முந்தாநாள் மதியத்திலிருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் அந்திநேரம் ஆபிசிலிருந்து கிளம்பும் பொழுது ஆகாயத்தை பிய்த்துக்கொண்டு கொட்டியது. அப்படி ஒரு ராட்சஷ மழை. மழை இயற்கையின் கொடை. சந்தேகமில்லை. ஆனால் அதை இப்புவியில் சேர்ப்பதற்கு கூடவே வரும் பாதுகாப்பு பயில்வான் ரங்கநாதன்களான இடி மின்னல் போன்றவை வயிற்றில் புளியை கரைத்துவிடும். டி.வி., ப்ரிட்ஜ், மிக்சி, கணினி போன்ற எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு போவது போல் ஆட்களையும் சிலசமயம் கபளீகரம் செய்துவிடுகிறது. அரை நிஜார் போட்ட வயதில் இதுபோன்று வான வேடிக்கைகளோடு ஜோராக நின்று பொழியும் மழைக்கு நான் காது பொத்தி பயப்படும் பொழுது என் பாட்டி "அர்ஜுனா .... அர்ஜுனா... சொல்லுடா, ஒன்னும் ஆகாது" என்று சொல்லுவாள். ஒரு தசாப்தம் முன்னரே சிவலோகப் பதவி அடைந்த பாட்டி இப்போது காரில் என் கூட துணைக்கு இல்லாதலால் "அர்ஜுனா..." மனசுக்குள் சொல்லி பாட்டியை நினைத்துக்கொண்டு பயத்தை போக்கிக்கொண்டேன். காரில் இருந்தால் மின்னல் தாக்குமா? நம்முடைய காரின் டயர் ரப்பர் பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதுதான் கீழே தரையைத் தொட்டு மின்னலையும் பூமியையும் இணைத்துக் கொண்டு நிற்கிறது. ஆகையால் மின்னல் தாக்கினால் ரப்பர் டயர் மேல் உட்கார்ந்திருப்பதால் நம் மேல் மின்சாரம் பாயாது என்ற என்புத்திக்கு எட்டிய பொதுஅறிவின் துணையோடு வண்டி ஓட்டிக்கொண்டு வீடு போய் சேர்ந்தேன்.
இருந்தாலும் விடாமல் மூளைக்குள் இருக்கும் அனைத்து ந்யுரான்களிலும் இந்த சங்கதி தொடர்ந்து அரித்துக்கொண்டிருந்தது. இதைப் பற்றி ஆராயலாம் என்று கூகிள் துணைக் கொண்டு இணையத்தை தேடி அலசி ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்த தகவல் இது. ஒரு ஆளை காரில் உட்காரவைத்து மின்னல் கொடுக்கும் மின்சாரம் பாய்ச்சி காண்பிக்கிறார்கள். தோராயமாக 10 முதல் 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் மின்னலால் தயாரிக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்க்காட்டார் கவனிக்கவும். மின்னலைக் கையில் பிடிக்கும் துணிச்சலோடு காரில் அவர் அமர்ந்திருப்பது நமக்கு ஷாக் அடித்தார்ப்போல இருக்கிறது. காரில் பயணிக்கும் போது ஏன் மின்னல் நம்மை தாக்குவதில்லை, அப்படியே கூராக தாக்கினாலும் நம் பூத உடலுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றால் நம்முடைய காரின் மெட்டல் பிரேம் ஒரு கவசம் போல காக்கிறது என்கிறார் ஸ்காட் மாண்டியா என்னும் தட்பவெப்பம் மற்றும் சீதோஷ்ணம் பயிற்றுவிக்கும் கல்லூரி பேராசிரியர். ஆனால் மின்னல் தாக்கும்போது காரினுள் உட்கார்ந்திருக்கும் நாம் காரிலிருக்கும் வெளியே தொடர்புள்ள பொருட்களைத் தொட்டால் ஆள் பஸ்பம் தான். சாம்பலாகிவிடுவார்கள். காரியம் செய்வதற்கு கூட ஒன்றும் கிடைக்காது. உதாரணத்திற்கு கார் கதவின் கைப்பிடி, ரேடியோ போன்ற பொருட்கள். பி.பி.ஸியின் இந்த வீடியோ நம் மின்னல் பற்றிய அறிவை செறிவூட்டும் என்ற நம்பிக்கையில்.....
மேலும் சில அறிவியல்பூர்வமான ஐந்தாறு கேள்விகளுக்கு கீழ்காணும் சுட்டியில் விளக்கியிருக்கிறார் இந்த பேரா. இதைப் படித்துவிட்டு அடுத்தமுறை ஜோ என்று மழை பெய்யும் போது வலுக்கட்டாயமாக நன்றாக மின்னலடிக்கும் வேளையில் காரில் உட்கார்ந்து பரிசோதித்து பார்க்கவேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே"யில் மாரிக்கால அந்தி நேரத்தை வர்ணிக்கும் ஒரு காட்சியில் கருமேகத்தில் தொலைந்து போன சந்திரனை வானம் மின்னல் விளக்கேற்றி இடிஇடித்து விசாரித்து தேடிக்கொண்டிருப்பதாக கவி வடித்திருப்பார். மின்னலை சாந்தமாக வெண்ணிலா தேடும் வேலைக்கு அமர்த்தியிருப்பார் கவியரசு. பதிவுக்கு ஒட்டாமல் இந்த சரக்கு எங்கே தேவையில்லாமல் இங்கே நுழைந்தது என்று கேட்போருக்கு...... மனம் ஒரு குரங்கு. தாவிக்கொண்டே இருக்கிறது. என்ன செய்ய? ஷாஜஹான் படத்தில் இளைய தளபதி விஜய் "மின்னலை பிடித்து.. மின்னலை பிடித்து.. மேகத்தில் துடைத்து பெண் என்று படைத்து வீதியில் விட்டு விட்டான்...." பாடல் கூடத்தான் ஞாபகம் வருகிறது. போதுமப்பா நிறுத்து என்று நீங்கள் கதறுவது காதில் விழுகிறது.
பட உதவி: www.etsu.edu
தகவல் உதவி: http://profmandia.wordpress.com/2010/07/12/no-this-weather-really-blows/
3 comments:
மின்னல் பற்றி மின்னலாய் ஒரு பதிவு... மின்னல் விமானத்தை தாக்கும், எனவேதான் தரைக்கு வந்தவுடன் உடனே எர்த் கொடுப்பார்கள் என்று படித்து இருக்கிறேன்... ஆனால் காரிலும் இப்படி ஒரு டேஞ்சர் இருக்கும் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது
காரிலும் கைப்பிடி பிடிக்காமல் அமர்ந்திருந்தால் பயம் ஏதும் இல்லை என்று தான் படம்பிடித்திருக்கிறார்கள். செந்தில்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
hi,
Very very informative..
Post a Comment