ஒரு ஏரியாப் பெண்ணை இன்னொரு ஏரியாப் பையன் சைட் அடித்தான் என்பதற்காக ஒரு கும்பலாக திரண்டு "டேய். என்ன தைரியம்டா அவனுக்கு.. நம்ம ஏரியாப் பொண்ணை சைட் அடிக்கறான். ஃபாலோ பண்றான். துரத்தி வெட்டுங்கடா.." என்று கூச்சலிட்டு ஒரு சேனையாய் பறந்து என்னமோ அவர்கள் பகுதிப் பெண்களை அவர்கள்தான் சைட் அடிக்க லைசென்ஸ் எடுத்தது போலவும் மற்றவர்கள் செய்தால் அது தெய்வக் குத்தம் போலவும் பாவித்து பாய்ந்து தாக்குவதை ஊர்ப்புறங்களில் நகர்ப்புறங்களில் என்று எங்கும் வாடிக்கையாக நடப்பதை பார்த்திருக்கிறோம். நிஜமாகவே அப்பெண்களை பெற்றவர்கள் அதே பேட்டையில் இருக்கும் சைட் அடிச்சான் குஞ்சுகளை தான் வெறித்து பார்ப்பார்கள். அவர்கள் குணாதிசயங்கள் தெரிந்ததால் அவ்வளவு பயம். எது எப்படியோ, இந்த லுக் விடும் மேட்டரில் வயசுப் பெண்களின் இசட் பிரிவு காவலர்கள் தான் இந்த கட்டிளம் காளைகள். பெற்றோர் தைரியமாக இருக்கலாம். நோ ஹார்ம்.
மே தின கபடி விளையாட்டு காலிழுப்பு பிரச்சினை, பொன்னுராசு தங்கச்சியை பழித்த தன்ராசு, தாறுமாறாக வரப்பு வெட்டிய வரதராசன், டவுனில் பருத்திவீரன் கடைசி ஆட்டம் முடிந்து திரும்புகையில் பஸ் நிறுத்தாமல் போன டிரைவர் கண்ணையன், அக்கரை மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஐந்து பத்து டொனேஷன் கொடுக்காமல் லொட்டை பேசிய குட்டை பாண்டி, குட்டிச்சுவரில் உட்கார்ந்திருக்கும் போது வெட்டி ஆபீசர் என்று கிண்டலடித்த சைக்கிள் கடை சேகர் என்று சகலரையும் ஒரு கை பார்க்கும் நேரம் ஊர்த் திருவிழாக்கள். ஒத்தை ஆளாய் இருக்கும்போது சாதுவாக இருக்கும் மக்கள் இரண்டு பேர் செட்டு சேர்ந்ததும் பிடரி மயிர் கிளப்பிக் கொண்டு திரிவது இயல்பு. கரகாட்டமும், மயிலாட்டம் ஒயிலாட்டங்களும் நிறைந்த வீதிகளில் கூட்டத்தின் ஊடே அணி பிரிந்து சென்று துரத்தி துரத்தி தாக்குதல் நடைபெறும். திருவிழா தேதிகள் தான் சண்டைக்கான கால அட்டவனை போல தேதி வாரியாக பழி தீர்த்துக் கொள்வார்கள்.
நாட்டுப்புற சண்டைகள் இதுபோல இருக்க, காட்டுப்புற சண்டை பற்றிய ஒரு வீடியோ கிடைத்தது. இதை சண்டை என்று சொல்வதைவிட யுத்தம் என்று சொல்வது தான் சாலச் சிறந்தது. தென் ஆப்பிரிக்க சஃபாரி என்ற பிரபலமான சுற்றுலாவில் பயணிகளை ஜாக்கிரதையாக ஒரு ஜீப்பில் உட்காரவைத்து மிருகங்களுக்கு மத்தியில் வண்டி நிறுத்து பூச்சாண்டி காட்டி பயமகிழ்ச்சி காட்டுவார்கள். க்ருகர் என்று இடத்தில் அப்படி ஒரு பயணத்தின்போது நடந்த மோது போர் தான் இந்தக் காட்சி. ஹாலிவுட் படங்கள் போல துரத்தல்களும், உருலல்களும் நிறைந்தது.
காட்டெருமைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஒரு ஆற்றங்கரை ஓரம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அணியாக நாலைந்து சிங்கங்கள் பதுங்கிப் பாயத் தயாராக உட்கார்ந்திருந்தது. கிட்டத்தில் வந்துதான் இதைப் பார்த்த காட்டெருமைகள் வாலைத் தூக்கிக்கொண்டு உயிர் பிழைக்க ஓடுகிறது. சிங்கங்களின் இந்த துரத்தலில் ஒரு குட்டி காட்டெருமை மாட்டிகொண்டது. நான்கு சிங்கம் அதை இழுத்து ஆற்றில் போட்டு குதற ஆரம்பிக்கிறது. ஆற்றோரமாக இருந்ததால், கஜேந்திர மோக்ஷத்தின் போது கஜேந்திரனின் காலை இழுத்தது போல ஒரு முதலை அந்த குட்டி காட்டெருமையை கவ்வி உள்ளே இழுக்கிறது. ஒரு குழு முயற்சியாக அந்த சிங்கங்கள் காட்டெருமையை இழுத்துக் கொண்டு, திரும்பினால்......... ஓடிய எல்லா எருமையும் ஒரு அணியாய் திரண்டு ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்டி சிங்கங்களை முட்டித் துரத்தும் காட்சி, ரசிக்க வேண்டிய ஒன்று. தைரியமாக முழு வீடியோவை பார்க்கலாம். அகோரமாக எதுவும் இருக்காது.
ஆறறிவு படைத்த, விஞ்ஞான முதிர்ச்சி அடைந்த, மனித ஜென்மங்களில் எட்டப்பன்கள் பலர் இருக்கும் போது, ஐந்தறிவு படைத்த மிருகம், "எருமை மாடே" என்று நாம் வைவதர்க்கு பயன்படும் எமனேறும் வாகனம், தனது எருமைக் குடும்பத்தில் மாட்டிக்கொண்ட ஒரு கன்றுக்காக, அனைவரும் திரண்டு நின்று சிங்கத்தை எதிர்க்க துணிந்தார்கள். விரட்டி வெற்றியும் அடைந்தார்கள். இத்தகைய ஒன்று திரளும் உணர்ச்சி நமக்கு ஒரு பத்து சதவீதம் இருந்தாலே போதும். எதிலும் ஜெயம் உண்டாகும்.
பட உதவி: http://www.pictures-of-cats.org/
5 comments:
Nice message.. thanks for sharing.
btw.... i don't see ur comments on my post.... instead u appreciated my post in ur comment section.. HA HA ..
ஒண்று திரள்வது எப்போது....? பகிர்வுக்கு நன்றி.
thanks Madhavaa.
anbudan RVS
thanks Bhuvaneswari Ramanathan
anbudan RVS
மதுரை சரவணன், நிறைய அ.வாதிகள் அணி திரள்வோம், ஒன்று கூடுவோம் என்றெல்லாம் கூப்பாடு போடுகிறார்கள். எதையும் சாதிப்பதில்லை. எருமைகள் அருமையிலும் அருமை.
நன்றி,
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment