அறிவியல் தொடர் எழுதும் அபாயகரமான நோக்கம் எதுவும் இல்லை என்றாலும், தொட்டு விட்டதை தொடர்கிறேன்..... சென்ற பதிவில் சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகை புரட்டி போடும் ஐடியாக்களில் சிலவற்றை பார்த்தோம். மேலும் சில....
4. வெகு ஜன-வேக பஸ் போக்குவரத்து
உலக சரித்திரத்தில் முதன்முறையாக மனிதகுல நாகரீகத்தில் கிராமப்புறங்களில் வசிப்பதை வெறுத்து நகர்ப்புறங்களில் கூட்டம் அதிகரித்துவருகிறது. இத்தகைய மாற்றங்களினால் ஒரு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு கூட காலையில் பல் தேய்த்து, குளித்து, டிபன் சாப்பிட்ட கையோடு கிளம்ப வேண்டியிருக்கிறது. என் நண்பரின் மனைவி காலை டிபன், தலை வாருதல், முகத்திற்கு குலாப் பன்னீர் தண்ணீர் தெளித்து துடைத்தல், கழுத்துக்கு காதுக்கு அணிகலன்களை பூட்டிக் கொள்ளுதல், உதட்டு சாயம் பூசுதல் என்று சகலவிதமான ஒப்பனைகளையும் காரிலேயே முடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு கீழிறங்குவார். இந்த வசதியில்லாதோர் பிரம்ம முஹூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து வீட்டில் அனைத்தும் செய்து புறப்படவேண்டியிருக்கிறது. இவ்வளவும் செய்தாலும் ஏதாவது மாண்புமிகுக்கள் சாலையை பயன்படுத்த நேரிட்டால் நாம் நின்று வழிவிட்டு தாமதமாக சென்று 'சிடு சிடு' அதிகாரியிடம் 'வெடுக் வெடுக்' என்று வசவு வாங்க வேண்டியதாகிறது. இப்படி பல பிரச்சனைகளை சமாளிக்க 2001ம் வருடத்திலிருந்து கொலம்பியாவில் போகோட என்ற நகரத்தில் சில மாறுதல்களை செய்தார்கள். பஸ் பயணிகளுக்கு முன்னரே டிக்கெட் அளித்து ஒரு மூடிய அறை போல் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வைத்து, பஸ் வந்தவுடன் அதை திறந்து அதிலிருந்து நேராக பஸ்ஸில் ஏற்றிவிடப்பட்டார்கள். இதில் மற்றுமொரு சௌகரியம் என்னவென்றால் பேருந்தில் 'ஸ்லைடிங்' கதவுகள் வைத்து, ஒரே நேரத்தில் பலர் ஏறி இறங்கும் வண்ணம் செய்தார்கள். அத்தோடுகூட யானை ஏற்றம் குதிரை ஏற்றம் போல பேருந்தில் ஏறி இறங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் ஏறும் இடம் நேராக பஸ்ஸில் இருக்கைக்கு சமமான உயரத்தில் அமைத்தார்கள். சாலையில் தடையின்றி இந்த பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக தனி வழி அமைத்து வேகமாக செல்ல வழிசெய்தார்கள். இதுவே இனி எந்த மெட்ரோபொலிட்டன் நகரத்திற்கும் ஏற்றது என்று பரிந்துரைசெய்யப்படுகிறது. கொலம்பியாவின் ட்ரான்ஸ்மிலினியோ பற்றிய ஒரு சுவாரசியமான காட்சி தொகுப்பு கீழே..
5. நெய்தல் நில பயிர்கள்
இந்த அண்டத்தில் நன்னீர் ஒரு புறம் குறைந்து வரும்போது அதிக ஜனப்பெருக்கத்தால் இன்னொரு புறம் உணவு உற்பத்தி அதிகமாக தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலைடு பல்கலைக்கழகத்தில் மரபணு பொறியியல் துறையில் பயிர்களின் இலைகள் உப்புத்தன்மையை சேகரிக்காமல் இருக்கச் செய்யவும், அந்த இலைகளை உதிர்க்காமல் இருக்கவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரிலிருந்து வாங்கி வரும் முளைக்கீரை சென்னை கீரையை விட நன்றாக இருப்பதும் இதனால்தான். இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் ஐந்திணைகளில் வயலும் வயல் சார்ந்த இடமாகிய மருதத்தில் மட்டும் பயிர் செய்த காலம் போய் நெய்தல் நிலத்திலும் நெற்சாகுபடி செய்யலாம்.
6. சட்டைப் பை துபாஷ்
சாக் சாப்ட்வேர்ஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு தானியங்கி மொழிபெயர்ப்பான் மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருளை அலைபேசியில் ஏற்றிக் கொள்ளலாம். தற்போது ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு மொழி பெயர்க்க இதை செயல்படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரே சமயத்தில் இருவர் பேசிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இந்த புதிய வரவினால் சுற்றுலா துறை அதிக பயன்பெறும் என்று தெரிகிறது. தற்போது வரையறுக்கப்பட்ட சொற்களை மிகத்துல்லியமாக மொழிபெயர்க்கும் இந்த மேன்போருள் அடுத்த முறை நீங்கள் தென்னாப்பிரிக்கா சென்றால் ஸுலுவில் பேசும் ஆப்ரிக்க சுந்தரி என்ன பேசுகிறாள் என்று தெளிவாக உணரமுடியும்.
7. பெருநோயறிதல்
சொஸ்த்தபடுத்த முடியாத நோய்கள் உடம்பில் வளர்வதற்கு நெடுநாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது உயிரியல் விதி. பல்வேறு விதமான கடினமான மூலக்கூறுகளின் தசாப்தங்கள் கடந்த இடைத்தாக்கத்தின் விளைவே இத்தகைய நோய்கள். ஒரு சாதாரண ஜுரத்திற்க்கே முதல் இரண்டு நாட்கள் கை கால் மட்டும் வலி கண்டு பிறகுதான் அந்த வைரஸ் தாக்குகிறது. சிக்கின்குனியா போன்ற நோய்களில் ஜுரம் விட்டும் பல மாதங்கள் மூட்டு வலி தொடர்கிறது. பயோமார்க்கர் என்பது வெகு காலமாக கடைபிடித்துவரும் ஒரு செயல்முறை. தேக ஆரோக்கியமுள்ள ஆயிரம்பேரின் ரத்த மாதிரிகளை அடித்தளமாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு, நீரழிவு, மார்பக புற்றுநோய் போன்று நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களின் மாதிரிகளையும் ஒன்று திரட்டி, இரண்டையும் ஒப்புநோக்குகையில் கிடைக்கும் முடிவுகளை கொண்டு ஒரு இறுதி முடிவிற்கு வருவதற்கு ஆராச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இத்திசையில் ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகிறது, "உயிரியலில் இயற்கையின் பாதையை ஒரு கூற்றாக கணிக்கமுடியாமல் போனாலும் சர்வ நிச்சயமாக ஒருநாள் நோயின் அறிகுறியை கண்டு பிடிப்போம்" என்று எக்ஸாக்ட் சயின்ஸ்ஸஸ்ன் மூத்த மருத்துவ அதிகாரி பாரி பெர்ஜெர் கூறுகிறார்.
இந்த பயோமார்க்கரை பயன்படுத்தி பெருநோய் முன்எச்சரிக்கையை மனித இனம் கண்டுபிடித்துவிட்டால், பூமாதேவி எவ்விதம் இப்புவி பாரம் பொறுப்பாள்?
8. உடனடி இரத்த கட்டு
விபத்துகளின் பொது நிறைய மரணங்கள் ரத்தம் அதிகம், உடனே வெளியேறுவதால் நடைபெறுகிறது. ட்ராமா சொலுயூஷன்ஸ் என்ற மேரிலேன்ட் பல்கலைக்கழக உதவி பெற்ற நிறுவனம் 'ஸின்தெடிக் ஹைட்ரோஜெல்' என்ற ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். இது உடம்பிற்கு 'பைபிரின்'( fibrin )னை உடனே தயாரிக்க கட்டளையிட்டு இரத்த போக்கை நிறுத்துகிறது. இதுவும் முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டுவரும் ஐடியாவாக பட்டியலில் இடம்பெறுகிறது.
9. பாக்டீரியா டூத்பேஸ்ட்
வாயில் உள்ள ஸ்ட்ர்ப்டோகோக்கஸ் ம்யூடன்ஸ்( Streptococcus mutans ) என்ற பாக்டீரியா தான் உணவில் உள்ள சர்க்கரையை பற்களில் உள்ள எனாமல் அழிக்கும் லாக்டிக் ஆசிட்டாக மாற்றுகிறது. ப்ளோரிடாவை தலைமையிடமாக கொண்ட ஓராஜெனிக்ஸ் ( Oragenics ) என்ற நிறுவனம் ஒரு புதிய பாக்டீரியாவை மரபணு மாற்று என்ஜினீயரிங் மூலமாக தயாரித்திருக்கிறார்கள். இது சர்க்கரையை மிக குறைந்த அளவு ஆல்கஹாலாக மாற்றுகிறது. இந்த சிகிச்சை தற்போது மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. இதனால் முற்றிலுமாக ஸ்.ம்யூடன்ஸ் அழிக்கப்படுகிறது.
என்பது வயது ஆன பின்னும் முறுக்கும் சீடையும் நொறுக்கும் தாத்தாக்களையும், அரைக்கட்டு கரும்பை பல்லால் கடித்து தின்னும் பாட்டியையும் எதிர்காலத்தில் இந்த சமூகம் காண நேர்ந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
மிச்சமிருப்பவை என் சிற்றறிவுக்கு எட்டினாலும் இதை ஒரு பெரிய அறிவியல் தொடராக தொடர்ந்தால் என் வாசகர் (இருக்கா என்ன?) வட்டம் அதை தாங்காது என்பதால் இத்தோடு இது முற்றும்.
1 comments:
Excellent da. By reading this, i can recongnize latest iPhone 4S's application 'SIRI' which does the same thing. They call it as personal assistant. Great that you got this 2 years back itself :)
Post a Comment