Tuesday, August 17, 2010

ஆண்டாள் சொன்ன ஐ லவ் யூ

andalஒருமுறை ஸ்ரீபெரும்புதூர் வரத யதிராஜ ஜீயரைக் காணச் சென்றிருந்தேன். அவரிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, தமிழின் அருமை பெருமைகளையும், ஆண்டாளின் பக்தி இலக்கியம் பற்றியும் சில தகவல்களைச் சொன்னார். அப்போது அவர் சொன்ன ஒரு தகவல் என் நெஞ்சில் ஆழப் பதிந்தது.

ஒருநாள்... மடத்துக்கு வெளியே சிறுவர் குழாம் விளையாடிக் கொண்டிருந்தது. சத்தம் அதிகமாக இருக்கவே ஜீயர் ஸ்வாமி அவர்களை அழைத்து, என்னடா விளையாடுகிறீர்கள்... என்று அமைதியாகக் கேட்டிருக்கிறார். அவர்கள், தாத்தா, நாங்க ஒன் ஃபோர் த்ரீ சொல்லி விளையாடுகிறோம்... என்றார்களாம். அதென்னடா என்று கேட்டபோது, ஒருவன் அதன் விளக்கத்தைச் சொன்னானாம்...

(சில வருடங்களுக்கு முன் 'ஆசை' என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் காதலர்கள் இருவரும் 'ஐ லவ் யு' என்பதை, 'ஒன் ஃபோர் த்ரீ ' என்று சொல்லிக் கொள்வார்கள். ஐ என்பது ஓர் எழுத்து., லவ் என்பது நான்கு எழுத்து. யு என்பது மூன்று எழுத்து. இதை சுருக்கமாக 143 என்பார்கள் காதலர்கள்).

இதைக் கேட்டவுடன் ஜீயருக்கு வருத்தம் ஏற்பட்டதாம். சினிமா பார்த்து கெட்டுப் போகிறார்களே... என்று எண்ணியவர், அவர்களை அழைத்து அமரவைத்து, ஆண்டாளின் கதையை அவர்களுக்குச் சொன்னாராம்.
இதென்னடா ஜுஜுபி... ஆண்டாள் அந்தக் காலத்துல கண்ணனுக்கு சொன்னாளே ஒன் ஃபோர் த்ரீ... அது மாதிரி வருமாடா... என்று கேட்டு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி, ஆண்டாள் சரிதத்தை சிறுவர்கள் மனதில் படும்படி சொன்னாராம்.

முடிவில் ஆண்டாளின் வாழி திருநாமத்தையும் சொன்னாராம்...

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே...
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே...
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே...
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே...

- என்ற இடத்தைச் சொல்லி, எப்படி ஆண்டாள் கண்ணனுக்கு நூற்று நாற்பத்து மூன்று என்ற ஒன் ஃபோர் த்ரீ சொல்லியிருக்கிறாள் என்பதை இந்தப் பாட்டில் சொல்லி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..? என்று சிறுவர்களைப் பார்த்து ஒரு கேள்வியும் கேட்டாராம்...

இதைக் கேட்ட போது, எனக்கு சிரிப்பாகவும் இருந்தது; சிலிர்ப்பாகவும் இருந்தது. ஆண்டாள் பாடியருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்கள் 143. எப்படி திருப்பாவை-முப்பது பாடல்களோ அப்படி. அதனால்தான், திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே என்றும், ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே என்றும் வாழி திருநாமத்தில் பாடிவைத்தார்கள்.

ஆனால், ஜீயர் ஸ்வாமி சிறுவர்களுக்கு ஆண்டாளைப் பற்றிச் சொல்ல, இதை ஒரு கருவியாக எடுத்துக் கொண்டதைப் பார்த்தபோது... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா... என்று தோன்றியது.

எப்படி இருந்தாலும், நம் தமிழ் இலக்கியத்துக்கு பலம் சேர்த்த அந்த ஆண்டாள் அம்மைக்கு நாமும் வாழ்த்துப் பாடுவோம்...

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

இப்படி மேற்க்கண்டவாறு ப்ரஸ்தாபித்தவர் திரு ஸ்ரீராம். இக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே. இவர் www.prabandham.com என்ற வலைக்கு சொந்தக்காரர்.  பிரபந்தம் மட்டும் அல்லாது நிறைய சமய இலக்கிய கட்டுரைகள் எழுதி இந்தத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  பிரபந்த பாமாலையை இந்த வலையில் பக்தியுடன் படித்து பகவானின் அன்புக்கு பாத்திரமாவீர்களாக!!.

6 comments:

Madhavan Srinivasagopalan said...

Wow.. nice information.. said in a very different ways. I knew abt. 'ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே'.. but never thought in this sense..

thanks for the post.

I have a complaint.. why u do not visit my blog (& comment) often....?
if u do not like my post.. post negative comments atlease.. to make me :-) otherwise :-(

வானவில் மனிதன் said...

நம்ம டேஸ்ட்ல அடிக்கடி கிராஸ் பண்றீங்க! சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு ஈடாக உலக இலக்கியங்களில் எங்கு தேடினாலும் ஓர் அர்ப்பணிப்புள்ள காதலை யாரும் வெளிப்படுத்தியதைக் கண்டதில்லை. 'வாழகில்லேன் கண்டாய் மன்மதனே' என்று அவள் விளிக்கும் பொருட்டே மன்மதன் படைக்கப் பட்டதாய்த்
தோன்றும். நல்ல பதிவு..
மோகன்ஜி,ஹைதராபாத்

RVS said...

லவ்லயும் பக்திளையும் ஆண்டாள், மீரா இந்த ரெண்டு போரையும் அடிச்சுக்க ஆளே கிடையாது. ஆமாம் டேஸ்ட் ஒன்னாத்தான் இருக்கு. பார்க்கலாம். ;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

RVS said...

மாதவா.. என் ப்ளாக் எப்போதும் அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கேன். அதனாலதான்.. கண்டிப்பா வந்து சேவிக்கிறேன். உன்னுடைய வருகைக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

பத்மநாபன் said...

சுவாரசியமான தகவல்.. ஆண்டாள் படமும் அருமை.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்.

எவ்வளவு அர்பணிப்பு உணர்வு.

இந்த உணர்வு இன்றைய 143 ல் 144.

RVS said...

இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான 143 சொல்ல நா கூசுகிறது இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை I F**K you இதுதான் வேறென்ன சொல்ல.. இருந்தும் சில அமரகாவியங்களும் இருக்கிறது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails