தமிழ் நாட்டின் பிரபலம் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். நமது நிருபர் 'நேர்மை' நாராயணின் நேரடி பிறந்த நாள் ரிப்போர்ட்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரே அதிர்வேட்டும் வானவேடிக்கையுமாக இருந்தது. காலையில் இருந்து சின்னஞ் சிறுசுகளில் இருந்து பல் போன பெருசுகள் வரை மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டு கியூவில் நின்று அவரை தரிசித்துவிட்டு வாழ்த்துப்பெற்று/சொல்லி சென்றது. அந்த வழியாக ஒரு ஈ காக்கா அவர் இல்லம் தாண்டி பயணிக்கமுடியாமல் போக்குவரத்து தடைபட்டு அந்த ஏரியாவே அல்லோகலப்பட்டது. அனைத்து கோயில்களிலும் விசேஷ பிரார்த்தனைகளும், அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி இனிப்புக் பலகாரக்கடைகள் இவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முற்றுகையிடப்பட்டு மொத்தக் கொள்முதல் செய்யப்பட்டு ஊருக்கே இனாமாக வழங்கப்பட்டது. காலையில் ஸ்நானம் செய்து பயபக்தியுடன் பெருமாள் பிரசாதம் போல் ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாக்கு கால் கிலோ சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்லும் ஆராவமுதன் "சார். நா இன்னிக்கி நினைச்சே பார்க்கலை. கால் கிலோ யார் சார் ஃப்ரீயா தருவா. அவர் பேரை சொல்லி வாங்கி குடுத்துட்டு போனா. அவர் நன்னா இருக்கணும். பகவான் அவருக்கு ஒரு குறையும் இல்லாமா வைக்கணும்" என்று கண்களில் நீர் தளும்ப நம்மிடம் கூறினார்.
அசம்பாவிதம்
அவர் வசிக்கும் தெருவின் கோடியில் "அகவை ---ல் அடியெடுத்து வைக்கும் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்", "உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு" மற்றும் "எங்களின் காட்ஃபாதரே" போன்ற ஆளுயர கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் ஆசி வாங்கும் கூட்டத்தின் தள்ளுமுள்ளு அதிகம் காரணமாக ஒருவரோடொருவர் முட்டி மோதி அந்த கட்அவுட்டுகள் சரியத்தொடங்கின. நல்லவேளையாக அங்கு ரோந்துப்பணியில் நின்றிருந்த ஸி.ஆர்.பி.எஃப் காவலர்கள் தாங்கிப்பிடித்து உதவிக்கரம் நீட்டினார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
புலி வேஷம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம் என்று அவரது சொந்த ஊரிலிருந்து வேன் பிடித்து வந்து ஒரு ஆட்டம் ஆடினார்கள். இதற்கென்று பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த சேர் மேல் ஏறிநின்று இதை இரண்டு மணிநேரம் வேடிக்கை பார்த்து ரசித்தார். அவ்வப்போது கையை அசைத்தும், சிரித்தும் தன்னுடைய முழு ஈடுபாட்டை காட்டினார். சினிமாக் கவிஞர் சிந்தன் இவரை வாயார புகழ்ந்து பாடி பரிசல் பெற்று சென்றார்.
விருந்து
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் தெருஒரத்தில் அகழி போன்று பள்ளங்கள் தோண்டி ஆளுயர அடுக்குகளில், பாத்திரங்களில் ஆஜானுபாகுவான சமையல்காரர்கள் விருந்து சமைத்தார்கள். அசைவப் பிரியர்களுக்காக இவர்கள் அறுத்த ஆடுகளின் சத்தம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. ரத்த ஆறே ஓடியது. கும்பகோணத்தில் இருந்து வந்த ஒரு காய்கறி லாரி திருப்பிவிடப்பட்டு சமையல் நடந்தது. சாப்பிடுவதற்கு பசியூட்டியாக கிரேட் கிரேட்டாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்கள் சப்ளை செய்யப்பட்டன.
பரிசுகள்
பிறந்தநாள் பரிசாக ஆடு, கோழி போன்ற பலதரப்பட்ட ஜந்துக்களும் தரப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அன்பர் ஒருவர் அங்கே அவர் எதிரே நின்று தலையை மொட்டை அடித்துக்கொள்ள ஆரம்பித்ததும் அங்கே சிலநேரம் பரபரப்பு நிலவியது. பக்கத்தில் இருந்த பந்தோபஸ்த்து அதிகாரிகள் அவரை அங்கு அப்புறப்படுத்தினார். பின்னர் விசாரித்ததில் அவர் கொப்பனாம்பட்டு கண்டராதித்தன் என்றும், சற்று மனநிலை சரி இல்லாதவர் என்றும் தெரியவந்தது.
விழா நிறைவு
வருகை தந்து சிறப்பித்த அனைத்து பொதுமக்களுக்கும் தன்னுடைய நன்றியை அந்தப் பிரபலம் தெரிவிக்க, பி.நாள் விழா இனிதே நிறைவுற்றது. பேட்டிக்காக நாம் அவரை நெருங்கியபோது பிறந்த நாள் வேலைப் பளு அதிகம் உள்ளதால் பின்னொருநாளில் சந்திக்கலாம் என்று அன்புடன் கூறி அன்பளிப்பு கொடுத்து வழியனுப்பிவைத்தார்.
எல்லாம் சரி... யாரு சார் அந்த பிரபலம் அப்படின்னு கேட்கறீங்களா..... கீழே உள்ள பாக்ஸ் உள்ளே மௌஸ் கொண்டு செலக்ட் செய்து பாருங்கள் தெரியும்.
ஹி.... ஹி... அது நான் தான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள்.. |
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
பட உதவி: www.pagalguy.com
14 comments:
happy birth day.
Thank you S.M.Raj
anbudan RVS
HBD, my dear
நினைத்தேன் !
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி கக்கு.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி மாதவா..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
தீ.வி.பி.யின் திருவிளையாடல்கள் மேன் மேலும் தொடரட்டும்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..
வாழ்த்துக்கு நன்றி அனானி.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆர் வி எஸ்...இன்று போல என்றும் (இன்னும் அதிக வளங்களுடன்) வாழ்க..பல்லாண்டு வாழ்க...
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Happy Birth day!......
Mine is also today!.........
வாழ்த்துக்கு நன்றி ரவிக்குமார். இந்தப் பதிவு உங்களுக்கும் சேர்த்துதான் போட்டேன் :) :)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா!சுதந்திரம் வாங்கின
கையோட உங்களுக்கு ஏற்பாடு பண்ணாங்களே... அதச் சொல்லணம். என்றும் சந்தோஷமாய், அமைதியும் அன்புமாய் உங்கள் வாழ்க்கை மிளிர வாழ்த்துகிறேன்.
மோகன்ஜி,ஹைதராபாத்
வாழ்த்துக்கு நன்றிங்கண்ணா. வாங்கின சுதந்திரம் பறி போய்டுச்சுன்னு சொல்ல வரீங்களா.. :-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment