசுவநாத் என் காலத்திற்கும் முற்பட்ட கிரிக்கேட்டேர். குண்டப்பா விஸ்வநாத் என்று சில படங்கள் பார்த்துள்ளேன் அவ்வளவுதான் அப்பாஜி!! கபில், வெங்க்சர்கார், ரவி ஷாஸ்த்ரியில் ஆரம்பித்தது என் காலம்... ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம். ;-)

RVS said...

@balutanjore
நீங்க பண்றீங்களா இல்ல நான் பண்ணட்டா.. ;-)

RVS said...

@இளங்கோ
அப்பாடி போட்டாலும் விடமாட்டேன்... அட்லீஸ்ட் திண்ணை கச்சேரியில் வச்சுக்கறேன். ;-) ;-)

RVS said...

@பத்மநாபன்
என்னே உங்களது கிரிக்கெட் ஷ்ரத்தை!! கெட்டாலும் கிரிக்கெட் கிரிக்கெட்டே! வாழ்க மட்டை! வாழ்க பந்து! வாழ்க மூன்று குச்சிகள்!!! (பைல்ஸோடு...) ;-) ;-)

சிவராம்குமார் said...

மாவட்டம் வேற இருக்கா.... பரவா இல்லை பதிவைப் போடுங்க...

RVS said...

@dr suneel krishnan
எழுதுங்க சார்! படிக்கறோம்!! ;-) ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
ஆமாம் கோபி. ;-) இன்னும் நிறைய இருக்கு. ரொம்ப எழுதினா போரடிச்சுடும். ;-)

RVS said...

@சிவா என்கிற சிவராம்குமார்
வட்டம், மாவட்டம் இருக்கு.. மாநிலம் இல்லை... ;-)

தக்குடு said...

ஒரு வழியா ஸப்தாஹ பாராயணம் முடிஞ்ச மாதிரி இருக்கு. நமக்கு பிடித்தமான விஷயம் பத்தி எவ்ளோ நேரம் பேசினாலும்/எழுதினாலும் அலுக்காது. " நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு!"னு சிரிப்புவித்துவான் டுபுக்கு அவர்கள் எழுதின தொடர் படிச்சு பாருங்கோ! நீங்க சந்தோஷப்படுவேள்!

http://dubukku.blogspot.com/2006/03/3.html

Anonymous said...

//ஒற்றை விரலை கோபாலன் கோவர்த்தன கிரியை தூக்கும் போது உயர்த்தினானே அது போலவும், கல்யாண வீடுகளில் கெட்டி மேளம் கொட்டச் சொல்லும் போது வாத்தியக்காரர்களுக்கு பெருசுகள் காண்பிப்பார்களே அதுபோலவும் //

// எதற்கும் நாலு பேர் வேண்டும் என்பார்களே //

போனால் போகட்டுமே இந்த மனித ஜந்துக்கள்"//

உங்களோட ஸ்டைல் இதுல மின்னுது. ரொம்ப ரசிச்சேன் அண்ணே :)

RVS said...

@தக்குடுபாண்டி
கொஞ்சநாளா சேங்காலிபுரம் ஆனந்தராம தீட்சிதர் சப்தாஹம் கேட்டுண்டு இருந்தேன். அப்படி ஒரு பிரவாகமா சொல்றார். தக்குடு சப்தாஹம் ரெஃபர் பண்ணினதும் இந்த ஒழுக்கமான பிள்ளைக்கு அது ஞாபகம் வந்துடுத்து. டுபுக்கு பார்த்தேன். சூப்பர். ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி பாலாஜி தம்பி ;-)

a said...

//வாச்சான்குளி//
எவ்வளவு நாளாச்சி இந்த வார்த்தய கேட்டு........... R.V.S ஞாபகப்படுத்தியதர்க்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

// "இந்த இரண்டு எடுப்பதில் நான் கில்லாடி. ஏதோ கோபாலன் அனுக்கிரகம்." //

அப்பத்தான ஸ்ட்ரைகர் என்ட தக்க வெச்சிக்கலாம் ?

//அது போல ஒரு நான்கு பேர் கை கொடுத்து உதவினால் தான் "போனால் போகட்டுமே இந்த மனித ஜந்துக்கள்" என்று மனது வைத்து கிளம்பும். வந்த வெளியூர் அண்ணாக்களை எல்லாம் அதில் வைத்து "எலேலோ. ஐலசா.." சொல்லி நாங்கள் தான் தினமும் தள்ளி கிளப்பி விட வேண்டும்.//

'கரகாட்டக்காரன்' ஒரு ரீலே இதப் பாத்துதான் வந்துச்சாம்

//எவ்வளவோ முயன்றும் தெருவில் அவன் வாயை கட்டமுடியாமல் அவதியுற்ற நாங்கள் இப்படி ஒரு உபாயம் இருந்ததை அன்றுதான் கண்டுகொண்டோம். //

ha.. ha.. ha.. We learn from experience...


போட்டோல ஒன்னைய காணுமே...
ஒத்!.. நீதான் ஸ்ட்ரைகரோ ?

அப்பாதுரை said...

சப்தாஹம் அன்டே ஏமி?

RVS said...

@வழிப்போக்கன் - யோகேஷ்
நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும். வாச்சான்குளி இதை எழுதும் போது தன்னால வந்தது... ;-) ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா இது நெட்டு ஃபோட்டோ. என்னுடைய விளையாட்டெல்லாம் நான் ஃபோட்டோ எடுத்து வைக்கலை. ;-) ;-)

RVS said...

@அப்பாதுரை
ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் ஒரு ஏழு நாள் தொடர்ந்து செய்வார்கள். அது தான் சப்தாஹம். ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails