வலியது வெல்லும் என்ற கோட்பாட்டை மாற்றி எளியதும் வெல்லும் என்ற புதிய சித்தாந்தத்தை மானுட இனம் கொண்டு வந்தது டெக்னாலஜியால் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். இந்த லோகத்தில் உலவும் ஆண் பெண் எல்லோரும் செயற்கையாக தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட வாலில்லா மனிதக் குரங்குகள் என்கிறார். ரத்தினச் சுருக்கமாக நாமெல்லாம் டெக்னாலஜி சிறை பிடித்து உருவாக்கிய "செயற்கை மனிதக் குரங்கு" என்பது இவர் கருத்து. இப்படி போட்டுத்தாக்கும் இவர் பெயர் டிமோதி டெய்லர். UK வில் உள்ள பிராட்ஃபோர்ட் பல்கலைகழத்தில் தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளராகவும், மனித இன ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார். இவர் எழுதிய The Artificial Ape:How technology changed the course of human evolution என்ற புத்தகம் இந்தமாதம் பெங்குவின் வெளியீடாக சந்தைக்கு வருகிறது. இவர் newscientist.com என்ற வலைத்தளத்துக்கு இந்த புத்தகத்தை பற்றி அளித்த நேர்காணலிருந்து சில பகுதிகள்.
டார்வின் என்னுடைய ஆதர்ஷ ஹீரோ தான். ஆனால் மண்டை பெருத்த ஆடவர்கள் தான் ஆதிகால மகளிருக்கு கவர்ச்சிக் கண்ணனாக தோன்றினர் என்ற டார்வினின் கூற்றுக்கு நான் எதிரி. இருகால் கொண்டு நேராக நிமிர்ந்து நடக்கும் எந்த விலங்கினத்திற்கும் இயற்கையின் உந்துதலில் மண்டை சிறுத்துப் போகும். ஆகையால் டார்வினின் பெருத்த மண்டை கூற்றை ஏற்பது சரியாக இல்லை. அதேபோல் நாம் எப்போதுமே முழுவதும் உயிரியர்ப்பூர்வமாக இருந்ததில்லை. எப்போதும் ஒரு டெக்னாலஜியை அல்லது கருவியை சார்ந்தே அதன் துணைகொண்டே மனிதன் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறான். இருக்கிறான் என்கிறார்.
கல்லால் ஆன கூர் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் தோன்றிய காலம் இன்றிலிருந்து சற்றேரக்குறைய 2.5 மில்லியன் வருடத்திற்கு முன்பு என்று ஆராய்ந்து கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிகால ஹோமோ செபியன்கள் ஜனித்தது 2.3 மில்லியன் வருடத்திற்கு முன்புதான் என்றும் கணக்குபோட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். (அது என்ன க்ருத யுகமா? த்ரேதா யுகமா? யார் கண்டார்?) இதுவே 300,000 வருடங்கள் வித்தியாசம் வருகிறது. ஆகையால் கல் ஆயுதங்கள் கருவிகள் ஹோமோ செபியன்கள் காலத்திற்கு முன்னரே இருந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.
ஒரு ஆளைக் கொல்வதற்கு கூரான கல் ஆயுதங்கள் தான் தேவை என்பது இல்லை. ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டால் போதும். ஆள் காலி. ஆனால் இந்த கூரான கற்க் கருவிகள் வேறு சில தேவைகளுக்கு உபயோகப்பட்டிருக்கின்றன. ஒரு கருவி கொண்டு மற்றொரு கருவி தயாரிக்கலாம்.
ஆதிகாலப் பெண்களுக்கு பாலூட்டுவதைவிட குழந்தையை தூக்கிக் கொண்டு கற்களிலும் புற்களிலும் காடுமேடுகளிலும் நடந்து போவது ஒரு பெரும்பாடாக இருந்திருக்கிறது. (இப்பவும் வெளியிடங்களில் ஆண்களை தூக்கவிட்டு ஒய்யாரமாக கூடத்தானே வருகிறார்கள்-இது நம்ம சரக்கு) ஆகையால் ஏதோ ஒரு காட்டு விலங்கின் தோலை எடுத்து தூளி மாதிரி கட்டி போட்டிருக்கிறார்கள். (இப்போ எல்லா கோயில் மரங்களிலும் மினியேச்சர் மரத் தொட்டில் கட்டுகிறார்கள் - இதுவும் நம்ம சரக்கு) இப்படி தூளி செய்வதற்கு இந்த கற்க் கருவிகள் உதவி தேவைப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு தூளி தொங்கும் வசதி வாய்த்தவுடன் மக்கள் மனித கங்காருவாக மாறி நிறைய பிள்ளை பெற்றுத் தள்ளி பல்லாண்டு காலமாக மனித இனம் பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்க்கு மூலாதாரம் அந்த கல் கருவி மற்றும் தோல் தூளி என்ற இரு அடிப்படை கருவிகள். இதற்க்கப்புறம் நமது இனத்தின் தேவையின் அடிப்படையில் டெக்னாலஜி துணை கொண்டு பல்லாயிரக்கணக்கான விதவிதமான கருவிகள் தயாரித்து புழக்கத்தில் விட்டு விட்டோம்.
எதையும் ஒட்ட நறுக்கும் கருவிகள் பல வந்ததால் கூரிய நகம் வளர்ப்பதை விட்டுவிட்டோம். கூழாக அரைத்து நொருக்குவதற்கு அரவை மிஷின் வந்ததால் நல்ல தெம்பான உறுதியான தாடைகளை இழந்துவிட்டோம். தொழில்நுட்பங்களால் உடலுருப்புகளின் சக்தி குறைபாடுகள் யுகம் யுகமாய் ஜென்மாந்திரங்களாக இன்னும் தொடர்ந்து குறைந்த வண்ணம் இருக்கிறது. 10,000 வருடத்திற்கு முன் இருந்த அந்தக் கூரிய கழுகுப் பார்வை இப்போது நம்மிடத்தில் இல்லை. மூளையின் அளவு சிறியதாகிக்கொண்டே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 30,000 வருடத்திற்கு முன் இருந்த மூளை அளவு இப்போது கிடையாது. இதுபோல உடற்க் குறைபாடுகள் இருப்பினும் டெக்னாலஜி கொண்டு கண்டுபிடித்த வஸ்த்துக்களின் உதவியால் ஒப்பேற்றிக்கொண்டு இருக்கிறோம். உடல் திடகாத்திரம் மற்றும் பலமே பிரதானமாக இருந்த காலம் மலையேறிப்போய் பலவீனமான ஆட்கள் கூட பல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் உடலெங்கும் பொருத்திக் கொண்டு காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பம்பரமாக சுற்றுவதை பார்க்கிறோம், வலியது எளியது என்ற வேறுபாடு இல்லாமல். Survival of the Fittest போய் தற்போது Survival of the Weakest. இப்போது இயந்திரங்களிடம் நம் ஒட்டுமொத்த அறிவையும் ஒப்படைத்துவிட்டு அதனிடம் இருந்து கிரெடிட் கார்ட் போல தேய்த்து தேய்த்து கடன் வாங்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.
உயிர் + டெக்னாலஜி = மனிதன் என்று முத்தாய்ப்பாக சொல்கிறார்.
இப்படி இந்த நேர்காணல் முழுக்க விவரங்களாக கொட்டி இறைத்தது மூச்சு முட்ட வைக்கிறார் இந்த மனுஷன். இன்னும் நிறைய இருக்கிறது. என்னோட இந்த சகிக்க முடியாத மொழிபெயர்ப்பைக்காட்டிலும் நல்லா படிக்கணும்ன்னா கீழே கொடுத்துள்ள முகவரிக்கு சென்று படியுங்கள். அவசியம் புக் வாங்கி படிக்கணும். நன்றி.
படஉதவி: www.newscientist.com
12 comments:
நல்ல பகிர்வு நண்பரே
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வேலு
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆர்.வி.எஸ்,
நல்ல பகிர்வு. நன்றி!
நன்றி பா.ரா.. நன்றி..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சிறப்பான தகவல்கள். நன்றி.
நன்றி. என்ன கக்கு.. ரொம்ப நாளா ஆளையே காணும்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பரிணாமத்தில் ஒவ்வோரு புலனாக பெற்று மனிதனானபிறகு ஒவ்வொன்றாக இழந்து வருவதை சிறப்பாக வர்ணித்துள்ளீர்கள் . மொழிபெயர்ப்பு மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.
பெற்றதற்கு ஒரு காரணம் இருந்ததை போல் இழப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ( ஒரு காரணத்தை உதாரணமாக சொல்கிறேன் , நகம் அப்படியே வைத்திருந்தால் பக்கத்தில் இருப்பவனை கீறியே கொன்றுவிடுவான் டெக்னாலஜி யோசிக்கும்:))
நன்றி பத்மநாபன் சார். நகம் கொண்டு கீறாமல் இப்போது கத்தி வீசுகிறான். குண்டு எறிகிறான். தீதும் நன்றும் பிறர் தர வாரா..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
தகவலுக்கு நன்றி.
நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
RVS,Interesting reading.இன்னும் இழப்பதற்கு மனிதனிடம் ஏதும் இருக்கிறதா என்ன? இன்னும் ஆயிரம் வருடங்கள் கழிந்த பின் எப்படி இருப்போம்?
மோகன்ஜி இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பிறகு... திரும்பவும் மாடு மேய்ச்சுக்கிட்டு இருப்பாய்ங்களோ ... ஒரு கதையா எழுதிப் பார்க்கட்டுமா?
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment