பெரிய பெரிய கார்பொரேட் கம்பனிகளில் உயர்ந்த நிலையில் இருக்கும் சில உயரதிகாரிகளின் போக்குகள் பார்க்க படுவித்தியாசமாக இருக்கும். உதாரணமாக, நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடுவது போல நடந்து தங்களது சுறுசுறுப்பை காண்பிப்பார்கள். சாதாரண கடைநிலை ஊழியர்களுக்கு அவர் கடவுள் மாதிரி. பாதுகாப்பதில் இல்லை, தரிசனம் கொடுப்பதில். அவ்வளவு எளிதாக அவர்களை பார்க்கவோ, அவர்களிடம் பேசவோ முடியாது. கடிகாரத்தின் நொடிமுள்ளின் ஒவ்வொரு அசைவிற்கும் அவர்களுக்கு படி தரப்படுகிறது. இப்பூலோகத்தில் கர்ணனின் கவச குண்டலங்கள் போல் டை கோட்டுடன் உயரதிகாரியாகவே அவதாரம் எடுத்தவர்கள் அவர்கள். அதிசய அபூர்வ பிறவிகள். அலுவலக காரிடாரில் நடக்கும் பொழுது வேகமாக நேராகப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள். ஆனால் எதிரில் யாராவது வந்தால் அவர்களை பார்த்து புன்னகைக்கவோ, தலையாட்டவோ செய்ய மாட்டார்கள்.
இதுபோன்ற லார்டு லபக்குதாஸ்களின் பத்து பொது குணாதிசயங்கள் சிலவற்றை கீழ்காணுமாறு பார்ப்போம்.
1. ஒட்டுமொத்த அலுவலகத்தின் ஒரே சட்டாம்பிள்ளையான இவர்கள் தங்கள் நாற்சக்கர ரதத்தில் உள்ளே நுழைந்தவுடன், ராணுவ கொடி அணிவகுப்பு சமயத்தில் செய்வது போல காலை ஓங்கி தரையில் உதைத்து செக்யூரிட்டி சல்யூட் அடிப்பார். அந்த காலடி ஓசை ஏற்படுத்திய அதிர்ச்சியில் ஐயா உள்ளே வருகிறார் என்று அனைத்து ஊழிய சமூகமும் அறிந்து தலை தாழ்த்தி வேலை செய்யும்.
2. கார் அலுவலக கட்டிடத்தின் முன்னே நின்றவுடன், ஒரு தடி ஆள், ஒரு பொடி ஆள் என்று பல வேலையாட்கள் சென்று ஒருவர் கதவையும், மற்றொருவர் அவர் தூக்க முடியாத நூறு இருநூறு கிராம் எடை கொண்ட ஒரு ஃபைலோ அல்லது இரண்டு மூன்று காகிதங்களையோ தங்கள் கையில் ஏந்திக்கொண்டு "வாராய்.. நீ வாராய்..." என்று வழிநெடுகிலும் பூ தூவி வரவேற்காத குறையாக உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும்.
3. உள்ளே அவர் அறைக்கு செல்லும் வழியெங்கும் நடப்பவர்கள் இருமருங்கிலும் ராஜாவை சேவித்து வழிவிடும் பிரஜைகள் போல ஒதுங்கி பவ்யமாக நின்று வழிவிட வேண்டும். அவர் நேராக நெஞ்சு நிமிர்த்தி தொண்ணூறு பாகையில் தலையை வைத்து வேர்க்க விருவிருக்க நடந்து அவர் அறைக்கு செல்வார். அப்போது யாரை பார்த்தும் (புன்னகை) பூக்கவோ, (தலையை) ஆட்டவோ மாட்டார். அப்படி ஆட்டி பூத்தால் அவரது நிலைக்கு அகவுரவம் வந்துவிடும் என்று சிந்தனாசிற்பியாக அலைபேசியை காதுக்கு கொடுத்து கணநேரம் கூட அலுவலக சிந்தனை இல்லாமல் இருக்க முடியாது போல "எஸ் .. யா.. ஓ.கே... ஷ்யூர்... ஷ்யூர்.... டெஃபனட்லி.." என்று பல்வேறு வியாபார தந்திர வார்த்தைகள் உபயோகித்து பேசிக்கொண்டே காரிடார் கடப்பார்கள்.
4. அவரைச் சுமந்து வந்த காரை குறைந்தது நாலைந்து பேராவது ஒன்றுகூடி துடைத்து மொழுக வேண்டும். செல்வச்சீமான்கள் வீட்டு டாமி, ஜிம்மியை சோப்பு போட்டு குளிப்பாட்டி சாம்பிராணி போடுவது போல, இரண்டு பேர் நாக்கால் நக்கி துடைக்க, இரண்டு பேர் உள்ளே வெளியே இருக்கும் அழுக்குகளை சோப்பு கொண்டு சுத்தமாக களைய வேண்டும். எப்போதும் அவருடைய க்ரவுண்ட் வாங்கிய தலை போல பள பள என்று கார் இருந்தால் தான் ஐயாவிற்கு பிடிக்கும்.
5. பின்சீட்டில் உட்கார்ந்து பயணித்த களைப்பு நீங்க அலுவலகம் வந்த உடன் ஆப்பிள் சாப்பிடுவார். சாப்பிட்ட ஆப்பிள் செரிமானம் ஆவதற்கு ஒருமுறை அலுவலகம் முழுவதும் சுற்றி வருவார். அவர் ஆபிஸ் வலம் வரும்பொழுது யாராவது வெட்டிப்பொழுது கழிப்பதாக தென்பட்டால் எதிர்க்கட்சியை திட்டும் அரசியல்வாதியாகிவிடுவார். சும்மா புகுந்து லெப்ட் ரைட் வாங்கிவிடுவார். நேற்று நேராக வை என்று சொன்ன டேபிளை இன்று ஒருக்களித்து வை என்று கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பி வந்தது போல படுத்துவார். இதுபோல வியத்தகு மாறுதல்கள் செய்து விட்டு அனுதினமும் அவர் கேட்கும் "இது தானே நல்லா இருக்கு..." என்னும் பதத்திர்க்கு இரண்டு பேர் அருகில் நின்று "ஆமாம் ஆமாம்" என்று அவர் மனம் மகிழும் வண்ணம் ஆடவேண்டும். அதை அவர் சபாஷ் போட்டு ரசிக்க வேண்டும்.
6. இப்படி ஒரு சுற்று முடிந்தவுடன் இப்போது ஐயாவிற்கு வருவது ஒரு தேநீர் ஒய்வு. எல்லோரும் பருகும் தேநீர் அவருக்கு பிடிக்காது. ஆகையால் அவருடைய பிரத்தியேக பாண்ட்ரியில் தயாரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா ஸ்பெஷல் டீ பரிமாறப்படும். டீ குடித்தபின் அவருடைய மூடுக்கு ஏற்ப ஒன்றிரண்டு மின்னஞ்சல்களுக்கு பதில் போடுவார். அப்புறம் அவருடைய சொந்தபந்தங்களின், சுற்றங்களின் மின் கடிதங்கள், ஜோக்குகள் இதுபோல் இன்னபிற அதிமுக்கிய காரியங்களை கர்மசிரத்தையுடனும் ஆத்மசுத்தியுடனும் செய்து முடிப்பார்.
7. ஒருவழியாக மதிய சாப்பாட்டு வேளை வந்து இடை மறித்து அவருடைய முக்கிய பல அலுவல்களை பிரேக் போட்டு நிப்பாட்டும். பியூன் வந்து இலையோ, தட்டோ போட்டு உணவு பதார்த்தங்களை பரிமாற்ற அண்ணன் வயறார பசியாருவார். பசிக்காகவும், ருசிக்காவும் மூக்கிலிருந்து ஒரு பருக்கை வர தின்று தீர்த்துவிட்டு உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு, தலைவனுக்கு இருக்காதா. கொஞ்சம் ஒரு power nap எடுத்துக்கொள்வார்.
8. அலுவலகத்தில் நடைபெறும் விளையாட்டு விழாக்களில் அவர் பங்குபெற்றால் மொத்த ஆபிஸ் ஜனமும் கூடி நின்று அவர் பின்னால் கும்மி அடிக்க வேண்டும். "ஐயா அப்படி அடிச்சாரு.. லெக் சைடுல காலைத் தூக்கி அடிக்கும் போது டெண்டுல்கர் மாதிரியே இருந்துதுப்பா..." என்று கரகாட்டக்காரன் செந்தில் காசு கொடுத்து கவுண்டமணி காதில் விழுவதுபோல சொல்லச் சொன்னதுபோல அவர் காதுபட பேசவேண்டும். அவர் உள்ளம்குளிர்ந்து அடுத்த முறை பாராட்டு பத்திரம் படித்தவரை நன்கு கவனிப்பார்.
9. ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் மூன்று நான்கு நொடிகள் நேரம் கொடுத்து ஸ்லோ மோஷனில் பேசுவார். அப்படி அவர் பேசுவது மிகவும் அதிமுக்கிய காரியம் என்றும் அதற்க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் அர்த்தம். அனைத்து விஷயங்களையும் பரிவர்த்தனை செய்ய யோசித்து மூளையை கசக்கி பிழிந்து அவர் தரும் அருட்பாடங்கள் அனைத்தும் பொன்னெழுத்தில் பொறித்து பெட்டகமாக பாதுகாக்கப்படவேண்டும். அவ்வளவு கருத்து செறிவுள்ள ஐடியாக்கள்.
10. மிகவும் முக்கியமாக, எழுதப்படாத விதி, என்னவென்றால் ஐயாவை யாரும் கைபேசியிலோ அல்லது நில போனிலோ கூப்பிட்டு பேசக்கூடாது. வெற்றிலை, பாக்கு பழத்துடன் கையில் தாம்பூலத் தட்டோடு, நேரே சென்று, அவரது வாயில்படியில் இருக்கும் சேரிலோ, சோபாவிலோ அல்லது ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து, அவர் தன்னுடைய அனைத்து அன்றாட அலுவல்களை பார்த்து, நேரமிருப்பின், நமக்கு உத்தரவு தருவார். உத்தரவு கிடைத்தவுடன், அவர் உட்கார் என்றால் உட்கார்ந்து, நில் என்றால் நின்று நம்முடைய வேலையை முடித்துக்கொள்ள வேண்டும்.
அடியில் காணும் நௌக்ரி விளம்பரம் ஒரு தூக்கலான ஒன்று.
மேலே குறிப்பிட்டது கடலில் ஒரு துளி போல. மக்கள் தங்கள் அனுபவங்களை, அல்லது சந்திக்க நேரிட்டதை பின்னூட்டமாக தெரிவித்து மகிழலாம். நன்றி.
பட உதவி: http://www.corbisimages.com
10 comments:
RVS அண்ணாத்தே ! என்ன வேற கம்பனி மாற போறியளா?!
இந்த வாரு வாரி இருக்கீக? !
அதுகெல்லாம் அப்டித்தான் இருக்கும்.
இந்த வீடியோ வ முன்ன பாத்திருக்கேன்.
செமத்தியா மூஞ்சி மேலே அடிச்சா மேரிகி ! :)
என்னுடைய மேலதிகாரி மாற்றலாகி வேறு ஊருக்குப் போனார். சில நாட்கள் கழித்து நானும் அந்த ஊருக்கு மாற்றலாகிப் போனேன். அடுத்து அவரை வழியில் பார்த்தபோது மரியாதைக்காக "குட்மார்னிங்க் சார் " என்றேன். தலையை லேசாக ஆட்டிவிட்டுப் போனார். இத்தனைக்கும் அவர் அப்போது எனக்கு மேலதிகாரியும் இல்லை.
அதிலிருந்து அவரைப்பார்த்தால் மூஞ்சியைப் பார்த்து முறைத்துக்கொண்டே போய்விடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
@கக்கு
நாம என்ன ஊர்ல நடக்காததையா சொல்றோம். அதுபோல நடந்துக்கிறவங்களுக்கு தான் குத்தும்.
@டாக்டர். கந்தசுவாமி
அலுவலகத்தில் வணக்கம் சொல்லுதல் அடிப்படையில் ஒரு நல்ல பழக்கம். மரியாதைக்கு பதில் மரியாதை செய்வது என்பது ஒரு நல்ல பண்பு. வேறென்ன சொல்ல..
நன்றி கக்கு மற்றும் டாக்டர்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நல்லாத்தான் இருக்குது..
விளம்பரத்தின் கான்செப்ட் கூட... ஆனால் பாருங்க சார்.. திட்டறதுக்கு அந்தப் பேரு தான கெடைச்சுது.. (ஹரி.. ஹரி.. ஈஸ்வரோ ரக்ஷது..)
GUD aRTICLE.. EVERYWHRE HAPPENING SAMEHTNG...
மாதவா... அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது... :) :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முகம்மது..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
//நேற்று நேராக வை என்று சொன்ன டேபிளை இன்று ஒருக்களித்து வை என்று கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பி வந்தது போல படுத்துவார்//
:)))))))))
விமர்சன ரீதியே கலக்கலுங்க:))
"மாதவா... அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது... :) :)"
----
'ஹரி' நாமத்தை அனுபவிப்பதற்குக் கூட வரம் வாங்கி வரவேண்டும்..
அனுபவித்ததாலேயே அப்படி சொன்னேன்.
Dear Madhava, Dont take it seriously. It is a joke. Thats it. Leave it. :) :) :)
anbudan RVS
ok.. ok..
Post a Comment