Tuesday, March 23, 2010

ஆஞ்ஜூ கோயில்

சென்ற சனிக்கிழமையன்று என் அம்மாவுடன் நங்கைநல்லூர்  ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றிருந்தேன். கோயிலை நெருங்குகையில் பள்ளி பயிலும் இரண்டு சிறார்கள்  ஹெர்குலஸ்  சைக்கிள்களை ஒன்றோடு ஒன்று  முட்டி முட்டி ஒட்டியவண்ணம் ரோடை அளந்து  கொண்டிருந்தனர். எட்டூருக்கு கேட்கும்படி ஒரே 'கல கல'வென சிரிப்பு. ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படிக்கலாம். சிகப்பு டி.ஷர்ட் போட்ட பையன்  வெள்ளை அணிந்திருந்தவனிடம்  "டேய். ஆஞ்ஜூ கோயிலுக்கு போலாண்டா...ஏழு  மணிக்கு சம்பா சாதம் கிடைக்கும்" என்று  பாய்ஸ் பட விஷயாதி செந்தில் போல  கோயிலுக்கு அழைத்தான். கொஞ்சம் யோசித்ததில், நடராஜன் நட்டு ஆன மாதிரி, நாராயணன் நாணி ஆன மாதிரி, பார்சாரதி பாச்சூ ஆன மாதிரி, கற்பகம் கப்பு ஆன மாதிரி, வெங்கடாஜலபதி வெங்கி ஆன மாதிரி ஆஞ்சநேயர் ஆஞ்ஜூ ஆகியிருந்தார் அவர்களிடம். யாருக்கும் முழு பெயர் சொல்லி கூப்பிடுவதற்க்கு முடியவில்லை. நல்ல பெயர் எது வைத்தாலும் ஜில்லு, சிண்டு, பிண்டு என்று செல்லப்பெயர் வைத்து கூப்பிடும்போது பக்கத்துக்கு வீட்டு நாய்க்குட்டியும் சேர்ந்து ஓடி வருகிறது. சோம்பலா அல்லது பெயர் சொல்லக் கூட நேரத்தை சிக்கனப்படுத்த அண்டம் அவ்வளவு வேகமாக இயங்குகிறதா தெரியவில்லை.

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு   விசேஷமான நாள் ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக மாலையில் பக்தர் கூட்டம் அதிகரித்துக்கொண்டு இருந்தது. நிறைய பேர் நடந்து வருவது தெரிந்தாலும் தன் பல்சரை பிள்ளையை கையில் தூக்கிக் கொண்டு அனுமார் தரிசனம் செய்ய வரும் ஒரு பக்தர் காலில் ஏற்றி இடுப்பில் இடித்து ஒரு டி.வி.எஸ். 50-க்கும் சைக்கிளுக்கும் இடையில் சொருகினார் ஒருவர்.  திரும்பி பார்த்தால் அடிபட்டவர் ஏதோவது சொல்லக்கூடும் என்பதற்காக கோயில் கோபுரத்தை அண்ணாந்து நோக்கி இரு கன்னத்திலும் போட்டுக்கொண்டு ஆட்காட்டி விரலை மடக்கி முத்தம் வைத்துக்கொண்டே சென்றார். அடிபட்டவரின் திருமதி அப்படியே எரித்து விடுவது போல ஒரு பார்வை செலுத்தினார்.

தன்னுடைய புதிய ரீபோக் காலணிகள் களவு போகமால் இருப்பதற்காக பல வண்ண   வகையறா மிதியடிகள் இருக்கும் கூட்டத்தில் கலந்து வைத்து அதற்க்கு மேல் தன் கூட வந்த சிநேகிதரின் ஹவாய் செருப்பை வைத்து மறைத்து அந்த சுவரோரம் இருக்கும்  அலமாரியில் குனிந்து கடைசி வரிசையில் வைத்துக்கொண்டிருந்தார் ஒரு கனவான். மேல் வரிசையில் இருந்து தனது பாதரட்சைகளை எடுக்கும் இளைஞர் ஒருவர் கீழே கர்மசிரத்தையாக செருப்பு மறைத்தலில் ஈடுபடும் கனவானின் தலையில் வைத்து அவரை பரதனாக்கினார். காலில் அணிவதற்கு இவ்வளவு காபந்து செய்துவிட்டு  மனதார அஞ்சநேயரை ரீபோக் செருப்பை காவல் காக்க வேண்டிக்கொண்டு வருவார்.

கோயிலுக்கு வந்தால்தான் நிறைய பேருக்கு அனைத்து லோகஷேமங்களையும் பிறரிடம் விசாரிக்க தோன்றும். "மாட்டுபொண் என்ன பண்றா..." என்று கேட்ட மாமியிடம்    "பாகர்க்காய் பிட்ளை செய்யச் சொன்னால், சாம்பார் வைக்கிறாள். காலங் கார்த்தால வாசல்ல கோலம் போடுடி என்றால் நாலு இழை இப்படி  அப்படி இழுத்துட்டு வந்துர்றாள். நாம்ப ஏதாவது  இவளை சொன்னால் அவனுக்கு இழுத்துக்கறது. நம்ப மேலே பாயறான்" என்று மாட்டுப்பொண்ணை  விமர்சித்துக்கொண்டே ராமரையும்  கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.  கலியுக மாமியார் புராணம் ராமர் கேட்பார் என்பதற்காக கூட மாமி இப்படி சன்னதி முன்னால் புலம்பி இருக்கலாம். மாமியாருடன் அயோத்தியில்  இருப்பதை விட காட்டில் இருப்பது மேல் என்று எண்ணித்தான் சீதை தன்னுடன் கானகம் வந்தாளோ என்று ராமரே சற்று யோசித்திருப்பார். 

"யாருப்பா அங்கே பின்னாலே இருக்கிரவங்கல்லாம் சாமி பார்க்க வேண்டாம்... நகருப்பா" என்று யாரும் யாரையும் அதட்டி உருட்டி மிரட்டாதபடி  32 அடி விஸ்வரூப மாருதியாக காட்சி அளித்தாலும் ஒருவர் முன் சென்று எட்டி முட்டி பார்த்தால் தான்   கும்பிட்ட பலன் போல தனது வியர்வையால்   நனைந்த முதுகை பின்னால் ஸ்வாமி பார்ப்பவர் முகத்தில் வைத்து உராய்ந்து அனுமன் தரிசனம் பெற்றார் ஒரு ஆறடி ஆஜானுபாகுவான ஒருத்தர். அடிப்ப்ரதக்ஷினம் செய்யும் பக்தைகள்/பக்தர்கள் நடு பிரகாரத்தில் சென்று, ஓடி ப்ரதக்ஷிணம் செய்யும் அன்பர்கள் வழியை மறைத்து 'ட்ராபிக் ஜாம்' செய்துகொண்டிருந்தார்கள்.  ஸ்வாமியின் கர்பக்கிரஹத்தின்   பின்புறம் சுவரில் தலையால் முட்டு குடுத்தாற்போல் ஒருவர் நின்று வாய்க்குள் மந்திரம் சொல்லிக் கொண்டு "இங்கே தொட்டு கும்பிட வேண்டாம்" மையும் மீறி ஜெபித்துக்கொண்டு இருந்தார்.  "வடக்கு நோக்கி நமஸ்கரிக்கவும்" என்று அம்புக்குறி போட்டு காண்பித்தும் அதற்க்கு நேர்மாறாய் திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் தெற்கில் நிற்கும் ஒரு அழகான பெண்ணை பார்த்து நமஸ்கரித்தார். 

வேணுகோபாலன் சன்னதி அருகில் "தீர்த்தம்" வாங்கிகொண்டு "சடாரி" வைத்துக்கொண்டு வெளியே வருகையில் , ஒல்லியாக இருப்பவர்கள் ஒரு விரல் மட்டும் விட்டு ஒரு பொட்டு குங்குமம் மட்டும் எடுக்க பிரத்தியேகமாக அனுமார் கோயிலுக்கு என்று  தயாரிக்கப்பட்ட ஒரு எவர்சில்வர் கூடிலிருந்து ஒவ்வொரு விரலாக ஐந்து ஆறு விரல்கள் எடுத்துக் கொண்டு பக்கத்தில் வைத்திருந்த 2010 காலண்டர் பேப்பரில் வைத்து மடித்துக்கொண்டிருந்தார் ஒரு வயசாளி. ஒரு கையில் சம்பா சாதம் வாங்கிக்கொண்டு இன்னொரு கையிலும் குழந்தை போல கேட்ட ஒருவருக்கு "இது பிரசாதம், வீட்டுக்கெல்லாம் டிபன் மாதிரி வாங்கிட்டு போக முடியாது" என்று அன்பாக சிரித்துக்கொண்டே அனுப்பினார் மேல் சட்டை அணியாமல் கருப்பாக நெற்றி முழுக்க திருமண் தரித்தவர்.

வெளியே நின்றிருந்த  செக்யூரிட்டி "அந்தாண்ட போய் சாப்பிடுங்க... உள்ளே நிக்காதீங்க சார்... ஏம்மா காதில விழலை.. " என்று ஒவ்வொருவரையும் வெளியே வழியனுப்பி மிகவும் "அன்பான" குரலில் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டிருந்தார். அப்படியும் சிலர் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டே கருமமே கண்ணாக ஒரு அடி அசங்காமல் பிரசாதத்தை விழுங்கியபடி இருந்தனர். ஒரு ஐந்து வயது சிறுவன் வானத்தை காட்டி "நிலா  நிலா" என்று சொல்ல, அவனுடைய 'டி.வி அடிமை'  பாட்டி, "ஏய்.. டீலா நோ டீலா சொல்றான்" என்று தன் மகனிடம் பெருமையாக கூற, ஒரு முறை முறைத்தார் அந்த வெறுப்பான புத்திரன்.  

இத்தனை இடைஞ்சல்களிலும்  "புத்திர் பலம் யசோ தைரியம்....." சொல்லி அனுமாரும் நானும் ஒரு ஐந்து நிமிடங்கள் பார்த்துக்கொண்டோம்.  இவ்வளவும் காதில் விழாமல் கோயில் சென்றுவர இன்னும் கொஞ்சம் வருடங்கள்  ஆகலாம். இப்போதைக்கு முடியவில்லை. நான் காது செவிடாவதை சொல்லவில்லை. மனதை ஒருமுகப் படுத்துவதைதான் சொல்கிறேன். அது சரி அப்பவும்  இவ்வளவும் பேசாமல் யாராவது கோயிலுக்கு வருவார்களா?

1 comments:

Anonymous said...

hmm nice

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails