Friday, August 13, 2010

எல்லா ஃபோனும் ஃபோனல்ல....

pagerநாங்கள் எல்லோரும் மடியில் செங்கல் மாதிரி பேஜரை கட்டிக்கொண்டு திரிந்தபோது எங்களோடு வேலைபார்த்த ஒரு விஷயாதி அளப்பரை பேர்வழி ஒருவர் மட்டும் தான் ரோடோர போலீஸ்காரர்கள் சைவ வைணவ ஆச்சார்யர்கள் கையிலிருக்கும் தண்டம் போல் எப்போதும் பாலிதீன் கவர் மாட்டி வைத்திருக்கும் வாக்கி டாக்கி மாதிரி ஒன்றை தூக்கமுடியாமல் தூக்கி வந்து பந்தா விட்டுக் காட்டினார். எப்போதும் அதை சுமந்திருக்கும் கையை ஆட்டி ஆட்டி எல்லோருக்கும் அந்த ஃபோன் தெரிய பேசுவார்.  சில சமயங்களில் தூரத்தில் இருந்து பார்க்கும் போது செவென் ஹில்ஸ் கோவிந்தா கையில் இருக்கும் சங்கு போலவே தோன்றும் அந்த பீஸ். எப்போதும் கையிலேயே வைத்திருந்ததும் நாங்கள் "அண்ணே கை வீங்கி ஆப்பரேஷன் செய்யப் போறாங்க பார்த்துக்கோங்க... கொஞ்சம் அடக்கி வாசிங்க.." என்று பணிவன்புடன் சொன்னவுடன் ஒரு பெல்ட்டில் சொருகி முடிக்கும் பை வாங்கி அதில் போட்டு பத்திரமாக வைத்துக்கொண்டார். ஒரு நாள் அண்ணன் அவசரமாக ஆபிஸில் மாடிப்படி ஏறுகையில் அதன் வெயிட் தாங்காமல்  அது பெல்ட்டோடு அறுந்து விழுந்தது. பெல்ட் அறுந்தவுடன் ஃபோனை பிடிப்பதா அல்லது அவிழும் பேண்ட்டை பிடிப்பதா என்று தெரியாமல் திணறிவிட்டார் பாவம். அதற்க்கப்புறம் அதை பேண்ட் பையில் வைத்துப் பார்க்கும் விஷப்பரிட்சையை அவர் செய்து பார்க்கவில்லை. நாள்தோறும் அதை உள்ளங்கையிலேயே தாங்கி இருப்பதால், கை களைப்பு நீங்க அரை மணிக்கொருதரம் விரல்களை சொடுக்கு எடுத்துக்கொள்வார்.

அது ஒரு சீமன்ஸ் கம்பனியாரின் தயாரிப்பு. அதற்க்கு ஒரு கொம்பு வேறு இருக்கும். ஆண்டெனா. சட்டைபாக்கெட்டுக்கு மேல் அது துருத்திக்கொண்டு நின்று இவர் பெரிய ஆள் என்று காண்பிக்கும். ஃபோன் அரைக்கிலோ என்றால் அதன் சார்ஜர் ஒரு கிலோ.  இரண்டையும் தூக்கி வருவதற்கு ஒரு மஞ்சள் கலர் துணிப்பை தேவைப்படும். இதை ஆபிஸிற்கு கொண்டுவருவதே அவருக்கு நல்ல ஒரு தேகப்பயிற்சி.  ஜிம்முக்கு சென்று டம்பெல்ஸ் எல்லாம் தூக்கவே வேண்டாம்.  நான்கு கால்களுக்கு எடுத்து காதில் வைத்து பேசினால் போதும். உடல் களைத்து வயிற்றுக்கு பசி எடுத்துவிடும். எங்களுக்கெல்லாம் பேஜர் வந்தால் ஒரே பேஜாரு. எங்காவது டெலிபோன் பூத் பார்த்து அற்பசங்கைக்கு பேண்ட்டை பிடித்துக்கொண்டு ஒதுங்கும் அவசரத்தோடு ஓடுவோம். அவர் "கை"பேசி வைத்திருந்த சமயம் உள்ளே வரும் காலுக்கு கூட காசு கேட்டு  பில் போட்டு தீட்டினார்கள். அந்தகாலத்தில் அது ஒரு ஸ்டேடஸ் சிம்பல். அவருக்கு மட்டும் பேஜர் கொடுக்காமல் அந்த அலைபேசி நம்பரில் கூப்பிட்டு "ஒண்ணுமில்லை சும்மாதான்"  என்று அழும்பாக பேசி அவர் பர்ஸுக்கு வேட்டு வைப்போம்.

nokia 3310இந்த மாதிரியான ஃபோன் கூத்துக்கள் முடிந்து என் போன்ற தினக்கூலி சாமானியர்களும் மொபைல் வைத்துக்கொள்ளலாம், தயிர் சாதம் சாப்பிடுவோர் கூட தூக்குவதற்கு எளிதானது  என்ற நிலை வந்தபோது தான் என் மச்சினி என்னுடைய இந்த கலியுக அவதாரத்தை பாராட்டும் விதமாகவோ அல்லது அவளது அக்காவை நான் மணம் முடித்து சாதனை படைத்த நாளுக்கோ நோக்கியாவின் 3310 மொபைல் போன் வாங்கி பரிசளித்தாள். அதை இப்போது எங்காவது அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைத்திருக்கலாம். ஒன்னாவது படிக்கும் என் இளைய மகள் அந்த 3310 ஃபோனை  அக்கக்காக பிரித்து மொபைல் ஃபோன் ரிப்பேர் பயின்று கொண்டிருக்கிறாள். அதன் முதல் ஸ்க்ரீனில் பச்சை கருப்பு வெள்ளை கலர்களின் கலப்பில் ஒரு சிறிய கையை பெரிய கை பற்றிக்கொள்ள கூப்பிடும். இனிமேல் இதை உபயோகித்தால் என்போன்ற சிறியகைகள் கூட பெருங்கை போல ஆகலாம் என்பதன் உள்ளர்த்தம் நிறைந்த படம்தான் அது என்று நினைக்கிறேன்.

மடியில் கனம் இருந்ததால் வழியில் பயமில்லை. இரவில் தனியாக வரும்போது அதுதான் நம்முடைய லைசென்ஸ் இல்லா துப்பாக்கி. பாதுகாப்பு கருவி. யாராவது கிட்ட வந்து பயமுறுத்தினால் தெம்பாக  தூக்கி அடித்தால் எதிராளியின் கை கால்களில் பட்டால் நிச்சயம் ஃபராக்ச்சர் ஆகிவிடும்.  நெஞ்சில் பட்டால் ஆள் அவுட். ஃப்ரீயாக குடுத்தால் பினாயிலைக் கூட குடிக்கும் நாம் கிஃப்ட் ஆக வந்ததென்று அந்த ஃபோனை வாங்கி வைத்திருந்தது, தெம்புக்காக இரவில் ஒரு அரை டம்பளர் பால் கூடக் குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன்.  தானம் கொடுத்த ஃபோனை வெயிட் போட்டு பார்க்கக் கூடாதுதான். ஸாரி. ரொம்பவும் கருப்பு/வெள்ளை/பச்சை பார்த்து பார்த்து அந்த மூன்று கலர்களும் பழைய தமிழ் சாமிபடங்களில் கே.ஆர்.விஜயா பின்னால் தோன்றும் கலர்கள் போல் கண்களில் ஆடிக்கொண்டே இருந்ததால் இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நோக்கியா கைக்காசு போட்டு வாங்கினேன். இப்போது கூட எனக்கு அந்த மாடல் நம்பர் சொல்வது கொஞ்சம் கஷ்டம். முன்பெல்லாம் நம்பர் மட்டும் வைத்தவர்கள் இப்போது ஆல்பா நியூமரிக்கில் பெயர் சூட்டுகிறார்கள். அந்த ஃபோனில் கொஞ்சம் கலர் தெரியும், எடை கம்மி, பாக்கெட்டில் தைரியமாக வைத்துக்கொள்ளலாம், பாக்கெட் கிழியாது, தம்மாதூண்டு ஃப்ரிகுவன்சி சேர்த்து ஏதோ காது கொடுத்து கேட்கலாம் போல இருக்கும் சங்கீதம் பாட வைத்திருந்தார்கள்.

அதற்க்கப்புறம்தான் நாட்டில் எவ்வளவு ஃபோன்களடா ஒவ்வொன்றிலும் எவ்வளவு மாடல்களடா மடக்கி, நிமிர்த்தி, திறந்து, மூடி என்று பலவகைகளிலும் பேசும்படியாக. எவ்வளவோ மாடல்கள் ஃபோன் வந்தாலும் "அப்புறம்.. என்ன சாப்டாச்சா?" "பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாளா? தங்கமணி என்சாய்..." "சும்மாதான்.. போரடிக்குதுன்னு..." "பக்கத்து வீட்டு நீலு அந்த பேக்கரிக்காரனோட ஓடிப் போய்ட்டாளாமே" "மாமியாரை காசி பக்கம்  ஷேத்ராடம் அனுப்பிட்டேன். பதினஞ்சு நாளைக்கு கொசுத்தொல்லை இல்லை" "ஐயோ. அவன் சரியான போர். போனை எடுத்தா வைக்க மாட்டான்டா." என்று இது போன்ற பேச்சுக்கள் மட்டும் மாறவேயில்லை.

பட உதவி: www.electroschematics.com, www.robertandrews.com

2 comments:

Madhavan Srinivasagopalan said...

//ஃப்ரீயாக குடுத்தால் பினாயிலைக் கூட குடிக்கும் நாம் கிஃப்ட் ஆக வந்ததென்று அந்த ஃபோனை வாங்கி வைத்திருந்தது, தெம்புக்காக இரவில் ஒரு அரை டம்பளர் பால் கூடக் குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன். //

யாரவது பாட்டரி ஆபெரடேட் பொம்மைகள் வாங்கி தந்தாலும்.. இதே கதைதான்.. ( இருநூறு ரூபாய் பொம்மைக்கு, நாம பாட்டரி செலவு ஐநூறாவது செஞ்சிருப்போம்..)

RVS said...

you are 100% correct Madhavaa..

anbudan RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails