Saturday, July 31, 2010

சனிக்கிழமை சங்கதி - அக்னிப் பழம்

ஒரு வாரம் முழுவதும் வீட்டில் உழைத்துக் கொட்டிய "வீட்டுப் பொண்டாட்டிகள்" (HOUSE WIVES) முதல் வெளியே சென்று கூலி சம்பாதித்து வரும் "வேலைப் பொண்டாட்டிகள்" (WORKING WIVES) வரை வார இறுதிகளில் இந்த சமையல் வேலையில் இருந்து விடுதலை பெறுவதனாலும், எப்போதும் ஒரே மாதிரியான வீட்டு சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து அதை உயிர்ப்பிக்க கொஞ்சம் விதவிதமான ஹோட்டல் சாப்பாடு கேட்பதனாலும் வியர்வை சிந்த(?) உழைத்த ஆண்வர்கமும், பள்ளி கல்லூரிகளில் பாடம் பயிலும் இளைய சமுதாயமும் வாரத்தில் ஒரு நாளாவது வெளி உணவு விடுதிகளில் சென்று மூக்கு முட்ட தின்று தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர்.

junkfood obesityசெட்டி நாட்டு சமையல், காரைக்குடி ரெஸ்டாரன்ட், பஞ்சாபி தாபா, ஆந்த்ரா மீல்ஸ், கடல் வாழ் உயிரினங்கள் போட்டு சமைத்த மலையாள குமாரகம், இரண்டு இட்டிலிக்கு ஒரு சட்டி சாம்பார் தரும் திருவல்லிக்கேணி ரத்னா கபே, ஹோட்டலில் வயிறு நிரப்பும் போது அறுபடை வீட்டு முருகனையும், பக்தி இலக்கியங்கள் மூலம் தமிழ் அமுது ஊட்டிய தெய்வத் திரு திருமுருக கிருபானந்தவாரியாரையும் தரிசிக்க வைக்கும் சரவணபவன், ஊருக்கு ஊர் தெருக்கு தெரு மார்க்கெட்டுக்கு மார்க்கெட் பேட்டைக்கு பேட்டை இருக்கும் ஆரிய,வசந்த பவன்கள், சுத்தமான தோசைக்கல்லில் கல் தோசை  சுட்டுக் கொடுக்கும் சாக்கடை ஓரத்து கையேந்தி பவன்கள், ராயர் கபே, மாமி கடை, ஜிலேபி சமோசா கடை, உள்ளங்கை அளவு சூடான இட்டிலி சாப்பிடும் தட்டுக் கடைகள் என்று சிற்றுண்டி, பேருண்டி என்று பேதம் பாராமல் "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்று சாப்பிட்டு வந்த நம்மக்கள் நாக்கு இப்போது அயல்தேச அடுப்பங்கரை ஐட்டங்களின் மேல் சப்புக்கொட்டுகிறது.

மெக்டோனால்ட்ஸ், கெ.எஃப்.சி, இடாலியன் ஃபுட் என்று நாடு வாரியாக வாரத்திற்கு ஒன்று என்று அட்டவணை போட்டு வைத்துக்கொண்டு குடும்பமாக இழுத்துக்கொண்டு திரிகிறார்கள். ஊரில் எந்த ஒரு உணவு விடுதியில் வார இறுதிகளில் டேபிள் கிடைப்பது குதிரைக்கொம்பு. இன்னும் கொஞ்சம் நாட்களில் சர்வர் அல்லது சூப்பர்வைசரிடம் லஞ்சம் கொடுத்து டேபிள் புக் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன். அவ்வளவு டிமாண்ட். மசால் தோசை இருபத்து ஐந்து என்று சொன்னாலும் நாக்கடிமைகள் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். உட்கார வைத்து சோறு போட்டால் லேசில் எழுந்திருக்க மாட்டார்கள் என்று ஒரு தன்னிலை முடிவெடுத்து "வேக உணவு" ( அது வேக உணவா அவசர உணவா என்று தெரிய பாப்பையா  தலைமையில் வரும் தீபாவளிக்கு பட்டிமன்றம் வைக்கலாம்.) என்று சொல்லி தட்டை கையில் கொடுத்து நிற்க வைத்து காசு வாங்கிக்கொண்டு பதார்த்தம் கொடுத்து கடை வாசலில் உண்ண வைத்து அனுப்பிவிடுகிறார்கள். 
இந்த மெக்டோனால்ட்ஸ் சாப்பாடு எப்படி என்று வெள்ளைக்காரர் ஒருவர் நமக்கு அளிக்கும் கீழ்காணும் டெமோ நம் வயிறு எவ்வளவு பாடு படுகிறது என்று அறிந்து கொள்ள உதவும் ஒரு அளவுக்கோல்.


"அக்கினி பழம் என்று தெரிந்திருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி....." என்ற ராவணன் படப் பாடல் கார்த்திக் காதலுக்காக பாடியது, அது மேக்டோனால்டுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.

மேலே இட்ட தொப்பை பரிணாம வளர்ச்சி பட உதவி: blogs.miaminewtimes.com

2 comments:

Madhavan Srinivasagopalan said...

//அது வேக உணவா அவசர உணவா என்று தெரிய பாப்பையா தலைமையில் வரும் தீபாவளிக்கு பட்டிமன்றம் வைக்கலாம்.//

ஆமாம்.. அப்பத்தான்.. 50 - 50 ன்னு தீர்ப்பு வரும்..

RVS said...

sariyaa sonneenga Madhavan.

anbudan RVS

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails