இன்று உலக சுற்றுப்புற சூழல் நாள். நவீன சினிமா படங்களுக்கு தலைப்புக்கு கீழ் பஞ்ச் வாக்கியம் வைப்பது போல இந்த வருட சுற்றுப்புற சூழல் நாளுக்கு ஒரு பஞ்ச்சான கருப்பொருள் "பல உயிரினம், ஒரே கோள், ஒரே எதிர்காலம்" என்பது. யு.என் செக்ரெட்டரி ஜெனரல் பான்-கி-மூன் விடுத்துள்ள உலக சுற்றுப்புற நாள் செய்தியில் "பாம்பு, தவளை பல்லியிலிருந்து கொரில்லா வரை, பெரிய தாவரங்களிலிருந்து சிறிய பூச்சிகள் வரை, பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் ஆபத்தில் உள்ளன" என்று தெரிவித்திருக்கிறார். சுற்றுச் சூழல் மாசுபடுதலால் நிறைய உயிரினங்கள் வேரோடு அழிந்து வருகின்றன, நமது தேசிய விலங்கான புலியை காப்பதற்கு சிங்கம் சூரியா கூட டி.வி சானல்களில் வந்து காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வற்புறுத்துகிறார். இந்த நாளில் இந்தியர்களாகிய நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். பிறகு அமுல்படுத்துவோம். பின்வருவனவற்றில் சிலது பிளாஸ்டிக் கழிவு போன்ற மாசு சமாச்சாரங்கள் சிலது நம்மவர் பாடிய "சொர்க்கம் என்பது நமக்கு"கை தக்க வைத்துக்கொள்ள நாம் தவிர்க்கவேண்டியவை.
தொலைபேசி ஜங்க்சன் பாக்ஸ் பின்னால், ஈ.பி டிரான்ஸ்பார்மர் கீழ், ஆளில்லா ரோட்டோரம், விளக்கில்லா தெருமுனைகள் போன்ற இடங்களில் அற்ப சங்கைக்கு ஒதுங்காமல் இருப்பது மற்றும் ஓடும் ரயிலுக்கு பின்புறம் காண்பித்து தண்டவாளம் ஓரம் வெட்கப்படாமல் உட்காருதல் போன்றவற்றை தவிர்ப்பது.
தீபாவளி காலங்களில் ஏதோ சம்ப்ரதாயத்திர்க்கு ஒன்றிரண்டு பட்டாசு கொளுத்தி மகிழ்வது. கிருஷ்ணர் நரகாசுரனை கொன்றுவிட்டு ஸ்டாண்டர்ட் பட்டாசு கொளுத்தவில்லை, கொளுத்தும்படியும் சொல்லவும் இல்லை. சன், ஜெயா, விஜய் ராஜ், கலைஞர் என்று ஒரு ரவுண்ட் வந்தால் தீபாவளி ஓடிவிடும்.
நாடார் கடைக்கு சென்று இரண்டு எவரெடி பென்டார்ச் பாட்டரி வாங்கினால் கூட கருப்பு கலர் காரி பாகில் போட்டுத் தரச் சொல்லி அழும்பு பண்ணக் கூடாது. நாயர் கடையில் அந்த அரை அவுன்ஸ் டீயை பிளாஸ்டிக் டம்ப்ளரில் வாங்கிக் குடிக்கக் கூடாது. ஐயங்கார் பேக்கிரியில் ஐம்பது கிராம் பக்கோடவுக்கு ரோஸ் கலர் பை போட்டுத் தா என்று அடம் பிடிக்கக் கூடாது. கையில் பை எடுத்துச் செல்வதை அகௌரவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மயிலாப்பூர் பண்ட் ஆபீஸ் காய்கறி மார்கெட்டில் எவ்வளவோ வயதான மாமாக்கள் தோளில் துணிப்பையோடு அந்த கால படங்களில் வரும் ஜர்னலிஸ்ட் மாதிரி உலவுவதை நாம் பார்க்கலாம்.
சினிமா தியேட்டர் படிக்கட்டு, அனைத்து அரசு அலுவலகங்கள் படிக்கட்டு மூலைகள், நடு ரோடு, பஸ் ஜன்னல்கள் போன்றவற்றில் புகையிலை சேர்ந்த பான்பராக் மற்றும் வெற்றிலைச்சாறை "புளிச் புளிச்" துப்பி வைக்கக்கூடாது. சென்னையில் ஒரு அரசு அலுவலகப் படிக்கட்டை துப்பியே சிகப்பு வர்ணம் தீட்டியிருந்தார்கள்.
இ-வேஸ்ட் என்ற எலக்ட்ரானிக் வேஸ்ட் சமாச்சாரமும் இப்போது அழுக்கு ஜீன்ஸ் அணிந்து இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்க நேரத்திற்கு உழைக்கிற கார்பேஜ் இன் கார்பேஜ் அவுட் துறையில் மிகப் பிரபலமான வார்த்தை. உபயோகித்த பழைய கம்புட்டர் மற்றும் ஸி.ஆர்.டி மானிடர் பெட்டிகளை எப்படி நாம் ஆயுதபூஜையன்று ஆபிசிலிருந்து ஒழிக்கிறோம் என்பது பற்றியது. இந்த பழைய பொட்டிக்கு பேரிச்சம் பழம் கிடைக்கும் ஆசையில் இதை எங்கோ கொண்டு கொட்டிவிடுகிறோம். ஆனால் இதில் உள்ள ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற பொருட்களால் சுற்றுச் சூழல் மிகவும் மாசுபடுகிறது.
இந்த சுற்றுச்சூழல் மாசுபடுவதை பற்றிய அமெரிக்க முன்னாள் உதவி ஜனாதிபதி அல் கோரின் An Inconvenient Truth ஒரு அட்டகாசமான படம்.
யூட்யூபில் இலவசமாகவே காணலாம்.
இந்தப் படம் சொல்வதைத்தான் இந்தப் பதிவும் சொல்ல ஆசைப்பட்டது.
பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். http://www.expressbuzz.com
2 comments:
எல்லாம் நன்றாகத்தான் சொன்னீர்கள், தீபாவளி அன்று பட்டாசு கொளுத்துவதை தவிர்க்க டி வி சானல்களை ஒரு ரவுண்டு அடியுங்கள் என்றது தவிர. பண்டிகை நாட்களிலாவது சுற்றம், நட்பு என ஒரு ரவுண்டு வரக்கூடாதா?
அப்படித்தானே இருந்தோம் டி வி வரும் வரை?
ya good ..
Post a Comment