Wednesday, October 6, 2010

நானாவின் நேனோ

nanoலட்ச ரூபாய்க்கு கார் என்றதும் ஆளாய்ப் பறந்தான் நானா. "ஏண்டா நானா இதைப் பார்த்தா கவுத்துப் போட்ட திருவோடு மாதிரி இருக்கே! இதைப் போயா வாங்கப்போறே.." என்று கேட்ட அப்பாவி அப்பாவை பிடித்து ஒரு டோஸ் விட்டான். "டாடா இல்லேன்னா இந்த நாட்லே கம்பி இல்லே, இரும்பு இல்லே... ஒரு நெட்டு போல்ட்டு கூட அவா தான் மொத மொதெல்ல தயாரிச்சா.."ன்னு டாடாவின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் போல வரிந்து கட்டிக்கொண்டு வந்தான். "இல்லடா சோப்பு டப்பாவை மூடி போட்டு நிமிர்த்தி வச்சா மாதிரி இருக்கேன்னு..." என்று கார்வையாக இழுத்த பாச்சு மாமாவை "ஒருத்தர் திருவோடுன்றார்... நீர் சோப்பு டாப்பான்றீர்... என்னாச்சு.. டாடாவுக்குன்னு ஒரு மோட்டோ உண்டு தெரியுமா உமக்கு.." என்று பிரசங்கம் பண்ண ஆரம்பித்து ரத்தன் டாடாவிற்கு பிள்ளையில்லாமல் தத்து எடுத்துக்கொண்டது வரை சொல்லி ஒரு டாடா உபன்யாசம் செய்தான். வீட்டில் அனைவரும் மூச்சுக் காட்டாமல் பொட்டிப் பாம்பாக அடங்கினர்.

இந்த தினுசில் கார் தயாரிக்கிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடனேயே "இன்னார்க்கு இன்னதென்று எழுதி வைத்தானே டாடா இன்று" என்று சீட்டி அடித்துக்கொண்டே ட்ரைவ்மேன் ஸ்கூல் காத்தவராயனிடம் சொல்லி பயிற்சிக்கு காலை வகுப்பில் சீட் பிடித்துவிட்டான். ஐந்து மணிக்கே எழுந்திருந்து அரைகுறையாய் பல்லை ஒரு முறை குழப்பி விட்டு ஒரு வாய் காப்பி ஊற்றிக்கொண்டு ஓடோடி போய் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்வான். துடைக்காத கார் சீட், குளிக்காத குரு சிஷ்யர்கள், துர்கந்தமான நானாவின் திருவாய் என்று அந்த ஏரியாவே மணக்கும். இதில் முதலிடம் பிடித்த நானாவின் வாய் மணத்தை தாங்க மாட்டாமல் அவனுக்கு முதலில் கற்றுக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார் டிரைவிங் வாத்தியார். "டிரைவிங் கிளாஸ்ல எனக்கு என்ன ராஜ மரியாதை தெரியுமா.. எப்பவும் நான் தான் ஃபர்ஸ்ட்டு" என்று உள்அர்த்தம் புரியாமல் வீட்டில் பீற்றிக்கொள்வான். கார் பயிற்சியுடன் தேகப் பயிற்ச்சியும் அளித்தான் காத்ஸ். அவனுடைய ஹைதர் அலி காலத்து அம்பாஸிடர் காரை வாரத்தில் ஆறு நாள் தினமும் பத்து நடை முன்னுக்கும் பின்னுக்கும் அந்தத் தெரு முழுக்க தள்ளி தான் ஸ்டார்ட் செய்வார்கள். "கார் கன் மாதிரி... பாட்டரி தான் எடுக்கமாட்டேங்குது" என்று முகத்தில் நவரசம் காண்பித்து பேசும்போது குறைந்தது ரெண்டு பேர் "ச்.ச்.ச்." என்று தொச்சு கொட்டுவார்கள். "ஏலேலோ ஐலசா" என்று எல்லோரும் ராகத்தோடு கோரஸாகப் பாடி முட்டித் தள்ளியிருந்தால் பாட்டும் பயின்றமாதிரி ஆயிருக்கும்.

இன்று ஆபீசிலிருந்து நேராக அந்த ஏகபோக டீலரிடம் போய் புக் செய்துவிட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டான். ஒடிசலாக இருந்த ஒரு சேல்ஸ் பையனிடம் சென்று இவன் பி.எம்.டபிள்யூக்கு சொந்தக்காரன் போல "இதுல என்னென்ன ஃபீச்சர்ஸ் இருக்கு. கேன் ஐ சீ தி ப்ரோஷர்ஸ்" என்று தலையை ஒரு வெட்டுவெட்டி பீட்டர் விட்டு கேட்டுக்கொண்டான். அவன் விவரித்த எஞ்சின் ஸ்பீட், டேங்க் கொள்ளளவு, டார்க் போன்ற விவரங்களை எல்லாம் தெரிந்தவன் போல் காதில் வாங்கிக்கொண்டு "டெமோ போலாமா" என்று கேட்டு வாங்கி வீதிக்கு கொண்டுவந்துவிட்டான் ஒரு நேனோவை. இவனுக்கு தெரிந்த அரைகுறை டிரைவிங்கில் தேமேன்னு ரோடோரத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கைலி கிழவரை மீடியனோடு அணைக்க "யே.. கய்தே.. மூஞ்சை பாரு.." என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த எச்சிகியூட்டிவுக்கு வெசவு வாங்கி வைத்தான். அவன் அரண்டு போய் "சார் நோ ப்ரோப்ளம். நா வேணா எடுக்கறேன்.." என்று சொன்னதும், தன் தன்மானம் இடம் கொடுக்காமல் முழு ரோடையும் அளந்து அலைந்து ஓட்டிக்கொண்டு வந்து கடைசியில் கடையில் வந்து விட்டுவிட்டான். திருவிழா குடை ராட்டினத்தில் கார் பொம்மை மேல் உட்கார்ந்து சுற்றி விட்டு இறங்கின மாதிரி காரை விட்டு தள்ளாடி ஒடிந்து இறங்கினான் அந்த ஒடிசலான சே.எ.

பக்கத்து வீட்டில் தம்பதி சமேதராய் பந்தாவாக வந்திறங்கும் கோபுவை பார்த்து ரொம்ப நாளாக காய்திருக்கிறான். கால் கட்டு போடுவதற்குள் கார் வாங்கிவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவனுக்கு. புக் செய்து ஒரு வாரத்திற்குள் வண்டி எடுத்துவிட்டான் நானா. தெருவில் போஸ்டர் ஒட்டாத குறையாக எல்லோரிடமும் நேனோ புராணம். குறைந்தது பத்து முறையாவது தெருவோர்க்கு டாடாயணம் உபன்யாசம் செய்திருப்பான். அவன் புதுக் கார் எடுத்துக் கொண்டு வந்தவுடன் தெருவே கூடி நின்று திருஷ்டி பூசணி உடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தான். "வாங்கோ போகலாம்" என்று அப்பா, அம்மா, மாமா எல்லோரையும் கூட்டிக்கொண்டு பெருமாள் கோயில் புறப்பட்டான். கிளம்பிய கொஞ்ச தூரத்திலேயே அவன் அப்பா ம்.ம். என்று மோப்பம் பிடித்து "ஏதோ கருகர வாசனை வருதே..." என்றார். "அம்மா... கருக்கி கருக்கி அடிப்பிடிச்சு சமைச்சு போட்டு... எப்பபாத்தாலும் உன் மூக்குக்கு எல்லாமே கருகர வாசனை தான்.. சும்மா அடுத்தாத்து அல்சேஷன் மாதிரி மோப்பம் பிடிக்காதே" என்று அதட்டினான் நானா. இன்னும் கொஞ்ச தூரத்திற்கு அப்புறம் மாமா "ரொம்ப தீயற வாசனை வருதே..." என்றார். இப்போது அவனுக்கும் மூக்கில் அந்த பொசுங்கும் நெடி அடித்தது. தீடிரென்று பின்னால் உட்கார்ந்திருந்த அப்பா தேவலோகத்தில் இருப்பது போல புகை மூட்டத்தின் நடுவே விஷ்ணுவின் அம்சமாகவே உட்கார்ந்திருந்தார். அவசராவசரமாக காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு எல்லோரும் இறங்கி ஓரமாக கீழே நின்றுகொண்டார்கள். சில நொடிகளில் கார் முழுவதும் திகுதிகுவென்று பற்றிக்கொண்டது. "நேனோ கார் சுடுகாடான்னா மாறிடுத்து.. உசுரோட வச்சு எரிச்சிருக்குமே.... ஏண்டி.. கடைசி ரெண்டு திவ்ய தேசத்தையும் இன்னிக்கே காமிச்சிருக்கும் போலருக்கே...." என்று சொன்ன அப்பாவை பார்க்காமல் டீலருடன் கச்சாமுச்சா என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தான் நானா. இனிமேல் நேனோ என்றால் நோ நோ என்பானோ?
-

22 comments:

Ramesh said...

ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்னாலும்..சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க..

RVS said...

நன்றி ப்ரியமுடன் ரமேஷ்.

RVS said...

ஹி ஹிஹி... சை. கொ.ப

Madhavan Srinivasagopalan said...

'நானோ' ... இப்போ 'நோ.. நோ..' வா ?

பத்மநாபன் said...

நாணா.. நேனோ...நோநோ ..நகைச்சுவை அருமை...

புது செய்தியால்ல இருக்கு . சலிசா புடிச்சிரலாம்னு பார்த்தா ..ஒத்து வராது போலிருக்கே..

Aathira mullai said...

//"நேனோ கார் சுடுகாடான்னா மாறிடுத்து.. உசுரோட வச்சு எரிச்சிருக்குமே.... ஏண்டி.. கடைசி ரெண்டு திவ்ய தேசத்தையும் இன்னிக்கே காமிச்சிருக்கும் போலருக்கே...."//

சத்தியமா சொல்றேன் ஜி. பாக்கியெல்லாம் விட்டுத்தள்ளுங்க.. இது மாதிரி டயலாக் எழுத இன்னொருத்தரால முடியுமான்னு தெரியல..சிரிச்சு சிரிச்சு...சிரிச்சு சிரிச்சு...முடியல..இன்னும்..

RVS said...

ஆமாம்... மாதவா... ;-)

RVS said...

உங்கள் சிரிப்பில் நான் வாழ்கிறேன். சிரித்து மகிழ்ந்ததற்கு நன்றி ஆதிரா. ;-) ;-)

RVS said...

அடுத்த மாடல் கொண்டு வர்றாங்க பத்துஜி. அப்ப புடிச்சுருங்க.. இருந்தாலும் பின் சீட்டுக்கு அடியில் என்ஜின் வைக்கறாங்களான்னு பார்த்து வாங்குங்க... அதுதான் இதுல ப்ரோப்ளம்.

அப்பாதுரை said...

நேனோ மாமா கதையா இருக்குதே? எஞ்சினே இல்லாத நேனோ வந்தா சொல்லுங்க.

மோகன்ஜி said...

அடடா! நானாவின் நேனோ சர்ருன்னு வேகமா ஓட்டி வந்து சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி,பத்த வச்சுட்டீங்களே பரட்டை! டாடா இதப் படிச்சா சூடா ஆய்டுவரில்ல??

Chitra said...

..... பாவம்ங்க...

....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

ஹேமா said...

பிருந்தாவனத்தை மறக்க நகைச்சுவைக் கதையா.
நல்லாயிருக்கு.இயல்பாவும் இருக்கு ஆர்.வி.எஸ் !

Unknown said...

நகைச்சுவையான பதிவு.
அருமையாக இருக்கிறது

Gayathri said...

இதென்ன உண்மை சம்பவமா? அடக்கடவுளே..என்ன கொடுமை இது? உங்க கதையும் ஸ்க்ரீன் ப்ளையும் சூப்பர்

RVS said...

சரி அப்பாஜி!

RVS said...

ஆமாங்க மோகன்ஜி நானோ பர்சையும் கையையும் சேர்த்து சுட்ரிச்சு...

RVS said...

ரசித்ததற்கு நன்றி சித்ரா!

RVS said...

கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க ஹேமா!

RVS said...

நன்றி ஜிஜி

RVS said...

நானோ கார் பத்திக்கிட்டது உண்மை. கதை பில்டப் நம்மளோடது காயத்ரி!!

சிவகுமாரன் said...

நானோ இப்ப எப்படி இருக்கு RVS ? நான் வாங்கலாம்னு இருந்தேன். ( நம்ம பட்ஜெட்டுக்கு இதுவே கொஞ்சம் அதிகம் தான் ) இப்படி பீதியை கெளப்பிட்டீங்களே . Advise please

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails