Wednesday, July 28, 2010

ஆடி அடங்கும் பூமியடா...

"பூமி சுற்றுவது நின்று விட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை, புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் பெண் வாழ்வில் எந்நாளும் ஏற்றங்கள் இல்லை" இது நம்ம வைரமுத்து பம்பாய் படத்துக்காக எழுதிய "குச்சி குச்சி ராக்கம்மா" பாடல். இவர் எழுதியதை ஒருவர் கணினி கொண்டு சுற்றும் பூமியை நிறுத்திப் பார்த்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிள்ளார்.

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட Esri என்ற புவியியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் புவித் தகவல் தொழில்நுட்பங்கள் நிறுவனத்தில் அலுவலராக குப்பை கொட்டும் Witold Fraczek (தமிழில் எழுதுவதற்கு கொஞ்சமும் முயலவில்லை! மனிதர் மெத்த படித்திருக்கிறார்) என்பவர் ஜாக்ராபிக் இன்போர்மஷன் சிஸ்டம் துணை கொண்டு சுற்றும் பூமி தனக்கு தானே சுற்றுவதை ஒரு நன்னாளில்(?) நிறுத்திக்கொண்டு விட்டால் என்னென்ன மாற்றங்கள் இங்கு நிகழும் என்று விவரிக்கிறார். நமது தூக்கத்தை கெடுக்கும் பல அதிசய அறிய தகவல்கள் அவரது இந்த வித்தியாசமான ஆராய்ச்சியின் முடிவு. இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னரே "இதுதான் நம்முடைய எதிர் காலமல்ல, இது ஒரு அறிவியல் புனைவும் அல்ல, அண்டம் அபாண்டமாக ஒரு நாள் அப்படியே நின்றுவிட்டால் என்ற கற்பனையை ஒரு GIS-ன் திறன் கொண்டு செய்து பார்த்ததின் விளைவுகள் தான் இக்கட்டுரையில்" என்கிறார். ArcGIS என்பதன் வழியாக பூமியை இவர் நிறுத்திப் பார்த்தது கண்டுபிடித்ததை என்னவென்று ஒரு அறிவிலியின் (Lay Man Point Of View) பார்வையில் இருந்து ஒரு சில துளிகள்....

பூமி தன்னைத் தானே சுற்றி வரும்பொழுது அதற்க்கு ஒரு மையவிலக்கு விசை இருக்கும். ஆங்கிலத்தில் Centrifugal Force என்று பெயர். இந்த மைய விலக்கு விசை தான் நம் அனைவரையும் மற்றும் நம் வீடு, நாடு, நகரம் எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில்  இருக்குமாறு இப்புவியில் அப்படியே கட்டிபோட்டு இருக்கிறது. சமுத்திரங்களின் மட்டமானது நம்முடைய இப்புவியின் ஈர்ப்பு விசை மற்றும் இந்த மையவிலக்கு விசை என்ற இந்த இரண்டோடும் மிகவும் நெருக்கமான தொடர்புடையது. இந்தப் பூமி சுற்றுவதால், மையவிலக்கு விசை ஏற்படுவதால் இந்தக் கடல் மட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 சில பில்லியன் வருடங்கள் சுற்றிய பிறகு, கோள (sphere) வடிவாக இருந்த இப்புவி, சற்றே தட்டைக்கோள(ellipsoidal) வடிவிற்கு உருமாறியிருக்கிறது. இதன் விளைவாக வடதென் துருவங்களை காட்டிலும் பூமத்தியரேகை பகுதிகளில் புவியின் மைய நிறை (Center of Mass) அதிகமாக இருக்கிறது. துருவங்களைவிட பூமத்திய ரேகைப் பகுதிகளில் பூமியின் மைய நிறை கடல் மட்டத்தைவிட 21.4 கி.மி அதிகம் உள்ளது.

பூமி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றுவதை நிறுத்தி விட்டு, சூரியனை அதனுடைய அச்சிலும், அதே சாய்மானத்திலும் சுற்றிவந்தால் என்ன ஆகும்?  வருடத்தின் கால அளவு இப்போது உள்ளது போல 365 நாட்களாக இருந்தாலும்,  ஒரு நாள் ஒரு பொழுது ஒரு வருடம் என்ற வித்தியாசமே இல்லாமல் ஒரு வருடம் நீ......ண்டு இருக்கும் என்கிறார். இரவே இல்லை என்றால், கவிஞர்கள் எப்படி காதல் கவிதை எழுதுவார்களோ? ஆந்தைகள் எப்போது விழிக்குமோ? கரண்ட் செலவு மிச்சம் தான் ஆனால் வெய்யில் கொளுத்துமா என்று தெரியவில்லை. ஒரு வருடம் முழுவதும் ஆபிசில் இருக்க வேண்டும். கொடுமையடா சாமி.

தட்ப வெப்ப நிலைகளும், பருவ காலங்களும் தடம் மாறிப் புரண்டு போகும் என்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பூமியை ஒரு நிலை கொள்ள விடாமல் சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்படும். பூமியின் புவி ஈர்ப்பு விசை மட்டுமே கடலின் எல்லைகளை அதற்க்கு மேல் மீறி நிலப் பகுதிக்கு வரவிடாமல் தடுக்கும் அரணாக இருக்கும்.
lands2

அப்புறம், இந்தப் புவியின் சுற்று நின்ற நிலைமையால், கடல்கள் துருவங்களுக்கு நகர ஆரம்பித்து பூமத்திய ரேகை பகுதியில் இருக்கும் கடல் பரப்புகளை நிலம் கொண்டு நிரப்ப ஆரம்பிக்கும். துபாய், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளுக்கு தரை வழிப் போக்குவரத்து ஆரம்பித்து நம்மாட்கள் வால்வோ பஸ் விடுவார்கள். இருபது நாள் உல்லாச சுற்றுலா சொகுசு பயண பஸ் விட்டு பன்னாட்டு தரைவழி டூர் கூட ஏற்ப்பாடு செய்யப்படும். எவர் கண்டார்? நினைக்கவே நெஞ்சு ஆச்சர்யத்தால் மூழ்குகிறது அல்லவா? தற்போது இருக்கும் கடல்கள் இரு துருவத்திலும் சேர்ந்து இந்த புவிக்கே இரண்டே இரண்டு சமுத்திரங்களை உருவாக்கிவிடும். சென்னைக்கு மெரீனா இருக்காது, தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் வாங்கி திங்க முடியாது.

இந்த பூமி தன்னை சுற்றுதலின் வேகக்குறைவு காரணமாக, நம் புவியின் அணுக்கடிகாரத்தில் ஒரு நொடியை அவ்வப்பது சேர்த்து நாட்களின் அளவை சரிசெய்து கொண்டே வருகிறோம். இந்த நொடிக்கு பெயர் லீப் நொடி(Leap Second). நிறைய அறிவியல் ஆராச்சியாளர்கள் நம்முடைய பகல் பொழுது நீண்டு கொண்டே வருவதை உறுதிபட தெரிவிக்கிறார்கள். நானூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பு, நாற்பது மடங்கு அதிகமாக அல்லது வேகமாக சுற்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இந்தப் புவியின் சுற்று வேகத்தை பொறுத்துதான் அதனுடைய வடிவமும், சமுத்திரங்களின் மட்டங்களும், அளவுகளும் இருக்கின்றன.

இப்போதைய குறையும் வேகத்தின்படி, இந்தப் புவி தன்னுடைய சுழலும் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னமும் குறைந்தது நான்கு பில்லியன் வருடங்களாவது பிடிக்கும். ஆகையால் அதைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தது ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள் என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

மேலதிகத் தகவல்களுக்கு: http://www.esri.com/news/arcuser/0610/nospin.html

3 comments:

Madhavan Srinivasagopalan said...

அட.. இம்புட்டு மேட்டரு இருக்குதா ?

அ.முத்து பிரகாஷ் said...

படிக்கும் போதே தலை சுத்துதே பிரமிப்பில் ...

அ.முத்து பிரகாஷ் said...

படிக்கும் போதே தலை சுத்துதே பிரமிப்பில் ...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails