2.புருரவஸ் - ஊர்வசி
இந்திரலோகத்தின் ஆக மொத்த யவ்வன சுந்தரிகளும் ஒரு நட்சத்திர கூட்டம் போல வானில் உலா வந்துகொண்டிருந்தனர். ரம்பை, மேனகை, திலோத்தமா, சித்ரலேகா மற்றும் பலர். ஆனாலும் நிலவை இழந்த வானம் போல் இருந்தது அவர்கள் குழு. வாடிய மலர் போல் இருந்த அவர்களது வதனங்கள் அவர்களுடைய சோகத்தை சொல்லிற்று.
சூரியனை துதித்துவிட்டு தேரில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து அந்த அப்சரஸ்கள்
"வாயு வேகத்தில் செல்லும் உங்களை பார்த்தால் கடவுளின் மித்ரனாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்."அதற்க்கு அந்த அழகிகளிடம்
"எதற்காக மிகவும் சோகத்துடன் இருக்கிறீர்கள். நான் சந்திர வம்சத்து மன்னன் புருரவஸ், உங்கள் துன்பத்தை நான் போக்குவேன்" என்றான்.
"என்னவென்று சொல்வது எங்கள் துக்கத்தை. இரவு நேரங்களில் பூலோகத்தில் சென்று கால் பதித்து திரும்புவது எங்கள் ஊர்வசியின் வழக்கம். இன்றும் அதுபோல் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எங்கள் ஊர்வசியை கேசி என்ற அரக்கன் கவர்ந்து சென்று விட்டான்" என்றாள் ரம்பை
"கவலைப்படாதீர்கள். நான் சென்று உங்கள் தோழியை மீட்டு வருகிறேன். எந்த பக்கமாக சென்றான் அப்பாதகன்."
"வடகிழக்காக" என்று கை காண்பித்தாள் ஊர்வசியின் உயிர்த்தோழி சித்ரலேகா.
"நீங்கள் இங்கேயே காத்திருங்கள்.. சில கணத்தில் வருகிறேன். சாரதி... அத்திசையில் தேரை செலுத்து" என்று விரைந்தான் புருரவஸ்.
சோமனுடைய மகன் புதனுக்கும் - வைவஸ்வத மனுவின் மகள் இலாவிற்கும் பிறந்தவன் புருரவஸ். தன்னுடைய பாட்டனாரின் பெயரை தன் வம்சத்திற்கு சேர்த்து சந்திரவம்சம் என்று சூடிக்கொண்டு ப்ரயாகையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நல்ல புஜபல பராக்கிரமம் மிக்கவன். அவன் சென்ற திசையை கவலையுடன் பார்த்தவாரே அந்த கயல்விழிகள் இமயமலைச் சாரலில் உள்ள ஹேமகூட மலைநோக்கி சென்றனர்.
சிறிது நேரத்திற்கெல்லாம் மனோ வேகம் வாயு வேகத்தில் திரும்பினான் புருரவஸ். தங்களுயிர் தோழி பத்திரமாக திரும்பிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் துள்ளி வந்தார்கள் அப்சரஸ்கள். வாடிய மலர் போன்று இருந்த ஊர்வசியை கண்டு "ஏ பெண்ணே, ஏன் இன்னும் பயத்துடன் காணப்படுகிறாய். கவலையை விடு உன் கண்ணீரை துடை" என்றாள் சித்ரலேகா.
"இவ்வளவு பயந்தாங்கொள்ளியை நான் இதுவரை கண்டதில்லை" என்று புன்முறுவல் புரிந்தான் புரு.
அவன் புன்னகையில் அந்த இடமே அவளுக்கு சொர்க்கலோகம் போல் காட்சியளித்தது. அந்த இதமான மாலைத்தென்றல் அவன் பரந்த மேனியில் பட்டு திரும்பி இவளை உரசியபோது வந்த ஆண்வாசனையில் தன்னை மறந்து கண்கள் சொருகினாள் ஊர்வசி. அவனது கூர்மையான பார்வையும், பரந்த தோளிலும் மாரிலும் துவண்டு ஆடும் பட்டாடைகளும், புஜங்களில் ஜொலிக்கும் கங்கனங்களும் அவளை ஒரு வித காந்தசக்தியோடு இழுத்தது. இருவரும் ஒருவரையொருவர் கண்களால் பருகி நெஞ்சத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர். சித்ரலேகாவின் "ஹக்...கும்..." அவர்களை கனவுலகிலிருந்து நினைவுக்கு இழுத்து வந்தது.
"என்னம்மா ஊர்வசி, தேரிலேயே இருப்பதாக உத்தேசமா" என்றாள் சித்ரலேகா. சித்தம் களைந்து "தேரோட்டி ... தேரை தரையிறக்கு..." என்று கட்டளையிட்டான் கட்டிளம் புருரவஸ்.
தேர்பாகன் மிகவும் லாவகமாக தேரை தரையிறக்கியும் சமன் இல்லாத தரையில் இறங்கியதால் ஒரு சிறிய அதிர்வுடன் இருபக்கமும் ஆடியபடி நின்றது. அதில் குலுங்கிய ஊர்வசி இறங்கும் போது புருரவஸ் மீது உரசியதில் இருவரும் ஒரு மின்னல் வெட்டியதை உணர்ந்தார்கள். பிடித்து இறக்கும் கையின் ஸ்பரிசத்தால் கட்டுண்டு விடமுடியாமல் தவித்தான். கையோடு கை ஒட்டி பிறந்தாற்போல் பிரிக்க முடியாமல் தவித்தது கண்டு அங்கே வந்த அப்சரஸ்கள் கேலி பேசி சிரித்தார்கள்.
"உம்... உம்..... நடக்கட்டும்..நடக்கட்டும்.. ஹா ஹா ஹா ....."
இந்திரலோகத்தில் அனைவராலும் சதஸ் நிரம்பியிருந்தது. பரத முனிவரின் பிரதான சிஷ்யை ஊர்வசி. அன்றையதினம் "லக்ஷ்மியின் விருப்பம்" நாட்டிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. லக்ஷ்மியாக ஊர்வசி ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு முல்லைக்கொடி வசந்த கால காற்றில் வளைந்து ஆடுவது போல் இருந்தது ஊர்வசியின் ஆட்டம். சகலரும் மெய்மறந்து நாட்டிய நாடகத்தை ரசித்தவண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் லக்ஷ்மியின் தோழி அவளிடம் "மூவுலகிலிருந்து அனைவரும் வந்தாயிற்று. இன்னும் யாரை எதிர்பார்க்கிறாய்?" என்று கேள்வி எழுப்பும் காட்சி வந்தது. அப்போது "புருஷோத்தம்" என்று சொல்வதற்கு பதிலாக "புருரவஸ்" என்று பதிலலித்துவிட்டாள் லக்ஷ்மியாக வேடமிட்டிருந்த ஊர்வசி. அவள் மனதில் எந்நேரமும் ஓடி விளையாண்டுகொண்டிருந்தவன் வாய் வழியே வெளியே வந்துவிட்டான்.
இதைக்கண்ட பரத முனிவர் கடுங்கோபம் அடைந்தார். "நான் கற்றுக்கொடுத்ததை மறந்து வேறு நினைவோடு இருந்ததால் இக்கணம் முதல் நீ இந்த இந்திரலோகத்தில் இருக்கும் தகுதியை இழக்கிறாய்." என்று சாபமிட்டார். இதைக் கண்ட தேவேந்திரன், கேசியுடனான யுத்தத்தில் தனக்கு உதவி புரிந்தமைக்காக புருரவசுக்கு நன்றிக் கடன்பட்டிருந்தான். ஆகையால் அவளை புருரவசுக்கு மணமுடித்து அவனுடன் அனுப்பிவைத்தான்.
சில பின் குறிப்புகள்:
இப்படி காதலித்து மனம் புரிந்த புருரவஸ் ஒரு வித்யாதர பெண் உதயவதி என்பவளின் மேல் காதல் வயப்பட்ட போது ஊர்வசி தன் காலை நிலத்தில் ஊன்றி கொடியாக மாறியது தனிக்கதை. மன்னன் அயு, புருரவஸ் -ஊர்வசி தம்பதியரின் மகன். அயு-பிரபா ஜோடியின் புதல்வன் யுவராஜ் நகுஷன். நகுஷன்-வ்ரஜாவின் குலக்கொழுந்து யயாதி. நியாயமாக பார்த்தால் இந்த இதிகாச காதலர்கள் வரிசையில் முதலில் இடம் பெற்றிருக்கவேண்டிய ஜோடி இதுதான். ஆனாலும் கதையின் போக்கினால் முதலிடம் பெற்றான் யயாதி. இது எழுதுவதற்கு உபயோகமாக இருந்தது காளிதாசரின் விக்ரமோர்வசியம் எனும் நூல்.
--இதிகாச காதலர்கள் இன்னும் வருவார்கள்
1 comments:
"புருரவஸ்" பெயரே காந்தம் போல் இருக்கிறது , பெயர் தெரிந்த அளவுக்கு கதை தெரியாதிருந்தேன்
நன்றி உன் காவிய அறிமுகத்திற்கு
Post a Comment