ஸ்பெயின் வெற்றியை முன்னமே சரியாகக் கணித்துச் சொன்ன ஜெர்மனி ஆக்டோபஸ் பாலிடம் ஆரூடம் பார்க்க ஒரே கூட்டமாம். ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்றது. மற்றொரு அணியான நெதர்லாண்ட்ஸ் இது வரை இருமுறை இறுதிபோட்டி வரை வந்து சாம்பியன் வாய்ப்பை தவறவிட்ட அணி. ஆகையால் இம்முறை ஒரு புதிய அணி உலக சாம்பியன். இப்படி கால்பந்து ஆட்டத்தில் புதிய அணிகள் சாம்பியன் ஆவது போல ஒரு புதுப்புனல் எல்லா விளையாட்டுகளிலும் துறைகளிலும் வருமா என்ற ஏக்கம் மக்கள் மனதில் தோன்றுவது இயற்கையே. இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள்? ஸ்பெயினா? நெதர்லாந்தா? பாலிடம் கேட்டுச் சொல்கிறேன். பால் இந்தியா வந்தால் நிறைய பேர் பொட்டியை கட்ட வேண்டிவரும்.
புகழின் உச்சாணிக்கொம்பில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெறுவது ஒரு தனிப் புகழ்தான். முத்தையா முரளிதரன் தன் கை முட்டி நன்றாக சுழன்றுகொண்டிருக்கும் போதே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இனிமேல் எப்போதுதான் அந்த இரண்டு முட்டை முழிகளை பார்க்கப் போகிறோம். எஃப்.எம் ரேடியோ ஆர்.ஜெ சுச்சியும் இன்று காலையில் யார் யார் ஓய்வு பெற்று வீட்டில் உட்கார்ந்தால் அவர்களுக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை பற்றியும் அதன் க்ஷேம லாபங்களையும் "அச்சச்சோ..." "ஐயே..." என்றெல்லாம் அவர் பாணியில் பேசி அரற்றினார். எல்லோரும் ஒட்டு மொத்தமாக சச்சின் , திராவிட் போன்ற மூத்தகுடிக்கள் சீனச் பெருஞ்சுவர் போல நிற்காமல் ஓய்வு பெற்று இளம் திறமையாளர்களுக்கு வழிவிட்டு பாக்ஸ்-ல் உட்கார்ந்து கவாஸ்கர், சாஸ்த்ரி போன்று மைக் பிடித்து டாஸ் போட்டதிலிருந்து ஆட்டம் முடிந்து வீரர்களை சட்டையை கழற்ற விடமால் கண்ணாடியில் ஜான் உயரத்திற்கு ஒரு கோப்பையும், ஆட்ட நாயகனுக்கு ஆளுயர காசோலையும் கொடுக்கும் வரையில் ஆட்ட வர்ணனைகளை வீட்டில் உட்கார்ந்து நொறுக்கு தின்று மேட்ச் பார்க்கும் கிரிக்கெட் மேனியாக்களுக்கு விலாவாரியாக விவரிக்கலாம். ஒரு சுச்சி ரசிகர் சச்சினை பற்றி குறிப்பிடும் போது, இனிமேல் சச்சின் சாதனையை அவர் பையன் வந்துதான் முறியடிக்கவேண்டும் என்ற தொலைநோக்கில் சச்சின் விளையாடுவதாக குறிப்பிட்டார். உண்மையாக இருக்குமோ? யார் மனசுல என்னவோ? நல்லவேளை சுச்சி கிரிக்கெட் போலவே அரசியலில் இருந்து யார் யார் ஒய்வு பெறவேண்டும் என்று நிகழ்ச்சி நடத்தவில்லை. தப்பித்தது தமிழக அரசியல்.
சென்ற பாராவில் சாஸ்த்ரி பற்றி சொன்ன போது, கிரிக்கெட் வெறி பிடித்து நான் சுற்றித் திரிந்த என் பதின்ம வயதுகளில், ரவி சாஸ்த்ரியின் அந்திமக்கால கிரிக்கெட் நேரங்களில் ஒரு ஜோக் உண்டு. இரண்டு அணிகளின் வீரர் பட்டியல் டிவியில் போடும்போது சாஸ்த்ரி பெயர் இருக்கிறதா என்று பார்ப்போம். இருந்தால், நமக்கு பத்து பேர் எதிரணிக்கு பன்னிரண்டு பேர். எப்படி என்றால், சுழல் பந்து வீசுகிறேன் பேர்வழி என்று அல்வா லட்டு என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தூக்கி போட்டுகொடுத்து, எதிரணியாளர்கள் ஆடுகளத்தை பரதநாட்டிய மேடையாக்கி ஓடியும் ஆடியும் வந்து ஆறு ஆறாக அடித்து நம் இந்திய ரசிகர்கள் மனதில் இரத்த ஆறு வரவழைத்து விடுவார்கள். மட்டை பிடித்து ஆடினால் ஓவருக்கு நான்கு ரன்கள் என்ற விகிதத்தில் இருந்த இலக்கை இரு கால்களுக்கு நடுவில் மட்டையை பிடித்து வெளியே எடுக்காமால், அப்படியே அடித்தாலும் நான்கு நாட்களுக்கு சாப்பிடாதது போல சொத்தை அடி அடித்து ஒன்றொன்றாக எடுத்து ஓவருக்கு ஏழு ரன்கள் வரை கொண்டுவந்து விட்டுவிடுவார். அவ்வளவு நேரம் நிலைத்து ஆடி, கடைசியில் நடுக்குச்சியை விட்டுவிட்டு அவுட் ஆகி மக்களோடு செருந்து இந்தியா தோற்பதை பார்த்துக்கொண்டிருப்பார். இதே ரவி சாஸ்திரி எண்பதுகளில் பென்சன் அண்ட் ஹெட்ஜெஸ் கோப்பை இந்தியா ஜெயிப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தவர்.
வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கும் போதே ஒய்வு பெறுவதுதான் மரியாதை. யார் எங்கிருந்து எப்போது ஓய்வு பெறுவார்களோ இல்லையோ இன்றைக்கு நம்முடைய பதிவுப்பணிக்கு ஒரு சின்ன ஓய்வு கொடுக்கலாம். பை, பை.
படங்கள் உதவி: www.thecricfanclub.com, www.action8cricket.com and http://great-ads.blogspot.com/2008/09/fifa-world-cup-south-africa-2010.html
1 comments:
//தப்பித்தது தமிழக அரசியல்.//
HA.. Ha.. Ha..
I remember once Ravi made just 10 runs of 60 balls (as an opener) in on ODI.. & India lost that game..
Post a Comment