ஏழு மணிக்கு பாண்டியனில் இருந்து மதுரையில் இறங்கியவுடன் 'தி ஹிந்து' கொடுத்தார்கள். அபூர்வ சகோதரர்கள் அப்பு சைஸுக்கு அரை நிஜார் சிறுவன் நடு வழியில் நின்றுகொண்டு விநியோகித்தான். இலவசமாதலால் ஆங்கிலம் கற்றோர், கல்லாதோர் என்று பாரபட்சமில்லாமல் எல்லோரும் மிட்டாய் வாங்குவது போல ஒரு காபி வாங்கிக் கக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். ஆட்டோ விஷயத்தில் மதுரைக்கும் சென்னைக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஸ்டேஷன் வாசலில் எல்லோரையும் வருந்தி அழைத்து சொற்ப தூரத்திற்கு கூட நிறைய கூலி கேட்டார்கள். டிரைவர் பக்கத்தில் ஆசனம் கொடுத்து நம்மை 'கிளி' ஆக்கினார்கள். "ஓரமா போங்கண்ணே..." என்று விடாமல் ரைட், லெஃப்ட் என்று 'கட்' அடித்து ஓட்டி பயணியை இருக்கையில் இருக்க விடாமல் செய்தார்கள். சாலையில் நடமாட்டம் இருக்கிறதோ இல்லையோ கவலைப்படாமல் அந்தக் கால 'சைக்கிளில் குச்சி ஐஸ் விற்கும்' ஹார்ன் அடித்துக் கொண்டே வண்டி ஓட்டினார்கள். சிக்னலில் ஓரமாகவே சென்று நிறுத்தக் கோட்டை கடந்து பாயத் தயாராகும் பார்முலா ஒன் பந்தயக் கார்போல் "டர்..டர்..." என்று உறுமிக்கொண்டே நின்றார்கள். சிகப்பிலேயே சிக்னலை கடந்தார்கள். கடை கன்னிகளை தவிர்த்து மீதம் எல்லாம் சென்னை போலவே இருந்தது. கோரிப்பாளையம் கடக்கும் போது அந்தப் பெயரில் வெளியான பட பதாகைகள் வழி நெடுகிலும் மதுரை மண்ணிற்கு வரவேற்றது. பாண்டிய மன்னனின் பெருமை சேர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்க இப்போது நாங்களும்.
சற்று நேரம் பயணக் களைப்பு நீங்க உறவினர் வீட்டில் தூங்கி சிரமபரிகாரம் செய்துவிட்டு அன்னை மீனாட்சியை காண உறவினரின் அஞ்சனை மைந்தன் ( மாருதி 800 ) மீதேறி புறப்பட்டோம். சோனியாஜியின் 'அன்னை' பதத்தை மீனாட்சிக்கு உபயோகித்ததற்கு காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பார்களாக!. மாலை நேர ட்ராபிக் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. மல்லிகை ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் என்று மதுரைப் புகழ் மல்லியின் பெயர்த்தாங்கி நின்ற சாப்பாட்டு கடைகளிலும் கூட்டம் அள்ளியது. ஸ்வாமி சந்நிதி கோபுர வாசல் வழியாக செல்ல நினைத்து அங்கு ஓரமாக வண்டி நிறுத்துவதற்கு கட்டணம் வாங்கி நிறுத்துகையில் காரிலிருந்து வெளி செல்லா வண்ணம் ஈரமும் துர்நாற்றமும்.ஐம்பது அடி தூரத்தில் இருந்த மதுரை மல்லியை தோற்கடித்து வீசிய மணம் அது. அருகே "நவீன கட்டண கழிப்பறை' இருந்தும் நம்மாட்கள் கோயில் ஓரத்திலேயே அற்ப சங்கைக்கு ஒதுங்கியிருந்தார்கள்.
ஒருவழியாக தரை ஈரத்தை மிதிக்காமல், 'கர்சீப்' முகமூடியணிந்து கோபுர வாசலை அடைந்தோம். கோபுர வாசலில் நிலைப்படி போன்ற ஒரு சட்டத்தின் வழியாக கோவில் உள்ளே பிரவேசிக்க சொன்னார்கள். வெடிகுண்டு பரிசோதனை. ஆண்களின் பேன்ட் பாக்கெட்டுகளில் சும்மாவானும் ஒருவர் ஒரு கையால் அமுக்கி துழாவி, மேற் சட்டையை தடவினார். மொபைல், கார் சாவி மற்றும் இன்னபிற பொருட்கள் இருந்தும் அது என்ன என்பதை அவர் பொருட்படுத்தவே இல்லை பெண்களுக்கு தனியாக திரைச் சீலை போட்டு மறைவாக பரிசோதித்தார்கள். திரைமறைவு பரிசோதனை எப்படி என்று தெரியவில்லை.
கையில் டிஜிட்டல் கமெராவுடன் அரைக் கால் சட்டையிலும், வெள்ளை மேல் சட்டையும் அணிந்து மிகப்பெரிய முக்குரிணி விநாயகரை 'பார்த்துக்' கொண்டிருந்த 'வெள்ளை'யர்களை தாண்டி மீனாட்சியின் சந்நிதிக்கு சென்றோம். "தர்ம" தரிசனம் இலங்கை எரித்த அனுமனின் வால் போல நீண்டு ஆதி அந்தம் காண இயலாதலால், "அதர்ம" தரிசனமான "சிறப்பு" கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தேன். எல்லோருக்கும் "ஒரே வழி - விரைவான தரிசனம்" என்ற கோட்பாட்டை எல்லா ஜன சந்தடி மிகுந்த கோயில்களில் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை கொண்டு வர ஏற்பாடு செய்யவேண்டும். இறைவன் சந்நிதியில் சாதா வேஷ்டியும் பட்டு வேஷ்டியும் சமம், காட்டன் புடவையும் பட்டு புடவையும் சமம். "குழந்தைகளுக்கு டிக்கெட் உண்டா?" என்று கேட்டதற்கு, "எல்லாருக்கும் தாண்ணே எடுக்கணும்" என்று பதில் வந்ததால் ஆறு எடுத்தேன். எடுத்துக் கொண்டு மு.பிள்ளையார் பக்கம் நின்ற ஆதிசேஷன் பத்து பன்னிரண்டு மடிப்பாக படுத்திருந்த கோலத்தில் இருந்த ஒரு வரிசையின் வாலில் போய் சேர்ந்து ஆ.சேஷனைப் பெரிதாக்கினோம்.
ஒரு மத்திம வயது ஜோடி பின்னால் முனகிக்கொண்டே வந்தது. "இன்னும் இப்படி போய்.... அப்படி போய்..... அப்புறம் அப்படி போய்.... இப்படி போய் ...." என்று வாயாலேயே வரிசையை வலம் வந்தது. கோயிலினுள் இருந்த வெக்கையில் எல்லோரும் கிட்டத்தட்ட புனித ஸ்நானம் செய்து விட்டோம். சந்நிதி நெருங்குகையில் ராட்சஷ காத்தாடி வைத்து வியர்வையையும் நாற்றத்தையும் போக்கினார்கள். அரை மணி பட்ட கஷ்டம் அரை கணத்தில் பரவசமாக மாறியது. மதுரை மல்லியின் அற்புத நறுமணம் கமழ புஷ்பாலங்கார சேவையில் பச்சை மரகதமாய் ஜொலித்தாள் மீனாட்சி. கண்ணார கண்டு ரசித்து வெளி வருகையில் அங்கு நின்றிருந்த ஒரு வயோதிகர், ஒரு ஐந்தாறு மயில்களின் மொத்த தோகைகளைக் கொண்டு தயாரித்த பெரிய மயிலறகு விசிறியால் எல்லோருக்கும் விசிறினார். என்னால் இயன்ற தொகை தோகை வீசிய அவருக்கு என் சிறிய பெண்ணால் அளிக்கப்பட்டது.
ஸ்வாமி சந்நிதியில் பொதுவாக கூட்டம் இருக்காது என்று பலபேர் சொல்லியும், அங்கும் சிறப்பு டிக்கெட் வாங்கினேன். ஆண்கள் காசு விஷயத்தில் 'கறார்' கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டு போல ஸ்வாமி சந்நிதியில் ஆறு பேருக்கு இரண்டு டிக்கெட் டிஸ்கவுன்ட் போட்டு நான்கு போதும் குழந்தைக்கு கிடையாது என்று ஒரே கோவிலில் இரண்டு சந்நிதிகளுக்கு இரு வேறு விதிகள் போட்டிருந்தார்கள். சுந்தரேஸ்வரர் பட்டாடையுடன் 'பள பள' என்று 'குளு குளு' ஏசியில் வீற்றிருந்தார். திவ்ய தரிசனம்.
தரிசனம் முடிந்து ஸ்வாமி கோபுர வாசல் வழியேவே வெளியே வந்தோம். இன்னமும் வாசலில் வரும் பக்தர்களை நிறுத்தி குண்டு பரிசோதனைக்காக தடவிக்கொண்டிருந்தார்கள். நிறுத்தத்திலிருந்து காரை எடுக்கையில் மூலையில் ஓரமாக இன்னும் இரண்டு மூன்று பேர் நின்று ஈரம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பொது வெளியில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது 'நாகரீகம்'. கழிப்பது 'அநாகரீகம்'. சுவற்றில் படம் வரைந்து கழிப்பது 'ஆநாகரீகம்' என்று கற்றதும் பெற்றதும்மில் நம்ம வாத்தியார் சுஜாதா எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.
(அடுத்து கொடை பற்றிய பதிவு...)
2 comments:
நம்ம மக்கள் 'மாக்களாகி'ட்டாங்க என்பதற்கு இதுதான் சான்று.
தமிழ்ப்பண்பாடுன்னு வாய் கிழியக் கத்தும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு இன்னும் அவற்றைக் கற்பிக்கவில்லை:(
அன்பு நண்பரே இவ்வளவு கஷ்டப்பட்டு அங்கு நீங்கள் போயிருக்க வேண்டாம் வீட்டில் ஒக்காந்து டிவி பார்க்கலாம்
உங்கள்
பாலா
மதுரை
Post a Comment