2006 - ல் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் (www.wikileaks.org) என்ற இணைய தளத்தின் டைரக்டர் ஜூலியன் அசாஞ் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர். இந்த விக்கி கசிவு தளத்தில் இதற்க்கு முன்னர் கென்யா நாட்டின் முன்னாள் தலைவர் டானியல் அரப் மோய் அவர்களின் சொத்துக்குவிப்பு மற்றும் அவரது குடும்ப அன்பர்களின் அட்டகாசங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. இது தி கார்டியன் பத்திரிக்கையில் 2007-ம் வருடம் வெளிவந்தது. இம்முறை இந்தக் கசிவுத் தாக்குதலுக்கு ஆளானோர் பெரிய இடம் ஆகையால் இந்த உலகமே ஜூலியன் அசாஞ் பக்கம் திரும்பியிருக்கிறது. 2004-09 வரை அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் அடித்த லூட்டியை ஒன்று விடமால் 92,000 ஆவணங்களில் வரிசைக்கிரமமாக ஏற்றி பாரில் உள்ளோர் பார்வைக்கு விட்டிருக்கிறது. பெண்டகன் கட்டிடம் தீ பிடித்தாற்போல் சூட்டோடும், பரபரப்போடும் இந்த பத்த வைத்த ஆளை பிடிக்க தீவிர முனைப்போடு ஈடுபட்டிருக்கிறது. பராக் ஒபாமா இது ஒரு தேசத்தின் பாதுகாப்பிற்க்கு வைக்கும் ஆப்பு என்று வர்ணித்துள்ளார். ஆப்கனில் சாதாரண குடிமக்கள் மீது நடத்திய தாக்குதல்களின் வீடியோ காட்சி உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிட உள்ளாதாக அஞ்சாநெஞ்சன் தெரிவித்துள்ளார்.
2007-ல் தீவிரவாதிகள் அல்லது ஊடுருவல்காரர்கள் என்று நினைத்து ஆப்கன் போலீசார் மீதே வான்வழித் தாக்குதல் நடத்தி கொன்றது போன்ற அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களின் குறிப்புகள் கூட இதில் அடங்கியுள்ளது. எந்த நாடோ எந்த ஊரோ எந்தப் பாவமும் அறியாத அப்பாவி மக்கள் பாவிகளால் வதைபடுவதும், கொலையாவதும் தடுக்கவேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே?
உலகில் உள்ள ஒட்டு மொத்த பத்திரிகை சமுதாயம் செய்ய மறுப்பதை, மறைப்பதை, தான் செய்வதாக மார் தட்டி ஆரம்பித்த ஜுலியனின் இந்த கீழ்காணும் பேட்டி அமெரிக்க பத்திரிக்கையாளர் க்றிஸ் ஆண்டேர்சனுக்கு ஜூலை 19-ம் தேதி அளித்தது. மேலும் தனக்கு இதுபோன்ற அத்துமீறல்களை தெரிவிப்பதற்க்கும், அநியாய அக்கிரமங்களை எதிர்த்து சங்கு ஊதுவதற்கும் நிறைய பேர் இருப்பதாகவும், அவர்கள் இணையம் வழியாக மிகவும் பத்திரமாக தனக்கு ஆவணங்களை சேர்ப்பிக்க ஏதுவாக சங்கேத பாஷையில் குறியீடாக்கி ஏற்றவும் அதை சகல ஜாக்கிரதையாக தரவிறக்கம் செய்யவும் வசதிகளை ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டார் ஜூலியன்.
இந்தப் பேட்டியின் இடையிடையே சில முக்கியமான விஷயங்களை கசிவாக அம்பலப்படுத்தியதை போட்டுக் காண்பிக்கிறார்கள். முக்கியமாக இராக் போர் நேரத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாக்தாத் நகரில் சாலையில் நின்று பெசிக்கொண்டிருப்போரை வம்படியாக பொழுதுபோகாமல் துப்பாக்கியை இடது புற தோளிலிருந்து வலது புற தோளுக்கு சுட்டுக்கொண்டே மாற்றுவது போல, தீபாவளி துப்பாக்கி கொண்டு சுடுவது போன்ற செயலை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியது ஒரு துணிச்சலான அசாத்தியப் பணி,அந்த காட்சியும் இந்த பேட்டி வீடியோவில் உண்டு.
அந்தப் பேட்டி கீழே..
நம்ம நாடு இவர்களிடம் என்றைக்கு கசியுமோ? எப்படி கசியுமோ? ஜூலியன் கூறுவது போல Whistle Blowers நம்ம ஊரில் இல்லையா?
க்றிஸ் ஆண்டர்சன் இந்தப் பேட்டியை நிறைவு செய்யும் தருவாயில் சொன்னதை ஒரு முறை நம் சார்பாக நாமும் ஜுலியனுக்கு சொல்வோம், "ஜாக்கிரதை ஜூலியன்!".
ஆப்கன் வார் டைரி: http://wardiary.wikileaks.com
Twitter முகவரி: http://twitter.com/wikileaks
பட உதவி: 2012changesarenow.blogspot.com
0 comments:
Post a Comment