"இந்த உலகம் முழுவதும் கொள்ளைக்கார உலகம். இதில் யாரும் விலக்கில்லை. அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பா, ஆசியா எங்கும் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். முதலாளி, பொதுஉடைமைவாதி, அபேதவாதி - எல்லோரும் கொள்ளைக்காரர்களை போற்றிப்பேணி வருகிறார்கள். நாயைக் கண்டால் கல்லை எடுக்கிற உலகம். கொள்ளையடிக்கிறவன் யார் தெரியுமா? படித்தவன், அறிவடைந்தவன். அறிவில்லாதவன், கொஞ்ச அறிவுள்ளவனைக் கண்டால், தெரு நாயைக் காண்கிற மாதிரி மெத்தப் படித்தவனுக்கு, மெத்தத் தெரிந்தவனுக்கு கொள்ளையடிக்கிறது பணக்காரன் இல்லை. பணக்காரனுக்கு கொள்ளையடிக்கக் கை கொடுக்கிறவன் மெத்தப்படித்தவன். படித்தவனுக்குப் பணம் அவ்வளவு தேவையில்லை. அவனுக்கு ஆட்டி வைக்க வேண்டும். ஆனால் கொள்ளைக்காரன் என்று பேர் மட்டும் வரக்கூடாது. அதை வேறு யாராவது வாங்கிக் கொள்ள வேண்டும். தாங்கிக் கொள்ள வேண்டும். பணக்காரனைப் பணக்காரனாகச் செய்கிறவன் அறிவுக்காரன். பணக்காரர்களுக்கு அடிமையாகி விட்டார்கள் அறிவுக்காரர்கள் என்று சொல்கிறார்களே - அதை நம்ம மாட்டேன். பணக்காரன் என்று யாரும் இல்லை. இந்த உலகத்தில் தெரிந்தவன் - தெரியாதவன் என்று இரண்டு ஜாதிதான் உண்டு. தெரிந்தவன் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு, தெரியாதவனைப் பறக்க விடுகிறான். அடிமைப்படுத்துகிறான்."
மரப்பசு நாவலில் தி.ஜானகிராமன்.
ரொம்ப நாளைக்கப்புறம் மீள்வாசிப்பு செய்ததில், இந்த நாவலிலிருந்து என்னென்னவோ பல விஷயங்கள் விளங்குகிறது. தற்போது பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம் என்று சொல்லிக் 'கொல்லும்' எழுத்தாளர்கள் யாரும் அப்படி ஒன்றும் வாழ்க்கையை விளங்கும்படி வாசகர்களுக்கு சொல்ல முற்படுவதில்லை. தன் சொந்தக் கதைகள் மூலமாக பல அசிங்கங்களை மாடர்ன் எழுத்துக்கள், நான் லீனியர் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறவர்கள் தான் ஜாஸ்தி. தலைவரே, குருவே, நீங்கள் இல்லாமல் நான் இல்லை, என் உயிரே உங்கள் எழுத்துக்கள் நான், உங்களை வாசித்துதான் சுவாசிக்கிறேன் என்று ஜால்ரா தட்டி அவர்களுடைய வலைதள முகவரியை தன்னுடைய தளத்தில் பிரசுரித்து ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்துகொண்டு காலத்தை கழிக்கிறார்கள்.
நாவல் முழுவதும் கம்யூனிசம், மார்சிஸ்ட், லெனின் போன்ற பல விஷயங்களை ஒரு பெண் பாத்திரம் மூலமாக எடுத்துரைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஒரு சில இடங்களில் செக்ஸ் பற்றி எழுதும்போது கூட இலைமறை காய்மறையாக எழுதும்போதுதான் மிகவும் ருசிக்கிறது. வந்தான், அவிழ்த்தான், ----------- செய்தான் என்றெல்லாம் எழுதுவது அநாகரீகமாகவும் வார்த்தைகளில் சொற்களில் பாண்டித்யம் இல்லாதைதான் இக்கால எழுத்துக்கள் காட்டுகின்றன. சில விதிவிலக்கான எழுத்தாளர்களும் இப்போதும் இதுபோல் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தேடிக் கண்டுபிடித்து படிப்பதுதான் பெரிய காரியமாக இருக்கிறது.
0 comments:
Post a Comment