இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னடா சாப்பாட்டு சம்பந்தமாக எதுவுமே எழுதவில்லை என்று பசியோடு காத்திருந்த வேளையில் இந்த ஐட்டம் சிக்கியது. இந்தமுறை சனிக்கிழமை சங்கதி ஒரு சமையலறையில் அன்றாடம் புழங்கும் ஐட்டம். நடைமுறை வாழ்க்கையில் நமக்கு பல பாத்திரங்கள் உண்டு என்பது போல் சமயலறையில் பல தினுசு பாத்திரங்கள் கொண்டு உணவு தயாரித்து தான் நம்முடைய சாண் வயிற்றை நிரப்ப வேண்டியிருக்கிறது. தேசலாக இருக்கும் என்னை அளந்து பார்த்தாலே சானுக்கு மேலே வருகிறது. இதை எப்படி சாண் வயிறு என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. மேல் ஆராய்ச்சிக்கு ஏற்ற விஷயம் இது. அடுத்த கட்ட ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம், "எண் சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்" என்ற சொலவடை. ஓ.கே மேட்டருக்கு வருவோம்.
சிலிகோன்( சிலிக்கன் இல்லை. சிலிக்கன் ஒரு வேதிப்பொருள்) கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு மூடி சர்வ சமையலுக்கும் ஏற்ற ஒரு உபகரணமாக இருக்கிறது. இது ஒரு ஸ்விஸ் தயாரிப்பு. காய் வேகவைக்கிறோமா, அவனில் மூடி அவிக்க பாத்திரம் வேண்டுமா, சூடான பதார்த்தங்களை மேசையில் வைத்து மூடுவதற்கு மூடி வேண்டுமா வேலைக்காரி வந்து பத்து பாத்திரம் தேய்த்து தரவில்லையா பக்கத்தில் வேறு எதுவும் பாத்திரம் இல்லையா கவலை இல்லை, இந்த மூடியைக் கொண்டு மூடினால் போதும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கும் ஏதுவானது.
எந்தப் பாத்திரத்திற்கு மேலே மூடுகிறோமோ அதற்க்கேற்றார்ப்போல் தோதுவாக தனது உடலை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ள மூடி இது. வாய் அகலமான பாத்திரத்தில் பாய் போல விரிந்தும் குறைவாக உள்ள பாத்திரத்தில் குடை போலும் தன்னை மாற்றிக்கொண்டு பாத்திரத்தின் விளிம்புகளை சுத்தமாக மூடி உணவுப் பொருட்களைக் சுகாதாரமாக காக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதை மூடினால் காற்றுப் புகாவண்ணம் வடிவமைத்துள்ளதால் உணவுப் பதார்த்தங்கள் கெட்டு விடாமல் காப்பாற்றுவதோடு, அப்படியே மூடியை பிடித்தே அந்த மூடிய பாத்திரத்தை தூக்கியே விடலாம். இப்படி இதைப் பற்றி மேலே விவரித்துக்கொண்டே சென்றால், நான் நம்நாட்டு தேசிய முகவர் மற்றும் விற்பனையாளர் என்று யாரேனும் நினைத்துக்கொள்ளக் கூடும் என்பதால் என்னுரையை முடித்து இங்கே சேர்த்துள்ள வீடியோவை காணுமாறு கோருகிறேன்.
நம்மூர்ல இந்த சாமான் கிடைக்கிறதா என்று தெரியாது, இது போல் உள்ள எனக்கு மிகவும் உபயோகப்படும் வேறு ஒரு பாத்திரம் தெரியும். அது தினமும் ஆபிஸிற்கு தயிர் சாதம் கொண்டு போகும் டப்பர்வேர். அவ்வளவுதான் ஆளை விடுங்கள். உபயோகத்தை பொறுத்து இது வெயிட்டான பாத்திரம் தானே? அப்பாடி ஒரு வழியாக தலைப்பை கொண்டு வந்தாச்சு. இன்னமும் என்ன முடிக்க வேண்டியது தானே. எல்லாம் சரி, ஓயாமல் எல்லோரையும் கலாய்க்கும் கலக வாயையும், ஊரில் ஏதாவது அற்ப சம்பவம் நடந்தால் கூட வாயில் அதக்கி ஊறவைத்து ஒரு வாரம் வம்பு பேசும் ஊத்தை வாயையும் மூடுவதற்கு ஏதாவது மூடி இருக்கிறதா?
பின் குறிப்பு: விக்ரம், லைலா நடிப்பில் வித்யாசாகர் இசையில் தில் படத்தில் வரும் "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா.." பாடலில் எதுவும் மூடி காண்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். நல்ல மெலடி. பின் குறிப்பிற்கு யூடுயூப் சேர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். என் கையை என்னால் அடக்க முடியவில்லை. வார இறுதிக்கு ஏற்ற பாடல். சேர்க்கிறேன் கேளுங்கள்.
பின் குறிப்பு: விக்ரம், லைலா நடிப்பில் வித்யாசாகர் இசையில் தில் படத்தில் வரும் "உன் சமயலறையில் நான் உப்பா சர்க்கரையா.." பாடலில் எதுவும் மூடி காண்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். நல்ல மெலடி. பின் குறிப்பிற்கு யூடுயூப் சேர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். என் கையை என்னால் அடக்க முடியவில்லை. வார இறுதிக்கு ஏற்ற பாடல். சேர்க்கிறேன் கேளுங்கள்.
2 comments:
மூடிக்கும் ஒரு பதிவு... ம்ம்ம்ம்
@புதுகைத் தென்றல்
ஹா.ஹா.. முதல் கருத்துக்கு நன்றிங்க சகோ.. ;-))
Post a Comment